முன் கதவைத் தட்டினால், பின் கதவால் ஓடிவிடு

23 ஜூலை 2006
ஆசிரியர்: 

 

'பட…பட…பட...'


அமலனின் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள்.


ஊரெங்கிலும் ஒரே இனக்கலவரமாக இருக்கிறது. தூரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் வேறு கேட்கிறது.


இந்த நேரத்தில் யார்?


அமலனின்
மனம் ஒருவித பயத்தால் நிறைந்தது. அந்தக் கலவரமான சூழலிலே யாரையும் கைது
செய்து அழைத்துப் போவதும் போனவர்கள் மறைந்து போனதும் கதைகளாகப் பரவிக்
கொண்டிருந்தது.


வேலிகளும் பயிரை மேய்ந்து உருசித்திட்ட இனக்கலவரமல்லவா! இரக்கத்தை எவரிடம், எங்கே எப்படித் தேடுவது?


இரக்கத்தின்
பொறுப்பில் சிங்கமும் அதற்காக ஏங்கும் நிலைமையில் ஆடுகளும் இருந்த
நிலையினால், அந்த நேரத்தில் இரக்க உணர்வு கூட எதற்கோ அஞ்சி, எங்கேயோ ஓடிப்
பதுங்கிக் கொண்டிருந்தது.


காலதேவன்
தனது பொறுப்பைத் தற்காலிகமாகக் கைகழுவிவிட்டிருந்தாற் போலவும் சிங்கள
இனவெறியர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்திருந்தாற் போலவும் ஓர் அச்சந்தரும்
சூழ்நிலை இலங்கைத் தீவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது அப்போது.


அந்தச்
சின்னஞ்சிறு தீவு, சில சின்னப் புத்தி மனிதர்களின் சின்னத்தனமான
தூண்டுதால் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது. இரத்தத்திலும் சாம்பலிலும்
குழைந்து, சிதைந்து கொண்டிருந்தது.


மக்களைச் சரியாக
வழி நடத்த வேண்டிய தலைவர்கள் பலரும் பிழையையே சரியெனப் போதித்தவாறு, போதி
மரச் சித்தரின் புனிதமான கொள்கைகளைப் பின்பற்றுவதாக அரற்றிக் கொண்டு,
அவற்றின் மேலே சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்கள்.


சனநாயகம்
என்ற சொல்லுக்கு இனநாயகம் என்றும் பொருள் கூறலாம் என்பதைப் போல,
இலங்கையின் சிங்கள பௌத்த பெரும்பான்மையானது சனநாயக ஆட்சியாகத் தன்
இனநாயகத்தை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் தன் மதமும் தன் மொழியும்
தவிர்ந்த ஏனைய அனைத்தும் அனைவரும் தனக்குக் கீழே, தான் சொன்னபடிதான் நடக்க
வேண்டும், அதை மறுத்தால் அல்லது எதிர்த்தால் இப்படித்தான் அனுபவிப்பீர்கள்
என்று பயவுணர்வை இதர சமூகங்களுக்கு எச்சரிக்கையாக விடுத்தவாறே
நடைமுறைப்படுத்திக் காட்டிக் கொண்டிருந்தது.


மனிதாபிமானம்?
அது
அத்தீவைச் சுற்றியிருந்த சமுத்திரத்திற்குள் அநீதியின் அடியைத் தாங்கிட
முடியாமல் பாய்ந்து, குதித்து, படிப்படியாக மூழ்கிக் கொண்டிருந்தது.


ஒரு
பெயர், ஓர் உடை, ஒரு வார்த்தை, ஓரு குங்குமப் பொட்டு, ஒரு சிறிய
திருநீற்றுக் கீறல், ஒரு பத்திரிகை என்பதுகூட உயிராபத்துக்கு
வழிவகுத்துவிடும் என்ற அளவிற்கு இனவெறியில் அந்த தேசம் அழுந்திக் கொண்டு,
நிமிர்ந்தெழ முடியாமல் நசுங்கித் தவித்துக் கொண்டிருந்தது அந்த நாட்களில்.


ஆயிரத்துத் தொழாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டின் நடுப்பகுதிதான் அது.


கடவுளே!
மனித மனங்களுக்குள் எதற்காக இத்தகைய வெறியுணர்வுகள் நிறைந்து வழிய உன்னால்
எப்படித்தான் அனுமதிக்க முடிந்தது? ஊரே இப்படி இரத்தம் வழிந்து, மரணங்கள்
மலிந்து துடிதுடிக்கும்படியாக நேர்ந்திருக்கின்றதே!


'பட…பட…பட'  மீண்டும் கதவு தட்டப்பட்டதும் செய்வதென்னவெனத் தெரியாதவனாக அமலன் கதவருகில் சென்று கேட்டான்.


"யாரது?"


"நான்தான் செல்வராஜ். தயவு செய்து கதவைத் திறவுங்கள்."


செல்வராஜ்!


ஆறுதல்.


அப்பாடா!


அமலன் உடனே கதவைத் திறந்து விட்டான்.


செல்வராஜ் 
அமலனின் நண்பன். ஒரு பொதுப்பணி ஆர்வலன். அமலன் முன்பு தலைமை வகித்து வந்த
ஓர் இளைஞர் இயக்கத்தின் அப்போதைய தலைவனாக அவனே இருந்தான்.


"என்ன விஷயம் செல்வராஜ்? முதலில் உள்ளே வாருங்கள்."


உள்ளே வந்தமர்ந்த செல்வராஜ் வந்த நோக்கத்தைச் சொன்னான்.


வத்தளைப்
பக்கமிருந்து சுமார் இருபது குடும்பங்கள் அருகிலிருக்கிற ஆலயத்துக்குள்
வந்து தஞ்சமடைந்திருப்பதாகவும், அவர்களைத் தங்க வைக்க இடமில்லாமல் ஆலயக்
குரு தடுமாறுவதாகவும், நிர்க்கதியாக நிற்கும் அவர்களுக்கு உடனடியாகத்
தங்குமிட வசதி செய்து கொடுப்பது அவசியம் என்றும், அது பற்றிப் பேசவே
வந்ததாகவும் செல்வராஜ் விளக்கினான்.


அமலன் அப்போது ஒரு
சங்கத்தின் செயலாளராக இருந்தான். அந்த சங்கத்துக்கென்று ஒரு மூன்று மாடிக்
கட்டிடம் உண்டு. அதை நம்பித்தான் செல்வராஜ் வந்திருந்தான் என்பது
புரிந்தது அமலனுக்கு.


சங்கத்தின் ஒழுங்குப்படி
செயற்குழுவைக் கூட்டி அங்கீகாரம் பெறாமல் எதுவுமே செய்ய முடியாது. ஆனால்
அந்தக் கொதிக்கின்ற சூழ்நிலையில் செயற்குழுவாவது, கூடுவதாவது!


மிகவும் அவசரமும் அவசியமுமான சூழ்நிலையென்பது செல்வராஜின் உடனான கலந்துரையாடலில் இருந்து தெளிவாகிவிட்டது.


சில
சந்தர்ப்பங்களில் சம்பிரதாயங்களும் சட்டங்களும் நீதியை நசுக்கி
விடுகின்றன. வேறு சில சந்தர்ப்பங்களில் சட்டமீறல்களும் சம்பிரதாய
மீறல்களுமே நீதியைத் தட்டிக் கொடுத்துக் காக்கின்றன.


வேடிக்கைதான்.


சட்டென்று
சரியென்று சொல்வதால் பின்னால் பல பிரச்சினைகளுக்குத் தான் முகம் கொடுக்க
வேண்டியிருக்கும் என்பது அமலனுக்குத் தெளிவாகப் புரிந்திருந்த போதிலும்
மனசாட்சி அந்தப் பயத்தை உதறித்தள்ளி எதிர் கொள்ளத் தூண்டுவதை உணர்ந்தான்.


எழக்கூடிய
சாதாரண பிரச்சினைகளை விடவும் எங்கும் போலவே எல்லா சங்கங்களிலும் ஒட்டி
நின்றுகொண்டு, தொல்லை கொடுக்கவும் இடைஞ்சல் பண்ணவும் மட்டுமே தெரிந்த,
வெட்டிகள் குழுக்களுக்கும் சுயதிறமையற்ற, தற்பெருமை மட்டும் பேசும் வெறும்
வாய்ச்சவடால்களுக்கும் அந்த சங்கத்திலும் குறைவிருக்கவில்லை.


அந்த
சொறிச்சல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வரும். அடிக்கடி நித்திரையைக்
குழப்பும் அந்த இரண்டாந்தர சமூக சேவா கீர்த்தி மூர்த்திகள்தான் பெரிய
சிரங்குகள். அல்லவா?


அமலனால் உடனடியாக முடிவெடுப்பது
கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் ஆலயத்துக்குப் போய் நிலைமையை
அவதானித்துவிட்டு முடிவெடுப்போம் என்று புறப்பட்டான்.


அவர்களிருவருக்காகவும் அமலனின் மனைவி தயாரித்துக் கொண்டு வந்திருந்த தேநீர் மேசைமேல் அணுகுவாரற்று  அரற்றிக் கொண்டிருந்தது.


ஆலயத்துக்குள்
நுழைந்தார்கள் இருவரும். குழந்தைகளும் சில இளைஞர்களும் தாய்மார்களுமாக ஒரு
பெருங்கூட்டம். ஆண்கள் குறைவாகவே இருந்தார்கள். அவர்களெங்கே என்று அமலன்
கேட்டபோது, அவர்கள் வேறோர் ஆலயத்தில் இருப்பதாகவும் இவர்களுக்கான
ஏற்பாடுகள் முடிந்த பின்னர் அழைத்து வந்து சேர்த்துவிட
நினைத்திருப்பதாகவும் ஆலய குரு தெரிவித்தார்.


அதற்குள்.....


'டப்... டப்... டப்...'


இயந்திரத் துப்பாக்கியால் சுடும் சப்தம். அமலன் கோவிலின் மேல் பகுதிக்குச் சென்று சன்னலால் பார்க்க முயற்சித்தான்.


ஒருவர்
ஓடி வந்து அவனது சட்டையைப் பின்புறமிருந்து இழுத்துத் தடுத்தார். அது
ஆபத்து என்றும் ஆமி சுடுகிறதாகவும், சில சமயம் துப்பாக்கியை இந்தப்
பக்கமாகத் திருப்பி விட்டால் பேராபத்து என்றும் தடுத்தவர் தெரிவிக்கவே
அமலன் வேறு வழியில்லாமல் இறங்கி வந்து விட்டான்.


மயான அமைதி.
அந்த
ஆலயத்துள் குவிந்திருந்த அத்தனை அகதிகளுமே ஒட்டு மொத்தமாக மௌனம் காத்தமை
ஓர் அசாதாரணமான, அனுபவிக்கவே கடினமான அனுபவமாக அமலனுக்கு இருந்தது.


திடீரென்று...


கோவிலின் முன் கதவை யாரோ பலமாகத் தட்டுவது போல் சப்தம்.


ஓருவர்
மெதுவாகச் சென்று கதவைத் திறந்தார். திறந்தவர் சிறிது நேரம் யாருடனோ பேசி
விட்டுத் திரும்பி வந்தார். அவர் முகத்தில் ஒரே பதட்டம். உடல் வேறு
வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தது.


"ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்? யார் வந்தார்கள்? என்ன வேண்டுமாம்?"


"நேவிக்காரர்கள்.
யாரோ இங்கே பயங்கரவாதிகள் இருப்பதாகச் சொன்னார்களாம். அதனால்தான்
வந்தார்களாம். எச்சரித்துவிட்டுப் போனார்கள். நான் அகதிகள் மட்டுமே
இருப்பதாகவும் அவர்களும் சீக்கிரமாக வேறு இடத்துக்கு அனுப்பப்பட
இருப்பதாகவும் சொன்னேன். மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்."


அமலனுக்கும்
ஏனையவர்களுக்கும் உண்மையில் மிகவும் பயமாக இருந்தது. அந்த
அகதிகளுக்கிடையில் இளைஞர்கள் சிலரும் இருந்தபடியால் எதுவும் நடக்கலாம்போல்
ஆபத்து தலையை நீட்டி அச்சுறுத்திக் கொண்டிருந்தது.


அமலனும் 
செல்வராஜனும் பேசி முடிவெடுத்துக் கொண்டனர். உடனடியாகக் குடும்பங்களைத்
தனது சங்க மண்டபத்தில் தங்க அனுமதிப்பதாக அமலனும் ஒத்துக் கொண்டான்.


வெளியிலே
போலீசார் சத்தமாகக் கத்தி, ஏதோ ஒழுங்கு செய்வதுபோலத் தெரிந்தது.
குருவானவர் மட்டும் வெளியில் சென்று பேசி, தான் ஓர் ஏற்பாடு செய்வதாகச்
சொல்லிவிட்டு கோவில் முன் வாசலை நோக்கி நகர்ந்தார்.


ஆந்த ஆபத்தான வேளையில் அவர்தான் போக வேண்டும. அதுதான் சரியென்று அனைவரும் காத்திருந்தார்கள்..


கதவைத் திறந்த குரு சில விநாடிகளுக்குள் நடுநடுங்கியவாறே வெகு வெகமாகத் திரும்பி வந்துவிட்டார்.


"என்ன ஃபாதர், என்ன நடந்தது?"


"வெளியே வர வேண்டாமாம். வந்தால் சுட வேண்டி வருமாம்."


அவரது நா தளதளத்தது. அச்சத்தால் ஆடியே போயிருந்தார் மனிதர்.


"ஃபாதர் யார் அப்படிச் சொன்னது?"


செல்வராஜ்தான் கேட்டான்.


"இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்."


ராஜ்குமார் சுவாமியின் நல்ல நண்பராயிற்றே! காலமும் கடமையும் நல்ல நட்பையும் கூட, சற்றுத் தூரவே தள்ளி வைத்து விடுமோ?


எப்படியும் நேவி திரும்பவும் வரலாம். தொந்தரவு கொடுக்கலாம். அதற்குள் ஆலயத்திலிருந்து மக்களை அகற்றிவிடுவது முக்கியம்.


ஆலயக்
கதவிடுக்கினூடாக அமலனும் செல்வராஜனும் உற்றுப் பார்த்தார்கள்.
இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நடுச்சந்தியில் கையில் சுழல் கைத்துப்பாக்கியுடன்
நிற்பது தெரிந்தது.


எதிர்த்திசையில் தெரு முழுவதுமே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.


சுமார் அரை மணி நேரம் கழிந்திருக்கும். ஆலய குரு மீண்டும் ஒரு முறை கதவை இலேசாகத் திறந்தார்.


இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் அதைக் கண்டு விட்டு, கதவை நோக்கி வருவது தெரிந்தது.


"ஐ
ஆம் வெரி சாரி ஃபாதர். புறக்கோட்டைப் பகுதியில் தாக்குதல் நடப்பதாக செய்தி
கிடைத்தது. அதனால்தான்... இப்போது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?"


ஆலய குரு மடமடவென்று விடயத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.


எல்லாரையும் நான்கு நான்கு பேராக வரிசையாக அழைத்துக் கொண்டு செல்லலாம் என அவர் அனுமதித்தார்.


அடுத்த சில நிமிடங்கள் வினாடிகளாக மறைந்தன.


இளைஞர்களான
அகதிகளை நடுவில் விட்டு, தாய்மார்களையும் குழந்தைகளையும் இருபக்கமும்
நடக்க வைத்து, அந்த அபாரமான அகதிகள் ஊர்வலம் அமலனின் சங்கக் கட்டிடத்தை
நோக்கி நடை பவனியில் புறப்பட்டது.


கொஞ்ச தூரம்தான் கடந்திருப்பார்கள்.


"கிரீரீரீரீச்!"


munn kathavai thaddinaal 3திடீரென 'பிரேக்' பிடித்து வழி மறித்தது தாண்டிச் சென்ற இராணுவ ஜீப் வண்டியொன்று.


குருவானவர் பயத்தில் சிங்களம் பேச முடியாமல் தடுமாறுவது தெரிந்தது. ஏக்க மேக்க என்று ஏதேதோ உளறினார் அவர்.


துறவியும் கூட உலக பயங்கரத்திற்கும் உயிர்ப்பயத்துக்கும் விதி விலக்கல்லவென்பது நன்றாகத் தெரிந்தது.


செல்வராஜனும்
அமலனும் ஜீப் வண்டியை அணுகி, சிங்களத்தில் நிலைமையை எடுத்துச் சொன்னதுடன்
போலீஸ் அனுமதியுடனேயே செல்வதாகவும் தெரிவித்ததும் மேலே செல்ல அனுமதி
கிடைத்தது.


எதிர்காலமே தெரியாத அந்த மக்கள் கூட்டம்
கடலலைகளுக்கு மேல் அலைமோதும் கடதாசிக் கூடைபோல அசைந்து, அசைந்து சங்க
மண்டபத்தைச் சென்று அடைந்தது.


அந்த சங்கத்தை
அடுத்தாற்போல பல சிறு சிறு மக்கள் குடியிருப்புக்கள். அனைத்தும் சின்னச்
சின்னப் பெட்டி போன்ற வீடுகள்தான். அவற்றில் வாழ்ந்தவர்களும் சாதாரண
ஏழைகள்தான்.


ஆனால்...
அந்த அவலமான நேரத்திலே
அவர்கள் காட்டிய மனிதாபிமானமும் ஒத்துழைப்பும் மலைக்க வைத்தன. சிறு சிறு
பாத்திரங்களில் உணவும் பாய்களும் பழம் உடைகளும் வந்து குவிந்தன.


அந்தத்
திடீர் அகதிகளுக்கு உதவி செய்ய, தங்கள் சாதாரண வாழ்க்கையிலே அகதிகளைப்
போலவே வாழ்ந்து வந்த அந்த வசதியற்ற ஏழைகள் உதவியதில் மனிதாபிமானம் என்ற
வெண்ணாடையில் தர்ம தேவதை அங்கே உயிர் பெற்று வந்து நின்றதைக் காணக்
கூடியதாகவிருந்தது.


திடீரென அந்த அவல வேளையிலும் ஒரு வித கலகலப்பு அந்தச் சூழலில் உருவாகி விட்டது.


அமலனும் செல்வராஜனும் அந்த அகதிகளுடன் பேச்சுக் கொடுத்தனர்.


ஒருவரிடம் அமலன் கேட்டான்:
"உங்களுக்கு என்ன நடந்தது?"


"நேத்துக்
காலையிலே எட்டு மணியிருக்கும். பக்கத்து வீட்டு ஆளுங்க, சிங்களவங்க எங்களை
தாக்குறதுக்கு வர்றதாச் சொன்னாங்க. எல்லா சனங்களும் உயிரைக் கையிலே
புடிச்சிக்கிட்டு ஓடினோம். அகப்படுற எல்லாரையும் அடித்துக் கொல்றதாச்
சொன்னாங்க. வீடுகளுக்கும் தீ வைச்சாங்களாம்."


"நீங்கள் பாத்தீர்களா?"


"இல்லீங்க."


"அப்படியென்றால் ஏன் நீங்கள் ஓடினீர்கள்?"


"எங்கள் வீட்டு முன் கதவை உடைக்கிற மாதிரி சத்தம் கேட்டுதுங்க. உடனே நாங்கள் பின் கதவாலே ஓடிவந்திட்டோம்."


"பின்பக்கமாக யாராவது வந்து நின்றிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? முன் பக்கத்தாலே ஓடியிருப்பீர்களா?"


பதில் சொல்லத் தெரியாமல் அந்த அகதிப் பிண்டம் வாயைப் பிளந்து கொண்டு நின்றது.


அதே சமயத்தில் வெளியில் நின்றிருந்த, யாரோ முன்பின் தெரியாத ஓர் ஏழைத் தமிழ் உருவம் அவர்களின் அருகே வந்து நின்றது.


"சீ!
வெட்கமாயில்லை சொல்வதற்கு? யாரோ சொன்னதக் கேட்டு விட்டுப் பயந்து
ஓடியிருக்கிறீர்களே! அடிபட்டுச் சாகிறதுக்கு நீங்களென்ன நாய்களா?
அடிபிடிபட்டு செத்தால் மானத்தோடேயாவது செத்ததாக இருக்குமே!"


திரும்பிப் பார்த்தான் அமலன்.


ஒரு மனிதக் கந்தல் நின்று கொண்டிருந்தது.


அதன் கண்களில்தான் எத்தனை ஆழமான கொழுந்துவிட்டெரியும் கனல்!


"அப்படி ஏசக்கூடாது. பாவம். நொந்து போன சனங்கள். இரக்கப்பட வேண்டும்."


"எப்படி
ஐயா, ஏசாமல் இருக்கிறது? இவர்களைப் போன்ற கோழைகளால்தான் அவன்கள் அடித்து,
அடித்து அடக்குகிறான்கள். ஓன்று கேட்கட்டுமா? வத்தளையிலே வீட்டு முன்
கதவைத் தட்டினதும் ஒடி வந்து விட்டார்கள்.  நீங்கள் எல்லாரும் உதவி
செய்ததாலே சரி. தற்போதைக்குத் தப்பி விட்டார்கள். இந்த சங்கக் கதவிலேயும்
வந்து அவர்கள் தட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். பிறகு எங்கே
குதித்து ஓடுவார்களாம்? இப்படி மரியாதை கெட்டு வாழ்கிறதை விட, மானத்தோடே
சாகிறது நல்லதில்லையா? நீங்களே சொல்லுங்கள்."


ஆத்திரத்தோடு கத்திய அந்த ஏழை, அமலன் பேசிக் கொண்டிருந்த அகதியிடம் 'சட்'டென்று திரும்பிச்  சொன்னார்.


"நான்
சொன்னதுக்காக கோபப்பட வேண்டாம். உங்களுக்காவது இந்த சங்கம் இடம்
கொடுத்திருக்கிறது. எனக்கு படுக்க இடமே கிடையாது, தெரியுமா? பேவ்மன்ட்டிலே
(நடைபாதையிலே) படுக்கிறவன் நான். என் மரியாதையை விட்டு விட்டு உங்களோடே,
கூட்டத்தோடே கூட்டமாக நானும் அகதிதான் என்று புகுந்தால், எனக்கும் எல்லாம்
கிடைக்கும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. ஏன்  தெரியுமா? எனக்கு என்
தன்மானம்தான் முக்கியம். இங்கே யாராவது வந்து தட்டினால் தயவு செய்து ஓடி
விடாதீர்கள். எதிர்த்து நின்று காட்டுங்கள். இப்படி அடிவாங்குகிறதும்
பறைத் தமிழன் என்றும் நாய்கள் என்றும் அவன்களிடத்தில் ஏச்சு கேட்கிறதும்
போதும். அடிபட்டுச் சாவதை விடவும் அடிபிடியில் சாவது மேல். நான்
வருகிறேன்."


அந்த அரிய மனிதனான ஏழை சென்று விட்டார். அமலனும் செல்வராஜனும் வாயடைத்துப் போய் நின்றார்கள்.


அகதிகளுக்கிடையிலே இருந்து ஒரு வயதான தாயார் சொல்வது கேட்டது.
“"அந்த
ஆள் சொல்லிட்டுப் போனது சரிதான். இன்னொரு தடவை எவனாவது அடிக்க வந்தால்
ஓடப்படாது. எதிர்த்து நிற்க வேண்டும். செத்தாலும் சரி. பயப்படவே கூடாது."


காலம் கடந்த ஞானம்தான். என்றாலும் பரவாயில்லையே!


அமலனின் இதழ்கள் முறுவலித்துக் கொண்டன.


ஒரு திரைப்படபபாடல் உண்டாமே!


தமிழனென்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா..


தரணியெங்கும் நிகர் உனக்கு இல்லையென்று சொல்லடா?


ஆமாம் தமிழா! உனக்கு நிகர் யாருமே இல்லைத்தான்.


நீ ஊரெல்லாம் இருப்பவன். ஆனால் உனக்கேன்று ஓர் ஊரே இல்லாதிருப்பவன்.


யாதும் உனக்கு ஊரே! யாவரும் உனக்குக் கேளிரே!


உனக்கு நிகராக யார் இருக்கிறார்கள்?


பாடு! விடாமல் பாடு!


முக்கிய குறிப்பு:
1983 கழிந்து 2006 இன்று வந்து நிற்கையில்தான் காற்று திசை மாறிவருவது உறுதியாகத் தெரிகின்றது.


வெகு வெகு விரைவிலே… உலகின் இதர அகதியுலகம் தமிழனைப் பார்த்துப் பாடத்தான் போகின்றது.


எப்படி?


"தரணியெங்கும் நிகருனக்கு இல்லையென்று சொல்லடா…..!"

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree