கனவாகிப் போனவர்கள்!

26 ஜூலை 2006
ஆசிரியர்: 

 

"அம்மம்மா, எனக்கு இன்னுமொரு பிடி சோறு வேணும். மிளகாயும் சேர்த்து வையுங்கோ."
 
"இந்தாடி ஆச்சி... உனக்குத் தராம ஆருக்குக் குடுக்கப்போறன்?"

என்ர கையில சோத்தை வைக்கும்போதே அம்மம்மான்ர கண்ணிரண்டும் பொல பொல என்று கண்ணீர் வடிக்குது.

"ஏனழுறீங்கள்? உங்களுக்குச் சோறு காணதெண்டோ? எனக்குக் காணும். இந்தாங்கோ இதை நீங்கள் சாப்பிடுங்கோ."

அம்மம்மா இன்னும் பெருசா அழத்தொடங்கிட்டா. நானும் அழத்தொடங்கிட்டன். நானழுறதைப் பார்த்திட்டு அம்மம்மா அழுறதை நிப்பாட்டிட்டா.

"அம்மம்மா..  ஏனழுதனீங்கள்..?"

"இல்லடா சின்ன மாமான்ர ஞாபகம் வந்திட்டுது.... அவனும் உன்னை மாதிரித்தான் குழையல் சோறும் மோர் மிளகாய்ப் பொரியலும் எண்டால் இன்னும் இன்னும் எண்டு கேட்டு வாங்கிச் சாப்பிடுவான். இண்டைக்கு மட்டும் என்ர பிள்ளை என்னோட இருந்திருந்தால்... என்னையிப்பிடி கஸ்டப்பட விட்டிருப்பானே?"

"அம்மம்மா, நீங்கள் எல்லோ சொன்னீங்கள் சின்ன மாமா குட்டிச் சித்தீன்ர கல்யாணவீட்டுக்கு வருவார் எண்டு. ஆனால் அவர் வரேல்லயே."

"அவன் இண்டைக்கு வருவான், நாளைக்கு வருவான் எண்டுதான் இந்தப் பத்து வருசமாச் சொல்லிக்கொண்டிருக்கிறன். எனக்குக் கொள்ளிபோடவாலும் அவன் வரோணும்."

"அம்மம்மா ரியூசன் ரீச்சர் சொன்னவா உங்கட சின்ன மாமா திரும்ப வர மாட்;டார்.உயிரோட இருந்தாத்தானே அவர் வாறதுக்கெண்டு.ஏனம்மம்மா அவா அப்பிடிச் சொன்னவா.

"என்ர கடவுளே.... குழந்தைப்பிள்ளையளிட்ட என்ன கதைக்கிறதெண்டே தெரியேல்ல.. இதுகளெல்லாம் ஒரு ரீச்சர். அவாட்ட உன்ன கொம்மா ரியூசனுக்கு விடுறா. ஆவா அப்பிடித்தான் சொல்லுவா கானவிக்குட்டி. நீ இருந்து பாரன் சின்னமாமா ஒருநாளைக்கு வரத்தான் போறார். அவையிவை சொல்றதையெல்லாம் கேக்காம கெதியாப் போய் படுத்து நித்தா கொள்ளணை. நாளைக்குப் பள்ளிக்கூடமெல்லோ?"

"சரி அம்மம்மா. நீங்களும் படுங்கோ. குட்நைட்."

-----------------------------------------------------

"அம்மா!"

"ம்.."

"அம்மா!!"

"ம்.. என்ன கானவி, நீ இன்னும் நித்திரை கொள்ளேல்லயோ?"

"அம்மா சின்ன மாமாக்கு என்னைத் தெரியுமோ?"

"என்ன இப்ப திடீரெண்டு சின்ன மாமான்ர ஞாபகம்?"

"சின்ன மாமாக்கு என்னைத் தெரியுமோவெண்டெல்லோ கேட்டனான் உங்களிட்ட."

"உதான்... உதான்... உந்த முன்கோபமும் வாயும்தான் இன்டைக்கு அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா எண்டு கூடத் தெரியாம எங்களெல்லாரையும் அலைக்கழிக்குது... உரிச்சு வச்சு உருவத்தில குணத்தில படிப்பில எல்லாத்திலயும் அவனைப்போலவே வாறாய் நீயும்."

"உண்மையாயோம்மா?அப்ப சின்ன மாமா என்ன மாதிரியோ இருப்பார்? எங்க பார்ப்பம் படம் காட்டுங்கோ."

"அவன்ர படத்தை நெடுக அம்மம்மா பார்த்து அழுறா எண்டு, பெரிய மாமா எல்லாப் படங்களையும் கொண்டுபொய் றங்குப்பெட்டிக்க வச்சிட்டார். பிறகு எடுத்துக் காட்டுறன்."

"சரி, பின்னச் சொல்லுங்கோ... சின்ன மாமாக்கு என்னைத் தெரியுமோ தெரியாதோ?"

"அப்ப உனக்கொரு இரண்டரை வயசிருக்கும். ஒரு சித்திரைப் பொங்கலுக்கு மொறட்டுவலிருந்து வந்து நிண்டவன். அந்த நேரம் யுனிவர்சிற்றிப் பெடியங்கள் எல்லாரையும் சந்தேகப்பட்டு ஆமிக்காரர் பிடிச்சுக்கொண்டு திரிஞ்சவங்கள். இவன் சொல்லாமக் கொள்ளாம நேர இங்க வந்திட்டான். அன்றைக்கிரவே தாத்தா எவ்வளவு கெஞ்சினவர் இவனை உடன முல்லைத்தீவில அப்பப்பான்ர பண்ணைல போய் நிக்கச் சொல்லி. இந்தப் பிடிவாதம் பிடிச்சவன் யாற்றயும் சொல் கேட்டாத்தானே. விடாப்பிடியா தானிங்கதான் நிப்பன் என்று நிண்டவன். தாத்தா அடிக்கப்போக பக்கத்தில கிடந்த பானையத் தட்டி விட்டான். அது அம்மியோட போய் அடிபட்ட சத்தத்துக்கு நித்திரையாக்கிடந்த நீ வீரிட்டுக்கத்தத் தொடங்கிட்டாய். உன்னில சின்ன மாமாக்குச் சரியான விருப்பம். உன்னையும் தூக்கிக்கொண்டு “எனக்கென்னமும் ஆகோணும் எண்டு விதியிருந்தால் அது எங்கயிருந்தாலும் நடக்கும். ஏற்கனவே என்ர ரண்டு பிரண்ட்ஸை உயிரோட என்ர கண்முன்ன துலைச்சிட்டுத்தான் இங்க வந்து நிக்கிறன். நான் இப்ப எங்கயும் போறதா இல்லை. என்னோட மல்லுக்கட்டாம உங்கட உங்கட வேலையைப் பாருங்கோ எல்லாரும்” என்று சத்தம் போட்டிட்டுத் தோட்டத்துக்குப் போனான். போனவன் போனவன்தான். திரும்பி வரவேயில்லை."

"ஏன் திரும்பி வரேல்ல? அப்ப நானெப்பிடி திரும்பி வந்தனான்?"

"தோட்டத்துக்க நிக்கேக்குள்ள ஆமி வந்து ட்றக் ஸ்டாற் பண்ணேல்ல. தள்ள வரச் சொல்லி சின்னமாமாவையும் அவன்ர பிரணட்ஸ் இரண்டுபேரையும் கூட்டிக்கொண்டு போனவங்களாம். உன்னை பொன்னுத்தாத்தாதான் வீட்ட கூட்டிக்கொண்டு வந்தவர். சின்ன மாமா வருவானெண்டு இரவு முழுக்க முத்தத்திலயே சாக்குக்கட்டில்ல இருந்தம். அவன் வரேல்ல. அடுத்த நாள் விடிய பள்ளத்தில கிடந்த அவனோட போன இரண்டு பேற்ற உயிரில்லாத உடம்பைத்தான் கொண்டு வந்தினம். அண்டைக்கு தாத்தாக்கு முதல் மாரடைப்பு வந்தது. வெத்திலைல மை போட்டுப் பார்த்தவர் சொன்னதைக் கேட்டுக் களுத்துறைச் சிறைச்சாலைக்கு அலைஞ்சலைஞ்சு அங்கயும் இல்லையெண்ட அலுப்பிலயே அடுத்த கிழமையே அவர் எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு ஆண்டவனிட்ட போய்ச்சேர்ந்திட்டார். இப்ப பெரிய மாமாதான் தன்ர சுமையைக் குறைக்க சின்னமாமா எப்பவாவது ஒருநாள் வருவான் என்று நம்பிக்கொண்டிருக்கிறார். அம்மம்மாக்கு எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சே பிறசர் கூடிக்கொண்டிருக்கு. இனிம நீ அம்மம்மாட்ட மாமாவைப் பற்றிக் கேக்கிறேல்ல சொல்லிப்போட்டன்."

"அம்மா, பின்ன ஏன் எங்கட ரியூசன் ரீச்சர் சின்னமாமா உயிரோட இல்லையெண்டு சொன்னவா?"

"இத்தின வருசமா வராதவன்... எங்கயாவது உயிரோட இருந்தா ஒரு கடிதமாவது போட்டிருப்பான் தானே. அதான் சனமெல்லாம் அப்பிடிச் சொல்லீனம்."

"கானவி பத்து மணியாச்சு.. அம்மாவும் பொண்ணும். இன்னும் நித்திரை கொள்ளேல்லப்போல..."

"இல்லையம்மம்மா. இந்தா நித்திரை இதோ பக்கத்தில வந்திட்டுது. நான் நித்தா."

"குட்நைட் அம்மா."

"குட்நைட் கானவி."

-----------------------------------------------------

"கானவி!"

"என்னம்மா?"

"நாளைக்கு அம்மம்மான்ர திவசம். அம்மா விடிய எழும்போணும் சமைக்க. றூமுக்க பால் வைச்சிருக்கு. குடிச்சிட்டுப் படுங்கோ. விடிய லெக்ஸர் இருக்கெண்டிட்டு இன்னும் என்ன கம்பியூட்டர்ல தட்டிக்கொண்டு.."

"அம்மா இப்ப ஊரில நடக்குறதுகளை வாசிக்க தெச்சு மாமான்ர ஞாபகம் வந்திட்டு.. அதான் அவரைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன். பத்து நிமிசத்தில படுக்கிறன்."

"கெரியாப்போய்ப் படுங்கோ. குட்நைட்."

"குட்நைட்மா."

எங்களுக்குச் சின்ன மாமா போல எத்தின பேருக்கு இப்பிடி கனவாய்ப்போன உறவுகளுண்டு? மகனைத்தேடி அம்மா... அண்ணாவைத்தேடி சோதரர்கள்... கணவனைத் தேடி மனைவி...  தந்தையைத் தேடிப் பிள்ளைகள்... காதலனைத்தேடி காதலிகள்... நண்பனைத்தேடி நண்பர்கள்... இப்படி எத்தனை பேர் காணமால் போன உறவுகளின் நினைவுகளைச் சுமந்தபடி இன்னமும் அவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்?

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree