பங்குனி 8ம் திகதி அனைத்துலக பெண்கள் தினம்

08 மார்ச் 2009
ஆசிரியர்: 

 

(அனைத்துலக தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கு (ஐபிசி தமிழ்) கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் வழங்கிய உரை)

ணக்கம் - இன்றைய தினம் பங்குனி 8ம் நாள், அனைத்துலகப் பெண்கள் தினம் - இதற்கான புரட்சிகர வாழ்த்துக்கள். மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களைத் தந்தும் இத்தோடு ஒரு பொதியைச் சுமந்து வந்து பேசி விட்டுப்போகும் மனநிறைவு இல்லாதுள்ளது. எங்கள் பூமியின் அடையாளங்களை அலங்கோலப்படுத்தும் நிலவரங்களோடும், சமகால நிகழ்வுகளோடும் ஒன்றியுள்ளோம்.

பெண்கள் சமத்துவமாக, சரிநிராக, பாரபட்சமின்றி அனைத்து வடிவிலும் உணரப்படவேண்டும் என்றதான இலக்கினை கொண்டவர்கள் பெண்ணியச் சிந்தனையாளர்கள். ஆதிக்க நிலையிலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும் முற்றாக விடுதலை பெறப்புரியும் வாதமே, அத்தகையான மெய்ப்பாடே பெண்ணிலை வாதம்.

1910 இல் டென்மார்க் தேசமும், சமத்துவ பெண்கள் மாநாடும், பெண்ணியற் சிந்தனைவாதி ஜேர்மானிய பெண் கிளாரா செட்சனும், அவர்களது முன்னோடிக் கருத்துக்களமும்,அதன் பின்னாக அதையொட்டிய மகளிர் பேரணிகளும், சகல ஒடுக்குமுறைகளிலிருந்தும் பெண்கள் விடுபட அவர்களது உத்வேகமும், அதே போன்று  நெசவுத் தொழிலாளப் பெண்களின் கூலி  சம்பந்தமான கோரிக்கைகளும் - இவற்றை மையமாக வைத்து அனைத்துலக பெண்கள் தினமாக வருடாவருடம்  நினைவுகொள்ளப்பட்டு வருவது நாமறிந்த  விடயங்களே. பெற்றன போக, பேறடையாத பற்றியுமே பெண்கள் பேச்சுக்கள் இருந்து வந்தன.

ஒரு வரையறைக்குள் அடங்காது காலத்துக்கு காலம் பெண்ணிலை வடிவங்கள் மாறுபாடடையும் தன்மையும் இங்கே பரந்தறியப்பட்ட உண்மை. இந்த வருடம் பெண்கள் முன்னாக நீண்டு கிடப்பது எங்கள் தேசத்தில் தமிழ்ப் பெண்களின் நிலவரங்கள். தினம் தினமாக மணிக்கொரு நிமிடமாக,  இக்கணமாக எங்கள் பெண்கள் துன்புறு நிலையில் உள்ளார்கள் என்பதே.

எமது தேச போர் இன்று பெண்களைப் பாரிய பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.  பல வருடங்களுக்கு பின் நோக்கித் தள்ளியுள்ளது. ஒரு நாட்டின் போர்ச்சூழலை - அரசியல் தாக்குதல்களை நேர்கொள்ள இயலாத,  இல்லை எதிர்க்க முடியாத இராணுவம் சரி, அரசியல் தலைமைகள் சரி,  நாட்டின் கண்களாக பார்க்கப்படும் பெண்களைப் பாலியல் வல்லுறவுகளுக்குளாக்குவதோடு அந்த  விடயங்கள் வெளிவராத வகையில் கொலையும் செய்து விடுகிறது. இன்னுமொரு படிமேலே போய்க் கருக்கலைப்பும் செய்கிறது. அதற்கும் மேலே சிறுமிகளை வன்புணர்வுள்ளாக்கி குற்றுயிராக ஒதுக்கி விடுகிறார்கள். இவை எமது தாய்ப்பூமியில் இன்று நடக்கும் கோரங்கள என்பதை அறிகின்றோம்

தாய்ப்பூமியை அவமானப்படுத்தவும் தங்கள் இழப்புகளை மேன்மைப்படுத்தவும், மானமே பெரிதாக எண்ணும் பெண்களை நாசப்படுத்துவதன் மூலம் எதிரி தற்காலிகமாகவே  துணிவும், திருப்தியும்  கொள்கின்றான். மனிதத்தன்மையற்ற இந்த தன்மையை உலக நாடுகள் சரி, முதலாளித்துவ நாடுகளின் பெண்கள் அமைப்புகள் சரி பெரிதாகவோ, சிறிதாகவோ கண்டும், கேட்டும் வாய்பொத்தி கண்மூடி மௌனித்திருக்கின்றன.

எமது வன்னி நிலப்பரப்பில் இந் நிகழ்வுகள் உச்சக் கட்டத்தில் உருப்பெற்றுள்ளது. ' நாங்கள்  பாதுகாக்கின்றோம், பாராமரிக்கின்றோம், மருத்துவம் செய்கின்றோம" என்றதை நம்பிய சோதரிகளின் அழுகுரலும் சாவும் தான்  தருவிக்கப்படுகிறது.

புராணக்காதைகளில் அதர்மம் தலையெடுக்க கிருஸ்ணபிரான் வருவார், காப்பாற்றுவார் என்பதும் பெண்களின் துயிலுரியும் வேளை தோன்றுவார் மலை மலையாகச் சேலை வளரும், துச்சாசனன் மயங்கி வீழ்ந்து போவான் என்ற காலம் இதுவில்லையே. கதை கதையாகவே போயின.

பெண்கள் இயற்கையால் வஞ்சிக்கப்பட்டவர்கள். அதற்கு மேலாக தங்கள் சுய ஒழுக்கத்தை மனத்தில் ஆழமாகப் பதியம் செய்துள்ளவர்கள்.  இதன் காரணமாக எமது பெண்கள் தம் உடலில் வாழ்வியல்  நெறியில் கண்ணும் கருத்துமாக உள்ளவர்கள். இது அவர்களது சுபாவம், மற்றவர் தன்னைப் பாரப்பதையோ, கேலியான வார்த்தையால் பேசுவதையோ, சீண்டிப்பேசுவதைக் கூடப்பொறுக்க இயலாதவர்கள். மொத்தத்தில் அவமானங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவதை  அனுமதிக்கமாட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களைப்போன்றே, ஏனைய பெண் உணர்வாளர்களும் ,எமது மக்களும் இன்று தவிக்கின்ற நிலவரத்தில் உள்ளனர்.

தாய்மை என்ற கௌரவத்துள், ஆளுமையென்ற தவ நிலைக்குள் தன்னைப் பாதுகாக்கும் பெண் இந்த போர்ச் சூழலில் ஏற்படும் இந்தக் கோரமான  குதறல்களை எப்படி எதிர்கொள்ள முடியும் ? பெண்ணின் மீது விழும் இந்த நாசம் தமிழர்கள் மீதான பெரும் அடியாகவே எதிரி நினைக்கின்றான். இந்நேரம் பேதங்களின்றி பேருதவிகள் தந்து கொள்ள மனுக்குலத்தர்மம் அனைத்து மக்களுக்குள்ளும் வேற்றுணர்வின்றி வந்தாகவே வேண்டும்.

1987 ஆண்டில் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற முகத்தோடு தாய் மண் யாழ் குடா நாட்டில் கால் வைத்தது, அப்போதும் பெண்களைத்தான் சின்னா பின்னா  நாசமாக்கியது. அதன் விளைவு தமிழ்ப் பெண்கள் தங்களையும், தம் மண்ணையும் மீட்கவே பெண் போராளிகளானதும் இன்றுவரை இது தொடருகின்றது. அவர்களின் அந்த ஆன்மபலம் அனைத்துலகும் அறியும் . இன்றைய இந்த அழிப்பினைப் பெண்கள் அமைப்புகள் அனைத்துலகுக்கும் இனங்காட்ட வேண்டும். புகலிட சகோதரிகள், சகோதரர்கள்  இதை அவதானிக்துக் கைகொடுக்கவே வேண்டும்.

ஆயுதமேந்திப் போராடுவது வெறுமனே தாய் மண்ணை மீட்பதோடு, நிலத்தில் பாறிக் கிடக்கும் சமூக சீர்கேடுகளையும், ஒடுக்குமுறைகளையும் பெயர்த்தெறியும் நோக்குடனும், ஒரு சமத்துமமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் இலக்குடன் பெண்களும் ஆயுதமேந்தினார்கள். இதுவே மகளிர் கருத்துக்களாகவுமிருந்து வந்தது. இவர்கள் தங்களையும் தத்துக்கொடுத்து அனைத்து வடிவிலுமான அறிவியல் சார்ந்த தளங்களில் மற்றவர்களையும் வளர்த்தவர்கள் எமது பெண் சமூகத்தின் பரவலான மெய்யான கருத்து.

போர்காலங்களில் மேலை நாடுகளிலும் இந்தக் கொடுமையிருந்தது. இதன் நோக்கமானது அந்த தேசத்தின் அடையாளத்தை மாற்றுவது தான் எதிரியின் நோக்கம். தங்கள் வாரிசுகளை பெண்கள் சுமப்பதும், வேலைக்காரிகளாக அவர்களை அமர்த்துவதுமே. இது வந்து எமக்கு திணிக்கப்படும் கொடுமை.

'ஆயிரம் பேரை அடித்து வீழ்த்துவதைவிட ஒரு பெண் கண்ணீர் விடுவதைத்தடுத்துக் காப்பது மேல" என்பது அறிவியல் மரபு. எமது தமிழ்ப் பெண்களின் மீதான கோரத்தாக்குதல்களைத் துடைத்தெறியும் கரங்களாக ஆண், பெண் பேதமின்றி கரங்கொடுக்க முன் வரவேண்டும். அனைத்துலகப் பார்வைக்கும் அறியத் தரவேணும்.

ஒருவீட்டின் அனைத்து வடிவிலும் அவள் உழைப்பும், அதைவிட வெளியிலும் அவள் மேன்மையான பன்முகத்துறை சார்ந்த பணிகளும் ஆற்றும் திறமை பெற்றவள் பெண், அவளை முடங்கச்செய்யும் இந்த பெண்கள் மீதான வன்புணர்வுகள் வளர்ந்து கொண்டே போகுமாயின் எங்கள் பெண்ணினமே அழிந்தொழிந்து போகும்.

சர்வ வல்மையும் கொண்டதொரு சமூகத்தை கட்யெழுப்பிப் பார்த்த பெண் சமூகம். தளர்வும் சலிப்பும் அடைந்து போகாது, பாதுகாக்க வேண்டும். பெண்களால்தான், பெண்கள் உணர்வுகளை உணரமுடியும் என்றதான கருத்தில்கூட முரண்பாடுகள் உண்டு. பெண்கள் ஜனாதிபதியாக, பிரதமராக, அமைச்சர்களாக, காவற்துறை அதிகாரியாக, இன்னும் மேலான பதவிகளில் இருந்த பெண்கள்: பெண்கள் மீதான சமூகம் சாந்தோ,அல்லது தனி மனுசி சார்ந்தோ  சிறிதான தடைகளைக் கூட எடுத்தெறிய முடியவில்லையே.

தங்களையும் குடும்பத்தையும் வளர்த்து விட்டார்கள் தவிர. ஒடுக்கப்பட்ட பெண்களை உணர்ந்து அவர்களை விடுவிக்க இந்தப் பெண்கள் எந்தவகையிலும் பெண்ணியற் சிந்தனைகளோடு செயல்படவில்லையே. சகல அடடிமைதளையிலுமிருந்து, தன்னையும் தன் போன்ற பெண்களையும் விடுவித்து அவர்களுக்கு முழுமையான வாழ்வைத்தரவே போராடுவதே. இதை இவர்களாக இருந்தும் செய்தார்களா?

ஆண்கள்கள் தான் தாதாக்களாக இருந்தார்கள் என்பதைவிட, பெண்களுக்கே, பெண்கள் தாதாக்களாக செயற்படும் தன்மை எங்கள் சாபக்கேடு. பெண்கள் உயர் பட்டம், பதவிகள், செயற்பாடுகள் ஈடுபாடுகொள்ளும் வேளை பெண்களே, இதைக் கொச்சைப் படுத்தும் தன்மையும், நிந்திக்கும் தன்மையும் இருக்கிறது. ஆண்கள் இதே தலைமைகளை, அங்கங்களை வகிக்கும் போது அவர்களுடன் கைகோர்த்து நிற்கும் தன்மை இன்னும் பெண் சமூகத்திலிருந்து பெரிதாக மாறி விடவில்லை. இதுவும் பெண்களைப் பின்னடைவு செய்யச் செய்கிறது. ஆண்கள்தான்  அதற்குத் தகுதியானவர் என்ற எண்ணத்தோடு புத்திஜீவிகளென்ற போர்வையில் புறப்பட்டுவிட்டார்கள்.

போர் என்று வந்தால் பெண் தன் பிள்ளையைத் தருகின்றாள், தன் துணைவனைத் தருகின்றாள். தற்போது மகளையும் தந்து விடுகிறாள். அந்தத் தனித்துவம் பெண்ணுக்கு மட்டுமேதான்  இருக்கிறது. இறக்கும் வரை இவளும் போராளியாகவே வாழ்ந்து போகிறாள் இல்லையா? ஆம்.

எங்கள் பெண்கள் பெரும்பாடு பட்டு முக்கி, முக்கி வளர்த்துக் கொண்ட அனைத்துப் பரிமாணங்களும் ஒரு கணத்தில் நிர்மூலமாக்கும் சேதிகளாகவே புகலிடத்தில் தினத்தந்தியாக பெருகி வரும் வேளையிது, இந்தப் பெண்களை எப்படி இதிலிருந்து மீட்பது என்பதை, அவர்களுக்கான திருப்திகரமான, வாழ்வியலை வகுத்து தருவது  என்பதும்  எங்கள் பாரிய கடமையும், இறையாண்மையும்  கூட .

இதை எங்கே அறைகூவுவது, யாருடைய கவனத்தில் தொடர்ந்து முன்வைப்பது என்பதை கவனமாக்குவோம். அன்புச் சகோதர, சகோதரதிகளே இதுவே எனது இன்றைய தின ஆதங்கமாகிறது.
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree