விடியல்

04 ஜூலை 2008
ஆசிரியர்: 

  

"விடிந்துவிட்டது!" என்று சொல்லிக்கொண்டு எழுந்தான் அவன்.

ஒவ்வொரு பொழுதும் விடிகிறது. ஆனால் விடிகின்ற பொழுதுகள் எல்லாம் எல்லோருக்கும் விடிந்ததாக இல்லை.

விடிந்திருக்கும். ஆனால் அந்த விடியலைத் தெரியாமல் தூங்கிக்கொண்டிருப்பார்கள் சிலர்.

விடிந்துவிட்டது என்று எழுந்திருப்பவர்கள் எல்லோருமே அந்த விடியலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.

ஒவ்வொரு பொழுதும் விடிகிறபோது அந்த நாள் புதியதுதான். ஆனால் நேற்றையப் பொழுதுகளின் எச்சங்களாய் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் எந்தப் பொழுதும் புதியவையல்ல.

நேற்றையப் பொழுதுகளில் இதுவும் ஒன்றாகவே போய் மறைந்துவிடும். அதனால்தான் எத்தனை பொழுதுகள் விடிந்தாலும் இன்னும் விடியவில்லையே என்று ஏங்கிக்கிடக்கிறார்கள் பலர்.

அந்தப் பலரில் இவனும் ஒருவன்.

ஆனாலும் விடிந்துவிட்டது என்று இன்றைக்கு எழுந்திருக்கிறான்.

இண்டைக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுகிறன் பார்! என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

பணம் பணம் பணம் என்று அதிலேயே குறியாய் இருக்கிற உறவுகள். ஒரு இயந்திரத்தைத் தயாரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பி அந்த இயந்திரத்தின் வருவாயில் சுகம் தேட நினைக்குமாப்போல் என்னையும் ஒரு இயந்திரமாக மாற்றிவிட்டார்களே! பெற்ற தாய்தகப்பனுக்கே என்ரை நிலைமை புரியாதபோது மற்ற உறவுகள் எம்மட்டு?
*

நாளொன்றுக்கு பதினெட்டு மணிநேரம் பாடுபட்டாலும் ஊரிலுள்ளவர்களின் தேவைகளைத் திர்த்துவிடமுடியாது என்று தோன்றிற்று.

முப்பத்தைந்து வயதிலேயே முகத்தின் தோல் வரண்டு கண்களைச்சுற்றிக் கருவளையம் படர்ந்து தலையிலும் வெள்ளிக்கம்பிகளாய் தலைகாட்டுகிற நரையுடன்...

இனி எனக்கெண்டாரு எதிர்காலம்.. வாழ்க்கை..?

ஆருக்கு அதைப்பற்றி அக்கறை இருக்கு?

அதுசரி.. புறப்படும்போது விட்டுப்பிரியமாட்டாமல் ஒப்பாரிவைத்து அழுது என்னை வழியனுப்பிவைத்த அம்மாவுக்கே என்னில் அக்கறை இல்லாதபோது வேறுயாரிடம் அன்பையும் அக்கறையையும் நான் எதிர்பார்ப்பது? பெற்றதாயே இப்படி என்றால் மற்றவர்கள்..?

வாசற்கதவைத் தாழிட்டுவிட்டு தெருவில் இறங்கினான் அவன்

இனி ஒரு சதமும் ஊருக்கு அனுப்பிறதில்லை.. எனக்கெண்டொரு எக்கவுண்டைத் திறந்து அதிலையே எல்லாத்தையும் போட்டு வைக்கவேணும்.. நடக்கிறது நடக்கட்டும் ஜெர்மன்காரர்மாதிரி வாழப் பழகிடவேணும்... இங்கை ஆர் ஆரை எதிர்பாக்கிறாங்கள்? புருசன் தன்ரபாடு.. பெண்சாதி தன்ர பாடு.. பிள்ளையள் தங்களின்ரை பாடு.
*

அடுத்த வீட்டின் முன்னால் அம்புலன்ஸ் ஒன்று அலறியடித்துக்கொண்டு வந்து நின்றது.

அவசர அவசரமாக உள்ளே ஓடிய மருத்துவப் பிரிவினர்களில் இருவர் வயோதிபர் ஒருவரைச் சுமந்துகொண்டு வந்து அம்புலன்சினுள் ஏற்றினார்கள்.

இவன் அருகே ஓடினான்.

வீட்டுக்காரர் அல்பேர்ட்.

சற்று முதியவர்தான் என்றாலும் கம்பீரமான உடலுக்குச் சொந்தக்காரர்.

உலக்கையன்கள்மாதிரி என்று வர்ணிக்கக்கூடிய நான்கு ஆண்பிள்ளைகளுக்குத் தந்தை.

ஆறுமாதங்களுக்கு முன்புதான் மனைவியை இழந்திருந்தார்.

அவள் இறந்த அடுத்தடுத்த மாதமே கடைசியாக இவர்களுடன் கூடவே இருந்த ஒரு மகனும் காதலியோடு ஓடிப்போயிருந்தான்.

மனைவி பிரிந்தசோகத்தையோ மகன்மாரைப் பிரிந்திருக்கும் துன்பத்தையோ இவர் பெரிதாகக் காண்பித்துக்கொண்டதில்லை. சரியான வைராக்கியம்பிடிச்ச மனிசன்.

இவனைச் சந்திக்கிறபோதெல்லாம் மலர்ந்த முகத்தோடு நாலுவார்த்தை பேசுவார். இவன் தன் ஊரைப்பற்றி ஊரின் இழப்புக்கள் பற்றிச் சொல்லும்போதெல்லாம் அமைதியாகக் கேட்பார்.- "இழப்புக்கள் இயல்புதானே!" என்பார்.

"எப்பவும் ஒவ்வொரு மனிசனும் தைரியமாக இருக்கவேணும்.. எல்லாத்துக்கும் முதல் ஒவ்வொருத்தனும் தன்னைத் தானே நம்பவேணும். ஒருத்தனுக்குத் தன்னிலை தைரியம் இருந்திட்டால் இந்த உலகமே அவன்ரை காலுக்குள்ளை வந்திடும்!" என்பார்..

அந்த மனிதர் இப்போது அம்புலன்சிற்குள்.

அவரைச் சுமந்துகொண்டு அம்புலன்ஸ் போய் மறைந்துவிட்டது.
*

மறுநாள் மருத்துவமனைக்கு அவரைப் பார்க்கப் போனான்.

"என்னாச்சுது..?" என்றான் மெய்யான கவலையுடன். அல்பேர்ட் இவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

"ஒன்றுமில்லை.. மாரடைப்பு!" என்றார்.

"என்னவள் இருக்கிறவரைக்கும் என்னை அவள் பாதுகாத்தாள்.. அவள் போனபிறகுதான் அவளின் அருமை புரிகிறது. உறவுகள் என்பது வெளியில் இல்லை. அது உள்ளத்துக்குள்ளேதான் உள்ளது என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. எனக்கு யாரும் தேவையில்லை என்று வாழ்கிற வாழ்க்கையில் அர்த்தமில்லை. என் இளமையில் என் தாய்தந்தையரைவிட்டு நான் வெளியேறினேன். என் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். எனக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் என்னைவிட்டுப் போனபோதுதான் என் பெற்றோரின் வேதனை எனக்குப்புரிகிறது. இது ஒரு தொடர்விதியாக இருக்கலாம்.!"

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அறைக்கதவை மெள்ளத் தட்டிவிட்டு சிலர் உள்ளே வந்தார்கள். அவருடைய மகன்களும் மனைவிமாரும் பேரப்பிள்ளைகளுமாய்.. அறை நிறைந்தது.

அல்பேர்ட்டின் விழிகளில் கண்ணீர் திரண்டது.

"உறவுகள் எனது சொத்து.. இதற்கு எதுவும் ஈடில்லை!" என்றார் இவனிடம். அவன் விடைபெற்று வெளியே வந்தான்.
*

அவன் அறைக்குள் நுழைந்தபோது கடிதம் ஒன்று காத்துக்கிடந்தது.

"இன்னும் கொஞ்சம் பணம் அனுப்பு ராசா!" என்று கெஞ்சும் அம்மாவின் கடிதம்.

"இதுகளைத் திருத்த ஏலாது!" என்று கடிதத்தை எறிந்தவனின் கண்களில் கடிதத்தின் மறுபக்கத்திலும் ஏதோ கிறுக்கியிருப்பது தெரிந்தது. மறுபடியும் எடுத்துப் பார்த்தான். அடிக்குறிப்பாக அம்மா எழுதியிருந்தாள்.

...இன்னும் கொஞ்ச நாளையிலை நாட்டுப்பிரச்சினை தீர்ந்திடும். நீயும் எவ்வளவு காலத்துக்கு எங்களைப் பிரிஞ்சு இருக்கப் போறாய்? எங்களுக்கும் வயசுபோட்டுது கடைசிக் காலத்திலையாவது நீ எங்களோடை இருக்கவேணும் மகனே. நீ இதுவரைக்கும் அனுப்பின காசிலை எங்கடை தேவையள்போக கொஞ்சம் கொஞ்சமாய் மிச்சம்பிடிச்சு உனக்கு ஒரு காணித்துண்டு வாங்கி வீடுகட்டியிருக்கிறம். உன்ரை மாமாவின்ரை மகளை உனக்குப் பேசி சம்பந்தம் முற்றாக்கியிருக்கிறம். இங்கினையே நீயும் ஒரு தொழிலைப் பார்த்துக்கொண்டு எங்களோடையே இருக்கப் பார். ராசா. எல்லாத்துக்கும் யோசிச்சு நல்ல முடிவா எடு....


பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள் பெண்டாட்டி மடியைப் பார்ப்பாள் என்கிறது பழமொழி மட்டும்தானா.. அது உறவுகளின் உறுதிப்பத்திரம்.

அடுத்தநாள் அவன் அம்மாவுக்குப் பணம் அனுப்புவதற்காக வங்கியில் நின்றான்.


(பிரசுரம்: வெற்றிமணி -ஆடி 2004)


(நன்றி: இந்துமகேஷ் வலைத்தளம்)

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree