ஒரு மிருகம் + ஒரு தெய்வம் = ஒரு மனிதன்

15 நவம்பர் 2008
ஆசிரியர்: 

 

ங்கும் சிரிப்பொலி கேட்கிறது!
இது மகிழ்வில் விளைந்த சிரிப்பல்ல.
மற்றவர்களைப் பரிகசித்துச் சிரிக்கிற சிரிப்பு.
பத்திரிகைகளில் வானொலிகளில் இணையத் தளங்களில் எங்கும் இந்தச் சிரிப்பொலி கேட்கிறது.

பரிகாசச் சிரிப்பு என்றா சொன்னேன்? இல்லை இது பகுத்தறிவுச் சிரிப்பு என்கிறார்கள் அவர்கள்.
விரதம் இருப்பவர்களை நோன்பு இருப்பவர்களை பட்டினி கிடப்பவர்களைப் பார்த்து அவர்கள் பரிகசிக்கிறார்கள்.

"உங்கள் கடவுள் இதைச் சொன்னாரா?" என்று கிண்டலாகக் கேட்கிறார்கள்.
"உடலை வருத்தாவிட்டால் உங்கள் கடவுள் அருள் செய்யமாட்டாரா?" என்கிறார்கள்.
கூலிவேலை செய்தாவது உடலை வருத்தி உழைக்காமல் கூழோகஞ்சியோ குடிக்க முடிகிறதா நம்மால்.
கேவலம் வயிற்றுப்பாட்டுக்கே இந்தப் பாடுபடுகிறோமென்றால் வாழ்வில் கரை சேர்வதற்கு இயன்றளவு உடலை வருத்தவேண்டாமா நாம்?

சும்மா உட்கார்ந்திருந்தால் சுகம் வருமா என்ன?

உடல் உறுதி பெற்றால்தான் மனம் உறுதி பெறும்.
மனம் உறுதி பெற்றால்தான் எண்ணங்கள் உறுதி பெறும்.
எண்ணங்கள் உறுதி பெற்றால்தான் செயல் உறுதிபெறும்.
செயல் உறுதிபெற்றால்தான் வாழ்வு உறுதிபெறும்.
வாழ்வு உறுதிபெற்றால்தான் ஆன்மா உறுதிபெறும்.
ஆன்மா உறுதிபெற்றால்தான் உலகம் பயன்பெறும்.

நமக்கும் மேலான ஒரு சக்தி நம்மைப் படைத்துக் காத்து அழித்து அருள்கின்ற ஒரு சக்தி- இயற்கை என்று பகுத்தறிவுவாதிகள் சொன்னாலும் இந்த இயற்கையைக் கட்டியாளுகிற சக்தி- அதன் பெயரே கடவுள்.
சக்தியும் சிவமுமாய் இரண்டறக் கலந்து ஓருருவாய் எமையாளும் சிவசக்தி.
அந்த ஆதிமூலத்தைக் கண்டறிதல் என்பது அத்தனை இலகுவானதல்ல.

விரதங்கள் நோன்புகள் என்றபெயரில் தம்மை வருத்திக்கொள்பவர்கள் எல்லாம் தத்தம் உடல்களை உறுதி செய்துகொள்கிறார்கள். அலையும் மனதை ஒருநிலைப்படுத்தி ஆன்மாவை அறிந்துகொள்கிறார்கள். ஆன்மாவை அறிந்தபின் அதில் இரண்டறக் கலந்திருக்கும் இறைவனைக் கண்டுகொள்கிறார்கள்.

பரிகசித்துச் சிரித்துக்கொண்டிருப்பவர்கள் சிரித்துக் கொண்டிருக்கட்டும். தத்தம் அறியாமையை மற்றவர்களது மூடநம்பிக்கைகள் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள்.
ஒரு காரியத்தைச் செய்துகொண்டு அதிலுள்ள தவறுகளைக் கண்டுபிடித்து நிவர்த்திசெய்துகொள்வதென்பது வேறு. எட்டநின்றுகொண்டே குற்றம் கண்டுபிடித்துக்கொண்டிருப்பது என்பது வேறு.
முன்னதால் காரியங்கள் முழுமை பெறும். பின்னதால் எல்லாமே குழப்பத்தில் போய் முடியும்.

வழிபாடு என்பது இயற்கைக்கு அல்லது இறைவனுக்கு நன்றி சொல்வதற்காக உருவான கூட்டு முயற்சி. காலத்தினதும் சூழலினதும் நிலைக்கேற்ப அவைகளில் மாற்றங்கள் உருவானதேயன்றி அடிப்படையில் மார்க்கம் என்பது ஒன்றுதான்.

தனக்காகப் பிற உயிர்களைப் பலிகொள்ளாமல் பிற உயிர்களுக்காகத் தன்னைத்தானே வருத்துதல் என்பது பேரன்பின் வெளிப்பாடு.
இந்தப் பேரன்பே இறைவனோடு தன்னை ஐக்கியப்படுத்தும் என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்புத்தானே இந்த விரதங்கள் நோன்புகள்.
இது ஏன், அது ஏன் என்று விளக்கம் கேட்டுக்கொண்டு அந்த விளக்கத்தில் தமக்குத் திருப்தி வந்தால்மட்டுமே அதை ஏற்றுக்கொள்வோம் என்பவர்கள் இந்த உலகத்தில் ஒரு அர்த்தமற்ற வாழ்க்கையை முடித்துவிட்டுப் போகப் போகிறவர்களேயன்றி அவர்களால் அவர்களுக்குப் பயன் விளையப் போவதில்லை.
"என் செல்வமே!" என்று வாரியணைத்துத் மகிழும் தாயிடம், "அம்மா நான் எங்கிருந்து வந்தேன்?" என்று குழந்தைகேட்பது நியாயமான கேள்விதான்.
என் வயிற்றுக்குள்ளிருந்து வந்தாயடா..பத்துமாதம் நான் உன்னைச்சுமந்தேன்!" என்று அவள் சொல்வதும் சரிதான். குழந்தை அம்மாவின் வயிற்றின்மீது தலைசாய்த்து அவளைக்கட்டிக்கொண்டு சிரித்தால் அது அவளுக்கும் ஆனந்தம் குழந்தைக்கும் ஆனந்தம். ஆனால்.. இதற்கு மாறாக
"உன் வயிற்றுக்குள்ளா நான் இருந்தேன்..? இந்தச் சின்னவயிற்றுக்குள்ளா? என்னால் நம்பமுடியவில்லையே.. எங்கே என்னை அதற்குள் இருத்திக்காட்டு அப்போதுதூன் நான் நம்புவேன்!" என்று வம்பு பண்ணிக்கொண்டு தாயை உதறிவிட்டு வரும் பிள்ளையை என்ன செய்வது?

இன்னும் சிரிப்பொலி கேட்கிறது.
இனியும் அதுகேட்கும்.
ஏனெனில் மனிதன் தனது அறியாமையிலிருந்து மீள்வது அத்தனை சுலபமல்ல. தனது அறியாமை நீங்கும்வரை அவன் மற்றவர்களைப் பரிகசிப்பதும் ஓய்ந்துவிடப்போவதில்லை.

திருவிழாக்கள் அடிக்கடி நடக்கின்றன.
விலங்கு வாகனத்தில் ஏறிவந்து அசுரர்களை அழிக்கின்ற தெய்வங்கள் வெளியே வந்து வேடிக்கை காட்டுகின்றன.

"இதெல்லாம் என்ன அர்த்தமற்ற கூத்துக்கள்?"
-திருவிழாவோடு கூடவே கேள்விகளும் வருகின்றன.
பகுத்தறிவுகள் கேள்விகளோடு வந்து வரிசையாக நிற்கின்றன.
மனிதன் எப்போது வந்தான்? எங்கிருந்து வந்தான்? எங்கே போய்க்கொண்டிருக்கிறான்?? இன்னும்தான் தெளிவான பதில் இல்லை.
ஆனால் இந்த உடல் ஒரு விலங்கை எப்போதும் அடையாளப்படுத்தி நிற்கிறது.
"ஏய் குரங்கு! ஒரு இடத்திலை ஒழுங்காய் இரு!"
-சின்னவயதில் அம்மா அப்பாவிடம் இப்படி ஏச்சு வாங்காத எவராவது உண்டா?
கிருஷ்ணருக்கு மாடுகளும் கிறிஸ்துவுக்கு மந்தைகளும் என்று எங்கேயும் மக்கள் மாக்களாகத்தானே வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மக்களுக்கும் மாக்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்
கால் (ா)தான்.
விலங்குகளுக்கு கால்கள் நான்கு. மனிதனுக்கு இரண்டு.
நான்கு கால்களில் நடந்த மனிதன் எப்போது நிமிர்ந்தான்?
அவன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் கண்டபோது!

உடல் என்னும் விலங்கில் தெய்வம் என்னும் ஆன்மாவைச் சுமந்துகொண்டு மனிதன் என்ற பெயரில் உலாவருகிறான் அவன்.
ஆனால் தன்னை வெறும் உடலாகவே கருதும் மனிதன் தன்னுள்ளிருக்கும் தெய்வத்தை உணர்வதில்லை.
தன் உடலை தானாக எண்ணுபவனுக்கே நான் எனும் ஆணவம் மிகுந்து நிற்கும்.

"நான்தான் நான்!" என்பான் அவன். அவனது விலங்குடலே அவன் என்பது அவனது முடிவு.
தன்னுள்ளிருக்கும் தெய்வத்தை அவன் அறிவதில்லை.
பலிகொள்ளுதல் பாவம் என்னும் மனிதன் தனது பகையறுக்கத் தன்னினத்தையே பலிகொள்ளத் தயங்குவதில்லை.
(இதுவே அவனது கடவுள் பற்றிய அறியாமைக்கு முதற்சாட்சி)

தன்னுள் இருக்கும் தெய்வத்தைத் தன்னால் அறிய முடியாதபோது அவன் விலங்காகவே வாழ்ந்து முடிக்கிறான்.
அறிந்துகொண்டவனோ தன் உடலைத் தான் ஏறிவரும் வாகனமாகவே எண்ணுவான்.
உடலின் விளைவான காமமுதலாகிய உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பிரயத்தனப்படுகிறான்.

முதலில் தன்னுள் இருக்கும் தீய உணர்வுகள் என்னும் அசுரர்களை வேட்டையாடுகிறான். அதன்பிறகு தெய்வநிலைக்கு எதிரான மாயைகளை அவன் வேட்டையாடியாக வேண்டியிருக்கிறது.
இந்த வேட்டைத் திருவிழாவில் அவனுள் இருக்கும் தெய்வம் வெற்றி பெற்றால் அவன் தெய்வமாகவே மாறிவிடுகிறான்.
கொடிய மிருகமாக அலையும் அவனத உடலும்கூட அவனதுதெய்வீக நிலைக்கு முன்னால் சாதுவாக அடங்கிக் கிடக்கிறது.
நானே தெய்வம் என்ற உண்மை தெரிந்தபின்னால் உடல் என்னும் வாகனம் ஏறிவந்தவன் அதை எறிந்துவிட்டு தெய்வமாகவே ஆகிவிடுகிறான்.
மனித தெய்வங்கள் வாழும் நெறியைக்காட்டிவிட்டு மறைந்துவிடுகின்றன. மனிதவிலங்குகளோ தம்மைத்தாம் அறியாமல் மற்றவர்களை வதைசெய்து கொண்டிருக்கின்றன.

(சிவத்தமிழ் ஆன்மீகக் காலாண்டிதழ் 2005ல் வெளியானது)

நன்றி: உள்ளே வெளியே
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree