விதையானால் முளையாகும்!

18 ஜனவரி 2007
ஆசிரியர்: 

 

ண்விழித்து பார்க்கிறேன்.

அப்பாச்சி மெதுவா கதைக்கிற சத்தம். கொஞ்ச நாளா இப்படித்தான். கொஞ்சம் தள்ளி நாய் குலைக்கும். அப்பாச்சி எல்லாரையும் சத்தம் போடாம படுக்கச் சொல்லுவா. அம்மா எண்ட வாயை தன் கையால மூடிட்டு சொல்லுவா, “ரதி சத்தம் போடக் கூடாது.” இப்படிச் சொன்னாலே தெரியும் ‘ஆமிக்காரன்’ வாறான் என்று.

அம்மா சொன்னதும் பயமா இருக்கும். பக்கத்து வீட்டு ஆச்சி அடிக்கடி சொல்லுவா “கோதாரி பிடிச்சவங்களோட பெடி பெட்டையளை வச்சிட்டு இருக்க முடியுதே?”

அந்த ஐந்து வயதில் நான் பார்த்தவை, அனுபவித்தவை மனதை கீறியபடி இன்றும். ஊரில் எங்கள் வீடு இருக்கும் காணியில்தான் அம்மாவின் மூன்று சகோதரிகளின் வீடும், இரண்டு சகோதரர்களின் வீடும். அம்மாவின் தகப்பனாரின் ஏற்பாடு. சகோதரங்கள் ஒன்றாக இருக்க வேணுமாம்! இப்படி எத்தனை அம்மப்பாவின் கனவுகளை இந்த கொடிய அரசு கலைத்துள்ளது. இன்று எங்கள் குடும்பதிலேயே ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நாட்டில் தஞ்சம் புகுந்து...!

கதவைத் தட்டும் சத்தமும், வீட்டைச் சுற்றிப் பல பேர் நடக்கும் சத்தமும் கேட்க, அப்பாச்சி “பிள்ளை வந்திட்டாங்கள் பாவியள், இவளுவள் பெட்டையள நித்திரைகொள்ளுற போலவே இருக்கசொல்லு. நான் போய் கதவை திறக்கிறன்.” அப்பாச்சி சொன்னபடி அம்மா செய்ய முதலே அப்பாச்சி கத்துற சத்தம்.

“அம்மா..” பயத்தில் நான் அம்மாவை இறுக்க கட்டிகொண்டு அழுத சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளயே வந்திட்டாங்கள். பிறகுதான் அப்பாச்சி சொன்னது மனதில இப்பவும் இருக்கு. “பொறுக்கி நாய்கள் பெண்டுகளை வாய் பார்க்க நான் தடுக்கிறன் என்று தள்ளிவிட்டுட்டாங்கள்.”

வந்தவங்கள் உயரமா, தாடி மீசை வைச்சிட்டு ஏதோ புரியாத மொழியில் கதைத்தார்கள். அக்காக்களை முறைச்சு முறைச்சுப் பார்த்தார்கள். ஐந்து வயதில் எனக்கு முறைப்பாக தெரிந்த ஒன்றிற்கு அர்த்தம் வேறு என்பது எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது.

பக்கத்து வீட்டு போஸ்ட்மாஸ்டர் மாமா வந்து ஏதோ கதைக்க, திரும்பவும் அப்பாச்சியிடம் ஏதோ கூறிவிட்டு போய்விட்டார்கள்.

காலையில் பக்கத்துவீட்டு ஆச்சி,
“வானரங்கள் வீட்டில இருக்கிற மாங்காய், தேங்காய் எல்லாத்தையும் வாரி கொண்டு போட்டுதுகள்."

"அடி பிள்ளை இவனுகள் அதோட போனா பரவாயில்லை. பெடிச்சியள வச்சு கொண்டு படுறபாடு."

அந்த வயதில் அப்பாச்சி சொன்னதின் அர்த்தம் சரியாக புரியாவிடினும், அக்காக்களை முறைச்சு பார்க்கிறதைதான் அப்பாச்சி சொல்லுறா போல என்று நினைத்ததுண்டு.

இப்பொழுது நினைத்தால் மனசை யாரோ குண்டூசியால் குத்துவது போல வலிக்குது.

"இவரிட்ட எப்படியாவது போய் சேர்ந்திட்ட பிரச்சனையில்லை கலா." எங்கட பெரியக்கா மாலா.

பெரியக்காவும், குமார் அண்ணாவும் காதலித்தார்கள். இரு வீடும் சம்மதிக்க, குமார் அண்ணா வெளிநாடு போய் இரண்டு வருடத்தில் கல்யாணம் என முடிவாகி இருந்தது.

"அண்ணா இல்லை ரதி, அத்தான்" என்று பெரியக்கா அப்பொழுதே எனக்கு உரிமையாய் அழைக்கக் கற்றுக் கொடுத்திருந்தார்.

எங்கள் வீட்டைச் சுற்றி சில கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். பொதுவாக நத்தார் காலப்பகுதியில் அந்த இடமே கோவில் திருவிழாபோல இருக்கும்.

அந்த வருடம் எதுவுமே இல்லை! ‘மானமும், உயிரும்தான் முதலில் என்ற நிலை.’ அம்மா பின்னர் சொன்னவ.

"ரதிகுட்டிக்கு யாரை பிடிக்கும்? பெரியக்காவையோ? என்னையோ?"

"ரெண்டு பேரும்."

"கெட்டிக்காரி."

மதிய உணவின் பின்னர், பாண்டி குண்டு விளையாடிக் கொண்டிருந்தோம், பகலில் இந்தியா ஆமிக்காரங்களின் தொல்லை குறைவு எனும் தைரியத்திலும், பக்கத்து வீட்டு ஆச்சி பார்த்துக் கொள்ளுவார் என்ற தைரியத்திலும். அம்மாவை அழைத்துக் கொண்டு பெரியம்மா மருத்துவரிடம் சென்றுவிட்டா.

"ரதி குட்டிக்கு தம்பி விருப்பமோ? தங்கா விருப்பமோ?" பெரியக்காவின் கேள்வி விளையாட்டுக்கு இடையில்.

"தம்பி.."

"ஏன்?"

"தம்பிதான் துவக்கால ஆமிக்காரனை சுடுவான்."

அந்த வயதில் ஆண்களையே அதிகம் துப்பாக்கிகளுடன் பார்த்த எனக்கு அப்படி மனதில் தோன்றிச் சொன்னது இப்பொழுது ஆச்சரியமாகத் தெரியவில்லை.

"என்ட ராசாத்தி, இஞ்ச வாடியம்மா. பெட்டையளோட கடைசியா நீ கதைச்சது இப்பவும் என்ட காதில.." பக்கத்து வீட்டு ஆச்சி பின்னொரு நாளில் பார்த்தபோது. நடந்தவை அனைத்தும் எனக்குத் தெரிய வந்ததும் ஆச்சி மூலமே!

"கலா ஆமிக்காரங்களடி.." மாலாக்காவின் வெளுத்த முகம்..

"ரதி ஷ்ஷ்ஷ்ஷ்... கலா ரதியைக் கொண்டு போய் சாமி அறையில இரு... நான் ஓடிப் போய் ஜன்னலால குமுதாவை வீட்டுக்குள்ள போகச் சொல்லிட்டு வாறன்."

குமுதா அக்கா பக்கத்து வீட்டில் இருந்தவ, பெரியக்காட தோழி. ஒன்றாக படித்தவளை எச்சரிக்கப் போய் ஒன்றுமில்லாமல் போனவள் என் சகோதரி!

"ரதி,,," கலாக்கா என் வாயைத் தன் கையால் பொத்திக் கொண்டு அழுதவ. எனக்கும் அழுகை அழுகையாய்.. பயமாக இருந்தது...

வீட்டுக்குள் நிறைய ஆமிக்காரங்கள்.. சப்பாத்து சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. புரியாத மொழியில் கதையும்..

சாமி அறைக்கு முன்னால் இருந்த ஹோலுக்குள் வரும் சத்தம். பின்னர் அக்காவின் குரல்..

"என்னை ஒண்டும் செய்யாதிங்கோ... ஐயோ அம்மா..." அக்காட குரல் அறைக்குள் இருந்த எங்களை மேலும் பயமூட்டியது.

"ஆச்சி ஆச்சி... வாங்கோ.. ஆச்சி... முருகா" திரும்பவும் அக்காவின் குரல்..

கொஞ்ச நேரத்தில் அக்காவின் குரல் கேட்க்கவில்லை... வேறு ஏதோ சத்தங்கள்.. ஆமிக்காரங்களின் குரல்கள்...

கலாக்காமட்டும் கதவிடுக்கினூடாகப் பார்த்தபடி அழுது கொண்டிருந்தார். எதுவுமே புரியாமல் அழுதபடி அக்காவின் மடியில் நான்.

நாய்கள் குரைத்து ஓய்ந்த பின், வெளியே போன பெரியம்மாவும், அம்மாவும் வீடு திரும்பி வந்து கத்தும் பொழுதுதான் கலாக்கா அறைக்கதவை திறந்து தானும் கத்தினா..

மண்டபத்தில் பெரியக்கா உடைகளேதுமின்றி, உயிரற்ற உடலாக...

"பெரியக்கா..." கிட்டப் போன என்னை "ரதிக்குட்டி வாடா" என்று சொல்லாமல் அக்கா...

"என்ட ராசாத்தியை நாய்களிப்படி குதறிட்டங்களே.. முருகா நான் விரதம் இருந்து பெத்த பிள்ளை.. இப்படி அலங்கோலப்பட பார்த்து கொண்டிருந்தியா?" பெரியம்மா கத்திக் கத்தி அழுதது..

பல நாய்கள் பலதரம் அக்காவைக் கடித்து குதறியதால் இறந்துவிட்டாவாம். அந்த வயதில் புரியாத அனைத்தும், இப்பொழுது புரிகிறது. வலிக்கிறது.

ஒவ்வொரு தடவையும் ஒரு சீக்கிய இந்தியனைப் பார்க்கும்போது அன்று நடந்தவைகள் நினைவுக்கு வர, அவ்வயதில் புரியாதவை இப்பொழுது புரிய கோபம் வருகிறது. கையில் அகப்படுவதால் எடுத்து அடித்து அவர்களை சாக்கொல்லலாம் போல மனதில் ஒரு வெறி வருகின்றது.

இத்தனை கதறல்கள், ஒப்பாரிகள், சாபங்களுக்கிடையே கலாக்காவின் அமைதி யாருக்கும் தெரியவில்லை. என்னை மடியில் இருத்தியபடியே இருப்பா.

பெரியக்கா இறந்து இரண்டு நாட்களில் ஒரு இரவு.

"ரதி நல்லா படிக்க வேணும். அக்கா போய்ட்டு வாறன்."

"வேணாம் ஆமிக்காரன் அடிப்பான்."

"அவன்களுக்கு நாங்கள் திருப்பி அடிக்கணும்."

காலையில் அக்காவைக் காணவில்லை. கடிதம் ஒன்று கிடைக்கவே வீட்டிலும் அமைதியாய் இருந்துட்டார்களாம்.

பல வருடங்களுக்குப் பின்னர் கலாக்காவை கையில் துப்பாக்கியுடன் பார்த்தேன். பழையவை நினைவில் வர அழுதேன், "நாம் அழுத காலம் போயாச்சு, எம்மை அழ வச்சவனை அழ வைக்கிற காலம் வந்தாச்சு" அக்காவின் பேச்சில் முதிர்ச்சி.

"ரதி....ரதி..." அம்மாவின் குரல் என்னை இன்றைய நாளுக்கு கொண்டு வர,
"என்னம்மா? வாறன்" என கூறி அம்மாவை நாடி போக..

"அத்தான் போனில..."

பெரியக்காவின் அத்தானேதான். நாங்கள் நியுசிலாந்துக்கு வந்துதான் அக்காவின் முடிவு சொல்ல. அத்தான் நடை பிணமாக சுற்றினவராம். அத்தானின் வலி எனக்கு சின்ன வயதில் புரியாவிடிலும் ஒரே வீட்டில் இருந்து அத்தான் அழுவதையும், இரவில் கதறுவதையும் பார்த்திருக்கிறேன்.. கேட்டிருக்கிறேன்..

"கலோ அத்தான்..."

"ரதிக்குட்டி, வேலை முடிஞ்சிட்டுது. வெளிக்கிட்டு நில்லுங்கோ. திவசத்திற்கு தேவையானதை வாங்கிடுவம்." அக்காவைப் போலவே என்னை ரதிக்குட்டி என்று அழைத்து தன் காதலிக்கு உயிர்கொடுக்கிறாராம்.

ஊரெல்லாம் நத்தார் கொண்டாடி, புது வருடத்தை வரவேற்க... எங்கள் வீட்டில் திதி குடுக்கிறோம்...

"சரி அத்தான்.." என சொல்லி தொலை பேசியை வைக்கும்போது எதிரில் சுவரில் அக்காவின் படம்..

அழகாய்தான் சிரிக்கிறாள்.. அதனால் தான் குதறப்பட்டாளோ???

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree