அன்னையர் தினம்

23 மார்ச் 2009
ஆசிரியர்: 

 

ன்னது விழிப்பு

என்னினப் பெண்ணே கேளீர்
உன்னது விழிப்பு - தாய்
மண்ணது விட்டு மறுபுலம்
பெயர்ந்த போதும் - இன்னும்
நீ விரட்டா விலங்கை - எப்போது
உடைப்பதாய் எண்ணம்!

பொன்னிலும் புதுச்சடங்கிலும்
பொழுதை நீ போக்கிக் கொண்டால்
கற்றும் நீ விழிப்பில்லை
உன் கருத்திலும் எழுச்சியில்லை
உன்னது விழிப்பு எப்போ?
என்றும் நீ  ஏதிலியோ?

2000ம் ஆண்டு வெளியீடான கவி நூலிருந்து  எனது  கவிதையொன்றின் சிறு பகுதியை  பிய்த்தெடுத்து  முன்வைத்து,  புகலிடப் பெண்களின் பேரணிகள் பற்றியதானதொரு பார்வையை சொல்லலாம் என்றதானதொரு உந்தலில் முன் வந்துள்ளேன்.

இதற்கு முன்பதாக முல்லைத்தீவு ரவீந்திரன் சுதர்சனா கிழக்குமாகாண பல்கலைக்கழகத்தின்
மூன்றாம் ஆண்டு கலைப்பிரிவு மாணவியிவர்  தீந்சுவாலைக்குள் தன்னைத் தீய வைத்து மரணமாகிவுள்ளார். இதே போன்று சென்ற மாதமும் ஒரு மாணவி தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். இந்த மரணங்கள் யுத்தகால மன அழுத்தங்களால் தமது உறவுகளின் தொடர்புகள், ஆதரவுகள் இல்லாது போவதால் நடந்துள்ளது என்பது தெளிவாகிறது.

இவர்கள் தொடர்ந்து இந்நிலைக்குள்ளாகாது இவர்களைப் பாதுகாக்கவும் ஆதரவும் தரவும்  புகலிட உறவுகள், அவர்கள் ஊரவர்கள், ஏனையோர்கூட முன்வரவேண்டும் என்பதை இவ்வேளை வேண்டுதலாக்குவதோடு, மேலேயுள்ள கவிதைக்கு மாற்றீடாக இன்று எங்கள் பெண்கள் கணிசமான அளவு மாறியே வருகின்றார்கள். புகலிடப் பெண்களின் அறிவு போதாது, எமது பெண்கள் மேற்படிப்புகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவது குறைவு, அல்லது ஆர்வமிருந்தும் நேரம் போதாது. இவையெல்லாவற்றையும் விட, அரசியல் விடயங்கள் நாட்டு நடப்புகளில் சரி, அந்தத் தளங்களை ஆராய்வதுமில்லை, இவற்றில் இணைபவர்கள் அரிதாகவுள்ளனர். அலங்காரங்களிலும், சின்னத்திரைகளில் பொழுது போக்கிறார்கள் என்றதான பார்வை, எண்ணக் கருத்தினை அதிரடியாகவே இன்றைய பொழுதுகளில் அப்புறப்படுத்தி வருகிறார்கள் எனலாம்.

இன்று புகலிட தமிழ்ப் பெண்கள் மத்தியில் செயற்பாடாக, உணர்வாக, தேசக்குரலாக எழுச்சி பெற்று உலக சமூகத்தின் கவனத்தையே ஈர்ந்துள்ளது இன்றைய தாய்மை உணர்வுகள்.

ஜேர்மனி பேர்லின், டுசில்டோவ்  சரி, பெல்ஜியம் பிரேசல்சில் சரி, சுவிஸ் ஜெனிவாவில் சரி தமிழர் உரிமைப் பேரணிகளில், எமது பெண்கள் ஒரு கையில் உரிமைக்கான பதாதை, மறு கையில் பிள்ளைகள், முதுகில் நீராகாரம், வாய்மொழியாக தேசிய உணர்வு வாசகங்கள், கண்களில் அடி, முடி காணாத மக்கள் பாதையினைத்  தேடல்,  மொத்தத்தில் ஐந்து நிலையில் அவர்கள் தங்களைத் தந்து பாத யாத்திரைகள் செய்து கொண்டிருந்தார்கள். ஐந்தாறு கிலோ மீற்றரை நடக்கும் பழக்கமில்லாத இவர்கள் குறித்த மையங்களை நோக்கித் தங்கள் மனுவை முன்வைக்க சென்ற காட்சி எல்லார் மனதையும் நெகிழ வைத்தது. வயதான பெண்கள் கடுங்குளிரில் தேசிய உடையிலும், சில சமயங்களில் கண்ணீர் விட்டு அழுத காட்சியும் அன்னையர் தினத்தில் நினைவு கூரவேண்டிய புத்துணர்வைத் தந்துள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழு மையத்தை நோக்கியோ ஐ.நாமுன்றலோ, வெளிநாட்டு தூதரகங்களுக்கோ பராளுமன்றமோ மனுவினை அனுப்பி, அல்லது கையெழுத்து வைத்து விட்டு அமரவில்லை அவர்கள். வீட்டுக்குள்ளிருந்து  எழுந்து வெளியில் வந்து விழிக்க வேண்டிய தருணத்தில் விழிப்போடு ஆதங்கங்களை, தங்கள் கோரிக்கைகளை உணர்த்தும் முன்வைக்கும் தேர்ச்சியைப் பெற்றிருந்தார்கள், பெற்று விட்டார்கள். அத்தோடு ஊடகங்களில் உணர்வான குரல்கள் ஓய்வின்றி ஒலித்த படியுள்ளது. இந்த உந்துதல் எல்லாப் பெண்களையும் உசார்ப்படுத்தியுள்ளது.

எங்களது தாய்தேசம் நடாத்தும் போர் எங்கள் உரிமைகளை மீட்கவே. இது அறவழி பார்த்துப் பார்த்து மறவழி தொட்டோமென்பது தெளிவான நியாயமானது. தாயினம் தனித்துவமாகவே ஏற்றுள்ளனர் - இப்போதெல்லாம் எல்லோரது பேச்சும், மூச்சும் தாய்பூமி பற்றியதாகவே கிடக்கிறது.

ஆனாலும் இன்னும் கொஞ்சம் இடைச்சொற்கள் போன்று குறிப்பிட்டவர்கள் சேதி கேட்பதும், கப்பல் சேருமா? ஊர் உலா  எப்படி? (பேரணிகள்) விண்ணானம் பேசுவதில் தவறவில்லை. இவர்களும்  புரிந்துணர்ந்து இணையவேண்டும் என்பது இன்றைய தின வேண்டுதல்.

கனடாவிலிருந்து வந்து இளைய செல்வி தன்னுரையில் பிரேசல்சில்  உரையாற்றிய ஒரு சில வரியை நினைவுகூருவோம். ' எனக்கு இந்த அரங்கமேறி பேச்சு மட்டும் தருவதில் முழுதாக குற்றவுணர்வு உள்ளது, உங்களுக்கு அதே குற்ற உணர்வில்லையா? நீங்கள் ஐரோப்பிய ஒன்றியங்களை, ஐ நாவையோ அழுத்தம் கொடுப்பது போதாது, உங்கள் உறவுகள் சாவடைகிறார்கள், ஏன் அவர்களுக்காகவா?  இன்றோடு இது முடிந்து போய் விடாதீர்கள், மேன் மேலும் எல்லாத் தள நிலைகளிலும் நின்று தமிழ்த் தேசத்தை மீட்டெடுக்க வேண்டும்"  என்று வலியுறுத்திப் பேசினார்.  இந்த இளையவரின் அகத்துணர்வு பல்லாயிரம் மக்களின் கண்களைக் கசிய வைத்தது.

மூத்தோரை வழிகாட்டியாகவும், இளையோரை செயலோடிகளாகவும், முன்வைத்து யாரையும் புறந்தள்ளாது மூத்தோர் வார்த்தைகளோடும், இளையோர் செயற்பாடுகளோடும் ஒன்றியப் படுவது இன்றைய காலக்கடப்பாடு.

எல்லோருமே பூமியில் ஒரு நோக்கோடுதான் பிறக்கின்றோம். எங்களுக்கான பாரம்பரியம் பணிகள் உண்டு. ஜேர்மனியில் கிட்லர் காலத்தில், யுத்த வேளை இங்குள்ள மக்கள் மிகவும் பாதிப்புற்றார்கள். ஆண்கள் போருக்குப் போய்விடவே  பெண்கள் நாட்டைக் கட்டியெழுப்பினார்கள். அவர்களுக்கான விடுதலையும்  விரைந்து கிடைத்தது, முன்சன் மாநகரில் உள்ள சித்திரவதைக்கூடம் இன்றும் இந்த கோரக் காட்சிகளோடு மக்களுக்குக் காட்சிக் கூடமாக உள்ளது.

அன்றைய மக்கள் புத்துணர்வு பெற்று, வாழ்வைப் புரிந்தவர்களாக மறுஜென்ம வாய்ப்புற்றவர்களாக  மக்கள் வாழ்கின்றார்கள். அதை தங்கள் இளைய சந்ததிகளுக்கும் முன் காட்டிவருகின்றனர்.

மனித உடலங்களை அள்ளி நீர் நிலைகளுக்குள் வீசுவதும், தோன்றிய இடங்களில் அடக்கம் செய்வதும், இந்த உடலங்களின் மீதாக நடந்து சென்று தம்மைக் காத்துக் கொள்வதும், கையில் கிடைத்த பொருட்களோடு, படுக்கைகளோடும் வீதிகளில் ஓடுவதும், பேரிச்சல்கள் மத்தியில் ஓடி ஒளிவதும், அன்று இவர்கள் பாடுகளாயின. 1941-1944 காலங்கள் நேற்றைய பொழுது கூட தொலைக்காட்சியில் இந்த அவலங்களைக் காட்டியிருந்தார்கள். காரணம் தங்கள் நாட்டை அவர்கள் நம்பிக்கை விடாது மறு மலர்ச்சி கொள்ள வைத்தது.

இன்று  எங்கள் தாய் மண்ணில்  இவற்றை விட மேலாக நடைபெறுகின்றதை அறிவோம். பெண்கள் தாய்மையின் இருப்பிடம். இன்று சின்னாபின்னாப்படுகின்றாள். ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு தாய்மையைத் தரங்காட்ட வேண்டும். இன்றைய அன்னையர்  தினத்தில் அன்னை பூமியின் மீதான ஆதங்கம் இதுவே.(ஐ.பி.சி தமிழ் வானொலி; லண்டன் - வழங்கிய வானலையுரை)

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree