உணர்வுகள் நிஜங்களாக...

16 ஜனவரி 2005
ஆசிரியர்: 

 

ங்கில பாடத்திற்காக மணி அடிக்க ஆரம்பித்தபோது அதற்கான பாட புத்தகங்களை எடுத்து வைப்பதில் எல்லோரது கவனமும் இருந்தது.  ஷர்மிலி யின் மனமும்  படபட வென அடித்துக்கொண்டது.

இரண்டு வாரத்துக்கு முதல் தான் ஆங்கிலப்பாட பரீட்சை நடைபெற்றது.

அதற்குறிய பெறுபெறுகள் இன்று கிடைக்கப்போகின்றது. ஏற்கனவே நடந்து முடிந்த பரீட்சையில் டொச், ஸ்பானிஷ்,  லெத்தின் மொழிகளில் மிக மிகத் திறமையான சித்தி கிடைத்திருந்தது அவளுக்கு.

இந்த பரீட்சையில் என்ன கிடைக்கப்போகின்றது...? வழக்கம்போல் இம்முறையும்  பரீட்சை நன்றாகவே செய்திருந்தாள்.  ஆனாலும் ஷர்மிலி யின் மனதில் ஓர் பதட்டம். மனதின் பதட்டம் அவள் உடம்பில் பரவிää எங்கும் உஷ்ணமாய் வியர்வைத்துளிகள் நெற்றியில் துளிர்க்க ஆரம்பித்திருந்தது.  மற்ற மாணவ மாணவிகளை பார்த்தாள்.  எல்லோரும் சாதாரணமாக இருப்பது போல் தெரிந்தது.  ஏன் என் மனம் இப்படி அடித்துக்கொள்கிறது.  அவளையும் மீறி அவள் உதடுகள் முருகா... முருகா...  என்று வேண்டிக் கொண்டது.

ஆசிரியர் ஒவ்வொரு மாணவியின் பெயரையும் சொல்லி அதன் பெறுபெறுகளை சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார்.  இறுதியாக ஷர்மிலி என்று கூறி மிக நன்றாக சித்தி பெற்றிருக்கின்றாள்  என்று கூறியபோது… அவள் இதயம்  எங்கும் ஓர் இன்ப மின்சாரம் ஊடுருவி உடல் முழவதும் பரவியது போன்ற நிலை ஏற்பட்டது.  அந்தநேரத்தில் ஒரு கணம் தன் பெற்றோரை நினைத்துத் கொண்டாள்.  இந்த விஷயத்தை வீட்டில் கூறும்போது தம் பெற்றோர் படும் மகிழ்ச்சியை தன் மனக்கண்முன் வரவழைத்துக் கொண்டு மகிழ்ந்தாள்.

ஆசிரியர் ஷர்மிலியை அழைத்து  அவள் படிப்பின் மீது செலுத்தும் தீவிர அக்கரையை பெருமையாக புகழ்ந்து கொண்டிருந்தார். 

தன்னைப்பற்றி புகழ்வது அவளுக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.  இப்படி வகுப்பிற்கு முன்னால் புகழ்வது இதுதான் முதல் தடவை.  இரவுபகலாக படித்ததன் பயனை அடைந்தாள். எப்போது அம்மா அப்பா விடம் சொல்வோம் என்ற ஆவலில் அவளால் அதிகநேரம் வகுப்பறையில் இருக்க இருப்புக்கொள்ளவில்லை.  எப்போ வீட்டுக்குப் போவோம் என்ற துடிப்புடன் காவல் இருந்தாள்.

பாடசாலை முடிவடைவதற்கான மணி அடித்தபோது... புத்தகக்கட்டை அள்ளி சுமந்து வகுப்பறையை விட்டு வெளியேற முற்பட்டபோதுதான் அவளுடன் படிக்கும் சகமாணவி மறியா அவளை இடைமறித்து   "Congratulations,  Sharmili!  Can you actually speak in your mother tongue?"

என்று கேட்டபோது அவளும் "Thanks Maria!  I understand Tamil well, but can't read or write it." 

இதைக்கேட்ட மறியா "Oh, that's sad! You are good at all these foreign languages, but not good at your own mother tongue?  Don't you feel afraid of losing your identity?"

மறியா கூறியதைக்கேட்ட போது  ஷர்மிலியின் முகம் சட்டென்று கறுத்துப்போனது.  தமிழ் எழுத பேச தெரியாமல் என் அடையாளத்தை தொலைத்து விட்டு நிற்கின்றேனா...?  இத்தனை காலமும் ஏன் எனக்குத் தெரியாமல் போய்விட்டது? தாய்மொழியை எழுத பேசத் தெரியாமல்  எத்தனை மொழிகள் தெரிந்தும் என்ன பயன் ? அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள். தனக்குள் ஏதையோ தொலைத்து விட்டு எதையோ  தனியே இருந்து தேடுவது போன்று அவளுக்கு ஏற்பட்டது.

சற்றுமுன் பாராட்டிய பாராட்டுக்கள் எல்லாம் ஒரு நொடிக்குள் மாயமாய் மறைந்து போய் ஷர்மிலியின் மனதுக்குள் தன் தாய் மொழியின் அடையாளத்தை தொலைத்த வேதனை குடிகொண்டு விட்டது. என்ன சொல்வதென்று தெரியாமல் மறியாவிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஷர்மிலி.


வழி நெடுகிலும் ஷர்மிலிக்கு இதைப்பற்றிய சிந்தனையே நிழலாடிக்கொண்டிருந்தது.  அந்நிய மொழிகளைப் படித்து நல்ல பெறுபெறுகள் பெறும் என்னால் ஏன் என்  தாய்மொழிக்கல்வி படிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்துவிட்டேன்.  இது எனது தவறா...? அவள் உள்மனம் அவளையே கேட்டது.

வீட்டுக்கு வந்த உடன் ஒன்றும் செய்ய பிடிக்காமல் புத்தகப் பையை மேசை மீது வைத்து விட்டு தலையை தொங்கவிட்டபடியே கதிரையில் அமர்ந்து கொண்டாள்.

மகளின் நிலையை கண்ட தாய் ஊகித்துக் கொண்டாள் பரீட்சை பெறுபெறு அவள் எதிர்பார்த்தது போல் இல்லை என்று எண்ணியபடியே ஷர்மிலியின் அருகே வந்து ஆறுதலாய் "பரவாயில்லையம்மா. அடுத்தமுறை எல்லாம் நல்லதாக பரீட்சை முடிவுகள் கிடைக்கும்..." என்று மகளை சமாதானப்படுத்துவதில் முனைந்தாள்.

"இல்லையம்மா. எனக்கு மிக நன்றாக திறமையான சித்திதான் கிடைத்தது. ஆனால்..."  கண்கள் சற்றே கலங்கியபடியே கூறினாள் ஷர்மிலி.

"பிறகு எதற்கு உந்த கண்ணீர் பள்ளிக்கூடத்தில்ல ஏதும் பிரச்சனையோ...?" என பதட்டமாகவே கேட்டாள்.

"அம்மா,  இன்டைக்கு மறியா என்ன கேட்டவ தெரியுமே?  எனக்கு தாய்மொழி எழுத பேச தெரியுமே என்டு. அவ கேட்டவுடனே எனக்கு எப்படியிருந்தது தெரியுமே.  என்ட   feelings... அது எனக்கு சொல்லத் தெரியேல்ல  ஏன் அம்மா எனக்கு சின்னவயசுலயிருந்து 'தமில் எழுத' படிப்பிக்கேல்லை?"  கவலையோடு கேட்டாள் ஷர்மிலி.

"ஷர்மி,   இங்கே நாங்கள் வந்தபோது ஒரு தமிழ்பாடசாலைகளும் இருக்கேல்ல. இப்பவென்டால் ஒவ்வொரு இடத்திலேயும் தமிழ் பாடசாலையிருக்கு. நாங்கள் வந்த நேரம் அப்படி எங்கள் நிலைமையாக இருந்தது" என்றாள் அம்மா சற்று வருத்தமாக.

"அம்மா,   அதை விடுங்கோ நீங்கள் 'தமில்தானே.' அந்தநேரம் நீங்களாவது எனக்கு 'தமில்' சொல்லித் தந்து இருக்கலாம் தானே..?  இன்று என் சினேகிதி கேட்டபோது என் அடையாளத்தை தொலைத்து நின்ற அனுபவம் தான் எனக்கு ஏற்பட்டது. இனிமே நான் தமிழ் படிக்கப்போறன்..." என்று கூறியவள் இணையதளத்துக்குள் போய் தானாகவே தமிழ் படிப்பதற்கான பக்கங்களை தேடிக்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

அதேநேரம் தன் அடையாளத்தை தனக்கு உணர்த்திய மறியாவை மனதுக்குள் நினைத்து நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.

உணர்வுகள் செயல்களாக பரிணமிக்க அதன் வெளிப்பாடுகள் நிஜங்களாக... வெளிப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree