வைரமும் கல்தான்

13 நவம்பர் 2007
ஆசிரியர்: 

 

வ்வொரு நான்கு நிமிட இடைவெளிக்குள்ளும் ஒரு தொடர்வண்டி வந்து போய்க் கொண்டே இருந்தது. புற்றிலிருந்து வெளிவந்து நடமாடும் எறும்புகள்போல மக்கள் நாலாபக்கமும் நிறைந்து வழிந்து, வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ஜெர்மனி நாட்டின் பணக்கார மாநிலமான முயுன்ஷன் (Muenchen) நகரின் பிரதான தொடர்வண்டி நிலையம் அது. நாட்டின் எல்லாத் திசைகளுக்கும் ஐரோப்பாவின் வேறு பல பாகங்களுக்கும் தொடர்வண்டிகள் புறப்படவிருக்கும் அறிவிப்புக்கள் மாறி மாறி வந்து வந்து காதுகளை அடைத்துக் கொண்டிருந்தன.

மதனகுமார் வேகமாக அந்தக் கூட்டத்தை ஊடறுத்துக் கொண்டு நிலவடித் தொடர்வண்டிகள் வருமிடத்தின் குறிப்பிட்ட இலக்க வண்டிக்கான இடத்தை நோக்கிப் போய்க் கொண்டு இருந்தான்.

அங்கே தொங்கிக் கொண்டிருந்த அறிவிப்புப் பலகையில் கணனி முறையில் பொருத்தப்பட்டிருந்த பட ஒளியில் அடிக்கடி இடப்பெயர்கள் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.

மதனகுமார் தனது கைக்கடிகாரத்தை ஒரு தடவை பார்த்தான். மணி ஆறரையடித்து ஐந்து நிமிடங்கள். சரியாக இன்னும் ஏழு நிமிடங்களே இருக்கின்றன. அதில்தான்...

அவனுக்குள் ஒரு அதிர்வலை. உணர்ச்சி வலை.

தன்னுள்ளுணர்வைக் கட்டப்படுத்திக் கொள்ள முடியாமல் சிறிது அசைந்து கொண்டான்.

அவனது வண்டி வந்து போய் விட்டது. இன்னொன்று வர இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. அவனது வண்டியை வலிந்து போக விட்டுவிட்டு, வேறொரு எதிர்வண்டியின் வரவுக்காகக் கீழே வந்து அவன் காத்துக் கொண்டிருந்தான்.

ஒரு நிமிடத்துக்கு அறுபது வினாடிகள் என்றால் அவன் எழுபது தடவைகள் திரும்பத் திரும்ப மணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். எதற்காக?

தனக்கான அடுத்த வண்டிக்காகவா? அல்ல அல்ல, வேறொரு வண்டியுடன் காண விரும்பிய இன்னொன்றின் வரவையே அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்காகத்தான் வேண்டுமென்றே தனது வண்டியைத் தவற விட்டிருந்தானவன்.

சரியாக அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வண்டி வர இரு நிமிடங்கள் இருப்பதைக் கைக்கடிகாரம் உணர்த்தியபோது, அவனுக்குள் ஏற்பட்ட ஆவலும் உணர்ச்சியும். அப்பப்பா!

இலேசான படபப்புடன் அவனது உடல் சற்று ஆடிக் கொண்டது. அந்த வேளையில்தான்...

மெல்லிய இசையொலியுடன் அவனது கைத் தொலைபேசி அவனது கவனத்தைக் கலைத்து உலுக்கியது.

'சனியன் மாதிரி யார் இந்த நேரத்தில்?'

கடும் எரிச்சலுடன் ஜெர்மனில் கத்தினான் அவன்.

'யா?'

ஜேர்மனில் அவன் கத்த, தமிழில் மறுபக்கமிருந்து குரல் வந்தது.

"மகன்.. எங்கே ராசா நிற்கிறாய்? ஏன் இவ்வளவு லேட்?"

எதிர்பார்த்த அதிர்ச்சிதான். இன்றைக்கு வீட்டுக்குப் பிந்திப் போனால் என்ன சொல்வது என்று அவன் ஏற்கனவே ஆயத்தமாகவே இருந்தான்.

"அம்மா இன்றைக்கு ரெண்டுபேர் திடீர் லீவிலே போய் விட்டார்கள். அதனால் நான் அவர்களின் முக்கியமான சில வேலைகளையும் முடித்து வைத்து விட்டுத்தான் போக வேண்டும் என்றிருக்கிறார்கள். அதனால் இன்னும் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரத்துக்கு இருந்து முடித்து விட்டுத்தான் வருவேன். நீங்கள் சாப்பிட்டு விடுங்கள்."

"நான் ஆபீசுக்குப் போனெடுத்தேனே! மணியடித்துக் கொண்டே இருந்தது. யாருமே எடுக்கவில்லையே!"

இந்த அம்மா என்றைக்குப் போலீஸ்காரியானார்கள்? ஆண்டவனே!

"என்னம்மா இது? நான் பாத்ரூமுக்கு போயிருந்தபோது எடுத்தால் போன் அங்கே ஓடி வந்தா சொல்லும்?"

அப்போது...

இவனது எரிச்சலுக்கான காரணம் முன்னாலே வேகமாக வந்து கொண்டிருந்தது.

"அம்மா இப்போ வையுங்கள். இன்னொரு போன் வருகிறது. நானின்னும் கொஞ்சத்திலே எடுக்கிறேன்."

லைன் கட்.

தொடர்வண்டியின் ஓட்டுனர் குரல் அதற்குள் ஒலித்தது.

"பிற்ற சுருக் ப்ளைபன்.."

அவன் பாய்ந்தோடி வண்டிக்குள் நுழையவும் கதவுகள் மூடவும் எல்லாம் ஒரே வினாடியில் நடந்து முடிந்தன. அவன் ஏறிய வாசல் ஏறிய பெட்டியின் இரண்டாவது வாசல்.

அதற்குள் முதல் வாசலால் அவள் நுழைந்து விட்டிருந்தாள்.

வெண்ணெய் திரள்கையில் தாழியை உடைக்கப் போன அம்மா மேல் பயங்கர கோபம் மதனகுமாருக்கு.

ஆனால் திட்ட மட்டும் மனம் இடம் கொடுக்கவில்லை. தான் குற்றப் பலகையில் நிற்பதற்கு அம்மாவை எப்படிப் பழி சொல்வது?

பயங்கர கூட்டம்.

நெருக்கியடித்துக் கொண்டிருந்த சனங்களுக்கிடையில் தலையை அவ்வப்போது ஆமை தோட்டுக்குள்ளிருந்து நீட்டுவதுபோல அவனும் நீட்டி நீட்டி அவளிருந்த பக்கத்தைத் தேடினான்.

இருந்தாள் அவள். ஆனால் தூரத்தில். அவள் இவனைக் கவனிக்கவில்லை என்பது புரிந்தது. கண்டிருந்தால் நிச்சயம் நின்றிருப்பாள். தவறு நமதுதான்.

பல இடைத் தலைகள் அவளை மறைப்பது பெரும் எரிச்சலை மூட்டிக் கொண்டிருந்தது அவனுக்கு.

மதனகுமாரின் மனம் தனக்குள் எதையோ சொல்லித் தேற்றிக் கொண்டது.

ஒவ்வொரு தரிப்பிடத்திலும் அவன் முதலில் இறங்கிக் கொள்வதும் தன் பக்க மக்கள் பகுதி இறங்கி முடிக்குமுன் அடுத்த பகுதியில் இறங்குபவர்களை அவதானிப்பதுமாக இருந்தான்.

நன்கு கூட்டம் குறைந்தால் மெதுவாக அந்தப் பக்கமாக நகர்ந்து கொள்ள அவன் நினைத்திருந்தான். கூட்டம் குறைந்தால்தானே!

வண்டி போய்க் கொண்டிருக்கையில் அவன் மனம் அசைபோட்டது.

நேற்று முன்தினம்தான் அது நடந்தது.

மதன் வேலைக்குச் செல்வதற்காக வழமைபோல பயணித்துக் கொண்டு இருக்கையில் அவனுக்கு இரு இருக்கைகளுக்கு முன்பாக அவள் திடீரென வந்து அமாந்தாள்.

வழமையான ஜெர்மனிய பெண்களை விடவும் அழகு இவளிடம் ஏன் இப்படி கொழித்திருக்கின்றது என்று ஒரு சந்தேகம் அவனுக்கு. ஆனாலும் ஏனோ நிமிர்ந்து, கூர்ந்து அவளைப் பார்க்கத் திராணி இருக்கவில்லை அவனுக்கு.

ஆசியனான தன்னை அவள் திடீரென 'என்ன அப்படிப் பார்க்கிறாய்?' என்று திட்டிவிட்டால்?

நாகரீகம் தெரியாதவனாக நாம் விழிக்க, எவனாவது ஒருவன் அவளுக்காக வக்காலத்து வாங்க, அதுவே வம்பாகி விட்டால்?

தாய்மண் மனபலவீனம் அவனை அடக்கி விட்டது. ஆனால் கண்கள் அவளை நேராகப் பார்க்காமல் சன்னல் கண்ணாடியில் அடிக்கடி பார்த்துப் பார்த்து இரசித்துக் கொண்டே இருந்தது.

இன்னும் அரை மணிநேரத்தில் தனது இடம் வரும். அதுவரைக்கும் அவள் இருக்க மாட்டாளா என்று மனம் ஏங்க அவன் தன்னையும் அறியாமலே தவிக்கத் தொடங்கினான்.

திடீரென்று ஓர் அதிர்ச்சி அனுபவம்.

சன்னல் கண்ணாடியில் அவள் தன்னையே பாhத்துக் கொண்டு இருப்பது கண்டு மதனகுமார் தடுமாறிப் போனான்.

தன்னையும் அறியாமலே அவள் பக்கம் அவன் தனது பார்வையைச் செலுத்த, முதல் தடவையாக அவனுக்குள் எதுவோ 'சர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று நுழைந்தோடுவது போன்ற உணர்ச்சி.

ஆம், அவளது நேரான, ஆழமான, அழுத்தமான பார்வை அப்படி இருந்தது. ஏனோ அவனால் தனது முகத்தைத் திருப்பிக் கொள்ள முடியவில்லை.

சில வினாடிகள்தான்.

அதற்குள்...

அதற்குள்?

அவள் முறுவலித்தாள்.

முறுவலா அது? எத்துணை இனிமை கலந்த, எழில் கலந்த, உறுதியான, தெளிவான சிரிப்பு அது!

தனக்குள் எதுவோ தகித்தெழுவதைப் போல உணர்ந்தான் மதனகுமார். தானும் இளமை உணர்வுகளில் பல தடவைகள் தத்தளித்ததுண்டுதான்.

என்றாலும்...

இது மிகவும் வித்தியாசமாக அவனது இதயத்தை அழுத்தியது.

மனம் பயந்தாலும் தயக்கம் ஏற்பட்டாலும் அதையும் மீறி அவனது உதடுகள் பதிலுக்குச் சிறிது மலர்ந்தன.

அதற்கடுத்த நிலையத்தில் அவள் இறங்கப் போவது தெரிந்தது. மதனகுமாரின் மனம் படபடத்தது இப்போது.

நாம் இன்னும் ஐந்து ஸ்டேஷன்களைக் கடக்க வேண்டுமே! ஐயய்யோ! இப்படியொரு நல்ல சந்தர்ப்பம் இனியும் வருமா?

ஒரு வினாடிதான். அவனின் கண்களை அவளது ஆள் காட்டி விரல் ஒரு சின்ன சமிக்ஞையால் தட்டி விட்டது.

என்ன? தயவு செய்து நீயும் இறங்குகிறாயா என்று அந்த விரல் கேட்கிறதே!

மதனகுமாரின் கண்களுக்கு முழுத் தொடர் வண்டியுமே மறைந்து விட்டது இப்போது.

காலில் இஸ்திரி பெட்டி சுட்டதால் துள்ளிப் பாய்ந்த நாய்க்குட்டிபோல துள்ளியெழுந்த அவன் மடமடவென்று அவளைத் தொடாந்து இறங்கியே விட்டான்.

அவள் போய் கொண்டே இருந்தாள். இவன் தொடர்ந்து கொண்டே இருந்தான்.

தொடர் வண்டி நிலையத்தின் முடிவுப் பகுதியில் அவள் நிற்க, இவனும் நெருங்கிட, அவளே பேசினாள்.

"நீ மிகவும் அழகாக இருக்கிறாய். எந்த ஊரிலிருந்து வருகிறாய்?"

மிகவும் சுத்தமான ஜெர்மன் மொழியில் அவள் பேசினாள்.

"நான் இந்தியன்.."

"அதுதானே பார்த்தேன். ஆசியர்கள் பொதுவாகவே நல்ல அழகானவர்கள். நான் இந்திப் படங்கைள விரும்பிப் பார்ப்பதே அதனால்தான். உனது பெயர் என்ன?"

"மதன்"

"மடான்?"

"நைன். மதன்."

"மடன். ஆழகான பெயர்"

இபபோது மதனகுமாருக்கும் தைரியம் வந்து விட்டது.

"நீயும் மிகமிக அழகாகத்தான் இருக்கிறாய். அதுவும் சாதாரண ஜெர்மன்காரிகள் போலில்லாமல் இவ்வளவு அழகாக எப்படி என்றுதான் நானும் வியந்து கொண்டிருந்தேன்.."

"வியந்து கொண்டிருந்தாயா, இரசித்துக் கொண்டிருந்தாயா?"

அவள் பலமாகச் சிரித்தாள் இப்போது. எத்தனையோ பவளங்கள் உதிர்வதுபோல இருந்தது மதன் குமாருக்கு.

நாம் அதிர்ஷ்டக்காரன்தான். அம்மா கூட மறுக்கமாட்டாள்.

ஐஸ்வர்யா என்ன ஐஸ்வர்யா? இவளுக்கு முன்பு அவளும் ஒரு துரும்புதான்.

"அதுசரி உனது பெயர் என்ன?"

"ஏன் என்னைப் பார்க்க வேறு ஊர்க்காரியாகத் தெரிகிறதா?"

"இல்லையில்லை வந்து.."

"என் பெயர் எஸ்தர் மயர். என் அப்பா ஜெர்மன்காரர். அம்மா ஆர்ஜன்டீனா.."

கலப்படக் கவர்ச்சியே தனிதான் போலும்.

இலேசான சில பேச்சுக்களுடன் அவள் விடைபெற விழைந்தாள். மதன்குமாருக்கு விடை கொடுக்க மிகவும் சிரமமாக இருந்தது.

"நாளை மறுதினம் 'ஊ பான்' (நிலவடி தரிப்பிடம்) ரு 5ல் இதே நேரத்தில் சந்திப்போமா? நான் மிகவும் அவசரமாகப் போக வேண்டி இருக்கிறது. தயவு செய்து மன்னித்துக் கொள்."

சிறிது கழித்து அவள் கேட்டாள்.

"நாளைக்கு நான் உன்னிடம் ஒன்றைக் கேட்க நினைக்கிறேன். நீ தருவாயா?"

"நிச்சயமாக. என்ன வேண்டும்?"

"அதை அப்போது சொல்கிறேன். அதுவரை தயவு செய்து பொறுத்திரு. ஓகே?"

அவள் தனது வலக் கையை நீட்ட, தன்னையே அறியாமல் மதனகுமாரும்...

மதனகுமார் அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டே இருந்தான். அதை அவளே எதிர்பார்த்திருந்தது போல சிறிது நேரம் கழித்துச் சொன்னாள்.

"கையைப் பிடித்தே இப்படி நிற்கிறாயே... பிறகு.... நாளைக்கு... எப்படி...?"

மெதுவாக அவள் தனது கைகளை இழுத்துக் கொண்டாள். பிறகு கைகாட்டி விட்டு, விடை பெற்று, மின்சார நகர்படிகளில் ஏறிக் கொண்டாள்.

அது மேல் நோக்கி நகர, நகர மதனகுமாரின் மனம் குதூகலத்தில் வெகுவாகவே கொந்தளித்துக் கொண்டிருந்தது.

இத்துணை பெரிய அழகி இத்தனை விரைவாகத் தன்னிடம் மயங்கி விட்டாளே!

கின்னஸ் புத்தகத்தில் எழுத வேண்டிய சாதனைதான்.

வண்டி மெதுவாக நகர்ந்தது. அடுத்த தரிப்பிடம் நெருங்குவது புரிந்தது. மதனகுமாரின் கனவுக்கு அவன் இடைவெளி கொடுத்துக் கொண்டான்.

தொடர்வண்டி ஓரிடத்தில் நிற்க, அவள் இறங்குவது தெரிந்தது. மதனும் இறங்கிக் கொண்டான்.

நேற்று விடைபெற்ற போது இருந்த இன்ப அதிர்ச்சியில் தான் தரிப்பிடப் பெயரைக் கவனிக்காது விட்ட பிழை அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.

நல்ல வேளை. தப்பினோம்.

வேகமாக அவளைத் தொடர்ந்த அவன், படியருகில் அவள் நிற்காமல் மேலே நகர் படிகளில் ஏறவும் தானும் தொடாந்தான்.

மேலே வந்ததும்தான் தெரிந்தது அதில் இன்னுமொரு திசைக்கான தொடர்வண்டி வருகின்றது என்று.

கூட்டம் அவ்வளவாக இல்லை. மதனகுமார் அவளை நெருங்கினான். அவளே கை நீட்டிக் குலுக்கிய பின் மதனகுமார் கேட்டான்.

 

"நீ என்னவோ கேட்பதாய்ச் சொன்னாயே!"
"பரவாயில்லையே! நினைவில் வைத்திருக்கிறாயே!. இன்றைக்கு அது தேவையில்லை."

"ஏன்?"

"இன்றைக்கு அது கிடைத்து விட்டது."

"இனி எப்போது தேவைப்படும்?"

"சில வேளை இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில்?"

மதனகுமார் யோசித்தான்.

இன்னும் இரு தினங்களில் என்றால்?

எதுவாக இருக்கும்?

ஏதும் பணம் கிணம் கடனாகக் கேட்க நினைக்கிறாளோ?

சட்டென்று எதையாவது தவறாகப் பேசி எதற்காகப் பிரச்சினையை வலிந்திழுக்க வேண்டும்? சற்று பொறுப்போம்.

"என்ன யோசிக்கிறாய்? கடன் கேட்கப் பார்க்கிறேனா என்றா? நான் யாரிடமும் கடன் கேட்பதே கிடையாது."

மதனகுமாருக்கு வெட்கமாக இருந்தது இப்போது.

"தயவு செய்து தவறாக யோசிக்காதே! நான் அப்படி நினைக்கவில்லை.."

"பரவாயில்லை.."

அவளே அவனுக்கு ஆறுதல் கூறினாள். இன்னும் ஒரு நிமிடத்தில் வண்டி வரப்போவதை அறிவித்தல் காட்டியது.

வண்டி வரும்வரைக்கும் காத்திருந்த அவள் அவனது கையில் ஒரு விசிட்டிங் கார்டை நீட்டினாள்.

"இது எனது விலாசம். நாளை மறுநாள் காலை பத்துக்கும் பத்தரைக்கும் இடையில் உன்னால் வர முடியுமா?"

"நிச்சயமாக!"

சற்றும் எதிர்பாராத விதமாக அவள் அவனது உதடுகளில் தனது இதழ்களைப் பதித்து அழுத்திவிட்டு, சட்டென வண்டியில் ஏறினாள்.

"வர முடியாதிருந்தால் நாளைக்கே போனெடுத்து சொல்லிவிடு. ஓகே?"

முதலில் ஒரு கணம் அதிர்ந்து நின்றுவிட்டு, அவளை அவன் அணுகியபோது, அவள் சிணுங்கினாள். அடுத்த கணம் கதவு மூடிட, வண்டி நகர, மதனகுமாரின் உலகமே சுழன்று கொண்டு வந்தது.

----------------------

டுத்த நாள் வேலைக்குச் சென்றவன் செய்த முதல் காரியம் ஒரு நாள் லீவு எடுத்ததுதான்.

எஸ்தருடன்... ஆகாகா...

இங்கில்லாத பூங்காக்களா?

சுற்றோ சுற்றென சுற்றி எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்டிக் கொள்ள வேண்டியதுதான்.

அன்று முழுவதும் சந்திரனில் ஆம்ஸ்ட்ரோங் நடந்த மாதிரி இன்பக் குதிப்புடன் அவனது முழுப் பொழுதும் நகர்ந்தது.

விசிட்டிங் கார்டை அடிக்கடி பார்த்துக் கொண்டவன் கணனியில் 'கூகிளில்' செல்வழிப் பாதையையும் பார்த்துப் பதித்து எடுத்துக் கொண்டான்.

பொழுது விடிந்தது. வழமைக்கு மாறாக மகன் அதிகாலையிலேயே எழுந்து ஆயத்தமாவதைக் கண்ட மதனகுதமாரின் தாய் அவனை நெருங்கி விசாரித்த போது, சிறிதும் பதறாமல் அவன் சொன்னான்.

"அம்மா இன்றைக்கு கம்பனி விஷயமாக நானும் இன்னொருவரும் நூறன்பெயாக் போக இருக்கிறோம். மாலைக்குத்தான் திரும்புவோம். போகிற விஷயம் சக்சசானால எனக்குப் புரொமோஷன் கிடைக்க வாய்ப்புண்டு. பார்ப்போம்" என்று அற்புதமான ஒரு பொய்யை அவிழ்க்க, அந்த அம்மா மகனின் எதிர்காலக் கனவு நனவாக வேண்டுமே என்று ஆசீர்வதித்தும் விட்டார்.

மனம் இவ்வாறான விடயங்களில் விழுந்தால் முதலில் கைகொடுப்பது பொய்தான் போலும்.

வங்கியிலிருந்து மூன்று நூறு யூரோ தாள்களை எடுத்துக் கொண்டு விரைந்தானவன்.

பர்சை விரித்ததும் பச்சைத்தாள்கள் பளபளக்க வேண்டும்.

பட்டறை வாய்த்தால்தான் பணி வாய்க்கும் என்பார்களே!

மதனகுமார் தனது ஷேர்டை இழுத்து நெஞ்சுக்குள் சற்று முகர்ந்து கொண்டான். நல்ல தரமான சென்ற். மிதமான, ஒருவித மனதை ஈர்க்கும் விதத்தில் வாசம் வீசியது. திருப்தியாக இருந்தது.

இறங்கிய தொடர்வண்டி நிலையத்திலிருந்து இருநூறு மீறறர் தொலைவுக்குள் அவன் ஒரு பாரிய தொடர் மாடிக் கட்டிடத்தை வந்தடைந்தான். அதில்தான் ஓர் இடத்தில் அவள் வசிக்கிறாள்.

ஒரு மைதானத்தின் நுழை வாயிலருகில் ஒரு பெட்டி வடிவிலான சிறிய அலுவலகம் போல ஏதோ இருந்தது. தனது கழுத்துப் பட்டியைச் சரி செய்தவாறே அவன் அதை நெருங்கினான்.

அது அப்பக்கத்தில் கார்கள் நிறுத்துபவர்களிடம் கட்டணம் அறவிடவென இருந்த செயலகம் என்று தெரிந்தது.

ஏனோ மதன்குமாருக்கு அங்கே சரியான வீட்டு இலக்கத்தைச் சொல்ல மனம் இடந்தரவில்லை. தனது கைவசமிருந்த பாதை வரைபடத்தைப் பார்த்துக் கொண்டான்.

தான் போகவேண்டிய பாதைக்கு அடுத்த பாதையின் பெயரைச் சொல்லி விபரம் கேட்டான்.

அங்கிருந்தவன் வழியை விளககிச் சொன்ன பின் நன்றி கூறிவிட்டு மடமடவென்று நகர்ந்தான்.

எதற்கு கண்டவனிடமெல்லாம் நமது சொந்த பிரத்தியேக விவகாரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்?

ஒரு பெரிய பழையை ஐந்து மாடிக் கட்டிடத்தின் முன் தேடி வந்த முகவரி வந்து நின்றதும் பெயர்களை வாசித்தான்.

நாலாவது மாடிக்கான பெயர் வரிசையில் மயர் என்று மட்டும் இருந்தது.

அவன் மணி விசையை அழுத்தினான். சிறிது நேர அமைதிக்குப் பின் ஒரு குரல் கேட்டது.

"வெயார் இஸ் டா?"

"இக் பின் மதன். டெயார் இன்ட"

"ஓ! மடான். வெல்கொம்மன் மடான்.."

'கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று மணியொலி நீண்டு ஒலிக்க, கதவின் பூட்டு தளர்வது தெரிந்தது. மதனகுமார் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

இடது புறமாக ஒரு நீணட வழியும் அதன் வலது பக்கத்தில் ஒரு 'லிப்ற்'றும் தெரிந்தது. யாரையுமே காணவில்லை. வெகு அமைதியாக இருந்தது.

மதனகுமார் லிப்ற்றுக்குள் நுழைந்து நான்காம் இலக்கத்தை அழுத்தி விட்டு நின்றான். அது என்னவோ ஆர அமரத்தான் எழுந்து சென்றது.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். அம்மாடியில் சுமார் எட்டு குடியிருப்புக்களிருந்தன.

சனப் பெருக்கம் வீடுகளை உயர்த்திக் கொண்டே போவது சிரிப்பை ஊட்டியது அவனுக்கு.

சற்று தூரத்தில் கதவொன்று திறக்கின்ற சப்தம் கேட்கவே மதனகுமார் அங்கே பார்த்தான்.

அவள்தான். அவளேதான்.

உந்துருளி வேகத்தில் அவன் அவளை நெருங்கினான். அவன் உள்ளே நுழையவும் அவள் கதவை சாத்தினாள்.

இரு உருவங்களும் சில விநாடிகள் இறுகி நின்று, ஓன்றாகிக் கொண்டன. மதனகுமாருக்கு அது புத்தம் புது அனுபவம். அவளோ அவனுக்குப் படிப்பிப்பவளாக இருந்தாள்.

இரு நிமிட அணைப்பும் கொஞ்சலும் முடிந்ததும் அவனை அழைத்து இழுத்தவாறே உள்ளே நுழைந்த எஸ்தர் அவனை அமரச் சொன்னாள்.

"என்ன குடிக்கிறாய் மடான்?"

"ஒராஞ்சன் சாஃவ்ற்?"

க்ளுக்.

"நீ என்ன கின்டர் கார்டனுக்கா போகிறாய்? வைனா, பியரா, விஸ்க்கியா? எது வேண்டும் உனக்கு?"

அதிர்ந்து போனான் மதனகுமார். அவன் சில பார்ட்டிகளில் கலந்து கொண்டபோது பியர் அருந்தியதுண்டுதான். அது ஆண்களுடன்தான்.

அன்றுதான் முதன் முதலாக ஒரு பெண்ணுடன். அதுவும் தனிமையில்.

ஆனால்...

எப்படி இப்படி வெளிப்படையாக வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே ஒரு பெண்ணால் அதுவும் இன்னும் சரியாக அறிமுகமில்லாத ஓர் ஆணிடம் மதுவருந்த அழைப்பு விடுக்க முடிகின்றது?

இந்த ஊர் நாகீகம் அப்படிப் போலும். நாமும் நம்மை பட்டிக்காட்டானாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்?

"சரி பியர் கொண்டு வா."

அவள் தனக்கு வைனும் அவனுக்கு பியரும் கொண்டு வந்ததும் இருவரும் அமர்ந்தவாறே அருந்தத் தொடங்கினார்கள்.

வந்ததும் நடந்ததைத் தொடர மதனகுமாருக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் வேட்கை?

பியர் கொஞ்சம் ஏறட்டும். பிறகு தைரியம் தானாகவே வரும்.

அவனது சிந்னையைக் கலைத்தது எஸ்தரின் குரல்.

"மடான்.. மடான். நான் கேட்பேனென்று சொன்னேனே, இப்போ கேட்கட்டுமா?"

"நான் உன்னைக் கேட்க வேண்டாம் என்று சொன்னேனா?"

உள்ளே போன பியருடன் தைரியமும் உள்ளே சேர்ந்து போயிருந்தது போலும்.

"உன்னிடம் பணம் ஏதாவது இருக்கிறதா? எனக்கு அவசரமாக இருநூறு யூரோ வேண்டியிருக்கிறது. கடனாக வேண்டாம்."

எதையாவது அடகு வைக்க நினைக்கிறாளா இவள்! நமது மதிப்பைக் குறைக்கிற இடமா இது?

"எஸ்தர் ஒரு சின்ன விஷயத்துக்காக நீ அதிகம் அலட்டிக் கொள்கிறாய் இன்று நாம் வெளியே போக கைச் செலவுக்காக கொஞ்சம் எடுத்து வந்திருக்கிறேன். போகும்போது மீண்டும் எடுத்துக் கொள்ளலாம். இந்தா."

மதனகுமார் தனது பர்சைத் திறந்து அதில் பளபளத்த புத்தம் புது பச்சைப் பணநோட்டுகளில் இரண்டை இழுத்து நீட்டினான்.

அவள் அவனை இழுத்துக் கொண்டாள். சில நிமிடங்கள் அவன் முகமெல்லாம் ஒரே இச் மயம்.

சுட்டென நிறுத்தியவள் அருகிலிருந்த மேசையிலிருந்த பால் பொயின்ற் பேனையை எடுத்து அவனது பெயரை எழுத எதையோ தேடினாள்.

"எனது டயரியைக் காணவில்லை. இதிலேயே எழுதிக் கொள்கிறேன்."

அவனது நூறு யூரோ தாள்களில் ஒன்றில் எழுதினாள்.

மடான்.

"நான் உன்னை மறந்து விடக் கூடாதல்லவா? அதனால்தான் எழுதி வைத்துக் கொள்கிறேன்."

மறந்துவிடக் கூடாதா? என்ன சொல்கிறாள் இவள்?

"சரி மடான் எழும்பு. அந்த அறைக்குள் போவோம்."

மதனகுமாருக்கு எதுவோ எங்கோ உதைப்பது போலிருந்தது. இவளது பேச்சும் செயலும்...?

'ர்ர்ரீங்... ர்ர்ரீங்'

எஸ்தரின் டெலிபோன்தான் அலறியது.

சட்டென்று அதைத் தனது கையிலெடுத்தவள் மதனகுமாரை அறையை நோக்கி நகரும்படி பணித்துவிட்டு, மிகவும் மெல்லிய குரலில் பேச முனைவது தெரிந்தது.

தனக்கு அவள் காட்டிய அறைக்குள் நுழையாமல் தயங்கியபடியே அறை வாசலில் நின்று கொண்டே மதனகுமார் உற்றுக் கேட்டான்.

"நீ நாளைக்கு வாயேன். இன்றைக்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். அவரை உன்னால் பகைத்தால் நட்டம் உனக்கல்ல எனக்குத்தான்.."

மதனகுமாரின் சிந்தனை இயங்கியது.

யார் வர முயற்சிக்கிறார்கள்?

எதற்காக இன்றைக்கு வேண்டாம் என்கிறாள்?

நம்மைப் பகைத்தால் தனக்கு நட்டம் என்கிறாளே, ஏன்?“

மூளை குழப்பத்தால் கலங்குவது போலிருந்தது அவனுக்கு.

அவளது எரிச்சலான குரல் அவனது சிந்தனையைக் கலைத்தது இப்போது.

"சரி சரி. இன்னும் அரை மணி நேரம் கழித்து வா. நான் ஆயத்தமாக இருக்கிறேன்."

கோபமாக போனை வைத்த எஸ்தர் மதனகுமாரிடம் வந்தாள்.

"மடான் டார்லிங். இன்றைக்கு என்னை நீ மன்னிக்க வேண்டும். எனது வீட்டுக்காரன் வாடகைப் பாக்கிக்காக ஏசுகிறான். உடனே வேண்டுமாம்."

"எவ்வளவு கட்ட வேண்டும்?"

"ஐநூறு யூரோ. என்னிடம் நானூறு இருக்கிறது. மீதிக்காகத்தான் உன்னிடம் கேட்டேன். சனியனை நாளைக்கு வா என்றால் இல்லையில்லை. இப்போதே வேண்டும் எனறு அடம் பிடிக்கிறான். அவன் வரும்போது நீ வந்திருப்பது ஏன் தெரிய வேண்டும்?"

அவள் சொல்வதில் நியாயம் இ.ருப்பதாக மதனகுமாருக்கு இப்போது பட்டது.

"சரி எஸ்தர். இது எதிர்பாராமல் நடந்ததுதானே! பரவாயில்லை எப்போது மீண்டும் சந்திப்பது?"

"எனக்கு உன்னை ஏமாற்றும் எண்ணமே இல்லை மடான். இவன் வருவான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னை நம்புவாயா?"

மதனகுமாருக்கு சற்று கவலையாக இருந்தது. எஸ்தரை அணைத்துக் கொண்டான்.

"நான் போன் பண்ணுகிறேன். அப்போது சொல். சந்தித்துக் கொள்ளலாம்."

"மிகவும் நன்றி மடான். ஒன்று செய்கிறாயா? நாளைக் காலையில் நீ அலுவலகத்துக்குப் போகு முன் வந்துவிட்டுப் போகிறாயா?"

"எத்தனை மணிக்கு?"

"எட்டு மணிக்கு வா. பத்துக்குள் போய்விடலாம். இன்னொரு நாளைக்கு ஆறுதலாக வெளியே போகலாம்."

அது சரியென மதனகுமாருக்குப் பட்டது. இன்னொரு இச்சுடன் விடைபெற்றுக் கொண்டான்.

திரும்புகின்ற வழியில் தான் வழி கேட்ட இடத்தை விட்டு மறுபக்கத்தால் தொடருந்து நிலையத்துக்குச் சென்று அலுவலகத்துக்குப் போனான் மதனகுமார்.

மறுநாள் காலை மதனகுமாருக்கு சூரியன் வருமுன்பே, அதிகாலை மூன்று மணிக்கே பொழுது விடிந்து விட்டது. அம்மாவின் கவனத்தை மாற்றவா முடியாது?

ஏழரை மணிக்கெல்லாம் அவன் எஸ்தரின் இடத்துக்கு வந்து விட்டான். கார் நிறுத்துமிட வாடகை அலுவலகம் இன்னும் திறந்திருக்கவில்லை. வேகமாக நடந்து, கடந்து எஸ்தரின் வீட்டை அவன் நெருங்கினான்.

சுற்று வித்தியாசமாக, ஆங்காங்கே மக்கள் சிலர் கூடிக் கூடிப் பேசிக் கொண்டு நிற்பது தெரிந்தது.

ஒரு வேளை எதாவது சம்மர் பார்ட்டிக்கு எற்பாடு நடந்து கொண்டிருக்கிறதோ?

அவர்களைத் தாண்டி எட்டி வேகமாக நடந்தான் மதனகுமார்.

எஸ்தரின் தொடர் மாடிக் கட்டிடத்தின் அருகில் இன்னும் சனம். ஆனால்...

இடையிடையே என்ன பச்சைத் தொப்பிகள். போலீசுக்கு என்ன வேலை இங்கே, இப்போது?

நெருங்க நெருங்க அவனுக்குள் உதறலெடுத்தது. அந்தக் கட்டிடத்தின் ஒரு பக்கத்தில் பாதையோரமாக மஞ்சள் பட்டியொன்று கட்டப்பட்டிருந்தது.

அதாவது ஏதோ நடந்து, பாதை தடுக்கப்பட்டு இருக்கின்றது.

அந்த கட்டிடத்துக்குள் நழைய முடியாதபடி வாசலில் மஞ்சள் பிளாஸ்டிக் பட்டி சுற்றி விடப்பட்டு இருந்தது.

அருகில் நெருங்கிய மதனகுமாரின் கண்கள் கீழே நோக்கின. நிலத்தில் ஒரிடத்தில் வட்டமாக இரத்தம் கட்டிக் காய்ந்து இருந்தது தெரிந்தது.

மெதுவாக ஒருவரிடம் விசாரித்தான்.

மேல் மாடியில் வசித்து வந்த ஒரு பெண்ணைக் கொள்ளையடிக்க வந்த யாரோ நேற்றுக் காலை மாடியிலிருந்து தள்ளிக் கொலை செய்திருந்தார்களாம். இரு போலந்து நாட்டவர்களே அடிக்கடி அவளைச் சந்திக்க வருவது வழக்கமாம்.

அவர்களைத்தான் போலீஸ் சந்தேகிக்கிறதாம்.

நேற்று அவளிடம் பணம் கேட்டு வற்புறுத்தி அடித்து வதைத்துவிட்டு, அவள் கொடுத்த பணத்துடன் அவள் கடைசியாகக் கையில் வைத்திருந்த நூறு யூரோவையும் பறிக்க முயன்றார்களாம்.

 

அவள் மறுத்து சன்னலோரம் அவள் ஓட, அவளை அப்படியே சன்னலுக்கு வெளியே தள்ளி விட்டார்களாம். உடல் சிதறி அவள் செத்துப் போனாளாம்.

பிணத்தின் கையில் அந்த நூறு யூரோ அப்படியே இறுகப் பற்றியபடி இருந்ததாம். அதை ஏன் அவள் கொடுக்க மறுத்தாள் என்பதுதான் போலீசுக்குச் சிக்கலான கேள்வியாகவும் வியப்பாகவும் இருக்கிறதாம்.

அதிலும் விசேடமாக கொலைகாரர்கள் இருவரென்று தெரிந்தாலும் அந்த பணநோட்டிலிருந்த ஏதோ எழுத்துக்களில்தான்...

நூறு ரூபா தாள். எழுத்துக்கள்.

மதனகுமார் தனக்குள் ஓர் ஐஸ் உணர்வு தோன்றுவதையும் தலை சுற்றுவதுபோலும் உணர்ந்தான். பயம் தன்னை அப்பிக் கொண்டு வருவதை உடனடியாகவே அவனது உடல் உணர்ந்தது.

''இவ்வளவு விஷயமும் எப்படித் தெரியும்?''

''இன்றைய 'பில்ட்' பேப்பரில் எல்லாமே வெளிவந்திருக்கிறதே!''

மடமடவென்று திரும்பி நடந்தான் மதன குமாரன்.

வாகன வாடகைத் தரிப்பிடத்தின் பக்கமாக வருகையில் அது திறந்திருந்தது. அதே நபர்தான்.

''அலோ''

''அலோ குட்டன் மோர்கன்'' மதனகுமாருக்குத் தான் ஒழுங்காகத்தான் உச்சரித்தோமா என்று அச்சமாக இருந்தது.

விரைந்து தொடருந்து நிலையத்துக்குப் போனவனின் அதிர்ஷ்டம் வண்டி அப்போதே வந்து விட்டது.

மதிய உணவுக்கான இடைவேளை நேரத்தில் மதனகுமாரின் அலுவலகம் வழமைபோல் கலகலத்துக் கொண்டிருந்தது.

ஒருவன் அன்றைய பில்ட் பத்திரிகையின் முதற் பக்கத்தில் வந்திருந்த அரை நிர்வாண அழகியை வர்ணிக்க, தத்தமது மனம் போனபடிப் பிணமாகிப்போன அந்தப் பெண்ணைப் பலரும் விமாசிக்க, ஏதோ பெரிய கண்டு பிடிப்பு போல அதை வைத்து சிரித்துக் கொண்டிந்தார்கள், சிலர்.

காலையில் மதன் அதை வாங்க விரும்பினாலும் ஏனோ அவனது மனம் தடுத்து விட்டிருந்தது.

அவர்களுள் ஒருவன் அதன் உட்பக்கங்களைப் புரட்டிவிட்டு சத்தமாகச் சொன்னான்.

''யாரோ ஒரு விபச்சாரியை மாடியிலிருந்து தள்ளிக் கொன்று போட்டார்களாம். பார்த்தால் இளவரசி மாதிரி இருக்கிறாள். எதற்காக..?''

''பணம் பண்ண லேசான வழி அதுதானே''

''கடைசியாக யாரோ இருவர் அவளுடைய வீட்டுக்குள் நுழைவதை அயலவர்கள் கண்டதாகத் தெரிகின்றது. அவர்கள் வழமையாக வந்து போவார்களாம். அவர்கள் போலந்துக்காரர்கள் என்று நம்புகிறார்களாம். ஆனால் அவளது கையில் கடைசியாக இருந்த நூறு யூரோ நோட்டில் என்னவோ 'மடான்' என்று எழுதியிருக்கிறாளாம். அதுதான் புதிய சிக்கலாக இருக்கிறதாம். அது யாருடையதாவது பெயரா அல்லது...''

அது எந்த ஊர்ப் பெயர் என்று கதை திரும்பியது. ஒருவன் மதனகுமார் பக்கம் திரும்பினான்.

''குமார் இந்த 'மடான்' என்ற பெயர் உங்கள் இந்தியாவில் இருக்கிறதா?''

மதனகுமார் தனதுடல் நடுங்கத் தொடங்குவதை உணர்ந்தான்.

''ஒருவேளை மொடர்ண் என்பதை மடான் என்று எழுதினாளோ யார் கண்டது...''

கூட்டம் அதை நகைச்சுவையாக இரசித்ததுடன் அவன் தப்பி விட்டான்.

இனி அந்தத் திசைப்பக்கம் நமது நிழல் கூடப் படக்கூடாது.

மெதுவாக அந்தப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தான் மதனகுமார். இரத்த வெள்ளத்தில் ஒரு துணியால் மூடப்பட்டு அதற்குள் எஸ்தர் மறைந்திருந்தாள். அதற்கு அருகிலேயே அவளது இனிமையான முகம் சிறியதாக சிரித்துக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அவனது உள்மனது உணர்ந்தது.

''மடான்! காதலிக்கும் முன் ஆளை அறிந்து அளந்து பிறகுதான் காதலிக்க வேண்டும். காசுக்கு முத்தமிடுவதும் அரியணையமைப்பதும் காதலல்ல. காமத்தைத் தணிக்க வைத்துக் காசு பண்ணக் கணிகையர் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம். உண்மைக் காதலில் அன்பு இருக்கும். கணிகையர் பார்வையில் நடிப்பே இருக்கும் என்பதை இனியாவது புரிந்து கவனமாக நடந்து கொள்வாயா?''

எஸ்தரின் புன்னகை அப்படியா அவனுடன் பேசிக் கொண்டிருந்தது? அல்லது...?

''மடான் நான் உன்னைக் காதலிக்கிறேன். அதனால்தான் உனது பெயரை எழுதிய நோட்டைக் கொடுக்க மறுத்து உன்னுடனேயே சாவை ஏற்கவும் துணிந்தேன். என்னை நம்புவாயா?'' என்று சொல்கின்றதா?

மதனகுமாரின் மனதுக்குள் ஆயிரம் அழுத்தங்கள். ஒரு பக்கம் ஆழமான துயரமும் மறுபக்கம் அவளது வாழ்க்கை முறையின் மேல் வெறுப்பும் எழுந்து அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன.

அவனருகில் இருந்தவன் சொன்னான்.
''குமார், விபச்சாரியானாலும் இவ்வளவு இளவயதில் சாவது பரிதாபம்தான். அல்லவா?''

மதனகுமார் என்ற பொம்மையின் தலை ஆடி அவன் சொன்னதை ஆமோதித்துவிட்டுக் கவிழ்ந்து கொண்டது.
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree