மனுசா, நீ சொல்லுவாயா?

05 ஆகஸ்ட் 2007
ஆசிரியர்: 

 

மையலுக்கு அரிசி கழுவிக் கொண்டிருந்தாள் நேசம்மா. மாடியில் தொலைபேசி அலறும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. எட்டி முன் விறாந்தையில் பார்த்தாள்.யாரும் இருப்பதற்கான அரவமே இல்லை.எங்கே அவர்?கணவர் கந்தையாவை அவளது விழிகள் தேடின."ராசு! ஏய் ராசு!"வீட்டு வேலைக்காரச் சிறுமியை அழைத்தாள். பதிலில்லை."ஏய், எங்கேயடி போய்த் தொலைந்தாய்?"அவள் போட்ட சப்தத்தில் பின் பக்கத் தோட்டத்திலிருந்து சிறுமி ராசம்மா சிட்டெனப் பறந்தோடி வந்தாள்."என்னம்மா, கூப்பிட்டீங்களா?""எங்கேயடி அவர்?""அவரு தோட்டத்திலே நிக்கிறாருங்க.""மேலே டெலிபோன் ஒரு மணி நேரமா அலறுதே! காது யாருக்குமே கேட்காமல் செவிடாகவா போய் விட்டது? அவரை உடனே மேலே போய் டெலிபோனை எடுக்கச் சொல்லு.""சரீங்கம்மா."சிறுமி ராசம்மா மீண்டும் சிட்டாய்ப் பறந்து தோட்டத்துக்கு ஓடவும், அதற்குள் கந்தையா உட்பக்கமாக வரவும் சரியாக இருந்தது."ஐயா போனடிக்குது.."கந்தையா மடமடவென்று மேலே ஓடிப் போய்த் தொலைபேசியை எடுத்தார்.மறுபுறமிருந்து புயல் வேகத்தில் ஆங்கிலத்தில் ஒரு குரல்."மிஸ்டர் கந்தையா, தயவு செய்து இன்று வேலைக்கு வர வேண்டாம். வெளியிலும் நடமாடப் போக வேண்டாம். இரண்டு பையன்கள் உடனே உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். ஏதாவது தேவையென்றால் அவர்கள் வாங்கி வந்து தருவார்கள். எதற்கும் வீட்டிலிருந்து வெளியேற ஆயத்தமான நிலையில் எல்லாரையும் சொல்லிக் காத்திருங்கள். நான் மீண்டும் போனெடுப்பேன்.  எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருங்கள். ஓகே?""ஏன்? என்ன விஷயம் மிஸ்டர் சில்வா? விபரத்தைச் சொல்லுங்கள்"பதறினார் கந்தையா. அன்று சில மிக முக்கிய வேலைகள் அவருக்கிருந்தன. போகாமல் முடியாது. அவர்தான் அவற்றைச் செய்தாக வேண்டும்."உங்கள் ஆட்கள் அங்கே யாழ்ப்பாணத்திலே ஆமியைத் தாக்கி இருக்கிறார்கள். ரொம்பப் பேர் இறந்து விட்டதாகக் கேள்வி. முழு இலங்கையிலும் இப்போது படிப்படியாகக் கலவரம் பரவி வந்து கொண்டிருக்கிறது. இன்னும் நீங்கள் அதைப்பற்றி ரேடியோவில் கேட்கவே இல்லையா? என்ன மனிதர் நீங்கள்?" என்று மறுபக்கத்தில் கண்டித்த சில்வா தொடர்ந்தார்."நீங்கள் இருக்கும் பக்கம் மிகவும் ஆபத்தான இடம். முழுக்க முழுக்க எங்கள் சிங்களவர்கள்தானிருக்கின்றார்கள். மிகவும் கவனமாக எல்லாரும் இருங்கள். நான் என்ன செய்யலாம் என்று விரைந்து பார்க்கிறேன். சரியா?"கந்தையாவின் கை நடுங்கியது.இதென்ன இருந்தாற்போல இனக்கலவரம் துவங்கி விட்டதாமே! இந்த நாட்டின் தலையெழுத்து, யார் எதைச் செய்தாலும் அப்பாவிகள்தான் பலியாக வேண்டியிருக்கிறது.தனக்குத்தானே சபித்துக் கொண்டார் கந்தையா.தான் நேற்றிரவு முழுவதும் வானொலியைக் கேட்காமல் ஏதோ ஒரு சஞ்சிகையில் மூழ்கிவிட்டு, காலையிலும் நேராகத் தோட்டத்துக்குப் போய்க் கோழிக் கூட்டைத் துப்புரவு செய்த தவறை நினைந்து அவருக்கு மிகவும் கவலையாக இருந்தது.ஏனோ, பேராபத்து ஒன்று விரைந்து தனது வீட்டுக் கதவைத் தட்டப் போவது போன்ற ஒரு பிரமை கலந்த பயம் அவரைச் சூழத் தொடங்கியிருந்தது.சில சமயங்களில் நாமாகப் புரிந்து கொண்டு விளக்க முடியாத சில உணர்வுகள் நமக்குள்ளிருந்து கொண்டு நம்மை முன்கூட்டியே உலுப்பி எச்சரிப்பதுண்டு என்று யாரோ சொல்லி அவர் கேள்விப்பட்டிருந்தார்.மெதுவாகப் படிகளிலிறங்கிக் கீழே வந்தார் கந்தையா. அவரது தோற்றத்தைக் கண்ட நேசம்மா பதறி விட்டாள்."ஏன், என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? உங்களைப் பார்த்தால் எனக்குப் பயம் வருகிறது. உடம்புக்குள் என்ன செய்கிறது?""நேசம், நமது அன்ரன் சில்வாதான் போனெடுத்திருந்தார். பிள்ளைகள் எங்கே?""மூத்தவள் மட்டும் டைப்பிங் கிளாசுக்குப் புறப்பட்டுப் போனாள். பத்து மணிக்குத்தான் வருவாள். மற்ற மூவரும் வீட்டில்தான் இருக்கிறார்கள். ஏன்? என்ன நடந்தது?""இல்லை. யாழ்ப்பாணத்திலே பொடியள் ஆமியைத் தாக்கி ரொம்பப் பேர் இறந்து விட்டார்களாம். காலையிலே இருந்து முழு ஊரும் ஒரே இனக்கலவரமாக இருக்கிறதாம். வேலைக்கு வரவேண்டாம் என்று சில்வா எச்சரித்து, நமக்குத் துணைக்கு இரண்டு பொடியன்களை அனுப்புவதாகச் சொன்னார். விஷயம் சீரியசாகத்தான் இருக்கும்போல் தெரிகிறது. முதலில் நான் போய் மகளைக் கூட்டிக் கொண்டு வருகிறேன்."நேசம் தடுத்தாள். நீங்கள் போகாதீர்கள். சதீஷை அனுப்பலாம். 'ட்யூட்டரி' கிட்டத்தில்தானே இருக்கிறது. அவன் வேகமாகப் போய்க் கூட்டிக் கொண்டு வந்துவிடுவான்."கந்தையா முன்னெச்சரிக்கையாகச் சொன்னார்:"எதற்கும் மார்ட்டீன் ஐயாவின் மகன் ரஞ்சித்தையும் கூட்டிக் கொண்டு போகச் சொல். ஊர் நிலைமை சரியாயில்லை போலத் தெரிகின்றது."கந்தையாவின் கவலையிலும் நியாயமிருந்தது. ஆபத்துக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து வருவனவல்லவே! நொடிப் பொழுதில் வந்து எதையுமே மாற்றிவிட வல்லவையல்லவா? அதனால் எதுவும் சிறிதோ பெரிதோ முன்னெச்சரிக்கை அவசியம் என்று கருதினார்.சதீஷிடம் அப்பாவின் கட்டளையை விளக்கி, உடனே அக்கா எழில்வதனியை அழைத்துவர அனுப்பிய நேசம், மறக்காமல் ஒரு சாக்லேட் பக்கட்டை எடுத்து மகனிடம் கொடுத்து, "இதை ரஞ்சித்திடம் கொடு" என்று கூறினாள். ஏன் அந்த அதிவிசேட பரிசு அவனுக்கு அந்த அதிகாலையில் என்று சதீஷ_க்கு விளங்கவில்லை. வாங்கிக் கொண்டு, பக்கத்து வீட்டுக்கு ஓடி மணியை அழுத்தினான் அவன்.மார்ட்டீன் ஐயாதான் கதவைத் திறந்தார். திறந்தவர் ஒரு கணம் சதீஷைப் பார்த்து ஒருவிதமாக முறைத்தார். பிறகு முணுமுணுத்தார்."இவர்கள் நல்ல சனங்கள். இவர்களை வெறுப்பதில் என்ன நியாயமுமில்லை."சதீஷ_க்கு அவர் ஏன் முணுமுணுக்கிறார் என்று புரியாவிட்டாலும் ஏன் ஒரு விதமாகத் தன்னை முதலில் வெறுப்பாகப் பார்த்தார் என்று சந்தேகம் வந்தது."நான் ரஞ்சித்தைத் தேடி வந்தேன், மார்ட்டீன் அங்க்கிள். அக்காவை உடனே 'ட்யூட்டரி'யிலிருந்து கூட்டி வர வேண்டுமாம். நான் தனியே போகக் கூடாதாம். எங்கேயோ சணடையாம் அதனாலே ஊரெல்லாம் கலவரமாம். உங்களுக்குத் தெரியுமா அங்க்கிள்? அம்மாவுக்கு எதுவும் சரியாகத் தெரியவில்லை."சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்த அவர் அவனை உள்ளே அழைத்து அணைத்துக் கொண்டார்.உண்மையான நல்ல நட்புறவுகளைக் கூட சந்தர்ப்ப சூழ்நிலைகள் பாழ்படுத்தி விடப் பார்க்கின்றனவே!ரஞ்சித்தை சப்தமாக அழைத்த அவர் அவன் வந்ததும் உடனடியாக ஓடிப்போய் இருவரும் அக்காவை அழைத்து வாருங்கள் என்றார். சதீஷ், அம்மா கொடுத்த சாக்லேட்டை நீட்ட, ரஞ்சித் அதை வாங்கிக் கொண்டதும் தனக்கும் ஒரு துண்டு தாவென இவன் கேட்க, அவன் கேலியாக மறுக்க, சிறுவர்கள் இருவரும் இழுபறியிலீடுபட, மார்ட்டீன் சிரித்தவாறே உள்ளே போய் ஒரு சிறிய தட்டில் நான்கு லெவரியாக்களைக் கொண்டு வந்து சதீஷிடம் நீட்டினார். அவற்றைக் கண்டதுமே சதீஷ் சாக்லேட்டை மறந்து விட்டான்."ஹையா! லெவரியா. நன்றி அங்க்கிள்!"லெவரியா என்பது இடியப்பம்போல அமைந்த மா அவியலில் நடுவிலே இனிப்பு வைத்து சுற்றிச் செய்யும் ஒரு சிங்களப் பலகாரம். மிகவும் சுவை நிறைந்தது. எவருமே விரும்பி உண்பது.ரஞ்சித் வீட்டில் அது எப்போதாவது செய்யப்படவிருந்தால் முதல்நாள் சதீஷ_க்கு ரஞ்சித்தின் அம்மா சொல்லிவிடுவார். மறுநாள் காலைச் சாப்பாடு அங்கேதான் சதீஷ_க்கு நடக்கும். வீட்டுக்கும் கொடுத்து அனுப்புவார்கள்.இவன் வெளுத்துக் கட்டுவதற்கு ஈடாக அவனது அம்மா நேசம் அன்றைக்கு மாலை ஏதாவது பலகாரங்கள் அனுப்பி வைப்பார். பரஸ்பரம் அடிக்கடி இரு வீடுகளும் இவ்விதமாகப் பலகாரங்களும் உணவுகளும் பரிமாறிக் கொள்வது ஓரிரு வருடப் பழக்கமல்ல. கிட்டத்தட்ட எட்டு வருடப் பழக்கம்.அதற்குள்தான் இந்தப் புதுக் கலவரச் செய்தி ஏதோ ஒரு கறையை ஏற்படுத்திவிடப் பார்த்துக் கொண்டிருந்தது.மனதையுடைக்கும் செய்திகள் வந்து, நல்ல மனிதர்களுக்குள் மனவேறுபாடுகளை வளர்க்க அத்திவாரமிடுவது பெரிய அநியாயமான சூழ்நிலையல்லவா!லெவரியாவை சதீஷ் இரசித்து உண்டு முடித்ததும் இரு சிறுவர்களும் ஒன்றாக வெளியே ஓடினார்கள். வுழியில் ரஞ்சித் தனது சாக்லேட்டில் ஒரு பகுதியை ஒடித்து, சதீஷிடம் கொடுத்து விட்டு, இன்னொரு துண்டைத் தனியாக அவனது அக்காவுக்காகவும் வைத்துக் கொண்டான்.***********************கந்தையா கொழும்பில் கொள்ளுப்பிட்டியில் இயங்கி வந்த ஒரு பெரிய நிறுவனத்தின் ஏற்றுமதிப் பிரிவின் நிர்வாகி. அலுவலகத்தில் மெனேஜர் கந்தையா என்றாலே பலரும் நடுங்குவார்கள். வேலை விடயத்தில் அவர் அத்தனை கண்டிப்பானவர். அவரது சிரிக்க மறுக்கும் முகத்தை வைத்துச் சில இளசுகள் தங்களின் தனிப்பட்ட கோபத்தைத் தங்களின் கலந்துரையாடல்களின் போது அவரை 'டிராகுலா கந்தையா' என்றுதான் குறிப்பிட்டு தணித்துக் கொள்வார்கள்.ஆனால் முதலாளி அன்ரன் சில்வாவுக்கோ அவர் ஒரு தெய்வம் மாதிரி. அந்த நிறுவனம் ஆரம்பமான புதிதில் மிகவும் சிரமமான நிலையில் இருந்தது. அப்போது கந்தையா தமது தனித்திறமையினாலும் ஒரு தடவை அமெரிக்கா சென்று ஒரு முக்கியமான ஏக விநியோக உரிமை பெற்று வந்ததினாலும் மிகமிக விரைந்து எழுந்து விட்டது அந்த நிறுவனம். அதன் பிறகு கந்தையாவின் இடம் நிறுவனத்தின் இரண்டாமிடத்துக்கே உயர்ந்துவிட்டது.அவரது குடும்பத்துககு நிறவனத்தால் சகல வசதிகளும் நிறைந்த ஒரு வீடு தோட்டத்துடன் கொடுக்கப்பட்டது. முழுச் சிங்களப் பகுதியென்றாலும் சுற்றி இருந்தவர்கள் எல்லாரும் நல்ல வசதிமிக்க நல்ல குடும்பத்தினர்களாக இருந்ததுடன் கண்ணியமாகவும் கௌரவமாகவும் இவர்களுடன் பழகி வந்தார்கள்.மன பேதமற்ற, மத பேதமற்ற, இன பேதமற்ற, மொழி பேதமற்ற, சாதி பேதமற்றதான மக்கள் அணுகுமுறைகளால் நல்ல மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அவ்வட்டாரத்தில் இருந்து வந்தது.***********************வீட்டு மணியடிக்கக் கேட்டு கந்தையா போய்க் கதவைத் திறந்தார். இரு இளைஞர்கள். இருவரும் நிறுவன ஊழியர்கள்தான். சிங்கள இளைஞர்கள். வழமையாக இவரைக் கண்டால் வளைபவர்கள் அன்றைக்கு இவர் அவர்களைக் கண்டு வளைய வேண்டுமென்று எதிர்பார்ப்பதுபோல ஒருவித கம்பீரத்துடன் "முதலாளி உங்கள் பாதுகாப்புக்காக எங்களை அனுப்பியிருக்கிறார்" என்று விட்டு, நின்றார்கள்.பாதுகாப்புக்காக!ஒரு சிங்கம் படிப்படியாகப் பூனையாக மாறுவதைப்போன்று கந்தையாவின் உயர் அந்தஸ்து அன்று அந்த இரு இளைஞர்களிடம் இறங்கி வருவதை அவரால் தாங்க முடியவில்லை. அவர்களை வேண்டாம் என்று திருப்பி அனுப்புவது இலேசு. ஆனால் அதுவே கூட வேறு ஆபத்துக்கு வழிகோலிவிட்டால்?காலத்தின் காற்று திசை மாறும்போது அது எவ்வளவு ஆபத்தானதாக மாறிவிடுகின்றது?தமது அந்தஸ்தை நிலைநாட்டும் அக்கறையுடன் கந்தையா ஒரு சின்ன உத்தரவு போட்டார்."இருவரும் முதலில் கடைக்குப் போய் சில முக்கிய சாமான்களை வாங்கி வாருங்கள்.""அப்போ நாங்கள் உங்களுக்குப் பியூன் வேலை  செய்யத்தான் அனுப்பப்பட்டு வந்திருக்கிறோமா?"ஒருவன்தான் பேசினான். ஆனால் இருவருமே ஒன்றாகவே பேசுவதற்கு அது ஒப்பாக இருந்தது. கந்தையாவுக்கு முதலில் எதுவுமே புரியவில்லை.எதையும் முகத்தில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளக் கூடாத சூழ்நிலை. சற்றும் கடுகடுப்பில்லாத குரலில் சொன்னார்."சில்வா என்ன சொல்லி அனுப்பினார் தம்பிகள்?""அதைத்தான் வந்ததுமே சொன்னோமே! கடைக்கு என்றால் என்ன வாங்கி வர வேண்டும்?""பரவாயில்லை. நீங்கள் முன் அறையில் போய் இருங்கள். தேவைப்பட்டால் நான் சொல்கிறேன்."தாங்கள் எதையோ சாதித்து விட்டவர்களாக ஒருவிதமான அலட்சிய சிரிப்புடன் இருவரும் முன்னாலே போய் இருந்து கொண்டார்கள்.கந்தையாவுக்கு அவமானம் குடலைப் பிடுங்கியது. சில்வா போனெடுத்ததும் முதலில் இவர்களை மாற்றி விட்டுத்தான் மறுவேலை.இதற்கிடையில் எழில்வதனியுடன் சதீஷ் வீடு திரும்பி விட்டான். வீட்டுக்குள் நுழைகையிலேயே எழில்வதனியின் கண்களில் அந்த இரு இளைஞர்களும்தான் பட்டார்கள்."ஒயா கந்தையாகே துவத?" (நீர் கந்தையாவின் மகளா?)எழில்வதனிக்குப் பெரும் அதிர்ச்சி. எவருமே அப்பாவை மஹாத்தையா (ஐயா) என்றுதானே அழைப்பார்கள். இதென்ன இவன்கள் எடுத்த எடுப்பிலெ அவருடைய பெயரைச் சொல்லி..??ஒன்றுமே பதிலளிக்காமல் அவள் மடமடவென்று வீட்டுக்குள் நழைந்தாள். பின்னாலிருந்து கேட்டது."லஸ்ஸன படுவக், நெத்த?" (அழகான பொருள் என்ன?)கந்தையாவுக்கு முழு உடம்புமே நடுங்கத் தொடங்கிவிட்டது கோபத்தால். ஆனால்...…ஆனால்… எதையாவது உளறப்போய் அதுவே ஆபத்தாகி விட்டால்..?சிறிது கழித்து இருவரும் எழுந்து வீட்டைச் சுற்றி நடக்கத் தொடங்கினார்கள். எழில்வதனியின் அறைப்பக்கமாக வருகையில் நடை வேகம் குறைவது தெரிந்து. கந்தயா மகளின் அறைக்குள் நுழைந்து சன்னலுக்கு அருகில் நின்று மறைத்தவாறே கேட்டார்."வீட்டைச் சுற்றி என்ன செய்கிறீர்கள்?""ஹ_ம்? வீட்டுக்குள்ளேயும் வந்து சுற்றிப் பார்க்க வேண்டும். உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்களல்லவா முதலாளிக்கு பதில் சொல்லியாக வேண்டும்? அதனால் முழு வீட்டைப் பற்றியும் தெரிந்து வைப்பதுதானே சரி?"கந்தையாவின் வயிற்றில் நெருப்பு பற்றிக் கொள்ளுவதைப்போன்ற ஒரு பயங்கர உணர்வு.மகளை உட்பக்கமாகப் போகச் சொல்லிவிட்டு, மடமடவென்று மாடிக்குப் போய்த் தொலைபேசியை எடுத்தார். மறுபக்கத்தில் சில்வாவின் குரல். "மிஸ்டர் கந்தையா நானனுப்பிய பையன்கள் வந்தார்களா?""அவர்கள் எங்குள்ளவர்கள்?""ஏன்? உங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறவர்கள் இருவரும். அதனால்தான் அவர்களை அனுப்பினேன். என்ன விஷயம்?""முதலில் அவர்களை மாற்றிவிட்டு வேறு யாரையாவது அனுப்புங்கள். அல்லது வேறு யாருமே வேண்டாம்.""மிஸ்டர் கந்தையா விபரத்தைச் சொல்லுங்கள்."அழுகையே வந்துவிட்டது கந்தையாவுக்கு. தொலைபேசியை வைத்துவிட்டார்.அது மறுபடியும் அடிக்க, பதற்றத்துடன் கந்தையா சும்மா இருக்க, அது தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. அதைக் கவனித்த சுரேஷ் மேலே ஓடி வந்தான். வந்தவன் தானே போனை எடுத்தான்.எடுத்தவன் மறுபக்கக் குரல் பேசுவதைச் சில வினாடிகள் கேட்டுவிட்டு, சட்டென மேலேயிருந்து எட்டிக் கீழே சுற்றிக் கொண்டிருந்த இளைஞர்களை அழைத்தான்."சில்வா முதலாளி உங்களிருவரையும் கூப்பிடுகிறார்."அடுத்த கணம் யாரையுமே மதிக்காத ஒரு திமிருடன் இரு இளைஞர்களும் மாடியேறி வந்தனர். ஒருவன் சதீஷிடமிருந்து தொiபேசியைப் பறிப்பதைப் போல இழுத்தெடுத்துக் கொண்டு பேசினான்.அவன் வாயைத் திறந்தது மட்டும்தான். மறுபக்கத்திலிருந்து தாறுமாறாக சில்வா அவனை ஏசி கந்தையாவுக்கு ஏன் உங்களைப் பிடிக்காமல் உடனே திருப்பி எடுக்கச் சொல்கிறார் என்று கேட்க, அவன் பக்குவமாக ஏதோ பதில் சொல்லிவிட்டு, "உடனே இருவரும் திரும்பி வருகிறோம்" என்று விட்டுத் தொலைபேசியை ஓங்கியடித்தாற் போல வைத்தான்."நாங்கள் என்ன செய்தோமென்று முதலாளியிடம் கோள் சொன்னீர்? நாங்கள் எங்கள் முதலாளிக்காகத்தான் ஒரு தமிழனுக்குக் காவல் இருக்க வந்தோம். எங்களுக்கு எதிரான சாதிக்கு நாங்கள் வேலை செய்யத் தேவையில்லை. இப்போது எங்கள் வேலைக்கும் ஆபத்து வரும்போல தெரிகிறது. நாங்கள் ஒன்றுமே செய்யவில்லையே! உங்களை ஏசினோமா அல்லது உங்கள் மகளைப் பிடித்து இழுத்தோமா? எதற்காக இப்படிக் கோள் சொன்னீர்?"கந்தையா எதுவுமே சொல்லத் தெரியாமல் தடுமாறினார். தான் செய்த பிழையென்ன? எது பிழை எது சரி என்று தெளிவதற்கு முன்பே, "வரேங் மச்சான்.அப்பி யமு. மூட்ட தெனவிதியட்ட துன்னொத் தமா ஹரி" (வா மச்சான் போவோம். இவனுக்குக் கொடுக்க வேண்டியவிதத்தில் கொடுத்தாலே சரி) என்று ஒருவன் சொல்லிவாறே இறங்க, மற்றவன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே பின் தொடர்ந்தான்.முன் கதவை அவர்கள் திறந்து சாத்திய பலத்த ஒலியில் கந்தையாவின் முழுக் குடும்பத்துக்குமே குலை நடுங்கத் துவங்கிவிட்டது.அவர்கள் போனபின் எழில்வதனி அவரிடம் வந்தாள். "அப்பா இவன்கள் அந்தப் பியசேனவின் நண்பர்களப்பா!"பியசேன. அவன் ஒரு ரவுடி. கந்தையாவை ஒருநாள் அவன் மாலை ஏழரை மணியளவில் வழி மறித்துக் கப்பங் கேட்டமைக்காகக் கந்தையா தமது நிறுவனத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து, அதனால் பொலீஸ் கூண்டுக்குள் பல நாட்கள் வைக்கப்பட்டு நன்கு நொறுக்கப்பட்டு, பிறகு சிறைக்கும் சென்றவன். பொலீசின் கடுமையான எச்சரிக்கை காரணமாக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தவன்.இன்றைய சூழ்நிலையில்...கந்தையாவின் மனதுக்குள் பயம் படரத் தொடங்கி விட்டது.டக்கென்று மார்ட்டீன் ஐயாவுக்குத் தொலைபேசி எடுத்தார். அவரிடம் நட்ததையெல்லாம் எடுத்துச் சொல்லித் தனது குடும்பத்துக்கான பாதுகாப்பு பற்றிக் கேட்டார்.பயப்பட வேண்டாமென்றும் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் அவர் உறுதியளித்தும்தான் போன உயிர் திரும்பி வந்தது கந்தையாவுக்கு.******************வாசலில் காரொன்று வந்து நின்றதைக் கண்டு எட்டிப் பார்த்த கந்தையா வாசலுக்கு ஓடினார். மிஸ்டர் சில்வாதான் நேரில் வந்திருந்தார்.வந்தவர் தாம் அந்து இளைஞர்களை நன்கு கண்டித்ததாகவும் அவர்களால் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் தெரிவித்துவிட்டு, அன்று மாலை அவர்களை வேறொரு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து வருவதாகவும் அதுவரைக்கும் கவனமாக இருந்து கொள்ளும்படியும் கூறியவர், தமது வாகனத்திலிருந்து பல உணவுப் பொருட்களை இறக்கிக் கொடுத்தார்.அந்த நன்றி மறவாத நல்ல மனிதருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே கந்தையாவுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அந்த இளைஞர்களை அவர் திட்டியிருந்திருக்கக் கூடாது. அதிலும் தானாக எதுவுமே சொல்லாதபோது…சில்வாவுக்குக் கந்தையாவைப் புரியும்."மிஸ்டர் கந்தையா, நீங்கள் தடுமாறியதுமே அவன்கள் ஏதோ பெரிய தவறு செய்திருப்பது புரிந்தது. அதனால் நானே அவர்களுக்குச் சரியாகக் கொடுத்து விட்டேன். கவலைப்படாதீர்கள்."இப்போதும் கந்தையாவுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. சில சூழ்நிலைகள் புத்திசாலிகளையும் மடையராக்குவதுண்டு போலும்.சில்வா சிறிது நேரம் வீட்டாருடன் பொதுவாக அளவளாவி விட்டுப் போய் விட்டார். தனது இரு தம்பிகளையும் ஒரே தங்கையையும் தனது அறைக்குள் அழைத்துக் கொண்டு, கேரம் விளையாடிக் கொண்டிருந்தாள் எழில்வதனி.அவளது முகம் சிரித்தாலும் மனதின் பயமும் அதனுடன் கலந்து சிரித்துக் கொண்டிருந்தது. கந்தையாவும் நேசம்மாவும் வானொலியைத் திறந்துவிட்டு, அதிர்வலைகளால் துவண்டு கொண்டிருந்தார்கள்."தடீல்ல்ல்ல்ல்"தங்களின் வீட்டுக்கருகில் எங்கோ ஒரு போத்தல் விழுந்து நொருங்கிய சத்தம் கேட்டு கந்தையாவும் நேசம்மாவும் திடுக்குற, சிறுமி ராசு ஓடி வந்தாள்."அம்மா, அம்மா! யாரோ நம் வீட்டுக்கு போத்தலடிக்கிறாங்க!. பயமாயிருக்கு."தெய்வமே!தெய்வமா? அதுவே ஆலயங்களில் அடித்து நொறுக்கப்படுகையில் வருவதாவது வந்து காப்பாற்றுவதாவது!கந்தையா ஓடி வந்து முன் அருகு சன்னலால் பார்த்தார். பியசேனதான் ஒரு சிறு கூட்டத்துடன் நின்று கொண்டிருந்தான். அவன் மிகவும் சப்தமாகவே பேசினான்."என்னைப் பொலீசில் அடிக்க வைத்து சிறைக்கும் அனுப்பி என் குடும்பத்தைக் கதறி அழ வைத்த தமிழ் நாயே! இன்றைக்கு உன் பெண்களுக்கும் குடும்பத்துக்கும் எங்களிடம்தான் விருந்து. முடிந்தால் பொலீசுக்குப் போனடித்து உன்னை வந்து காப்பாற்றச் சொல்லு. இத்தனை வருஷமாக எங்கள் சிங்கள மண்ணை உறிஞ்சிய உனது இரத்தத்தையும் உன் குடும்பத்தின் மானத்தையும் துடிதுடிக்கக் குடிக்காமல் விடமாட்டோம். கொஞ்சம் பொறு. கொஞ்சம் பொறு."பதறியவாறே நின்றிருந்த கந்தையாவின் கண்கள் ஒன்றை அவதானித்தன. மார்ட்டீன் ஐயா அவர்களில் ஒருவனுடன் ஏதோ பேசி வாதாடிக் கொண்டிருந்தார்.சிறிது கழித்து பியசேன உரத்துக் கத்துவது கேட்டது. அவன் மார்ட்டீன் ஐயாவைத்தான் உரத்த குரலில் எச்சரித்தான்.கூட இருந்தவர்களின் சத்தத்தில் அவதானித்துக் கேட்பது கடினமாக இருந்தது.திடீரென நான்கைந்து போத்தல்களும் ஒரு சில கற்களும் வந்து விழ, ஒரு கண்ணாடியில் கீறல் விழுந்தது.கந்தையா அனைவரையும் உட்புறமாக விரட்டிக் கொண்டு பின்வாங்கினார்.பிறகு மௌனம். மயான மௌனம். ஒரு சிங்களக் காடையனின் குரல் கேட்டது.வீட்டுக்கு வந்தவனில் ஒருவனின் குரல்."ஏ கெல்லவ அத உஸ்ஸாண்ட ஓன" (அந்தக் கன்னியை இன்று தூக்க வேண்டும்)"அம்மா!" எழில்வதனி தன்னையும் அறியாமல் கத்திக் குளறினாள்."பார்த்துக் கொண்டிருக்காமல் உடனே முதலாளிக்குப் போனெடுங்கள்."அதற்குள் டெலிபோன் மணி தானே அலறியது.கந்தையா பாய்தோடி எடுத்தார்."ஹலோ?"மறுபக்கத்தில் மார்ட்டீன் ஐயாவின் குரல்."மிஸ்டர் கந்தையா உடனே உங்கள் முதலாளியின் போன் நம்பரைத் தாருங்கள்.""ஏன்?""பியசேன இன்று உங்கள் வீட்டைக் கொள்ளையிடவும் தீ வைக்கவும் தீர்மானித்திருக்கிறான். பெண்களுக்கும் பெரிய ஆபத்து வரவிருக்கிறது. நாங்கள் பாதுகாக்க முனைந்தால் எங்கள் வீட்டையும் எரித்து விடுவார்களாம். எங்களை அவதானிக்க இருவர் வீட்டுக்கு முன்னாலே நிறுத்தப்பட்டு உள்ளார்கள். தயவு செய்து பொலீசுக்குப் போன் பண்ணப் போகாதீர்கள். அதைப்போல பெரிய ஆபத்து உங்களுக்கு வேறிருக்க முடியாது. நான் உங்கள் முதலாளியிடம் சரியாக விளக்கி உடன் ஆவனவற்றைச் செய்கிறேன்.""அதுவரை?" கந்தையா தம்மையும் அறியாமலே கேட்டார்."உங்கள் வீட்டிற்குப் பின்புறமிருக்கிற மிஸ்டர் அல்பேட் பெரைராவிடம் இப்போதுதான் போன் பண்ணிச் சொன்னேன். அவர்கள் தங்கள் வீட்டின் பின் கதவைத் திறநது வைத்திருக்கிறார்கள். எல்லாரும் ஒன்றாகப் போகாமல் ஒவ்வொருவராக மூன்று நான்கு நிமிடத்துக்கொருவராக மெதுவாக அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து விடுங்கள். அவர்கள் மிஸ்டர் சில்வாவின் ஏற்பாடுகள் முடியும்வரை பார்த்துக் கொள்வார்கள். சரியா? புரிகிறதா?"கந்தையாவுக்கு நெஞ்சை அடைத்தது. ஒரு புறம் கொல்ல ஒரு கூட்டம். மறு புறம் காக்க ஒரு கூட்டம். வேடிக்கைதானே!எந்தக் கடும் இருட்டுக்குள்ளும் ஒரு சிறு ஒளிக்கீற்றுக்கு இடமிருக்கும் போலும்.ஆண்டாண்டுக் காலமாய்ச் சேகரித்துக் காத்துவந்த அத்னையையும் அரை மணிக்குள் கைவிட வேண்டிய அதிபயங்கர அனுபவம். யாரை, யார், எதற்காக நோவது என்றே தெரியவில்லை.நரிக்குப் பயந்து பதுங்கும் முயல்களாய்க் கந்தையாவின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக அடுத்த வீட்டுக்குள் இடம் பெயர்ந்து விட்டார்கள்.பிற்பகல் மூன்று மணியளவில் கந்தையாவின் வீடு அடித்து நொருக்கப்படும் கர்ண கடூர ஒலிகளுடன் காதையே தீப்பற்ற வைக்கத்தக்கதான கடும் தூஷண வார்த்தைப்பிரயோகங்களும் கலந்து, கந்தையாவின் குடும்பத்தைக் கதிகலங்க வைத்துக் கொண்டிருந்தன.அவர்கள் தங்கியிருந்த வீட்டின் சனங்களும் தங்களின் தற்காப்புக்காகச் சிரித்தபடி தங்களின் சன்னலோரங்களில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, கந்தையா குடும்பத்தின் உடைமைகள் அனைத்தும் கரைந்து கொண்டிருந்தன. அந்த நிலையில் மிகவும் கடின ஆக்ரோஷத்துடன் பியசேன தன்னால் அக்குடும்பத்தை உடல் ரீதியாகச் சிதைக்க முடியாதபடிக்கு அவர்கள் தப்பி விட்டதைச் சொல்லிச் சொல்லித் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான்.இந்த நிலையில் ஒருவன் எதையோ அவனிடம் ஊத, அவன் மார்ட்டீன் ஐயாவின் வீட்டைத் தட்டினான். கந்தையா இருந்த வீட்டுக்காரர்களுக்கு இந்தக் காட்சி பெரும் உதறலைக் கொடுத்துவிட்டது..அடுத்து பல காரியங்கள் விரைந்து நடந்தன. கந்தையா குடும்பம்  அவ்வீட்டாரின் சன்னலே இல்லாத வேனிற்குள் தடதடவென ஏற்றப்பட்டு, கண் இமைப்பதற்குள் அங்கிருந்து புறப்பட்டு வெளியேறியது. அதற்குள் வெறுந் தரையில் அனைவரும் குந்திக் கிடந்தார்கள். எவ்வளவு நேரமோ என்று தெரியாது பொழுது கழிந்தது. பிறகு ஓரிடததில் வண்டி நின்றது.கதவைத் திறந்து அவர்களை வெளியே இறஙகச் சொன்னார் சாரதி. அவர்களை இறக்கியதும் கதவை சாத்திவிட்டு, புறப்பட்டார். கையை அசைத்ததைத் தவிர வேறெந்த செய்தியுமில்லை.ஏகப்பட்ட சனங்கள். ஏற்றத் தாழ்வில்லாமல் இடம் பிடிக்கும் அதிநவீன போராளிகளாகப் பரவிக் கிடந்தார்கள். அவர்கள்? தமிழ் அகதிகள்.கந்தையாவக்குப் புரிந்து விட்டது. அது ஓர் அகதிகள் தங்குமிடம். ஏதோ ஒரு விழா மண்டபம் போலும். அதற்குள்ளும் தமக்கு நல்ல இடம கிடைத்து விட்டதாகக் காட்டிக் கொள்ளும் மௌனப் பெருமைகளும் தாம் வசதியாய் வாழ்ந்ததைக் காட்ட முயலும் காய்ந்துபோன அகந்தைகளுமாக ஒருவித சலசலப்பு நிறைந்த சூழல்.வாழ்விலே முதல் தடவையாகக் கந்தையா குடும்பம் கந்தையும் கிடைக்காமல் கடதாசியை விரித்து அதிலமர்ந்து தேநீர் கிடைக்கக் காத்திருந்தது. பசிக்கு ஏதாவது…வந்தால் பார்ப்போம். அதுவரைக்கும் காத்திருப்போம்.வாழ்க்கையின் படிகள் திசைமாறி அமைந்து கொண்டிருந்த வேளை.கந்தையா வாய் முணுமுணுத்துக் கொண்டீருந்தார்..தாய் மண்ணை விட்டு வந்தால் என்றைக்குமே நாய்தான்.இங்கே கிடைக்கும் கூல் டிரிங்க்சை விட அங்கே கிடைக்கும் கூழ்தான் சுவையானது. நிச்சயமானது.விரக்தியா? மனத் தெளிவா? ஞானமா?இனவெறி பிடித்த மனுசா! நீ சொல்லுவாயா?


We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree