இந்த இரவில் ஈரநினைவாக...

23 ஜூலை 2005
ஆசிரியர்: 

  

ர்த்தராத்திரியில் அழைத்த அந்தத் தொலைபேசி அழைப்பு. முதல் குரல் அது றமணி.
அவளும் றமணியும் ஒரே ஊரில் பிறந்து சிறுவயது முதல் ஒரே பாடசாலையில் படித்து, 14 வயதில் அவள் 12 வயதால் மூத்த ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு கிறுக்கு வயதின் கிறுக்குத்தனங்கள் எதையுமே அனுபவிக்காது குடும்பம் என்ற கூட்டுக்குள் சிக்கித்து குடும்பவாழ்வு இனிப்பா , கசப்பா , சுகமா , சுமையா? எப்படியான கேள்விகளுக்கும் ஒரு புன்னகையால் மட்டும் எதையுமே வெளிப்படுத்தாத அவளது சுபாவம். இப்படி நிறைய றமணி பற்றிய ஞாபகங்கள்......


ஏய் உன்னோடை ஒராள் கதைக்கப் போகுதாம் ?
யாரது ?
அவளது கேள்விக்கு பதில் வரமுன்னம் றமணியின் கையிலிருந்து தொலைபேசி கைமாறி ஆண்குரல் ஒன்று அவளை நலம் விசாரிக்க... குழம்பிப் போகிறாள்.


என்னை ஞாபமிருக்காதெண்டுதான் நினைக்கிறேன்.
அவன் தன்னைப் புதிராக்கி அவளுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளை நன்றாகவே அறிந்து அவளைப்பற்றிய சகலத்தையும் தெரிந்து வைத்திருந்தான். 770 பஸ்சுடன் போட்டியாக சயிக்கிள் ஓடிய அவளது வால்த்தனங்களையெல்லாம் ஒன்றும் மறக்காமல் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான்.


நானும் நீங்கள் பிறந்த ஊர்தான்.
உங்கடை கவிதையள் , கதையளெல்லாம் பத்திரிகையளிலை வாசிக்கிறனான்.
றேடியோக்களிலும் உங்கடை குரலில வாற நிகழ்ச்சியளைக் கேக்கிறனான்.
சும்மா சொல்லேல்ல அந்தமாதிரியொரு குரல்.
சரி யாரெண்டு சொல்லீட்டு கதையுங்கோவன். அவனை அறியும் ஆவலில் கேட்கிறாள்.


ஏய் விளங்கேல்லயா?
அவனிடமிருந்து தொலைபேசியை வாங்கி அவனை அடையாளம் சொன்னாள் றமணி.
அட? லண்டனிலையெல்லோ இருக்கிறதா அறிஞ்சனான்.
எடே உன்னை எங்கையிருக்கிறாயெண்டும் அறிஞ்சு வைச்சிருக்கிறாளடா.....
சொல்லிச் சிரித்தாள் றமணி.


அவன் அவளது ஊரில் அமைதியாக அட்டகாசம் இல்லாத ஆளாக இருந்த ஒருவன் என ஊரில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறாள். படிப்பிலும் நல்ல கெட்டிக்காரன். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் நல்ல கெட்டிக்காரனாகவும் க.பொ.த.சாதாரணதரத்தில் 7டி, 1சியும் எடுத்தவன். இவன்போல இன்னும் நிறையப்பேர் கெட்டிக்காரர்களாக இருந்தாலும், இவனது வயதையொத்தவர்களின் காலத்தில் இவன் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தவன். அப்படியொரு அமைதி. இவனது அண்ணன் இவனைவிட 3 வயதால் மூத்தவன். அமைதிக்குள்ளிருந்து ஒரு அட்டகாசமானவன். ஆனால் குடும்பமே கல்வியில் புலிகளாக.....


அவனது அண்ணனை அவளால் மறக்க முடியாது. அதுவொரு மாரிகாலம். புன்னாலைக்கட்டுவன் தெய்வேந்திரம் கடையில் வாங்கிய 8 கிலோ சீனிப்பை பின்கரியரிலும் 5லீற்றர் மண்ணெண்ணை முன்னாலுமாக இராஜேஸ்வரியம்மன் முடக்கால் திரும்பி தங்கச்சியம்மா வீட்டு மூலையில் அவள் வந்து கொண்டிருக்க, விக்னாவில் ரியூசன் முடித்து அவனது அண்ணனும் அவனது நண்பர்களும் வந்து கொண்டிருந்தார்கள்.


வழமையாக வருவது போலவே அன்றும் அவர்கள் வருவதாக நினைத்துத் தன்பாட்டில் வந்து கொண்டிருந்தாள். நேரே வந்தவன் தங்கச்சியம்மா வீட்டு முடக்கில் இருந்த பள்ளத்தில் நிறைந்த வெள்ளத்திற்குள் தனது காண்டிலை அவளது காண்டிலுடன் உராஞ்சி விட்டான். அந்த வெள்ளத்தில் சீனியும் நனைஞ்சு அவளும் நனைச்சு.... அவனோ வழமையான பல்வெளித்தெரியாத சிரிப்போடு போய்விட்டான். ஏன் இடித்தான்? இன்று வரையும் அவளுக்குத் தெரியாது. அதன் பின்னால் அவனது முகத்தையே அவளுக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. எதிர்பாராத சந்திப்புக்கள் ஏற்படும் இடத்து ஒரு முழிமுழிப்பாள். அவ்வளவே வேறில்லை. வழமையான அந்தப் புன்னகை மட்டும் அவனுடன் கூடவே இருந்தது.


வெள்ளத்தில் நனைந்து வந்ததன் காரணம் கேட்ட அம்மாவுக்கு அவன்தான் விழுத்தினான் என்று சொல்லவில்லை. அதைச்சொன்னால் அவனோடை நீயென்ன கதைச்சனியெனப் பிரச்சனை வருமென அமைதியாகிவிட்டாள். ஆனால் அந்தச் சம்பவத்தைத் தோட்ட வெளியில் நின்று பார்த்திருந்த ஒரு பழசு பின்னேரம் அவளது வீட்டில் ஓதிவிட, அவனுக்கும் அவளுக்கும் இளவென்று கதைபரவி அம்மாவிடம் வாங்கிய குட்டு இப்பவும் அவளுக்கு நினைவிருக்கு..... அந்த மோதலின் பின்னால் அவனைக் கண்டால் தானாகவே ஓரடி தள்ளியே அவளது சயிக்கிள் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கிவிடும்.


என்னடி செய்யிறாய்? கேட்டாள் றமணி.
இருக்கிறோம். நீயெப்பிடியிருக்கிறாய்?
பிள்ளையள் என்ன செய்யினம்?
படிப்புகள் எல்லாம் எப்பிடி போகுது? வழமையான அவள் பற்றிய றமணியின் விசாரிப்புகள்.


பிரச்சனையில்லை இருக்கிறாங்கள் பிள்ளையள்.
உன்ரை பிள்ளையள் என்ன செய்யினம் ? றமணியைக் குறுக்கிட்டு அவன் தொலைபேசியை வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.


எட பொறடா கொஞ்ச நேரம் கதைச்சிட்டுத்தாறன். ஐயோ.... இவன் விடுறானில்லையடி கதைக்க.... அவனோடை கதைச்சிட்டுத் தா. றமணியிடமிருந்து அவனிடம் கைமாறுகிறது தொலைபேசி.


ம் வேறையென்ன விசேசங்கள்.
சொல்றமாதிரிக்கு ஒண்டுமில்லை.
கலியாணங்கட்டீட்டீங்களா?
சிரித்தபடி சொன்னான் இன்னும் கலியாணத்தைப் பற்றி யோசிக்கேல்ல.
கொஞ்சக்காலம் கழிச்சுச் செய்வம் இப்பென்ன அவசரம் ?
என்ன வயசுபோனப் பிறகோ செய்யப்போறியள் ?
அப்பிடியில்லை.... கொஞ்சம் நிம்மதியா இருப்பமே.....


பின்னால் றமணியினதும் றமணியின் கணவனதும் சிரிப்புக்கள் ஊடாக அவளது பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது.
என்னவாம் என்னைப்பற்றி உங்கடை அத்தை கதைக்கிறா?
அவ சும்மா ஏதோ கதைக்கிறா..... நீங்க சொல்லுங்கோ..... உங்கடை கண்ணாளன் எந்த ஊர்?
அவள் தன்னுடைய கண்ணாளனின் ஊரைச் சொன்னாள்.


ஊருக்கை இருந்த ஒருதரையும் ஏனுங்களுக்குப் பிடிக்கேல்ல.
ஊருக்கை யாரையாவது லவ்வியிருக்கலாமே ? கேட்டான் அவன்.
எனக்குப் பிடிச்ச வாழ்க்கையிது. இதிலை எந்தக் குறையுமில்லாமல் இருக்கிறன்.
இண்டைக்கு இந்த சமூகத்திலை ஒரு அடையாளத்தோடை நானிருக்கிறனெண்டா அதுக்கு காரணம் என்னுடைய என்னவன்தான்.
ஏன் நீங்களும் பிரதேசப்பிரிவு பாக்கிறீங்களோ ?


அப்பிடிச்சொல்லேல்ல.... ஊருக்கையெண்டா எப்பவும் ஊரோடையான தொடர்புகள் இருந்திருக்கும். அதுக்குத்தான் சொன்னனான்.... என்றான் அவன்.


நாங்களெல்லாம் காத்திருக்க ஒருதருக்கும் தெரியாமல் தூரமான ஊருக்கு ஓடீட்டியள்.
அதுதான் கொஞ்சம் கோபம்.
சிரித்தபடி சொன்னான்.
உப்பிடி எத்தினை பேர் வெளிக்கிட்டிருக்கிறியள் ? சாதாரணமாய்க் கேட்ட அவளுக்குச் சட்டெனச் சொன்னான்.
உண்மையாத்தான் சொல்றன். நான் காத்திருக்க நீங்க போட்டியள். மீண்டும் சிரித்தான்.
எடேய் அவளோடை உது கதைக்கவோ இந்த இரவிலை கதைக்க எடுத்தனீ... றமணி அவனைக் கடிந்து கொள்வது கேட்டது.
அத்தை முந்தித்தான் கதைக்க முடியேல்ல என்ரை விருப்பத்தைச் சொல்லவும் முடியேல்ல... இப்பவெண்டாலும் சொல்ல விடுங்கோ....'நான் காத்திருக்க' அந்த வார்த்தைகள் அவளில் அடியாக விழுந்தது. ஊரில் ஒருநாளும் அவனுடன் கதைத்தே அறியாள். ஒரு புன்னைகைகூடப் பரிமாறியிருக்கவில்லை... அப்படியிருக்க இவனை....? புரியாத கேள்வியால் ஒரு கணம் மௌனமாகிவிடுகிறாள்.

என்ன பயந்திட்டீங்களோ ? அவன்தான் கேட்டான்.
அப்ப நீங்கள் நல்ல சந்தோசமா இருக்கிறியள் என்ன...
ம்....
என்ன கோவமோ....?
இல்லை.... வேறையென்ன புதினம்?
நீங்கதான் சொல்ல வேணும்....


'நான் காத்திருக்க' வார்த்தைகளை விலக்கி ஊர், உறவுகள், தெரிந்தவர்கள் எனக் கதை நீண்டு ஒரு மணித்தியாலத்தை விழுங்கிவிடுகிறது மணிக்கூடு.
மாமாவோடை சேந்து பியர் குடிச்சிட்டு நிக்கிறன். அதுதான் கனக்க உளறீட்டன் போலை.... நினைச்சிருந்ததைச் சொல்ல வேணும் போலையிருந்தது. அதுதான் சொல்லீட்டன் கோவிக்காதையுங்கோ... இவ்வளவு எழுதிற, சிந்திக்கிற உங்களுக்கு என்ரை வெளிப்படையான கருத்து பாதிச்சிருக்காதெண்டு நம்பிறன். என்ன? அப்பிடித்தானே...?


ம்... சாதாரணமாகவே கதைத்தாள்.
வேறையென்ன அத்தையோடை கதையுங்கோ.....
நான் நித்திரை கொள்ளப்போறன்.
நாளைக்கு உங்களைப் பாக்க வாறன் அத்தையாக்களையும் கூட்டிக்கொண்டு....
வரலாம்தானே.....


தாரளமா வாங்கோ வரவேற்கிறோம்.....
சரி றமணீட்டை குடுங்கோ......
தொலைபேசி றமணியிடம் கைமாறுகிறது.


ம்... வேறையென்னடி... என்ன குழப்பீட்டானோ.....
இல்லை....
உன்னையின்னும் எத்தினைபேர் நினைச்சிருந்தாங்களோ தெரியாது... சொல்லியபடி றமணி சிரித்தாள்.
அப்பிடியெல்லாம் இல்லையடியப்பா... நீ வேற....


ஒரு எஞ்ஜினியரை இழந்திட்டாய்.....
சொன்னாள் றமணி.
இல்லை றமணி எஞ்ஜினியரைக் கட்டியிருந்தா கோடீஸ்வரியாவும் சாதாரணமான ஒரு பெண்ணா 3, 4 பிள்ளையளுக்கு அம்மாவாகவும், சாதாரண ஒரு மனைவியாகவும்தான் இருந்திருப்பேன். இந்தச் சமூகத்துக்கை ஒரு படைப்பாளியாவோ, ஊடகமெண்ட ஒரு துறையிலை நான் தலைவைச்சும் படுத்திருக்கமாட்டேன். இந்த உலகத்தையே நான் படிச்சிருக்கமாட்டன். உண்மையிலயே நான் இப்பிடியெல்லாம் முன்னேறுறதுக்குப் பலமாயிருக்கிற என்னவன்தான எனக்கு இத்தனை வல்லமையைத் தந்தது.


அதென்னடி என்னவன்? பேரில்லையா?
புதிராய்க் கேட்டாள் றமணி.
என்னவனைப் பற்றி உனக்குப் புரியாது றமணி. பேருக்கும் அப்பால் எனக்குள்ளை பலமாயிருக்க சக்தி என்னவன். இவனை எப்பிடி நன்றியெண்டும் நன்றிக்கடனெண்டும் என்னிலிருந்து வேறாக்கி அவர் இவரெண்டு சென்ரிமெண் வசனம் பேசச்சொல்றியோ? உண்மையாவே சொல்றன் றமணி... இப்பிடியொருத்தனை என்ரை அம்மா அப்பாவாலையே தேடித்தந்திருக்கேலாது....


நீ சரியாத்தான் முன்னேறீட்டாயடி...
அவனிலை கோவிக்காதை ஊருக்கை அமைதியா இருந்தவன்.
அப்ப மனசுக்கையிருந்தததை இப்ப சொல்லீட்டான்.
இதென்ன பெரிய விசயமா ?
பெடியள் பெட்டையளை விரும்புறது, பெட்டையள் பெடியளை விரும்புறது சாதாரணம்தானே.
றமணி அவன் சார்பாக அவன் அத்தையாக, தமிழ்ச் சமூக நடைமுறையை விளக்குபவளாக மாறியிருந்தாள்.


சரிவேறையென்னடி நாளைக்கு எடுக்கிறன்.
விடியவெள்ளண எழும்ப வேணும்.
தொலைபேசித்தொடர்பைத் துண்டித்துக் கொண்டு விடைபெறுகிறாள் றமணி.


'நான் காத்திருக்க' அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் வலித்துக் கொண்டிருந்தது. தினமும் வாசல்கூட்டித் தண்ணீர் தெளிக்கும் அவள் அன்று வேளைக்கு ரியூசன் இருந்ததால் போய்விட... அந்த விடியற்காலை அவள் வாசலுக்குள் கிடந்த ஒரு கடிதம் அவளது அப்பாவிடம் மாட்டுப்பட்டு.... அன்றிரவு அப்பா அந்தக்கடிதத்தையும் கொண்டு வந்து கள்ளையும் குடிச்சுப்போட்டு.... அவளைப் பேசின பேச்சும்.... இந்த இரவில் அவளுள் ஈரநினைவாக.....


அவளை நேசிப்பதாய் எழுதப்பட்ட அந்தக் கடிதம் யார் எழுதியது? பழக்கமில்லாத கையெழுத்தொன்று அவளை நேசிப்பதாய் எழுதிய எழுத்து யாருக்குச் சொந்தம்? குழம்பிப்போய் அவள் ஆத்மத் துடிப்பாயிருந்த அவள் பிரியதோழி மதியிடம் அதுபற்றிக் கதைத்து... அந்தக் கடிதத்தை எழுதி வீட்டில் குழப்பம் வரக்காரணமாயிருந்தவனை நல்ல கிழிகிழிக்க வேண்டுமெனத் தேடியும் யாரென்று தெரியாமல்... புதிராகவே அந்தக்கடிதம்.... உருவாக்கிய புயலின் மையம் இவனாக இருக்குமோ? மூளையில் பொறியாய் விழுந்து தெறித்த சந்தேகத்தை அவளால் மனசிலிருந்து
தூக்கியெறிய முடியவில்லை.


பின்னிரவு தாண்டிவிட்டதை உறுதிப்படுத்திய மின்விளக்கொளியின் ஒளியில் கண்விழித்துக் கொள்கிறாள்.
வேலையால் வந்து குளித்துவிட்டு நித்திரைக்கு வந்த அவளது என்னவன் கேட்டான்....
என்ன பிந்தீட்டுதோ நித்திரை கொள்ள?
ம்... 12மணிக்கொரு ரெலிபோன் வந்தது. கதைச்சதிலை நேரம் போட்டுது.


யாரது?
அவன் நெஞ்சில் தலையை வைத்தபடி அத்தனையையும் அவள் சொல்லி முடிக்க....
நீயொரு குயினாத்தானிருந்திருக்கிறாய் ஊருக்கை....
சிரித்தான் அவளது என்னவன்.


போடா உனக்கெப்பவும் சிரிப்புத்தான்.
உனக்குக் கோபம் வரேல்லயா?
என்னத்துக்கு கோபம் வரவேணும்?
இதென்ன பிரச்சனையோ?
இதெல்லாம் சாதாரணம்.
சாதாரணமாய்ச் சொல்லியபடி அவள் நெற்றியுடன் தன்நெற்றியை முட்டி அவள் நெற்றிப் பொட்டைத் தன் நெற்றியிலும் இட்டுக் கொண்டான். வழமையாக அவள் நெற்றிப்பொட்டில் பாதியை அவனுக்கு இட்டுவிடும் வழமை இன்று மறந்து போயிருந்ததை அவள் மனசு ஞாபகப்படுத்தியது.


சரி வா நித்திரை கொள்ளுவம். இன்னும் 4 மணித்தியாலத்திலை பிள்ளையள் எழும்பீடுங்கள். அவள் பலமான துடிப்பான அவனது அணைப்புக்குள் ஒரு பூவாக... அவனது அரசியாக.... அவள்...


இதய வேரில் உறைந்து கிடக்கும் நினைவுத் தடங்களை ஞாபகங்கள் தட்டியெழுப்பும் கணங்களில் பல ஞாபகங்கள் வலி தரும், வலிமை தரும், வாசம் சிந்தும் ஆயிரம் நினைவுகளின் தடங்கள் நெஞ்சப்பரப்பெங்கும் நிறைந்து கிடக்க பல முகங்கள், பல குரல்கள் பலப்பல.... நினைவலைகள்... இத்தகைய நினைவொன்றில் தான் அவனும் அந்தத் தொலைபேசி அழைப்பில் அவளது ஞாபகங்களுக்குள் சிக்கியிருந்தான்.


27.12.2000

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree