நாளைக்குப் பொங்கல்

13 ஜனவரி 2007
ஆசிரியர்: 

  

த்தனை ஆண்டுகளாயிற்று...
இதயத்திலிருந்து மெள்ள மெள்ள நகர்ந்துபோகின்ற தாயகத்து நினைவுகளைப்போல்...
வேற்று மொழிக்குப் பழக்கப்பட்டுவிட்ட நாவும் இப்போது நல்ல தமிழைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துகொண்டிருந்தது.
எங்கடை உயிரைக் காப்பாற்ற இங்கை ஓடி வந்தம்..
வெறுமனே இந்த உடம்போடு உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது மட்டுமே வாழ்க்கை என்று மாறிவிட்ட நிலைமை..
பொழுதுகள் விடிவதும் அஸ்தமிப்பதுமாக... காலங்கள்தான் எத்தனை வேகமாய்க் கரைந்துகொண்டிருக்கிறது.. அரவிந்தனுக்கு இன்றைக்குத் திடீர் ஞானோதயம்..
எத்தனை ஆண்டுகளாயிற்று என்று நினைக்கையில் கூடவே நெஞ்சின் ஆழத்திலிருந்து வெளிப்படுகின்ற பெருமூச்சு..
ம்..எல்லாம் வெறும் கனவுகளாய்..
ஏன் இந்த வாழ்க்கை..? என்று இப்போது ஒரு கணக்கெடுப்பில் மூழ்கத் தொடங்கியிருந்தான் அரவிந்தன்..
வாழ்க்கை என்பது வாழ்வதற்காக.. இந்த வாழ்தல் என்பது எதற்காக..?
இலட்சியமில்லாத வாழ்க்கைதான் இப்போது!

ஊரைவிட்டு ஓடிவந்த அந்தப் பொழுதில் மனம் நிறையத் தேவைகள் இருந்தன.. வாழ்க்கையோடு போராடிப் பார்க்கவேண்டுமென்ற வைராக்கியம் இருந்தது..
உரிமையோடு உற்சாகமாய் ஒரு சுதந்திர மனிதனாய் இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையிலேனும் உலவித்திரிந்திட வேண்டும் என்ற ஆவல் இருந்தது..

இவனது பயணச் செலவுக்கு அத்திவாரம் இடுவதற்காக அம்மாவின் தாலிக்கொடி விலைப்பட்டுப் போனது..
அப்பா வியர்வையைச்சிந்திக் கட்டி எழுப்பிய கல்வீடும் அம்மாவின் சீதனமாய்க் கிடந்த ஆறுபரப்புக் காணியும் கைமாறி காசாக வந்தபிறகுதான் இவனால் ஊரைப்பிரிய முடிந்தது...
உறவையும் பிரிந்தான்..
இவனுடைய உழைப்பில் இவனுக்குப் பின்னால் பிறந்த இரண்டு பெட்டைகளும் சீதனத்தோடு போய் எங்காவது சிறப்பாக
வாழும் என்று அம்மா தன் கவலையைச் சொல்லி அவனை அனுப்பியிருந்தாள்..
வந்தாயிற்று...

மற்றவர்களைப்போல் அவன் இந்தநாட்டில் அதிகம் சீரழியவில்லை..
வந்ததும் சொந்தமொழியைவிட்டு இந்த மொழிக்குத் தாவினான்..
ஒருபொழுதும் அறைக்குள் முடங்காமல் ஓடி ஓடி வேலை என்று ஏதோ செய்தான்..
மாதாந்தம் ஊருக்கு இவனது உழைப்பும் போய்ச்சேர்ந்தது.
ஆனால்-
அம்மாவின் கற்பனைகளை இவனுடைய உழைப்பால் நிறைவேற்ற முடியவில்லை..
விலைப்பட்டுப் போன தாலியை அம்மா மீட்டுக்கொண்டபோது அதை அவள் தன் கழுத்தில் அணியமுடியாதபடி அப்பா வெடிகுண்டுக்குள் சிக்கி மறைந்துபோனார்.

படுத்த படுக்கையானாள் அம்மா என்று இவனுக்குத் தகவல் வந்தது.
அடுத்த சிலமாதங்களில் மூத்த தங்கை எங்கோ ஓடிப்போனதாய்த் தெரிந்துகொண்டான்.
இளையதங்கைமட்டும் அழுதழுது கடிதம் வரைந்துகொண்டிருந்தாள்.
ஊருக்குப்போய்விடலாம் என்று இவன் முடிவெடுத்தபோது நண்பர்கள் இவனை எச்சரித்தார்கள்..
"சாக விருப்பமெண்டால் போ!"
-வாழ்க்கை கசந்து போயிற்று.
என்றாலும் பழக்கப்பட்டுப்போன நாளாந்தக் கடமைகள்..
வேலை வேலை வேலை..
முன்பெல்லாம் உழைப்பதற்காக வேலைக்குப் போகவேண்டியிருந்தது..
இப்போதோ சும்மா இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்பதற்காக வேலைக்குப் போகிறான்..
எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லை என்கின்ற மாதிரி வேதனை

அழைப்புமணி ரிங்..ரிங்.. என்றது.
அரவிந்தன் எழுந்துபோய்க் கதவைத்திறந்தான்.
"அங்கிள்.. நான் உள்ளே வரலாமா..?" என்று மழலையாய்க் கேட்டபடி ஒரு சிறுமி.
நாலு அல்லது ஐந்து வயதிருக்கும்..
"ஓ.. வரலாமே..!"என்று சிரித்தான் அரவிந்தன்.
"தாங்க்யூ..!" என்று உள்ளே வந்தாள் அவள்.
"இந்த றூமிலை நீங்கள் தனியாவா இருக்கிறீங்கள்?.." என்று அடுத்த கேள்வி.
"ம்!" என்றான் மெதுவாய்.
"தனிய இருக்க உங்களுக்குப் போரடிக்காதா?"
" இல்லையே!"
அவள் ஆச்சரியத்துடன் தன் கண்களை அகலத்திறந்து அந்த அறையை நோட்டமிட்டாள்
"ஆய் .. ரிவி ...டெக்.. எவ்வளவு பெரிய ரேடியோ!" என்று ஒன்றொன்றாய் பார்வையிட்டுக் குதூகலித்தாள்.
"இதெல்லாம் உங்கடை வீட்டிலை இல்லையே?"
"இல்லை!" என்றாள் அவள்
"நாங்க இங்கை வந்து கொஞ்சக்காலம்தானை!"
"ஓ..!"என்றான் அரவிந்தன்.

இரண்டொருதடவை இந்தச் சிறுமியைக் கடைத்தெருவில் அவளது அப்பா அம்மாவுடன் கண்டிருக்கிறான்.
மெல்லிதாய் ஒரு சிரிப்பு.. அவ்வளவுதான்.
யாருடனும் இவன் அதிகம் கதைவைத்துக்கொண்டதில்லை. ஏற்கனவே ஒருசிலருடன் நம்பிப்பழகிவிட்டு சூடுகண்டதால் யாரோடும் அதிகம் பழக விரும்புவதில்லை.
ஏனோ இந்தச் சிறுமிமீது மட்டும் ஒரு இனம்புரியாத பாசம் வந்து ஒட்டிக்கொண்டிருப்பதாய் இவன் உணர்ந்தான்.
இப்போது அவர்கள் இவனது வீட்டுக்கு முன்புற வீட்டில் வந்து குடியேறியிருந்தார்கள்.

"நீங்கள் இங்கை எப்ப வந்தனீங்கள் அங்கிள்..?" என்று விசாரணையைத் தொடர்ந்தாள் அவள்.
இதுவரையில் விட்டுப்போன என் நினைவுகளைத் தொடரவைக்கிறாளா இவள்? என்று நினைக்கையில் மறுபடியும் புன்னகைத்தான் அரவிந்தன்.
"எட்டு வருசமாச்சு..!"
"எட்டு வருசமெண்டால்..?"
இவளுக்குப்ப புரியுமா..?
"தொண்ணூற்றாறு மாதங்கள்..!"
"ஓ..!" என்று இமைகளை அகலவிரித்தாள் அவள் -புரிந்துகொண்டவள்போல்.
"இவ்வளவுநாளும் நீங்கள் தனியாவா இருக்கிறீங்கள்?"
"தனியதான்!"
"உங்கடை ஊர் எது..?"
"யாழ்ப்பாணம்."
"நீங்க ஏன் யாழ்ப்பாணம் போகேல்லை..?"
இவளுக்கு விளக்கமாய் எப்படி பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.
சொன்னாலும் இவள் புரிந்துகொள்வாளா?
"போகமுடியேல்லை!" என்றான் அரவிந்தன்.
"எனக்கெண்டால் இங்கை ஆரையும் பிடிக்கேல்லை. யாழ்ப்பாணம் போகவேணும்போல இருக்கு!"
"அங்கை இப்ப சண்டை!"
"அதுக்கென்ன..?" என்றாள் அவள்.
"சண்டை எல்லா இடமும்தானை" என்று அவள் தனியாய் சொல்லிவிட்டு இவனைப் பார்த்து முறுவல் பூத்தாள்.

இந்தச் சின்னஞ்சிறு மழலையிடம் எப்படி இத்தனை பெரிய அறிவுக்கூர்மை இருக்கிறது என்று ஆராய்பவனைப்போல் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான் அரவிந்தன்.
"என்ன அங்கிள்..?"
"ஒன்றுமில்லை !"என்று அவன் சிரித்தான்.
"ஐயோ..நான் சொல்ல வந்ததை மறந்திட்டனே!" என்றாள் அவள்.
"அங்கிள் நாளைக்குப் பொங்கல் எல்லே.. நீங்கள் எங்கட வீட்டை வாங்கோ என்ன..?"
"பார்ப்பம்!" என்றான் அரவிந்தன்.
"பார்க்கவேணாம்..கட்டாயம் வாங்கோ என்ன..?"
-அவள் கட்டளையாய்ச் சொல்லிவிட்டு,
"நான் போகவேணும் அம்மா தேடுவா..!" என்று புறப்பட்டாள்.

அரவிந்தன் கதவுவரை அவளை அழைத்து வந்தான்.
அவள் கதவுக்கு வெளியே நின்று சிரித்தபடி சொன்னாள்-
"அங்கிள் எனக்கு ஏதோ வருத்தமாம்.. இன்னும் ரெண்டு வருசத்துக்குத்தான் நான்உயிரோடை இருப்பனாம்..ராத்திரி..மம்மியும் டாடியும் எனக்குத் தெரியாமல் கதைக்கினம்.. ரெண்டு வருசம் எண்டால் ரெண்டு பொங்கல் வரும்..என்னஅங்கிள்..?"
-எவ்வித சலனமுமில்லாமல் அவள்சொல்லிக்கொண்டிருக்க..
திடுக்கிட்டுத் திகைத்த அரவிந்தன் எட்டி அவள் கையைப்பற்றி இழுத்து தன்னோடு வாரி அணைத்துக் கொண்டான்..
ஒரு பிஞ்சு நெஞ்சம் இத்தனை பெரிய அதிர்ச்சியைச் சுமந்துகொண்டும்
எவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்க்கையை எதிர்நோக்குகிறது.
ஆனால் இத்தனை வயது வந்தும் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாமல் நான்..
"நாளைக்குப் பொங்கல்.. அடுத்தவருசம் நான் உயிரோடை இருந்தால்
யாழ்ப்பாணம் போவம்... அங்கை பொங்குவம்.. என்ன அங்கிள்..?"
அரவிந்தனின் கண்களில் நீர் பனித்தது..
"கட்டாயம்... கட்டாயம்!" என்றான்.
 
 (சுமைகள் (நெதர்லாந்த்) தை 1991 இதழில் வெளியானது.)
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree