மனோகரா! பொறுத்தது..

01 செப்டம்பர் 2007
ஆசிரியர்: 

 

மனோகரா! பொறுத்தது போதும்டா, தப்பியோடு!

(கண்டிப்பாக சிரிப்பு விரும்பிகளுக்கு மட்டும்)


 செல்வேந்திரன் தன்னைச் சூழ அமர்ந்திருந்த ஆச்சிமார், மாமிமார் கூட்டத்தை நோக்கி ஒரு தடவை வலக்கரத்தை வயிற்றினடியில் மடக்கியவாறே குனிந்து வணங்கி விட்டு நிமிர்ந்தான். பலத்த கரவொலியுடன் பெரியவர்களின் உரத்த, கலகலப்பான பாராட்டுக்களும் சேர்ந்து அவனைக் குளிர வைத்துக் கொண்டிருந்தன.சாம்ராட் அசோகன் நாடக முழுவசன நாடகம் முடிந்து, அடுத்து மனோகரா ஆரம்பமாகப் போகின்றது. சிறிய 'இன்ரவெல்' (இடைவேளை).செல்வேந்திரன் தனது சாம்ராட் அசோக ராஜ உடையான அம்மாவின் பச்சை நிற சேலையையும் அட்டைத் தொப்பியையும் எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்குள் சென்று புதிய சிவப்பு சேலையுடன் புதிய வேடத்தில் வந்து நின்று வணங்கினான்.அம்மா சூடாக ஒரு கப் பாலை நீட்ட அவன் அதை அருந்த, முழு அவையும்  மீண்டும் ஒரு தடவை கரவொலியால் அதிர்ந்தது. அம்மாவின்  முகத்தில் நெளிந்த பெருமையும் மகிழ்ச்சியும் திருப்தியும்...'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை

சாம்ராட் எனக் கேட்ட தாய்'

(திருவள்ளுவர் சார் மறு உலகத்தில் முறுவலிப்பது தெரிகிறது.)இன்றைக்கு நல்ல பலகாரம் கிடைக்கும். பொறாமைக்கார அக்கா முணுமுணுக்க, நாமே தனியாக வெட்டு வெட்டென்று வெட்டி, கோபமுண்டாக்கலாம். ஆகாகா!இப்போது அந்த கிழடுகளின் அவையில் நின்று கொண்டிருந்தான் 'மனோகரா'. அந்த நாடகங்களின் ஒரே வித்தியாசம் சாம்ராட் அசோகனாகட்டும் மனோகராவாகட்டும் இரண்டிலும் அனைத்துத் துணைப் பாத்திரங்களின் வசனங்களையும் அவன் மட்டுமேதான் பேசி நடிப்பான்.காரணம், ஒலிபெருக்கிகளில் கேட்டுக் கேட்டு அத்தனை வசனங்களும் அவனுக்கு முழுமையாகவே மனப்பாடமாகியிருந்ததும் அந்த ஆற்றலே மற்றவர்களைக் கவர்ந்து வந்ததும்தான்.அந்த மாணவ கால நாட்களில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சினிமா வசனங்கள் கொழும்பில் மாணவ உள்ளங்களுக்குள் பாடங்களை விடவும் ஆழமாக ஊடுறுவி இருந்து வந்தன.கம்பராமாயண செய்யுள்களை மாணவர் மனங்களுக்குள் புகுத்த சில சமயோசித ஆசிரியர்கள் சில பொருத்தமான சினிமா மெட்டுக்களைப் பயன்படுத்திப் பார்க்குமளவிற்கு சினிமாவின் தாக்கம் இருந்த அந்தக் காலத்தில் இவ்வசனப் பதிவுகள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தமை ஒன்றும் புதுமையிலலை அல்லவா?பாடசாலை இலக்கிய விழாக்களிலும் மாணவ அரங்கங்களிலும் இடம் பெறும் கலை நிகழ்ச்சிகளிலெல்லாம் அவற்றிற்குத் தனியான ஓர் இடமே இருந்ததுண்டு.பொதுவாக அந்த நாட்களில் நடுத்தர, மற்றும் ஏழை வர்க்க மனிதர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் நடைபெறும் திருமண, சாமத்திய, மற்றும் இதர கொண்டாட்டங்களின் போதெல்லாம் ஒலிபெருக்கிகளில் அந்த வசனங்கள் ஒலி பரப்பப்படாமல் இருந்ததில்லையெனலாம்.அந்நாட்களில் கொழும்பில் பல தெருவோரங்களை நிறைத்துப் படர்ந்திருந்தன பல தென்னிந்திய சைவ உணவகங்கள். அவைகளிலும் கூட அவை அடிக்கடி ஒலிபரப்பப்பட்டு, அவற்றைக் கேட்பதற்குக் கடைகளின் முன்பாகத் திரளும் மக்கள் தொகையில் ஒரு பகுதியினர்க்கு 'டீ, வடை' விற்கும் ஒரு வியாபாரத் தந்திரம் கூட நடைமுறையிலிருந்து வந்தது என்றால் பாருங்களேன்!செல்வேந்திரனின் பாடசாலையில் மேல் வகுப்பு மாணவர்கள் மாணவர் மன்ற விழாவில் 'சாம்ராட் அசோகன்' நாடகத்தை அரங்கேற்றிய போது, அதில் சிவாஜி பாத்திரத்தில் அசோகனாக நடித்த மாணவன் பெரும் பாராட்டைப் பெற்றான். அதைப் பார்த்த நாளிலிருந்து ஏற்பட்ட ஆர்வம் செல்வேந்திரனை அந்த மாணவனைப் போலவே தன்னையும் ஆக்கிக் கொள்ளத் தூண்டியது.அதன் பயனாக அவனும் அதை இடைவிடாது பயிற்சி செய்து, அதில் தேறி விட்டதுடன் மனோகரா கதை வசனத்திலும் ஜமாய்க்கத் தொடங்கி விட்டான்.சிறுவர்களின வீடுகளிலிருந்த விளக்குமாறுகள் (தென்னை ஈர்க்குச்சிளைச் சேர்த்துக் கட்டப்பட்ட துடைப்பம்) அடிக்கடி மெலிந்து, அவற்றிலிருந்து திருடப்பட்ட ஈர்க்கில் குச்சிகளில் வில், அம்பு செய்து கொண்டு, சீவிச் செய்த மூங்கில் வாள்களுடன் எம்.ஜீ.ஆர், வீரப்பா, சிவாஜி, நம்பியார் மற்றும் படைகளின் திரைப்பட வாட்சண்டைகள், யுத்தங்கள் வேறு பரவலாக நடைபெற்று வந்தன.அந்தச் சிறுவர் பட்டாளம் குதிரைக் குளம்பொலியை 'டொக் டொக் டொக்' என வாய்களினால் எழுப்பிய வண்ணம் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்ட பாவனையுடன் இரட்டைக்கால் குதிரைகளாக ஓடியோடி வாட்சண்டையும் விற்சண்டையும் போடுவதைப் பல பெரியவர்களும் இரசித்தமையால் எப்போதுமே கலகலப்புத்தான்.அதன் ஒரு வளர்ச்சியே அடிக்கடி செல்வேந்திரனின் இல்ல முன்னறையில் இடம் பெற்று வந்த ஓரங்க நாடகங்களுமாகும்.அன்றைய செல்வேந்திரனின் மனோகரா நாடகத்தில் சிவாஜி மட்டுமல்ல, கண்ணாம்பா, ராஜகுமாரி உட்பட இன்னும் பலரும் இடம் பெற்றனர்.நாடகம் முடிய, டிக்கட் இல்லாமல் வந்து இரசித்த அத்தனை கிழடுகளுக்கும் தேநீர் வழங்கப்பட்டது. சில படுகிழடுகள் தாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய மினி உரல்களுக்குள் வெற்றிலை பாக்கு போட்டு இடித்துச் சுவைத்ததுடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள, கலகலப்பாக காட்சி முடிவுக்கு வந்தது.விடைபெற்று வெளியேறு முன் சில ஆச்சிமார் செல்வேந்திரனின் கன்னங்களைத் தடவி வாழ்த்திவிட்டு, தங்களின் நெற்றிப் பொட்டுக்களில் அழுத்தி விரல்களை 'சடக் சடக்'கென சொடுக்கி கண்ணூறு கழித்த போது, ஏதோ 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்ற பெருமை செல்வேந்திரனுக்கு.

………………………
சிறிய வயதுகளில் மனங்களில் அதீத கற்பனைகள் வளர்வது சகஜம். அந்நாளைய குழந்தைகளின கற்பனையில் அதிதீவிர கதாநாயக சாகசங்களின் நேரடிப் பங்காளிகளாகத் தங்களைத் தாங்களே வரித்து மகிழ்கின்ற வழக்கமிருந்தது.விளையாட்டு வாட்சண்டைகளும் கூட ஏதோ உண்மைச் சண்டை மனபாவனையோடு இடம் பெறுவதால் சில சமயங்களில் சிறு சிறு காயங்களும் ஏற்படுவதுண்டு.ஒரு வித்தியாசம், சண்டையிடுகையில் மாவீரனாக நினைத்துக் கொள்ளும் வீரர் தன் தோலில் கீறல் விழுந்ததும் 'அம்மா!' என்று கத்தியபடியே சற்று நேரம் ஒதுங்கி நின்று முணங்கி விட்டோ அழுதுவிட்டோ மறுபடியும் வழமைக்குத் திரும்பி விடுவார். வீட்டுக்குக் கோள் சொல்ல மட்டும் முனைய மாட்டார்.அன்றைக்கும் அப்படித்தான் மனோகரா கதையை அவர்கள் தங்களின் சொந்தக் கற்பனைகளுக்கு ஏற்ப மாற்றி, மாற்றிக் கதையையும் வசனங்களையும் பிரயோகித்தவாறு நடத்தியவாறே சண்டை போட்டுக் கொண்டு, தத்தமது இரட்டைக்கால் குதிரைகளில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.ஓரிடத்தில் திடீரென படைகளை ஒருவன் நிறுத்தினான்.'டேய் இங்கே நிறுத்தி மனோகராவை ராசா தண்டிப்பதைச் செய்வோம்.'சிறுவர் பட்டாளம் நின்ற இடம் ஒரு விளையாட்டு மைதானத்தின்  இறுதிப் பகுதி. எல்லை வைத்து எழுப்பப்பட்டிருந்த சிறு தூண்களில் ஒன்றுதான் அவர்களை நிற்க வைத்திருந்தது.'மனோகராவை இதில் ஒன்றில் கட்டிவைத்து வழக்கை நடத்துவோம்.'மனோகராவான செல்வேந்திரனை ஒரு மெல்லிய சற்று நீண்ட கயிற்றினால் கட்டி இறுக்கினார்கள். அங்குமிங்கும் நடந்து, நடந்து வசனம் பேச வசதியாக கயிறு நீளமாக விடப்பட்டு, மனோகரா தூணில் கட்டி வைக்கப்பட்டான்.கண்ணாம்பாவின் வசனத்துடன் வழக்கு வசனங்கள் மொழியப்பட்டபோது பார்த்து, ஒருவன் ஒரு புதிய 'ஐடியாவை' வெளியிட்டான்.'டேய் அங்கே பாருங்கள், யாரோ ஒரு சொறி நாயைக் கட்டி வைத்ரக்கிறார்கள். மனோகரா வசனம் முடிய, அதை எட்டி உதைத்தால் சிவாஜிக்கு இன்னும் வீரம் அதிகமாகுமல்லவா! அப்படிச் செய்தால் என்ன?'எல்லாரும் அந்தப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார்கள். யாருடையதோ வீட்டு நாய் ஒன்றை அங்கிருந்த தூணொன்றில் கட்டி வைத்திருந்தார்கள்.அதன் உடம்பெல்லாம் ஏதோ சொறி படர்ந்திருந்தது. அதற்காக அதன்மேல் பச்சை நிறத்தில் ஏதோ மருந்திலைகளை அரைத்துப் பூசி அந்த கொதிக்கும் வெய்யிலில் வாட விட்டிருந்தார்கள். சொறி ஒருபுறம் வெய்யில் தகிப்பு இன்னொரு புறமாக அது பரிதாபமாக அங்குமிங்கும் இழுபட்டுக் கொண்டிருந்தது.'சூப்பர் ஐடியாடா! எல்லாரும் அந்தப் பக்கம் மாறுவோம்.' மனோகராவே திருவாய் மலர, அனைத்துப் படையும் அப்பக்கமாக நகர, மனோகராவை அந்த நாய் கட்டப்பட்டிருந்த தூணுக்கு அடுத்த தூணில் கட்டினார்கள்.அந்த நாய் பயந்து ஒதுங்குவது தெரிந்தது. ஒருவன் கத்தினான். 'அடேய் செல்வா! உதைக்கிறபோது பலமாக அது சுருண்டு விழுகிற மாதிரி உதை. அப்பத்தான் சரி.'செல்வேந்திரன் தலையை ஆட்டினான். திரைக் கதை வசனங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. அன்னை கண்ணாம்பா கதறிக் கதறி வசனங்களை அள்ளி வீச, மகன் மனோகரா சிவாஜி துள்ளித் துடிக்க, படுசுவாரஸ்யமாகக் கதை நகர்ந்து கொண்டிருந்தது.கடைசியாக, கண்ணாம்பா கத்தினார்: 'மகனே மனோகரா! பொறுத்தது போதும். பொங்கி எழு!'இடையில் ஒருவன். 'முதலில் நாயை உதைத்து விட்டுப் பிறகு பொங்கி எழடா, செல்வா!'தன்னைக் கட்டியிருந்த மெல்லிய கயிற்றை அறுத்துக் கொண்டு துள்ளித் திரும்பிய மனோகரா அடுத்த கணமே சொறி நாயை நோக்கிப் பாய்ந்தான்.'மன்னன் என்னைக் கடிக்க ஏவி விட்ட சொறி நாயே! உன்னை என்ன செய்கிறேன் பார்!'படுவேகமாகவும் பலமாகவும் மனோகரா உதைவிட நாய் 'ஞை' என்று குழறியவாறே சுருண்டு ஒரு பக்கமாக விழுந்தது.மனோகரா நாயை உதைத்த வீரம் முகத்தில் களை கட்ட கம்பீரமாகப் படையைப் பார்க்க, ஒரு கணம் அவைரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.எல்லாம் ஒரே ஒரு கணம்தான். அதற்குள்...'வவ்..''ஐயோ அம்மா'நாய் முதுகின் கீழே பாய்ந்து கடித்த கடியில் வீர மனோகரா கத்திக் கதறினான். யாரோ ஒருவன் அபாய அறிவிப்பு மணியை அடித்தான்.'அடேய் நாய் வருகுது மனோகரா! பொறுத்தது போதும்டா, ஓடுடா!'மனோகராவுக்கு முன்பே மற்ற கூட்டம் ஓடத் தொடங்கி விட்டது. மனோகரா தொடர்ந்து ஓட, சொறிநாய் கடட்டப்பட்டிருந்த கயிற்றைப் பியத்துக் கொண்டு துரத்தத் தொடங்கிவிட்டது.ஒரு சொறி நாய்க்குப் பயந்து அத்தனை மாவீரர்களும் புறமுதுகிட்டு ஓட, கதாநாயகன் மனோகரா தான் அவர்களுக்குச் சளைத்தவனில்லை என நிரூபிக்க முயல, யாரோ வழியில் சென்ற பெரியவரொருவர் நாயின் கயிற்றை மிதித்து நாயை நிறுத்த, நாய் வீட்டுக்கார அம்மா ஓடி வந்து அதைக் கட்டுப்படுத்தினார்.ஓடிப்போன மனோகரா அனைத்து வசனங்களையும் முற்றாக மறந்து விட்ட நிலையில் வெறும் 'அம்மா! அம்மா!' என்று மட்டுமே இப்போது வசனம் பேசிக்கொண்டு இருந்தான். அம்மா கண்ணாம்பா? ஆளையே காணவில்லை.அவனது பின் இடுப்பிலிருந்து நாயில் பற்கள் பதிந்து இலேசாக இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நாயை நிறுத்திய அவனருகில் பெரியவர் வந்தார்.'என்ன நடந்தது தம்பி?'சற்று தொலைவில் 'பிறேக்' அடித்த ஒரு தோழன் வந்து கதையை ஓரளவுக்குத் தங்களுக்கு சாதகமான விதத்திலே சொல்லிச் சமாளித்தான். ஆனாலும் நாயை உதைத்த குற்றத்தை மட்டும் ஒளிக்கத் தெரியவில்லை அவனுக்கு.'சும்மா இருக்கும் நாயை உதைத்தால் அது கடிக்காமல் நக்கவா செய்யும்?'செல்வேந்திரனின் கையைப் பிடித்து மெதுவாக அழைத்த பெரியவர் நாய் வீட்டுக்கார அம்மாவிடம் அழைத்துச் சென்றார்.அவரிடம் சிறுவனை ஏசவேண்டாமெனவும் ஏற்கனவே மிகவும் பயந்து போயிருப்பதாகவும் சொல்லிக் காப்பாற்றிய பின் அந்த அம்மா செல்வேந்திரனைத் திரும்பி நிற்கச் சொல்லி விட்டு ஒரு பழஞ் செருப்பை எடுத்து அந்தக் காயத்தின்மேல் இரண்டு அடிகள் கொடுத்தார். பிறகு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்து குடிக்கச் சொன்னார். என்னவோ ஒரு சம்பிரதாய மருத்துவமாம். நாய் கடித்தால் நாய் வீட்டுக்காரர் வீட்டுப் பழஞ்செருப்பாலடித்து நீர் கொடுத்தால் விஷம் இறங்கி விடுமாம்.'தம்பி, இனி என்றைக்குமே நீ பன்றி இறைச்சி தின்னக்கூடாது. தின்றாயோ செத்துவிடுவாய். கவனம்.' அந்த அம்மாவின் கண்டிப்பான உத்தரவு.செல்வேந்திரன் தலையை ஆட்டினான். அவன் வீட்டில்தான் பன்றி சமைப்பதே கிடையாதே! பிறகென்ன குறை அந்த விரதத்துக்கு?அவன் அந்த வீட்டிலிருந்து வெளிவரும் போதுதான் இதர வீரர்கள் மீண்டும் வரத் தொடங்கினார்கள்.'போங்கடா! உங்கள் பேச்சைக் கேட்டதாலே எனக்குத்தான் நாய்க் கடியும் செருப்படியும். இப்போ அம்மா வேறு அடிப்பார்கள்.'மனோகரா மனம் குமுறி அழுதான். அதை சமாளிக்க அழைத்து வந்த பெரியவர் அம்மாவிடமிருந்து காப்பாற்றவும் உத்தரவாதம் அளித்தார்.காலங்கடந்தது. நமது மனோகரா கடல் கடந்து வந்து ஐரோப்பாவில் வாழத் தொடங்கினார்.வந்த இடத்தில் வெள்ளைக்காரன் ஊட்டிய தைரியத்தாலும் அவன் முன் முகத்தாட்சண்யத்துக்காகவும் பன்றிக் கறியைப் பயந்து பயந்து ஒரிரு தடவை உண்டு பார்த்தார்.என்ன ஆச்சர்யம்!அயல் தேச பன்றிகள் நல்ல பன்றிகள். ஆபத்தில்லாதவை என்று தெரிந்து விட்டது. ஆகவே இப்போது ஐயா வாரத்துக்கோர் தடவை பன்றிக்கு நன்றி தெரிவித்து வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறாராம்.மனோகரா!பொறுத்தது போதும். வெட்டி முடியடா!
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree