களவு போன கனவு

29 ஜனவரி 2008
ஆசிரியர்: 

 

காலைச் சூரியன் முகம் மலர, எங்கும் படர்ந்திருந்த மார்கழிப் பனி விலக, கதிரவன் தன் இளங்கதிர்களால் ரமேஷின் தலையை செல்லமாக வருடி வாழ்த்தியது. சூரியனின் ஒளி பட்டு கண்கள் கூச, அதற்கு மேலும் தூங்கிக்கொண்டிருக்கமுடியாமல், படுக்கையைவிட்டு எழுந்தான் ரமேஷ்.
 
குளித்துவிட்டு, வழக்கத்தைவிட சற்று அதிகநேரம் இன்று இறைவனை வழிபட்டு, சிற்றுண்டி சாப்பிட அமர்ந்தான்.
 
"ரமேஷ்... மத்தியானத்துக்கு புளிசாதமும், புதினா துவையலும் கட்டி வச்சிருக்கேன்... மிச்சம் வைக்காம சாப்ட்டுடு... போற வழியில கண்டதயும் வாங்கி சாப்பிடாதடா கண்ணா... பத்திரமா போய்ட்டு வா... நீ நெனச்சபடியே எல்லாம் நடக்கும்..." என்று தன் தாய்ப்பாச மிகுதியில், ரமேஷை ஒரு சிறு குழந்தையாகவே நினைத்து, அவனுக்கு அறிவுரைகள் கூறினாள் ரமேஷின் தாய். உண்மைதானே ... !!! பிள்ளைகள் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும், பெற்றவர்களுக்கு தன் பிள்ளைகள் இன்னும் குழந்தைகள்தான்.

"ஆல் த பெஸ்ட் ரமேஷ்..." - இது ரமேஷின் தந்தை.

"பெஸ்ட் ஆஃப் லக் அண்ணா..." என்ற தங்கையின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டு, ஒரு பெட்டிக்குள் தனக்குத் தேவையான துணிமணிகளுடன், அவனுக்கென்று இதுவரை அவன் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களான, பத்தாம் வகுப்பு, பணிரண்டாம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புச் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு இரயில் நிலையத்திற்குப் புறப்பட்டான் ரமேஷ்.

ரமேஷ் இதுவரை கிட்டத்தட்ட ஒரு ஐம்பது நிறுவனங்களிலாவது வேலைக்காக விண்ணப்பித்திருப்பான். ஆனால் அவற்றுள், ஒரு நிறுவனங்களிடமிருந்து கூட அழைப்பு வராத நிலையில், துவண்டு போய்க்கிடந்த ரமேஷின் வாட்டத்தைப் போக்குமாறு, மும்பையிலிருக்கும் ஒரு முன்னனி நிறுவனம், நேர்காணலுக்காக சென்ற வாரம் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதற்காகத்தான் இப்போது மும்பைக்குச் செல்ல இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.

ரமேஷின் குடும்பம் சற்று ஏழ்மையான குடும்பம். தந்தையின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த ரமேஷின் குடும்பத்திற்கு, அவர் ஒரு மாதத்துக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றது மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. இனி குடும்பச்சக்கரத்தை எப்படி ஓட்டப்போகிறோம் என்ற கேள்விக்குறி அவர்கள் அனைவரின் மனதிலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் இரண்டு வருடங்களுக்குள், தன் மகளுக்குத் திருமணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்ற கனவிற்கு நடுவில், ரமேஷை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியிருந்தனர் அவனது பெற்றோர். எப்படியும் ரமேஷுக்கு, விரைவில் ஒரு நல்ல வேலை கிடைத்து, குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் பனி போல் விலகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களிடம் இருந்தது. இதை ரமேஷும் நன்கு உணர்ந்திருந்தான்.

பெற்றோரின் இந்தக் கனவுகளை மூட்டை கட்டிக்கொண்டு, இரயிலில் ஏறி அமர்ந்தான் ரமேஷ். ரமேஷுக்கு இது முதல் நேர்காணல் என்பதால், மிகுந்த பதட்டம் அவனுக்குள் காணப்பட்டது.

‘இந்த வேலை மட்டும் நமக்கு கிடைத்துவிட்டால், நம் குடும்பத்திற்கு ஒரு விடிவுகாலம் பிறந்துவிடும்... தங்கைக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடியும்..." என்று தன் மனதுக்குள்ளேயே நினைத்துக்கொண்டு, தான் எடுத்து வந்த பெட்டியை பக்கத்தில் வைத்துவிட்டு, சற்று நேரம் கண்ணயர்ந்தான் ரமேஷ்.

அப்போதுதான் அந்தக் கொடுமை ரமேஷுக்கு இழைக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து விழித்தெழுந்த ரமேஷுக்கு, அவன் எதிர்பார்த்திராத வகையில் அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவன் கண்ட கனவுகளை நோக்கிப் பயணம் செய்வதற்கு, அவனுக்கு ஒரே ஊன்றுகோலாக இருந்த அவனது சான்றிதழ்களை வைத்திருந்த பெட்டி களவாடப்பட்டிருந்தது. வாழ்வில் முன்னேறி சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் வாழ்க்கைப்பயணம் செய்துகொண்டிருந்த ரமேஷின் மனது சுக்கு நூறாகிப் போனது. அவனது துக்கத்திற்கு அளவே கிடையாது. "நமக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், நம்மை நம்பி மட்டுமே நம் குடும்பம் அங்கு காத்துக்கொண்டிருக்கிறதே ... இனி என்ன செய்யப்போகிறோம்..." என்ற எண்ணம் ரமேஷின் மனதை பலமாகப் பதம் பார்க்கத் தொடங்கியது. மொழி தெரியாத ஊரில், எங்கு போகப்போகிறோம் என்ற முகவரியுமில்லாமல், தனக்கென வைத்திருந்த சான்றிதழ்களும் பறிபோய் விட, நிராயுதபாணியாக செய்வதறியாமல் திகைத்துப்போய் நின்றான் ரமேஷ். களவுபோனது ரமேஷின் பெட்டி மட்டுமல்ல, அவன் இதுவரை அவனது மனதிற்குள் விதைத்திருந்த கனவுகளும், பெற்றோர் அவன் மீது வைத்திருந்த கனவுகளும் கூடத்தான்.

தன் மீது நம் பெற்றோர் வைத்திருந்த நம்பிக்கையை குலைத்துவிட்டோமே என்ற எண்ணத்தில், இனி நாம் வாழ்வது யாருக்கும் பயனில்லை என்று நினைத்து, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுத்து, ஓடிக்கொண்டிருந்த இரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான் ரமேஷ்.

பெட்டியை களவாடிச்சென்றவன், அதனை திறந்து பார்க்கையில், அதிலிருந்த முன்னூறு ரூபாய் மட்டுமே அவனது கண்களில் பட்டது. அதிலிருந்த சான்றிதழ்கள் ஒரு காகிதம் என்ற அளவில்தான் அவனுக்கு தென்பட்டது. பெட்டியிலிருந்து, பணத்தையும், ரமேஷுடைய துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவைகளை வீசியெறிந்துவிட்டு, அவ்விடத்திலிருந்து ஓடிச் சென்று அடுத்து வந்த இரயிலில் ஏறி, தனது சேவையைத் தொடர்ந்தான் அந்தக் கள்வன்.

ரமேஷின் இழப்பைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அவனது குடும்பத்துக்கு, ஒரு வாரத்திற்குப் பின்னர், ரமேஷின் சான்றிதழ்களை மீட்டுக் கொடுத்தனர் காவல்துறையினர்.

இப்போது அந்தச் சான்றிதழ்கள் யாருக்குப் பயன்படும்? அவைகளால் இனி யாருக்குப் பயன்? அந்தச் சான்றிதழ்களால், ரமேஷை அவன் குடும்பத்தினர் திரும்பப் பெற முடியுமா?

தான் பல கனவுகளுடன் தன் மகனுக்காக கட்டி வைத்திருந்த மனக்கோட்டை தகர்ந்ததையடுத்து, தன் மகன் மீது, தான் கட்டிய மணல்கோட்டையின் அருகில் நின்று, கண்ணீருடன் அந்தச் சான்றிதழ்களை கிழித்துப் போடுகின்றனர் ரமேஷின் பெற்றோர்.

இது ஒரு கதைதான் என்றாலும், இதில் வருவது போல், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு கொலை, கொள்ளையில் ஈடுபடும் கள்வர்களின் கூட்டம், இந்தச் சுதந்திர இந்தியாவில் இன்னும் சுதந்திரமாய் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பிறருக்குச் சொந்தமான பொருளை அடைய வேண்டும் என்று மனதளவில் ஆசைப்பட்டாலும் கூட அது மகத்தாய பாவமாகும்.

இக்கதையில் நாம் கண்டது போல், கள்வனின் கண்களுக்கு வெறும் வெற்றுக் காகிதங்களாக தோன்றியவை, ரமேஷுக்கு வாழ்க்கையாக அமைந்திருந்தது. அந்தக் கள்வனால் ரமேஷின் வாழ்வும், அவனது பெற்றோரின் கனவுகளும் பறிபோனது. ஆகையால் பிறர் பொருளுக்கு எள்ளளவும் ஆசைப்படாமல் வாழ்வது உலகில் தலையாய பண்பாகும்.

தெய்வப்புலவராம் வள்ளுவப் பெருந்தகை, தமிழ் மறை என்று போற்றப்படும் திருக்குறளில் கூறியதுபோல், பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதே கூடக் குற்றமாகும். குற்றமான செயல்களை மனத்தால் நினைத்தலும் மகத்தாய பாவமாகும்.

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல் ( திருக்குறள் : 282 )
(பால்: அறத்துப்பால்; உட்பிரிவு: துறவறவியல்; அதிகாரம்: கள்ளாமை)
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree