கவிஞர் நாவண்ணன்

02 டிசம்பர் 2007
ஆசிரியர்: 

 

தை வாசிக்க தொடங்கு முன், இந்தப் பத்திரத்திலே விரிகின்றவை எல்லாமே நாவண்ணனின் வரலாற்றுப் பாத்திரத்திலே நானறிந்து கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே. இதை எழுதும்போது சரியாக ஒரு வருடம் விரைந்து மறைந்து விட்டது. எனது ஞாபக நாளேட்டை திருப்பிப் பார்க்கிறேன்.

இவரை நான் ஒரு போதுமே நேரே சந்தித்தது கிடையாது. அவ்வாறு அவரை போய் நான் சந்திப்பதற்க்கு திகதி குறித்துக் கொண்டபோது அவரது திதிக்கான நாளையல்லவா எனக்கு அறியத் தந்தார்கள். இவர் அறிமுகமாகு முன்னமே இவரது பாடல் எனக்கு அறிமுகமானது. 'என் இனமே என் சனமே' எனும் இவர் எழுதிய பாடல் வெளிவந்தபோது ஒவ்வொரு ஈழத் தமிழனின் வாய்களையும் அது முணுமுணுக்க வைத்தது. தன்னலம் துறந்த போராளிகளுக்கு சிம்மாசனம் செய்தபடியே இப்பாடல் வானலைகளிலே வலம் வந்தது. பாடத் தெரியாதவர் கூட இப்பாடலைப் பாட முயன்றனர். சங்கீதபூசணம் பொன் சுந்தரலிங்கம் ஏறும் மேடைகளில் எல்லாம் இப்பாடலையும் கட்டாயம் பாடுவார். கரவோசையோ காதைப் பிளக்கும். அந்தளவுக்கு எல்லோரினதும் உள் நெஞ்சங்களை ஆழமாக அது தைத்தது. அப்போதெல்லாம் தெரியாது இந்த எழுச்சிப் பாடலை இயற்றியது நீங்கள் தான் என்று. நீங்கள் மறைந்த பின்பே இதை இயற்றியது நீங்கள் தான் என்பதை நான் உட்பட பலரும் அறிந்து கொண்டோம்.

அவர் பாட்டுக்கு எழுதிவிட்டுப் போய் விடும் பாட்டுக்கு எந்த இசை போட்டாலும் கூட அது தன் பாட்டுக்கு இசையும் என்று இசையமைப்பாளர் கணண்ணனே அவரை வியந்திருக்கிறார்.

உண்மைச் சம்பவங்களை இம்மி பிசகாது தருவதிலே இணைபேச முடியாதவர். எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன என்ற அவரது  நூலை வாசிக்கும்போது நவாலியிலே வீழ்ந்த மனிதர்கள் வலியினாலே முனகும் ஓலங்கள் மட்டுமே யாருக்கும் கேட்க்கும். சுவை சேர்க்கும் உப்பானது அதிகமாகி விட்டால் அதுவே உணவை கெடுத்து விடுவதுபோல தனது படைப்பிலக்கியங்களிலே பாவிக்கும்  வார்த்தைகளைக் கூட கவனமாகவே கையாள்வார். விபரணை என்பது நிசத்தினைக் காயப்படுத்திவிடாதபடி பார்த்துக் கொள்வார். கேட்டால் இலக்கியம் இலேகியம் ஆகிவிடக்கூடாதே என்பார்.

 

இவரது நெஞ்சுறுதி யாருக்கு வரும்? அரசாங்கத்துக்கு கைகட்டி சேவகம் செய்ய விரும்பாது தனக்கு கிடைத்த அரச உத்தியோகத்தையே கைகாட்டி வழி அனுப்பி வைத்தாராம். காச்சல் வந்தால் கசாயம் தேடும் ஆளைப் போலன்றி தேவையின் பொருட்டோ மாறிவரும் காலச் சுற்றோட்டத்தில் வருமானம் கருதியோ அல்லது எதேச்சையாகவோ இவர் எழுத்துத் துறையை தெரிவு செய்யவில்லை. இவரது பாட்டன் முப்பாட்டனும் கூட புலவர் வம்சமே.
இச்சகத்துளோர் எல்லார்க்கும் தமிழ் ஈழத்தின் வரலாறுகளை தெரிவிக்கும் முகமாக அச்சகத்துறையையும் தெரிந்தெடுத்து நாடாத்தினார்.

குண்டுகளை நிரப்பிக் கொண்டு களத்திலே நிற்கும் போராளிகளுக்கு அருகிலே நின்று தனது பேனாவின் தண்டுக்கு மை நிரப்பிக் கொள்ளும் ஒரு படைப்பாளி. வலிகாம இடப் பெயர்வின் வடுக்களை பத்திரிகையிலே இவர் தொடராக எழுதிய வேளை அதன் ஒரு பகுதியை மட்டுமே வாசித்த நான் அதன் முழுவதையும் படித்து முடிக்க விரும்பி அத் தொடர் வெளியாகிய ஈழமுரசு பத்திரிகையுடன் தொடர்பு கொண்டேன். ஆனாலும் அது முடியாது போகவே அதை அவரிடம் வருத்தத்துடன் தெரிவித்தபோது வன்னியில் இருந்து முழுவதையும் உடனடியாகவே யேர்மனுக்கு அனுப்பி வைத்தார். கட்டுக்கட்டாக வந்த அந்தக் கட்டுரைகளை வாசித்துப் குறிப்பெடுக்கவே எனக்கு வருடக்கணக்கானபோது அவ்வளவு பிரதிகளையும் பிரதி பண்ணி அனுப்பிவிட செலவிட்ட. நேரத்தையும் பணத்தையும் எப்படித் திருப்பி அடைப்பது என்று விடை அற்ற வினா ஆகிப்போனது எனது வினா.

வீடு தேடி வந்தவருக்கெல்லாம் பந்தி பரிமாறிவிட்டு பசியோடு நிற்க்கும் ஒருவனைப்போல தனது உடலுக்குப் பட்டினி போட்டாலும் கூட பேனாவின் குடலுக்கு  உணவிட்டவர் அல்லவா நாவண்ணன்.

புலிகளின் குரல் வானொலியிலே கட்டுப் பாட்டாளராக இருந்து பணி செய்த போதிலும்  கட்டுப்பாட்டிலே வைத்திருந்ததெல்லாம் நேயர்களின் காதுகளையும் கவனத்தையும் தானே.
முதுமையின் தாக்கத்தையும் நோயின் வீக்கத்தையும் ஓரத்தே வைத்துவிட்டு தமிழ் மீது வைத்த பற்றுக்காகவே புற்று நோயோடு போராடினீர்கள்.
வறுமையால் வாடியபோதும் சரி, களத்திலே வீழ்ந்த மகன் கழுத்திலே மலர் வளையம் சூடிய போதும் சரி துறக்கவில்லையே உங்கள் பணியை.
கரும்புலி காவியம் எனும் பக்திகாவியத்தை எழுதி அரசுக்கும் எமை எதிர்க்கின்ற முரசுக்கும் அதை ஒரு புத்தி காவியமாக்கினவர்.
உங்கள் புலமையை மதித்தது எங்கள் தலைமை. இல்லாவிட்டால் மூன்று முறை தேசியத்தலைவர் கைகளால் கெளரவம் கிடைத்திருக்குமா?
வலிகாம இடப்பெயர்வை ஒரு காவியமாக நான் எழுதிக் கொண்டிருப்பதை அவரிடம் காட்டினேன். தன்னை அறியாமலேயே பல இடங்களிலே சிரித்தாராம்...
'எமை
சுரண்டிப் பிழைக்க வந்தவர்
அழைத்தனர்
இலங்கையை செரண்டிப் என்றே..' 
அதிலே ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விட்டு மீண்டும் சிரித்தார்.

ஒரு தடவை நாவண்ணனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எங்கிருந்து என்று பார்த்தால் கொழும்பு டெல்மன் வைத்திய சாலையிலே இருந்து.
ஆச்சரியப்பட்டுப் போனேன். நோயிலே விழுந்தபோதும் எழுத்துத்துறையின் ஆரம்பப் படியிலே நிற்க்கும் இந்தச் சேயிலே வைத்த பாசத்தை நினைக்க நெஞ்சு கனத்தது. வைத்தியச் செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்று எனது ஆதங்கத்தை இடையே கேட்டேன்.
அப்போது சொன்னார் வைத்தியச் செலவு முழுவதையும் பெரியவர் ஏற்றிருக்கிறார் என்று. யார் அந்தப் பெரியவர் என்று யாருமே கேட்க மாட்டார்கள். இருந்தாலும் சொல்கிறேன். உலகத் தமிழரின் தலைமைக்கு உரியவரே நாவண்ணனால் சொல்லப்பட்ட அந்தப் பெரியவர். காலம் இட்ட கட்டளையை முடித்திட வனவாசம் செய்தாலும்கூட ஒவ்வொருவரின் எண்ணத்திலே மனவாசம் செய்யும் தேசியத்தலைவரையே அவர் பெரியவர் என்று குறிப்பிட்டார்.

ஏட்டைப் படைக்கும் நாவண்ணனின் கைகளில் எழுது கருவி இருந்த நேரத்திலே அவர் புதல்வர்களோ போர்க் கருவியோடு களம் நோக்கிப் போயினர் ஈழ நாட்டைப் படைக்க. பெத்தெடுத்த ஒத்த மகன் போர்க் களத்திலே வீழ்ந்து கிடந்த செய்தியைக் கேட்டபோது அபிமன்யுவின் மறைவால் வாடிய அருச்சுனனைப் போலானார். வீர மறவனைப் பெற்றதால் நிமிர்ந்தார். இருந்தும் இமைகளுக்கும் தெரியாது அழுதார்.

இவர் பதினாறு புத்தகங்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார். இன வன்முறைகளின் ஆரம்ப நாட்களிலே இவர் எழுதிய 'புத்தளத்திலே ஒரு இரத்தகளம்' எனும் நூலானது ஒன்றுமே தெரியாது தூங்கிக் கிடந்த அப்போதைய பல இளைஞர்களுக்கு உடலிலே புது வேகத்தையும் தமிழின் பால் பெரும் தாகத்தையும் ஏற்படுத்தியது. இன்று எழுத்துத்துறையிலே இருக்கின்ற பலர் இதை இப்போதும் நினைவு கூர்கின்றனர்.

பல நூறு மேடை நாடகங்களைப் போட்டார். அடிமைபோல வாழ்வதென்பது மடமையாகும். அதை உடைக்கவேண்டியதே நமது கடமையாகும் என்றவர் இதற்காக நாடக மேடைகளையே ஒரு போர்க்களம் ஆக்கியவர். நவாலி தேவாலயத்தின்மீது அரச விமானங்கள் குண்டு மழை பெய்து துடிக்கத் துடிக்க ஏதுமறியாத சனங்களைக் கொன்ற வேளையிலே சந்திக்க நேரும் உயிராபத்தைப் பற்றிக் கூட சிந்திக்காது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகவல்களைப் பதிவு செய்தவர். 'எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன' என்ற இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் உயிர்களின் சாக்குரலே உள்ளுக்குள்ளே எதிரொலிக்கும்.

பொதுவாகவே காற்றுக்கு கூட நொந்து விடாதபடி மெதுவாகவே நாவண்ணன் பேசுவார். ஆனால் நாகர் கோவில் பள்ளிமீது சந்திரிகாவின் அரச போர் விமானங்கள் குண்டுகள் போட்டு பாடசாலை மாணவரைக் கொன்று குவித்தபோது அவர் துடித்து எழுதிய கவிதையிலே கண்டேன். பூவைப் போன்ற கவிஞனின் உள்ளத்துள்ளேயும் பூகம்பம் வெடிக்கும் என்பதை.

வரலாற்றைப் பேணிப் பாதுகாக்கத் தவறியமையும் தமிழர் விட்ட மிகப் பெரிய தவறுகளிலே ஒன்று. அதை இவர் சிறப்பாகவே சீர் செய்தார்.

அவரிடம் இன்னொரு தாகமும் இருந்தது.
கரும்புலிகளைப் பற்றிக் காவியம் பாடியவர். தாயகத்தை விட்டு சிறகு விரித்த கருங்குயில்களைப் பற்றியும் பாடநினைத்தார். அவைகள் உதிர்க்கும் கண்ணீர்த் துளிகளைச் சுற்றியும் கூட்டைப் பிரிந்த அந்தக் குயில்கள் ஒன்று கூடி தாய் நாட்டிலே கட்டப்படும் தமக்கான ஒரு கூட்டைக் கட்ட இங்கே தங்களின் உயிர்க் கூட்டை உருக்கி உழைப்பது பற்றியும் பேச நினைத்தார்.

அங்கே இருக்கும் வேரை எண்ணி இங்கே இருக்கும் கிளைகள் அப்பப்போ சிந்துகின்ற விழி நீரானது கண்களுக்கே தெரியாதபோது தாய் மண்ணுக்கு மட்டும் எப்படி அந்த வலி தெரியவரும், அந்தப் பணியையே செய்ய இவர் துணிந்தார்.
புலம்பெயர் தமிழரைப் பற்றிய தகவலைப் பெறவும் வரலாற்றிலே இவர்கள் பற்றிய பதிவுகள் வரவுமே நாவண்ணன் விரும்பியிருந்தார்.
முடியாமல் போயிற்றே. தென் இந்திய தாரகைகளை அழைத்து வந்து வளையல் அணிவித்துவிட தயாரான சில தனவந்தர்கள் இதற்குமட்டும் ஏனோ மனம் வந்தாரில்லை.
தமிழ்ச் சங்கம், எழுத்தாளர் ஒன்றியம், பொது அமைப்புகள் என்று எல்லாரிடமும் இதற்க்குரிய தேவையினை எடுத்துக் கூறினேன். சில நல்லவர்கள் உடனேயே இல்லை என்றார்கள். இன்னும் சிலரோ இல்லை என்று சொல்லவில்லையே தவிர காலத்தின் எல்லையை மட்டும் நீட்டியபடி அலைக்கழித்தார்கள். இதனால் உனது நெஞ்சப் பானை கொதிக்கையிலே அரிசியாக வெந்ததோ நான் தான். காரணம் இந்த ஆவணப் படுத்தலின் தேவை அறிந்தவரிலே நானும் ஒருவன்.

யேர்மனிலே இருக்கின்ற ஒரு எழுத்தாளர் சங்கத்தின் தலைவரோடு தொடர்பு கொண்டு புற்று நோயாலே பாதிக்கப்பட்டிருந்தும் இம் முயற்ச்சியை எடுத்துக் கொண்டிருக்கும் நாவண்ணனுக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், இவரை விட மிகப் பெரிய தியாகங்களைச் செய்தவரை எல்லாம் கௌரவிக்க வேண்டிய தேவை இருக்கிறதே என்று.

இது எனக்கு கவலையையே தந்தது.
தியாகங்களிலே சிறியது பெரியது என்று எங்காவது இருக்கிறதா என்ன?

தமிழ் வளர்க்கிறோம் என்று கூறி பணம் வளர்ப்பவர்களின் தோள்களில் மட்டுமே இங்கே அதிகமான மாலைகள் வீழ்கிறது! இது மட்டும் நன்றாகவே எனக்கு அப்போ விளங்கியது. ஏதோ விண்வெளிக்கு சென்று திரும்புமாப்போல எனக்கும் இது முடியாமல் போனதென்னவோ உண்மைதான். காரணம் இன்றோ நாளையோ நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நிலையிலேயே நானும் இருந்தேன்.

அவரது வன்னி முதல் வலிகாமம் வரை என்ற வரலாற்றுப் பதிவானது கை எழுத்துப் பிரதியாகவே இன்று வரை என்னிடம் இருக்கிறது. நூலாக்க முடியவில்லையே எனும் கவலை இடையிடையே வந்து வாட்டத்தான் செய்கிறது. எது எப்படியோ நமக்குக் கிடைக்க வேண்டிய ஒரு ஆவணப் பெட்டகத்தை கோவணப் பெட்டகமாக எண்ணிக் கொண்டனர் சில அறிவிலிகள்.

நம்மிலே இருக்கும் பழக்கமோ வித்தியாசமானது. ஒன்றில் செத்தகிளிக்குப் பட்டுக்குஞ்சம் கட்டுவோம் அல்லது சக்கரைகளைப் புறக்கணித்து இலுப்பைப் பூக்களுக்கு மட்டுமே பொன்னாடை மாட்டுவோம்.

தமிழ்ப் பாட்டை தன்பாட்டுக்கு ஓட்டிய சாரதி மகா கவி பாரதிக்குக்கூட இது தானே நடந்தது. மாளிகை வீதிகளில்மட்டுமே ஓடிய பாட்டுத் தேரை கிணற்றுத் தேரைபோல வாழ்ந்த ஏழைகளின் குடில்களை நோக்கியும் வரவழைத்தவன் பாரதி. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து பாட்டு யாகம் நடாத்தியதாலேயே வறுமையை விலை கொடுத்து வாங்கியவன். பஞ்சத்தின் வலி தாங்கமாட்டாது அவன் இராயபாளையம் வீதியிலே அமர்ந்திருந்து ஒரு நாள் அழுதிருக்கிறானாம். விநாயக சதுஸ்டி முடிந்தவுடன் கடலிலே கரைக்கப்பட்டுவிடும் விநாயகரைப்போல இவர்களைப் போன்றவர்கள் செய்யும் இமாலயப் பணியும் மறக்கப்பட்டு விடுகிறதே.

ஓட்டை வீட்டுக்குள் இருந்து கொண்டே இவர் பாட்டுக் கோட்டையின் கதவுகளைத் திறந்தவர்.
அனைத்தையும் எழுத்து வடிவிலேயே பதிவு செய்ய விரும்புவதால் களத்துக்கும் துணிவோடு போய்விடுவார்.

பதவி என்பது ஓய்வு பெற்ற நொடியோடு போகும். பணமானது அவன் தலை முறையோடு மட்டும் போகும்.
பணி என்பது தலை முறை தாண்டியும் வாழும். அது எல்லோர் நெஞ்சையும் ஆளும். ஆந்த வகையிலே இவர் பணி என்றும் வாழும்.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல பாடங்களை இவரிடம் இருந்து தான் நான் பயின்றிருக்கிறேன். அடக்க முடியாமல் பீறிட்டு வரும் நியாயமான கோபக் குதிரைகளைக் கூட இப்படியும் கடிவாளம் போட்டுக் கட்டலாம் என்று காட்டியவர் நாவண்ணன். இவரது ஒரு கண்ணிலே வறுமையும் மறு கண்ணிலே பொறுமையும் இருந்த போதும் எதையுமே அலட்டாது இருந்தார். அதனாலேயே இவரது திறமை அரங்கேறியது.

கவிதை என்பதோ இரும்பாய்க் கனக்கும் இதயத்தையும் இலவம் பஞ்சாக மாற்றும். அனுபவக் கட்டுரையோ இலவம் பஞ்சாக மிதக்கும் இதயத்தைக் கூட சில வேளை இரும்பாக்கும். இந்த இரண்டிலுமே திறம்படச் சவாரி செய்தவர் நாவண்ணன்.

போராளிகளோடு ஒன்றித்துவிட்ட காரணத்தாலோ என்னவோ சாவைப்பற்றி முன்னரே இவர் அறிந்து கொண்டபோதிலும்  கடுகின் முனையளவு கூட கலங்கவில்லை. காலன் வந்து இவர் கதவைத் தட்டிய போதெல்லாம் கூட அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் காலனே கொஞ்சம் காலாறி விட்டு வா என்று தனது எழுத்துப் பணியை விரைவாக்கியவர். படுக்கையிலே வீழ்ந்துவிட்ட போதும்கூட இவர் சொல்லச் சொல்ல இவர் துணைவியார் எழுதினாராம்.

என்னோடு பேசுகையிலே அவர் குறிப்பிடுவதை மூளையாலேயே குறிப்பு எடுத்துக் கொள்வேன். அப்படி எடுத்த அவரது கவிதைக் குறிப்பையும் இதோ தருகிறேன்.
'காவியத்தைப் பாடம் செய்த கவிஞனுக்கும்
கலைஞனுக்கும்
சீவியத்தின் பின் சிலை எடுக்கும்
செயல் வேண்டாம்
ஓவியம் போல் சிதைந்திடும் அவர்
வாழ்க்கை
உயிரோடு வாழ்கையிலே உதவிடுக' என்பதே அவர் சொன்ன கவிதையாகும்.

கூடவே சொன்ன ஆலோசனையானது கவிதைப் பூக்களுக்கு பவுடர் பூசிக் காயப் படுத்தக்கூடாது என்றும், அவற்றை இயற்கையாகவே மலர்ந்திட செய்ய வேண்டுமென்பதுமாகும். ஏற்றுக் கொண்டேன்.

இறுதிக் காலத்திலாவது இந்தக் கவிஞரோடு பழகினேன் என்பதிலே புகழ்ச்சி அணிந்துரை தந்திருக்கிறார் என்பதிலே பேர் ஆனந்தம்.
அவரது எழுத்துக்களிலே பாட்டன் முப்பாட்டன் வழிவந்த புலமை வழிந்து ஒழுகியது.
கொட்டப்பட்டிருக்கும் புல்லை நன்னிக்கொண்டு கூடாரங்களுக்குள் கட்டப்பட்டிருக்கும் ஒட்டகங்களைப் போல ஒரே சிந்தனைகளுக்குள்ளே சுற்றிச் சுற்றி பம்பரம் விடும் மனிதரை அடியோடு புறக்கணித்து தனக்கான தனிப்பாதையிலே பயணித்தவர்.
சிந்திக்கும் விசயத்திலும் சரி அவர் பேனாவின் தொந்திக்குரிய மையிலும் சரி ஒரு போதும் பஞ்சம் வந்ததே இல்லை.

நீ மறைந்த செய்தி கேட்டு நீ பிறந்த மன்னார் மண் மட்டுமல்ல எல்லா ஊருமே கண்ணீரை வென்னீராய் ஊற்றின. அப்போது உனக்காக எனது இதயம் அழுததையும் பேனா வெற்றுத் தாளை உழுததையும் இத்தோடு தருகிறேன்.

வலிகாம காவியத்துக்கு
முன்னுரை தந்த கவிஞனுக்கு
எனது இறுதி வரி...!

காலங்கள்
வந்து கரைத்து விடாமலும்
கறையான்கள் வந்து அரித்து விடாமல்
ஈழத்தின் சோகத்தைப் பதிந்தாய்
இலக்கியமாக...

அண்ணனே
உனக்கே தெரியாமல் தொடருகிறார்
உன் வழி
ஒரு இலக்குவன் போலே ...

எம்மை
ஆள்பவனுக்குத் தெரியும்
தமிழ் மீதான உன்
பற்றை...
 
மாற்ற முடியவில்லையே
பாழாய் போன
அந்தப் புற்றை ...

விடுதலைப்பாட்டுக்கு
பல்லவி எழுதியவனின் வாழ்க்கைக்கு
எவன் வந்து சரணம்
எழுதியது...

எந்த எமன் வந்து
இந்தக் கவிதையைத் தீயிட்டுக்
கொழுத்தியது...?

எழுதினாய்
களத்திலே நின்றவரின்
கண்ணீரையும் பிழந்து

வீரத்
தந்தையென நின்றாய்
உன் ஒற்றை மகனையும்
அந்தக் களத்திலேயே இழந்து ...

யார் வைத்ததோ
அல்லது அளவாக உனக்கு
நீயே தைத்ததோ தெரியவில்லை
கவிதை போலவே
அழகான பெயர் உனது பெயர்...

இலக்கியத்துக்கு
நீ  நெய்ததோ மஞ்சம்
ஆனால்
காலம் உனக்குச் செய்ததே
வஞ்சம்

பல விருத்தங்களைப்
பாடவேண்டிய குயில் பறந்ததால்
எமக்கோ நெஞ்சிலே
வருத்தம்

வாழ்ந்த காலங்களின்
நீளங்களை
மட்டும் சொல்லாது வரலாறு
சமூகத்துக்கு
வரைந்த கோலங்களையும்
சொல்லும் அது

அந்தப் பணியை
இனி உன்
வரலாறே சொல்லும் ...

எனது மூளை பதிவு செய்திட்ட .உங்களது குரல் ஒரு போதுமே அழியாதே! அது பற்றி இன்னும் எழுதுமே எனது கை விரல்!!
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree