சர்வதேச பெண்கள் தின நினைவில்..

28 மார்ச் 2007
ஆசிரியர்: 

 

ர்வதேச பெண்கள் தின நினைவில் எனது புரட்சிகரமான பெண்கள் தின வாழ்த்துக்கள்
'வாழ்த்தலும் போற்றலும் கேட்ட பெண் -தன் வடிவினில் வாஞ்சை கொண்டு
வாழ் வளத்தினை மறந்து -கடவுளும் யானே கருணை வடிவமும் நானே
உயிர் காத்திடும் பொறுப்பும் என்னதேயென நெகிழ்ந்து - அவள்
உரிமை கேட்க உருத்தினைப்பெற உறங்கியே போனாள் .

மிகத் தந்திரமாக பெண்ணின் பெருமை பேசிப்பேசி அவளை ஆதிக்கப் பிடியிலிருந்து மீளாது அடக்கி வந்த காலம் இன்னும் மீட்கப்படவில்லை. காலத்திற்கேற்ப இது பல வடிவங்களில் தோன்றியவண்ணமே உள்ளது. அந்த வடிவங்களை உடைத்தெறிய பெண்கள் சலிப்படையாது குரல் தர வேண்டும். கண்டுகொள்ளாதவர்களாக, கேளாதவர்களாக இருக்க இயலாது. பெண்ணிலை பேசுகின்ற பெண்களைச் சமூக அக்கறை கொண்டவர்களாகப் பார்க்கும் பார்வை குறைந்து, கலாசார கட்டுப் போக்குகளை மீறியவர்களாகவும், தன்னடக்கமில்லாத பெண் என்ற கேலியும், விசமத்தனமான விமர்சனமும் கிடைக்கிறது. அதேவேளை இன்னோர் மகிழ்வு ஏதெனில் இந்த சமூகம் தராத பாதுகாப்பினை, கல்வியாவது தராதா? என்ற எண்ணத்தில் பெண்கள் கல்வியில் பல வெற்றிகளையும், சாதனைகளையும் பெறுவதை இன்று கண்டு வருகின்றோம். இது மகிழ்ச்சிக்குரிய விடயம். இந்த உன்னுதலும், இந்த வெற்றியும் தொடரும். இன்னோர் புறம் பெண் விடியலுக்கான பொறுப்புணர்வை எல்லா ஊடகங்களும் உள சுத்தியோடு முன்னெடுக்க வேண்டும். நாளைய சந்ததிகளுக்கு இந்த ஆய்வுகளே தரவுகளாகின்றன. காலத்தால் கணிக்கப்பட்டு வரும் சேதிகள் இவை.

இன்றைய பாடநூல்களில் 'பாரதிகண்ட புதுமைப்பெண்' என்ற பாடல்களோடு கூடிய அம்சங்களை சேர்த்தது கூட மிக வரவேற்க கூடியது. எல்லாத்துறைகளிலும் சமவுரிமை நாடும் பெண்களை ஆண்கள் எதிரிகளாக, விரோதிகளாக பார்க்கும் பார்வையை மூடவேண்டும். அதே போல் ஆணாதிக்கம், பாலியல் சுரண்டல், சீதனம், அர்த்தமற்ற சடங்குகள், அரசியல் ஆதிக்கம் இவற்றிலிருந்து தன்னை விடுவிக்க பெண்ணினம் போராட வேண்டும்.

சமத்துவ பெண்கள் மாநாட்டில் 1910ம் ஆண்டளவில் டென்மார்க் நகரில் கிளாரா செட்சின் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கமைய 1911ம் ஆண்டளவில் சகல ஒடுக்கு முறைகளிருந்து போராட பெண்கள் அணிதிரண்டனர். அந்த நாளே பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முற்றிலும் பெண்களே இந்தப் பொறுப்புகளை ஏற்றனர்.

ஒரு இனத்தின் வலியை அந்த இனத்தாலேயே உணரமுடியும்.

தொழிலில், நிர்வாகத்தில், ஒன்று கூடலில் இது பற்றியதான அனைத்திலுமாக பெண்களின் செயற்பாடுகளே இருந்து வருகின்றது. எந்த துறையிலும் பேசவரும் பெண்களை, ஆண்கள் ஆணாதிக்க உணர்வினை ஊடுருவச் செய்யும் தன்மையிலிருந்து அவர்கள் இன்னும் விடுபடவில்லை. பெண் எந்த துறையிலும் முன்னேற தடையாயிருப்பது, அவள் சிந்தனையை குறுக்குவது, இதற்கு சில பெண்களும் துணைபோவது நடைமுறையிலிருந்து பெரிதாக விடுபடவில்லை. பெண்களைத் தனித்தியங்க விடுவதுமில்லை. அப்படி பெண் முதன்மை பெறுமிடத்து அவளினது ஒழுக்கத்தில் அவதூறினை அள்ளித் தூவிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். தங்களை மதிக்கவும் போற்றவும் வேண்டுமென எதிர்பார்க்கிறது இந்த வர்க்கம்.

pengal thina ninaivil 2இன்றைய பெண்கள் சாதாரண பிரச்சனைகளைக்கூட தீர்க்க ஆண்களை சார்ந்து நிற்பது மேலும் பிரச்சனையை தோற்றுவிக்கின்றது. அவர்களின் கனத்த குரலுக்கும், ஆளுமைக்குள்ளும் அடங்கிப் போகிறார்கள். இன்னும் ஆண்கள் சமூகம் முழுமையாக பெண்களினது விழிப்புணர்வை, பெண்ணுரிமையை நோக்கிய செயற்பாடுகளை, சரியான முறையில் ஏற்கத் தயங்குகின்றது. ஆணுக்கு இருக்கின்ற சகல திறமையும், அதைவிடப் புத்திசாலித்தனமும், பொறுமையும் பெண்களுக்கு இருக்கின்றது. பெண்களைப் புறக்கணித்துவிட்டு, புறந்தள்ளிவிட்டு, ஒரு முழுமையான சமூகத்தை, தேச விடுதலையை எந்த புரட்சியாளராலும் சாதிப்பதென்பது சாத்தியமாகாது. ஏனென்றால் பெண்கள் சமூகத்தில் இணைபிரியாத அங்கம்.

காலங்காலமாக சீதனம் பற்றியே பேசி வருகின்றோம். இது ஒருவகைச் சலிப்புணர்வை ஏற்படுத்தினாலும், சீதனம் வாங்கும்முறை சலிப்படையவில்லை. பல்வேறு வடிவங்களில் பல்லினப்பட்டு நிற்கிறது. ஓவ்வொரு பெண்ணும் தன் மகனுக்கு சீதனம் வாங்கவே மாட்டேன், நான் சீதனம் வாங்கும் வரனைத் தேர்வு செயய் மாட்டேன் என்று திடசங்கற்பம் கொள்வராயின் பெண்களே இதை முறியடிக்கும் சாத்தியமுண்டு. இன்னும் விநோதமானது, மேடைகளில் பெண்ணியம் பேசும் ஆண் பெண் தம் வீடுகளில் விழிப்பு முறைகளில் வெளிப்பட உன்னும் பெண்களினது குரல்களை முறித்து தாமே தடைக்கற்களாக நிற்கிறார்கள். சமூகத்தில் தன்னடக்கவாதிகளாக மிளிருகின்றனர்.

மொத்தத்தில் அனைத்துலகப் பெண்களுமே பல்வேறுபட்ட வடிவங்களில் ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதை இங்கு வாழும் சமயங்களில் அனுபவரீதியாகவே காண்கிறோம். ஜேர்மனியப் பெண்கள் பாரிய போராட்டத்தின் பின்தான் ஓரளவு தங்கள் உரிமையை மீட்டெடுத்தார்கள். அரபு, இந்திய, ஐரோப்பிய பெண்கள், கருத்துக்களை அறிந்த மட்டில் பெரிதாக மாற்றமில்லை, இன்னமும் போராட்டம்தான். மானுட விடுதலையை நோக்கிப் போய் கொண்டிருக்கும் தமிழீழப் பாசறைப் பெண்கள் குரலாக "நமது இலக்கு வெறுமனே நிலத்தை மட்டும் மீட்பதல்ல, நில மீட்போடு சேர்த்து இந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் பிற்போக்குத்தனங்களைக் களைந்து சமத்துவமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது பாரிய பொறுப்பாக இருக்கிறது" என்பதை கேட்கின்றோம். இது மெய்ப்படும். மனுக்குலத்தின் மறுபாதியான பெண்ணினம் என்பதை ஏற்றுக் கொண்ட தேசியத் தலைவர் உரைகளில் மனத்தில் பதிந்த வரிகளை குறிப்பிடுவோம்.

'பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்- பெண் சமத்துவம் சாத்தியமாகும்' என்கின்றார்.

எது எப்போது? என்ன உருவில் வந்து பெண்களைப் பாதிப்படையச் செய்கின்றதோ, அதை முன்வைத்து அதற்கெதிராகப் போராட்டத்தை தொட்டு நின்று அதை உடைத்தெறிந்து சுதந்திரம் பெறுவதே பெண்கள் கடமை என்கிறார்கள். பெண்ணிலைவாதிகள் பெண்கள் சமவுரிமையை பெறுமிடத்து ஆண்களுக்கும் அதனால் நன்மை கிடைக்கும். வீட்டிலும் நாட்டிலும், தேசத்திலும் ஒரு நியாயமான சமூகப் பொருளாதாரத்தைக் காணலாம். ஆணாதிக்கம் துறந்தால் பல நன்மைகள் கிடைக்கும். பெண்கள் சம பங்கேற்பதன் மூலம் ஆண்களின் சமூகச் சுமைகள், பொறுப்புகள் குறையும். ஆரோக்கியமான ஆற்றல்களை காட்ட இயலும். ஆண் பிள்ளைகள் ஆளுமைமிக்கவர்களாக, சுயசிந்தனை உள்ளவர்களாக வளர்க்கப்படுவது போலவே, பெண்பிள்ளைகளையும் இதே வண்ணம் வளர்த்தெடுக்க வேண்டும்.

"உங்களுக்கு என்ன வேணும்? எல்லாம் தந்திட்டம்" என்று கூறும் எதையும் தரவேண்டியதல்ல. நாமே அதை எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே பதிலாக இருக்க வேண்டும். பெண்கள் ஜனாதிபதியாக இருந்தார்கள், பிரதம மந்திரிகளாக இருந்தார்கள், காவல் துறையிலிருந்து மேல் அதிகாரிகளாக வரை இருக்கிறார்கள். இவர்கள் பெண்ணிலையில் எந்தளவுக்கு அக்கறைகாட்டினார்கள்? மத்தியதர பெண்களுக்கு இதனால் என்ன பிரயோசனம் என்பதை ஆராய்ந்தால் ஒன்றுமேயில்லை. ஆகவே நாமே நமது தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு குரல் கொடுப்போம், பெண்கள் விழிப்புணர்வில் கை கொடுப்போம் என்ற குரல் ஆண்களிடமிருந்தும் வரவேண்டும்.

 

(தமிழமுதத்தில் ஏற்பட்ட சில இடையூறுகள் காரணமாக இவ் ஆக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் பிரசுரிக்க முடியாமைக்கு மனம்வருந்துகிறோம். -தமிழமுதம்-)
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree