நாடகப் போட்டியாக கவிதைப் போட்டிகள்

02 ஜூன் 2006
ஆசிரியர்: 

  

ரில் சமய குரவர்களின் குருபூஜைகள், பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் மன்றங்கள், இவற்றுடன் சமய ஒன்றியங்கள், அமைப்புக்கள் ஊடாக பேச்சுப்போட்டிகள், திருக்குறள் மனனப்போட்டிகள், மற்றும் கவிதையெழுத, கதைகள் எழுத, கட்டுரைகள் எழுதவென மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளைப் பார்த்திருக்கிறோம், பங்குபற்றியிருக்கிறோம். அத்தகைய போட்டிகள் பல எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, நாடகக்கலைஞர்களையெல்லாம் உருவாக்கித் தந்திருக்கிறது.


பேச்சாற்றலை வளர்க்கும் முகமாக பேச்சுப்போட்டிகள், ஞாபகப்புலனைப் பலப்படுத்த மனனப்போட்டிகள், எழுத்தாற்றலை வளர்க்க எழுதும் வல்லமையுள்ளோர் அவரவர் வயதுக்கேற்ப வளர்க்கப்பட்டனர்.


எழுத்தாற்றல் என்கின்றபோது சுயமாக ஒரு மாணவனோ மாணவியோ 5 வயதானாலும் சரி 15 வயதானாலும் சரி சொந்தக் கற்பனை வளத்தையே அங்கு போட்டிகளில் ஊக்கப்படுத்தியும் வளர்த்தும் விடப்பட்டார்கள். நடுவர்களின் தீர்ப்புகளும் வயதுக்கு ஏற்றதான வெளிப்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டார்கள், வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். நடிப்பாற்றலை வெளிப்படுத்தலும் இதே வகையில்தான் நிலத்தில் மாணவர்களின் ஆற்றல்கள் அரங்கம் காண்கின்றன. இந்தப் பின்புலத்திலிருந்து புலம்பெயர்ந்து புலம்பெயர் நிலங்களில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களாக, தமிழ் கற்கும் மாணவர்களின் பெற்றோர்களாக இருக்கும் எம்மவர்கள் மேற்சொன்ன வளர்ப்பிலிருந்து விலகி ஆசிரியர்களின் பெற்றோர்களின் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப பிள்ளைகள் மீது இந்தப் போட்டிகள் திணிக்கப்பட்டு வருகிறது.


கவிதையென்றாலென்ன கட்டுரையென்றாலென்ன மனனம் செய்து அபிநய பாவ வெளிப்பாடுகளுடன் ஒப்புவித்தாலே அது சிறந்த கவிதையெனவும், கட்டுரையெனவும் தீர்மானிக்கப்படுகிறது. 5 வயது முதல் அதிமேற்பிரிவு வரையும் நடைபெறும் போட்டிகளில் பிள்ளைகளுக்கான கவிதையை அல்லது கதையினை, கட்டுரையினை ஆசிரியர்கள் அல்லது எழுத்தாளர்கள் எழுதிக்கொடுக்க அந்த ஆக்கத்தை மாணவர்கள் ஒரு வரியும் பிசகாமல் ஒப்பித்துவிட்டு வருவதற்கே நடுவர்கள் என்ற தரத்தில் செல்லும் நபர்கள் புள்ளிகள் வழங்கி பரிசில்களையும் தீர்மானித்துக் கொள்கிறார்கள். இந்த ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் தங்கள் முதிர்வுக்கும் தங்கள் எண்ணத்துக்கும் ஏற்ப எழுதும்ஆக்கங்களே போட்டிகளுக்கும் தெரிவாகி விடுகின்றன. பிள்ளைகளும் அதையே பேசி அல்லது நடித்துக் காட்ட வேண்டிய நிலையாகியிருக்கிறது.


இங்கு பல இடங்களில் நடுவர்களெனச் செல்வோர் சிறுவர்களை ஆதிக்கம் செய்யும் அச்சுறுத்தும் நிகழ்வுகளும் நிகழ்ந்தே வருகிறது. திருக்குறள் மனனப்போட்டிக்கு மனனம் செய்வது போல, பேச்சுப்போட்டிக்கு மனனம்செய்வது போல கவிதை கட்டுரைகளும் பிள்ளைகளுக்கு மனனம் செய்யப் பணிக்கப்பட்டு ஒப்புவித்தலுக்கே புள்ளிகளும் பரிசில்களும் வழங்கப்படுகின்றது. சுயமாக எந்தக் குழந்தையும் தன் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கான வல்லமையை எந்த ஆசிரியரோ எழுத்தாளர்களோ வளர்ப்பதாக இல்லை. எழுதிக்கொடுக்கும் எழுத்தாளர்களின் திறன்களை வெளிப்படுத்தும் களமாக பிள்ளைகளுக்கான தளங்கள் மாறிப் போயிருக்கின்றன புலத்தில்.


புலத்தில் எமது பிள்ளைகள் இரண்டாம் மொழியாக வார இறுதியில் மட்டுமே தாய்மொழி தமிழினைக் கற்றுக் கொள்கிறார்கள். அன்றாடத் தேவை மொழியாக வாழும் நாடுகளின் மொழியே முதல் மொழியாக இருக்க பிள்ளைகளின் சிந்தனைத் திறனானது அன்னிய மொழியில் சிறப்பாகவும் தாய்மொழி மீது சற்றுக் குறைவாகவுமே இருக்கிறது. எனினும் பிள்ளைகளை தாய்மொழியில் எழுதும் ஆற்றல் உள்ளவர்களாக ஆக்க முடியும் என்பதை மறந்துவிடும் நம்மவர் எண்ணங்களில் நமது பிள்ளைகள் பற்றிய மதிப்பீடானது குறைவாகவே கணிப்பிடப்படுகின்றது. வயதுக்கேற்ப பிள்ளைகளின் தமிழ் ஆற்றல் ஊக்குவிக்கப்படுவதும், பிள்ளையின் எண்ணத்திலிருந்து உருவாகும் எழுத்துக்கள் வரவேற்கப்பட்டு அவர்கள் தமிழில் எழுதும்ஆற்றலை வளர்ப்பதும் எதிர்காலத்தில் எழுத்தில் எங்கள் பிள்ளைகளும் பிரகாசிக்க வழிதிறக்கும்.


இதுவெல்லாம் கிறுக்கல்கள் இவை கவிதையில்லை, கதையில்லை என்று நாற்றுக்களைத் தராசிட்டு தரத்தை எதிர்பார்த்து குறிப்பிட்ட வயது வந்தோரின்ஆக்கங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் மேடைகளும், போட்டிகளும் நடப்பதில் ஏற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. சுயமாகத் தனது எண்ண வெளிப்பாட்டினை எந்தக் குழந்தை எழுத்தாக்குகின்றதோ அந்தக் குழந்தையின் ஆக்கத்தை வரவேற்று, அதற்கான தளங்களை உருவாக்கிக் கொடுப்பதுவும் ஊக்குவிப்பதுவும் எங்கள் பிள்ளைகளை எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாற்றல் மிக்கவர்களாக உயர்த்த முடியும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும், பெற்றோரும் எண்ணத்தில் கொள்ள வேண்டும்.


பரீட்சைகளுக்கு கட்டுரை எழுத வேண்டுமெனில் கட்டுரை எழுதும் பயிற்சியை பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் எற்படுத்த வேண்டும். 5 கட்டுரையை எழுதிக் கொடுத்து 5 கட்டுரையையும் மனனம் செய்வித்து அதில் ஒன்றை பரீட்சையில் எழுதக் கொடுப்பதில் எத்தகைய நன்மையைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளப்போகிறார்கள்?


எங்கள் குழந்தைகளின் ஆற்றல்களை வாழ்த்தி வரவேற்கும் பண்புகளையே மறந்துவிட்டு பிள்ளைகளெல்லாம் தங்களைப் போல் எழுத வேண்டும் வாசிக்க வேண்டும், அப்படி முடியாத குழந்தையால் எழுதுதலே முடியாது என்று முடிவு கூறுதலைத் தவிர்த்து பிள்ளைகளை ஊக்குவிக்கும் மனப்பாங்கை ஆசிரியர்களும் பெற்றோர்களும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.


ஆரம்பத்தில் பிள்ளைகளைத் தமிழில் நாட்குறிப்பினை எழுதப் பழக்கி, உறவுகளுக்கு தாங்களாக கடிதம் எழுத ஊக்குவித்து, கொஞ்சம் கொஞ்சமாக மரம், செடி, கொடி உட்பட எல்லாவற்றையும் பிள்ளைகள் எண்ணப்படி எழுதும் சுதந்திரத்தை வளர்ப்பதுவும் சிறந்த எழுத்தாற்றல் மிக்க பிள்ளைகளை உருவாக்க ஆரம்ப ஊக்குதல் ஆகும். உன்னால் தமிழில் எழுதவே முடியாது என முளையிலேயே அவர்கள் முனைப்பை முறித்துவிடாமல் இன்னும் எழுது எழுது என ஊக்குவித்தல் எதிர்காலத்தில் எங்கள் பிள்ளைகளின் எழுத்தாற்றல் வளர்ச்சி காண வழி வகுக்கும்.


இன்னொரு இருபதாண்டில் புலத்தில் தமிழில் எழுதும் ஆற்றல் மிக்க பிள்ளைகள் இல்லாமலே போய்விடப் போகிறார்கள் என தமிழ் எழுத்தாளர்கள் ஆர்வலர்கள் என்போர்கள் அடிக்கடி அரங்கங்களில் பேசுவதை நிறுத்தி சொந்தச் சிந்தனைக்கு மதிப்புக் கொடுத்து சுய வெளிப்பாடுகளுக்கு பரிசில்கள் கொடுத்து ஊக்குவியுங்கள். இன்னொரு இருபதாண்டு வேண்டாம். அடுத்த பத்தாண்டில் இந்தக் குழந்தைகளில் கணிசமானோர் உங்களைப்போல் எழுதும் ஆற்றலுள்ளவர்கள் ஆகிவிடுவார்கள். உங்கள் ஆசிரியப் பணிகளையே எங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் எங்கள் பிள்ளைகளுக்குச் செய்யும் வல்லமையைப் பெறுவார்கள்.


(நன்றி்: தினக்குரல் - மார்கழி 2005)

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree