வாழ்தல்

18 ஏப்ரல் 2007
ஆசிரியர்: 

  

"ஹலோ!" - ஆச்சரியப்பட்டேன்.
எதிரில் கிறிஸ்டினா. என் பிரியத்துக்குரிய கிறிஸ்டி.
 
"ஹலோ!" கைகுலுக்குவதற்காய் கையை நீட்டினேன்.
ஒரு பூவின் இதழ்களை ஒன்றாய்ச் சேர்த்து என் உள்ளங்கைக்குள் கசங்காமல் அணைத்துக் கொள்வதுபோல் மென்மையாய் என் கைக்குள் அவளது கரம். "எப்படியிருக்கிறாய் கிறிஸ்டி!"
"நலம்தான்... நீ..?!"
"நன்றி.. நலம்தான்!"
"இவர் ... என் கணவர் மர்ஷேல்!"
"திருமணமாகிவிட்டதா?"
"என்ன நினைக்கிறாய்?" -திருப்பிக்கேட்டவள் கிறிஸ்டினா.
"ஆகியிருக்குமென்று நினைக்கிறேன்!"
அவள் பக்கம் திரும்பினேன்.
சற்றுப் பொறாமையாகக்கூட இருந்தது அவன்மேல்.
நீ கொடுத்துவைத்தவன்தான் என்று கண்களால் சொன்னேன்.
புரிந்திருக்குமோ அவனுக்கு?
"அலோ..!"
சிரித்தான். கையைத் தந்தான்.குலுக்கிக்கொண்டோம்.
"என் வாழ்த்துக்கள் மர்ஷேல்!"
"நன்றி!" என்றான்.
"கிறிஸ்டி.. ஒருநாளைக்கு நீயும் வாயேன்..உன்கணவருடன் என் வீட்டிற்கு!"
"வருகிறோம்..கட்டாயம்!"
"மர்ஷேல் என்னவாம்..?"
"அவர் சொல்ல எதுவுமில்லை!"
கணவனின் பக்கம் திரும்பினாள்.
"என்ன மர்ஷேல்..நீ நினைப்பதை நான் சொல்கிறேன். நான் சொல்வதை நீ நிறைவேற்றுவாய்.. சரிதானே.. நான் சொல்வது..?"
"சரிதான்!" என்றான் மர்ஷேல்.
ஒருவித பெருமிதம் கலந்தது அவள் முகத்தில்.
"எப்படி என் வாழ்க்கைப் பொருத்தம்.. பார்..!" என்று என்னை வம்புக்கிழுக்கிற பெருமிதம்.
"கேட்க மறந்துவிட்டேன்..நீ இப்போது எங்கிருக்கிறாய்..? உன் மனைவி பிள்ளைகள் எல்லாம்..?"
"எல்லோரும் என்னுடன்தான்!"
பெருமையாய்ச் சொன்னேன்.
"எத்தனை குழந்தைகள்..?"
"ஐந்து!"
"அதிகமாய்ப் பெற்றுவிட்டாய்!.. உன்மனைவி அனுமதித்தாளா இதற்கு?"
"அது கடவுள் தந்தது!"
"முட்டாள் பையா..இது கடவுள் தருவதில்லை. நாங்கள் வலிந்துதேடுவது!"
"சரி..விடு கிறிஸ்டி..இதைப்பற்றி என்ன இப்போது..ஐந்து குழந்தைகளும் நானும் என் மனைவியும் சந்தோஷமாய் இருக்கிறோம் இப்போது!"
"மெய்யாய் சொல்லு..சந்தோஷமாக இருக்கிறாயா..?"
"இருக்கிறேன்!"
சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிறாய்..?"
"உன்னைப்பற்றி எனக்குத் தெரியாதா என்ன?"
"என்ன தெரியும் என்கிறாய்..?"
"நீ சந்தோஷமாகவே இருக்க முடியாது எப்போதுமே!"
"ஏன்..?"
"பெண்மனது உனக்குப் புரியாது..நீ ஒரு சர்வாதிகாரி..ஆண்கள்மட்டுமே ஆளத்தெரிந்தவர்கள் என்பது உன்வாதம்!"
"இல்லையா பின்னே..?!"
"பிறகு நீ எப்படி ஒரு பெண்ணுடன் சந்தோஷமாகக் குடும்பம் நடத்த முடியும்?"
"ஆனால் நான் சந்தோஷமாக இருக்கிறேனே!"
"அது மெய்தான் என்றால் நான் சந்தோஷப்படுவேன்... ஆனால் நீ புளுகன்.. மறைக்கிறாய்.. உன் மனதை.. உன் உணர்ச்சிகளை... உன் வாழ்க்கையை.. எல்லாவற்றையுமே..! இதில் உனக்கென்ன சந்தோஷம்?"
"விடு கிறிஸ்டி அவர்மீது என் இப்படிக் கோபம் கொள்கிறாய்..நாங்கள் போகலாம்..!"
-மர்ஷேல் குறுக்கிட்டான்.
கிறிஸ்டி சட்டெனத் தணிந்தாள்.
"மன்னித்துக்கொள்..சொல்லவேண்டும்போல் தோன்றிற்று..சொன்னேன்..!"
அவள் தன் கணவனுடன் நடந்தாள்.
ஏதும் பேசாமல் நான் மௌனித்து நின்றேன்.


நான் இனி வீட்டுக்குப் போயாகவேண்டும்.
என்மனைவி எனக்காகக் காத்திருப்பாள்.
என் குழந்தைகள் எனக்காக விழித்திருக்கும்.
" என்ரை விதி..இந்த மனிசனைக்கட்டி நான் என்ன சுகத்தைக் கண்டன்..? என்ரை மாமாபிள்ளை எனக்காகவே காத்துக்கிடந்தானே.. அவனைக் கட்டியிருந்தால் இப்ப நான் லண்டனிலை ஒரு டொக்டரின்ரை மனிசி எண்டு பெருமையாய் வாழ்ந்திருப்பனே!.. இந்த மனிசனுக்கு வாழ்க்கைப்பட்டு இப்படி ஒரு நரக வாழ்க்கை வாழவேணுமெண்டு என்ரை தலையெழுத்து.!"
"அம்மா.. அப்பா இன்னும் வரேல்லையா?"
பிள்ளைகள் கேட்கும்.
"அது எங்கை இப்ப வீட்டை வரப்போகுது.. எங்கையாவது எவளையாவது கண்டால் பல்லை இளிச்சுக்கொண்டு நிக்கும்!" என்று என்மனைவியின் பதில் கிடைக்கும்.

ஆனால் நான் சொல்லப்போவதில்லை.
இன்றைக்கு என் முன்னாள் ஜெர்மன் மனைவி கிறிஸ்டினா தன் புதிய கணவனுடன் என்னைத் தெருவில் சந்தித்ததை.
கிறிஸ்டினா என் மனைவி என்றா சொன்னேன்?
தப்பு.. தப்பு..
நானும் கிறிஸ்டினாவும் கொஞ்சக்காலம் ஒன்றாக இருந்தோம்.
எதிர்கால வாழ்வுக்கான ஒரு இடைக்கால வாழ்க்கை ஒத்திகை.
நானும் அவளும் கணவன் மனைவியாக வாழத் தகுதியுள்ளவர்களா என்று பரீட்சித்துப் பார்க்கும் ஒத்திகை.
இது மேலைத்தேசம்.
இங்கே யாரையும் நம்பி யாரும் இல்லை.
போய்க்கொண்டிருக்கும் பயணத்தில் இடையில் சந்திக்கும் நண்பர்களாய் எல்லா உறவுகளும் வந்து போய்க்கொண்டிருக்கும். எதற்காகவும் யாரும் காத்திருப்பதில்லை.
கிறிஸ்டினாவும் நானும் வாழ்ந்த இரண்டுவருட தாம்பத்திய வாழ்க்கை இப்படித்தான்.
என்ன குறையிருந்தது? எதுவுமில்லை.

நாங்கள் பிரிவதற்கு சிலவாரங்களுக்கு முன்பு எனக்கும் அவளுக்கும் இடையில் சின்னதாய் ஒரு பிணக்கு வந்தது.
வேடிக்கையாய்த்தான் ஆரம்பித்தோம்:
"தாம்பத்தியத்தின் உண்மையான அர்த்தம் குழந்தைகள்!"- நான்.
"நாங்களும் ஒரு நாலைந்து பெற்றுக் கொள்ளலாம்.. என்ன கிறிஸ்டி?"
-அவளது மடியில் தலைசாய்த்துக் கிடந்தபடி கேட்டேன்.
"அது அதிகம்.. ஒரு நாலைந்து வருடங்களுக்கு பிள்ளைகளே இல்லாமல் வாழ்க்கையை அனுபவிக்கலாமே!"
"குடும்பம் என்றால் குதூகலத்துக்குக் குழந்தைகள் வேண்டும் கிறிஸ்டி!"
"ஒன்றிரண்டு போதும்!"
"சரி ஒன்றிரண்டாவது பெற்றுக்கொடேன்!"
"அது இப்போது முடியாது..கொஞ்சக்காலம் போகட்டுக்கும்!"
"எப்போது.. நீ இளமையைத் தொலைத்தபிறகா?"
"நீ ஒன்றை மறந்துவிட்டாய்..நாங்கள் இன்னும் சட்டபூர்வமாகக் கணவன் மனைவி ஆகவில்லை...!"
"சட்டத்தை விடு கிறிஸ்டி.. நாங்கள் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பது கணவன் மனைவியாகத்தான்"
"யார் சொன்னது அப்படி? இன்னும் நாங்கள் நண்பர்கள்.. உனக்கு மனைவியாவதைப்பற்றி இன்னும் நான் முடிவு செய்யவில்லை!"
"ஆனால் நான் உனக்குக் கணவனாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.. எல்லாவிதத்திலும்!"
"இது வெறும் ஒத்திகைமட்டும் என்பது ஏன் உனக்குப் புரியவில்லை...?"
"ஆனால் நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் பிடித்தமானவர்களாக நடந்துகொண்டால் பிரிவு என்பதே இல்லையே!"
"நீ எப்படிவேண்டுமானாலும் சொல்.. ஆனால் நீ எனக்கேற்ற கணவனாக நடந்துகொள்கிறாய் என்று நான் உறுதிப்படும்வரை உன்னை நான் மணந்துகொள்ளமாட்டேன்!"
"அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்கிறாய்?"
"என் விருப்பப்படியும் நீ நடந்துகொள்ளவேண்டும். எதற்காகவும் என்னை நீ வற்புறுத்தக்கூடாது.. குறிப்பாக எனக்குப் பிடிக்காத விஷயங்களில் எல்லாம்!"
"அது எப்படி முடியும் கிறிஸ்டி.. எனக்குப் பிடிக்காதவைகளை நான் சொன்னால் நீ அதற்குள் அடங்கித்தானே ஆகவேண்டும்.."
"அப்படி அடிமைப்பட்டு வாழ்வது எனக்குப் பிடிக்காது!"
"இதை அடிமைப்படுத்துவது என்று நீ ஏன் நினைக்கிறாய்..அன்பு என்று நினைத்துக் கொள்ளேன்.."
"அப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக்கொண்டு வெறும் கற்பனைக்காக ஏன் வாழவேண்டும்..?"
"எனக்காக வாழ நீ விரும்பவில்லை..?"
"அது எப்படி முடியும்.. எனக்காகவும்தான் நான் வாழவேண்டும்!"
-வார்த்தைகளாய் வளர்ந்த விரிசல் பிரிவில் கொண்டுபோய் எங்களைவிட்டுவிட்டது!
ஒப்பாரிகள் ஓலங்கள் பிக்கல்பிடுங்கல் எதுவுமே இல்லாத விலகல்.
சிரித்தபடியே அவளும் விடைபெற்றாள்.

ஒத்துவராது என்றதும் இரண்டு வருடத்தில் பிரிந்துவிட்டோம்.
தப்பென்ன?
மாமா மகனை மனதிலும் என்னையும் என்வாரிசுகளையும் தன் வாழ்விலும் சுமந்துகொண்டிருக்கிற -தொல்லையாய் நினைக்கிற- என் மனைவி அனித்தாவைவிட கிறிஸ்டினா மேல். அவள் எடுத்த முடிவு மேல்.
இப்போது மர்ஷேலை அவள் மணந்துகொண்டிருக்கிறாள்.
அவனோடு முரண்பாடு வரும்போது அவர்கள் சிரித்தபடியே விலகிப்போவார்கள்.
என் மனைவியைப்போல் விருப்பமில்லாத ஒரு வாழ்க்கைக்காக மனதால் அழுது வெளியே மற்றவர்க்காய்ச் சிரித்து வாழும் ஒரு போலி வாழ்க்கையைவிட இதுமேல்.
இது கலாச்சார முரண்பாடு அல்ல - மேம்பாடு!
வாழ்ந்து போங்கள்!

(பிரசுரம்: ஓவியா 1997)
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree