பட்டங்கள் படுத்தும் பாடு

05 டிசம்பர் 2005
ஆசிரியர்: 

  

உனக்கு நான் தாறன் எனக்கு.....? 

புலம்பெயர் நம்மவர் மத்தியில் பட்டங்கள் கொடுக்கவும் வாங்கவும் என ஒரு பட்டாளமே திரண்டிருக்கிறது. இந்தப் பட்டங்களின் பெறுமதியானது எனக்குத் தந்துவிடு உனக்குத் தருகிறேன் என்ற நிலையில் வஞ்சகமில்லாமல்

வழங்கப்படுகிறது. சிலருக்குப பட்டம் கொடுக்கும் நோய் முற்றிப்போயிருப்பதையும் பட்டம் வாங்குதலே பெறுதற்கரிய பேறெனக் கருதும் பட்டம் கொடுப்போரையும் பட்டம் வாங்குவோருடனும் பழகிப் பார்த்ததிலிருந்து தெரிய வருகின்றது.

பத்திரிகையென்ற பெயரில் தன் சொந்த விலாசத்தை வர்ணம் தீட்டித்தருவதையெல்லாம் பத்திரிகையெனவும், கவிதையெழுதினால் ஞானக்கவி , மானக்கவி, மணிக்கவி, கவிமணி, கவிச்செம்மல், கவிச்சித்திரா, கவிவல்லி, கவிச்செல்லி எனவும் நாலு மேடையில் பேசினால் கோடையில் இடிக்கும் புயல், மாரியில் தெறிக்கும் மின்னல் எனவும் நடன ஆசிரியர்களென்றால் நாட்டியவாணி, நாட்டியச்செல்வி, நாட்டியவல்லி எனவான பட்டங்கள் நீள்கிறது.

நல்லகுரல் வளமிருந்தால் போதும் வெண்கலமும், பொன்கலமும் மட்டுமல்ல தேன், மா, பலாவென கனிகளின் பெயர்களும் ஒட்டப்பட்டுவிடும். ஒரு புத்தகம் வெளியிட்டால் போதும் கவிச்சித்திரமாகவும், கலைச்சத்திரமாகவும் ஏன் மானக்கவிஞனாகக் கூட ஆகிவிடலாம் என்ற நிலை எம்மவர் மத்தியில் ஏன் எழுதாத விதியாய் போய்விட்டது.

கதாசிரியர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், பாடகர்கள் உட்பட எல்லாத் துறைக்குள்ளும் இருக்கும் குறிப்பிட்ட நபர்களது பெயர்களின் பின்னால் இத்தகைய பட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன! இல்லை ஒட்டப்படுகின்றன. இந்தப் பட்டங்களுக்கான புதிய வரலாறொன்றையே எழுத வேண்டிய கட்டாயத்தை இக்காலத்துப் புலத்துப் பட்டங்கள் தந்து விட்டிருக்கின்றன.

தற்போது புலம்பெயர் நாடுகளில் சேலைகட்டி மார்கழி மாதக் குளிரிலும் மேடை நிகழ்ச்சிகளுக்குப் போவோர் சிலருக்கு சேலைகட்டிய மின்னல், தாவணியணியும் தமிழச்சி என்றெல்லாம் பட்டங்கள் வழங்கும் முறைமையும் நடைமுறைக்கு வந்திருக்கிறது.  ஜீன்ஸ் அணிவோருக்கும் இனிமேல் ஏதாவது பட்டங்கள் நிர்ணயமாகலாம்.

ஒரு நூல்வெளியீடு செய்யும் ஒரு இளம் கலைஞரின் நூல்பற்றிக் கதைப்பவர்களின் பட்டங்களைப் போட்டால்தான் அந்த நூல் பெருமையடைவதாகக்கூட சொல்லிக் கொள்ளும் இந்தப்பட்டங்கள் சுமப்பவரின் கைகளுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு வெளியில் வருவதில் இருக்கும் சிக்கலும், இந்தப் பட்டம் சுமப்போரின் வட்டத்தைத் தாண்டி வருவதென்பதும் அனுபவித்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

இத்தகையதொரு சிக்கலில் இருந்து தலையை வெளியெடுக்க நானும் அவதிப்பட்டிருக்கிறேன். எனது அனுபவமும் இங்கு இத்தகையதொரு கட்டுரையை எழுத வைத்துள்ளது என்பதனையும் மறுதலிப்பதற்கில்லை.

ஒரு துறையில் படித்து பட்டம் பெறுவதென்பது இலகுவான விடயமன்று. அந்தப் பட்டங்களுக்காக பட்டங்கள் பெற்றவர்கள் எத்தனையோ தியாகங்களைச் செய்து தங்கள் துறைசார் பட்டங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒருவர் கலாநிதியென்றால் அவரது கலாநிதிக்கான வரலாறொன்று நிச்சயம் இருக்கும். அல்லது தமிழ்மணியென்றால் அதற்கான கற்றலில்கூட மூன்று வருடங்களைச் செலவழிக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு துறையிலும் பட்டம் பெறுவோர் தங்களை ஒறுத்துக் கற்று பட்டங்களைப் பெறுகிறார்கள். இந்தப்பட்டங்கள் இவர்களது தகுதிக்கேற்ற தொழில் வாய்ப்பினை அல்லது அத்துறை சார்ந்த அவர்களது திறனை அடையாளம் சொல்கிறது.

எனினும் தாங்கள் பெற்ற பட்டங்களை எந்தநாளும் தங்களுடன் ஒட்டி வைத்துக் கொண்டோ பட்டங்களை அச்சடித்து அடிக்கடி வெளியில் சொல்லிக் கொண்டோ இருப்பதில்லை. அதை நாம் நமது மண்ணில் பட்டம் பெற்ற பெரியவர்களைப் பார்த்தே அறிந்தும் கண்டும் இருக்கிறோம்.

பட்டங்களுக்கு அப்பால் தன்னடக்கமாகத் தங்கள் பணிகளைக் கவனிக்கும் கடமைகளை முடிக்கும் காரியவல்லோரையெல்லாம் பெற்ற எங்கள் மண்ணுக்குள்ளிருந்து புலம்பெயர்ந்த நாங்கள் இந்தப் பட்டங்கள் சூட்டுவதிலும் மகுடங்கள் ஏற்றுவதிலும் ஏன் முன்னிற்கிறோம்? ஒருவரின் திறனை எடையிடுவது அவரது தனித்துவமேயன்றி வேறில்லை.

ஒரு இலக்கியப் படைப்பின் வெளிப்பாடு வெற்றி என்பவை அதை எழுதிய கலைஞரையே சாரும். அந்தப்படைப்பிற்கு விமர்சனம்  செய்யும் ஒருவரின் பட்டத்திலிருந்து அந்தக்கலை வெளிப்பாடு வெற்றி பெறுவதில்லை. இந்த யதார்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாத பட்டங்களுக்கு உரியோரின் சிந்தனை ஆற்றலை என்னவென்று சொல்ல?

பட்டங்கள் நல்ல தரமான படைப்புக்களைத் தந்ததா என ஆராய்வோமாயின் தேடித்தான் பெறவேண்டும். அந்தளவுக்கு பட்டங்களின் பின்னிருக்கும் படைப்புக்களை தராசிட்டு நிறுக்க வேண்டியிருக்கிறது. பட்டங்கள் பெற்றவரின் ஆக்கத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த ஆக்கத்திலிருக்கும் குறைகள் சுட்டப்படக்கூடாது. அப்படிச் சுட்டும் படைப்பாளி இளையவராக இருந்தால் அவரது கதை முடிந்துவிடும்படி பட்டம் கொடுத்தவரும் பட்டம் வாங்கியவரும் பதறியடிப்பதால் உண்மை பொய்யாகவோ பொய் உண்மையாகவோ போய்விடாது.

எங்கள் மண்ணுக்குள்ளிருந்து எத்தனையோ கலைஞர்களும் கலைப்படைப்புக்களும் பிறப்பெடுத்திருக்கின்றது. அந்தக்கலைஞர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் அவர்கள் பெயர்களைத் தவிர எந்தப்பட்டமும் ஒட்டப்படவில்லை. கவிஞர்களாக, சிறுகதை எழுத்தாளர்களாக, பத்திரிகையாளர்களாக, நாடகக்கலைஞர்களாக, ஓவியர்களாக, ஒளிக்கலைஞர்களாக எத்தனையோ பேர் தங்கள் பெயர்களைக்கூட புனைபெயர்களுக்குள் அடக்கி தங்கள் படைப்புக்களால் மனங்களை வென்றிருக்கிறார்கள். அந்த வெற்றியானது அவர்களது படைப்புக்களாலேயே பெறப்பட்டது. பட்டங்களால் அல்ல.

நன்றி: தினக்குரல்.

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree