வானலை குடும்ப மையம்

09 அக்டோபர் 2007
ஆசிரியர்: 

 

ஐ பி சி தமிழ் அனைத்துலக ஒலிபரப்பு கூட்டத்தாபனத்தில் (வானலை குடும்ப மையம்) -ஒலிபரபாகிய புலம்பெயர்ந்த தழிழ்ப்பெற்றோர் தமது குழந்தைகளின் தாய்மொழி அறிவுக்கு ஆற்ற வேண்டிய பணி என்ன? இவர்கள் எத்தனைதூரம் அக்கறை ஆர்வம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்? என்றதான வினாவுக்கு கோசல்யா சொர்ணலிங்கம் வழங்கிய பதில் கருத்துரை:-

எனது பட்டறிவின், அனுபவத்தின், அறிவியல் வாயிலாகவும் எனது கருத்தினை பகிர்;ந்து கொள்கிறேன்.

புலம்பெயர்ந்த தமிழ் பெற்றோர்கள் தமிழ்மொழி அறிவை வளர்ப்பதில் அல்லது கற்பித்தலில் எத்தனை அக்கறை, பொறுப்பு வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதே உங்களது தலைப்பினது உள்ளிடாக இருக்கிறது. பெற்றோர்களினது பணி பங்குதான். இதற்குள் என்னதானிருக்கிறது என்பதற்கு முன்னாக, புலத்தில் ஆரம்ப காலத்தில் தமிழ்மொழியைக் காப்பதில், வளர்ப்பதில் இளம் பெற்றோர் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டு, பின்னால் இன்றைய பெற்றோரினது ஆர்வம், பங்கு, மேலும் ஆற்ற வேண்டிய பணி என்ன என்பதைப் பார்ப்போம்.

1983ம் ஆண்டில் தாயகத்தில் மூண்ட பெரும் இனக்கலவரத்தால், புலம் பெயர்ந்த தமிழர் அனேகர் இளையோராகவே இருந்தார்;கள். இவர்கள் பின்னாக, 1985 ஆண்டளவில் இளம் பெற்றோர் பலர் புலம் பெயர்தார்கள். இந்நாட்களில் தங்கள் தாயகத்தை பிரிந்த ஆதங்கத்தில் தங்களை உணர்வு பூர்வமாக தக்க வைத்துக் கொள்ள ஜேர்மானிய மக்களினது உதவியோடு, பல தடைகளுக்கும் மத்தியில் பல நகரங்களில் தமிழர் ஒன்றியங்களை, தமிழ் அமைப்புகளை அமைத்து அதன் முன்னெடுப்பாக, படிப்படியாக முத்தமிழ் விழாக்கள், தமிழ் சஞ்சிகைகள், வழிபாட்டு நிலையங்கள், ஒன்று கூடுதல்கள், தமிழ்ப்பாடசாலைகள் ஆகிவற்றை அமைத்தார்கள. இதன் மூலமாகவேதான் ஆரம்ப காலங்களில் தாய்மொழி கற்பித்தலிலும், வளர்விலும் ஆர்வம் காட்டினார்கள். பிள்ளைகளிடையே ஆர்வத்தை வளர்க்க அவ்வப்போது தமிழ் விழாக்களை முன்னெடுத்தபோதும் பரந்த ஒரு திட்டத்தின் கீழ் பெரும்பாலும் அமையவில்லை. ஆனாலும் இது அந்தக் காலத்தில் பெரும் முயற்சியே. அதைவிட அன்றைய தமிழ் ஆன்றோர்கள் மேலும் தாய்மொழித்திறனை ஊக்குவிக்கும் முகமாக பரிசுத்திட்ட போட்டிகளையும் நடாத்தினாரகள். அன்றைய குழந்தைகள் இன்றைய இளைஞர்கள். இதில் பலர் தாய்மொழிக் கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அடுத்தபடியாக 1990ம் ஆண்டில் பெரும்பாலான நகரங்களில் தமிழாலயங்கள் அமைத்து அதன்மூலமும் மிகச்சிறப்பாகவே தமிழ்மொழியை, அதன் அறிவை வளர்க்க சீரிய முறையில் குழந்தைகள் தமிழ்மொழியைக் கற்பிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தினர்கள். இன்று நூற்றுமுப்பது (130) தமிழாலயங்கள், ஆயிரம் (1000) தழிழாசிரியர்கள் நிர்வாகிகள் சேர, ஏழாயிரம் மாணவர்கள் (7000) தமிழ்க் கல்விக்கழகத்தின் பாரிய செயற்பாட்டினாலும், இதற்காகவே உழைக்கும் சான்றோர்களாலும், ஜேர்மனியில் தாய்மொழி தமிழ்கல்வி கற்பிக்கும் செயற்பாட்டில். கல்விக்கழகத்தின் பொறுப்பில் தமிழாலயங்கள் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றன. இந்த முறை உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியானது முற்றிலும் ஊதியம் பெறாது தாய்மொழிப் பற்றுள்ளவர்களால் தாய்மொழிக்கு ஆற்றப்படும் பணி. இதைவிட இந்த அமைப்பினூடாக, சமூகக்கல்வி, உணர்வுக்கலை, மெய்யுணர்வுக்கலை, விளையாட்டுக்கலை ஆகிய அந்தந்த துறைசார் திறமைமிகு ஆசிரியர்களால் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டும் வருகின்றது. தாய்மொழிக்கல்வியை மாணவர்கள் பெற்றுக் கொள்ள சமூகத்தில் பல சான்றோர்கள் தம்மாலான பணிகளை நேர்த்தியாக செய்த வண்ணம் உள்ளார்கள்.

இந்த தாய்மொழி கற்பித்தலில் பெற்றோர் எத்தகையான அக்கறை, பொறுப்புணர்வு கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்போமாகில்... ஆம், எல்லோரையும் இதற்குள் அடக்கி விட முடியாதபோதும், பல பெற்றோர் பக்கபலமாக இருந்தபோதும், அவற்றையும் வரவேற்று மற்றைய பக்கமும் பார்க்கின் மிகச் சில பெற்றோரினது அர்த்தமற்ற அச்சம், விமரிசனம் ஆங்காங்கே இன்னும் இருக்கவே செய்கின்றது. அதுவும் ஒரு தொந்தரவாகவும் இருக்கிறது.

தாய் மொழிப்பற்றின்மை, டொச்மொழியை தமிழ்மொழிக் கல்வி குழப்பி விடும் என்றதானதொரு எண்ணம். முற்றிலும் தவறான நோக்கும் இருந்து வருகிறது. அவர்களுக்குப் பக்குவமாக சொல்லக்கூடியது 'ஒரு மொழியின் உயிர்ப்பும், இனத்தின் வேரும் அழியாதவரை ஓர் இனம் உன்னதம் அடையும்.' ஒரு இனத்தை முற்றிலும் அழிக்க வேண்டுமாயின் அதன் உயிரான தாய்மொழியை அழித்துவிடு என்பதையும் அறிந்தும் வைத்திருக்கின்றோம். ஆகவே தாய்மொழியினது தாற்பரியத்தை அறிவதைவிட, உணர வேண்டும். குறிப்பிட்ட பராயத்தில் ஒரு மாணவனுக்கு பல மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆற்றலும, திறமையும் உண்டு. தாய்மொழியூடாகவே பலவேறு துறை சார்ந்த தளங்களில் சிந்தனையாற்றல் விரிவடைய மேன்மேலும் ஆற்றல் பெறுகின்றார்கள் என்பதும் கண்கூடு.

ஜேர்மனிய கல்லூரிகளில், பள்ளிக்கூடங்களில் அதைக் கற்பிக்கும் வாய்ப்பினை, இடவசதிகளை, நேர வசதிகளை ஒழுங்காக்கித் தந்துள்ளார்கள். மேற் சொன்ன அத்தகைய தவறான அச்சங்களை, சாட்டுகளை மனதிற்கொண்ட பெற்றோர், சமூகத்தினர் இவ்வகையான எண்ணத்தை மாற்றவே வேண்டும். இன்னும் தாய்மொழிக்கான பதினொராம் ஆண்டு சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு ஜேர்மனிய நேர்முகப்பரீட்சைகளில் இருபது வீதம் புள்ளிகள் சேர்த்துக் கணிக்கப்படுகின்றது. உதாரணமாக இங்குள்ள பிரபல வங்கிகளில் உத்தியோக ஊழியருக்கான பயிற்சிகளுக்கு தாய்மொழி சான்றிதழ்கள் இணைக்கப் பார்க்கப்பட்டு புள்ளி வழங்கப்பட்டு எமது மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துமிருக்கிறது. இந்த சான்றிதழ்களை மாணவர்களின் தேர்ச்சியை முன் வைத்து தமிழ்க் கல்விக் கழகம் வழங்கி வருகின்றது.

மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக நேர்த்தியான முறையில் பரீட்சைகள், தமிழ் திறன் போட்டிகள் நடந்தும் வருகின்றது. இவற்றை பெற்றோர் அறிந்திருக்க வேண்டும். தமிழ் ஆசிரியர்கள் விண்ணப் படிவங்கள் மூலம் அத்தாட்சிகளோடு தகமைகளோடு தேர்ந்தெடுக்கப்பட்டு, மேன்மேலும் பயிற்சிப்பட்டறைகள் மூலமாக கற்பித்தல் முறை மேலுமாக தீட்டப்பட்டு, தாய்மொழி பயிற்றுவிக்க ஆசிரியர்கள் அனுப்பபடுகின்றார்கள். பாடத்திட்டம், பாடப்பதிவு, பாடக்குறிப்பு, மாதாந்த பெறுபேறுகள் குறிப்பு சீரிய ஒழுங்கமைப்பின் கீழ் தாய்மொழி பயிற்றுவிக்கப்படுகின்றது. இதுபற்றியதான பூரியமான பார்வை, விமரிசனம் பெற்றோரிடம், மற்றோரிடமும் இருக்கத் தேவையில்லை. இது போல் அனைத்து அறிவுத்திறன் போட்டிகள், தமிழ்த்திறன் போட்டிகள், பொதுப்பரீட்சைகளுக்கான நடுவர்கள் தேர்வில் இவர்களுக்கான உயர் பயிற்சிப்பட்டறைகள் தகுதி வாய்ந்தவர்களால் நடாத்தப்பட்ட பின் இதற்காக தேர்ந்தெடுத்தே அனுப்படுகின்றார்கள்.

இளையவர், மாணவர் சமூகத்தில் ஆங்காங்கே அர்த்தமற்ற சீரழிவுக்குக் காரணம் தேசம், இனம், மொழிப்பற்றின்மையே என்றதானதோர் உண்மையை உணர்ந்து கொள்ளவே வேண்டும். எங்களை விடவும், ஆசிரியர்களை விடவும், சமூக சான்றோர்களை விடவும் எமது பிள்ளைகள் சீரியராவதற்கு பெற்றோர்தான் முக்கிய பொறுப்பாளராகின்றனர். அவர்களுடைய வழி நடத்தலும்தான் இங்கே முன் நிற்கிறது. எல்லா இனத்தவருக்கும் தங்கள் மொழியின் மீதாக இருக்கும் அக்கறை எமக்குள்ளும் தோன்ற வேண்டும். மொழிப்பயிற்சி வளர வேண்டுமாயின் வீட்டுக்குள்ளே தான், இங்கேதான் ஆரம்பமாக வேண்டும். பெற்றோர்கள் தம் பிள்ளைகளோடு தமிழில் பேச வேண்டும்.

மிக சின்னதான காரணங்களுக்காக, வேடிக்கையானதும் கூட, வாரத்தில் வரும் ஒரே ஒரு நாள் ஆசிரியர்கள் காத்திருக்க, மாணவர்கள் வகுப்பை நிறுத்திவிட்டு, பூப்புனித நீராட்டுவிழா, பிறந்த நாள் விழா, கல்யாணவிழா... இதுபோன்ற விழாக்களுக்குப் பெற்றோர் பிள்ளைகளை அழைத்துப் போய் நாள் பூராவும் தம்மோடு இருத்தி வைத்துக் கொண்டு இருப்பது கூட இருக்கிறது. இதனால் அன்றைய நாளுக்கான அறிவியல் நிகழ்வுகள் அனைத்துமே அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போகின்றது. இது பிள்ளைகளுக்கும் சலிப்பினை ஏற்படுத்துகின்றது - அந்த வகையான அத்தியாவசியங்களுக்கான முறைமையை பெற்றோர் பங்கேற்று, பெற்றோர் பிள்ளைகளுக்கான அன்றைய தேவையை அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, ஏன் தாங்கள் மட்டும் அதில் பங்கேற்கலாம் தானே என்பது எமது கருத்து.

சமகால சூழலில் மாணவ சமூகம் எத்தனையோ விடயங்களை கையேற்க வேண்டிய நிலையிலும், வேறும் தலைமைத்துவ பங்கினையாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளார்கள். அவர்கள் மனத்தில் ஆழ்ந்து கிடக்கும் சிந்தனா சக்தியை, ஆற்றலை வெளிக்கொணர வேண்டும். உள்ளத்தில் ஊனங்களை வளர்க்க வாய்ப்பு தரவே கூடாது. அது எந்த தேசமாக நகரமாக ,இருந்தாலும் ஆங்காங்கே அமைந்துள்ள அந்தந்த வாய்ப்பினைத் தேடிப் பெற்றோர் தான், தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போக வேண்டும். மிக இலகுவான வடிவில் தமிழ் கற்பிக்கும் பாங்கு இப்போது நடைமுறையில் உள்ளது. 247 எழுத்துக்களா? என்றதான திகைப்பினை, வியப்பினைத் தளர்த்தி தாய்மொழியைப் படிப்படியாக பயிலும் தன்மையை, அறிவை கூடுதலாக்க வழக்கத்தில் அமைய அழகாக கல்விக்கழகங்கள், தமிழ் பேரமைப்புகள், அறிஞர்கள் கல்வி முறையை வடிவமைத்துள்ளார்கள். பதினொரு வருடங்கள் தமிழ் கற்றுத் தேர்ந்த மாணவர்கள், ஆசிரியம் பயிற்சி பெற்றுத் தேர்ந்த மாணவ ஆசிரியர்களாக பணியாற்றுகின்றார்கள்.

இந்தப் புனிதமான பணியை ஆற்றுவதற்கு மேலும் முன் வரவேண்டும் என்பதோடு ஒத்துழைப்புத்தர வேண்டுமென்று பணிவன்போடு பெற்றோரை கேட்டுக் கொள்கின்றோம்.

அனைத்துலக ஆசிரியர்கள் தின நினைப்பின் மலர்வாக இந்தப்பணியில் உள்ள அனைத்து ஆசிரிய சேவையாளர்களுக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்.
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree