கரப்பொத்தானியம்

10 நவம்பர் 2005
ஆசிரியர்: 

 

 செங்கற்களாலான பழையது என்றோ, புதியது என்றோ கூற முடியாத

நடுத்தரக் கட்டிடம். சீமெந்தால் அழுந்திப் பூசாமல், செங்கற்களை ஒன்றன்
மேல் ஒன்றாக அடுக்கி சீமெந்தால் ஒட்டியதுபோன்ற வெளித் தோற்றச் சுவர்களாலான
கட்டிடம். மூன்று மாடிகள். ஒவ்வொரு மாடியிலும் மும்மூன்றாக மொத்தம்
பன்னிரண்டு வீடுகள் அந்தக் கட்டிடத்துக்குள் அடக்கம். அதில் ஒரு வீடு
வெறுமையாக இருப்பதாகக் கேள்விப்பட்டு, வெளிநாட்டவருக்கு, அதுவும் ஆசிய
நாட்டுக் கறுப்பினத்தவனுக்கு வாடகைக்குக் கொடுப்பார்களா என்று குழம்பி,
தயங்கி, எதற்கும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு, அது
சரிப்பட்டு, ஏதோ சாதனை புரிந்த பெருமிதத்துடன் அங்கு குடிவந்து ஒரு
மாதந்தான் ஆகிறது.


அருகில்
சிறுவர்கள் விளையாடவென அமைக்கப்பட்ட சாதனங்களுடன் கூடிய பொழுதுபோக்குப்
பூங்கா. அவனுடைய இரண்டு பிள்ளைகள் வீட்டில் பொழுதுபோகாமல் விளையாட்டு என்ற
பெயரில் கூச்சலிடுவதும், 'ரீவி றிமோட்' போன்றவற்றை உடைப்பதும் ஒரேயடியாக
நின்றுபோய், அவர்களது கவனம் அந்தப் பூங்காப் பொழுதுபோக்கலில் சென்றதற்கும்
அந்த வீடு காரணமானதில் அவனுக்குச் சந்தோசம். பாடசாலைகூட நூறு மீற்றர்
தூரத்துக்குள்தான் இருந்தது.போக்குவரத்துக்கு 'ட்ராம்' வண்டிகள்,
வீட்டுப் பாவனைப் பொருட்கள் வாங்குவதற்கு மலிவுக் கடைகள், நல்ல
சுவாத்தியத்துக்கு நதிக்கரை என்று பல வசதிகள், அந்த புதிதாக வாடகைக்கு
கிடைத்த வீட்டுக்கு அண்மையில் அமைந்து அவனின் மகிழ்ச்சியைக்
கூட்டிக்கொண்டிருந்தது.

நல்லதொரு வீட்டைக் கண்டுபிடித்துக் குடிபுகுந்த
தனது திறமையை திரும்பத் திரும்ப மாலதியிடம் சொல்லிச் சொல்லிப்
பெருமைப்பட்டுக்கொண்டான் செந்தூரன்.ஜேர்மனிக்கு வந்து கடந்த
ஏழெட்டு வருடங்களாக ஒரு அறைக்குள்தான் வாழ்ந்தான். மாலதி சூழ்நிலைகளுக்கு
ஏற்ப விட்டுக்கொடுத்து நடக்கத் தெரிந்தவளானதால், அந்த ஒரு அறையையே வீடாக
அனுசரித்த வாழ்ந்து, அவனது தேவைகளுக்கும் பக்கபலமாகக் கரம்தந்து, இரு
மழலைச் செல்வங்களையும் பெற்றெடுத்து, இவ்வளவு வருடங்களையும் சுமூகமாகக்
கடந்துவிட்டாள்.

எனினும் அந்த அறை வாழ்க்கை அவ்வப்போது இடைக்கிடையே
அவர்களிடையே சில நெருடல்களை ஏற்படுத்தி, முணுமுணுப்புகளாகி இயலாமையுடன்
முடிவுகண்ட சம்பவங்களும் தோன்றாமலில்லை.மாலதி... தாயகத்திலே வசதியாக வாழ்ந்தவள். அவளது தந்தை அரசாங்க அதிகாரி. அந்தப் பகுதியிலேயே அவர்களது வீடுதான் மிகப் பெரியது.அவ்வாறு
விசாலமான வீட்டில் வசித்த மாலதி ஜேர்மனிக்கு அவனது வாழ்க்கைத் துணையாக
வந்தபோது, அந்த அறைதான் அவளது இல்லம், அந்த இல்லத்துக்குத்தான் அவள் அரசி
என்றால், என்னென்ன பிரச்சினைகளைக் கிளப்பி வாழ்வின் வசந்தங்களை விரட்டப்
போகிறாளோ என மனதிற்குள் பயந்தான் செந்தூரன்.ஆனால் அவளோ அதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.அந்த
ஒரு அறைக்குள் அலுமாரியைக் குறுக்காக வைத்து, பின் பகுதியைப் படுக்கை
அறையாகவும், முன் பகுதியை வரவேற்பறையாகவும் பகுத்து, வாழ்க்கையில்
பங்கெடுத்துவிட்டாள்.அமைதியாக ஓடும் அருவியில் கல்லெறிந்து குழப்பிப் பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது?!அந்த
நகரத்தில் விசாலமான வீடுகளில் வசிக்கும் தமிழுறவுகள் சிலர் தமது
பெருமைகளைத் தத்தம் வீடுகளோடு ஒப்பிட்டு, அவர்களை வார்த்தைகளால்
குத்தாமலும் இல்லை.''என்ன மாலதி... இவ்வளவு காலமாயும் ஒரு வீடு
கிடைக்கேலையே... இலங்கையிலை 'எஸ்டேட்' சனங்கள் 'லயன்'களிலை வாழுறமாதிரி
எவ்வளவுநாளைக்கு உதுக்கையே கிடக்கப்போறியள்...?"இது அக்கறையால்
எழுந்த விசாரிப்பல்ல. தாங்கள் வசதியான வீடுகளில் வாழ்வதாகவும், மலையகத்
தோட்டத் தொழிலாளிகளைப்போல இவர்கள் சீரழிந்த வாழ்வு வாழ்வதாகவும் இழித்துக்
காட்டும் வார்த்தை ஜாலம் என்பதை மாலதி அறிவாள்.''வீட்டின்ரை நீள
அகலத்திலை என்ன இருக்கு? வாழுற வாழ்க்கைதான் விசாலமாயிருக்க வேணும்.
மனமிருந்தால் இடமுண்டு... சில சனங்கள் பெரிய வீடுகளிலை வாழ்ந்தாலும்...
மனசளவிலை ஒற்றுமை இல்லாமை இருவேறு துருவங்களாய் ஒண்டாமைச் சீரழிஞ்சு
கொண்டிருக்குதுகள்... சிலபேருடைய பெரிய வீடுகளுக்குள்ளை போய்ப்
பார்த்தால்... ஒரே குப்பையாய் இருக்கும்.... துணிமணி எல்லாம் போட்ட போட்ட
இடத்திலை கும்பம் கும்பமாய்க் கிடக்கும்... பெரிய வீடுகளிலை
இருந்தால்மட்டும் போதாது... அததை அந்தந்த இடத்திலை சுத்தமாய் ஒழுங்காய்
வைச்சிருக்கத் தெரியவேணும்... ஆஸ்பத்திரியும்தான் பெரிசு... அதுக்காக
அதுக்கை வாழேலுமே... வருத்தக்காரராலைதான் ஏலும்... ம்... பெரிய வீடுகளிலை
முந்திப் பிந்தி வாழ்ந்தால்தானே உதெல்லாம் தெரியும்..." என்று தனது
இயலாமையை வார்த்தைகளால் மறைத்து, மற்றவரை மௌனமாக்கிவிடுவாள் மாலதி.


 
எனினும் அவளுள்ளும் வீடுபற்றிய ஆதங்கம் இருக்கத்தான் செய்தது.


ஒரு
வசதியான வீடு வாடகைக்குக் கிடையாதா? ஜேர்மனிக்கு வந்ததிலிருந்து
வசிப்பதற்கு நல்ல நகரம் கிடையாதா?- சோசலில் சலுகைக் காசுகள் கிடையாதா?-
அரசியல் தஞ்சம் கிடையாதா?- வேலை கிடையாதா?- கிடைத்த வேலையில் அதிக சம்பளம்
கிடையாதா?- நல்ல விசா கிடையாதா?- ஜேர்மன் பாஸ்போட் கிடையாதா?- என்ற
'கிடையாதா? கிடையாதா?" ஏக்கங்களில் வீடு பற்றிய ஏக்கம் முக்கிய ஏக்கமாக
அவளுள் தேங்கிநின்று வருத்தியது.அந்த ஏக்கத்தின் கனதியானது சிலவேளைகளில் சினமாகி செந்தூரனையும் தாக்கியது.''முயற்சி
செய்துகொண்டுதானே இருக்கிறன்... ஒவ்வொரு நாளும் பேப்பரளைப் பாத்து
ரெலிபோன் அடிக்கிறதை நீரும் பாக்கிறீர்தானே... சிலபேர் வீடு தாறன் எண்டு
வரச் சொல்லிப்போட்டு, ஏமாத்துறதையும் பாக்கிறீர்தானே...
வெளிநாட்டுக்காரன்... அதுவும் கறுப்பு ஆசியாக்காரன் எண்டு யோசிச்சு ஏதேதோ
சாட்டுப்போக்குச் சொல்லித் தட்டிக்கழிக்கிறாங்கள்... முயற்சி பண்ணுவம்...
ஒருநாளைக்கு நல்லதொரு வீடு அகப்படாமையே போகும்? கொஞ்சம் பொறும்".

சமாதானம் கூறுவான்.கடந்த ஏழெட்டு வருடங்களாக வீடு வீடென்று அலைந்து, அவனுக்கே மனம் சலிப்படைந்துவிட்டது.

அண்மையில்
வந்தவர்கள் பலர் நல்ல நல்ல வீடுகளில் வசிக்கும்போது, தனக்குமட்டும் ஏன்
வீடு கிடையாதாம் என்ற எண்ணம் அவனைத் தினமும் வதைத்து உபாதை கொடுத்தது.
அந்த உபாதையின் உபத்திரம் அவனைத் தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்ல
முயன்று, காலம் உருண்டோடி ஏழெட்டு வருடங்களைக் கரைத்த நிலையில் வீடு
கிடைத்துவிட்டது.எங்கே கிடைக்கப் போகிறது என்று வழமைபோலவே நம்பிக்கையீனமாகச் சென்றவனுக்கு வீடு கிடைத்துவிட்டது.நகர
மத்தியில் சகல வசதிகளுடன் அந்த பெரிய விசாலமான நான்கறைகளைக் கொண்ட வீடு
கிடைத்தபோது, வாழ்க்கையில் ஏதோ ஒரு பென்னாம்பெரிய சாதனையைச் செய்த
வெற்றிக் களிப்பில் ஆழ்ந்தான் செந்தூரன். அவன் மட்டுமல்ல, அவனுக்கும்மேலாக
மாலதியும் மழலைகளும் மகிழ்ச்சியின் உச்சிக்கே போய்விட்டார்கள்.முத்துக்களாக
நெற்றியில் பிறப்பெடுத்து வழிய முற்பட்ட வியர்வையைத் துவாயால் துடைத்தவாறு
கட்டிலில் மீண்டும் சாய்ந்தவனை உலுக்கினாள் மாலதி.''என்னப்பா..."''என்ன..."அவளின் காதோரம் கம்பிச் சுருள்களாக அலைபாய்ந்து கொண்டிருந்த கேசத்துள் விரல்களைவிட்டு அளாவியவாறு பார்த்தான் செந்தூரன்.''புதுவீட்டுக்குப் போறதுதான் போறம்... இந்த வீட்டிலை இருக்கிற பழைய சாமான்களை அங்கை கொண்டுபோய்ப் போட்டால் வடிவாயே இருக்கும்..."''அதுக்கு... எல்லாம் புதுசாய் போடுறதெண்டால் எக்கச்சக்கமாயெல்லே முடியும்... அவளவு காசுக்கு எங்கை போறது...?"''சீட்டை எடுப்பம்..."

சாதாரணமாகச் சொன்னாள்.ஏதாவது அவசரமான தேவைக்குப் பயன்படுத்தும் நோக்குடன் தொடங்கிய சீட்டை எடுக்கச் சொன்னதை அவன் அப்போது எதிர்பார்க்கவில்லை.''என்ன
சொல்லுறீர்... ஆபத்து அந்தரத்துக்கெண்டு சீட்டுப் போட்டால்.... அதை
எடுக்கச் சொல்லுறீர்... இப்பதான் மூண்டு மாதம் முடிஞ்சிருக்கு... கழிவு
கனக்கவெல்லே வரும்..."''கழிவைப் பார்த்து... இந்தக் குப்பையளை எல்லாம் அங்கை கொண்டுபோய் அந்த வீட்டையும் குப்பையாக்கச் சொல்லுறியளோ..?"

எரிச்சலுடன் கேட்டாள்.''இவ்வளவு
நாளாய் இதுக்கைதானே இருக்கிறம்... புது வீட்டைக் கண்டவுடனை இதுகளெல்லாம்
குப்பையாய்ப் போச்சுதாக்கும்... மாலதி, விரலுக்கேத்த வீக்கம் வேணும்...
கண்டபடி காசைக்கொட்டி புதுச் சாமான்களாய் வாங்கிப் போட்டாலும், கொஞ்சக்
காலத்திலை அதுகளும் பழுதாகி, இப்ப நீர் சொல்லுறமாதிரிக் குப்பையாய்த்தான்
போகும்...''''அந்தந்த இடத்திலை இருக்கேக்கை அததுக்குத் தக்கமாதிரி
கொஞ்சமாலும் இருக்கவேணும்... ஊரிலை நீங்கள் 'சறம்'கட்டிக்கொண்டு றோட்டிலை
திரிஞ்சமாதிரி இஞ்சை திரியலாமோ... அப்பிடித்தான் இதுவும்.. ஒருமுறைதானே
அந்த வீட்டுக்காய் செலவழிக்கப் போறம்.... பேந்து அது இது எண்டு சில்லறை
சில்லறையாய் செலவு செய்யுறதுக்கும் பார்க்க, ஒரேயடியாய் வேண்டிப்போட்டால்
அலைச்சலும் குறைவு... நேரமும் மிச்சம்... ம்..."

பெருமூச்சுடன் மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.நினைத்தது நிறைவேறாத கோபம் அவளுக்கு.அவளின் அந்த விலகல் அவனை அவளின் வேண்டுகோளுக்கு அடிபணிய வைத்தது.சுவருக்கு
ஒட்டும் பேப்பரில் இருந்து தரைவிரிப்பு கதிரை மேசை அலுமாரி என்று யாவுமே
புதிதாக வாங்கப்பட்டு, அந்த வாடகை வீடு புதுப்பொலிவு பெற்றது.எதற்காகவோ
தொடங்கிய ஏலச்சீட்டு, அந்த வீட்டின் தேவைகளாக அவசரப்படுத்தி, அநியாயமான
கழிவில் எடுக்கப்பட்டு, வீட்டிற்கான சடப்பொருள்களின் வரவில் மொத்தமும்
கரைந்துவிட்டது.அந்தப் புதுவீட்டுக்குக் குடிவந்து ஒருமாதமாகிவிட்டது.

புது வீட்டுக்குக் குடிவந்த உற்சாகத்தில் தூர இடங்களில் வசிக்கும் தெரிந்த உறவுகளை, நண்பர்களை எல்லாம் தொலைபேசியில் அழைத்தாள் மாலதி.''நீங்கள்
கட்டாயம் எங்கடை வீட்டை வரவேணும்.... முந்தித்தான் சின்னவீடு எண்டதாலை
வாறாக்கள் தங்கிப் போகேலாது... அதாலை நாங்களும் உங்களை வந்து நிற்கச்
சொல்லிக் கேட்கேலை.... இப்ப வசதியான வீடு எடுத்திருக்கிறம்... எத்தனை
நாளெண்டாலும் நீங்கள் வந்து தங்கலாம்..."

வலிந்து அழைப்புவிடுத்தாள்.''கட்டாயம்
வரவேணும்... பாத்துக்கொண்டு இருப்பம்" என்ற மாலதியின் அழைப்பின்
நச்சரிப்புத் தாங்காது தூரத்து உறவொன்று அங்கே வந்து தங்கியது.அந்த உறவான தபேந்திரனும் மூன்று பிள்ளைகளும் மனைவியுமாக மொத்தம் ஐந்து பேர் வந்து ஒரு கிழமை நின்றார்கள்.அந்த ஒரு கிழமையாக வீடு பற்றிய உரையாடல்களே அங்கே பிரதானமான ஆட்சிசெய்து செந்தூரனைச் சலிக்க வைத்துக்கொண்டிருந்தது.''நல்ல வசதியான இடத்திலைதான் வீடு எடுத்திருக்கிறியள்...""

தபேந்திரன் கூற, மாலதி பெருமை பொங்க வாயெல்லாம் பல்லானாள்.''எல்லாம் புதுசாய் வேண்டிப் போட்டிருக்கிறியள்...""''ஓம்...
ஒரே செலவாய் வேண்டிப் போட்டூட்டம். பழைய சாமானளைக் கொண்டந்துபோட்டு நாலு
நாளிலை அதுகள் உடைய, பேந்து அதுகளைக் கழிக்கவெண்டு அலையுறதிலையும்
பார்க்க, செலவோடை செலவாய் எல்லாத்தையும் வேண்டிப்போட்டம்..."

மாலதி உற்சாகத்தோடு விபரித்தாள்.''எல்லாம் புதிசாய் வேண்டக் கன காசெல்லே முடிஞ்சிருக்கும்...?"

தபேந்திரனின் மனைவி கேட்டாள்.''கனக்கத்தான்
முடிஞ்சுபோச்சு... அடுப்பையும் புதுசாய் வேண்டலாம் எண்டுதான்
நினைச்சம்.... காசும் கொஞ்சம் காணாமைப்போச்சு... அதோடை அடுப்பு
குசினிக்குள்ளைதானே இருக்கப் போகுது... அதாலை 'செகண்ட் ஹாண்ட்'
கடையொண்டிலை எடுத்தனாங்கள்... மற்றும்படி அடுப்பைத் தவிர எல்லாம்
புதிசுதான்..."செந்தூரனுக்கு மாலதியின் உற்சாகத்தையும்
பெருமையையும் பார்க்க ஒருபுறம் சிரிப்பாகவும், மறுபுறம் அவளது அறியாமையை
எண்ணிச் சங்கடமாகவும் இருந்தது.மாலதி வலிய அவர்களை விருந்தினராக அழைத்தது, வீட்டுப் பெருமைகளை வாய் ஓயாமல் கூறுவதற்கோ எனத் தோன்றியது.அவளின்
பெருமையான பேச்சுக்களை அவதானிக்கும் தபேந்திரன் குடும்பமும் நாளை இன்னொரு
புதிய வீட்டுக்கும் புதிய பொருட்களுக்குமான தேடுதலை ஆரம்பித்து,
கையிருப்புகளைக் கரைக்க ஆயத்தமானாலும் ஆச்சரியமில்லை.'உடல்
வருந்தக் கூலி பெற்று, சிறு துளிகளாகச் சேர்த்துவைத்து, அதையெல்லாம்
போலிப் பெருமைக்காக அர்த்தமில்லாமல் அள்ளிக் கொட்டி அழித்துவிட்டு,
வெறுங்கையுடன் நிற்கும் அறியாமையை அவனால் ஜீரணிக்க இயலவில்லை.மாலதியின் அறியாமையால் எழுந்த வீண் ஆடம்பரச் செலவுகள் அவர்களையும் தொற்றிவிடக் கூடாதே என நினைத்துக்கொண்டான்.தமிழன்
புலம்பெயர்ந்து வாழும் நாடுகளைப் பொறுத்தவரையில் மற்றத் தமிழன் என்ன
செய்கிறானோ, அதைப் பார்த்து, அதனிலும் மேலாகத் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு,
இருப்பதையெல்லாம் இழக்கும் பல தழிழர்களின் சீரழியும் வாழ்க்கையை ஏற்கெனவே
அவன் அறிந்திருக்கிறான். ஒருவன் கார் வாங்கினால் மற்றவன் புதுக் கார்
எடுக்க வேண்டும். ஒருத்தி சேலை வாங்கினால் மற்றவளும் சேலைக் கடையில்
நிற்பாள். ஒருவன் ஒரு வேலைக்குச் சென்றால் மற்றவனும் அங்கே போட்டியாக
நுழைவான். இவ்வாறு யாவற்றிலும் தமக்குள்ளேயே போட்டியிடும் இனமாகத்
தமிழினம் காணப்படுவது, புலம்பெயர் நாட்டினிலே உருவான பழக்கமா?
தாயகத்தில்கூட கோயில் திருவிழாக்களில் இருந்து ஒவ்வொரு விடயத்திலும்
போட்டியும் பூசலும் நிறைந்துதானே கிடந்தன?! அந்தப் பழக்கம் இங்கும்
தொடர்ந்து வரும் வழக்கமாகிவிட்டது.''பூச்சி... பூச்சி.... அம்மா பூச்சி..."அன்று கதிரையொன்றில் ஏறி நின்றவாறு பயத்துடன் அலறினான் இளைய மகன் நிரூஜன்.

நிரூஜன்
மிகவும் பயந்த சுபாவம் உள்ளவன். ஏதாவது இலையான்கள் வீட்டினுள்
பறந்தால்போதும், பயந்து குழறி, 'பூச்சி, பூச்சி' என்று ஆர்ப்பாட்டம் செய்ய
ஆரம்பித்துவிடுவான்.

அதனால் மாலதி அவனது அலறலைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.நல்லதொரு
தமிழ்நாட்டு மசாலாப் படத்தை வீடியோவில் போட்டுக் கவலைக் காட்சியொன்றில்
கண்கலங்க ஆயத்தமான வேளையில், 'பூச்சி' என்று அலறி இரசனையைக் குழப்பியதில்
மாலதிக்கு எரிச்சல் ஏற்பட்டது.''அது போய்விடும்... சும்மா கத்தாதை..."''ம்... பூச்சி... பூச்சி...."

இப்போது நிரூஜன் விக்கலெடுத்துச் சிணுங்க ஆரம்பித்தான்.பூச்சி அங்கிருந்து அகலும்வரையில் அவன் அமைதியாக மாட்டான்.சலிப்புடன் எழுந்தாள் மாலதி.''எங்கை பூச்சி..."''உங்கா..." என்று அவன் சுட்டிக்காட்டிய சுவர்ப் பக்கத்தைப் பார்த்துத் திகைத்துவிட்டாள் மாலதி.அந்தச் சுவரின்மீது ஒரு சிறிய பூச்சி... வட்டவடிவமான மண்ணிறக் குண்டுமணியாக ஊர்ந்துகொண்டிருந்தது.''போச்சு... எல்லாம் போச்சு... உந்தச் சனியன் எங்காலை வந்தது... இனித் தொலையாது..."

தலையில் அடிக்காத குறையாகத் தனக்குள் புலம்பினாள் மாலதி.'கக்கலாக!'

ஜேர்மன் மொழியில் 'கக்கலாக'. தமிழில் கரப்பொத்தான் பூச்சி அல்லது கரப்பான் பூச்சி.

இலங்கையில்,
அதுவும் கொழும்பு வீடுகளின் குளியலறையிலும் மலசல கூடங்களிலும் மொழியன்
மொழியன்களாக ஓடித் திரிவதைக் கண்டிருக்கிறாள். ஊரில் வருடக்கணக்கில்
திறக்கப்படாத ட்ரங்குப் பெட்டிகளுக்குள் இருக்கும்
உடுபிடவைகளுக்கிடையிலும் பார்த்திருக்கிறாள்.

ஆனால் இங்கே....
அவற்றைவிட உருவத்தில் சிறியதாக, கடும் மண்ணிறத்தில் மினுங்கும்
குண்டுமணிகளைப்போல பட்டாளம் பட்டாளமாகப் பிறப்பெடுத்து வீடு முழுவதும்
பரவி ஆரோக்கியத்தைக் கெடுப்பதைப்பற்றி நன்றாகவே அறிந்திருக்கிறாள் மாலதி.அதே
நகரத்தில் வசிக்கும் நிர்மலன் குடும்பம் இந்தக் கரப்பொத்தான் பூச்சிகளால்
அடைந்த அவலங்கள் அவளுக்குத் தெரியும். நிர்மலனின் மனைவி நித்தியா அவளிடம்
பூச்சிகளின் அட்டகாசத்தைப்பற்றிப் புலம்பாத நாளே இல்லை எனலாம்.''இந்தப்
பூச்சி வந்தாலும் வந்தது... வீடே தரித்திரம் பிடிச்சமாதிரிக் கிடக்குது.
'ஸ்பிறே' மருந்து வேண்டி அடிச்சம். கும்பம் கும்பமாய்ச் செத்து
விழுந்துது. விட்டுது தொல்லை எண்டு எல்லாத்தையும் கூட்டி அள்ளினம்.
ரண்டாம் நாள் மறுபடியும் பூச்சி ஓடுது... 'ஸ்பிறே' மருந்து சரிவராது எண்டு
பசை தடவின கடுதாசி மட்டையளை வாங்கி, 'பிறிஜ்"க்குப் பின்னாலையும்
அடுப்புக்குக் கீழையும் வைச்சம்... கொஞ்சம் அதிலை ஒட்டிக்கொண்டு செத்துத்
தொலைஞ்சுது. உதுகளைத் தொலைக்க வேண்டுற மருந்துகளுக்குக் காசுதான் கரையுதே
தவிர, பூச்சி குறைஞ்சமாதிரித் தெரியேலை."

நித்தியா தொடர்ந்தாள்.''ரண்டு
கிழமைக்கு முந்தி 'வீடியோ டெக்' பழுதாய்ப்போச்சு. இவர் திருத்தவெண்டு
கடைக்குக் கொண்டு போனார். திறந்து என்ன பிழையெண்டு பார்க்கிறதுக்கு
கடைக்காரன் எழுபத்தைஞ்சு மார்க் கேட்டான். சரியெண்டு திறக்கச் சொன்னால்...
திறந்தவன் 'பக்'கெண்டு மூடிப்போட்டு, 'காசும் வேண்டாம், ஒண்டும் வேண்டாம்,
இடத்தைக் காலி பண்ணு' எண்டு கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத குறையாய்
விரட்டிப்போட்டான். 'வீடியோ டெக்'குக்கை பூச்சி. தன்ரை கடையுக்கையும்
வந்தீடும் எண்ட பயம் அவனுக்கு. இப்ப நாலு நாளுக்கு முந்தி ரீவியும்
பழுதாய்ப்போச்சு. அதுக்கையும் பூச்சியாய்த்தான் இருக்கவேணும். இந்தப்
பூச்சியாலை தொடர் நாடகமும் பார்க்க முடியேல்லை... ரீவியும் பார்க்க
முடியேல்லை..."நித்தியா தனது மனச்சுமையைப் புலம்பலிலே இறக்கி வைத்தது இன்னும் ஞாபகத்திலிருந்தது.

பூச்சி மேல்நோக்கி ஊர்ந்து செல்லும் சுவரின் அருகே தபேந்திரன் குடும்பத்தினர் கொண்டுவந்த 'வாய்க்'குகள் இருந்தன.

அதற்குள்ளிருந்துதான் அந்தப் பூச்சி வந்திருக்கவேண்டும்.

'வரேக்கை
உடுப்புகளை உதறிப்போட்டு வராமை, தங்கடை வீட்டிலை இருக்கிற பூச்சியளையும்
கொண்டு வந்தூட்டுதுகள்... ஏதோ ஆசையாய்க் கூப்பிட்டால், உபத்திரவத்தைக்
கொண்டுவந்து சேர்த்துப்போட்டுதுகள்... எனக்கு வேணும்...' எனத் தனக்குள்
நொந்தவளாய் தபேந்திரனின் மனைவி வசந்தியை நோக்கினாள் மாலதி.அவள்
தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிர்ந்த தமிழ் சினிமாவை அவதானித்துக்
கொண்டிருந்தாள். எனினும் அவளது கண்கள் அங்குமிங்கும் அலைபாய்வது அந்த
வெளிச்சத்தில் தெளிவாகவே மினுங்கித் தெரிந்தது.மாலதிக்குப் புரிந்தது. பூச்சி அவளுடன்தான் வந்திருக்கவேண்டும்.

'ம்... தெரிஞ்சும் தெரியாதமாதிரி மிண்டுக்கட்டைபோலை இருக்கிறாள்... வாயைத் திறந்து எங்களோடைதான் வந்தீட்டுது எண்டு சொல்லலாந்தானே...'

மனதிற்குள் எரிச்சல் கிளர்ந்தெழுந்தது.வலிந்து அழைத்த விருந்தினர்களல்லவா?!

அநாகரீகமாக நடந்துகொள்ளக் கூடாது.மனதில்
எழுந்த எரிச்சல் சினமாக மாறியது. கைக்கெட்டிய தூரத்திலிருந்தது ஒரு
புத்தகம்தான். அதை எடுத்து, மனதில் உருவான சினத்துடன் 'பளார்' என அந்தப்
பூச்சியை அறைந்தாள்.வசந்தியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்ட திருப்தி அவளுக்குள்.'சளக்...'

ஒரு துளி இரத்தம் சுவரில் ஈரச் சிவப்பானது.அருவருத்தது. அருவருப்பு குமட்டலானது. குமட்டல் வாந்தியாக 'பாத் ரூமை' நோக்கி ஓடினாள் வசந்தி.''ஊய்க்... ஊய்க்.."

குளியலறையில் மாலதி ஓங்காலிக்கும் சத்தம்கேட்டு தபேந்திரன் குறும்பாகச் செந்தூரனைப் பார்த்தான்.''வசதியான வீடு இன்னுமொரு வாரிசைத் தந்தீட்டுதுபோல..."

கண்களைச் சிமிட்டியவாறு கேட்டான்.''பூச்சியை அடிச்ச அருவருப்பாலை வாந்தி எடுக்கிறாளெண்டால்... நீ வேறை..."''உந்தச் சின்னப் பூச்சிக்கோ உப்பிடி வாந்தி...." என்று சிரித்தான் தபேந்திரன்.

''பூச்சிக்கில்லை... அதீன்ரை ரத்தத்தைக் கண்டுதான் வாந்தி..."ஒரு
சின்னஞ்சிறிய பூச்சியின் ஒரு துளி இரத்தத்திற்கே இவ்வளவு அருவருப்பும்
குமட்டலும் வாந்தியும் என்றால்- தற்போது தாயகத்தில் எங்கும் பீறிட்டுத்
தெறிக்கும் இரத்தத்தையும், துகள்களாகச் சிதறும் சதைக் கும்பங்களையும்
பார்க்க நேரிட்டால் இவளது நிலை எப்படியிருக்கும்...?!''என்ன தபே... என்ன யோசினை..."

அவனது சிந்தனையைக் கலைத்தான் செந்தூரன்.''இண்டைக்கு
எங்கடை நாடு இருக்கிற நிலையை நினைச்சுப் பார்த்தன்... அங்கை ரத்தத்திலை
சகதியாகிற மண்ணை நினைச்சுப் பார்த்தன்... அந்த ரத்தத்துக்குள்ளையும்
சிதறிக் கிடக்கிற சவங்களுக்குள்ளையும் சீவிக்கிற சனங்களை நினைச்சுப்
பார்த்தன்... அதுக்கையும் சனங்கள் வாழுதுகள்தானே... இந்த நிலமையிலை
நாங்கள் அங்கை போனால்... எங்களாலை எப்பிடி அங்கை வாழேலும் எண்டதை
நினைச்சுக்கூடப் பார்க்க முடியேலை..."

எங்கோ சூனியத்தை வெறித்துப் பார்த்தவாறு கூறினான் தபேந்திரன்.''அந்தச்
சனங்கள் அங்கை வாழவேண்டிய விதி... நாங்கள் இங்கை வாழவேண்டிய விதி...
ஆராற்ரை தலையிலை என்னென்ன எழுதியிருக்கோ... அதது அதன்படிதானே நடக்கும்...
எங்கடை கையிலை என்ன இருக்கு... எல்லாம் ஆண்டவன் செயல்..." என்று
பெருமூச்செறிந்தான் செந்தூரன்.''எல்லாத்துக்கும் ஆண்டவன்மேலை
பழியைப்போடுறதே எங்கடை வாடிக்கையாய்ப் போச்சு. இதுகளெல்லாம் மனுசன்ரை
ஆணவத்தாலையும் அகம்பாவத்தாலையும் அதிகாரங்களாலையும் வந்ததெண்டு சொல்லு...
விஞ்ஞானத்திலை... நாகரீகங்களிலை எல்லாம் உலகம் வெகுவேகமாய்
முன்னேறிக்கொண்டு போகுதெண்டு சொல்லீனம்... அதைக் கேட்டு அழுறதா
சிரிக்கிறதா எண்டு தெரியேலை... மனுசனை மனுசன் பிடிச்சுத் திண்டு வாழுறதிலை
கண்ணும் கருத்தாயிருக்கேக்கை... அதுக்கு நாகரீகம் எண்டு வேசம்
கட்டுறாங்கள்... இதுதான் உண்மை... இப்ப எங்கடை தாயகத்திலை இருந்து வருகிற
'வீடியோ கசற்'றுகளைப் பார்க்கிறனியே...''


 
''உதுக்கெல்லாம் எங்கை நேரம் கிடக்கு...?"

அவனையும் தொலைக்காட்சியில் ஓடும் அந்த இந்தியத் தமிழ் சினிமாவையும் பார்த்த தபேந்திரனுக்கு மனதிற்குள் சிரிப்பு வந்தது.


''ம்...
உன்னைப்போலைதான் கனபேர்.... நேரத்தையும் வேலையையும் சாட்டிக்கொண்டு இந்த
நாடு, இந்த வாழ்க்கை போதுமெண்டு வாழீனம்.... இந்த வட்டம் எத்தினை நாளைக்கு
எங்களைக் காப்பாத்தப் போகுதெண்டு கனபேர் நினைக்கிறதில்லை.... நினைச்சாலும்
காசு பணம் கொடுக்கவேணுமெண்டு தூரப் போய்க்கொண்டிருக்கினம்... இந்தத் தூரம்
வரவரப் பெரிசாகி... அவர்களை தமிழர் எண்ட இனத்திலையிருந்தே ஒதுக்கப்
போகிறதை ஏனோ சிந்திக்கினமில்லை... அந்த 'வீடியோ கசற்'றுகளைப்
பார்த்தியெண்டால்... நீ சொன்ன விதியை தங்கடை முயற்சியாலை துரத்த அந்தச்
சனங்கள் எப்பிடிப் பாடுபடூதுகள் எண்டது கொஞ்சமாலும் விளங்கும்....''

புரியாமல் தபேந்திரனைப் பார்த்தான் செந்தூரன்.''ஒருவேளைச்
சாப்பாடில்லை... நோய்க்கு மருந்தில்லை... நிரந்தரமான வசிப்பிடமில்லை...
எந்தநேரத்திலை என்ன நடக்குமோ... எங்கை குண்டு வெடிக்குமோ எண்டு
தெரியாது.... ஆனால் அந்தச் சனங்கள் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் எண்டால் எவ்வளவு
தொகையாய் சேர்ந்து போகுதுகள்.... ஆடல்கள் பாடல்கள் எண்டால் எவ்வளவு
அற்புதமாய்ச் செய்யுதுகள்... பொருளாதாரத்துக்காக எவ்வளவோ கட்டாந்தரைகளை
பயிர் செழிக்கிற பூமியாக்கிக் கொண்டிருக்குதுகள்... நாட்டைக்
காப்பாத்துறதுக்காக தங்கடை உயிர்போனாலும் பறுவாயில்லை எண்டமாதிரி....
காவல் படையெண்டும் எல்லைப் படையெண்டும் எத்தினை குடும்பகாரர்கள்... வயசான
சனங்கள் பயிற்சி எடுக்குதுகள்... சீலையோடை பயிற்சிக்குப் போறவர்களும்....
தள்ளாடும் முதியதோற்றத்தோடை பயிற்சிக்குப் போறவர்களுமாய்... பெரிய உருளைத்
தடியொண்டை தோளிலை சுமந்தவாறு எவ்வளவு உற்சாகத்தோடையும் பெருமிதத்தோடையும்
போகிறார்கள்... எங்கடை மண்ணுக்காக அந்தச் சனங்கள் அங்கை.... ஆனால்
இங்கை... அந்தச் சனங்களைப்போலை நாங்களும் ஈழத்தமிழர்களா எண்டு
ஐமிச்சப்படவேண்டிக் கிடக்கு... ஆரோ ஒரு கவிஞன் சொன்னான்... அந்தச் சனங்கள்
மரணத்துள் வாழுகிறவர்கள் எண்டு... அப்பிடியில்லை... அதுகள் மரணத்தைக்
கடந்து வாழுதுகள்... ஆனால் அதுகளுக்கு இங்கை வாழுற நாங்கள் எவ்வளவோ
செய்யலாம்... என்னத்தைச் செய்யப்போறம்..."கேள்வியுடன் நிறுத்திய தபேந்திரனின் பார்வையைச் சந்திக்கத் திராணியற்றவனாய் முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டான் செந்தூரன்.

ஏதோ ஒருவித குற்ற உணர்வு அவனது மனதை அரிக்க ஆரம்பித்தது.''எங்களாலை என்ன செய்யேலும்...?"

திக்கித் தடுமாறியவாறு நலிந்த குரலில் கேட்டான்.'எங்களாலை எதுவுமே செய்ய இயலாது' என்று கூறாமல், 'எங்களால் என்ன செய்ய முடியும்?' என்ற வினாவே மனதுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.

கல்லில் நார் உரிக்கேலாதுதான். ஆனால் அவன் கல்லல்ல என்பது புரிந்தது.'சொல்லாமல்
செய்வோர், சொல்லிச் செய்வோர், சொல்லியும் செய்யார்' என்று மூன்று வகையினர்
மனிதர்களுள் உண்டு. அந்தவகையில் கேட்காமலேயே தாயகத்தில் நிகழும்
போராட்டங்களுக்கும் அவல அழிப்புகளுக்கும் தங்களாலியன்ற பங்களிப்புகளைச்
செய்வோர் இல்லாமலில்லை. ஆனால் அவர்களால் எவ்வளவுதூரம் தாயகத்தில் எழும்
தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும்?!வீட்டினுள் நுழையும் ஒரு
கரப்பான் பூச்சியானது வெகுவேகமாகப் பல்கிப் பெருகுவதுபோல, தாயகத்தைத்
தாங்கிப் பிடிக்க உதவும் கரங்கள் ஒரு கும்பலாக, ஒரு கூட்டமாக இல்லாமல்
விரைந்து பல்கிப் பெருகி ஒட்டுமொத்தமாகப் புலம்பெயர்ந்த தமிழ் இனமாகவே
மாறினால், விடிவு கடுகதியாய் வந்து ஒளி காட்டுமல்லவா?!நினைவு
இனிப்பாகத்தான் இருந்தது. ஆனால் துரும்பைத் தூசாக்காமல் தூணாக்கி
பிரிவுகளை விடாப்பிடியாய் வளர்த்துச் செல்வதில் அக்கறையுடைய புலம்பெயர்
தமிழர் மத்தியிலா இந்த இனிப்பு உருவாகும்?!ஆனால் இதை எவ்வளவுபேர் சிந்திக்கிறார்கள்.... செயலாற்றுகிறார்கள்?

'தானுண்டு
தன் வேலையுண்டு' என்று ஒருசாரார். 'மற்றவன் என்ன செய்கிறான்... அதில் என்ன
குறையைக் கண்டு குழப்பம் செய்யலாம்' என்று இன்னொரு சாரார். இத்தகைய
சார்புத்தன்மைகளுள் உருப்படியாக ஏதாவது நிகழ்வதென்பது எவ்வளவுதூரம்
சாத்தியம்? எனினும் சாத்தியமாக்க தமது பொழுதுகளைத் தியாகம் செய்து
பாடுபடுபவர்களால்தானே இவ்வளவுதூரமாவது தாயகம் தாக்குப் பிடிக்கிறது.ஆனால் இங்கே.... அதுவும் ஜேர்மனியில்....

தினமும்
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களாய் எத்தனை தமிழர்கள் மீண்டும்
ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்?! இதைப்பற்றி எவ்வளவுபேர்
கவலைப்படுகிறார்கள்?! இத்தகைய நிகழ்வுக்கு ஆதரவாக அணிதிரண்டு குரல்கொடுக்க
எத்தனை தமிழர்கள் முன்வருகிறார்கள்?தாயகத்திலே பஞ்சத்திலும்
பட்டினியிலும் துன்பத்திலும் துயரத்திலும் வாழ்ந்தாலும், கிளர்ந்தெழும்
அந்தத் தமிழர்களின் உணர்வில் சிறுதுளியாவது இவர்களுக்கேன் இல்லாமல்
போயிற்று...அற்பசொற்ப வசதிகளைக் கண்டதும் வந்தவழிபற்றிய எண்ணங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டனவா?

பணம் எண்ண விழையும் கரங்கள் 'அக்கம் பக்கம் பாராதே' என்று கட்டிப்போட்டுவிட்டனவா?!தபேந்திரன் குடும்பம் சென்று ஒரு மாதமாகிவிட்டது.

ஆனால்
அவர்களுடன் வந்து சேர்ந்த கரப்பான் பூச்சியின் தொல்லை வரவரக்
கூடிக்கொண்டிருந்தது. கூடவே தபேந்திரன் ஆணியடித்தாற்போல் சொல்லிவிட்டுச்
சென்ற தாயகம்பற்றிய வார்த்தைகள் தினமும் செந்தூரனின் மனதைக்
குடைந்துகொண்டிருந்தன.வேலை.... வீடு.... சாப்பாடு.... படுக்கை....

இதுதான்
புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்க்கையா? பணம் ஒன்றே நோக்கமாய், பணம் ஒன்றே
குறிக்கோளாய், அதன் தேக்கமே வாழ்க்கை என்ற போக்கிலே என்ன அர்த்தமிருக்க
முடியும்?!

தனக்குள் அடிக்கடி கேட்டுக்கொண்டான்.ஒருநாள் இரவுவேளையில் எல்லோரும் வெளியே சென்றுவிட்டு வந்தார்கள். சமையலறை 'லைற்'றைப் போட்ட செந்தூரன் திகைத்துவிட்டான்.தரையெங்கும் கும்பம் கும்பமாகக் கால்வைப்பதற்கே இடமின்றி கரப்பான் பூச்சிகள் பட்டாளம் பட்டாளமாக ஊர்ந்துகொண்டிருந்தன.பின்னால் வந்து எட்டிப் பார்த்த மாலதி, 'ஐயோ...' என்று அலறிவிட்டாள்.

வெளிச்சத்தைக் கண்டதுதான் தாமதம். கண்ணிமைக்கும் நேரத்துள் அவை ஓடிச்சென்று மறைந்துவிட்டன.''இந்த
பூச்சியளைத் தந்துபோட்டு அவையள் தங்கடைபாட்டுக்குப் போவிட்டினம்...
வீட்டிலை பூச்சியை வைச்சுக்கொண்டு இஞ்சை ஏன் வந்ததுகளோ தெரியேலை..."

வந்த சென்றவர்களைத் திட்டித்தீர்த்தாள் மாலதி.''சும்மா இருமப்பா... அவை என்ன வேண்டுமெண்டே கொண்டந்தவை..."அன்று இரவு அவர்கள் நித்திரை கொள்ளவில்லை.

அடுப்படியிலிருந்த
தளபாடங்களை நகர்த்தி, அவைகளின் பின்னால் பதுங்கியிருந்த பூச்சிகளை
அடித்து, அசுத்தங்களை அகற்றிச் சுத்தமாக்கி முடியும்போது, இருள் விலகி
விடியலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.இவ்வாறாகப் பல இரவுகள்
அவர்கள் தூங்கவில்லை. பூச்சிகள் அழிவதும், சில தினங்களில் அவை முன்னதிலும்
பார்க்க அதிகரிப்பதும் அவர்களது முக்கிய பிரச்சினையாகப் பூதாகரமானது.

இதற்கு
முடிவுகட்ட நண்பர்களை நாடி ஆலோசனை கேட்கவும் மனம் இடம் தரவில்லை.
ஆளுக்காள் யோசனை சொல்லுவார்கள். ஆனால் அதற்குப் பிறகு 'பூச்சி இருக்கிற
வீடு. தங்களுடனும் பூச்சி வந்துவிடும்' என்ற பயத்தில் வீட்டுக்கு வராமல்
விட்டுவிடுவார்களோ என்ற நினைப்பில் நண்பர்களிடம் விசயத்தைக் கூறத்
தயங்கினான் செந்தூரன்.நித்தியா செய்தமாதிரியே 'ஸ்பிறே' மருந்து
வாங்கி 'ரின்' 'ரின்'னாக அடித்தாயிற்று. பூச்சிகள் செத்து மடிந்தன.
மீண்டும் சில நாட்களில், 'விழ விழ எழுவோம்' என்பதுபோலச் சாரைசாரையாக
ஊர்ந்தன.

இந்தச் சின்னஞ்சிறிய பூச்சிகளுக்குத்தான் எத்தனை பிடிவாதம்?!'ஸ்பிறே'
அடித்தாலென்ன... பசை அப்பிய கடதாசி மட்டைகளைப் பொறியாக வைத்தாலென்ன...
'அழியமாட்டோம், பல்கிப் பெருகுவோம்' என்பதுபோலப் போட்டிபோடுகின்றனவே?!

சாவோம் என்று தெரிந்தும் இனவிருத்திக்காகப் பிடிவாதம் பிடிக்கும் பூச்சிகளுக்கு அறிவில்லையா?

ஏன் இல்லை...?சமையலறைக்குள்
இருளிலே கும்பம் கும்பமாகப் படையெடுத்து ஊரும் பூச்சிகள், 'லைற்'றைப்
போட்டதும் ஒரு நொடிக்குள்ளாகவே இருந்த இடம் தெரியாமல் ஓடி
ஒழிகின்றனவென்றால், அந்தக் குட்டிப் பூச்சிகளுக்குள்ளும் ஒரு குறுக்கு
மூளை இருக்கத்தானே செய்கிறது?!மனிதர்களுக்குத்தான் பகுத்தறிவு
உள்ளதென்றால், ஒளியைக் கண்டதும் விரைந்தோடிச் சென்று ஒழியும்
இதுகளுக்குள்ள அறிவை என்னென்பது... சிலவேளைகளில் அவை தங்களிடையே
பிரிவினைகளையும் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்கத் தவறியதால்தான்
பகுத்தறிவு அற்றவை ஆகின்றனவோ?!''என்னப்பா யோசினை?"

உலுக்கினாள் மாலதி.

''பூச்சி..."

''பூச்சியோ..."

படுக்கையிலிருந்து பதறிக்கொண்டு எழுந்தாள் மாலதி.

''எங்கை..."

''அங்கை..."

குறும்பாகச் சிரித்தான் செந்தூரன்.

''ச்சீய்..."

கன்னம் அந்திச்சிவப்பானது.

''எப்ப பார்த்தாலும் உந்த எண்ணம்தான்..." என்றவாறு கலைந்துபோயிருந்த மேலாடைகளைச் சரிசெய்துகொண்டாள்.''உந்தப் பூச்சியளுக்குத்தான் தன்ரை இனத்தைப் பெருக்கிறதிலை எவ்வளவு அக்கறை..."''அதுக்கு எங்கடை வீடுதானோ கிடைச்சுது..?"''பூமி
முழுக்கத் தனக்குத்தான் சொந்தமெண்டு மனிசரெல்லாம் கட்டிடங்களாய்
கட்டிக்கொண்டு போனால், அதுகள் எங்கை போறது? மனுசரைத் தேடித்தானே வரவேணும்?"''தத்துவமாக்கும்.... சொல்லிப்போட்டன்... இந்தப் பூச்சிச் சனியன் தொலையவேணும். இல்லாட்டி நாங்கள் இந்த வீட்டாலை எழும்பவேணும்..."''மாலதி...
அமெரிக்கா 'வேர்ள் ட்றேட் சென்ரர்'ல 'பிளைற்' இறங்கினமாதிரி... என்ரை
தலையிலை இறக்கப் பார்க்கிறீர்... இப்பதான் இத்தினை வருசமாய்க் கஸ்டப்பட்டு
ஒரு வீடு எடுத்திருக்கிறம்... மறுபடியும் ஒரு வீடு தேடுறதோ? அதுக்கும்
பார்க்க பூச்சிகளோடையே காலந்தள்ளலாம்..."

அலுப்புடன் கொட்டாவிவிட்டான் செந்தூரன்.''உங்களுக்கென்ன
சொல்லுவியள்... நானெல்லோ இதுகளோடை அல்லாடவேண்டிக் கிடக்கு. சாப்பாட்டக்கை
பூச்சியோ... உடுப்புகளுக்கை பூச்சியோ எண்ட அருவருப்போடை எத்தினை
நாளைக்குத்தான் சித்திரவதைப்படுறது? பிள்ளையள்கூட இப்ப முந்தினமாதிரிச்
சந்தோசமாயில்லை..."''இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுறீரப்பா? இந்த
வீட்டுக்கு... அப்பவும் நான் சொல்லச் சொல்ல சீட்டை எடுக்கச் சொல்லி
செலவழிச்சீர்... இப்ப... மறுபடியும் ஒரு வீடு தேடி... இஞ்சை இருக்கிறதுகளை
விட்டுப்போட்டு, எடுக்கிற வீட்டுக்கு மறுபடியும் செலவழிச்சு... அதுக்காக
இன்னுமொரு சீட்டுக் கட்டி இல்லாட்டி வட்டிக்குக் கடன்பட்டு... பேந்து
அதாலை பிரச்சினையளை வளர்க்கச் சொல்லுறீரோ...?"

பெருமூச்செறிந்தவன் தொடர்ந்தான்.''கேவலம்
ஒரு சின்னப் பூச்சி... இதாலை எவளவு பிரச்சினை... இப்பிடித்தான் ஒரு சிறிய
விசயம் பல பிரச்சினையளை ஏற்படுத்திப் பென்னாம் பெரிசாக்கிப் போடும்....
பேந்து வாழ்க்கையே சித்திரவதையாய்... ஏண்டா வாழுவோம் எண்ட நிலைக்குத்
தள்ளிப்போடும். நாங்கள்தான் எல்லாத்திலையும் கவனமாய் இருக்கவேணும்..."''அப்ப இந்தப் பூச்சியள்...?""

இழுத்தாள் மாலதி.''கடைசியாய்
ஒரு வழிதான் இருக்கு... இதை அழிக்கிறதுக்கெண்டே ஒரு கந்தோர் இருக்காம்.
ஆயிரம் மார்க்காவது கொடுக்கவேண்டி வரும். எல்லாரையும் நாலைஞ்சு
மணித்தியாலம் வெளியாலை இருக்கச் சொல்லிப்போட்டு மருந்தடிப்பாங்கள்.
சுவரிலை ஒட்டின பேப்பரளை எல்லாம் உரிச்சு அடிப்பாங்கள். 'லைற்
சுவிற்"சுகளை எல்லாம் கழற்றி ஒரு இடம்விடாமை மருந்தடிப்பாங்கள்...."''ஐயையோ... பேந்து மறுபடி பேப்பர் ஒட்டவேணும்..."

''ம்... புதுவீட்டுக்குப் போறதிலையும் பார்க்க இது எவ்வளவோ மேல்... இதையும் முயற்சித்துப் பார்ப்ம்."

அவன் சொன்னதுபோலவே செய்தான்.அவர்கள்
மருந்தடித்துவிட்டுச் சென்ற சில மணித்தியாலங்களின் பின்னர் வீட்டினுள்ளே
நுழைந்த மாலதி மூடியிருந்த யன்னல் கதவுகளை அகலத் திறந்துவிட்டாள்.

ஒளி வீட்டினுள் பிரகாசமாகப் புகுந்துகொண்டது.ஒரு மாதத்திற்கு மேல் காலம் உருண்டோடிவிட்டது.

அந்த வீட்டில் பூச்சி இருந்ததற்கான சுவடே இல்லை.

வீடே கலகலப்பாகிவிட்டது.

பிள்ளைகள்கூடப் பழையபடி துடியாட்டமாகிவிட்டார்கள்.அன்று அருகில் வசிக்கும் சுதா வந்திருந்தாள். கையில் இரண்டு 'பிளாஸ்ரிப்' பைகள்.

"ஆசியன் கடைக்குப் போனனான். அப்பிடியே வந்தனான்..."வீட்டுப்
பிரச்சினைகள், அக்கம்பக்கத்துப் பிரச்சினைகள் என்று கதைத்து, மாலதி
கொடுத்த தேனீரை அருந்திவிட்டுப் புறப்பட ஆயத்தமானாள் சுதா."படக் கொப்பியள் எடுத்துக்கொண்டு போறியள்போலை..."

அந்தப் 'பிளாஸ்ரிப்' பைகளை நோட்டமிட்ட மாலதி கேட்டாள்.''ஓமோம்.
அதுதானே பொழுதுபோக்கு... அவர் வேலைக்குப் போவிடுவார். பிள்ளையள் படிக்கப்
போவிடுங்கள். எனக்கு வீட்டிலை இந்தப் படங்கள்தானே பொழுதுபோக்கு... ரண்டு
படம் எடுத்தனான்... வேணுமெண்டால் ஒண்டைப் பார்த்துப்போட்டுத் தாவன். நான்
நாளைக்கு வந்து எடுக்கிறன்...."ஒரு தமிழ்ப் பட 'வீடியோ கசற்'றைக் கொடுத்துவிட்டுச் சென்றாள் சுதா.

வீட்டு வேலைகளை அவசரமாக முடித்துவிட்டு, தமிழ்ப்படம் பார்க்கும் ஆவலுடன் அந்த 'வீடியோ கசற்'றை 'கவர்'க்கால் வெளியே உருவினாள் மாலதி.அப்போது அதற்குள்ளிருந்து சின்னஞ்சிறிய கரப்பொத்தான் பூச்சியொன்று எகிறித் தரைவிரிப்பில் விழுந்தது.ஒருகணம் விக்கித்த மாலதி, ''ஐயோ பூச்சி..." என்று கத்துவதற்குள் அது விறுவிறென்று அருகிலிருந்த அலுமாரியின் கீழே புகுந்துகொண்டது.அவள் அதைத் தேடினாள். தேடினாள். தேடிக்கொண்டிருந்தாள்.

பூச்சி... பூச்சி... பூச்சி...இன்னும் சற்றுநேரத்தில் அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாலும் ஆச்சரியமில்லை.(பிரசுரம்: பூவரசு)

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree