கல்கியின் கரிசனையில் அமெரிக்க விசுவாசம்?

06 பிப்ரவரி 2008
ஆசிரியர்: 

  

வ்வார கல்கியின் ஆசிரியர் தலையங்கம் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை' என என்ன சொல்லியிருக்கிறது? விடுதலைப்புலிகள் குறித்த அமெரிக்க எவ்.பீ.ஐயின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கல்கியும் தனது பங்குக்கு ஏதோ கலக்கியிருக்கிறது. வழமையாக பல இந்திய ஊடகங்களின் மிகைப்படுத்தப்படும் பரபரப்புச் செய்திகளும் பொய்களையே பரப்புரைக்கும் பண்பையும் கல்கி மீண்டும் ஒருதரம் நிறுவியுள்ளது.

கல்கியில் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை' என்ற தலைப்பை எழுதியவரே! நீங்கள் ஒரு ஊடகர்தானே? அப்படியாயின் செய்திகளையெல்லாம் கரைத்து முழுங்கியிருப்பீர்களல்லவா? எவ்.பீ.ஐயின் கூற்றினை மறுத்து நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியும், அமெரிக்காவின் முன்னாள் உதவிப்பிரதி சட்டமா அதிபருமான புருஸ்பெயின் அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தாரே, அது உங்கள் அறிவுத்திறனில் எட்டவில்லையா அல்லது புரியவில்லையா? நீங்கள் ஆங்கிலசூரர்களல்லவா? புருஸ்பெயினும் ஆங்கிலத்தில்தான் அவ் மறுப்பறிக்கையை வெளியிட்டிருந்தார். அதையேன் படிக்காமல் விட்டீர்கள்? ஓ புரிகிறது... பரபர கிசுகிசு சுடுசுடு செய்திகளின் ஆர்வலர்களல்லவா நீங்கள். இதெல்லாம் எங்கே உங்களுக்கு புரியப்போகிறது.

ஆதாரமற்ற அறிக்கைகள் விடுவதற்கு அமெரிக்காவால் மட்டுமல்ல உங்களாலும் தான் முடியுமே தவிர உலகில் வெறெந்த மனித நேயமுள்ள யாராலுமே முடியாது. தமிழர் தேசத்தில் தினம் தினம் சாகின்ற தமிழுயிர்களை உங்களுக்கும் தெரிவதில்லை எவ்.பீ.ஐ யிற்கும் தெரிவதில்லை. 'மனித வெடிகுண்டுகள்' உருவாக காரணமானவர்கள் நீங்களாகவும் மனித உயிரின் பெறுமதி அறியாதவர்களாக உங்கள் படைகளும் எங்களை வீதியில் வீடுகளில் என கொன்று போட நாமெல்லாம் சாவுக்குள் நின்று சந்தித்த சரித்திர வடுவை உங்களால் கழுவ முடிந்ததா?

உங்கள் நாட்டில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு பெருத்து வருவதை வலுத்த துயரத்துடன் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இன உணர்வுள்ள தமிழர்களின் மனவுணர்வுகளை உங்கள் அசிங்கமான ஆசிரியர் தலையங்கத்தினால் களங்கப்படுத்தாதீர்கள்.

(தமிழகத்தில் தினமும் ஒரு விடுதலைப் புலி கைது செய்யப்படுகிறார். ஆயுதக் கிடங்குகள், குவியல்கள் என்று அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அகதிகள் முகாம்களில் தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்கள். தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் அளிக்கும் தார்மிக ஆதரவும் தமிழக முதல்வரின் மௌனமும்தான் விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஊடுருவவும் நடமாடவும் துணிவைத் தருகின்றன- கல்கி)

அது எப்படி தினமும் ஒரு புலி உங்களிடம் பிடிபடுகிறா(ள்)ன்? நீங்கள் இன்னும் கனவுலகிலிருந்து விடுபடாமல் இருப்பதை இவ்வாசகங்கள் விளக்குகின்றன. ஆயுதக்கிடங்குகளா? குவியல்களா? ஆம் அதிர்ச்சியான கண்டுபிடிப்புகள் தான். ஏனெனில் ஒரு குண்டுமணியின் அதிர்வைக்கூட உணராத உங்களுக்கு இந்தப் பொய்கள் அதிர்ச்சியானவை தான்.

தமிழர்படைக்கு சிங்களப்படைகள் சன்மானமாக ஆயுதக்கிடங்குகளை தந்துவிட்டுத் தப்பியோடியபோதே தமிழர்படை தேவையான ஆயுத வலுவையும் ஆட்பல வலுவையும் பெற்றுவிட்டது. தமிழ்நாட்டில் புலியென்ன சினிமாப்படப்பிடிப்பு காண வருகிறதென்று எண்ணுகிறீர்களோ என்னவோ. எப்போதும் கனவுகளையே அதிகம் நினைவுகளில் தொலைக்கும் உங்களுக்கு புலியென்றால் காட்டுப்புலிதான் ஞாபகம். முதல்வர் எங்கள் கலைஞர் தமிழர் அதனால் தார்மீகக் குரல்களுக்கு மதிப்பளிக்கிறார். பிராமணீயர்களுக்கு இது புரியாது.

(போதும் போதாததற்கு, இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தமும் ரத்தாகிவிட்டது (ஒப்பந்தம் அமலில் இருந்தபோதே புலிகள் அதை மதிக்கவில்லை; அதனால் இலங்கை அரசும் அதை மீற நேரிட்டது). இப்போது இலங்கையில் போர்ச் சூழலே நிலவுகிறது - கல்கி)

யுத்தநிறுத்தத்திலிருந்து தானாகவே இலங்கையரசு விலகி தமிழர் தரப்பை போருக்கு அழைத்திருக்கிறது. வில்லங்கச் சண்டியனாய் மகிந்த மாத்தையா வேட்டியை மடிச்சுக்கட்டி நிற்க தமிழர் தரப்பு என்ன புளியங்கா புடுங்கவா சொல்றீக? யுத்த நிறுத்தம் அமுலில் இருக்க அதை தமிழர் தரப்பு மீறியதை உங்கள் எத்தனை கண்கள் சாட்சியமாகின? (யுத்த நிறுத்தம் தமிழர் தரப்பால் (விடுதலைப்புலிகளால்) நிராகரிக்கப்படவுமில்லை மீறப்படவுமில்லை இலங்கை அரசால் மிதிக்கப்பட்டு மீறப்பட்டதே உண்மை.

யுத்த நிறுத்தம் அழுலில் இருக்க சமாதானத்தின் தூதர்களாய் உலவிய எங்கள் அரசியல் தலைவர்களை மகிந்த மாத்தையாவின் படைகளும் ஒட்டுண்ணிகளும் கொன்று போட்டதும் விமானக்குண்டுவீசி சமாதானப் பேச்சு மேடைகளின் ஞானியான எங்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வரை கொன்று குவித்தது மட்டுமின்றி தினம் தினம் ஏனென்று கேட்க, எதுவென்று பார்க்க, எதற்கென்று கேட்க ஆட்களின்றி எந்த நேரமும் எந்தத்தமிழ் இளைஞனும் யுவதியும் சாகும் விதியை எழுதிய மகிந்த மாத்தையாவின் கொலைவெறி முகம் ஏன் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை?

(கண்ணி வெடிகளுக்குப் பலியாகும் கொடுமையும் கொரில்லா யுத்தமும் நாகரிக உலகில் எந்த தேசத்திலும் நிகழக்கூடாத கொடுமைகள். எந்த மக்களுக்கும் நேரக்கூடாத கொடூரங்கள்.- கல்கி) உங்க கண்டுபிடிப்போ கண்டுபிடிப்புத்தான் போங்க பின்னிட்டீங்க. நாகரிக உலகின் ஞானங்களையெல்லாம் கரைத்துக் குடித்த கனவான்களே எந்த தேசத்திலும் நிகழாத கொடுமையை நிகழக்கூடாத கொடுமையை உங்கள் படைகளும் எங்களுக்குச் செய்தது. அதே போல இலங்கையரச படைகளும் செய்தன செய்கின்றன. எந்த மக்களும் அனுபவிக்காத கொடுமைகளை எங்கள் மக்களும் மண்ணும் அனுபவிக்கின்றார்கள். உங்கள் போன்ற ரூபாய்களுக்காக செய்தி எழுதும் துர் அதிர்ஸ்டங்கள் உள்ளவரை உலகில் கண்ணிவெடிகளும் பலியாகுதலும் தொடர்கதைதான் போங்க.

கொரில்லா என்ற வார்த்தையை எத்தனை காலம்தான் எழுதுவீக கல்கியாரே? இனிமேல் மாற்றி எழுதிக்கொள்ளுங்கள். தமிழர்சேனை உலக வல்லமைகளுக்கு நிகரான சமவலுப்படையணி.

(இலங்கை அரசுடன் விவாதித்து, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான அரசியல் தீர்வுக்கு இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழகத் தலைவர்கள் இதற்குத் துணை நின்று, புலிகளை வன்முறையிலிருந்து ஜனநாயகப் பாதைக்குத் திருப்பியாக வேண்டும். இல்லையேல், இந்திய-தமிழக மீனவர்கள் மடிவது மட்டுமல்ல் தமிழகத்திலும் அதையொட்டிய மாநிலங்களிலும் பயங்கரவாதம் பரவிப் பெருகுவது, விரைவிலேயே நாம் காணக்கூடிய கொடுமையாகிவிடும் - கல்கி)

புல்லரிக்குதுங்க ஒங்க ஆலோசனையைக் கேட்க. இலங்கை அரசுடன் 3 தசாப்தகாலமாக தமிழர் தரப்பு விவாதித்துக் களைத்துத்தான் தன்னை ஆளுமை செய்யும் வல்லமையை தேர்ந்தெடுத்து தமிழீழம் நோக்கிய பாதையில் பயணிக்கிறது. இலங்கைத் தமிழர் உரிமைகளை பாதுகாக்க ஏற்கனவே ஒங்க ராசீவ்காந்தி ஐயா பேசித்தானே பத்தாயிரத்துக்கும் மேலான தமிழர்களை கொன்றீங்க, பல ஆயிரம் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தி, சிறுவர்களை அனாதைகளாக்கி இன்னும் ஒங்க படை எங்க மண்ணில செஞ்சது ஏராளம். இதை இன்னமும் நாங்க மறக்கல்லிங்க ஆனால் மன்னிச்சுட்டமுங்க. புலிகளை யாரும் வன்முறையிலிருந்து மீட்டு ஜனநாயகப்பாதைக்கு திருப்பத் தேவையில்லை. ஏனெனில் புலிகள் ஜனநாயகத்தை இப்பவில்லிங்க எப்பவுமே நேசிப்பவர்கள்.

'ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்களின் பயங்கரவாதம் யுத்தம்.' சேர்.பீற்றர் உஸ்டினோ சொன்ன வார்த்தைகள் இவை. எத்தனை உண்மை பார்த்தீர்களா கல்கியாரே? பணத்துக்கும் யுத்தத்துக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் எப்பிடிங்க ஊடகம் தமிழகம் என்றெல்லாம் எழுதிக்கிழிக்கிறீக? மாதச்சம்பளமில்லிங்க தேசவிடுதலைப்போர். ஒரு இனத்தின் உயிரும், உடலும், உணர்வும் கலந்த குரல் அது. அதையெல்லாம் உங்களால் உணரவோ உய்த்து அறியவோ இயலாது.

அசினா நமீதாவா நாளைய தமிழகத்தின் நட்சத்திரம் இதைத்தான் உங்களால் எதிர்வுகூற முடியுமே தவிர ஈழவிடுதலைப்போர் பற்றியோ அதன் எல்லைகள் பற்றியோ எழுதவோ பேசவோ எந்த அருகதையும் அற்றவர்கள் நீங்கள். ஊடகங்களே உலகின் காவல் நாய்களாம் யாரோ சொன்னாங்க ஆனால் ஊடகமா அப்பிடியென்றா என்னங்க? இப்படிக் கேட்கும் உங்களுக்கு இதுவெல்லாம் ஒத்துவராதவை.

ஈழத்துக்காக, ஈழத்தமிழருக்காக உயிரும் தர இந்தியாவில் உள்ள உணர்வாளர்களின் குரல்களே போதும் எங்களுக்கு. அவையே எங்களுக்கு பலம் தரும் வல்லமைகள். கல்கியும் இன்னும் இதரங்களும் உதவ வேண்டாம் உண்மைகளை ஊடகதர்மத்தை உணருங்கள் போதும்.

தமிழகத்தின் பெரும்பான்மையானவர்கள் வாசிக்கும் குமுதம், விகடன் போன்றவை தங்கள் கடந்தகாலப் போக்கை மாற்றி சமகாலத்தில் ஈழத்தமிழர் பக்க நியாயத்தை தமிழர் தரப்பு மீதான சிங்களத்தின் அநியாயங்களை உள்ளபடி சொல்கின்றன. கடும்போக்கு நீக்கி உண்மைகளை ஊடக தர்மத்தை உணர்ந்துள்ளன. நீங்கள் குமுதமாக விகடனாக நக்கீரனாக மாற வேணாமுங்க. அமெரிக்க விசுவாசம் காட்டுவதை எங்கள் விடயத்தில் போட்டு குழப்பிக்காதிங்க.

பொய்யானதொரு கருத்தை வெளியிட்ட எவ்.பீ.ஐயின் பொய்யை முதன்மைப்படுத்தி புழுகு ஆசிரியர் தலையங்கம் வரைந்து கிசுகிசுத்து பிசுபிசுத்த ஆலோசனை சொன்ன கல்கியின் நேர்மையற்ற ஆசிரியர் தலையங்கத்தையும் அதன் கருத்துப்புரட்டையும் ஊடகம் சார்ந்தவளாகிய நான் வன்மையாக கண்டிப்பதோடு இனிமேல் இப்படியான பொய்களை கல்கியும் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் வேண்டிக் கொள்கிறேன்.
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree