ஐயாயிரம் மார்க் அம்மா!

06 ஜனவரி 2005
ஆசிரியர்: 

 

"மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு..."


சௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார்.அந்தக்
காரினுள் எல்லோரது முகத்திலும் ஒருவித இறுக்கம் வியாபித்திருந்தது.
இடையிடையே எழும் கோமதியின் விசும்பல் சத்தத்தைத் தவிர, அங்கே அமைதி
குடிகொண்டிருந்தது. அதை விரட்டும் முயற்சியில் அந்தக் காரின் சிறிய "ரேப்
றெக்கோட"ரில் இருந்து சௌந்தரராஜனின் குரலில் தத்துவப்பாடல்கள்
ஈடுபட்டிருந்தன.வீதியின் இருமருங்காலும் பெரியவர் சிறியவர் என்று
வயது வித்தியாசமில்லாமல் மக்கள் தமது அன்றாட அலுவல்களுக்காக
விரைந்துகொண்டிருந்தார்கள். "ட்ராம்" வண்டிகள் இரும்புப் பாதைகளின் மேலாக
பாம்புகளாக நெளிந்துகொள்ள, அவற்றுடன் போட்டிபோட்டவாறு வாகனங்கள் நெரிசலாக
ஊர்ந்துகொண்டிருந்தன.மஞ்சள் சிவப்பு வெள்ளை வர்ண ஒளியைச்
சிந்தியவாறு வலப்புறத்தே அமைந்துள்ள "மக் டொனால்ட்" உணவகம். அதன்முன்னே
குறுந்தாடி இளைஞன் ஒருவன் கையில் கிற்றாருடன் ஏதோ பாடிக்கொண்டிருந்தான்.
அவனின் முன்னால் சிறிய தொப்பியொன்று. அதனுள் சில சில்லறைக் காசுகள்.சற்றுத்தள்ளி
அலங்கோலமாக வெட்டிய சிகை அலங்காரங்களுடன், உடலில் ஆங்காங்கே துளையிட்டு
உலோச் செதில்களைக் குத்தியவாறு சில இளைஞர்களும் யுவதிகளும் "பியர்"
போத்தல்களுடன் தள்ளாடியவாறு நிற்க, அவர்களைச் சுற்றி சில நாய்கள் கட்டிப்
புரண்டு நுகர்ந்து முகர்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்குத் தாம் ஒன்றும்
சளைத்தவர்களல்ல என்பதுபோல், வஸ் நிலையம் ஒன்றில் ஒரு ஜோடி தம்மை மறந்து
உதடுகளில் சுவை தேடிக்கொண்டிருக்க, இவை எல்லாவற்றையும் தாண்டி காரைச்
செலுத்திக் கொண்டிருந்தான் வரதன்.அருகே ரவீந்திரன்
அமர்ந்திருந்தான். பின் இருக்கையில் ரவீந்திரனின் மனைவி கோமதியும்
அவர்களது ஒரேயொரு மகனான சுதனும் இருந்தார்கள். கோமதியின் விசும்பல்
ஓய்ந்தபாடில்லை. எதுவும் புரியாமல் தாயைப் பார்ப்பதும் வெளியே
நோக்குவதுமாக இருந்தான் சுதன்.சூரியன் தன் ஒளிக்கதிர்களினூடே வெப்பத்தை அதிகரிக்கத் தொடங்கிவிட்டான். பொழுது மதியத்தை நெருங்கிவிட்டது."என்னவாலும்
வாங்கவேணும் எண்டால் இங்கை வாங்கிப் போடுங்கோ... மலிவாய் வாங்கலாம்...
பேந்து "ஓட்டோ வான்"லை வாங்கேலாது... சரியான விலை..."காரின் வேகத்தைக் குறைத்தவாறு கூறினான் வரதன்.அது நகரத்தின் மையப்பகுதி. விதம்விதமான கடைகள் வகைவகையான பொருட்களைக் காட்சிப்படுத்தியவாறு வரிசையாக அமைந்திருந்தன."என்னப்பா... தண்ணி என்னவாலும் வாங்கவேணுமே..."பின்புறம் திரும்பி மனைவியைக் கேட்டான் ரவீந்திரன்.அவள் கண்களைக் கசக்கியவாறு விசும்பிக் கொண்டிருந்தாள்."நான் கேக்கிறனெல்லே.... உப்பிடிச் சிணுங்கினால்போலை எல்லாம் வந்தீடுமே..."எரிச்சலுடன் கேட்டான் ரவீந்திரன்."வெடுக்"கென நிமிர்ந்து சிவந்த விழிகளை உருட்டி அவனை எரித்துவிடுவதைப்போலப் பார்த்தாள் கோமதி."உங்களுக்கென்ன...
ஆருக்கு என்ன நடந்தால் உங்களுக்கென்ன... எதையாவது வாங்கி வாய்க்கை
அடைஞ்சால் போதும்... உங்களுக்கு என்னவாலும் தேவையெண்டால் வாங்கிறதுதானே...""ம்...
சுதன்கூட விடியவெள்ளண்ணவிலை இருந்து ஒண்டும் சாப்பிடேல்லை... எங்கடை
தேவைக்கு கார் கொண்டுவந்த வரதன் கூட தண்ணிவென்னி ஒண்டும் குடிக்கேல்லை...""பரவாயில்லை ரவி..."முந்திக்கொண்டு சொன்னான் வரதன்."உதிலை
ஒரு "பார்க் பிளற்"சிலை நிப்பாட்டு வரதன்... முதல்லை சாப்பிடுவம்...
சும்மா கண்டறியாத சின்னச் சின்னப் பிரச்சினையளுக்கெல்லாம் மண்டையைப்போட்டு
உடைச்சு ஏன் பட்டினி கிடக்கவேணும்?"வரதன் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்."கோமதி... இறங்கும்...""எனக்கொண்டும் வேண்டாம் எண்டெல்லே சொன்னனான்..."சிடுசிடுத்தாள்."எத்தினை நாளைக்கு வேண்டாம்... உப்பிடியே பட்டினி கிடந்தால்போலை எல்லாம் சரி வந்தீடுமோ.."ரவீந்திரனின் குரலில் சினம் எட்டிப்பார்த்து, அவள்மீது பாயத் தயாரானது."என்னை ஏன் கரைச்சல்படுத்திறியள்... உங்களுக்கு இப்பிடி ஒரு பிரச்சினை வந்தால்தான் தெரியும்..""எனக்கோ... இப்பிடியோ.... வந்தால் நடக்கிறது வேறை... எல்லாரையும் வெட்டிப்போட்டுத்தான் மற்றவேலை பார்ப்பன்...""ஓ.... உந்தக் கதைக்கொண்டும் குறைச்சலில்லை... உதை இப்பவே செய்திருக்கலாந்தானே....""நீங்கள்
சகோதரங்கள்... இண்டைக்குப் பிரச்சினைப்படுவியள்... நாளைக்கு ஒண்டாய்
நிப்பியள்... உந்தக் கிருசைகேட்டுக்கை நானும் வரவேணுமோ...?""ரவி...
மெனக்கெடாமை வாங்கோ... கோப்பி குடிக்கிறதெண்டால் குடிச்சுப்போட்டு... கோலா
வாங்கிறதெண்டால் வாங்கிக்கொண்டு வெளிக்கிடுவம்.... முந்நூறு கிலோமீற்றர்
ஓட வேணுமெல்லே.... நேரவழிக்கு வீட்டைபோனால்தான் என்ரை அலுவலள்
பார்க்கலாம்... இனிப் போய்த்தான் வேலை உடுப்புகள் தோய்க்கவேணும். நாளைக்கு
விடிய வெள்ளண்ண வேலை...""ம்... தனிய இருந்தாலும் பிரச்சினை...
குடும்பமாய் வாழ்ந்தாலும் இப்பிடிப் பிரச்சினையள்... கோமதி! நீ வராட்டி
காருக்கையே இரு... நான் உனக்கு கோலா வாங்கிக்கொண்டு வாறன்..."சுதனும் அவர்களுடன் போகப்போவதாக அடம்பிடித்து காரில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டான்.கோமதி காரினுள் தனித்திருந்தாள்.பாமினி
இவ்வளவு கல் நெஞ்சுக்காரியாக நடந்துகொள்வாள் எனக் கொஞ்சங்கூட
எதிர்பார்க்கவில்லை. அவளால் எவ்வாறு இப்படி நடந்துகொள்ள முடிந்தது? மனதை
எவ்வாறு கல்லாக்கிக் கொண்டாள்? பணம் வந்தால் பத்தும் பறந்துவிடும்
என்பதுபோல், அந்தப் பத்துக்குள் பாசமும் ஒன்றாகிப் பறந்துவிட்டதா?"பாமினி... இண்டைக்கு நான் அழுறமாதிரி நீயும் ஒருநாளைக்கு அழுதுகொண்டு திரியுற காலம் வராமலா போய்விடும்?"தனக்குள் தங்கை பாமினியைச் சபித்துக் கொண்டாள் கோமதி."முந்நூறு கிலோமீற்றர் தூரம் கடந்து வந்தும் அம்மாவைப் பார்க்க முடியவில்லை..."பத்து
வருடங்களுக்கும் மேலாக நாட்டைவிட்டு வந்து தாயைப் பிரிந்திருந்த துயர்
காணாதென்று, அம்மா ஜேர்மனிக்கு வந்த பின்பும் தொடரும் பிரிவுத்துயர்
பொறுக்காமல் விம்மினாள் கோமதி."அம்மா... உன்னை எப்ப பார்ப்பன்...
என்னை விட்டு நீ... உன்னைப் பிரிந்து நான்... தனித்தனித் தீவுகளாய் இவளவு
காலமாய் வாழ்ந்த வாழ்க்கையை... கஸ்டங்களை... கவலையளை... அனுபவிச்சதுகளை
எல்லாம் கதைகதையாய் சொல்லவேணும்... அந்த கதையளின்ரை அளவளாவலை உன்ரை
மடியிலை படுத்திருந்து அனுபவிக்கவேணும் அம்மா... தோல் சுருங்கிப் போன
கையளாலை என்னை தலையை நீ தடவுற சுகானுபவத்திலை நான் என்னை மறந்து உன்ரை
மடியிலை பச்சைப் பிள்ளையாய் தூங்கவேணும் அம்மா... பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்து பாலோடு பாசம் தந்து தாலாட்டிச் சீராட்டி என்னை ஆளாக்கின என்
செல்ல அம்மாவின் கைகளுக்குள்ளை எப்பதான் முகம்புதைத்துக் கிடக்கப்
போகிறேன்..."­தனிமை பலவித எண்ணங்களைத் தோற்றுவித்து துயரை அதிகமாக்கியது.கோமதி
ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. அவளது சகோதரன் குமாரும்
தங்கை பாமினியும் ஜேர்மனியில்தான் வெவ்வேறு நகரங்களில் குடும்பமாக
வாழ்கிறார்கள்.பிள்ளைகளை, "தாயக அவலங்களுக்கால் ஓடித் தப்புங்கள்"
என்று ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பிவிட்டு, பிள்ளைகளைப் பெற்றும் பெறாத
மலடர்களாய் தன்னந்தனியாக கொழும்பு "லொட்ஜ்" ஒன்றில் வாழ்ந்தார்கள்
கோமதியின் பெற்றோர்.


 
அம்பலவாணர்... அவர்தான் அவர்களின் அப்பா. வம்சம் வளமாக வாழவென ஓடியோடித்
தேடிக் குவித்த சொத்துக்கள் சுகங்கள்... அதற்கும் மேலாகப் பிள்ளைச்
செல்வங்களின் அரவணைப்பு... அத்தனையும் இரத்தவெறி பிடித்தலையும் இனவெறியுள்
இழப்புக்களாகி, அதுவே ஈழத் தமிழனின் கையறுநிலை என்றான துயரில்
நோயாளியாகிவிட்டார்.


அவருக்கு நல்லம்மா... நல்லம்மாவுக்கு
அவர்... இப்படியே எத்தனை நாளைக்குத்தான் அந்த அறையில் முதுமை தரும்
தள்ளாமையுடன் போட்டிபோட்டு வாழமுடியும்.நல்லம்மாவை நினைக்கத்தான் கவலையாக இருந்தது.கூப்பிட்ட
குரலுக்கெல்லாம் ஓடோடி வந்து சின்னச் சின்னத் தேவைகளையெல்லாம் அக்கறையாக
நிறைவேற்றியவளாச்சே... அவரே உலகம் என்ற எண்ணத்துடன் வெளியுலகம் தெரியாமல்
எல்லாவற்றுக்கும் அவர் இருக்கிறார் என்று அவரையே சார்ந்திருந்தவளாச்சே...தற்செயலாய் கண்ணை மூடினால்... தனியாக இவள் எப்படி வாழப்போகிறாள்... அதுவும் இந்தக் கொழும்பு நகரத்தில்...வாழ்க்கையில் முதல்தடவையாகப் பெரியதொரு பயம் அம்பலவாணரைப் கவ்விக்கொண்டது.பிள்ளைகள் மூவருக்கும் கடிதம் எழுதினார்."என்
காலம் முடிகிறதை என்னால் உணர முடிகிறது... உங்கள் அம்மாதான் பாவம்...
என்னையும் உங்களையும் தவிர அவளுக்கு வேறு எவரையுமே தெரியாது...
எனக்காகவும் உங்களுக்காகவும் பணிவிடை செய்து தன்னைத் தேய்த்ததே வாழ்க்கை
என்று நினைப்பவள் அவள்... இப்பகூட எனக்கு முன்னால் தான் சந்தோசமாக
இருப்பதாகவே காட்டிக் கொள்கிறாள்... அவளுக்கும் பல கவலைகள் இருக்கலாம்...
ஆனால் அதை எல்லாம் வெளிக்காட்டினால் நான் கவலைப்பட்டுவிடுவேனோ என்ற பெரிய
மனம் அவளுக்கு. அந்தப் பெரிய மனது கஸ்டப்பட்டால் உங்களால் சந்தோசமாக வாழ
இயலாது... அவளை எப்படியாவது உங்களோடு கூப்பிட்டு வைத்திருக்கப்
பாருங்கோ..."கடிதம் எழுதிய சில தினங்களுக்குள்ளேயே, முதுமையில்
தனிமையின் கொடூரத்தை அனுபவித்தது போதும் என்பதுபோல் கண்களை மூடிவிட்டார்
அம்பலவாணர்.பாவம் நல்லம்மா.... கணவன் பிள்ளைகளே உலகமென்று
யாழ்ப்பாணக் கிராமமொன்றில் கட்டுப்பெட்டியாக வாழ்ந்தவள். பின் சொற்ப
காலமாகக் கொழும்பில் "லொட்ஜ்" ஒன்றில் வாழ நிர்ப்பந்தமானபோது, அந்த
"லொட்ஜ்"ஜின் அறையே தஞ்சமென நாட்களைக் கழித்தவள். ஊருலகம் தெரியாதவள்.
வெளியுலகம் புரியாதவள். நாட்டு நடப்புகளுக்கு ஏற்ப தன்னைப்
பழக்கப்படுத்திக் கொள்ள முடியாதவள்.இந்த நிலையில் கணவனை இழந்து
தன்னந்தனியாக, அதுவும் கொழும்பில் எவ்வாறு நல்லம்மாவால் வாழ இயலும் என்ற
கவலை பிள்ளைகளைத் தொற்றிக்கொள்ள, தாயாரை ஜேர்மனிக்குக் கூப்பிடும்
முயற்சியில் இறங்கினார்கள்."எப்படிக் கூப்பிடுவது... எந்த "ஏஜென்சி"யைத் தொடர்புகொள்வது?"ஆலோசித்தார்கள்."எனக்கு
உதெல்லாம் தெரியாது... உங்களுக்கு ஆராலும் நல்ல "ஏஜென்சி"யைத்
தெரியுமெண்டால் கூப்பிடுங்கோ... வாற செலவிலை மூண்டிலொரு பங்கை நான்
தாறன்..."குமார் திட்டவட்டமாகக் கூறினான்."கோமதி.. நீ என்ன சொல்லுறாய்..."பாமினி கேட்டாள்."தருவன்தானே...""அதென்ன தருவன்தானே... தாறன் எண்டு சொல்லன்..."பாமினியின்
கணவன் ஆனந்தனின் மைத்துனன் ஒருவன் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் தரகர்
வேலைதான் செய்கிறான். அதனால் தாயைக் கூப்பிடும் பொறுப்பை பாமினி முன்வந்து
ஏற்றுக் கொண்டாள்."ஏன் உப்பிடி நம்பிக்கை இல்லாமைக் கேக்கிறாய்?"கோபத்துடன் கேட்டாள் கோமதி."நம்பிக்கையோ... ஆருக்கு ஆரிலை... பழசுகளை இப்ப கிளறச் சொல்லுறியோ..."தொலைபேசி ஊடாகப் பாமினியின் வார்த்தைகள் கோமதியை ஈட்டியாகத் தைத்தன."என்ரை
கலியாணத்துக்கு சீதனமாய் நீ தாறன் எண்டு சொன்ன காசே இன்னும் வரேல்லை...
தாறன் தாறன் எண்டாய்... பேந்து ரண்டு பிள்ளை பிறந்தாச்சு... இனி என்ன
சீதனம் எண்டு கைகழுவி விட்டுட்டாய்... இதுக்குப் பிறகும் நம்பச்
சொல்லுறியோ? தாயும் பிள்ளையளானாலும் வாயும் வயிறும் வேறை... இது என்ரை
அனுபவம்..."ஈட்டி இன்னும் ஆழமாகப் புகுந்துகொண்டது."ஓமடி...
ஓ... கண்டறியாத அனுபவம்... நீ அம்மாவைக் கூப்பிடுற அலுவலைப் பார்...
செலவைச் சொல்லு... என்ரை பங்கைத் தாறன்..." என்று கூறிவிட்டுத் தொலைபேசியை
அடித்து வைத்தாள் கோமதி.முகத்திலடித்தால்போல் வந்து விழுந்த வார்த்தைகளால் ஏற்பட்ட படபடப்பு அடங்க வெகுநேரமானது."அம்மா வரட்டும்... பிறகு செய்யிறன் வேலை.."மனதிற்குள் கறுவிக்கொண்டாள்.நாட்கள்
நகர்ந்தன. தாயாரை ஜேர்மனிக்குக் கூப்பிடும் அலுவல்கள் துரித கதியில்
நிகழ்ந்தன. அவ்வப்போது குமார் மூலமாக விசயங்களை அறிந்துகொண்டாள் கோமதி.ஒருநாள் குமார்தான் தொலைபேசியில் பரபரத்தான்."அம்மா மலேசியாவிலை வந்து நிக்கிறா... இன்னும் நாலைஞ்சு நாளிலை "பிராங்பேர்ட்"டுக்கு வந்தீடுவா...""அம்மா வரப்போறா..."எண்ணம் இனித்தது.வருடக்கணக்கில் பாராத முகத்தைத் தரிக்கும் காலம் விரைந்து வருகிறது.தொட்டிலின் சுகந்தமாய் தேனாகக் காதுகளில் ரீங்காரமிடும் பாசமெனும் அமுதநதி சுரக்கும் குரலைக் கேட்கும் நாள் நெருங்குகிறது.நினைவு சங்கீதமாய் சந்தோசத்தை அள்ளிச் சொரிந்தது."எப்ப வந்தவ...""மலேசியாவுக்கோ... வந்து ஒரு கிழமையெண்டு பாமினிதான் சொன்னவள்...""ம்...
கூப்பிடுற காசிலை பங்குவேணும்... உதுகளைமட்டும் எனக்குச் சொல்லக்
கூடாதாக்கும். அவளுக்கு அவ்வளவு கொழுப்பு... களவாய் வேலைசெய்து
நாலுபேரிட்டை வட்டிக்குக் கொடுத்து நாலு காசு சேர்த்து வைச்சிருக்கிற
கொழுப்பு..."சினந்தாள் கோமதி."ஏன் கோமதி உப்பிடி கீரியும்
பாம்புமாய் இருக்கிறியளோ தெரியேலை.... ஒவ்வொரு சகோதரங்களைப் பாருங்கோ...
என்னமாதிரி ஒற்றுமையாய் வாழுதுகள்... உங்களுக்குத்தான் கண்டநிண்ட சின்ன
விசயங்களுக்கெல்லாம் தேவையில்லாத வாக்குவாதங்களும் சண்டையும்..."ஆதங்கத்துடன் கூறினான் குமார்."ஆர் சண்டை பிடிக்கிறது... நானோ... அவளோ? அதுசரி, மலேசியா ரெலிபோன் நம்பர் ஏதாலும் தந்தவளே...""அங்கையெல்லாம் கதைக்க முடியாதாம்... இன்னும் என்ன... நாலைஞ்சு நாள்தானே... அம்மாவோடை நேரிலை கதைப்பம்...""அம்மா மலேசியாவுக்கு வந்ததைச் சொல்லாதவள், இனி அம்மா ஜேர்மனிக்கு வாறதைமட்டும் சொல்லுவளோ...""நான்
உனக்கு சொல்லுவன்தானே... நீயும் அவளுக்கு சின்னப் பிழையொண்டு
விட்டுட்டாய்... தாறன் எண்டு சொன்ன சீதனக் காசை குடுத்திருந்தியெண்டால்
அவளேன் உன்னோடை மல்லுக்கு நிக்கப் போறாள்...""நான் ஏன்
குடுக்கேல்லை தெரியுமே... என்ரை மனுசன் எங்கடை குடும்பத்திலை மூத்த
மருமகன் எண்டு அவளின்ரை கலியாண வீட்டிலை என்ன மரியாதை குடுத்தவை? அவள்
தன்ரை புருசன்ரை ஆக்களோடை சேர்ந்துகொண்டு இந்தாளை ஏன் நாயெண்டுகூட
கணக்கெடுக்கேலை... கலியாண வீட்டிலை இந்தாளை சபை சந்திக்குக் கூப்பிடாமை
அவமானப்படுத்திப்போட்டு, சீதனக் காசு வேணுமாமோ?" என்று பொரிந்துதள்ளினாள்
கோமதி.அற்ப விசயங்கள் சண்டைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முளையாகி விசுவரூபம் எடுப்பது தமிழ் சமுதாயத்திலே மலிந்து காணப்படும் நிகழ்வு.ஒருவர் வைத்தியசாலையில் சுகயீனமாக இருந்தால் அறிவிக்கவில்லை என்ற பிரச்சினை.ஒரு திருமணம் பொருந்தி வந்தால் தங்களின் சம்மதம் கேட்கவில்லை என்ற பிரச்சினை.வெளிநாட்டுக்குச் சென்றால் தங்களுக்கு எதுவும் வாங்கி வரவில்லை என்ற பிரச்சினை.இவ்வாறு
நின்றால் பிரச்சினை, இருந்தால் பிரச்சினை என்று உறவுகளுக்குள் முளைவிட்டு
விசுவரூபமெடுக்கும் பிரச்சினைகளுக்குத்தான் அளவேது?!சிறுசிறு
சம்பவங்கள்கூட பிரச்சினைகளாகி, பிரிவினைகளாகி, உறவுக்குள் எல்லை வகுத்து
உதிரிகளாக விலத்தி நிற்கும்போக்குகளுக்கு "தாங்கள் உறவுகளுக்குள்
உதவாதவர்களாகிப் போய்விடுவோமோ?" என்ற மனப்பயம் காரணமாக இருக்கலாம். அல்லது
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தின் பூச்சியத்தன்மையாகவும் இருக்கலாம்.தாய் நல்லம்மா ஜேர்மனிக்கு வருவதற்கு முதல்நாள் இரவு...குமாருடன் தொடர்புகொண்டாள் கோமதி."சொல்லிப்போட்டன்...
நீதான் ஆம்பிளைப்பிள்ளை... அம்மா உன்னோடைதான் இருக்கவேணும்... உன்னாலை
ஏலாதெண்டால் என்னோடைதான் இருக்கவேணும்... நான்தான் மூத்த பொம்பிளைப்
பிள்ளை. அதோடை என்ரை மனுசன் சொந்த மருமகன். பாமினீன்ரை புருசன்காரன்
ஆனந்தன் பிறத்தியான்... அவையோடை எல்லாம் அம்மாவை விடக்குடாது..."கண்டிப்பாகக் கூறினாள் கோமதி."பிறத்தியானோ...
ஆனந்தனும் எங்கடை குடும்பத்திலை ஒரு ஆள்தான். அந்தாள்தான் இப்ப ஓடியோடி
அம்மாவின்ரை அலுவல் பார்க்கிறார். அதுசரி... அம்மா "பிராங்பேர்ட்"டுக்கு
வந்து... அரசியல் தஞ்சம் கேட்டு... அவங்கள் எந்தக் "காம்ப்"பிலை
விடுறாங்களோ... அதுக்குப் பிறகு யோசிப்பம்" என்றான் குமார்.கோமதி நினைத்தது ஒன்று. ஆனால் நடந்தது வேறு.பாமினி ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகவே காரியத்தைச் சாதித்துவிட்டாள்.யாரையோ பிடித்து, உதவிபெற்று தாயாரை தன்னுடனேயே வைத்துக்கொண்டாள்.தாயார் ஜேர்மனிக்கு வந்தும் அவரை பாமினியின் வீட்டில்போய் சந்திக்க கோமதியின் வறட்டுக் கௌரவம் தடைபோட்டது.எனினும், பாசத்தின் முன்னே மான அவமானங்களைப் பார்க்க முடியுமா, என்ன?!தொலைபேசி இலக்கங்களைச் சுழற்றினாள். பாமினிதான் எடுத்தாள்."அம்மாவைக் கதைக்கச் சொல்லு...""அம்மா வந்து ரண்டு மாதமாகப் போகுது... இப்பதான் கதைக்க வேணுமெண்ட யோசினை வந்ததாக்கும்..."இடக்காகக் கேட்டாள் பாமினி."உன்னோடை எனக்குக் கதையில்லை. போனை அம்மாட்டைக் குடு.""முதலிலை அம்மாவைக் கூப்பிட்ட காசை வைச்சுப்போட்டு, அம்மாவோடை கதை...""அம்மா
கொழும்பிலை இருந்து வெளிக்கிடேக்கை எனக்கு சொல்லேலை... மலேசியாவிலை வந்து
நிக்கேக்கை சொல்லேலை... "பிராங்பேர்ட்"டிலை வந்து இறங்கேக்கையும்
சொல்லேலை... இப்ப காசுமட்டும் தேவையோ...?""கோமதி... உன்ரை குணம்
எனக்குத் தெரியும்... காசு எண்டவுடனை உப்பிடியெல்லாம் கதைப்பியெண்டு
எனக்கு தெரியும்... அம்மாவிலை உனக்கு அக்கறை எண்டால் நீயெல்லோ ரெலிபோன்
அடிச்சுக் கேட்டிருக்கவேணும்... முதலிலை அம்மாவைக் கூப்பிட்ட செலவிலை
உன்ரை பங்கு ஐயாயிரம் மார்க்கையும் வைச்சுப்போட்டு அம்மாவோடை கதை...""காசென்னடி
பெரிய காசு? கழுதை தின்னாத காசு... ஆனால் கேக்கிறமாதிரி தாறத்துக்கு
நானில்லை... முதலிலை அம்மாவோடை கதைக்கவேணும்... அதுக்குப் பிறகுதான் உன்ரை
காசைத் தருவன்...""அப்ப நீ அம்மாவோடை கதைச்சமாதிரித்தான்... இப்ப
அம்மா என்ரை பொறுப்பிலைதான் இருக்கிறா... நான் சம்மதிச்சால்தான் நீ அவவோடை
கதைக்கலாம்... அவவைப் பார்க்கலாம்..."பாமினி தொடர்பைத் துண்டித்துவிட்டாள்.காசை முதலில் கொடுப்பதா? அம்மாவை முதலில் பார்ப்பதா?பிடிவாதங்களின் முன்னால் தாய்ப்பாசம் தூரநின்று தவித்தது.சகோதரிகளின் "நானா, நீயா" போட்டியின் அடித்தளமாக தாய்ப்பாசம் பணயமாகியது."அம்மாவின்ரை சோசல்காசையும் அள்ளி எடுத்துக்கொண்டு ஐயாயிரம் மார்க் கேக்கிறாள்."பணம் பல வழிகளில் கணக்கிட வைத்தது."என்னவாலும் பட்டுத் தெளியுங்கள்" என்பதுபோல குமார் விலகிநின்றான்."எதுக்கும் நேரிலைபோய் கதையுங்கோவன். ரெலிபோனிலை கதைச்சு ஏன் பிரச்சினைப்படூறியள்...?"அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அதுவும் சரியாகத்தான் தென்பட்டது.எனினும்,
"அடிபணிந்து போகக்கூடாது. நாலுபேர் மதிக்கமாட்டினம்" என்ற எண்ணம்மட்டும்
விடாப்பிடியாக அங்கே முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது.ஒருநாள்.... வரதனையும் கூட்டிக்கொண்டு கோமதியும் ரவியும் சுதனுமாக பாமினியின் வீட்டு "கோலிங் பெல்"லை அழுத்தினார்கள்."வாங்கோ" என்ற அழைப்பில்லை.எவரோ அன்னியரைப் பார்ப்பதுபோன்ற பார்வை."அம்மா எங்கை..." என்று கோபத்துடன் கேட்டாள் கோமதி."காசை எண்ணி வைச்சுப்போட்டு அம்மா எங்கை எண்டு கேள்...""என்ரை அம்மாவைப் பார்க்கிறதுக்கு உனக்கென்னடி காசு..."சீறியவாறு உள்ளே புக முயன்றவளைத் தள்ளி நிறுத்தினாள் பாமினி."உன்ரை
"பாவ்லா" ஒண்டும் என்னட்டை வாயாது கோமதி... நான் சொன்னால்தான் அம்மா உன்னை
வந்து பார்ப்பா... இப்ப அவ என்ரை பொறுப்பிலை... வீண் பிரச்சினை கிளப்பினி
எண்டால் பேந்து பொலிஸ்தான் வரும்... மரியாதையாய் காசைத் தந்துபோட்டு
அம்மாவைப் பார்..."பாமினி தனது பிடியைத் தளர்த்தாமல் உறுதியாக நின்றாள்."எனக்குப் பிறகு பிறந்தவளுக்கே இவ்வளவு பிடிவாதமென்றால், எனக்கு எவ்வளவு இருக்கும்?"முந்நூறு கிலோமீற்றர் வந்தும் அம்மாவைப் பார்க்க முடியவில்லை.வீண் பிடிவாதமும் விட்டுக்கொடுப்பின்மையும் அம்மாவின் பாசத்தை ஓடோட விரட்டிவிட்டன.


 
வரதன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.


தற்போதும் கோமதியின் விசும்பல் ஓய்ந்தவாறில்லை.சுதன் மலங்க மலங்க தாயையே பார்த்துக்கொண்டிருந்தான்.முன்னால் தொங்கிக்கொண்டிருந்த அந்தச் சிறிய கண்ணாடியினூடே சுதனைப் பார்த்தான் வரதன்.எங்கோ படித்த கதையொன்று ஞாபகத்துக்கு வந்தது.ஒருவன்
தனது தந்தைக்கு பழைய கோப்பையொன்றில் தினமும் உணவளிப்பானாம். இதைக் கவனித்த
அவனது மகன் ஒருநாள் அந்தக் கோப்பையை எடுத்து ஒளித்து வைத்தானாம். "ஏன்"
என்று கேட்டதற்கு, "அப்பா, நான் பெரியவனானதும் உனக்கு சாப்பாடு தருவதற்காக
இந்தக் கோப்பையை எடுத்து ஒளித்தேன்" என்றானாம்.அதைப்போல....
இவர்களின் பிடிவாதங்களையும் பேரங்களையும் கவனிக்கும் சுதனும்
எதிர்காலத்தில் இவர்களைக் குறித்து எத்தகைய பேரத்தில் ஈடுபடப் போகிறானோ?இன்றைய அம்மாவுக்கு ஐயாயிரம் மார்க் இடையில் புகுந்து கொண்டதுபோல, இவர்களது விசயத்தில் என்ன வந்து புகுந்து கொள்ளப்போகிறதோ?அப்போது,
இன்று அந்தத் தாய் பிள்ளைகளின் சச்சரவுகளுக்குள் மனச்சுமைகளுடன்
அவதிப்படுவதைப்போல் இவர்களும் காலங்கடந்து ஞானம் பெறுவார்களோ?!கார் கோமதியின் வீட்டு வாசலில் வந்து நின்றது.அவர்கள் இறங்கிவிட்டார்கள்.காரின் பாரம் குறைந்துவிட்டது.ஆனால்...வரதனின் மனதில் முளைவிடும் எண்ணங்கள் புதுப்புதுப் பாரங்களைக் கூட்டிக்கொண்டிருந்தது.அந்த ஐயாயிரம் மார்க் அம்மா பரிதாபமாக அவனது எண்ணத்தில் அடிக்கடி வந்துகொண்டிருந்தார். (ஜேர்மனி, ஹாட்ஸ் தமிழர் ஒன்றிய 7வது ஆண்டு நிறைவுவிழா சிறுகதைப் போட்டியில் முதலாவது பரிசு பெற்றது.)பிரசுரம்: ஹாட்ஸ் தமிழர் ஒன்றிய 7வது ஆண்டு நிறைவுவிழா மலர்,"ரீபிஸி" வெளியீடான வான்முரசு.

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree