நெஞ்சின் ஆசை நனவாக...

20 பிப்ரவரி 2007
ஆசிரியர்: 

 

செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் தாயகம் சென்று சேவை செய்ய இருக்கும் தன் முடிவை உறுதி செய்திருந்தாள் மோகனா. மூன்று பெண்களும், நான்கு ஆண்களுமாக ஒருவருட உடன்படிக்கையின் பேரில், அதில் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்கலாக அவளின் பயணம் வெற்றிகரமாக பதியப்பட்டிருந்தது.
 
முதன் முதலாக அவளின் தாயக பயணம் இது. மனதுக்குள் சோடாக் குமிழ் போல் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே மனதிற்குள் ஒரு சின்னப்பயம். அதையும் மீறிக்கொண்டு அவள் உள்ளத்தில் இருந்த மனஉறுதி தன்னால் முடிந்த சேவையை தன் தாய்நாட்டிற்காக செய்ய வேண்டும் என்ற திடமான உணர்வு அவளின் நாடி நரம்பெங்கும் வியாபித்து, அந்த பயத்தினை முறியடித்து இருந்தது.

வீட்டுக்கு வந்து தன் பயணம் பற்றிக் கூறியபோது அவளின் அம்மா பதைபதைத்து போனாள்.

"ஊரில்ல பயந்து, பயந்து வாழ்ந்து போட்டு, கடைசியில அகதியா இங்கு வந்து நிம்மதியாக வாழ்வம் எண்டு நினைக்க... நீயும் திருப்பி அங்கேயே போகனும் எண்டா... எப்படி?" தன் கோபத்தை அனலாய் கக்கிக் கொண்டிருந்தவள் மீண்டும் "எப்ப சிட்டிசன் எடுத்து இந்த நாட்டுடன் இருப்போம் எண்டு அங்கையிருக்கிறைவயள் இங்க வாறதுக்கு பறந்து கொண்டிருக்கேக்க உனக்கென்ன விசரே? திருப்பி அங்கே போறன் எண்டு வந்து நிக்கிற. உனக்கு தெரியுமே ஊரில்ல என்ன நடக்குதெண்டு..."

அம்மா பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.

புலம்பெயர் மண்ணில் தாயகம் பற்றிய எத்தனையோ நிகழ்வுகளில் கலந்து அவற்றை சிறப்பித்திருக்கிறாள் மோகனா. அப்போதெல்லாம் கட்டியணைத்து, தட்டிக்கொடுத்து, வாழ்த்துக்கள் சொல்லி, ஆதரவாய் ஆசுவாசப்படுத்தி கரம்கோர்த்த அம்மாவா இப்படி?

சொன்னதைக் கேட்டும் அவள் மௌனமாக இருந்தாள். மோகனாவுக்கு தாயகம் செல்லப் பிடித்திருந்தது.

அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்வது தேன் கூட்டில் கல் எறிவது போல, ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் அத்தோடு ஓயாது சரம் சரமாய்க் கேள்விக்கணைகள் மேலும் கிளம்பும். மோகனா மௌனமாய் இருந்தாள்.

அப்பா தொடர்ந்தார்...

"நீ யாரைக் கேட்டு உன்னுடைய முடிவைச் சொன்னனி? நான் இங்க தகப்பன் எண்டு ஒருத்தன் இருக்கிறன் எண்ட நினைப்பாவது இருக்கா?"

தன் ஆற்றாமையை வார்த்தையால் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். குடும்பத் தலைவனின் ஆக்ரோக்ஷத்துடன் குரல் சற்றே உயர்ந்திருந்தது.

"எனக்கு அங்கு போய் சேவை செய்யப் பிடித்திருந்தது. அதனால நான் ஓம் என்டு சொல்லிப்போட்டன். கையெழுத்தும் போட்டுட்டேன்."

அமைதியாகச் சொன்னாள் மோகனா.

"பதினெட்டு வயசு வந்தால் போதும். முழுசுதந்திரமும் கிடைச்சாப்போல தங்கட பாட்டுக்கு முடிவு எடுக்கிறது, கையெழுத்து போடுறது... ஐரோப்பாவின் சட்டதிட்டங்களால் வாயைத்திறந்து என்னால் கதைக்கமுடியுது இல்லை..." இறுதியில் தன் இயலாமையை வார்த்தையால் கொட்டி,தீர்த்துக் கொண்டிருந்தார்.

மோகனாவின் உடம்பின் செல்களில் மெலிதான மின்சாரம் பாய்வது போன்ற ஓர் உணர்வு. அமைதியாக தன் நிலைக்கு விளக்கம் கூற எத்தனிக்கின்றாள். "அப்பா, உங்கள் மனத்துன்பம் எனக்கு விளங்குது. நான் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடனும், என்னுடன் சிலரும் வருகினம். இது என்னுடைய பல நாள் கனவு. எனது தாயகத்தையும் பார்த்து, அந்த வாழ்வியலில் வாழ்ந்து, அதில் என்னுடைய சேவை நிறைவு பெறவேண்டும். திரும்ப ஒரு வருசத்தால நான் கட்டாயம் திரும்பி வருவன்..." என்று தன் நெஞ்சினில் வாசம் செய்கின்ற ஆசைகளைக் கூறி, பெற்றோரை சமாதானம் செய்தவள் தன் பயண ஒழுங்குகளை கவனிப்பதில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

உறவினர்களுக்காக எடுத்து செல்வதற்காக அவள் பெற்றோர் வாங்கிக் கொடுத்த பொருட்களை "இவற்றை கட்டாயம் எடுத்துச்செல்லத்தான் வேண்டுமா? அம்மா உதையெல்லாம் என்னால் கொண்டுபோக முடியாதம்மா..." என்று தீர்மானமாகவே கூறி மறுத்த மோகனா, தன் பயணத்துக்கு தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானாள். உறவினர் என்ற வட்டத்துக்குள் இருந்து விடுபட்டு, அவள் சிந்தனைகள் எல்லாம் பொதுப்படையான நோக்கங்கள் கொண்டவையாக இருந்தது.

பெற்றோருடன் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கும் போது அந்த பூக்கடைகளை நோட்டமிட அவள் கண்கள் தவறவில்லை.

ஓ... இன்று பெப்ரிவரி 14ந் திகதி காதலர் தினம்.

அதுதான் பூக்கடைகள் எங்கும் ஓரே சனக்கூட்டம். மலர்ந்தும், மலராமலும் இதயத்தைக் கொள்ளைகொள்ளும் வகையில் பூங்கொத்துகளாக... இருந்த பலவண்ணங்களில் இருந்த மலர்கள் மோகனாவின் மனதையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.

அந்த அழகான ரோஜா மலர்களை பார்த்தபோது அவளையறியாமலே அவளுக்குள் அவளின் ஆழ்மனதிலிருந்து கிளர்ந்தெழுந்த அந்த உணர்வுகள்.. மண்ணின் மலர்வுக்காக மடிந்த அந்த மாவீரர்களின் சமாதிகளுக்கு முன்னால் அத்தனை மலர்களையும் வைத்து மானசீகமாக அர்ச்சிக்க வேண்டும் போல் தமிழிச்சியான அவளின் நாடி நரம்புகளில் வியாபித்து நின்றது.

மாவீரர்களின் நிகழ்வுகளை எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றாள். இந்த காதலர் தினத்துக்காக மலர்ந்திருக்கும் மலர்களைப் பார்த்தபோது அவள் உள்ளத்தில் பட்டுத்தெறித்த நினைவுகள் நெஞ்சினில் வாசம் செய்கின்ற ஆசைகள்... மணம்பரப்பி, அவள் மனதில் படர, அவள் பயணமும் வெற்றியை நோக்கியை தொடர்ந்து கொண்டிருந்தது.

(யாவும் கற்பனை)
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree