தொப்புள் கொடி உறவொன்று...

25 நவம்பர் 2005
ஆசிரியர்: 

 

ன்று அதிகாலை வேளை கண்கள் மூடியபடியே இருக்க நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே,  படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். அதில் நினைவுகள் வெற்றி பெற்றுக்கொள்ள, நித்திரை மெல்லென விடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று எனக்கு பதினெட்டாவது வயது. என் மனம் ஏனோ என் அம்மாவை நினைத்துக் கொண்டு ஏங்கியது.

என் சின்னச் சின்ன தேவைகள்,  என் அன்பை முழுவதுமாக கொட்டிக்கொள்ள... அம்மா என்னுடன் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்ன செய்வது. ம்... அன்று செய்ய வேண்டிய கடமைகள் ஒவ்வொன்றையும் மனதினுள் எடைபோட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வந்த அப்பா
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களம்மா..." என்றபடியே முத்தம் தந்து விட்டு, "எப்போதும் போல நீ நல்லா சுகமா இருக்கோனும்...” என்று வாழ்த்தி விட்டுப் போகின்றார்.

நானும் எழும்பி, காலைக் கடமைகளை செய்ய முற்படுகிறேன். அனைத்தையும் முடித்துவிட்டு, அம்மாவின் படத்துக்கு விளக்கேற்றி, மலர்கள் தூவி வணங்கியபடியே...  இன்றுதான் முதன்முதலாக அம்மாவின் படத்தைப் பார்ப்பதுபோல் வைத்த கண்வாங்காமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.

ம்... என் நினைவு முழுவதும் அம்மாதான். எல்லோரும் சொல்வது போல் நான் அம்மா மாதிரிதான் இருக்கிறன். என்னைப்பார்த்தால் அம்மாவை பார்க்கத் தேவையில்லை என்பது போல் உருவ ஒற்றுமை. அப்படி கச்சிதமாக இருந்தது. உறவினர் நண்பர்கள் பலர் கூறியிருக்கிறார்கள். "நீ அசல் அம்மா மாதிரியே உரிச்சி வைச்சி பிறந்திருக்கிற..."  என்று சொல்லும் போது, நான்தான் "அம்மா தான் என்னைப்போல் இருக்கிறா” என்று  சிறுவயதில் விளையாட்டாக சொன்னவற்றையே இப்போதும் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறேன்.

இன்றுதான் முதன் முதலாக  "ம்.... அம்மா வைப்போலத்தான் நான் இருக்கிறேன்" என்று முழுமனதாக ஏற்றுக் கொள்கிறேன். அம்மாவை நினைக்கும் போது என் உடம்பில் என்னையறியாமல் ஓர் புது உணர்வு ஊடுருவுவது போல் உணர்ந்து கொள்ள, என் கண்கள் பனிக்கத் தொடங்குகின்றன. அம்மாவின் நினைப்பு இதயம் முழுவதும் உந்தி எழ...  கண்ணீர் பொல பொலவென வழியத் தொடங்குகிறது.

"அம்மா அம்மா... எனக்கு அம்மா வேண்டும்..."

"என்னம்மா... பிறந்த நாள் அதுவுமாக ஏன் இப்படி" என்று அப்பா அன்பாக கூறியபோது, என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. "அப்பா..." என்றபடியே மீண்டும் அழுத்தொடங்குகிறேன். மனதிலுள்ள பாரம் இறங்குமட்டும் அழட்டும் என்று அப்பாவும் சில கணங்கள் மௌனமாகவே இருக்கின்றார்.

"அப்பா, நான் அம்மாவின் கல்லறையைப் பார்க்கோணும். அந்தக் கல்லறையை நான் தொட்டுக் கும்பிட வேண்டும். என்னுடைய அம்மா வாழ்ந்த பூமியை நான் ஒருக்கா பார்க்கோணும். எனக்கு அம்மா வேண்டும்" என்றேன் வழக்கமாக அழுதபடியே...

இப்படி நான் கூறுவது ஒன்றும் புதிது இல்லை... ஆனால் அப்பா நெடுக இதைத்தான் சொல்வார்.

"அகிலா, எனக்கும் உன்னைக்கூட்டிக்கொண்டு ஊருக்கு ஒருக்கா போய் வரவேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கம்மா ஆனால்... போற இடத்துல ஆமிக்காரங்கள் எனக்கோ உனக்கோ ஏதும் செய்து போட்டால் என்டால்... அதை என்னால் நினைச்சு பார்க்க முடியாதும்மா. எப்பபார்த்தாலும் ஆமியிண்ட கெடுபிடிதான் அதிகமா இருக்கும்.." அப்பா வழமையாக ஒப்புவிப்பவை இவை.

ஆனால்... இன்று வழமைக்கு மாறாக "பிள்ள அகிலா இந்தமுறை மாவீரர் வாரத்தில்ல நாம் ஊரில்ல நிற்கிறோம். இது பிராமிஸ்(promise). இப்போ சந்தோசம் தானே..?" என்று கூறிய போது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமே. வானத்தில பறக்கிற மாதிரி அப்படி ஒரு உணர்வு. என்ட நண்பிகள் எல்லாம் தமிழீழத்தைப்பற்றிச் சொல்லேக்க எனக்கு சரியான கவலையாய் இருக்கும். ஆனா இப்ப எனக்கிருக்கிற சந்தோசத்தில்ல என்ன செய்யுறதெண்டு தெரியல..

அம்மாவை சின்னவயசுல பார்த்தது எனக்கு பெரிசா நினைப்பில்லை. எனக்கு எல்லாமே என் அப்பாதான். அம்மா சயனைட் குப்பிகளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டு, மாவீரராக மரணித்து கல்லறைகளுக்குள் துயின்றபோது, எனக்கு வயது மூன்றாக இருந்தது. என் அப்பா என்னை அழைத்துக் கொண்டு, தன்னந் தனியனாய் என் வாழ்வு சிறப்பாக அமையும் நோக்குடன் லண்டன் நாட்டுக்கு அகதி அந்தஸ்து தேடி வந்தார்.

அன்றிலிருந்து அவர் எனக்காகவே வாழ்ந்து வருகின்றார். அடிக்கடி சொல்லிக் கொள்வார். "எப்பாடு பட்டாவது உவள நல்லா படிப்பிச்சு போடனும். நல்ல ஒருத்தனிட்ட இவளை ஒப்படைக்க வேண்டும்" என்பார்.

இதைவிட அப்பா லண்டலில் நடைபெறும் ஒவ்வொரு மாவீரர்தின நிகழ்வுகளுக்கும் என்னை அழைத்துச் செல்வது,  தன்னால் ஆன உதவிகளையும், பங்களிப்புக்களையும் செய்யத் தவறுவதே இல்லை. அப்படித்தான் ஒருநாள் என்னை மாவீரர் நிகழ்வுக்கு அழைத்துக் கொண்டு சென்ற சமயம்,  அங்கு ஒலிக்கும் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சமயம்...

அந்த பாடலில் வந்த வரிகள்...

படலையில் தினம் காத்திருப்பேன்
பள்ளி சென்று நீ திரும்பும் வரை
சுடலைக்கு உன்னை அனுப்புவேனோ
சோதனை ஏனனை ராசாவே

பகைவர் குண்டுகள் நெஞ்சினிலே நெஞ்சினிலே
சுமக்கும் உன்வீரம் வரலாறு ஆனதே

என் மனதை சற்றே  கலங்க வைக்கின்றது.

"அப்பா,  இந்தப் பாடலையெல்லாம் கேட்கும் போது... மனசுக்குள்ள ஏதோ ஒரு உணர்வு... சோகம்... வலி... என்ன என்று சொல்லத் தெரியல எனக்கு அழவேண்டும் போல இருக்கு. ஏன் எங்கட நாட்டில இப்படி... சாவதை நினைத்தால்... எனக்கு கவலையா இருக்கு அப்பா..." என்றேன்.

அப்போது அப்பா மிகத் தெளிவாக,
"அகிலா மாவீரர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லையம்மா. அவர்கள் வாழ்ந்த மண்ணிலே விழுதாகி வேர் விடுகிறார்கள். அவர்கள் காற்றில் கலந்து எம் சுவாசத்தில் வாழ்கிறார்கள்..." என்று கூறியதை அடிக்கடி என் நினைவில் நிலை நிறுத்திப் பார்த்து இருக்கிறேன்.


இம்முறை தமிழீழத்தில் இதன் நிகழ்வுகளை நேரில் காணப்போவதோடு, என் அம்மாவின் கல்லறையை காணப் போகிறோம் என்ற மகிழ்வே என்னிடம் அதிகமாக இருந்தது.

தமிழீழ மண்ணில் காலடி வைத்தபோது, எமக்கு கிடைத்த வரவேற்பு கண்டு உடம்பெங்கும் ஒர் இனம்புரியாத உணர்வு ஊடுருவதை அறிந்து கொள்கிறேன். அது இன்பத்தின் பிரதிபலிப்பா...? அல்லது அது என்ன...? என்று என்னால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. பாதைகளில் பாதம் படப்பட எனது சின்னவயதின் காலத்துக்குள் புகுந்துவிட்ட நினைப்புடன், வீடுகள் ஒவ்வொன்றையும் என் கண்கள் தடவிய படியே வந்தன.

நான் சிறுவயதில் ஒடியாடி, விளையாடிய இடம், வீடு எல்லாவற்றையும் அப்பா காட்டினார். என் அம்மா வாழ்ந்த இடமும் அதுதான். அம்மாவின் கைகளை பற்றியபடி இந்த வீதியெல்லாம் சுற்றி, சுற்றி வந்திருக்கிறேனே. மீண்டும் ஒருமுறை என் ஆசை அம்மாவின் கைகளை இருக பிடித்துக் கொண்டு இந்த பாதையை... ஏன் இந்த உலகத்தை சுற்றிக்கொண்டு வர மாட்டேனா... என்ற ஏக்கம் பெருமூச்சாக வெளிப்படுகிறது.

வீட்டிலிருந்த என் பெரியம்மா, பெரியப்பா எல்லோரும் எங்களை அணைத்து தங்கள் அன்பைத் தெரிவித்துக்கொண்டார்கள். பெரியம்மா என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னா,
"அசல் அம்மா வை வார்த்து எடுத்த மாதிரி அப்படியே இருக்கிறாள்.." .

நாம் வருவதை தெரிந்து கொண்ட உறவினர்கள் பலர் வீட்டிற்கு வந்து சுகம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதில் இருந்த ஒரு பெரியவர்,
"உவள் சந்தியாவின்ட பெட்டையே. நான் அவள்தான் வந்து நிக்கிறோளோ.. என்டு நினைச்சுப்போட்டன். ம்... அவள் தான் மாவீரரா போயிட்டாள்" என்று சொல்ல அதற்கு மற்றவர் "சந்தியாவின்ட பெட்டைதான் உவள். அசல் அம்மாவைப்போலவே தானே இருக்கிறாள்..." என்று சொல்ல,
இன்னும் ஒருவர் "இண்டைக்கு காலத்தால உந்த காகம் விடாம கத்திக் கொண்டு இருந்த போதே நினைச்சனான். யாரோ வரப்போயினம் என்டு..." என்றார்.

சாய்மனைக் கதிரையில் அமர்ந்திருந்த வயதான ஆச்சி "கடவுளான உந்த பிள்ள சந்தியா இருக்குமட்டும் எனக்கு கரைச்சல் இல்லை. உந்த கிணத்துல தண்ணி அள்ளி தாரது எல்லாம் உவள் தான்..." என்றும் இப்படி எத்தனையோ உரையாடல்கள்.

அம்மாவைப்போல் நானிருக்கிறேன் என்று எல்லோரும் கூறியதில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.  அப்பாவின் முகத்திலும் என்றுமில்லாத மகிழ்ச்சிக்களை... அன்று இரவு முழுவதும் வீட்டு முற்றத்தில் அமர்ந்த படியே உரையாடி, சாப்பிட்டது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்நிய நாட்டில், அந்நியமாகிப்போய், அன்னியனுக்கு அகப்பட்ட வாழ்க்கையில் அகதியாய் வாழ்ந்த வாழ்க்கைக்கும், உறவினரோடு உறவினராய் அளாவலாவி வாழ்கின்ற வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசமும், எல்லாம் மறக்கமுடியாத நினைவுகளாயும் இருந்தது.

அம்மாவின் இளமைக்காலம், படிப்பு, அம்மாவின் குறும்புத்தனங்கள், இலட்சியங்கள் எல்லாம் மணிக்கணக்காக அதை உறவினர்கள் சொல்ல... சொல்ல... எனக்குள் அம்மா உயர்ந்து கொண்டே நின்றாள். அம்மா உனக்கு நான் மகளாக பிறந்தது அது நான் செய்த புண்ணியம்.

அன்று இரவு முழுவதும் என் நினைவில் அம்மாவைப்பற்றிய நினைவுகளே... வலம் வந்து கொண்டே இருந்தன. அடுத்த நாள் நானும் அப்பாவும், உறவினர்களும் அம்மாவின் கல்லறைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு, அங்கு சென்று அடைந்தோம்.

நெருப்பாய் கனலும் நெஞ்சத்துடன், பொங்கி நுரைத்துக் கரையுடைத்துப் பாய்ந்து கொண்டிருக்கும் போராட்ட நதிவேகம் எனக்குள் மெல்லென தொற்றிக்கொள்ள ஆரம்பித்தக் கொண்டிருந்தது.

அடுத்தகணமே அத்தனையையும் சாந்தமாக்கி, விழிநீர் பூக்கவைக்கும் இயல்பிற்குறியவர்களாக அங்குறங்கும் மாவீரர்கள் கல்லறைகள் அமைந்திருந்ததன.

அங்கே... என் அம்மாவின் கல்லறையில் விளக்கேற்றி, தொட்டு வணங்கியபோது... என் கண்கள் பனிக்கத் தொடங்கன. அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுவது போல், அம்மாவின் கல்லறையை கட்டிக் கொண்டு ஓ... வென அம்மா, அம்மா... என்று அழ வேண்டும் போல் ஒர் துடிப்பு... வேகம்...  எனக்குள் அடக்கிக் கொண்டேன். அப்பா கூறியது இப்போதும் என் நினைவில் எதிரொலித்தபடியே... எனக்குள் புது தைரியத்தைத் தந்து கொண்டிருந்தது.

"அகிலா மாவீரர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லையம்மா. அவர்கள் வாழ்ந்த மண்ணிலே விழுதாகி வேர் விடுகிறார்கள். அவர்கள் காற்றில் கலந்து எம் சுவாசத்தில் வாழ்கிறார்கள்."

அப்பாவின் பார்வை என்மீது விழுகின்றது. எங்கே... நான் அழுதுவிடுவேனோ... என்று. ஆனால் என்னைப்பார்த்து அப்பா ஆச்சரியப்படுகின்றார்.

எல்லோரும் என்னை அம்மா மாதிரி என்று சொல்றார்களே... அப்படிப்பட்ட எனக்கு மட்டும் ஏன் அம்மாவின் நெஞ்சினில் நிலை நிறுத்திப்போன இலட்சியம், நாட்டுப்பற்று போன்ற உணர்வுகள் இல்லாமல் போய்விட்டது. அம்மாவின் தொப்புக்கொடி உறவாய் பிறந்த எனக்குள் அவை எங்கே ஒழிந்து போனது...? என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணீரால் வெறும் வார்த்தைகளால் அழிந்து விட முடியாத துயரம் ஒன்று நெஞ்சுக்குள் தீயாகியது. கல்லறையில், வைக்கப்பட்ட தீப ஒளியில், என் இதயத்துள்ளும் ஒரு  தீச் சுவாலை ஒன்று பிரவாகமெடுத்து,  சங்கமித்துக் கொண்டிருந்தது.

உள்ளத்தின் வெள்ளமது நதிபோல அசைந்து, என்னிதயத்தின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த என் மனப்பறவையது விழித்துக் கொண்டு இசைக்கின்றது...  என் மண்! என் மக்கள்! என் மொழி!

என்றோ ஒர் நாள் எம் இனத்தின் எல்லா துன்பமும் தொலைந்து போய், அங்கே அத்தனை அடிமைத்தனமும் முடிந்து போன வாழ்விருக்கும். அதுவரை என் வாழ்வின் போராட்டமும் தொடர்ந்தபடியே... தொப்புள் கொடி உறவாய்.... பரிணமிக்கப்போகின்றது.

(பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனை.)

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree