காதலின் பாதையில்...

13 பிப்ரவரி 2006
ஆசிரியர்: 

 

தொலைபேசி மணி நீண்ட நேரமாக அடித்துக்கொண்டே இருந்தது. விடிய இரண்டு மணிக்குத்தான் நித்திரைக்குப் போன கிருஷ்க்கு இந்த அழைப்பு எரிச்சலையே ஊட்டியது. நேரத்தைப் பார்த்தான். மணி ஐந்தை எட்டிப்பிடித்துக் கொண்டிருந்தது.

'ஓ.. god. இனி படுக்கேக்க முதல்ல இந்த டெலிபோன் ரிசிவரை எடுத்து வைச்சுப்போட்டுத்தான் படுக்க வேணும். என்னுடைய நித்திரையும் குழம்பிப்போட்டுது. சே.. சே..' என தனக்குள் புறுபுறுத்துக் கொண்டவன், ஏதும் அவசர செய்தியாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டே "ஹலோ கிருஷ் ஹியர்" என்றான்.

"ஹலோ" மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல். "வசந்தனை ஒருக்கா இந்த நம்பருக்கு... 81751க்கு எடுக்கச் சொல்லுங்கோ. வாற வெள்ளிகிழமை flight என்று சொல்லி விடுங்கோ. நன்றி" என்றவள் இணைப்பைத் துண்டித்துக் கொண்டாள். அவள்தான் வசந்தனின் வருங்கால மனைவி சந்தியா. இங்கு வருவதற்கு எல்லாம் முற்றாகியநிலையில், வரும் நாளை அறிவிக்கும் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருப்பதை வசந்தனின் மூலம் அறிந்திருந்தான் கிருஷ்.

கிருஷ், வசந்தன் இருவருமே ஒரே அறையில் ஒரு சில வருடங்களாக வாழ்பவர்கள். இங்கு வந்தபின்தான் இருவருக்குமே பரிச்சயம் ஏற்பட்டது. இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்று சொல்வதற்கொன்றும் பெரிதாக இல்லை. ஆனால் ஒருவரின் குடும்பத்தைப்பற்றி மற்றொருவர் பரஸ்பர நட்புடன் அறிந்திருந்தார்கள். மற்றும்படி இருவரின் பழக்க வழக்கங்களிலும், குணநடையிலும் பற்பல வித்தியாசங்கள். இருவரின் கருத்துகளுமே பெரும்பாலும் ஒன்றுக்குப் பின் முரண்பாடாகவே அமைந்திருக்கும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில்கூட இறுதியில் இருவரும் எந்த விதமான பிரச்சனைக்கும் முகம் கொடுக்காமல் வழமைபோல் ஒன்றாகி இணைந்து விடுவார்கள்.

கிருஷ் இன்றைய வாழ்க்கை முறையோடு தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு, வாழ்க்கையை ரசித்து, அனுபவித்துக்கொண்டிருந்தான். அதன் பாதிப்பு அவனது உடை, நடை, பேச்சு, பழக்கவழக்கங்களிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. தமிழ் பேசும்போதுகூட பெரும்பாலும் அதை ஆங்கிலம்போல்தான் பேசுவான். கிருஷ்ணகுமார் என்ற தன் வடிவான பெயரைக்கூட நாகரீகத்துக்கு ஏற்றவாறு, சிறிய பெயராக, அனைவரும் அழைப்பதற்கு வசதியாக, 'கிருஷ்' என்று மாற்றிக்கொண்டான். மனதில் பட்டதை நேருக்குநேராக ஒப்புவிக்கும் சுபாவம் உடையவன்.

ஆனால்... வசந்தனைப் பொறுத்தமட்டில் இந்த வெளிநாட்டு வாழ்க்கை ஒன்றும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அனேகமாக தான் உண்டு தன் வேலையுண்டு என்றுதான் இருப்பான். தன்னுடைய மொழி, குடும்பம், தன்னுடைய தாயகம் என்ற கோட்பாட்டோடு அதற்குள் ஆட்பட்டு ஒன்றி வாழ்ந்து கொண்டிருந்தான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் கிருஷ். வசந்தன் வந்து கொண்டிருந்தான்.

"ஹாய் வசந்த் உம்முடைய ஆள் வாரப்போறாவாம். ஒருக்கா டெலிபோன் எடுக்கட்டுமாம்" என்று கிருஷ் கூறியதும் வேலை அலுப்பால் வீடு வந்த வசந்தன் அடைந்த மகிழ்சிக்கு அளவேயில்லை. தன் மேசை மேலிருந்த படத்தையே ஒருகணம் பார்த்துக்கொண்டிருந்தான். வெளிநாடு வருவதற்குமுன் அவனும் சந்தியாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் அது. தன்னை மறந்து கனவுலகில் மிதக்க ஆரம்பித்தான் வசந்தன்.

வசந்தன் கையிலிருந்த படத்தைப் பார்த்த கிருஷ் "என்ன உம்முடையவ உம்மைவிட உயரம் போல இருக்கிறா" என்றான்.

"ஓம், ஓம் அவ என்னைவிட உயரந்தான். காதலுக்கு கண் இல்லை என்பார்களே. அது இதுதான். உயரம் பார்த்து வருவதில்லையே காதல்" காதலின் சுகானுபங்களை அறிந்த இறுமாப்பில் கூறினான் வசந்தன்.

"புடலங்கா காதல். நான் சொல்றன் என்டு குறை நினைக்காத... எனக்கென்றா இந்தக் கண்டதும் காதல்... காதலுக்கு கண்ணில்லை... இதிலெல்லாம் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. காதல் என்றால் அந்தஸ்து, அறிவு, அழகு எல்லாம் பார்த்துத்தான் வரவேண்டும். வாழப்போறது நாம்தானே. அத்தோடு கண் மூடித்தனமான இந்தக் காதல்தான் இந்த divorce க்கும் முக்கிய காரணம்" என்றான் கிருஷ்.

"உந்த விசர்க்கதைய விடும். உனக்கென்னடா காதலைபற்றித் தெரியும். காதல் புனிதமானது. காதலை... அதன் மென்மையான இன்ப உணர்வுகளையும், பிரிவின் சோகத்தையும் அணுஅணுவாக உணர்ந்து அனுபவித்தவன் நான். என் சந்தியாவைப்பற்றி எனக்குத்தான் தெரியும்." அவள் மீது கொண்ட நிதர்சனமான காதலால் வசந்தனின் குரல் சற்றே உணர்ச்சி வசப்பட்டு இருந்தது.

"okay cool down வசந்த். I have only told you my opinion don't get angry. உம்முடைய மூடையும் குழப்பிப்போட்டன். I am really very sorry". இனிய கனவுகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவனிடம், ஏற்பட்ட வாக்குவாதம், வசந்தனின் மனதை காயப்படுத்தியிருக்குமோ... என எண்ணி பகிரங்கமாகவே தன் மன்னிப்பைக் கேட்டுக்கொண்டான் கிருஷ்.

வெள்ளிக்கிழமை அன்று இருவரும் இணைந்து விமானநிலையத்துக்குப் போனார்கள். சந்தியாவைக் காணப்போகிறோம் என்ற ஆதங்கத்தோடு காத்திருந்தான் வசந்தன். அவன் அடிக்கடி முணுமுணுக்கும் அந்தப் பாடல் இப்போதும் அவன் நெஞ்சுக்குழிக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.

சந்தியாவும் வந்துவிட்டாள். முதன்முதலாக சந்தியாவைக் கண்ட கிருஷ் உண்மையிலே அதிர்ச்சியடைந்தான். சக்கரவண்டியில் சந்தியா வந்து கொண்டிருந்தாள். வாழ்நாள் முழுவதும் சந்தியாவின் வாழ்க்கை இந்த சக்கர நாற்காலிக்குள்தானா தஞ்சமடையப்போகிறது. அன்று அந்த படத்தைப் பார்த்து வாக்குவாதப்பட்டுக் கொண்டோமே. உண்மையில் சந்தியா இப்போது வசந்தனை விட உயரமில்லை. வசந்தன் எத்தனை பெரிய மனதோடு அவளை ஏற்றுக் கொண்டிருக்கிறான். அதற்கும் எத்தனை பெரிய மனது வேண்டும்.

அதிலிருந்து மீள்வதற்குள் "சந்தியா இவன் என்னுடைய room mate கிருஷ்" என்று அறிமுகம் செய்து வைத்தான் வசந்தன். "ஹலோ வணக்கம்" என்று கிருஷ் கூறியபோதும் அவனுடைய கண்கள் சக்கரவண்டியையே நோக்கிக் கொண்டிருந்தது. "இதென்ன உங்கட காலுக்கு என்ன நடந்தது" தன் மனதிலுள்ளதை மறைத்து வைக்க முடியாமல் கேட்டும் விட்டான் கிருஷ்.

"ஓ... இதுவா. இவர் சொல்லேல்லையோ... ஆமிக்காரங்கள் வைச்ச கண்ணிவெடியில என்னுடைய கால் போட்டுது." அவள் சாதரணமாக கூறினாள்.

கிருஷ் வசந்தனை பார்க்கின்றான். காதலின் வலிமையை முதன்முதலாக கண்கூடாக பார்த்து உணர்ந்து கொண்டான். காதலின் பாதையில்... சந்தியா மீது வசந்த் கொண்ட காதல் தியாகமாக அவன் கண்முன் வியாபித்து நின்றது. அவனையறியாமல் "really you are great" அவனை நெஞ்சார, மனதார வாழ்த்தினான் கிருஷ் என்ற கிருஷ்ணகுமார்.

- யாவும் கற்பனை-

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree