தட்டிப்பார் தட்டுப்படும்!

11 ஆகஸ்ட் 2007
ஆசிரியர்: 

 

"இனக்கலவரம் என்றால் என்ன சேர்?"முதல் நாள் வீட்டு வேலையாக மாணவர்களுக்குக் கொடுத்திருந்த கணக்குகளைத் திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர் இராஜன் முருகவேல் நிமிர்ந்து பார்த்தார்.மாணவன் ரவிக்குமார் அவர் முன் ஒருவித விளக்கம் வேண்டும் ஆவலுணர்வுடன் நின்று கொண்டிருந்தான். "இனக்கலவரம் என்றால் இரு இனத்தினர்களுக்கிடையிலே ஏதாவது தகராறு எழுந்து, அது வன்முறையாக மாறி, அதுவே பிறகு பெரிதாக வளர்ந்து விட்டது என்றால் ஏற்படும் களேபரம்தான் இனக்கலவரம் என்பது. ஏன்?""அப்படியானால் ஒரு பகுதி ஒன்றுமே செய்யாமல் இருக்க, இன்னொரு பகுதி மட்டும் வன்முறையில் இறங்கினால் அது என்ன இனக்கலவரம்?"முருகவேல் ஆசிரியருக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன இந்தச் சிறுவன் இப்படியொரு புதுக் கேள்வியைக் கேட்கிறான்?"நல்ல கேள்வி நீ கேட்டது. ஐந்து நிமிடம் பொறு. போய் உனது இருக்கையில் இரு. இவற்றைத் திருத்திவிட்டு வந்து விளக்கம் தருகிறேன்."மாணவன் ரவி தனதிடத்தில் சென்று அமர்ந்து கொண்டான். ஆசிரியர் முருகவேலின் கண்கள் பாடக் கொப்பியில் இருந்தாலும் பட்டும் படாமலும் அவனது உருவமும் அதற்குள் நுழைந்து கொண்டு தெரிந்தது.அவன் தனது சக மாணவனுடன் ஏதோ வாதிடுவதுபோல மெதுவான குரலில் கதைத்துக் கொண்டிருந்தான்.ஆசிரியருக்குள் இப்போது சிறிய குழப்பம். முதல் கேள்வியும் நமது பதிலும் சரிதான். ஆனால் அடுத்த கேள்விக்கு விடை..?தாக்குதல்? வலிந்த வன்முறை? கேடித்தனம்? காடைத்தனம்?ஊகூம்... எதுவுமே பொருந்துகிறாற்போல இல்லையே!திருத்தல் வேகம் தடைப்படுவதை அவர் உணர்ந்தார். சிறிது 'எக்ஸ்ட்ரா' கவனத்துடன் அந்த வேலையை முடித்துவிட்டு எழுந்தார்.கற்பிப்பது என்பது நீந்துவதைப் போன்ற ஒரு கலை. அதில் ஓய்ந்து நிற்க முடியாது. அது ஒரு தொடர் பயிற்சியுடனான தொழில். நீச்சல்காரன் நதியின் ஓட்டங்களனைத்துக்கும் ஈடு கொடுத்தே ஆக வேண்டும். தளர்ந்தால் தலை மூழ்கி விடும்.இதிலும் அப்படித்தான். எதை எப்போது எதிர்கொள்வது என்பது தெரியாது. ஆனால் வருவதை எதிர் கொண்டே ஆகவேண்டும்.அதற்கு அடிப்படையான தகுதி, நிதானம் ஒன்றுதான் என்பது தெரிந்திருந்தால் மற்றவற்றை எப்படியும் சமாளித்து விடலாம். தனது பதினைந்து வருட ஆசிரியப் பணியில் பல சவால்களை ஆசிரியர் இராஜன் முருகவேல் சந்தித்திருக்கிறார்.அவரைத் தலைமை ஆசிரியர் மட்டுமே பள்ளியில் 'மிஸ்ரர் இராஜன்' என விளிப்பார். எனைய அனைவர்க்குமே அவர் திரு. முருகவேல்தான். மாணவர்களுக்கும் முருகவேல் மாஸ்ரர்தான்.முருகவேல் மாஸ்ரரின் தனிச்சிறப்பு அவரது மலர்ந்த முகத்துடனான அணுகுமுறைதான். ஆதலால் அவரிடம் எவருமே மரியாதை குறையாமல் ஆனால் பயமின்றிப் பழகுவார்கள்.வேறு ஆசிரியர் பாடம் திருத்துகையில் மாணவர் குறுக்கிட்டால் "முதலில் போய் இரடா! நான் முடித்த பிறகு வாறன்" என்று எரிந்து விழுந்திருப்பார். இவரோ பக்குவமாக செவிமடுத்து, விடை பகர்ந்து சற்றுப் பொறுத்துக் கொள்ளக் கேட்டிருந்தார்.தனது மேசைக்கு முன்னால் வந்த முருகவேல் மாஸ்ரர் அதனுடன் ஒட்டி நின்றவாறே வகுப்பை ஒரு தடவை அவதானித்தார். முழு வகுப்புமே அவரது குரலை எதிர்பார்த்து ஆவலுடன் இருப்பது தெரிந்தது."ரவி உனது கேள்வியை மீண்டும் கேள். அதற்கு முன், முதல் கேள்வியையும் அதற்கான எனது பதிலையும் சொல்."ரவிக்குமார் மிகவும் தெளிவாக அவரது கேள்விக்கான பதிலை எடுத்துச் சொன்னான். அந்த நேர இடைவெளிக்குள் முருகவேல் மாஸ்ரர் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்."ரவி, உனது கேள்விக்கு அடிப்படையாக ஒரு காரணம் இருப்பதாக நான் நினைக்கிறேன். சரிதானே?"ரவி தனது தலையை ஆம் என்பதாக ஆட்டினான்."அது எதுவென எனக்குப் புரிகிறது. ஆனால் அதை நீயே சொல்லுவதுதான் சரியென நினைக்கிறேன். சொல்.""நமது நாட்டில் அடிக்கடி நடக்கின்ற...""இனக்கலவரம் பற்றிய பத்திரிகைச் செய்திதானே?""ஓம் மாஸ்ரர். அதுவேதான்.""உனக்கு சரியாக உண்மையைத் தேடுகிற ஆர்வம் இருப்பதால்தான் இதை ஆராய்ந்திருக்கிறாய். மிக நல்ல பழக்கம் அது. எதை, எவர், எப்படித்தான் சொன்னாலும் நாம் சரி பிழை தேடிப பார்க்க வேண்டும். அதுதான் அறிவை வளர்க்க சரியான வழி."ஆசிரியர் சிறிது நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்."இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்திய வரலாற்றிலே தமிழர்களாக வலிந்து தாக்கிச் சிங்களவர்களை பயமுறுத்தி அடிபணிய வைக்க என்றுமே விழைந்ததில்லை. ஆனால் அவர்கள்தான் தமிழர்களைத் தாக்கிக் கொன்று, கொள்ளையடித்துக் கற்பழித்து, வாழவிடாமல் விரட்டியத்து அட்டகாசம் செய்கின்றார்கள். ஆனால் அதனைப் போதிய தெளிவில்லாமலோ, மொழி விளக்கம் இல்லாமலோ நமது தமிழ்ப் பத்திரிகைகள் இரண்டு வித்தியாசமான இனங்களுக்கிடையிலான பரஸ்பர வன்முறை எனப் பொருள்தரும் இனக்கலவரமென இந்து ஓரினத்தின் வன்முறைகளைத் தலைப்பிட்டு எழுதி வருகின்றன. நம்மில் பலரும் அந்தச் சொல்லையே ஆழமாக சிந்திக்காமல் பேசவும் எழுதவும் மற்றவர்களுடன் கலந்துரையாடவும் பாவித்தும் வருகின்றோம். உண்மையில் இலங்கையில் நடப்பது இனக்கலவரமல்ல, அது தமிழர்க்கெதிரான இனவெறிச் சிங்களவர்களின் வன்முறை என்று மட்டுமே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள்தான் செய்கிறார்கள். நாம் தடுத்து நிறுத்த மட்டுமே முயலுகின்றோம். சர்வதேச சமூகமும்கூட சரியாக உண்மையைப் புரிந்து கொள்ள முயலாமல் மேலெழுந்தவாரியாக அழிப்பவரையும் தற்காப்பவரையும் இப்பிரச்சினையில் சமநிலையில் வைத்துப் பார்ப்பதுதான் நமது இனத்தின் நிரந்தர நிம்மதிக்கே கேடு விளைவித்துக் கொண்டு இருக்கின்றது."இடைவிடாமல் தொடாந்து பேசியதால் முருகவேல் மாஸ்ரருக்கு மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருந்தது. தமது பேச்சைச் சற்று நிறுத்தி விட்டு, ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டார்.மாணவன் ரவி எழுந்து நின்று சொன்னான். "மாஸ்ரர் இப்போது எனக்குத் தெளிவாக விளங்குகின்றது. நான் சகல தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் ஒரு கடிதத்தில் இந்த மாபெரும் தவறைச் சுட்டிக் காட்டி 'நடப்பவை இனக்கலவரங்களல்ல. இனவெறிச் சிங்கள வன்முறை' என்பதை வலியுறுத்தி, இனி வருங்காலங்களில் அதனைத் திருத்தியே செய்தி எழுதும்படி கேட்டுக் கொள்ளப் போகிறேன்."அதே கணத்தில் முழு வகுப்பும் ஒரே குரலில் அதிர்ந்தது."நாங்கள் அனைவருமே கையெழுத்திட்டு, பிறகு முழுப் பாடசாலை மாணவர்களையும் கையெழுத்திட வைத்து அனுப்புவோம்."முருகவேல் மாஸ்ரரே அதிர்ந்து விட்டார்."கடிதத்தை எழுதிவிட்டு என்னிடம் காட்டுங்கள். நான்தான் திருத்தித் தருவேன். அத்துடன் எனது கையெழுத்துத்தான் முதலாவதாக இருக்கும்.  எல்லா ஆசிரியர்களிடமும் நீங்கள் சென்று அவர்களிடமும் கையெழுத்து வேண்டுங்கள். அப்போதுதான்...""என்ன சேர்?""ஒன்றுமில்லை. அப்போதுதான் கடிதத்துக்குப் பெறுமதி அதிகமாக இருக்கும்."மாணவர் படை ஆமோதித்து கைதட்டியது.முருகவேல் மாஸ்ரர் தனக்குள் 'அப்போதுதானு'க்கான விடையைச் சொல்லிக் கொண்டார்.'அப்போதுதான் நமக்குள் இருக்கின்ற புல்லுருவிகளையும் நமக்கு அடையாளந் தெரிய வரும்.'
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree