Print this page

விரும்பிப் படிக்க வேண்டிய..
  • எழுத்துரு அளவு: +

11 ஆகஸ்ட் 2005
ஆசிரியர்: 

  

நாம் புலம் பெயர்ந்து வாழுகின்ற ஐரோப்பாவில் 1995 இற்கு முற்பட்ட காலங்களில் ஊடகங்களின் வருகையென்பது குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லாத காலமது. பத்திரிகைகள் சிலவும், காலாண்டு சஞ்சிகைகள் சிலவும், இத்தோடு ஆங்காங்கு வெளிவந்த 100 அல்லது 200 பிரதிகளுடன் ஓரிடத்தில் அச்சாகி ஒரே நேரத்தில் 5 நாடுகளில் அச்சாகிறது என்ற பொய்யுடனும் சில பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டுமே வெளிவந்ததும், அத்தகைய வெளியீடுகளும் குறிப்பிட்ட சில காலங்களுடன் காலாவதியாகியும் கொண்டிருந்த காலமது. வாசிப்புக்காகக் கூட பிறமொழி நூல்கள், பத்திரிகைகளையே வாசிப்புக்கு நாங்கள் பயன்படுத்தினோம் எனலாம்.

புலம்பெயர்ந்த இளையவர்கள், புலம்பெயர் தேசங்களில் பிறந்த எங்கள் தமிழ்க் குழந்தைகளுக்கான தாய்மொழிக் கல்வி குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லையெனும் அளவு தாய்மொழிக்கல்வியின் அவசியம் கூட பலருக்கு அவசியமற்றதாகியிருந்தது. அக்காலத்தில் இலங்கை அரச பாடத்திட்டத்தினை சிலரது ஆர்வமேலீட்டில் தபால் ஊடாகப்பெற்று தாய்மொழிக்கல்வி புகட்டப்பட்டு வந்தது. இப்படி ஆர்வத்தினால் தமிழ் கற்பிக்க வந்த ஆசிரியர்கள் பின்னாளில் தங்கள் தாய்மொழிக் கற்பித்தலை பணம் கறக்கும் இலகு வழியாகப் பின்பற்றத் தொடங்கியிருந்தனர். பரதநாட்டியம் முதலாக தற்போது கற்பிக்கப்படுகின்ற கலைகள் யாவும் காசுக்காகவும், அரங்கேற்றினோம், அரங்கேறினோம் என்ற அடையாளப்படுத்தலுக்காகவும் நடைபெறுவது போல, தமிழ் கற்பிக்கிறோம் என்ற வார்த்தைக்குள் தங்களை நிறுத்திப் பலர் செய்த திருகுதாளங்கள் பல.


1995இன் பின்னால் தமிழ்மொழிக்கல்வி கற்றலுக்கான வழிகளும், மாற்றங்களும் அதிகளவில் நடைமுறைக்கு வரத்தொடங்கியதும் தாய்மொழிகற்பித்தலில் கணிசமான அளவு தாய்மொழி கற்கும் பிள்ளைகளின் விகிதமும் அதிகரித்தது. ஆரம்பத்தில் தாய்மொழிகற்றல் பிள்ளைகளுக்கு மிகவும் இலகுவாகவும், மொழிபடிக்கும் பிள்ளைக்கு விருப்பத்துடனான கற்றலாகவும் இருந்தும் வந்தது. இந்தக் கற்றலில் தம்மை இணைக்காமலும் தங்கள் பிள்ளைகளுக்குத் தாய்மொழி தேவையில்லையெனவும் தங்களை அன்னியமொழிப் பாவனையாளர்களாகவும் அடையாளம் காட்டிய பலரது பிள்ளைகள் கூட 12-13 வயதின் பின்னால், 15-18 வயதின் பின்னால் ஏன் தங்களுக்கு தாய்மொழி கற்பிக்கவில்லையெனப் பெற்றோரைக் குடைந்து பிள்ளைகளின் ஆர்வத்தில் கூட தாய்மொழி கற்கத் தொடங்கிய பிள்ளைகளும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு தாய்மொழியைக் கற்றறில் ஆர்வம் காட்டினர்.


இக்காலப்பகுதி தாண்டி 1997இன் பின்னர் பரவலாக முளைத்த ஊடகங்களான பத்திரிகைள், சஞ்சிகைகளின் அதிக வரவு, ஒன்றாயிருந்த வானொலி ஒவ்வொன்றாய் முளைவிடத் தொடங்கி ஐரோப்பா மத்திய கிழக்கு வரையும் கேட்கக்கூடிய, பார்க்கக்கூடிய 6 வானொலிகளும், பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளின் வருகையும் சிறுவர்களைத் தாய்மொழிமீதான ஈடுபாட்டுக்கு நிகழ்ச்சிகள் ஊடாக வரவேற்பைக் கொடுக்கத் தொடங்கின. வானொலி தொலைக்காட்சிகளில் பிள்ளைகள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். தமிழ் இனிச்சாகாதென்ற நிலையில் கொண்டு வந்த சமயம் ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முட்டி, மோதி எனது நேயர், உனது நேயர் என்ற நிலைக்குள் முகம் அறியாமலேயே நேயர்கள் மோதிக்கொள்ள ஆரம்பித்து இன்று இத்தகைய ஊடகங்களுக்கால் உள்வாங்கப்பட்ட இளையவர்கள் கூட நான் அந்த வானொலி, நீ இந்தத் தொலைக்காட்சி என்று தங்களுக்கும் கோஸ்டிகளை உருவாக்கும் வரையும் ஊடகப்பெருக்கமும், காலுக்குள்ளும், கையுக்குள்ளுமாக நாளுக்கொரு இணைய அறிமுகமென தொடர்புசாதன வருகை நிகழ்ந்தேறியிருக்கிறது.


இன்று இணையங்களில் கருத்தாடல் களங்களுக்குச் சென்றால் ஏதோ யுத்த களத்தில் நிற்பதான உணர்வே வருகிறது. அந்தளவுக்கு இணையம் ஊடாக வேலிச்சண்டை, கூலிச்சண்டை , வேண்டாத சண்டையெல்லாம் உருவெடுத்துள்ளது. இணையம் முதல் வானொலி தொலைக்காட்சி வரையும் இவை தொடர்ந்து நாளுக்கொரு புதுமையாய் வேகமாய் வளர்ந்து வரும் நுட்பங்களைக் கூட தனிப்பட்ட தாக்குதல்களுக்காகவும், தனிப்பட்ட துதிபாடல்களுக்குமாகப் பயன்படுத்துவதும், நல்ல கருத்துப்பரிமாற்றத்தை, நட்புப்பரிமாற்றத்தை ஏற்படுத்தித் தந்த அரட்டை அறைகள்(chat) கூட வேண்டாத தூசணவார்த்தைகளாலும், வேண்டத்தகாத கருத்தாடல்களாலும் நிறைந்து நாறிக்கிடக்கிறது.


இந்தப் பகுதிக்குள் கூட வானொலிச்சண்டை, தொலைக்காட்சிச் சண்டைகள். எந்த ஊடகங்கள் தாய்மொழி மீதான பற்றுதலை எங்கள் இளையவர்களுக்கு ஏற்படுத்தியதோ அந்த ஊடகங்களின் அடிதடிகளாக எமது இளையோர் தடம்மாறி, இடம்மாறி பயன்பெற வேண்டிய நுட்பம் கூட தாக்குதற் கருவிகளாகியிருப்பது ஆரோக்கியமான எங்கள் இளையவர்களை உருவாக்கும் சாதனங்கள் என்று சொல்லிவிட மனம் ஒப்பாது விலகிக் கொள்கிறது.


இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குள் தற்போதைய தாய்மொழிக்கல்வி கற்பித்தல் தொடர்பாக பெற்றோர்கள் முதல் பிள்ளைகள் வரையும் முணுமுணுக்கப்படுவதும் தாய்மொழிக்கல்வி மீதான பிள்ளைகளின் நாட்டமின்மையும் அதிகரிப்பதாகவும் அச்சம் நிலவுகிறது. பாடத்திட்டம் கடினாமாகவும் பிள்ளைகள் வாழும் சூழலுக்கு அப்பாலான கற்பித்தலாகவும் இருக்கிறது தாய்மொழிக் கற்பித்தல்.


இல்லை, இதுதான் சரியானது. பிள்ளைகள் இதையெல்லாம் அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் நாங்கள் தமிழர்கள் என்றெல்லாம் வீரம் பேசிக்கொண்டு விரிவுரை நிகழ்த்தும் பெரியவர்களுடன் முரண்பாட்டுடனே இத்தகைய கடினத்தை பல பெற்றோர்கள் மௌனமாக எதிர்த்தாலும் பிள்ளைகளுக்குத் தாய்மொழியைத் திணிப்பாகவே கற்பிக்கின்றனர்.


தாய்மொழிக் கல்வியின் தேவையென்பது இன்று பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை மட்டும் பெற்றுக் கொள்வதற்கென்றான நிலையிலும் , பரிசில்களை வென்றால் போதும் எனவுமே இருக்கிறது. இந்தப் பரிசில்களும், பரீட்சைப் பெறுபேறுகளும் பிள்ளைகளுக்கு மொழியறிவை விருத்தி செய்து விடுவதில்லை என்பதை கற்பிப்போரும், கற்பித்தல் நெறியை ஆக்குவோரும் கவனத்தில் எடுப்பது சிறந்தது. பிள்ளைகளுக்கான, தேடலை, வாசிப்பை விருப்புடன் தேடிக்கற்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்களையும் இலகுபடுத்தலையும் கொண்டு வருவதும் அவசியம்.


சலவைத் தொழிலாழியையே பார்த்தறியாத பிள்ளைக்கு ஆற்றங்கரையில் அரை உடுப்புடன் கல்லொன்றில் ஆடை கழுவும் தொழிலாளியின் படத்தையும், கச்சையுடன் வலையைத் தோளில் வைத்து கடற்கரையில் நிற்கும் மீனவனையும் கொடுத்து 5 வசனம் எழுதுக 15 புள்ளிகள் என்று கற்பிப்பதாலும், குறிப்பிட்ட பாடத்தை மட்டுமே பிள்ளைக்குப் படிப்பிக்க வேண்டும் அல்லது பரீட்சையில் பிள்ளைகள் சித்தி பெறமுடியாது என மிரட்டிப் பிள்ளைகளுக்குத் தாய்மொழி மீதான கற்கும் ஆர்வத்தை கருக்கிவிடும் செயலும் , ஏன் தாய்மொழி கற்கின்றோம் என்பதற்கான எந்தவிதமான தெளிவும் கூறப்படாது கற்பிக்கும் தாய்மொழிக் கற்பித்தலும் , பரீட்சைகளும் ஊரில் அதிகாலையில் அம்மா எழுப்பிவிட மனனம் செய்து ஒப்புவித்த படிப்புக்கு ஒப்பானதே தவிர வேறெந்தப் பயனையும் தந்துவிடப் போவதில்லை.


புலம்பெயர்ந்த இந்த நாடுகள் பிள்ளைகள் படிப்பை விருப்பத்துடனும், சிறப்பாகவும் கற்பதற்காக நிறையவே இலகுபடுத்தல் வழிமுறைகளை நாளுக்கு நாள் அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு ஏற்றவாறு எம் பிள்ளைகளுக்குத் தாய்மொழி தமிழாக இருப்பினும் இரண்டாம் மொழியாகக் கற்கின்ற தாய்மொழியை இன்னொரு அன்னிய மொழியைக் கற்பிக்கும் போது எடுக்கும் சிரத்தை போல் கவனமெடுத்து மாற்றங்களையும் இலகுபடுத்தல்களையும் விரைவாக்கித் தாய்மொழியின் அவசியமும், தேவையும் பிள்ளைகளாகவே உணரும் வகை செய்தல் தமிங்கிலத் தமிழ் வருகையைக்கூடத் தடுத்துவிடும் வீரியத்தைக் கொடுத்துவிடும் வல்லமையுள்ளது.


மாற்றங்களும், இலகுபடுத்தலும் வில்லங்கத் திணிப்பாக இன்றி விருப்பத்துக்குரிய படிப்பாக வழிகள் திறக்க விழிகள் திறக்கட்டும். உலகில் பேசப்படும் மொழிகளில் 15வது இடத்தில் இருக்கும் தமிழ்மொழி இன்னும் முன்னே வர ஏதுவாகவும் இலகுவாகவும் எதிர்காலத் தமிழ்க்கற்கைநெறி மாற்றம் பெறட்டும். எங்கள் மழலையர் தாய்மொழிக் கல்வியை தங்கள் இருப்பின் மொழியாய் உறுதி செய்வர்.


எங்களது பிள்ளைகளுக்கு எந்தக்காலமும் மறந்து விடாதபடியான நெறிமுறைகளுடன் தாய்மொழி கற்பிக்கப்படுதல் தாய்மொழியின் வளர்ச்சியையும், எழுச்சிசையும் இன்னும் நீட்டி வைத்திருப்பதற்கான நெம்பாகும் என்பதில் ஐயமில்லை.


நன்றி: தினக்குரல்.

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree