இனிய உளவாக..!

09 ஆகஸ்ட் 2008
ஆசிரியர்: 

 

ன்பது மணி அலுவலகத்துக்கு, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் உதவியால் பத்தரை மணிக்கு, கசங்கிய சட்டையுடன், முகத்தில் வியர்வை வழிய, பதட்டம் நிறைந்த கண்களுடன் அலுவலகத்தில் நுழைந்தான் மகேஷ்.

யார் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று பயந்து பயந்து வந்தானோ, அவரே எதிரில் வர, மகேஷின் இதயம் பல முறை வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. இருப்பினும் அந்தப் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒரு செயற்கைச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, " குட்மார்னிங் சார் ... " என்றான் மகேஷ்.

" குட்மார்னிங்கெல்லாம் இருக்கட்டும் ... என்ன மகேஷ் ... ஆஃபீஸ் வர்ற டைமா இது ... எத்தனை மணி ஆஃபீசுக்கு, எத்தனை மணிக்கு வர்றீங்க ... இன்னிக்கு ப்ராஜெக்ட் க்ளோஷர்னு தெரியும்ல... ஒரு பொறுப்பே இல்லாம இவ்ளோ லேட்டா வர்றீங்க... " என்று அவர் பதவிக்கே உரிய தொணியில் காய்ச்சி எடுத்தார் மகேஷின் டீம்லீடர்.

" இல்ல சார்... பஸ் கிடைக்குறதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு... " என்றான் அசடு வழிந்துகொண்டே மகேஷ்.

" இதெல்லாம் ஒரு ரீசன்னு சொல்லாதீங்க மகேஷ்... போங்க... போய் வேலைய பாருங்க... "

" கூட்ட நெரிசலால் ஏற முடியாமல் மூன்று வண்டிகளை விட்டுவிட்டு, நான்காவது வண்டியில் சிரமப்பட்டு ஏறி, பட்டியில் அடைபட்ட ஆடுபோல் கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாய் வந்திருக்கிறோம். இதெல்லாம் காரில் வந்திரங்குபவருக்கு எங்கே தெரியப் போகிறது ... " என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே கடுப்பில் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான் மகேஷ்.

அதற்குள் மணி பதினொன்றைத் தொட்டிருந்தது. அவசர அவசரமாகத் தனது வேலைகளை ஆரம்பித்தான் மகேஷ். அப்போதுதான் அவனது கைப்பேசிக்கு அந்த அழைப்பு வந்தது.

handphone2
" குட்மார்னிங் சார்... நாங்க ABC பேங்கிலிருந்து பேசுறோம்... எங்க பேங்க்ல ஜாயினிங் ஃபீஸ் மற்றும் ஆன்னுவல் ஃபீஸ் எதுவும் இல்லாம கிரெடிட் கார்டு குடுத்திட்டிருக்கோம்... உங்க மாத சம்பளம் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா, இன்னிக்கே எங்க எக்சிக்யூடிவ்வ அனுப்பி டாகுமெண்ட்ஸ் கலெக்ட் பண்ணிக்கிறோம் சார்... " என்று மூச்செவிடாமல் பேசிமுடித்தாள் அந்தப் பெண்மணி.

ஏற்கனவே டீம்லீடரின் வாயில் அகப்பட்டு கடுப்பாகியிருந்த மகேஷுக்கு இந்த அழைப்பு வந்தவுடன் மிகுந்த கோபம் வந்துவிட்டது.

''உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாம்மா... ஏன் இப்படி ஃபோன் பண்ணி டார்சர் பண்றீங்க... உங்களுக்கெல்லாம் யார் இந்த நம்பர் குடுக்குறா... அறிவுங்குறதே இல்லையா உங்களுக்கெல்லாம்... இப்படி ஃபோன் பண்ணி மத்தவங்கள தொல்லை பண்றோமேன்னு நீங்களெல்லாம் நினைக்கவே மாட்டீங்களா... ஃபோன வைம்மா... " என்று பொங்கியெழுந்தான் மகேஷ். டீம்லீடரிடமிருந்த அத்தனை எரிச்சலையும் அந்தப் பெண்மணியிடம் கொட்டித்தீர்த்தான் மகேஷ். பாவம் அந்தப் பெண், அவளுக்கு இது போன்ற மனிதர்களின் பேச்சு பழக்கப்பட்டதுதான் என்றாலும், அவள் மனதுக்குள்ளேயும் வருத்தங்கள் இருக்கத்தான் செய்தன. இத்தனை வசை மொழிகளையும் கேட்டுவிட்டு, அந்த சோகத்தைத் தனது குரலில் காட்டிக்கொள்ளாமல், அவளிடமிருந்த அடுத்த எண்ணைத் தொடர்பு கொண்டு, " குட்மார்னிங் சார்... " என்று தொடர்ந்தாள்.

சற்று நேரம் கழித்து மகேஷின் கைப்பேசிக்கு மற்றுமொரு அழைப்பு வந்தது.

"சார்... நாங்க XYZ பேங்கிலிருந்து பேசுறோம்... எங்க பேங்க்ல குறைந்த வட்டிக்கு கடன் குடுக்குறோம்... உங்களுக்கு விருப்பமிருந்தா... " என்று அந்த வங்கி ஊழியர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த அழைப்பைத் துண்டித்தான் மகேஷ்.

"ச்சே... என்னக் கொடுமடா இந்த வாழ்க்கை... காலையில வீட்ட விட்டு கிளம்பினா சரியான நேரத்திற்கு வராத பஸ்ஸால கூட்ட நெரிசல் தொல்லை... ஒரு வழியா போராடி ஆஃபீஸ் வந்தா டீம்லீடரோட தொல்லை... பிறகு நாள் முழுதும் இந்த ஃபோன்னால தொல்லை" என்று முணுமுணுத்தபடியே தனக்குள் அலுத்துக்கொண்டு வேலை செய்யத் துவங்கினான்.

அதற்குள் மதிய உணவு இடைவேளையும் வந்தது. அம்மா பாசத்துடன் பக்குவமாய் சமைத்துக்கொடுத்திருந்த உணவை சாப்பிட்டுவிட்டு மறுபடியும் அவன் இருக்கைக்கு வந்தமர்ந்தான் மகேஷ்.

மீண்டும் அவனது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. இம்முறையும் அழைப்பு ஒரு லேண்ட்லைனிலிருந்து வருவதைப் பார்த்து கோபமடைந்த மகேஷ், மற்றுமொருமுறை இவர்களிடம் பேசத் திரானியில்லாதவனாய், அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு தனது கைப்பெசியையும் அணைத்துவிட்டான்.

மகேஷ் சற்று கோபப்படுபவன்தான் என்றாலும், இது போன்ற தொல்லை கொடுக்கும் அழைப்புகள் என்று வந்துவிட்டால் அவன் கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவான். இதுதவிர விற்பனை அதிகாரிகளைக் கண்டாலும் மகேஷுக்குக் கோபம் எங்கிருந்தோ வந்துவிடும். இப்படித்தான் கடந்த வாரம் கூட தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் விற்க வீட்டிற்கு வந்த ஒருவரை மனம் நோகும்படி பேசி அனுப்பிவிட்டான் மகேஷ்.

இவ்வாறான தருணங்கள் மகேஷின் தினசரி வாழ்வில் ஒரு தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே இருந்தன. அப்போதுதான் மகேஷுக்கு அவனது வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினார். பல வரன்கள் அமைந்தும், எதுவும் மகேஷின் மனதிற்குப் பிடிக்காமல் தட்டிப்போக, ரேகாவின் புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே, மகேஷின் மனது ஒரு முழுமையடைந்தது. மகேஷின் பெற்றோருக்கும் ரேகாவை மிகவும் பிடித்திருந்தது. அதற்கு மேலும் எந்தப் பெண்ணின் புகைப்படத்தையும் பார்க்காமல், அந்தப் பெண்ணின் வீட்டிற்குத் தகவல் கொடுத்தனர் மகேஷின் பெற்றோர்.

பெண் பார்க்கும் படலமும் முடிந்தது. முதலில் ரேகா பணிபுரிவது ஒரு வங்கியில், என்பது மட்டும்தான் மகேஷுக்குத் தெரியும். பின்புதான் அவள் அந்த வங்கியில், வாடிக்கையாளர்கள் சேவைப் பிரிவில் பணிபுரிவது தெரிய வந்தது. மகேஷின் மனதில் அந்த நிமிடம் ஒரு சிறு தடுமாற்றம் ஏற்பட்டாலும், அதை அவன் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ரேகாவின் பெற்றோர் மகேஷுக்குக் கொடுப்பதாகக் கூறிய முப்பது சவரன் நகையும், ஒரு புதிய மோட்டார் சைக்கிளும், அவனை அதற்கு மேலும் அதைப்பற்றி யோசிக்க விடவில்லை.

மகேஷுக்கும், ரேகவுக்கும் திருமணம் நடந்தேறியது.

பத்து நாள் தேனிலவுப் பயணத்திற்குப் பிறகு, மறுநாள் காலை, மகேஷும், ரேகாவும், தனது அலுவலகத்திற்குப் புறப்பட்டனர். வரதட்சணையாக வந்த வண்டியில், ரேகாவை அவளது அலுவலகத்தில் இறக்கிவிட்டு, மிடுக்குடன் தனது அலுவலகத்திற்கு வந்திறங்கினான் மகேஷ்.

போக்குவரத்து நெரிசலால், இன்றும் மகேஷால் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வந்து சேர முடியவில்லை.

மகேஷ் உள்ளே நுழைந்தவுடனேயே அவனது சக தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவரும் அவனை சூழ்ந்து அவனை வரவேற்றனர்.

"ஹாய் மகேஷ்... கங்க்ராட்ஸ்...".

"விஷிங் யு எ வெரி ஹப்பி மேரீட் லைப்...".

"நீங்கள் என்றென்றும் நலமுடன், சகல செல்வங்களும் பெற்று வாழ எனது மனம் நிறை வாழ்த்துக்கள்...".

இவை அனைத்தும் மகேஷுக்குக் குவிந்த வாழ்த்துக்கள். இத்தனை வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு, அவனது இருக்கைக்குச் செல்வதற்க்குள்ளாகவே பத்தரை மணி ஆகியிருந்தது.

அவசர அவசரமாக தனது கணிப்பொறியினை இயக்கி, அதுவரை அவனுக்கு வந்து குவிந்திருந்த  மின்னஞ்சல்களைப் பார்த்தான். மகேஷுக்கு மின்னஞ்சலில் வரிசையாக வாழ்த்துக்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தன. அதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மணி பதினொன்றை நெருங்கியவுடன், தனது நண்பனை அழைத்துக் கொண்டு தேநீர் அருந்துவதற்குச் சென்றான் மகேஷ். அப்போதுதான் அந்த அழைப்பு மகேஷுடைய நண்பனின் அலைபேசிக்கு வந்தது.

" ஹலோ சார்... குட்மார்னிங்... ஐ அம் காலிங் ஃப்ரம் ரைட் பேங்க்... உங்களோட கிரெடிட்கார்டை பேஸ் பண்ணி உங்களுக்கு பர்சனல் லோன் அப்ரூவ் ஆகியிருக்கு சார்... " என்று பேச்சைத் தொடர்ந்தது அந்தக் குரல்.

"இப்ப எனக்கு லோன் எடுக்க விருப்பம் இல்ல மேடம்... உங்களோட தகவலுக்கு ரொம்ப நன்றி... எனக்கு எப்ப லோன் தேவைப்படுதோ, நானே உங்கள தொடர்பு கொள்றேன்... " என்று மென்மையான குரலில் மகேஷின் நண்பன் பதிலளித்துக்கொண்டிருக்கும்போதே, இடையில் தடுத்து அந்தக் கைப்பேசியை வாங்கி மகேஷ் பேசினான்.

"ஏம்மா... உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எத்தன தடவ சொல்றது... படிச்சிருக்கீங்களா இல்லையா நீங்கல்லாம்... இந்த மாதிரி வேலை பார்க்குறதுக்கு எங்கயாவது போய் பிச்சை எடுங்க... எங்கள ஏம்மா இப்படி ஃபோன் பண்ணி தொல்லை பண்றீங்க..." என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் மகேஷ்.

"இவங்ககிட்ட போய் இவ்வளவு மரியாதையா பேசிட்டு இருக்க... வேண்டாம்னு சொல்லிட்டு ஃபோன வைக்க வேண்டியதுதானடா..." என்றான் மகேஷ்.

"இல்ல மகேஷ்... அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்... அவங்களோட வேலையே இதுதாண்டா... எப்படியாவது பேசி, வாடிக்கையாளரோட சம்மதத்தை வாங்கிடனும்னுதான் அவங்களும் போராடுறாங்க... அவங்களோட வேலையிலும் கஷ்டம் இல்லாம இல்லடா... எல்லாரையும் சமாளிச்சு, அவங்க சொல்றதுக்கு கோபப்படாம, மனச கல்லாக்கிட்டு பேசனும்டா... அது சாதாரண விஷயமில்ல... நமக்கு கம்ப்யூட்டரோட மட்டும் பழகிப் பழகி, மனுஷங்ககிட்ட எப்படி பழகனுங்குறதே தெரியாமப் போச்சுடா... " - என்றான் மகேஷின் நண்பன்.

"உன்ன மாதிரி ஆளுங்களாலதான், இவங்கெல்லாம் இப்படி ஃபோன் பண்ணி தொல்லை குடுக்குறாங்கடா...  நீ என்னதான் சொன்னாலும், இவங்கள எல்லாம் என்னால மன்னிக்கவே முடியாதுடா..." - என்றான் மகேஷ்.

அதற்கு மேலும் மகேஷிடம் பேசிப் பயனில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த அவனது நண்பன், ஒரு சிறு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு, தனது இருக்கைக்குத் திரும்பினான்.

மீண்டும் வேலைப் பளுவில் மூழ்கிப்போனான் மகேஷ்.

சரியாக ஒரு மணிக்கு, மதிய உணவுக்காகச் சென்று, மனைவி அன்புடன் கட்டிக்கொடுத்த ருசியான உணவை உண்டுவிட்டு மீண்டும் தனது இருக்கைக்கு வந்து வேலையைத் தொடர்ந்தான்.

சூரியன் மேற்கே கடலில் கலக்கும் மாலைப் பொழுதில் மகேஷ், அருகிலிருந்த ஒரு பூங்காவில் அமைந்திருக்கும் கடைக்கு தேநீரைச் சுவைப்பதற்காக வந்தான். தேநீரை அருந்திக்கொண்டிருக்கும்போது, அருகில் பூங்காவின் புல்தரையில் அமர்ந்து ஒருவர் தான் எடுத்து வந்திருந்த உணவை உண்பதைப் பார்த்தான் மகேஷ். அவர் அருகிலிருந்த தனது நண்பரிடம் பேசியது, அரசலும் புரசலுமாக, அங்கு தேநீர் அருந்திக்கொண்டிருந்த மகேஷுக்குக் கேட்டது.

"இன்னிக்கு மொத்தம் பத்து பெட்டி வித்துட்டேன்... ஒரு கஸ்டமர் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு... அதனாலதான் மத்யானம் சாப்பிட முடியல... இதெல்லாம் நமக்குப் பழகிப்போனதுதானே... இன்னிக்குள்ள இன்னும் நாலு வித்து முடிக்கணும்... எப்படி விக்கப்போறேன்னே தெரியல..."

இதைக்கேட்ட மகேஷின் மனம் அந்த நபருக்காக ஒரு நிமிடம் இரக்கப்பட்டாலும், புத்தி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாக இல்லை. அவருக்காக வருத்தப்படவும் தயாராக இல்லை.

சீக்கிரமாக அலுவலகத்தை விட்டுக் கிளம்பி, வீட்டிற்குச் சென்று மனைவியுடன் சற்று நேரம் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று நினைத்த மகேஷை, அவனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வேலை கிளம்ப விடவில்லை. பதினைந்து நாள் விடுமுறையில் சென்றதால், நிலுவையிலிருந்த வேலைகளை ஓரளவு முடிப்பதற்குள்ளாகவே இரவு பத்து மணியாகிவிட்டது. அவசர அவசரமாக வண்டியைச் செலுத்தி வீட்டிற்கு வந்தான் மகேஷ்.

ரேகா மகேஷின் வருகைக்காக உணவருந்தாமல் காத்திருந்தாள். மகேஷின் பெற்றோர் அப்போதுதான் உணவு உண்டுவிட்டு உறங்கச் சென்றிருந்தனர்.

"சாரி ரேகா... ஆஃபீஸ்ல இருந்த வேலைய முடிச்சிட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு... சாப்டியா ரேகா நீ... " - என்றான் பாசமாக.

"இல்ல மகேஷ்... உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்... அம்மாவும், அப்பாவும் இப்பதான் சாப்டுட்டு தூங்கப் போனாங்க... போங்க, போய் முகம் கழுவிட்டு, சாப்பிட வாங்க..." - என்றாள் ரேகா.

"நீயும் சாப்டுட்டு படுத்து தூங்க வேண்டியதுதானே ரேகா... எனக்காக ஏன் வெயிட் பண்ணிட்டிருக்க... சரி... இதோ, அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேம்மா... " - என்றான் மகேஷ்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு மகேஷ், நாளைய வேலைகளுக்கான ஏற்பாடுகள் சிலவற்றைச் செய்து கொண்டிருந்தான்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது...

ரேகா ஏதோ எழுதிக்கொண்டிருப்பதை தூரத்திலிருந்த மகேஷ் பார்த்தான். பிறகு அவள் எழுதிக்கொண்டிருந்த கையேட்டில் அவளது கண்ணீர்த்துளிகள் சிந்துவதைப் பார்த்து அதிர்ந்து போனான் மகேஷ். மகேஷுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. திருமணமான புதிது என்பதால், உடனே ரேகாவிடம் சென்று கேட்பதற்கும் தயக்கப்பட்டு, திகைப்பில் நின்று கொண்டிருந்தான் மகேஷ்.

சிறிது நேரம் கழித்து, ரேகா உறங்கியவுடன், எடுக்கலாமா, வேண்டாமா, என்ற தயக்கத்துடனேயே அவளிருந்த அறைக்குச் சென்று, அந்த கையேட்டைப் பிரித்தான் மகேஷ். கையேடு முழுவதும் அவளின் கண்ணீரால் நிரம்பியிருந்தன. கையேட்டின் ஒவ்வொரு பக்கங்களும், அவள் கண்ணீரால் குடமுழுக்கு செய்யப்பட்டு, உப்புப் பூத்து உலர்ந்து போயிருந்தன. அந்த ஏட்டில், ரேகா, தான் வாடிக்கையாளர்களிடம் பேசியபோது, அவர்களால் அவமரியாதைக்குட்படுத்தப்பட்டு, தன் மனதை மிகவும் பாதித்த உணர்வுகளைப் பதிவு செய்வது வழக்கம். ரேகவைப் பொறுத்தவரை இவையெல்லாம் அவளுக்குப் பழகிப்போன ஒன்றுதான் என்றாலும், மற்றவர்களிடம், தன் மனைவி பட்ட அவமானங்களைப் படிக்கப்படிக்க, மகேஷின் மனம், தரையில் விழுந்த மீன் போலத் துடித்தது. யார் யாரோ தன் மனைவியை ஏளனமாகப் பேசியதைப் பார்க்க மகேஷால் முடியவில்லை. ரேகாவின் மனக்குமுறலை, மகேஷால் அந்தக் கையேட்டின் மூலம் தெளிவாக உணர முடிந்தது. மனதைக் கல்லாக்கிக்கொண்டு கையேட்டின் பக்கங்களைப் புரட்டிய மகேஷுக்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சிக் காத்திருந்தது. அந்த ஏட்டில், கடைசியாக எழுதப்பட்டிருந்தப் பக்கத்தில், இன்றைய தேதியைக் குறிப்பிட்டு, அதனுடன் இன்று அவள் வருத்தத்திற்குள்ளான வார்த்தைகளையும் எழுதியிருந்தாள். அதைப்படித்த மகேஷ் நிலைகுலைந்து போனான். ஏனென்றால், இன்று காலை மகேஷ், அவனது நண்பனின் கைப்பேசியில் பேசிய வார்த்தைகள் அதில் எழுதப்பட்டிருந்தன. அதைப் பார்த்த மகேஷால், அவன் செய்த தவற்றை ஜீரணிக்கவே முடியவில்லை. இதுவரை அவன் செய்த தவறுகளையும் அப்போது உணர்ந்தான். கையேட்டின் அந்தப் பக்கத்தில், ரேகா சிந்திய கண்ணீர்த்துளிகளின் ஈரம் காய்வதற்கு முன்பாகவே, அதனுடன் மகேஷ் சிந்திய கண்ணீர்த்துளிகளும் விழுந்து கலந்தன. மகேஷின் நண்பன் கூறி உணர முடியாத உணர்வுகளை, ரேகாவின் கண்ணீர் மகேஷுக்கு உணர்த்தியது. மற்றவர்களின் மனம் புண்படும் வகையிலான சொற்களைக் கூற, எந்த வித உரிமையும் நமக்கில்லை என்பதை அப்போது உணர்ந்தான்.

இனிய சொற்கள் இருக்கும்போது, அதனை விடுத்து, இதுவரை தான் வாழ்ந்த வாழ்நாளின் பெரும்பகுதியும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை அப்போது நன்றாகவே உணர்ந்தான் மகேஷ். தன்னுடைய மனைவி பட்ட வருத்தத்தின் வேதனைகளை, இனி வேறு யாரும் தன்னால் படக்கூடாது என முடிவெடுத்தான்.

மறுநாள் காலை வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே அலுவலகத்திற்குப் புறப்பட்டான் மகேஷ். சரியாக ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் நுழைந்த மகேஷைப் பார்த்து அவனது நண்பர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

"என்னடா மகேஷ்... இவ்வளவு சீக்கிரமாவே ஆஃபீசுக்கு வந்துட்ட... இந்த ஆஃபீஸ பொருத்தவரைக்கும் சரியான நேரத்திற்கு நீ வந்ததா சரித்திரமே இல்லையேடா..." - என்று கிண்டலாகக் கேட்டான் மகேஷின் நண்பன்.

அதற்கு எதுவும் பேசாமல், ஒரு குறுஞ்சிரிப்பைச் சிரித்துவிட்டு, தனது இருக்கைக்குச் சென்று வேலைகளைத் துவங்கினான் மகேஷ். எப்போதும் இல்லாமல் இன்று சீக்கிரமாகவே வேலைகளைத் துவங்கியதால், பதட்டமின்றி வேலைகளைச் செய்தான் மகேஷ்.

அப்போது ஓர் அழைப்பு மகேஷின் கைப்பேசிக்கு வந்தது.

" ஹலோ சார்... ஐ அம் காலிங் ஃப்ரம் பெஸ்ட் பேங்க்... வி ஆர் ப்ரோவைடிங் பர்சனல் லோன்ஸ் வித் த மினிமம் இன்ட்ரஸ்ட் ரேட்ஸ்... இஃப் யூ ஆர் இன்ட்ரஸ்டட், வி வில் கலெக்ட் த டாகுமென்ட்ஸ் ஃப்ரம் யூ..." - என்றாள் எதிர்முனையில் ஒரு பெண்.

" சாரி மேடம்... இப்ப எனக்கு பர்சனல் லோன் தேவைப்படல... ஆறு மாசத்துக்கப்புரமா தேவைப்படலாம்னு நினைக்கிறேன்... எனக்கு எப்ப தேவைப்படுதோ, அப்ப நானே இந்த நம்பருக்கு கால் பண்றேன் மேடம்..." - என்று மென்மையாக பதிலளித்தான் மகேஷ்.

பேசி முடித்தவுடன், தன்னை மதித்து ஒருவர் பேசிய சந்தோஷம் அந்தப் பெண்ணுக்கும், மென்மையாகப் பேசிய த்ருப்தி மகேஷுக்கும் இருந்தது...

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று        ( திருக்குறள் : 100 )
( பால்  :  அறத்துப்பால் ;     உட்பிரிவு  :  இல்லறவியல் ;     அதிகாரம்  :  இனியவை கூறல் )
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree