ஒரு ஏதிலியின் நாட்குறிப்பிலிருந்து..!

07 அக்டோபர் 2007
ஆசிரியர்: 

 

“ஓடும் உதிரத்திலே
வடிந்தொழுகும் கண்ணீரிலே
எங்கு தேடிப் பார்த்தாலும் சாதி தெரிவதில்லை
சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேண்டும்” என்று கவி மணி தேசிய வினாயகம் எழுதிய கவிதை வரிகளே எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. சாதி எனும் சொல்லைக் கூட மனிதனையும் விலங்கையும் வேறு படுத்தும் குறியீடாகவே அவர் கையாண்டிருக்கிறார் என்பதையும் நினைவிலே வைக்க.

தங்கத்தின் தரம் அறிய வேண்டின் அதை உரசிப் பார்ப்பதனைப் போல ஒரு நல்ல மனிதனை அடையாளம் காண விரும்புகிறாயா? அப்படி எனில் இடர் ஒன்றை வலிந்தேனும் அலசிப்பார். இதைத்தான் அன்று எனது நாட்குறிப் பேட்டிலே நான் பதிந்து கொண்டேன்.

திடுமென என்னை எதிர் கொண்ட அந்தத் துயர் மிகு வேளையிலே கண்ணுக்குத் தெரியாத எதிரியோடே நான் மோதிக் கொண்டேன். எல்லை எதுவெனத் தெரியாதபடிக்கு நான் ஓடிக்கொண்டேன். அப்போது என் பாதங்களுக்கும் - என்னோடு கூட ஓடி வந்த பந்தங்களுக்கும் (நானும் எனது நான்கு குழந்தைகளும்) இளைப்பாற இடம் தந்த மடம் தான் ஓவியர் பிரபாகரன்.

உலகியல் என்றால் இப்படித் தான் என்று எனக்கு சொல்லித் தந்தது அந்தப் போதி மடம். இன்னும் சொல்லப் போனால் என்னை எனக்கே அறிமுகம் செய்வித்தவன் இந்தப் புத்தன். ஆலைக்குள் அகப்பட்ட கரும்பாக எனது மூளை பிழியப்பட்ட வேளையிலே இரும்பை ஒத்த உறுதியை எனக்குள் ஊட்டியவர்.

காலம் காலமாக பழகியவர் கூட நேரம் பார்த்து நழுவியபோது எனது கவலைகளை எல்லாம் தனது அன்பு மழையினாலே கழுவியவர். துயர் வந்தால் சொந்தம்கூட வந்து உதவப் பிந்தும் என்கிற வாழ்க்கைத் தத்தவத்தின் இருள் நிறைந்த பக்கங்களை காண நேர்ந்தபோதே இவரை நான் சந்திக்க நேர்ந்தது. வரும்படியினைத் தருகின்ற தனது உழைப்பையும் துறந்தவர் எனை இந்த சிக்கலில் இருந்து காப்பதற்காக இராப்பகலாக அதிக நேரம் சிந்தித்தார்.

அம்புலி மாமாக் கதைகளைப்போல அளந்து விட்டவர்களுக்கு எல்லாம் அகதிப் புத்தகம் கொடுத்த யேர்மனிய அரசு, சாவின் வடுக்களை ஆன்மாவிலும் சண்டையின் இரணங்களை தேகத்திலும் சுமந்து வருகின்ற பலரை ஏமாற்றியும் இருக்கிறது. இதைப் போலவே எனது கார்மோன்களில் படிந்து கிடந்த வலியும் வேதனையும் கூட யேர்மனிய அரசால் புரிந்து கொள்ளப்படாமல் போயிற்று.

எனக்கு இடம் தந்த அந்த மடத்தை உங்களுக்கு அடையாளம் காட்டட்டுமா..? எமது நாட்டிலே இருக்கக் கூடிய மிகச் சிறந்த ஓவியர்களிலே பிரபாகரனும் ஒருவர். ஓவியர் மணியத்திடம் ஓவியத்தின் எல்லா வகையான நுட்பங்களையும் அதன் சகல பரிணாமங்களையும் கற்றறிந்ததினால் பிரான்சிலே உள்ள மொண்ட மார்சல் பல்கலைக் கழகத்திலே விரிவுரையாளராக பணி ஆற்றினார். உருவத்திலே சிறியவர். மோனலிசாவின் முகத்தையே வரையக்கூடிய அளவுக்கு பிடரி வரை நீண்டிருக்கும் பெரிய நெற்றி. பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு மிக நீண்ட அடர்த்தியான கேசத்தை முன்பு வைத்திருந்தார். (வழுக்கைத் தலை என்பதற்கு இத்தனை சுற்றி வளைப்பு) இருட்டை ஓரங்குலம் வெட்டி ஒட்டியதுபோல பெரிய மீசை. கர்ணனுக்கு குண்டலம் போல இவருக்கோ இவரது கைப்பை. அதைப்பிரிந்து அவரை நான் ஒரு போதுமே கண்டதில்லை.

யாரோடும் அதிகம் பேசாதவர். ஆனால் என்னோடு அதிகம் பேசினார் பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றியும் பிரபஞ்ச வரட்சியைப் பற்றியும். எல்லாரா ஓவியம் முதல் அஐந்தா ஓவியம் வரை எல்லா ஓவியங்களைப் பற்றியும் வாதித்தார். பிரான்சின் பல பகுதிகளிலும் இவர் ஓவியங்கள் கண்காட்சிகளாகின. இதுவே இவரது திறமைகளுக்கும் சாட்சிகளாகின.

நட்பு எனப்படுவது சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் இருக்கும் உறவைப் போன்றது என்பதை சசி என்கிற இளைஞன் கத்தி மீது நான் நின்று நர்த்தனம் ஆடும் போதிலே நிறுவிக் காட்டினார். மனிதாபிமானம் என்றால் இது தான் என்பதை எனது இதயத்திலே ஆணி அடித்து மாட்டியவர் ஓவியர் பிரபாகரன்.

அவரது குருவான ஓவியர் மணியத்தைப் பற்றிச் சொல்வதெனில், அவர் கைகள் மலர் வரைந்தால் பூ வாசம் புறப்படும். தீயைக் கீறினால் அனல் வந்து உடல் சுடும்.

சிறுவனாக நான் இருக்கும்போது தீ திரைப்படத்திற்காக ஓவியர் மணியம் வரைந்த ஓவியத்தை பார்த்துவிட்டு அதைப் போல ஒரு றஐனிகாந்தை சுவரிலே நான் கீறப் போய் அதுவே திருட்டிப் பொம்மையாக வீட்டில் உள்ளவர்களைப் பல நாட்கள் பயமுறுத்தியது என்பது எனக்கு மட்டுமே தெரிந்த கதை. ஓவியர் மணியம் வீட்டுக்கு எதிர் வீட்டிலேயே அப்போது நாங்கள் வாடகைக்கு குடியிருந்தோம்.

பத்து வருடங்களுக்கு மேலாக என்னோடு பழகிய பலர் உதவி கேட்டு அவர்களின் வாசல் கதவுகளை எல்லாம் நான் தட்டியபோது எனது உறவை கத்தரித்து விட்டார்கள். முன் பின் பார்த்ததில்லை, பழகியதில்லை. எங்கிருந்தோ வந்தான் தமிழ்ச் சாதி நான் என்றான். இக்கட்டான நிலையிலே எங்களை எல்லாம் தத்தெடுத்துக் கொண்டான்.

ஒரு நாள் எனது பிள்ளைகளின் பாதணிகள் பிய்ந்துவிட்டன. உடனடியாகவே அவர்களை அழைத்துக் கொண்டு போய் பாதணிகள் வாங்கிக் கொடுத்தார். திரும்பி வரும்போதுதான் அவர் கால்களைக் கவனித்தேன். அவரது பாதணியும் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. தனக்காக ஒன்றை வாங்கிக் கொள்ளாமலே என் பிள்ளைகளுக்கு உதவிய பண்பை என்னென்பது.

ஒரு இலக்கியவாதியின் மனது இலவம் பஞ்சாக வெடித்து விடக் கூடாது என்பதிலே கருத்தோடு இருந்தவர். இடிபாடுகளுக்கிடையே இருந்துதானே இறங்கி வருகிறது நதி. மேகம் இரண்டு மோதும் போதுதானே மின்னல் ஒளியைக் கக்குகிறது. நல்ல இலக்கியங்கள்கூட இதயங்கள் கலங்கிய வேளைகளிலே வந்து விழுந்ததும் உண்டுதானே? அப்படி எதையாவது எழுதத் தோன்றினால் அதை ஏந்திக் கொள்வதற்காகவே வாங்கி வந்திருக்கிறேன் இதை என ஒரு கருவியை என்னிடம் தந்தார். கணணியிலே பதிவு செய்யப் பயன்படும் ஒரு சாதனமாம்.

எந்த சகாராவிலும் நான் மாட்டுப்பட்டு அங்கே எனக்கு ஒரு சங்கடம் வந்து விடக்கூடாது என்றே எனை நோக்கிப் பாய்ந்த நயகரா அவர. தகிக்கும் வெயில் எனைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகவே எனைத் தேடி வந்து குடை பிடித்த நிழல் அவர்.

கடலைத் தேடும் நதி எனும் எனது சிறுகதையை வாசித்து விட்டு அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்தெடுத்து விமர்சித்தார். விமர்சித்தார் என்பதை விட விவாதித்தார் என்றே கூறவேண்டும்.

இவர் தூரிகையை எடுத்து விட்டால் போதும் நெத்தியிலே தீ எரியும் தியான நிலைக்கு வந்து விடுவார். கீழ்க் கரவையூர் பொன்னையன் அவர்கள் தயாரித்த முழு நீளத்திரைப்படத்திலே ஒளிப்பதிவாளனாகவும் படக் கலவையாளனாகவும் பணியாற்றிய அனுபவத்தினை என்னோடு பங்கிட்டவர் என்னை வைத்தே ஒரு குறும்படத்தையும் எடுக்க விரும்பினார். ஆனால் நானோ காற்றை எதிர்த்து கடும் தவம் புரியும் இறகானேன். இப்போதுள்ள நிலையிலே அது இயலாது என்பதாலே இருவருமே அதை முயலவில்லை.
ஒவியத்தைப் பற்றி இவரோடு நான் பேசினால் அவரோ அதை நிறுத்தி காவியத்தைப் பற்றிப் பேசுவார். அப்படி எல்லாத் துறையிலுமே ஆளுமை மிக்கவர்.

இளமையிற் கல் எனும் ஒளவையின் வாக்கின் மீதும் எனது நீண்ட நாளைய நோக்கின் மீதும் கல் விழுந்த போது எனது கனவுக் கண்ணாடி மாளிகை நொறுங்கிப் போனது. அதை ஊகித்து அறிந்தவர் உடனே கடைக்குப் போய் கணக்குப் புத்தகங்கள் வாங்கி வந்து நிவர்த்தி செய்ததுடன் பிள்ளைகளுக்கு அவரே பாடத்தையும் நடாத்தினார். எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் சிறகு பூட்டிப் பார்க்க ஆசைப்பட்டு பிரான்சு தேசத்தின் வீதிகள் எங்கும் தனது வாகனத்திலே பறந்தார். தனக்கு வருவாய் கொடுக்கின்ற தொழிலையும் இருவாரங்களுக்குத் துறந்தார்.

பாரதிக்குக் கிடைத்த குவளைக் கண்ணன் இவரோ? அல்லது வேறு எவரோ இப்படி ஒருவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? இவரைப் போன்றவருக்கு ஊர் கொடுக்கும் பெயர் இழிச்சவாயன்தானே? அப்படி எனில் பாரிக்கும் அந்தப் பெயர் பொருந்துமா..?

புகையிரத நிலையம்வரை வந்து எனை வழி அனுப்ப வந்தவருக்கு விடை கொடுத்து விட்டு தொடர்ந்தேன் எனது நாடு தேடும் அடுத்த பயணத்தை.
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree