இன்னொரு அயோக்கியன்

13 ஆகஸ்ட் 2007
ஆசிரியர்: 

  

ழுக்கடைந்த நினைவுகளால் நிறைந்து சேறாகிப்போன மனம்.

நாற்றம் வெளித்தெரியாவிட்டாலும் ஓரளவுக்கேனும் இவனோடு ஒட்டிப் பழகியவர்களும் கொஞ்சமாய் உணர்ந்து இவனை ஒதுக்கிப் போகத் தொடங்கியிருந்தார்கள்...
"இவனும் ஒரு மனிசனே...தூ!"
அவனிடம் இப்போது நிறையவே மாற்றங்கள்.

நிறையக் குடிப்பான். எவரையும் வாய்க்கு வந்தபடியெல்லாம் தூற்றுவான்.. விமர்சிப்பான்..

எந்தப் பெண்ணிடமும் கூச்சப்படாமல் போய் நின்று "வாறியா?" என்பான்..

கையில் காசில்லாவிட்டால் பிச்சைக்காரனிடமும் போய்க் கையேந்துவான்..

"இருக்கிறதைக் குடு!"

"எந்தெந்த நாட்டிலிருந்தோவெல்லாம் உதவாக்கரைகள் வந்து எங்கள் நாட்டைப் பாழாக்குகிறான்கள்!" என்று பொருமிக்கொண்டிருக்கிற ஜெர்மன்காரர்கள் சுலபமாக இவனையே உதாரணம் காட்டிவிடலாம்.
"இவனெல்லாம் ஏன் வெளிநாட்டுக்கு வந்தவன்.. எங்களுக்கெண்டிருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இல்லாமல் செய்கிறதுக்கு இவன் ஒருத்தனே போதுமே!" என்று தமிழர்கள் மனம் நொந்துகொள்ளுகிற அளவுக்கு.. இவன்!
ஆனால் தெரியாது...

யாருக்கும் இவனது பூர்வீகம் தெரியாது!
இங்கே யாருக்குத்தான் யாரைத் தெரிகிறது? ஒரு சந்தை உறவு மாதிரி அல்லது ஏதோ ஒரு வழிப்பயணயத்தில் சில நிமிடங்களுக்கு சந்தித்துப் பிரிகிறவர்கள் மாதிரி கொஞ்சநாட்கள் பேசிப்பழகி.. அப்புறம் அவரவர் தத்தம் வசதிப்படி இன்னொரு நாட்டுக்கு ஓடிப்பறந்து மறந்துபோகிற சொந்தங்கள்.. நட்புக்கள்..
இந்த உறவில் பலருக்கு ஒரு ஒட்டுதல் இல்லை. அதனால் யாரும் யாரையும் அதிகமாய்த் தெரிந்து கொள்வதுமில்லை. தெரிந்துகொள்ள விரும்புவதுமில்லை.

"நீங்கள் யார்..? எவர்..? எங்கிருந்து வந்தவர்?" என்றெல்லாம் பூர்வீகம் விசாரிக்கப் போனால் இப்போதிருக்கும் அன்புகூட அல்லது பழக்கம்கூட இல்லாமல் போய்விடுமோ என்ற பயம்.
இவனைக் கொஞ்சமாய்த் தெரிந்தவர்கள் கூட இப்போது இவனை முற்றிலுமாய் நிராகரித்தார்கள்-

"என்னத்துக்குச் சோலி..?"

ஒரு நாலைந்து வருடங்களுக்கு முன்பு இவனைப் பார்த்தவர்களுக்கு .............................................................
...............

"என்ரை கதையை உங்கடை பாணியிலை எழுதினால் இப்பிடித்தான் எழுதுவீங்கள்! வேணாம்.. நீங்கள் எழுதவேணாம்..!"

- இந்தக் கதையின் நாயகன் முத்துக்குமாருவுக்கு நான் எழுதுவது பிடிக்கவில்லை என்கிறான்..

வேண்டாம்... நான் எழுதவில்லை!

சொல்லட்டுக்கும்.. அவன் விரும்பினால் சொல்லட்டுக்கும்...!
-இந்துமகேஷ்.

முத்துக்குமாரு சொல்கிறான்:

1.

பனைமரத்தடியிலை குந்தியிருந்து பாலைக் குடிச்சாலும் கள்ளுக் குடிக்கிறான் எண்டுதான் எங்கடை சனங்கள் கதைக்கும். அப்ப பாலை ஏன் குடிப்பான்.. அதுகும் பனைக்குக் கீழை வந்து குந்திக்கொண்டு?

கள்ளையே குடிக்க வேண்டியதுதானை?
-பயம் விட்டுப்போச்சுது.

ஆருக்குப் பயப்பிடவேணும்?

இங்கை சொந்த பந்தம் உற்றம் சுற்றம் எண்டு ஆர் இருக்கினம்?ஆருமில்லை! அப்பிடியே இருந்தாலும்கூட-

ஆருக்குப் பயப்பிடவேணும்?

ஊர்விட்டு ஊர் தேசம்விட்டுத் தேசம் எண்டு வந்தாப்பிறகு எங்கடை ஊரிலைமாதிரி இங்கையும் சீவிக்க வேணுமெண்டால்.... ஏலுமே?

இங்கை கொஞ்சம் கட்டுப்பாடாய் இருக்கிறதெண்டால் ஒண்டில் சின்னப் பிள்ளையாய் இருக்கவேணும் இல்லாட்டில் இனி ஏலாதெண்ட படுகிழடாய் இருக்கவேணும். இப்பிடி ரெண்டுங்கெட்டான் வயசிலை - எந்தப் பக்கமும் மனம் பாய்கிற இருபத்தாறு வயசிலை இந்த நாட்டுக்குள்ளை வந்து நிண்டு கொண்டு இங்கையுள்ளவங்கள் மாதிரி என்னாலை வாழேலாது.. எங்கடை ஆக்களைப் போலத்தான் வாழுவன் எண்டால் -சிரிப்பாங்கள்.

சிகரட் பிடிக்கிறது, பியர், விஸ்கி, பிரண்டி குடிக்கிறது, ஆடு மாடு கோழி பண்டி எண்டு செத்த சதைகளைத் தின்கிறது, தெருவிலை இறங்கினால் அரைகுறை உடுப்புகளோட சிகரட்டும் கையுமாய்த் திரிகிற பெட்டையளைப் பார்த்து மருள்கிறது... வந்த புதிசிலை சங்கடமாய்த்தான் இருந்துது.
எங்கெங்கையோ அலைஞ்சு கடைசியிலை இந்த நாட்டுக்குள்ளை புகுந்து விசாவுக்கெண்டு வெளிநாட்டவர் திணைக்களத்துக்குள்ளை நுழைஞ்சபோது, தனக்கு முன்னாலை கிடந்த கதிரையைக் காட்டி "இப்படி இருங்கோ!" எண்டு சொன்ன அதிகாரியைப் பார்த்து ஆச்சரியம் வந்தது.
ஊரிலை எண்டால் இப்பிடி ஏலுமே?

வயசுக்கு மூத்தவங்களுக்கு முன்னாலையோ இல்லாட்டில் பக்கத்திலையோ குந்தக் கூட முடியாது. ஒரு மரியாதை தரவேணும். அதுகும் அதிகாரியள் எண்டால் சொல்லத்தேவையில்லை. அவையளுக்கு முன்னாலை கைகட்டி நிண்டால்தான் காரியம் நடக்கும். பெடியன் கொஞ்சம் மரியாதை தெரிஞ்சவன் எண்டு பேரும் கிடைக்கும். ஆனால் இங்கை தலைகீழ்.
பக்கத்திலை இருக்கச் சொன்ன உடனையே "தங்க" எண்டு சொல்லிப்போட்டு இருந்திரவேணும். இல்லாட்டில் இது எங்கையோ நாகரிகம் தெரியாத ஊருக்குள்ளை இருந்து வந்திருக்குது எண்டு நினைச்சுப் போடுவாங்கள்.

இப்ப பழக்கம் வந்திட்டுது.

ஆருக்கு முன்னாலை எண்டாலும் காலுக்கு மேலை கால் போட்டுக் கொண்டுதான் இருக்கிறது. எங்கடை ஊர்ப் பொம்பிளையள் ஆம்பிளையளுக்கு முன்னாலை நிக்கக்கூட மாட்டினம். ஆனால் இங்கத்தைப் பொம்பிளையள் அப்பிடி இல்லை. எந்தக் கொம்பனெண்டாலும் அவங்களுக்கு முன்னாலையும் காலுக்குமேல கால்தான். இவளவையின்ர உடுப்புக்கு இவளவை காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டுதான் இருக்கவேணும். அவங்களும் இதை ஒரு மரியாதைக் குறைச்சலாய் நினைக்கிறேல்லை.
பொம்பிளையளே இவ்வளவு துணிச்சலாய் நடக்கிறபோது ஒரு ஆம்பிளை வெட்கப்பட்டுக்கொண்டு நிக்கிறது எவ்வளவு அசிங்கம்.

இப்ப பழக்கம் வந்திட்டுது
எவருக்கு முன்னாலையும் தைரியமாய் நிண்டு கதைக்க வேணும். வெட்கப்படப்படாது. பயப்பிடப்படாது.

சிகரட் பிடிக்கிற பழக்கமும் இங்கத்தைப் பெட்டையள் பழக்கித் தந்ததுதான்.
ஒருநாள் தெருவிலை நடந்து போகேக்குள்ளை ரெண்டு பெட்டையள் பின்னாலை வந்தாளவை. அவளவையின்ரை சப்பாத்துக்கள் போட்ட சத்தத்தை வைச்சு அவளவை கெதியா நடக்கிறாளவை எண்டு தெரிஞ்சுது. சரி முன்னாலை போகட்டுக்கும் எண்டு நினைச்சுக் கொஞ்சம் தயங்க அவளவை பக்கத்திலை வந்து நிண்டாளவை. முந்திப் பிந்தி பார்த்த முகங்கள்கூட இல்லை.

"உன்னட்டை சிகரட் இருக்குதா?" எண்டு கேட்டாள் ஒருத்தி. திகைச்சுப் போய் இல்லை எண்டது மாதிரித் தலையாட்ட அவளவை ரெண்டுபேரும் சொல்லி வைச்சமாதிரி ஒரே நேரத்திலை களுக்கெண்டு சிரிச்சாளவை.

"சிகரட் பிடிக்கத் தெரியாத நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா?" எண்டது மாதிரி இருந்துது பார்வையள். போட்டிருந்த கால்சட்டை கழண்டுவிழாத குறைதான்.
சிகரட் பிடிக்காட்டிலும் பரவாயி்ல்லை. சும்மா ஒரு பக்கெற்றை வாங்கி வைச்சுக் கொள்ளவேணுமெண்டு நினைச்சு வாங்கிவைச்சுப் பழக அது வாயிலையே தொத்திக்கொண்டது. இப்ப ஒரு நாளைக்கு ஆகக் குறைஞ்சது ரெண்டு பக்கெற் சிகரட் வேணும். சிகரட் பத்திறதில்லை எண்டு ஆராவது சொன்னால் சிரிப்பாய்க் கிடக்குது.

சிகரட் பிடிக்கிறது, தண்ணி அடிக்கிறது, ஸ்பீல் மெசினிலை காசுபோட்டு விளையாடிறது, பொழுதுபோக்க நல்ல விசயங்கள்தான். காசு கரைஞ்சுபோம் எண்டதாலை கனபேருக்கு ஆசை இருந்தாலும் பயம்.

காசைக் கரைச்சுப் பொழுதைப் போக்கிறதுதானை வாழ்க்கை?

விழுந்து விழுந்து உழைக்கினம். உழைச்ச காசை என்னென்னத்துக்கோ கொண்டுபோய்க் கரைக்கினம். கேட்டால் இதுதானே வாழ்க்கை என்பினம். இது செல்வம் செழிச்ச பூமி. காய்ஞ்சுபோன ஊரைவிட்டு வாறவங்களுக்கெல்லாம் இது சொர்க்கலோகம்தான். ஒண்டொண்டாய் இங்கை நாகரீகமாய்த் தெரிஞ்சதெல்லாம் இப்ப நல்லாப் பழக்கத்திலை வந்திட்டுது. இவங்களைப்போல நிறத்தைமட்டும் மாத்த முடியேல்ல. மற்றப்படி வெள்ளைக்காரன் மாதிரித்தான். உடுக்கிறதிலையிருந்து படுக்கிறது வரைக்கும் இவங்களின்ரை ஸ்ரையில்தான்.

ஜெர்மனிக்குள்ளை இது ஒரு சின்னக் கிராமம் மாதிரி. எங்கடை சனங்கள் இங்கை அதிகமாய் இல்லை. எண்ணிப் பார்த்தால் ஒரு நாலைஞ்சு குடும்பங்கள் தேறும். எல்லாரும் கிட்டடியிலை வந்தவையள். அதாலை இங்கத்தைய நாகரீகம் ஒண்டும் இவையளுக்கு இன்னும் பிடிபடேல்லை.

ஆனால் வேறை ஸ்ரட்டுக்களிலை எங்கடை ஆக்கள் கனபேர் இருக்கினம். ஓரிரண்டு தரம் அங்காலுப்பக்கம் போனபோதுதான் தெரிஞ்சுது. அவையளின்ரை போக்குகள்.
எப்பவும் சிலபேர் ஊரைப்பற்றிக் கதைப்பினம்.

"சீ! இதுகும் ஒரு நாடே.. என்னதான் கஞ்சியைக் கூழைக் குடிச்சாலும் எங்கடை ஊர் மாதிரி வருமே?"எண்டு.

இவையளை ஆர் இங்கை இழுத்துப் பிடிச்சுக் வைச்சுக் கொண்டிருக்கினம். ஊர் திறமெண்டால் போகவேண்டியதுதானை. ஆனால் போகமாட்டினம். போக மனம் வராது. இப்பிடி ஊரைப்பற்றி விழுந்து விழுந்து கதைச்சுப் போட்டு கனபேர் கனடாவுக்கு ஓடிப் போயிற்றினம். அங்கையெண்டால்தான் நிரந்தரமாய் இருக்கலாமாம். ஜெர்மன்காரன் எப்ப கழுத்தைப் பிடிச்சுத் தள்ளுவானோ தெரியாது. அதுக்காகவும்தான் சில பேர் ஊரைப்பற்றிக் கதைப்பினம். மற்றும்படி ஊரிலை ஒரு பற்றுப் பாசத்தாலை இவையள் கதைக்கிறதில்லை. ஊரைப்பற்றிக் கதைக்கிறது சிலபேருக்கு ஒரு பொழுதுபோக்கு மாதிரி.

"அங்கை இப்ப சரியான பிரச்சனையாமெல்லே?"என்பினம்.

அங்கை பிரச்சினை எப்பதான் இல்லை. அதையே நினைச்சுக்கொண்டிருந்தால் தலைதான் வெடிக்கும். இங்கை வேலை வெட்டி இல்லாதவையள்தான் அதுகளைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு திரியினம்.
ஒவ்வொருத்தரும் வேலை வெட்டி அது இதெண்டு போகத் தொடங்கீற்றால் பிறகு ஊர் ஞாபகமே வராது. இனி ஒரு காலம் ஊருக்குத் திரும்பிப் போகக் கூடாது எண்டுதான் எல்லாரும் நினைக்கினம்.

வெளிநாட்டுக்கு வந்து அனுபவிக்கிற சுகங்களையும் ஆஸ்தி பாஸ்தியளையும் விட்டுப்போட்டு அங்கை போய் மல்லுக்கட்டஆருக்குத்தான் மனம் வரும்.

கஷ்டப்படுகிறதுகள் ஒருகாலம் நல்லா இருக்கிறதும் நல்லா இருக்கிறவ ஒருகாலம் கஷ்டப்படுகிறதும் வழக்கமான சங்கதியள்தான். கஷ்டப்படுகிற நேரத்திலை நல்லாயிருக்கப் போறதைப்பற்றிக் கனவு காணுறது இல்லாட்டில் நல்லாயிருக்கிற நேரத்திலை பிற்காலத்திலை கஷ்டம் வந்திடுமோ எண்டு நினைச்சுக் கவலைப்படுறது எல்லாம் விசர்த்தனங்கள். அண்டண்டைப்பாட்டுக்கு ஏத்தமாதிரி வாழ்ந்திட்டுப் போறதுதான் முறை. ஆனால் எத்தனைபேராலை இது சாத்தியப்படுகுது?

வெளிநாட்டுக்கு வந்த தமிழ்ச் சனத்துக்கு இப்ப நல்லா விசர் முத்திப்போச்சு. இங்கை உள்ளவங்களின்ரை வாழ்க்கை முறையைப் பழகிறதை விட்டிட்டு தமிழ் வளர்க்கப் போறம் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கப் போறம் எண்டு கனசோலியளிலை இறங்கி காலத்தை வீணடிச்சுக்கொண்டு திரியினம். ஊரிலை அஞ்சாம் வகுப்பு ஆறாம் வகுப்புப் படிச்சுப்போட்டு வந்து இங்கை தங்களைப் பெரிய எழுத்தாளரெண்டும் வாத்திமார் எண்டும் வித்துவான்கள் எண்டும் விலாசம் எழுப்பிக்கொண்டு திரியினம்.

அதிலை என்ன பிரயோசனம்?

தமிழ் என்னத்துக்குத் தமிழ்?

தமிழனும் தமிழனும் சேர்ந்து கதைச்சுக்கொண்டு திரியவா? இவன்ரை மொழியைப் படிச்சாலாவது நாலிடத்திலை வேலைகேட்டுப் பார்க்கலாம். உழைக்கலாம். வசதியாய் வாழலாம். தமிழ் என்னத்தை அள்ளித் தரப்போகுது.

எங்கடையாக்களுக்கு இதுகள் விளங்கிறதில்லையோ இல்லாட்டில் விளங்கியும் விளங்காமலும் நடக்குதுகளோ அங்கின அங்கின மழைக்குக் காளான்கள் முளைச்சதுமாதிரி ஒண்டொண்டைத் தொடங்கிப்போட்டு நானோ நீயோ எண்டு புடுங்குப்பட்டுக்கொண்டு கிடக்குதுகள்.

இதுகளைப் பற்றி யோசிச்சால் மூளைதான் குழம்பும்.வேணாம் எண்டு விட்டாலும் இத்தினை காலமாய் அந்தச் சனங்களுக்குள்ளை வாழ்ந்து பழகின மனம் சொல்வழி கேட்குதில்லை.

சில நேரங்களிலை ஊரிலையிருந்து கடிதம் வரும்.

அப்பரின்ரை கடிதம்.!
என்ன? பஞ்சப் புராணம்.!

அங்கை கஷ்டம்.. இங்கை கஷ்டம்.. காசு அனுப்புமோனை. வீடு மேயவேணும்.. வேலி அடைக்கவேணும்.. தங்கச்சிக்குப் பேசின சீதனத்திலை இன்னுப் பாதிக்காசு குடுக்க வேணும்...

வாசித்தால் விசரேத்திற கடிதம். தூக்கிச் சுழட்டி எறிஞ்சுபோட்டு வேறை வேலை பாக்கிறதுதான். நல்ல காலம் அம்மாவின்ரை காயிதம் எதுகும் வராது.. அவ உயிரோடை இல்லை. இருந்திருந்தால் அவவின்ரை கடிதமும் காசுதான் கேட்கும். ஊரைப்பற்றியோ உற்றம் சுற்றம்பற்றியோ அலட்டிக் கொள்ளாமல் வாழப் பழகவேணும். இல்லாட்டில் நிம்மதியா வாழேலாது.

இங்கை ஜெர்மன்காரங்கள் ஆரும் ஆரையும் எதிர்பார்த்து வாழ்கிறதில்லை. அவனவன் அவனவன் பாட்டைப் பார்த்துக்கொண்டு திரியிறான். கல்யாணம் எண்ட ஒரு கட்டாயச் சடங்கு அவசியமில்லாமலே இவங்களாலை வாழ முடியுது. குடும்பம் நடத்த முடியுது. ஒரு குறிப்பிட்ட பருவத்துக்குப் பிறகு பிள்ளையள் தாய் தகப்பன்ரை தலையிலை தொத்திக்கொண்டிருக்கிறதில்லை. பிள்ளையள் வளர்ந்து தங்களைக் காப்பாத்துமெண்டு தாய் தகப்பன் நம்பிக்கொண்டிருக்கிறதுமில்லை. அடுத்தவங்களின்ரை வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இவன்களுக்கு நேரமுமில்லை. நாங்களும் இப்பிடி மாறினாத்தான் நமக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கும்.2.

வந்த புதிசிலைமாதிரி இல்லை இப்ப.

எங்கடையாக்களும் கொஞ்சங் கொஞ்சமாய்த் தங்கடை வித்தையளைக் காட்டத் துவங்கிற்றீனம்.

கூட வேலை செய்கிற ஜெர்மன் பெடியன் ஒருநாள் கேட்டான்-

"உன்ரை நாட்டுக் கலாச்சாரத்திலை எனக்கு நல்ல விருப்பம். உனக்கு இதுகளிலை ஈடுபாடு கிடையாதே?"

சிரிப்புத்தான் வந்துது.

என்ன கலையும் கத்திரிக்காயும் வேண்டிக்கிடக்குது!

ஆனால் எந்தக் காலத்திலையும் ஒரு கும்பல் இப்பிடிக் கலை கலையெண்டு அலைஞ்சுகொண்டுதான் இருக்கும்போலை.

"இண்டைக்கு ஒரு புரோக்ராம் இருக்குது!" எண்டான்.

"நான் பாக்கப் போறன்.. வாறியா?" எண்டான்.

"உனக்குத் தான் தமிழ் தெரியாதே!"

"தெரியாட்டில் என்ன.. உண்மையான கலை எதுகும் மொழியெண்ட எல்லைக்கோட்டைத் தாண்டித்தான் நிற்கும்!"
இவனோடை கதைச்சால் விசர்.

எண்டாலும் ஒண்டாய் வேலை செய்கிறவன். அதிகமாய் விலகப்படாது.

போகமனமில்லாட்டிக்கும் இவனுக்காகச் சும்மா போனதுதான்.

பாஷைதெரியாட்டிலும் ஏதோ கொஞ்சநேரம் ரசிக்கிறமாதிரி இருந்திட்டு எழும்பிப் போகாமல், "புரோக்ராம் முடியுமட்டும் இருந்திட்டுப்போவம்!" எண்டு பிடிவாதமாய் இருந்திட்டான்.

வெளியிலை போய் ஒரு சிகரட் பிடிச்சிட்டு வந்து சீற்றிலை இருக்கேக்குள்ளைதான் அந்த அமர்க்களமான அறிவிப்பு வந்துது.

"உங்கள் உள்ளத்தைக்கொள்ளைகொண்ட ஒரு இனிமையான பாடல். பாடலைத் தருபவர் உங்கள் உள்ளங் கவர்ந்த பாடகி உதயா!"

எங்கடை அறிவிப்பாளர்மாருக்கெல்லாம் புளுகிறதுக்குச் சொல்லியா குடுக்கவேணும். பாடல் உள்ளங் கவருமெண்டால் சரி. பாடகியும் உள்ளத்தைக் கவருகிறதெண்டால்..?

பலத்த கைதட்டல். ஆரோ பின்னாலையிருந்து விசிலும் அடிச்சாங்கள்.

எல்லாரோடையும் சேர்ந்து தட்டினால் பாடகிக்கு ஆளை விளங்காதெண்டு தனியாய் விசிலடிச்சுக் காட்டிறாங்களாக்கும்.

அவள் வந்து மேடையில நிண்டாள்...

நளினமாய் மைக்கைக் கையிலை பிடிச்சு -"குயில் பாட்டு.. ஓ.. வந்ததென்ன இளமானே!" எண்டு அவள் துவங்க பழையபடி விசிலுகள்.
சட்டெண்டு மனசுக்குள்ளை ஒரு மின்னலடிச்சதுமாதிரி...

இவள்.. இவள்...?

ஓ... இவள் அவள்தான்!

அந்தச் சுருள் தலைக்காரி பெரிய கண்ணும் சின்ன மூக்கும் சின்னவாயும் மெல்லிய உடம்புமாய் பூப்போட்ட பஞ்சாபிக்குள்ளை தன்னை மறைச்சுக்கொண்டு...!

ஆனா பேரையும் மாத்திப் போட்டாள்.

இவளின்ரை பேர் உதயா இல்லை வித்தியா!
இஞ்சை சனங்கள் பேரை மாத்திறதொண்டும் புதிசில்லைத்தான்..

ஆக்களையே மாத்திற நாட்டிலை பேர் மாத்திறதென்ன பெரிய பிழையே?

"அத்தை மகன் கொண்டாட
பித்துமனம் திண்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன்
புத்தம் புது செண்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளிக் கொடுப்பேன்.."
கூட்டத்தைப் பார்த்துத்தான் அவள் பாடிக்கொண்டிருந்தாள்.

பார்வையை அங்கை இங்கை படரவிடாமல் நேரை இங்கையே பார்க்கிறமாதிரி இருந்துது.

இன்னொரு சிகரட் பிடிச்சால் நல்லம் எண்டு எழும்பி ஆக்களை விலத்திக்கொண்டு வாசல்பக்கம்வர..
"மெளனம் போனதென்று
புது கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது
வாசல் தேடுதே
கீதம் பாடுதே
வாசல் தேடுதே..!" எண்டு அவளின்ரை பாட்டும் பின்னாலையே வந்துது.

வெளியில நிண்டு சிகரட்டுப் புகையை ஊத-

பீடிப்புகை நெடி மனசுக்குள்ளை!

இவளின்ரை ஐயா ஊதி ஊதி விட்ட புகை.

அந்தாள் ஒரு நல்ல மனிசன்.

நல்ல மனிசன் எண்டால் குடிக்காமல் வெறிக்காமல் கோவிலைச் சுத்திக்கொண்டு திரிஞ்ச மனிசன் இல்லை. வஞ்சகம் சூது தெரியாத மனிசன் எண்டதாலை நல்ல மனிசன்.

கூலி வேலைக்குப் போகும்.

கொஞ்சக் காசிலை கள்ளுக்குடிக்கும். சில்லறைக்கு பீடி வாங்கும். வழியிலை ஒரு கோர்வை மீன்வாங்கும். மிச்சக்காசையும் மீனையும் மனிசிக் காரியிட்டைக் கொண்டுபோய்க் குடுக்கும். மனிசியிட்டைக் கள்ளுக் குடிச்சதுக்குத் திட்டு வாங்கும். தென்னம் வளவுக்குள்ளைபோய் பின்னின தென்னோலை ஒண்டை மரத்துக்குக் கீழைபோட்டிட்டு பீடியைப் பத்திக்கொண்டு படுக்கும். மனிசி சோறு சமைச்சுப்போட்டு மகளை அனுப்பும்.

"போடி போய் கொப்பனைக் கூட்டிக்கொண்டு வா!"

மகள் வந்து கூப்பிட்டால் மனிசன் இளகிப் போகும்.

"நடபிள்ளை வாறன்!"

படிக்கிற காலத்திலை அந்த மனிசன் கூலிவேலைக்குப் போறபோது கூப்பிடும்.

"சும்மாதான நிக்கிறை துணையா வாவன்!"

அப்ப போய்த்தான் பழக்கம்.

மனிசன் சில நேரங்களிலை பகிடியாய்ச் சொல்லும்-

"என்ரை பெட்டையை உனக்குத்தான் கட்டிவைக்கப்போறன்!"

"ஏன்?" எண்டு கேட்டால் மனிசன் சொல்லும்-

"எப்பவும் ஆம்பிளையெண்டு இருக்கிறவன் ஓயாத உழைப்பாளியாய் இருக்கவேணும். அப்பதான் வீடும் மதிக்கும் நாடும் மதிக்கும்!"

"அப்ப மதிப்புக்காகத்தான் மனிசர் உழைக்கிறதோ?"

மனிசன் சிரிக்கும்.

"மதிப்பெண்டதுக்கு ரெண்டு அர்த்தம் இருக்குது. ஒண்டு பெறுமதி. இன்னொண்டு மரியாதை. நான் சொன்ன மதிப்பு முதலாவது!"
காசை வைச்சுத்தான் உலகம் மனிசரைக் கணக்கெடுக்குது எண்ட உண்மை அப்பமட்டுமில்லை எப்பவும் நிலைச்சுப் போன உண்மைதானை!

அந்தப் பெட்டையைக் கலியாணம் கட்டவேணும் எண்ட நினைப்பு எப்பவும் வரேல்லை. அந்த மனிசன் சொன்னதுமாதிரி பெரிய உழைப்பாளியாய் வரவேணும் எண்ட ஆசைதான் பெரிசாய் இருந்துது.

எத்தினை வருசத்துக்குப் பிறகு அந்தப் பெட்டை ஒரு பெரிய பாட்டுக்காரியாய் இந்த மேடையில...!
பாட்டு முடிஞ்சோடனையும் நிறையக் கைத்தட்டல்களும் விசிலுகளும்.
அவள் பாடி முடிச்சிட்டு மேடைக்குப் பின்னாலை போய் மறைஞ்சிட்டாள்.
கடைசியாய் விழாக்காரார் நன்றி சொல்ல வெளிக்கிட்டினம்.

சனங்களுக்கு நன்றியைப்பற்றிக் கவலையில்லைத்தானை.

அவையள் கொஞ்சம் கொஞ்சமாய் வாசல்பக்கம் போகத் தொடங்கிவிட்டினம். வாசல்பக்கம் நெரிசல் குறையட்டும் எண்டு கொஞ்சம் தயங்கி நிற்க பக்கத்திலை சென்ற் மணம் மூக்கைத் துளைச்சுது.

"எந்தக் கிழடு இப்பிடி அள்ளி ஊத்திக்கொண்டு வந்திருக்குது? எண்டு (இங்கை கிழடுகள்தானை மேக்கப்பிலை கூட மினக்கிடுகுது!) முகத்தைத் திருப்பினால் ஆச்சரியம்!

அவள்!

உதயா என்கிற வித்தியா!

ஒரே நேரத்திலை பார்வையள் சந்திச்சுக்கொள்ள அவளின்ரை முகத்திலையும் திகைப்பு.

"நீங்கள்..?" எண்டு அவள் அடையாளம் கண்டுகொண்டு கிட்ட வர எத்தனிக்க ஒரு இரசிகன் முந்திக்கொண்டு அவளுக்கு முன்னாலை நிண்டான்.
கொஞ்ச நேரம் நிண்டு அவளோடை ரெண்டொரு வார்த்தை கதைச்சிட்டுப் போகவேணும்போலையும் இருந்துது. ஒண்டும் கதைக்கவேணாம் போலவும் இருந்துது.

குங்குமப் பொட்டும் கூந்தலிலை பூவும் கொஞ்சம் வெளித்தெரியிற மாதிரிப் போட்டிருந்த தாலியும் அவள் ஆரின்ரையோ மனிசி எண்டு அடையாளம் காட்டிக்கொண்டிருந்துது.

"போவமே?" எண்டு ஜெர்மன் பெடியன் கூப்பிட்டுக்கொண்டிருந்தான்.

"போவம்!" எண்டு தலையாட்டித் திரும்ப -

"உதயா... உங்கடை பாட்டு சூப்பர்! உங்கடை மியுசிக் புரொக்ராம் எங்கை நடந்தாலும் அங்கை முதல் ஆளாய் நான்தான் இருப்பன்.. எல்லாம் உங்களுக்காகத்தான்.. உங்கடை பாட்டுக்காகத்தான்!" -

ஆரோ ஒருத்தன் சத்தமாய்ச் சொல்லி சந்தோசத்திலை மிதக்கிறதுமாதிரி புளுகினது காதிலை விழுந்துது. விசிலடிச்சதும் இவனாய்த்தான் இருக்கும். "நானே பாராட்டி நாலுவார்த்தை சொல்லியிருக்கலாமோ?" எண்டது மாதிரி மனசுக்குள்ளை ஒரு புழுக்கம்.

அறைக்கு வந்து சாப்பிட்டிட்டுப் படுக்க முந்தி எப்பவும் போலைக் கொஞ்சம் தண்ணி அடிச்சிட்டு கொஞ்சநேரம் ரீவி பாப்பமெண்டு செற்றீல சாய்ஞ்சால்- ரீவியிலை செய்தி வாசிக்கிற ஜெர்மன்காரியிலும் வித்தியா தெரிஞ்சாள்.

சும்மா கிடந்த குளத்தைக் கலக்கிப்போட்டு கல்லுமாதிரிச் சத்தமில்லாமல் கிடக்க மனம்தான் கலங்கி...

"சீ.. என்ன இது.. ஏன் இப்பிடி..? ஒண்டுக்கும் கலங்கப்படாது கவலைப் படப்படாது.. குழம்பப்படாது.. பிறகு சந்தோசமில்லாமல் போயிடும்.. சந்தோசமும் நிம்மதியுமில்லாட்டில் பிறகென்ன வாழ்க்கை?"
இவ்வளவு காலமாய் எல்லாத்தையும் எடுத்தெறிஞ்சிட்டு இருந்தது மாதிரி இனியும் இருந்திடவேணும்.

ஜெர்மன்காரார் மாதிரி தானும் தன்பாடுமாய்.. உழைக்கிறது சாப்பிடுகிறது படுக்கிறது எண்டு...!

"அத்தைமகன் கொண்டாட பித்துமனம் திண்டாட அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன்..."

- கையில மைக்கைப் பிடிச்சுக்கொண்டு முகத்துக்குக் கிட்ட முகத்தைக் கொண்டு வந்து அவள்..

ஊதித்தள்ளுற சிகரட் புகைக்குள்ளாலை அவளின்ரை முகம்.

மேகங்களுக்குள்ளாலை மிதந்து வாற தேவதைமாதிரிச் சினிமாத்தனமாய்...!

வேணாம் வேணாம் எண்டு விட்டாலும் சில விஷயங்கள் விடாப்பிடியாத் தொடருகிறதைத் தவிர்க்க முடியாதுதான் எண்ட உண்மை உறைச்சுது.

நினைவுகள் கூடக்கூட-

தண்ணி இண்டைக்குக் கொஞ்சம் கூடிப்போச்சுது.

மயக்கி மயக்கி-

மனசையும் மூளையையும் மயக்கி.. கண்ணைக் கிறங்கி..!3.

சும்மாயிருந்து ஆறுதலாய் யோசிச்சால் சில நேரங்களிலை எல்லாம் விசர்த்தனமாய்த் தெரியும். என்னத்துக்கு இப்பிடியெல்லாம் நடக்குது எண்டு தெரியாமலே நடந்து முடிஞ்சுபோற சங்கதியள்.

விட்டுப்போறது விரும்பிவாறதும், விரும்பிப்போறது விட்டுப்போறதும் எங்கையும்தான்... எல்லார் வாழ்க்கையிலும்தான்.

"எனக்குமட்டும்தான் இப்பிடி எல்லாம் நடக்குது!" எண்டும் "என்னைப்போல வேறை ஆரும் இப்பிடி எல்லாம் கஷ்டப்பட்டிருக்கமாட்டினம்!" எண்டும் எல்லாரும்தான் நினைக்கினம்.

"சீ.. இப்பிடி இருந்ததைவிட அப்பிடி இருந்திருக்கலாமே!" எண்டு அடுத்தவன்ரை வாழ்க்கையைப் பார்த்துக் கவலைப்படுகிறதிலையே சில பேரின்ரை வாழ்க்கை தேய்ஞ்சுபோகுது. விதி எண்டு சிலபேர் சொல்கிறது. விதி எண்ட ஒண்டு இல்லாட்டிலும் மனிசனே சில விதியளை உண்டாக்கிக்கொண்டு அதுக்கேத்த மாதிரி வாழப்பழக, அந்த விதி வேறை ஒண்டாய் மாற,

"எல்லாம் விதி!" எண்டு இல்லாத ஒண்டிலை பழியைப்போட்டு...!

என்னதான் வேதம் படிச்சென்ன வித்தையளைப் படிச்சென்ன பொருள்பண்டம் சேர்த்தென்ன புகழ்மாலை போட்டென்ன..

எல்லாம் எத்தனை காலத்துக்கு?

மனிசனோடை மனிசன் கோவிச்சாலும் சரி- மனிசனோடை இயற்கை கோவிச்சாலும்சரி எல்லாம் சூனியமாப் போயிருகுது.

ஒரு பக்கம் சில சனங்கள் எலும்பும் தோலுமாய் பஞ்சத்திலை செத்துக்கொண்டிருக்க, இன்னொருபக்கம் உற்சாகமாயிருக்கிற சனங்கள் ஆயுதங்களைத் தயாரிச்சு நல்லாயிருக்கிறவங்களைக் கொன்று கொண்டிருப்பாங்கள். ஒரு பக்கம் மாடிமனை கோட்டை கோபுரம் எண்டு மனிசன் உலகத்தை அழகுபடுத்திக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் வெள்ளமோ நெருப்போ எல்லாத்தையும் அழிச்சுக்கொண்டிருக்கும்.

இந்தப் போராட்ட வாழ்க்கையிலை மனிசன் நிம்மதியைத் தேடி நாயாய் அலைஞ்சு கொண்டிருக்கிறான்.

தின்னத்தின்னப் பசிக்கிறது மாதிரி, பசிக்கப் பசிக்கத் தின்கிறது மாதிரி ஒண்டிலை ஒண்டு திருப்திப்படாமல் நெடுகிலும் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்துகொண்டு புகையைக் கையிலை பிடிக்கிற கதைதான்!
மனிசனுக்குத் திருப்திவராது - சாகிறவரைக்கும்!

என்னெண்டு வரும்?

ஏதோ ஒண்டிலை ஆரம்பிச்சால் அது இன்னொண்டிலைதான் போய் முடியும். அதிலையிருந்து இன்னொண்டு இன்னொண்டு இன்னொண்டு எண்டு!

வித்யாவின்ரை சந்திப்பு அந்த விழாவோடையே போயிருக்க வேணும். போகேல்லை.

திடீரெண்டு ஒருநாள் அறைக்கு வெளியிலை வந்து நிண்டு அந்தரப் பட்டுக்கொண்டிருந்தாள்.
வேலை முடிஞ்சு வாறநேரம்.

"என்ன இந்தப் பக்கம்?"

"உங்களைத் தேடித்தான்!"

"என்னைத்தேடி?"

-ஆச்சரியம்.

"உள்ளுக்கை வாங்கோ..!"

அறைக்குள்ளை வந்து உட்கார்ந்துகொண்டதும் அழுதாள்.

அண்டைக்கு விழாவிலை பார்த்த வித்தியாவாய் அவள் இல்லை.

செழித்துச் சிரித்த அந்த முகம் வேதனையாலையும் கோபத்தாலையும் நல்லாச் சிவந்து போயிருந்துது.

"என்ன.. ஏன் இப்ப அழுகிறீங்கள்? என்ன நடந்துது?"

பொம்பிளை எண்டால் பேயும் இரங்கும்தான்.

"அழத்தான் முடியுது சாகமுடியேல்ல.!"

அவளின்ரை குரல் உடைஞ்சமாதிரி சொல்லுகள் தழுதழுத்தன.

"அந்தளவுக்கு என்ன..? இங்கை ஆரோடை இருக்கிறீங்கள்?.. என்ன நடந்துது?"

"என்ரை வாழ்க்கையே பாழாப் போச்சுது!"

திரும்பவும் அழத்தொடங்கினாள்.
சரி கொஞ்சம் சமாதானம் அடையட்டும் எண்டு தனிய இருக்கவிட்டிட்டு உள்ளுக்கை போய் வேலை உடுப்புக்களைக் கழட்டிப்போட்டு தலையையும் முகத்தையும் அலம்பிக்கொண்டு திரும்பிவர அவள் அழுகையை நிற்பாட்டிப்போட்டு அறைக்குள்ளை இருந்த ஏசுநாதர் படத்தையே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

திடீரெண்டு வெளியிலை காத்தும் மழையுமாய் திறந்திருந்த ஜன்னலைப் பலப்பரீட்சை செய்ய அவள் அவசரமாய் எழும்பிப் போய் ஜன்னலைச் சாத்தினாள்.

"நீங்கள் கனகாலமாய் இந்த ஸ்ரட்டிலைதான் இருக்கிறீங்களா?"

-மெதுவாய்க் கேட்டாள் அவள்.

"ம்..!"

"நானும் இங்கை வந்து நாலு வருசம். ஆனால் ஒருநாள்கூட உங்களை நான் இங்கை சந்திக்கேல்லை!"

"விருப்பமில்லை!"

"என்ன..?"

"எங்கடை ஆக்களோடை அதிகமாய்ப் பழக எனக்கு விருப்பமில்லை! நானும் என்பாடும்!"

"ஆம்பிளையள் அப்பிடி இருந்திடலாம்.. ஆனால் பொம்பிளையள் அப்பிடி ஏலுமே.. அதுகும் தமிழ்ப் பொம்பிளையள்..?"

"ஏன் தனிய இருந்தால் என்ன..?"

"அடங்காப்பிடாரி எண்டு சொல்லுவினம்!"

"ஆர்?"

"எங்கடை ஆக்கள்!"

சிரிப்பு வந்தது.

"ஊர் உலகத்துக்குப் பயப்பிடத்தேவையில்லை எண்டுதானை தனியாய் இருக்கிறம். பிறகு ஆர் என்ன சொன்னாத்தான் என்ன..? சொல்லிப்போட்டுப் போகட்டுக்குமென்!"

"ஆனா அப்பிடி இருக்க முடியேல்லையே! இந்த உலகம் வேணாம் எண்டு நாங்கள் வாழ்ந்தாலும் இந்த உலகத்திலைதானை வாழவேணும். ஒருத்தருமில்லாமல் தனிய ஒருத்தர் வாழ்கிறதெண்டால் எத்தினை காலத்துக்கு? கடைசியிலை அனாதைப் பிணமாய்தான் கொண்டுபோய்ப் புதைப்பாங்கள்! அப்பிடிப் புதைக்கிறதுக்கும் ஆராவது வேணும்தானை!"

"காசு... காசிருந்தாப் போதும்! எங்களைச் சுத்தி இந்த உலகத்துச் சனங்கள் நிறைஞ்சிருக்கும்!"

"மனமில்லாவனிட்டைக் காசிருந்தென்ன.. கட்டினவளைக்கூட அவனாலை காப்பாத்த முடியாது!"

இப்போது அவள் தன் சொந்தக் கதைக்கு வந்தாள்.

சிவராசசேகர சர்மா!

ஒரு காலத்திலை அவரையே கடவுள் மாதிரி ஊர்ச்சனங்கள் கும்பிடும். அப்பிடி ஒரு தெய்வீகக் களை முகத்திலை தெரியும். வார்த்தைகள் மெதுமையாய் ஆசீர்வாதமாய் சனங்களின்ரை காதுகளிலை வந்திறங்கும்.

கைகட்டி வாய்பொத்தி, "சொல்லுங்கோ ஐயா!" எண்டு பணிவோடை அவருக்கு முன்னாலை நிக்கேக்குள்ளை அவரின்ரை வாயிலை தெரியிற புன்சிரிப்பிலை முருகனே நேரிலை வந்து நிற்கிறமாதிரி இருக்கும் எண்டு சனங்கள் சொல்லும்.

அந்த அளவுக்குச் சிவராசசேகரசர்மா ஊரைத் தன்பார்வையாலையே கட்டி ஆண்டவர். அவருக்கு ஒரு மகன். வேதம் படிச்சவன்தான் எண்டாலும் மேல்நாட்டுப் படிப்பிலையும் அவனுக்கு மோகம் இருந்தது. நினைச்சமாதிரிப் படிக்க முடியாத நேரம் நிலவரம். சண்டையில சிதறுப்பட்டு ஓடிவந்த சனங்களிலை அவனும் ஒருத்தன்.

வெளிநாட்டுக்கு வந்த புதிசிலை அவனாலை கொஞ்சம் இறுக்கமாய் இருக்க முடிஞ்சதென்னவோ உண்மைதான். ஆனால் எத்தினை காலத்துக்கு?

இந்த அகதி - அவதி வாழ்க்கையிலை தாக்குப் பிடிக்க முடியாமல் ஊருக்கும் திரும்பிப்போக முடியாமல் ஒரு சீனாக்காரனின் சமையலறைக்குள் அவன்கள் வீசுகிற அழுக்குச் சட்டிகளோடை போராடுகிற வேலைக்குத்தான் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

இறைவனுக்கு இறைச்சி படைச்ச கண்ணப்ப நாயனாரையும் பிள்ளைக் கறி சமைச்ச சிறுத்தொண்டரையும் மனசிலை நினைச்சுக்கொண்டு "சிவனே!" எண்டு கழுவும் பணியில் கலந்துபோனான் அவன். சட்டிகளில் அழுக்குப் போகப் போக -

இவன்ரை மனசிலை அழுக்கு ஒட்டிக்கொண்டது.

அழுக்கோடு கூடவே காசும் சேர்ந்துகொள்ள பிறகென்ன.. வாழ்க்கையும் மாறும்தானை?

முதல்மாசம் சட்டிகளைக் கழுவிப்போட்டு களைப்புக்குப் பச்சைத்தண்ணி மாத்திரம் குடிச்சான். பிறகு கோலா... கோலா வைனாக மாறியது.. பிறகு பியரிலை!
மரக்கறிக்குப் பதிலாய் இடைக்கிடை கொஞ்சம் மாமிசமும்.

பக்கத்துக் கட்டிடத்திலை அப்ப வந்து குடியேறின வித்தியாவின்ரை அறிமுகமும் அவனுக்குக் கிடைச்சுது.
கொஞ்ச நாளிலையே ரெண்டு பேரையும்பற்றி பஸ்சுக்குள்ளை, டிராமுக்குள்ளை பெடியள் கதைச்சுக்கொள்ளத் தொடங்கிட்டாங்கள்.

"மச்சான் தெரியுமாடா சங்கதி?"

"சொல்லு!"

"அவன் வாசுவெல்லே வித்தியாவை மடக்கிப் போட்டான்.!"

"வாசு..? ஆர்.. அந்த ஐயர்ப்பெடியனே?"

"அதுக்கென்னடா.. இவளைப் பார்த்தாலும் பிராமணத்தி மாதிரித்தானை?"

இங்கை ஆரும் எதுகும்செய்யலாம்தானை!

ஆர் ஆரைக் கேட்கிறது? ஆர் ஆரை அதிகாரம் செய்கிறது?

தெரிஞ்ச சனங்களும் சந்தோசமாய் நிண்டு கலியாணம் முடிஞ்சுது.

காதல் கல்யாணம் எண்டுதான் எல்லாரும் நினைச்சிருந்தினம். அப்பிடித்தான் கதைச்சுக்கொண்டினம். ஆனால் காதல் எண்டால் என்ன எண்டு சரியான அர்த்தம் ஆருக்குத்தான் இங்கை விளங்குது?

கொஞ்சக் காலம்தான்-

ஐயர்ப்பெடியனுக்கு என்ன நடந்துதோ தெரியேல்லை. அவன்ரை போக்கு முற்றுமுழுதாய் மாறிப்போச்சுது!

கலியாணம் முடிக்கிறபோதே பெட்டை ஒரு இசைக்குழுவிலை பாடிக்கொண்டிருந்தவள்.

"இனிமேல் நீ பாடக்கூடாது!" எண்டு முதல் கட்டளை பிறந்தது. பெட்டை மறுக்க முதல் அடி விழுந்துது. பிறகு ஏதேனும் காரணம் சொல்லி இன்னும் இன்னும் அடிகள்.

இது சுதந்திர நாடு. பெத்த பிள்ளையை அடிச்சாலே, பிள்ளை தாய்தகப்பனை விட்டுப் பிரிஞ்சுபோகலாம் எண்டு சட்டம் போட்டு வைச்சிருக்கிற நாடு. ஆனால் அவனைவிட்டுப் பிரிஞ்சுபோக இவள் விரும்பேல்லை. என்னதான் நாடுவிட்டு நாடுவந்து நாகரீகமாய் வாழ்ந்தாலும் பண்பாடு கலாச்சாரம் எண்டு பழக்கப்பட்டுப் போன பிறகு இதை மாத்த முடியேல்லை!
ஒருத்தனுக்கு ஒருத்தி! ஒருத்திக்கு ஒருத்தன்!

அப்பிடித்தான் வாழவேணும். அதுதான் நீதி.

அவன்ரை அடியளைத் தாங்கிக் கொண்டாள். ஆனால் பாடுறதை நிற்பாட்டேல்லை. அதையும் நிப்பாட்டினால் சனங்கள் காரணம் கேட்கும். வெளியிலை சந்திக்கிற சனங்கள் வீட்டுக்குள்ளை வந்து விசாரணை செய்ய வெளிக்கிட்டால் இரகசியங்கள் தெரிஞ்சுபோகும். இரகசியங்கள் வெளிப் பட்டிட்டால் புருசன்ரை மானத்தோடை இவளின்ரை மானமும்தான் போகும்.

மனசுக்குள்ளை அழுதுகொண்டு வெளியிலை சிரிச்சுக்கொண்டு பாட்டுக்களாலை மனப்பாரங்களை மறைச்சுக்கொண்டு இவள்.

"எல்லாரிட்டையும் எல்லாத்தையும் சொல்லேலாது. உங்களிட்டை இதுகளைச் சொல்லுறதாலை எனக்கு நிம்மதி கிடைக்கும் எண்டு என்ரை மனசுக்குப்பட்டதாலை சொன்னன். ஒருவேளை இங்கை எனக்கு ஏதேனும் ஒண்டு ஆகீற்றால் என்னைப்பற்றிக் கொஞ்சமாவது தெரிஞ்ச ஒருத்தராலையாவது என்ரைபேர் காப்பாத்தப்படும்தானை! சின்ன வயசிலிருந்தே என்னை உங்களுக்குத் தெரியும். உங்களையும் எனக்குத் தெரியும். கடவுள் தெய்வங்களிட்டை கவலையளைக் கொட்டிறதைவிட கருணையோடை எங்களைப் பார்க்கிறவங்களிட்டை கவலையளைச் சொன்னால் கொஞ்சமாவது உடனடி நிவாரணம் கிடைக்கும் எண்டதாலை இதுகளைச் சொன்னன்!"

"நான் வந்து உங்கடை மனிசனோடை கதைக்கவா?"

"வேணாம்.. அது வீண்வேலை!"

"ஏன்..?"

"வெறிகாரனோடை நீங்கள் என்னத்தைக் கதைக்கிறது?"

"சொல்லிப் பார்க்கிறனே!"அவள் பேசாமலிருந்தாள்.4.

குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் என்ன நடக்கும்?

அப்பிடித்தான் ஆகிப்போச்சுது!

ஒருத்தரின்ரை தொடுசலும் வேணாம் எண்டு இருந்தது மாதிரி இருக்கத் தெரியாமல் வித்யாவுக்காக அவளின்ரை புருசனோடை கதைக்கப் போனது பிழையாத்தான் போச்சுது.

முதல்லையே வித்யா தடுத்தும் கேளாமல் போய்.....
அண்டைக்கு அவளின்ரை வீட்டை போனபோது அவன் நிறையத் தண்ணியிலைதான் இருந்தான். வித்தியாவுக்குப் பின்னாலை வீட்டுக்குள்ளை நுழைஞ்ச உடனை வெறிச்சுப் பார்த்தான்.

"ஆரு நீ?" எண்டான் மரியாதை இல்லாமல்.

"நான் குமாரு.. முத்துக்குமாரு!"

"இங்கை ஏன் வந்தனீ?"

"சும்மாதான்!"

"சும்மா எண்டால்..?"

"உம்மோடை கொஞ்சம் கதைக்கவேணும்!"

"என்னோடையோ..? என்னை உமக்கு முந்திப் பிந்தித் தெரியுமோ?"

"தெரியாது.. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறன்!"

"என்னைப்பற்றியோ..?"

"இல்லை.. உம்முடைய ஐயாவைப்பற்றி!"

"சரி.. இரும்..! தண்ணிப் பழக்கம் இருக்குதோ?"

"இருக்குது..! உம்மைப்போலத்தான்.. நல்லாக் குடிப்பன்!"

அவன் சிரிச்சான். சோபாவிலை நல்லா நீட்டி நிமிர்ந்து சாய்ஞ்சு கிடந்தபடி சத்தம்போட்டுச் சிரிச்சான்.

"இந்த உலகத்திலை எல்லாரும் ஏமாத்துக்காரங்கள்.. ஆனால் நீர் கொஞ்சம் வித்தியாசம். உண்மையைச் சொல்லிப்போட்டீர்.. ஆனால் இது கூடாது.. கூடவே கூடாது.. உண்மையைச் சொல்ல வெளிக்கிட்டீரோ இஞ்சை ஒருத்தனும் உம்மை மதிக்கமாட்டான்..!"

"தேவையில்லை.. ஆரும் என்னைக் கணக்கெடுக்க வேணும் எண்ட அவசியம் இல்லை..!"

"ஏன்..?"

"நானே ஒருத்தரையும் மதிக்கிறேல்லை..!"

அவன் திரும்பியும் சத்தம்போட்டுச் சிரிச்சான். தனக்கு முன்னாலை இருந்த விஸ்கிப்போத்திலை கொஞ்சம் முன்னாலை தள்ளிவைச்சான்.

"குடியுமன்!"

"குடிப்பன்.. ஆனால் இப்பவேணாம். பிறகு ஒருநாளைக்கு வாறன்!"

அவன்ரை சிரிப்பு எங்கைபோச்சுது எண்டே தெரியேல்ல. முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டான்.

"அப்ப இனி நீர் அடிக்கடி இங்கை வருவீர்?"

"அது உம்முடைய முடிவைப் பொறுத்தது!"

"என்ரை முடிவோ? என்ன முடிவு?"

"நான் சொல்லப்போறதை நீர் கேட்பீரோ மாட்டிரோ எண்டதைப் பொறுத்த முடிவு!"

"விளங்கிறமாதிரிக் கதையும்!"

"உம்முடைய வாழ்க்கையை நீர் ஏன் இப்பிடிப் பாழாக்கிக் கொள்ளுறீர்? உம்மை நம்பி வந்தவளோடை நீர் எவ்வளவோ சந்தோசமாய் வாழலாம்தானை?"

"ஏன் இப்பமட்டும் என்ன..? நான் நல்ல சந்தோசமாய்த்தானை இருக்கிறன்!"

"அப்பிடி நீர் நினைச்சுக்கொண்டிருக்கிறீர்.. உம்மை அறியாத ஒரு போலி மயக்கத்திலை நீர் சிக்கிக்கொண்டிருக்கிறீர்!"

"எல்லாருக்கும் உடலமைப்பு ஒரே மாதிரித்தான்.. ஆம்பிளை பொம்பிளை எண்ட வித்தியாசத்தைத் தவிர.! ஒரு முகம், ரெண்டு கண், ரெண்டு காது, ஒரு மூக்கு ஒரு வாய், ரெண்டு கை, ரெண்டு கால் எண்டெல்லாம்..! ஆனா ஒரேமாதிரி அச்சொட்டாய் இன்னொருத்தரைக் காட்ட உம்மாலை முடியுமே..? அதிலையே ஒற்றுமை இல்லை..! பேந்தென்னண்டு மனங்கள் ஒரேமாதிரி இருக்கும்? மனங்கள் வேறைவேறையாய் இருக்கிறதுமாதிரி விருப்பங்களும் வேறைவேறையாத்தான் இருக்கும்.. என்ரை வாழ்க்கையிலை எனக்குச் சரியெண்டு பட்டதை, சந்தோசம் தாறதை நான் செய்யிறன்.. அது மற்றவைக்குப் பிடிக்காட்டில் நான் என்ன செய்யேலும்?"

"உம்முடைய வாதம் சரியெண்டே வைச்சக்கொள்ளுவம்.. சரி! ஆனா உம்முடைய குடும்பம் எங்கடை ஊருக்குள்ளையே சீர் சிறப்பாய் வாழ்ந்த குடும்பம்.. உம்முடைய ஐயாவையே ஊர்ச்சனங்கள் கடவுள்மாதிரி நம்பியிருந்த காலம் ஒண்டு இருந்துது..!"

"அதுக்காக..? அதுக்காக நான் என்ன செய்யவேணும்..? பூநூல் போட்டுக்கொண்டு ஒரு கோயில்பக்கம் போய்க் குந்தியிருக்கவேணும் எண்டு சொல்கிறீரோ..?வேணாம்.. அதுதேவையில்லை..! என்ரை தொண்டை எதிர்பார்த்துக்கொண்டு இங்கை ஆரும் தவம் கிடைக்கேல்லை..! ஊருக்குள்ளை வாழ முடியாமல் ஓடிவந்தம். வெளிநாட்டுக்கு வந்த உடனை தங்களையும் வெளிநாட்டுக்காரர் எண்டு நினைச்சுக்கொள்ளுற ஆக்கள்தானை நாங்கள்...! எங்கடை சனங்கள் எண்டு மற்றவையைக் குற்றம் சொல்லிப்போட்டுத் தப்பிக்கொள்ள நான் விரும்பேல்லை..! நாங்கள் எண்டுதான் சொல்கிறன்..! நான் ஐயர்ப்பெடியன்..! ஐயர்ப்பெடியன் கொஞ்சம் கட்டுப்பாட்டை மீறுகிறான் எண்ட உடனை ஞாயம் கேக்க வெளிக்கிட்டு வாறவையள் முதலிலை தாங்கள் ஆர் எண்டு யோசிக்கவேணும்..! நீர் தமிழன் அத்தோட ஒரு இந்து..! இங்கை நீர் முழுசாய் ஒரு தமிழனாய் நடந்து கொள்ளுறீரோ எண்டால் இல்லை! ஒரு இந்துவாய் நடந்துகொள்ளுறீரோ எண்டால் இல்லை! கோயிலுக்குப் போறீரோ எண்டால் இல்லை என்பீர். ஆனால் ஆரும் சமயம் மாறுறாங்கள் எண்டு தெரிஞ்ச உடனை சண்டைக்குப் போவீர்..! இதெல்லாம் என்ன ஞாயம்..? முதலிலை ஒவ்வொருத்தரும் தன்னைத்தான் புரிஞ்சுகொள்ளவேணும்... புரிஞ்சுகொள்ள முயற்சி செய்ய வேணும்... தங்கடை பிழையளைத் திருத்திக்கொண்டு மற்றவைக்கு ஞாயம் சொல்ல வெளிக்கிடவேணும்... என்ன நான் சொல்கிறது விளங்குதா?"

அவனுக்குப் பதில் சொல்ல ஏலாமல் கொஞ்சநேரம் அவன்ரை முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க உள்ளுக்கை போன வித்தியா திரும்பிவந்தாள்.

"வித்தியா..! வீட்டுக்குள்ளை நடக்கிற எந்த விசயமும் வெளியிலை போறது நல்லதில்லையெண்டு உனக்குப் படிச்சுப் படிச்சுச் சொன்னன் .. கேட்கேல்லை.. சரி.. உதவிக்கு ஆக்களைக் கூட்டிக்கொண்டு வாறநீ ஒழுங்கானவங்களைக் கூட்டிக்கொண்டு வரப்படாதா..?"

-வார்த்தைகளால் அடிச்ச சந்தோசத்தாலை முகத்திலை ஒரு குரூரமான சிரிப்போடை அவன் திரும்பவும் விஸ்கிப் போத்தலைத் திறந்தான்.

வித்தியாவின்ரை முகத்திலை கவலை வந்து படிஞ்சிது.

"உங்களிட்டை அப்பவே சொன்னன்.. நீங்கள் இங்கை வரவேணாமெண்டு...! கேட்காமல் வந்தீங்கள்..! இப்ப...?"

-அவள் அழுகிறமாதிரி நிண்டாள்.

"இதிலை கவலைப்பட ஒண்டுமில்லை வித்தியா..! இவர் சொல்கிறதிலையும் ஞாயம் இருக்குது.. பிரச்சினையள் இல்லாமல் ஒரு குடும்பம் இருக்கேலாது.. வாற பிரச்சினையளைக் கெட்டித்தனமாயச் சமாளிச்சுக்கொண்டு வாழப்பழக வேணும். இதிலை அனுசரிச்சுப் போகவேண்டியது நீர்தான்.. முடியாட்டில் தனியாய் வாழவேண்டியதுதான். வேறை வழியில்லை!"

அவள் மறுமொழி ஒண்டும் சொல்லாமல் நிண்டாள்.

"சரி போயிற்று வாறன்!" எண்டு எழும்பி வெளிய வந்தாப்பிறகு மனம் கூடுதலாய்ச் சஞ்சலப்படத் தொடங்கிவிட்டுது.

என்னெண்டு சரியாய் விளங்கிக் கொள்ளேலாத சஞ்சலம்.

ஆரைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து பழகின மனம் இவளுக்காக ஏன் இப்படித் துடியாத்துடிக்குது எண்டுதான் விளங்கேல்லை.

இது எந்தவகைப் பாசம்? இல்லாட்டில் வெறும் மனிதாபிமானம் எண்டு சொல்லலாமா..?

எப்பவோ சின்ன வயசிலை சந்திச்சு, பிறகு கனகாலத்துக்குப் பிறகு இன்னொருத்தன்ரை மனிசியாய் அவளைக்கண்டு ஊர்க்காரி எண்டு அறிமுகப் படுத்திக்கொண்ட இந்தக் கொஞ்சநாளைக்குள்ளை மனம் அவளுக்காக அவள் நல்லாயிருக்க வேணுமெண்டதுக்காக பாடுபடத்தொடங்கியிருந்தது விசித்திரம்தான்.
"உதவிக்கு ஆக்களைக் கூட்டிக்கொண்டு வாறநீ ஒழுங்கானவங்களைக் கூட்டிக்கொண்டு வரப்படாதா?" என்ற அவனின் குத்தல் வார்த்தைகள் திடீரெண்டு ஞாபகத்துக்குவந்து மனத்தை என்னவோ செய்தது.........................
................................................................................................. ............................................................................... ...................................................................................................... .........................................................................

எனக்குத் தெரியும்...

முத்துக்குமாரு இதற்குமேல் தன்னுடைய கதையை உங்களுக்குச் சொல்லப்போவதில்லை.

சொல்லும்படி நீங்கள் வற்புறுத்துவதும் ஞாயமில்லை.

பல சந்தர்ப்பங்களில் அவன் தன்னுடைய மனத்தைத் திறந்து முழுமையாக உங்களிடம் எல்லாவற்றையும் ஒப்புவிக்க விரும்புகிறான்.. ஆனால் மறுகணமே அவனது சுபாவம் மாறிவிடுகிறது.

இவனை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லைத்தான்.

என்னாலும்கூட.

சில நேரங்களில் தர்க்கரீதியாக விவாதத்தில் வெற்றிபெறும் அளவுக்கு இவன் தன் சார்பில் நியாயங்களை வைத்திருப்பான். சில நேரங்களில் ஒரு பைத்தியக்காரனின் புலம்பலைப்போல் இவனது வாதங்கள் இருக்கும். தானும் தன்பாடுமாய் வாழ்ந்துகொண்டிருந்தவனின் வாழ்வில் வித்தியாவின் சந்திப்பு ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது என்பது உண்மையே.

நாளாக ஆக வித்தியாவின் வாழ்க்கை நரகமாகிக்கொண்டு வந்ததை இவன் அறிந்தபோது அவள்மீது இவனுக்கிருந்த பரிவு அல்லது பாசம் காதல் என்ற எல்லைக்கு வந்ததை இவன் உணர்ந்துகொண்டான். அவளது கணவனின் போக்கில் மாற்றம் வரப்போவதில்லை என்று உறுதிப்பட்டுவிட்ட நிலையில் ஒருநாள் இவன் தன்முடிவை அவளிடம் வெளிப்படுத்தினான்.

"எத்தினை காலத்துக்குத்தான் இந்த நரகத்திலை கிடந்து சீரழியப்போறை?அவனிட்டை விவாகரத்து எடுத்துக்கொண்டு வா! நாங்கள் எங்கையாவது போயிருவம்!"

அவள் சம்மதப்படுவாள் என்று எதிர்பார்த்த முத்துக்குமாருவின் நம்பிக்கையை அவள் உடைத்தெறிந்தாள்.

"என்ரை வாழ்க்கையைச் சீர்படுத்தத்தான் உங்களிட்டை நான் வழிகேட்டனே தவிர என்ரை வாழ்க்கையை மாத்த இல்லை..! காலம் எவ்வளவோ மாற்றங்களைக் கொண்டு வருகுது.. என்ரை புருசனையும் அது மாத்தும்.. தயவுசெய்து நீங்கள் இனிமேல் என்னைத்தேடி வரவேணாம்!"

அயோக்கியனாய்த் தனக்குத் தெரிந்த ஒருவனிடமிருந்து ஒருத்தியைக் காப்பாற்ற நினைத்து அவளது பார்வையில் தான் இன்னொரு அயோக்கினாகிவிட்ட சோகம் முத்துக்குமாருவைச் சுமையாய் அழுத்த அவன் தன்நிலையில் இன்னும் மாறிப்போனான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வித்தியாவும் அவள் கணவனும் இப்போது சந்தோசமாக வாழ்வதுதான்.

செய்த பாவங்களுக்காகவும் விட்ட தவறுகளுக்காகவும் பாவமன்னிப்புப் பெற்றுகோண்டு வித்தியாவின் கணவன் வேதம் போதிக்கத் தொடங்கியிருக்கிறான்.

தன் பெயரையும் அவன் மாற்றிக்கொண்டு விட்டதால் ஐயர்ப்பெடியன் இப்படி ஆகிப்போனானே என்று மதவாதிகளும் கவலைப்படத் தேவையில்லை. வித்தியாவும் இப்போது பாடுவதை நிறுத்திக்கொண்டு விட்டாள்.

கணவனின் வழியில்போய் அவனைச் சீராக்கிய கடவுளைப்பற்றி அவளும்போதிக்க ஆரம்பித்து விட்டாள்.

இப்போது நீங்கள் தெருக்களில் சந்திகளில் முத்துக்குமாருவைச் சந்திக்க நேர்ந்தால் அவன் மீது கோபப்படாதீர்கள்!

எப்படியாவது போகட்டும்.

-இந்துமகேஷ்
(பிரசுரம்: பூவரசு, ஆடி-ஆவணி 1994)
நன்றி: http://www.inthumakesh.blogspot.com
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree