மலிவு விற்பனை....

27 ஆகஸ்ட் 2005
ஆசிரியர்: 

 

தொலைபேசி மணி தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தது.

வேலைக்கு போகும் அவசரத்தில் உடுத்தது பாதி, உடுத்தாது பாதி என்று புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தவேளையில், 'இது வேறு' என்று முணு முணுத்துக்கொண்டே போனை எடுத்தாள் பரிமளா.

"ஹலோ.." என்றவுடனே அவள் அறிந்துகொண்டாள். கொழும்பில் இருந்து அவளது தம்பி சுதர்சனன் தான் தொடர்பு கொள்வது என்று.

அதற்குள்ளாக அவனாகவே,
"அக்கா, நான் சுதர்சன்..." என்று பல மைல்களுக்கு அப்பால் இருந்து ஒலித்த அவனது குரல், பரிமளாவின் காதில் வளையமிட்டுக் கொண்டிருந்தது.

"நீ வை. இப்ப நான் உடனே எடுக்கிறன்..." என்று கூறியவள் அடுத்த வினாடி மிக வேகமாக இலக்கங்களை அழுத்தி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாள்.

"என்ன ஏதும் அவசரமோ..." சற்று பதட்டமாகவே கேட்டாள் பரிமளா.

"இல்லையக்கா, அப்படியொன்டுமில்லை. வெளிநாட்டுக்கு வாரதுக்கு உன்னைத்தான் நம்பியிருக்கிறன். பாஸ்போட் எல்லாம் எடுத்துப் போட்டன். என்ட சினேகிதப்பெடியள் கணபேர் வெளிநாட்டில தான் இருக்கினம். குறிப்பையும் கொண்டு போய் சாத்திரியாரிட்டை எல்லாம் காட்டினனான் வெளிநாட்டு பயணம் நிச்சயம் என்டு வேறு சொல்லிப் போட்டார். அப்படி இல்லாட்டி உந்த தொழிலையே விட்டுப்போடுறன் என்டு சவால் வேற விட்டிருக்கிறார்..." தன் மனஆதங்கத்தை தன் வெளிநாட்டு பயண கனவுகளோடு ஒப்பிவித்துக் கொண்டிருந்தான் சுதர்சனன்.

"நீ ஏன் இதைப்பற்றி எல்லாம் யோசிச்சிக் கொண்டு மண்டையைப்போட்டு குழப்பிக்கொண்டு நிற்கிற. எல்லாத்தையும் இந்த அக்காவின்ட தலையில போட்டுட்டாய் தானே. பிறகென்ன? நான் எல்லாத்தையும் முடிச்சுக் காட்டுறன். உனக்குத்தெரியுந்தானே, சங்கக்கடைக்கு பக்கத்து வீட்டு சிவராசாவின்ட பெட்டையை தான் பார்த்து பேசி வைச்சு இருக்கிறன். பெட்டையும் நல்ல அமைதியும் அழகும்கூட. அவரும் பார்ப்போம் என்டு சொல்லியிருக்கிறார்..." என்றாள்.

"அக்கா, உனக்கொன்டு சொல்ல வேணும் வெளிநாட்டில இருக்கிற பெட்டையள் கொஞ்சம் மொத்தமாம். அங்கத்தைய சாப்பாடு அப்படியாம். அப்படியெண்டுதான் இங்கிருக்கிற மாமா சொன்னவர். அது உண்மையோ அக்கா? அதனால் பொம்பிள கொஞ்சம் மெல்லிசாவும் நிறமாயிருக்கோனும்..." தனக்கு வரும் வருங்கால மனைவியைப்பற்றி தன் விருப்பத்தை ஒப்பிவித்துக் கொண்டு இருந்தான் சுதர்சனன்.

"உதென்ன விசர்கதை கதைக்கிறாய். முதல்ல நீ இங்க வாற அலுவலப் பார்க்கறன். பிறகு மற்றதை யோசிப்போம். சரி சரி, சிவராசாவின்ட இரண்டாவது பெட்டைய விசாரிச்சுப் பார்க்கிறன். தமக்கையிருக்கேக்க தங்கச்சிக்கு ஓம் என்டு சொல்லுவினமோ தெரியாது. அடுத்த கிழமை என்ன மாதிரி என்டு போன் பண்ணிச் சொல்லுறன். சரி இப்ப நான் வேலைக்கு இறங்கப்போறன்..." என்டு சொல்லி இணைப்பைத் துண்டித்துக் கொண்டாள் பரிமளா.

இரண்டு நாட்களின் பின் பஸ் தரிப்பின் அருகே சிவராசாவின் மனைவி
நளினியைக் கண்டபோது மனதுக்குள் சந்தோசப்பட்டுக் கொண்டாள். எல்லாம் தனது அதிர்ஷ்டம் தான் என்று எண்ணிக் கொண்டே பேச்சைச் தொடக்கினாள் பரிமளா.

"அக்கா எப்படி சுகமா இருக்கிறீயளோ..." என்றவள், "அன்றைக்கு வீட்ட வந்தப்போ நீங்கள் இருக்கேல்ல. அவரிட்ட ஒரு விஷயத்தைப்பத்தி சொன்னனான். அதைப்பத்தி ஏதும் முடிவெடுத்தனீங்களோ..." என்று ஆவலாகக் கேட்டாள் நளினி.

முடிவெடுக்கும் வரைக்கும் போய் இருக்கின்றது என்றால் ஏதோ முக்கியமான ஒரு விஷயம் பற்றி அலசப்பட்டிருக்கின்றது என்பதை மட்டும் நளினியால் ஊகித்துக்கொள்ள முடிந்தது. அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் மனதை உந்தித் தள்ள "இவர் அப்படியொன்றும் சொன்னமாதிரி நினைவில் இல்லையே. வேலைப்பளுவில இதை சொல்ல மறந்திருப்பார்" என்றாள் சமாளித்தபடியே.

"ஊரில என்ட தம்பி சுதர்சனன் இருக்கிறான்தானே. அவன் 'கம்பஸ்'ஸில் படித்துக்கொண்டு இருக்கிறான். அதோடு பின்னேரத்தில கம்பியூட்டர் கிளாஸ்க்கும் வேற போய்க் கொண்டு இருக்கிறான். அவனுக்கு உங்கட மகளை கேட்டனான். அதுதான் பாருங்கோ. இங்க வந்து சாதிசனம் பார்க்காம ஊர் பெயர் தெரியாத யாரையோ பிடிச்சுக்கொண்டு வருவினம், ஓருவேளை இந்த நாட்டு பெடியனையும் கூட்டிக்கொண்டு வந்து நிற்பினம். இதொன்றும் இந்த நாட்டில புதுசு இல்லத்தானே. அதற்குமுதல் நாங்களும் கொஞ்சம் கவனமா இருந்து இந்த சொந்தபந்தம் விலகிப்போகாமல் அவையளுக்கு திருமணத்தை காலா காலத்துல முடிக்கிறதும் நல்லதுதானே..." என்றாள் நளினி.


பரிமளா கூறுவதை சரியென்று நளினியின் மனம் ஏற்றுக் கொண்டாலும், அவள் கூறிய விடயம் அவளை சற்று அதிர்ச்சி அடைய வைத்தது. படித்துக் கொண்டிருக்கும் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கினமா...? தன் கணவர் இதைப்பற்றி அவளிடம் ஒருவார்த்தை கூட கூறாததது அவளுக்கு சற்றே மனவேதனையை ஏற்படுத்தியது. அவர்களின் ஒவ்வொரு வளர்ப்பு முறையிலும் அவள் நின்றிருக்கிறாள். பிள்ளைகளின் எதிர்காலவாழ்க்கையைப் பற்றி சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் திருமண பேச்சு என்று ஒன்று அடிபடும் போது ஏன் அவளின் காதில் எட்டாமல் போய்விட்டது. தாயின் நிலையில் இருந்து, மனைவி என்ற நிலையில் இருந்து தான் தூக்கி எறியப்பட்டு விட்டோமா... போன்ற ஓர் உணர்வு அவளுக்குள் வியாபிக்கத் தொடங்கியபோது... அவள் மனஉணர்வுகள் சற்றே கலங்கித் தவித்தது.

நளினியின் நிலை மனக்கலக்கத்தைத் அறிந்துதான் என்னவோ பரிமளாவே, "அக்கா, அவர் பார்ப்போம் என்டுதான் சொன்னவர். சரி இந்த இடத்தில இதைப்பற்றி கதைச்சிக் கொண்டு நிக்கிறது நல்லது இல்லை. நீங்களும் வீட்ட நிற்கேக்க இதைப்பத்தி கதைக்க வாறன்.." என்று விடை பெற்றுக்கொண்டாள் பரிமளா.

பரிமளா விடைபெற்றுக்கொண்டபோதும், அவள் கூறிய விடயங்கள் நளினியிடமிருந்து விடைபெற்றுக்கொள்ள பிடிவாதமாய் மறுத்துக் கொண்டிருந்ததன.

பார்ப்போம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? சம்மதம் என்ற அர்த்தமா... அல்லது தட்டிக்கழிப்பா? அவளுக்குப் புரியவில்லை.

இதைப்பற்றி தன் கணவர் கூறாதது அவளுக்கு பெரிய கவலையாக தெரியவில்லை. எதோ நினைப்பில் மறந்திருக்கலாம் என்று தன் மனதை தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

இப்போது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைதான் அவள் கண்முன் நிழலாடியபடியே இருந்தது.
பிள்ளைகளைப்பற்றி நினைத்து கொண்டாள். பிள்ளைகளை எப்படி தைரியமாக வளர்க்க வேண்டுமென்டு நினைத்துக்கொண்டு, வளர்த்தாலும் பொம்பிலைப் பிள்ளையள் என்ற பயம் அடிக்கடி நெஞ்சுக்குள் இருந்து மிரட்டிக் கொண்டிருக்கிறதே...! 'எனக்கு மட்டுந்தான் இப்படி ஒர் நினைப்பு வந்து என்னை அடிக்கடி சூழ்ந்து கொள்கிறதா...? இதில் இருந்த மீள முடியாமல் தான் அவையளுக்கும் கெதியில கலியாணத்தை நடத்திப்போடுவம்' என்று அவள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாள். எங்க வாறது போறது என்டறு பார்க்கிறதை... வீட்டுக்கு வர பிந்திட்டுது என்டால் மனம் கிடந்து அடிச்சுக் கொள்றதை... அந்த மனசுக்குத்தான் தெரியும்.

ஆனால்... அவளின் பிள்ளைகளோ...

"அம்மா முதல்ல நாங்கள் படிச்சி எங்கட சொந்தக்காலில நிற்கவேணும். பிறகு தான் கலியாணம்.." என்று சொல்லிப்போட்டார்கள். நளினியும் இதை தவறு என்று ஏற்றக்கொள்ளவில்லை. அவர்கள் சொல்லுவதும் சரியென்று பட்டது அவளுக்கு.

ஆனாலும்... நளினிக்கு இருதலைக்கொள்ளியான நிலைமை. அடிக்கடி கடவுளிடம் வேண்டிக் கொள்வாள், 'நல்லூர்க் கந்தனே என்ட பிள்ளையளுக்கு நல்ல வாழ்க்கை வந்து அமைய வேணும்' அவளின் வேண்டுதல் அனைத்தும் பிள்ளைகளைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.

இந்தநிலையில் வலிய வந்த சம்பந்தம்... அதைப்பற்றியும் சற்றே நினைக்க ஆரம்பித்தாள்.

சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்பதற்காகவும், இந்த நாட்டு பிரஜாஉரிமைக்காகவும் திருமணம் என்ற பந்தம் இதற்கு ஒரு அடிகோலாக அமைந்திருப்பதை நினைத்துப் பார்த்தாள். இங்கு இரண்டுவித கலாச்சாரத்துக்கு இடையில் வாழ்ந்துவருகின்ற சூழ்நிலையில்... எம்நாட்டு கலாச்சார பண்புகளோடு மட்டும் வாழ்ந்துவந்த அவனால் இந்த நாட்டு வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொண்டு என் மகளோடு கடைசிவரை இணைபிரியாமல் வாழ்ந்து விட முடியுமா...?

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமுடியாத நிலையில் இது சாத்தியமாகுமா...?

இதற்கு விடைகாண முடியாமல் தவித்தபடியே ஆசியா கடைக்குள் நுழைந்தாள் நளினி.

"அக்கா, மலிவுவிலை போட்டிருக்கிறம். ஒரு சாறி எடுத்தால் இன்னொரு சாறி இலவசம். அதுவும் இந்த மாசம் மட்டும் தான்.... இந்த விலையில எங்கேயும் எடுக்கமாட்டிங்கள்..." கூறிக் கொண்டே வெவ்வேறு கோலங்களில் ஆன அழகான புடைவைகளை ஒவ்வொன்றாக இழுத்துப்போட்டுக் கொண்டே கவனம் முழுவதையும் விற்பனையில் காட்டிக் கொண்டிருந்தார் விற்பனையாளர்.

அந்த புடைவைகள் மீது நளினியின் கவனம் இருக்கவில்லை. அவர் 'மலிவுவிற்பனை' என்று கூவியழைத்தது தான் அவளின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

சொந்தம் விட்டு போகக்கூடாது என்பதற்காகத்தான் பெண்ணுக்கும் மலிவு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா..?

பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் இலவசமாக இந்த நாட்டு பிரஜாஉரிமை கிடைக்குமா...?

அதற்காகத்தான் இந்த திருமணப்பேச்சும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதா...?

"ஒரு புடைவை எடுத்தால் இன்னொன்டு இலவசம்.." கடைக்காரர் மீண்டும் உரத்து, தன் வியாபார தந்திரத்தை உபயோகித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree