பிரபலங்களையே பிரபலப்படுத்திப் பழகிப்போச்சு

06 அக்டோபர் 2005
ஆசிரியர்: 

  

பாட் வில்பாட் (BAD WILD BAD) அதுவொரு அழகிய மலை சார்ந்த நகரம். ஜேர்மனியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அழகான இயற்கையான மருத்துவ குணங்களைக் கொண்ட நகரம் அது. இயற்கையாகவே 48 பாகையில் வென்னீர் ஊற்றுக் கொண்ட இந்த நகரானது நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையுள்ள இயற்கையின் அழகையும் மருத்துவ குணத்தையும் பெற்றிருப்பது இந்த நகரின் பெருமைகளில் ஒன்றாகும்.

தாய்மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்த தமிழர்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் வாழும் ஜேர்மனியில் பாட் வில்பாட் (BAD WILD BAD) நகரில் பிறந்து தற்போது 19 வயதை எட்டியிருக்கும் துசேந்தி மனோகரனைப் பற்றி இவ்வாரம் அறிகிறோம்.


ஜேர்மனியிலேயே பிறந்து ஜேர்மன் மொழியையே முதல் மொழியாகக் கற்று இன்று 13ம் வகுப்பில் பரீட்டை முடித்துவிட்டு தொடரும் கற்றலுக்காகக் காத்திருக்கும் துசேந்தி பற்றி இவளது சேவைகள் பற்றி நிறையவே சொல்லிவிட இருக்கிறது. ஆனாலும் துசேந்தியின் வேண்டுதலுக்கு இணங்க இவளது சில பக்கங்களை மட்டும் இங்கு அறிவிக்கிறேன்.


டொச்மொழியில் முதல் மொழிக்கல்வியைக் கற்றுக் கொண்டு தந்தையார் மனோகரன், தாயார் சாரதா ஆகியோரின் உதவியுடன் தாய்மொழி தமிழையும் எழுத, பேச, வாசிக்க, மொழிபெயர்க்கும் வரையிலாக தமிழ்மொழியினையும் கற்றுள்ளார். இத்துடன் ஆங்கிலத்தையும் கற்றுள்ளார்.


கலைத்துறையில் தனது பதியமிடலாக வயலீன், புல்லாங்குழல், பரதநாட்டியம் ஆகியவற்றையும் முறையே கற்று அரங்கேற்றத்துக்குத் தயாராக இருக்கின்றாள்.


இத்துடன் தனதும் நமதும் தாயகத்தின் மீதான இவளது நேசிப்பும், தேசத்துக்கான பணிகள் என்பன இவளது வயதிற்கும் மேலான பணிகளைத் தன்னில் தாங்கி நிறையவே செய்கின்றாள். இவள் செய்த செய்து கொண்டிருக்கும் பணிகள் பற்றிய விபரங்களைத் தன்னுடனேயே வைத்திருக்க விரும்புகின்ற 'இடக்கை செய்வதை வலக்கை அறியாத வண்ணம்" தனது தாயகம் மீதான அதீத நேசிப்பினையும் தேசத்திற்கான பணிகளைக் கடமையாகவும் செய்தபடி சத்தமின்றி சாதனையென்ற சொல்லுக்கும் அப்பால் இவளது சேவைகள் நீண்டிருக்கின்றது. எனினும் அவற்றையெல்லாம் பற்றிக் கேட்டால் 'நாங்கள் என்னத்தைச் செய்யிறம்? அங்கை எவ்வளவைச் செய்யினம்.' எனக்கூறித் தனது பணிகளை வெளியில் தெரிவிப்பதில் விருப்பமற்ற வித்தியாசமானவள் இவள்.


மரணித்த மண்ணின் மனிதர் பெயரில் ஒரு கவிதை எழுதி மேடையில் அல்லது ஊடகங்களில் வாசித்துவிட்டாலே அதையொரு பெருமையாக சாதனையாக நிலைநிறுத்திப் பிரபலம் தேடும் பெரியோர் பலரின் பிரபல விருப்பங்களை விடுத்து இந்தச் சிறுவயதில் தன்னடக்கத்துடனும் கடமையுணர்வுடனும் இயங்குகின்ற துசேந்தி, முதல் முதலாக ஜேர்மனியில் அதுவும் எங்களது தமிழினத்தின் அடையாளம் சொல்லும் வகையில் ஜேர்மனிய அரசியலிலும் தன்னை இணைத்து தனது 18 வயது வயதில் (2004) தான் வசிக்குமிடத்தில் மாநகரசபைத் தேர்தலில் தற்போது ஜேர்மனியில்
ஆட்சியில் இருக்கும் கட்சியான SPD கட்சியின் சார்பில் மாநகரசபைத் தேர்தலில் ஆயிரத்து ஒன்பது (1009) வாக்குக்களைப் பெற்று நான்காவது இடத்தினைப் பெற்றுள்ளார்.


எனினும் இவளது இந்த அரசியல் பதியம் பற்றி 300இற்கும் மேலான நமது ஐரோப்பிய தமிழ் ஊடகங்களில் எதிலுமே தெரிவிக்கப்படவில்லை. எங்களது ஊடகங்கள் எதுவுமே இந்த யுவதியின் அரசியல் பிரவேசம்பற்றி மூச்சும் விடவில்லை. ஆனால் இவளது மாநில வானொலி, பத்திரிகைகள் யாவுமே தமது செய்திகளில் 18வது வயதில் அரசியலில் தன்னைப் பதியமிட்டுக் கொண்ட துசேந்தியின் அரசியல் பற்றியும், இவளது எதிர்காலக் கனவுகள் பற்றியும், இளைய சமூகத்தின் மேம்பாட்டுக்கான இவளது கருத்துக்கள் செயற்பாடுகள் பற்றியெல்லாம் வெளியிட்டிருந்ததும் முக்கியத்துவம் கொடுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.


பிரபலங்களுக்கே பிரபலம் கொடுத்துப் பழகிய நாம் துசேந்தி போன்ற இளையவர்களுக்கும் வெளிச்சமிடுவோமா?
இல்லை இன்னும் வழமையான மறைப்புக்களையே தொடர்வோமா? சிந்திப்போம். செயற்படுத்தலுக்கான விழிதிறப்புக்கு வேண்டிய வழியைக் கொடுப்போம்.


நன்றி: தினக்குரல்

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree