ஈர்ப்பு

15 செப்டம்பர் 2004
ஆசிரியர்:  'முல்லை' பொன் புத்திசிகாமணி

  

வாகனநெரிசல். பத்து கிலோமீற்றர் இன்னும் போகவேண்டும் பெருந்தெருவை அடைவதற்கு. ஆனிமாதம் வெய்யில் கொஞ்சம் அகோரம். காலையில் வெளிக்கிட்ட அலைச்சலில் கார் ஓடவே அலுப்பாகவிருந்தது. வியர்த்துக்கொட்டியது.

'இவங்கள் எங்கதான் போறாங்களோ? பக்கங்கள் மாறி மாறி சிக்னல்போட்டு காரை ஓட்டுவதில் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் தாமதித்தாலும் விபத்துநடப்பதற்குச் சாத்தியமாகும்.'

''அங்க பார்  அந்த மூதேவியை. நல்லகாலம்.."

அவள் எதுவுமே சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

''என்ன மதி, நீண்டநேரமாக நானே பேசிக்கொண்டு வாறன். உன்னுடைய சத்தத்தைக் காணவில்லை..."

'உம்'மென்றுமட்டும் சின்னதாக ஒரு முணகல். அவளும் களைத்திருப்பாள்தானே. அவன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

''உதைபந்தாட்டப்போட்டிபோலை... அதுதான் இவ்வளவு 'ரவிக்". பார்த்தியே... நான் சொன்னது சரிதான். அங்க பார். ஸ்ருட்காட் ரீமின்ரை கொடி கட்டிக்கொண்டு போறாங்கள். இண்டைக்குப் போய்ச் சேர்ந்ததுபோலத்தான்.."

அவன் அலுத்துக் கதைத்தது அவளுக்குத் தெரியாமலில்லை. பத்துக் கிலோமீற்றர் வர எப்படியும் ஒரு மணித்தியாலம் பிடித்திருக்கும். ஒரு 'ஏசி'க் கார் வாங்கத்தான் வேணும். அவன் நெற்றியில் முத்து முத்தாய் வியர்வைத்துளிகள். நெற்றியில் விழுந்திருந்த நான்கைந்து முடிகள் வியர்வையில் நனைந்து ஒட்டிக்கொண்டன.

''என்ன மதி, பார்த்துக்கொண்டிருக்கிறாய். கொஞ்சம் துடைச்சுவிடன்."

அவள் தனது கைப்பைக்குள் இருந்த 'ரெம்போ' ஒன்றை எடுத்து அவனது வியர்வையைத் துடைத்துவிட்டாள். அவள் கைபட்டதுமே பாதிக் களைப்புத் தீர்ந்ததுபோல் இருந்தது. அவள் துடைத்தவிட்டுக் கையை எடுத்தபோது, படாரென அவளது கையை இழுத்து முத்தமிட்டான். அவள் வெடுக்கென்று பறித்துக்கொண்டாள். அந்த அதிர்வுகளில் கையில் நிறைந்திருந்த வளையல்கள் இருபத்திரண்டு கரட் என்பதை ஓசையிட்டு நிரூபித்துக்காட்டின.

கையில் பருப்புக் கறி வாசம்.

''வடிவாய்க் கழுவேல்லைப்போல..."

மாதவன் சொன்னபோது அவள் தனது கையை முகர்ந்து பார்த்தாள்.

''இவற்றை கதை..."

''இண்டைக்குக் கல்யாணவீட்டுச் சாப்பாடு அந்தமாதிரி. என்ன மதி..."

''எனக்கெண்டால் பெரிசாப் பிடிக்கேல்லை".

அவள் உடனே பதில் தந்தாள்.

''எனக்கெண்டால் நல்லாப் பிடிச்சுது. ஒரு வெட்டு வெட்டினேன்".

''நீங்கள் வெட்டியிருப்பியள்தானே?"

மாதவன் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

''என்ன... என்ர ராசாத்தியின்ர மூஞ்சை அவ்வளவு நல்லாய்க் காணேல்லை. என்ன பிரச்சினை..."
''கதையை விட்டிட்டு றோட்டைப் பார்த்து ஓட்டுங்கோ."

அந்தப் பெருந்தெருவில் (ஓட்டோபான்) ஏறிய பின், ''அப்பாடா, ஒருமாதிரி வந்துசேர்ந்திட்டம். இங்கை அவ்வளவு 'ரவிக்" இல்லைப்போல. நல்லகாலம். இண்டைக்கு 'எல்காவே' ஒன்றும் ஓடாது. அந்த நாசமறுவான்களாலதான் உந்த 'உன்பால்'களெல்லாம் வாறது. ஓம்! நானும் கனநேரமாய்ப் பார்க்கிறன். நீ எதுவும் கதைக்கிறாய் இல்லை. என்னப்பா முகம் அவ்வளவு சரியாக இல்லை. களைப்பாக இருக்குமெண்டு நினைக்கிறன்".

''இனிமேல் இவ்வளவுதூரத்தில கலியாணவீடென்றால் நான் வரமாட்டன். நீங்கள்மட்டும் தனியைப் போயிற்று வாருங்கோ".

''எங்கை, என்னைப் பார்த்து சொல்லு மதி. நீயாவது என்னைத் தனிய விடுறதாவது. அவன்மாத்திரம் இவ்வளவுதூரம் எங்களிட்டை வரேல்லையே. எங்களின்ர கல்யாணவீட்டில் வந்துநின்று எவ்வளவு கஸ்ரப்பட்டவன் தெரியுமே. என்னைவிட நீதானே குமார் அண்ணனின்ர கலியாணத்துக்கு எப்படியும் போகவேணும் என்று ஒரு மாதத்துக்கு முதலேயே புதுச்சாறி, புது அட்டியல் என்று ஆயுத்தப்படுத்தினனீ".

மாதவன் புன்முறுவலுடன் மதியைப் பார்த்தான்.

''நான் இப்ப இல்லையென்றே சொன்னனான். வந்தால் வந்த அலுவலைப் பார்க்கிறதுக்கு அவளோடை அறுத்துக்கொண்டு நிண்டியள், போனநேரம் தொடக்கம் வருகின்றவரை..."

'வெடுக்'கென்று சொல்லிவிட்டு தனது பக்கமாகப் பாதையைப் பார்த்தாள்.

''அடடே, இப்பதானே விளங்குது ஏனிந்த மூஞ்சை சரியில்லையென்று. உதுவே சங்கதி? பார்த்தியே! பார்த்தியே! உனக்கு அந்தச் சந்தேகக் குணம் வந்திற்றுது. நாங்கள் கலியாணம்கட்டி ஒரு வருடமாகுது. இன்னும் என்னைப் புரிஞ்சுகொள்ளேல்லை".

அவன் பற்களைக் காட்டி, கடைக்கண்ணால் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

''நீங்கள் ஆரோடையென்றாலும் கதையுங்கோ. உங்களோடையும் ஒருத்தி வந்தாளென்பதை மறந்திருக்கக்கூடாது".

''அவளை உனக்கு அறிமுகப்படுத்திவைச்சுத்தானே இருக்கச் சொன்னேன். முதலில் நானே அவளிட்ட வலியப்போய்க் கதைச்சனான்? அவளாய்த்தானே என்னிடம் வந்தாள். நீயும் நிண்டனிதானே மதி."

அந்தநேரத்தில் அவளை ஒருமுறை மனக்கண்ணில் பார்த்துக்கொண்டான். 'சீ ஸ்ற் கிரேட்'. அவன் உதடுகள் எல்லையைமீறி சத்தத்தை வெளிக்கொணர்ந்தன.

''என்ன சொன்னனீங்கள். பார்த்தியளே! அவளை உங்களால மறக்கமுடியவில்லை."

''ஒருநாள் சந்திப்பு. ஏய் அசடு! உன்னுடைய மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லு. அவள் எவ்வளவு கெட்டிக்காரி. அவள் எவ்வளவு அறிவுள்ளவள். கதைச்ச கொஞ்சநேரத்தில் அவளின் கேள்விகளுக்கு உன்னால் சரியான பதில்சொல்ல முடிந்ததா? என்னாலையும் முடியவில்லை. சிலவேளைகளில் பொறாமையாக இருந்தது. அவளுக்கு எத்தனை நாட்டுப் பாசை தெரியுமென்று தெரியுமே. எவ்வளவு சம்பளம் எடுக்கிறாள் தெரியுமே!"

 

அவள் அவனைப் பார்த்தாள்.

''அவவைப் பார்த்தால் அப்படிச் சம்பளம் எடுக்கிற ஆள்மாதிரிச் தெரியேல்லையே!"

முகத்தை ஒருமாதிரி நெளித்துக்கொண்டாள் மதி.

அவள் கூந்தல் கலைந்திருந்தது. மேல்கூட்டை சற்றுத் திறந்திருந்ததால் அவள் வைத்திருந்த கடதாசிக் கனகாம்பரப் பூக்கற்றை அசைந்தாடி அவள் மார்புவரை விழுந்திருந்தது. நெற்றியில் விழுந்த தலைமயிரை கைவிரல்களினால் தலையில் எடுத்து அடிக்கடி சொருகிக்கொண்டாள். இரண்டு கைவிரல்களிலும் எட்டு மோதிரங்கள். இரண்டு பெருவிரல்களில்மாத்திரம் தவிர்த்திருந்தாள். ஏனென்று அவன் ஒருநாள் கேட்டான். 'இதுதான் இப்போதைய பாஷன்.'

கார் நூற்றி இருபது கிலோமீற்றர் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. எப்படியும் எட்டு மணிக்கு முதல் டோட்முண்டுக்குப் போய்விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

''என்ன சொன்னனீ?"

''பின்ன என்ன? இவ்வளவு சம்பளம் எடுக்கிறவ கழுத்தில சின்னதாக கறுத்தக் கயிறு. கையில ஒரு சோடி கண்ணாடி வளையல். ஒரு நூல் புடவை..."

'அட பாவமே! அவள் உடலும் மனமும் அறிவினால் அலங்கரிக்கப்பட்டிருந்ததே. அந்த அழகு உனக்கெங்கே தெரியப்போகின்றது' என்று கேட்கவேண்டும்போல் இருந்தது. அவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

அவளைச் சந்தித்து நீண்டநேரத்துக்குப் பின் அவனே அவளிடம் கேட்டிருந்தான்.

''உங்களுக்கு நகைகளில் நாட்டமில்லைப்போலும்."

அப்போது மதியும் பக்கத்தில் இருந்தாள்.

''ஆசையில்லாமலா இதைப் போட்டிருக்கிறேன்..."

சின்னதாக ஒரு சிரிப்பு.

''தங்க நகைகள் அழகானவை. அழகான டிசைன்களில் செய்யப்பட்டவை. அதை அணிந்திருந்தால் என்னைவிட்டு அதைத்தான் எல்லோரும் பார்ப்பார்கள். என் அழகு தெரியாது. என்னைவிட அழகற்றவையைப் போட்டிருந்தால் என் அழகு உயர்ந்திருக்கும். அதனால்தான் இந்தக் கயிறு."

அவள் மீண்டும் ஒரு சிரிப்புச் சிரித்தாள். அவள் வேண்டுமென்றே அவ்வாறு சொல்கின்றாள் என்பதை மாதவன் புரிந்துகொண்டு பதிலுக்குச் சிரித்ததுடன், ''இதுகூட உங்களுக்கு அழகாகத்தான் இருக்கிறது" என்று சொல்லிவிட்டு மதியைக் கடைக்கண்ணால் பார்த்தான். தன்னைத்தான் வார்த்தைகளால் குத்திக்குதறுகிறான் என்பதை உணர்ந்தவளாக தன் புடவையால் கழுத்துத் தெரியாமல் இருக்கப் போர்த்திக்கொண்டாள் மதி. 'இவ ஒரு எடுப்புக்காரிபோல. நடிப்பு. ஏதோ ஆசையில்லாமலாக்கும்' -மனதுக்குள் திட்டிக்கொண்டாள் மதி.

''மிஸ்ரர் மாதவன்! உங்கள் மனைவிக்கும் கோபம் வரப்போகுது."

''சீ... அப்படியில்லை. இவர் வேண்டாமென்றாலும் விடமாட்டார்" என்றாள் மதி, அந்த இடத்தைவிட்டு கழன்றால் போதும் என்ற நினைப்புடன்.
                                                       ###

குமார். மாதவனின் நீண்டநாள் நண்பன். இருவரும் விமானத்திலேயே அறிமுகமானவர்கள். ஜேர்மனிக்கு வந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு வருட நட்பு. மாதவனின் சிந்தனை எதனையும் ஆராய்ந்து பார்த்துப் புரிந்துகொள்ளுகின்ற பக்குவம். இலக்கிய ஆர்வம். நிறையப் பத்திரிகைகள் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம். எழுத்தாற்றல் நேர்மை எல்லாமே அவனை நல்ல நண்பனாக்கியது. ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அவனிடமே கேட்டுத் தீர்த்துக்கொள்ளுவான். சுறுசுறுப்பு. எந்தநேரமும் 'கல கல"வென்று ஆணுக்கேற்ற அழகு. சேர்ந்திருப்போரைச் சிரிக்கவைக்க அவனிடத்தில் தாராளமாகவே குறும்புப்பேச்சுகள் வந்துசேரும்.

''மச்சான், கலியாணத்துக்கு இரண்டுநாள் லீவெடுத்திற்று வந்திடு. அது இது என்று சாட்டுச் சொல்லி நின்றுவிடாதே. மதி, தெரியும்தானே, அண்ணனை? ஸ்ருட்காட் தூரம்தான். அதுக்கு நான் என்ன செய்யிறது? என் மனைவிக்கும் பெரிசாய்ச் சொல்லிவைச்சிருக்கிறன்."

அவன் இவ்வளவு சொல்லியிருக்கத் தேவையில்லை. மாதவனுக்கும் குமார் நல்ல நண்பனே. இரண்டுநாள் 'லீவு' எடுத்துவந்திருந்து கஸ்ரப்பட்டான். மதியும் சேர்ந்துதான்.

அவன் சாப்பாடு, அலங்காரம் என்று எல்லாமே 'ஓடர்'. கல்யாண மண்டபத்தில் மதியும், மாதவனும் மாப்பிள்ளை பெண்ணுக்குப் பக்கத்தில் நின்று தாலிகட்டும்வரை ஒத்தாசையாக இருந்தார்கள். சடங்குகள் சம்பிரதாயங்கள் தொடர்ந்தன.

''மதி, வா. கொஞ்சநேரம் இருப்பம். கால் உழையுது."

நிறையக் கூட்டம். தேடிப்பிடித்து ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டார்கள். அவன் இருக்கைக்கு நேராக, அவள் அடிக்கடி அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள்.

''மதி, உடனே திரும்பிப் பார்க்காதே. மணிச் சரக்கொண்டு கண்குடுக்குது"

அவளுக்கு 'ஏறும்' என்பதற்காகவே அவன் இதைச் சொன்னான்.

''வெளுத்துப்போடுவன் தெரியுமே?"

மீண்டும் அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

''பார் இப்ப..."

மதியும் தலைசாய்த்து திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு உடனே தெரியவில்லை.

''இவர் பெரிய மன்னவன். ஆரோ பார்க்கிறாளாக்கும்...!"

மதி சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அவள் நேராக அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தாள். அவள் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அது அவன் எழுதிய 'வரம்புகள்' என்ற சிறுகதைத் தொகுப்பு. இப்போது அவனுக்கு விளங்கிவிட்டது. அந்தத் தொகுப்பின் அட்டையில் அவனது படத்தையும் பிரசுரித்திருந்தார்கள் அச்சகத்தார்.

''வணக்கம். என்னுடைய பெயர் கல்யாணி. நீங்கள்தானே எழுத்தாளர் மிஸ்ரர் மாதவன்?"

அவனும் பதிலுக்கு வணக்கம் செலுத்தினான்.

''அதுதான் நேரேயே வந்துவிட்டீர்களே?"

''இந்தக் கதிரையில் இருக்கலாமோ?" என்று அவள் அவனிடம் அனுமதி கேட்டாள்.

''தாரளமாக..."

அவள் இருப்பதற்கு வசதியாகக் கதிரையைப் பின்னோக்கி இழுத்துவிட்டான்.

''இவங்க மிஸ்ஸிஸ் மாதவன். கரெக்ட்?"

மதியைப் பார்த்துக் கேட்டாள் கல்யாணி.

''ஆமாம்.. என் மனைவி மதி."

''வணக்கம் சகோதரி, அவங்களும் முழுமதியாகத்தான் இருக்கிறாங்க..."

அவள் தன்னைப் பாராட்டியதை நாணத்தோடு ஏற்றுக்கொண்டு சின்னதாகச் சிரித்துக்கொண்டாள் மதி.

என்ன அழகு. அடக்கமாக, எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் 'சிம்பிளா'க இருந்தாள். கறுத்தக் கொழும்பான் மாம்பழம் பழுத்திருப்பதுபோல் மஞ்சள் கலந்த நிறம். அவனின் கற்பனையில் அந்தநேரத்தில் வார்த்தைகள் வந்து சேரவில்லை.

''நீங்கள்...? நான் என்னை முதலில் அறிமுகம் செய்கின்றேன். நான் மொறீஸியஸ் நாட்டைச் சேர்ந்தவள். எங்களுடைய பரம்பரை தமிழ்நாடு."

''அப்படியா?"

ஆச்சரியமாக அவளைப் பார்த்தான் மாதவன்.

''இப்படி அழகாகத் தமிழ் பேசுகிறீங்கள்."

''நீங்கள் நினைப்பது சரிதான். தீவில் நம்மவர் தமிழ் தெரியாத தமிழர்களாகத்தான் வாழ்கின்றார்கள். இப்போது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புதிய தலைமுறை சொந்தமொழியின் அவசியத்தை உணரத்தொடங்கிவிட்டது. தமிழ் மன்றங்கள், தமிழ் மேலதிக வகுப்புகள் என்று ஆர்வம்காட்டி வருகின்றார்கள். தமிழ்நாட்டு அறிஞர்களும் இதற்கொரு காரணமே. நான் நிறையப் படித்திருக்கிறேன் என்று சொல்ல வரவில்லை. முடிந்தளவு முயற்சிசெய்து தமிழ்மணிப் பட்டமும் பெற்றிருக்கின்றேன்."

அவள் நிதானமாக, நல்ல தமிழில் சொன்னபோது மாதவனின் வாய் ஆச்சரியத்தால் விரிந்தது.

''தமிழ்மணிப் பட்டமும் பெற்றிருக்கின்றீர்களே! கேட்கவே சந்தோசமாக இருக்கின்றது."

''நான் இங்கு வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகின்றது. 'ஸ்கொலசிப்'பில்தான் வந்தேன். நீங்கள் எழுதிய புத்தகங்கள், சிறுகதைகள், கவிதைகள் என்று நிறையவே படித்திருக்கின்றேன். உங்களுடைய பார்வையே வித்தியாசம். வாசிக்க, சிந்திக்க, சுவைக்க என்று அடுக்கிக்கொண்டே போகலாம். 'வரம்புகள்' என்ற சிறுகதைத் தொகுப்பை நான் பலதடவைகள் படித்துவிட்டேன். பெண்ணடிமைத்தனத்தை புதியகோணத்தில் நோக்கியிருக்கின்றீர்கள். அதில் இடம்பெற்ற கதைகளில் நிறையவே சமுதாயத்திற்குத் தேவையான நல்ல விடயங்கள் நவீனகோணத்தில் பார்க்கப்பட்டிருக்கின்றது. அனுபவம்வாய்ந்த எழுத்தாளனுக்கு இருக்கக்கூடிய சொற்பதங்கள் ஆத்மார்த்தமானவை. வாசிக்கின்றபோது முதிய எழுத்தாளராக இருப்பார் என்று கற்பனை செய்துகொண்டேன். நல்லகாலம். படத்தைப் பிரசுரித்த அச்சகத்தாருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்."

 

மாதவன் குறுக்கிட்டுச் சிரித்துக்கொண்டான்.

''மன்னிக்க வேண்டும் மிஸ்ரர் மாதவன். நான் நம்பவில்லை. இளம் வாசகர்களைச் சம்பாதிப்பதற்காக அச்சகத்தார் எழுத்தாளர்களின் இளவயதுப் படங்களையும் பிரசுரித்துவிடுவார்கள். உங்கள் நண்பர் மிஸ்ரர் குமார்தான் நீங்கள் இளம் எழுத்தாளர் என்பதை உறுதிப்படுத்தியவர்."

'களுக்'கென்று ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டாள் கல்யாணி. தொடர்ந்து அவர்கள் உரையாடல் நகைப்பிரச்சினை என்று வந்தது. இதிலிருந்து தப்பினால் போதுமென்று மதி, புதிதாக முதல்நாள் அறிமுகமான நண்பியைத் தேடிக்கொண்டாள்.

''மன்னிக்கவும். நீங்கள் இரண்டுபேரும் பேசிக்கொண்டிருங்கள். நான் மஞ்சுவிடம் கொஞ்சநேரம் பேசிவிட்டு வருகின்றேன்."

தப்பினால் காணும் என்பதுபோல் பதிலுக்குக் காத்திராமலே எழுந்து சென்றாள் மதி.

அவளுடனான உரையாடலில் மாதவன் தன்னையே மறந்தான். எவ்வளவு விடயங்கள் இவளது மண்டையில், உலகப்புதினங்கள், அரசியல் என்று. பத்து உலகமொழிகளில் அவள் பாண்டித்தியம் பெற்றிருக்கின்றாளாம். அந்தந்த மொழி பேசுகின்ற இனத்தவர்களின் கலை கலாச்சார விழுமியங்கள், நாகரீக வழித்தோன்றல், பொருளாதாரம், வியாபாரம், அரசியல் என்று... அப்பப்பா! ஆச்சரியத்தால் கண்கள் அகலத் திறக்க அவள் சொல்லுவதை தலையாட்டிக்கொண்டே கேட்டான். இடையில் குறுக்கிட அவனுக்குத் தோன்றவில்லை. தலையை ஏதோ ஒரு புதியபாணியில் வாரியிருந்தாள். சின்னதாக ஒரு பொட்டு. அடர்த்தியான புருவங்கள். அறிவு தெரியும் அழகான கண்கள். மூக்கு வாயென்று பேசும்போது சிரிக்கும் பக்குவம். வரிசையான பற்களில் ஒரு தெத்திப்பல். நீண்டநேரம் பேசும்போது அந்தத் தெத்திப்பல்லின் இடையில் வெண்ணுரையாக உமிழ்நீர். இடைக்கிடை விழுங்கிக்கொண்டாள்.

என்ன கெட்டிக்காரி. மனதுக்குள் வாழ்த்திக்கொண்டான். இவளை எந்த ஆணாலும் அடிமைப்படுத்திவிட முடியாது. எவரையும் தன் அறிவால் வசப்படுத்திவிடுவாள். தனக்குள் சொல்லிக்கொண்டு சற்றுநேரம் பார்வையைப் பக்கவாட்டில் மேயவிட்டான்.

''மிஸ்ரர் மாதவன். சொறி. உங்களைக் கதைக்கவிடாமல் நானே கதைச்சுக்கொண்டு போகிறேன்."

''நோ.. அற்புதம். என் அறிவுக்குத் தெரியாத எத்தனையோ விடயங்களை நீங்கள் அறிந்துவைத்திருக்கிறீர்கள். ஏன் நீங்கள் எழுதுவதில்லை?"

''இல்லையென்றில்லை. நாங்கள் சிலபேர் சேர்ந்து நமது நாட்டில் பத்திரிகையொன்று நடத்திவருகின்றோம். உங்களுடைய எழுத்துவடிவம் இல்லையென்றாலும், முடிந்தவரை முயற்சி செய்கின்றோம். ஸ்ருட்காட் யூனிவசிற்றியில் தமிழ் விரிவுரையாளராகவும் பகுதிநேரத்தில் ஜேர்மன்மொழி, அரசியல் சம்பந்தமாக படித்துக்கொண்டும் இருக்கின்றேன். தற்செயலாக ஒருநாள் உங்கள் நண்பர் குமாரைச் சந்தித்தேன். அவர்மூலம் நிறையவே உங்களைப்பற்றி அறிந்துகொண்டேன். சில புத்தகங்களை அவர்மூலம் பெற்றுக்கொண்டேன். நீங்கள் எப்படியும் தங்கள் திருமணத்திற்கு வருவீர்கள் என்பதையும் அவரே சொன்னார். உங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி."

அவள் அடுக்கிக்கொண்டே போனாள்.

சாப்பாட்டு நேரம். கொஞ்சம் தாமதமாகத்தான். நின்ற நண்பர்கள் சாப்பாடு பரிமாறுவதில் ஈடுபட்டார்கள்.

''உங்களுடன் உணவு உண்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லையே?" என்று அவளே கேட்டாள்.

''இது என்ன கேள்வி?"

மாதவன் பதில் சொன்னான்.

''உங்கள் மனைவியையும் கூப்பிடுங்களேன்."

மதியிருந்த பக்கமாக மாதவன் திரும்பிப் பார்த்தான். அவள் மஞ்சுவுடன் சேர்ந்து உணவைச் சுவைப்பதைக் கண்டான்.

''அவள் அங்கே சாப்பிடுகிறாள். அவளுக்கு இப்படியான அலசல்களில் அந்தளவு நாட்டமில்லை. நானும் வற்புறுத்துவதில்லை. பாவம் நல்லவள். ஒரு குழந்தைமாதிரி. காலப்போக்கில் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது தெளிவடைய வாய்ப்பு வரலாம்."

சைவ உணவு. மிகவும் ருசியாக இருந்தது. அவள் கத்தரிக்காய்ப் பிரட்டலை விரும்பி வரவழைத்துச் சாப்பிட்டாள்.

''மாதவன், நீங்கள் பெண்ணடிமைத்தனத்தை இப்படிப் பார்ப்பதில்லையா? பெண்களுக்கு சின்னச்சின்ன ஆசைகள் நிறையவே ஏற்படும். உதாரணத்திற்கு நகை, புடவையென்றால் கொள்ளை ஆசை. இந்தப் பலவீனத்தை ஆண்கள் பயன்படுத்துவதை நான் சில இடங்களில் பார்த்திருக்கின்றேன். இது சம்பந்தமாகவும் எழுதலாமே?"

அவள் ஊறுகாயைத் தொட்டு நாக்கில் தடவிக்கொண்டே இதைக் கேட்டாள்.

''ஏன் இல்லை? எனக்கும் அந்த எண்ணம் உண்டு. தந்தை பெரியாரே அதைத்தான் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். பெண்கள் நகைக்கும் புடவைக்கும் ஆசைப்படுவதை நிறுத்தவேண்டும். இதனையே ஆண்கள் பயன்படுத்திக்கொள்ளுகின்றார்கள். பெண்கள் நகைக்கடையிலும், புடவைக்கடையிலும் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் அல்ல. அறிவை விருத்திசெய்து தங்களை உயர்த்திக்கொள்ளவேண்டும்."

''உண்மைதான் மாதவன். இராஜன் முருகவேல் எழுதிய 'சாகாவரம்' என்ற சிறுகதையில் அவர் இதை அழகாக வெளிப்படுத்தியிருந்தார். கணவனால் பல சித்திரவதைகளைச் சந்தித்த மனைவி படுக்கையில் அவள் அளித்த கல் அட்டியல்மூலம் அனைத்தையும் மறந்துவிடுகின்றாள்."

மாதவனும் சுவைத்த விடயந்தான்.

''நானும் படித்தேன். இதைப்பற்றி அதிகம் எழுதிவிட்டால் ஐரோப்பிய நாட்டில் வாழும் பெண் வாசகர்களின் ஆதரவு குறைய வாய்ப்பிருக்கும். என்னையும் தவறான கண்ணோட்டத்தில் ஆணாதிக்கவாதியென்று முத்திரை குத்திவிடுவார்கள்."

''நோ நோ... இந்த இடத்தில் நான் உங்களைக் கண்டிக்கத்தான் வேண்டும்."

''சற்றுப் பொறுங்கள். உங்களைப்போன்ற பெண் எழுத்தாளர்கள் இதனை எழுதுவதன்மூலம் விழிப்படைய வைக்கலாம்."

''இல்லை மாதவன். நீங்கள் தவறாகக் கதைக்கின்றீர்கள். சமுதாயத்தைத் திருத்தி நல்வழிப்படுத்துவதில் ஒரு எழுத்தாளனின் பங்கு அதிகம். நீங்கள் கூறுவதில் எந்த நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நமது நாடுகளில் நகை சேர்ப்பது சேமிப்பாகவும் கருதப்பட்டது. கஸ்ர நேரங்களில் அடகுவைத்து, விற்று தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளுவார்கள். காலப்போக்கில் நகைகளின் பெறுமதி அதிகரித்ததும் உண்டு. இங்கு அப்படியல்ல. தேவைக்கு அதிகமாக நகைகளைச் சேர்த்துவைத்து, வீட்டில் வைத்திருக்கப் பயந்து வங்கியில் பணத்தைச் செலுத்திப் பாதுகாக்கின்றார்கள். நகைப் பாதுகாப்பு நிதியே காலப்போக்கில் பெறுமதியைப் பலமடங்கு குறைத்துவிடுகின்றது. அதைவிட நகைகள் வாங்குவதையும் போட்டியாக்கிக்கொண்டார்கள். அந்நியநாட்டில் வீண் ஆடம்பரங்கள் ஆபத்தையும் ஏற்படுத்தலாம்."

அவள் சொன்ன கருத்துக்களில் மாதவனுக்கு மாற்றுக் கருத்து இருக்கவில்லை. 'ஆம்' என்று தலையாட்டிக்கொண்டான்.

சாப்பிட்டு முடித்து மதி வந்தாள்.

''இனி வெளிக்கிடுவம். நாளைக்கு வேலை. இப்ப வெளிக்கிட்டால்தான் நேரத்தோடை போய்ச் சேரலாம்."

''மதி, எங்களுடன் இருந்து சாப்பிட்டிருக்கலாந்தானே? கல்யாணி உன்னையும் கூப்பிடும்படி கூறினா. உனக்குத்தான் புதிய சிநேகிதி..."

''நான் என்ன செய்ய? அவள் விடமாட்டேன் என்றிட்டாள்."

''மதி, எப்படி நன்றாய்ச் சாப்பிட்டியளோ?"

கை கழுவிவிட்டு வந்த கல்யாணி கேட்டாள்.

''ஓமோம். நன்றாகச் சாப்பிட்டோம்."

''நாங்களும்தான் ஒரு பிடி பிடித்தோம். அதுவும் எனக்குப் பிடித்த எழுத்தாளருக்குப் பக்கத்தில் இருந்து நேரம்போனதே தெரியவில்லை. என்ன மாதவன்?"

'அங்கை இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே இருந்தனான்.'

எரிச்சலோடு மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் மதி.

''என்ன யோசிக்கிறியள் மதி?"

''ஒன்றுமில்லை. நேரத்தை ஒதுக்கி எங்கள் வீட்டிற்கும் ஒருமுறை கட்டாயம் வரவேண்டும்."

நிச்சயமாக அவள் சும்மாதான் இந்த அழைப்பை விடுத்தாள். மாதவன் தன்னைவிட்டு அவளுடன் கதைத்துக்கொண்டிருந்தது அவளுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.

அனைவரிடமும் விடைபெற அரைமணித்தியாலத்திற்குமேல் சென்றது. அவளைவிட்டு வருவதற்கு மாதவனுக்கு விருப்பம் வரவில்லைப்போல இருந்தது மதிக்கு. 'வாங்க எல்லாத்துக்கும் வீட்டுக்கு' என தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.

''மிஸ்ரர் மாதவன், எங்கள் நாட்டில் இருந்தும் உங்களுக்கு ஒரு இலக்கியப் பரிசு கிடைக்கலாம். அதற்குரிய முயற்சியை நான் மேற்கொண்டுள்ளேன்" என்றாள் கல்யாணி.

''அப்படியா? நன்றி."

மாதவன் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தது மதிக்கு மேலும் எரிச்சலை ஊட்டியது. இதை மாதவன் கவனிக்கவில்லை.

கார் பிராங்பேட்டைக் கடந்து ஒரு 'பார்க்'கில் நின்றபோதுதான் மதி கண்விழித்தாள். அதுவரையில் அவளின் குறட்டைச் சத்தம் அவனுக்குத்தான் தெரியும். மதியின் பக்கமாக வந்த மாதவன், ''மதி, கொஞ்சநேரம் வெளியில் வாவன். காத்து வாங்குவம்" என அழைத்தான்.

''எனக்கு வேண்டாம். நீங்கள் வாங்குங்கோ."

அவளைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு. 'சிகரட் பைக்கற்'றில் இருந்து ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டு, புகையை வெளியில்விட்டான். அவளுக்கு அவன் 'சிகரட்' பிடிப்பது கொஞ்சம்கூடப் பிடிப்பதில்லை. அவளை உலுக்கிவிடவே, ''எவ்வளவு இன்பம்! 'பில்டர்' முனையில் புகை பிடி. இன்பமென்று சும்மாவா சொன்னார்கள்?" என்றான். அவள் எரிச்சலோடு ஒரு பார்வை. 'சனியன்' விருப்பத்தோடு மனதுக்குள் திட்டிக்கொண்டாள். அவனது குறும்புகள் அவளுக்கு விருப்பம்.

 

அவளைப் பெண் கேட்கும்படி தனது பெற்றோருக்கு அவனே கடிதம் எழுதியிருந்தான். அதன்படி திருமணப் பேச்சுக்கால். ஒருவரையொருவர் சின்ன வயதில் பார்த்தது. அவளது வீட்டிற்குப் பக்கத்தில்தான் அவனது வீடும் இருந்தது. அவனுக்கு ஆறு வயதாக இருக்கும்போது மதி குழந்தை. அவளை எந்தநேரமும் தூக்கிவைத்துக் கொஞ்சுவானாம். அவனது தாய் அடிக்கடி சொல்லுவாள். அவனுக்கும் அந்த ஞாபகம் கொஞ்சம் இன்னும் இருக்கின்றது. சிறுவயதில் அவன் குண்டுக் குழந்தை. அவனே அவளுக்கு முதலில் ஒரு கடிதம் எழுதி பல படங்களும் அனுப்பியிருந்தான். தனது சிநேகிதி சாரதாவுக்குக் காட்டியபோது, ''என்ன அழகன்டி இவன். சிரிக்கின்ற பொம்மையொன்றைச்செய்து ஓடவிட்டதுபோல். நீ கொடுத்துவைத்தவள்" என்று அவள் பெருமூச்சுவிட்டதை அவளால் அப்பொழுதே ஜீரணிக்க முடியவில்லை. 'இவளுக்கேன் காட்டினேன். கண்பட்டுவிடுமோ?' என்றுகூடக் கவலைப்பட்டாள். அவள் அவனை அப்பொழுது 'மாதவண்ணா' என்றே கூப்பிடுவாள். அவனது கடிதத்திற்கு அண்ணன் என்றே பதில் எழுதி தன்னுடைய தற்போதைய படம் ஒன்றையும் வைத்து அனுப்பியிருந்தாள். கிடைத்தவுடன் அவளை வர்ணித்து கடிதத்துடன் கவிதையொன்றையும் எழுதியிருந்தான். 'ஆயிரம் முத்தங்கள் ஆசையாய் இட்டவன் நான். ஆரணங்கே! ஆடை சுற்றிப் பிறந்தவளா நீ? அது இன்றிப் பார்த்ததை அறியாய் நீ. அப்போது நீ குழந்தையடி. எனக்காகப் பிறந்தவளே! என் ஏக்கங்கள் தீர்ந்துவிட எப்போது வருகின்றாய்?'

இந்தக் கவிதை அவளை என்னவோ செய்தது. உடலில் உஸ்ணம் ஏற, என்றும் இல்லாத இன்ப உணர்வு. எத்தனையோ ஆயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் இருந்தவனிடம் தன் பெண்மையைப் பறிகொடுத்ததாகவே நினைத்துக்கொண்டாள். இரவில் உறக்கமின்றித் தவித்தாள். அவனது படத்தை அருகில்வைத்துப் படுப்பதும், ஏதோ எல்லாம் கதைப்பதுமாக சிலநாட்களிலேயே பல கிலோக்களைத் தொலைத்துவிட்டாள். தனது நிலையை நினைத்துத் தனக்குத்தானே பரிதாபப்பட்டாள். ஒருபக்கம் வெட்கமாகவும் இருந்தது. வேறு வழியின்றி சாரதாவே அவளுக்கு ஆதரவானாள். தன் அழகின் பெருமை தெரியாமல் அப்பாவியாக இருக்கின்றாளே! ஆசை அதிகம் ஏற்பட அவனைவிட்டுப் பிரிய அவளால் முடியவில்லை.

அவள் ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. இப்போதும் புதுமாப்பிள்ளையாகவே அவனை நினைத்து மகிழ்வாள். இந்தப் பிடிப்பால் அவனைவிட்டு விலக முடிவதில்லை. அந்தக் குறும்புடன் 'பார்க் பிளற்'சில் அவளைச் சிரிக்கவைக்கப் பல ஜாலவித்தை காட்டினான். அவள் மனதுக்குள் இரசித்தாள். பொய்க்கோபம் காட்டி பேசாமல் இருந்துவிட்டாள்.

வீட்டுக்கு வந்ததும் விவாதம், சிணுக்கம், அழுகையென்று சமாதானமாகப் பலமணித்தியாலங்கள் பிடித்தது. இனிமேல் அவள் மனம்நோக நடப்பதில்லையென்று மனதுக்குள் தீர்மானம் எடுத்துக்கொண்டாள். கல்யாணி அடிக்கடி ரெலிபோன் எடுத்துக் கதைப்பாள். அவனது 'வரம்புகள்' சிறுகதைத் தொகுப்புக்கு மொறிசியஸில் சிறந்த இலக்கிய விருது கிடைத்திருப்பதாகச் சொன்னபோது மதியும் சேர்ந்து மகிழ்ச்சிகொண்டாள்.

அதன்பிறகு பலவிழாக்களுக்கு இருவரும் போய்வந்தார்கள். எழுத்தாளன் என்ற காரணத்தால் நிறையவே பெண் வாசகர்கள். அடுத்த புத்தகம் எப்போது வருகின்றது என்ற கேள்வி. கதைகள் பற்றிய அலசல்கள். அவள் அதிகம் பேச்சுக் கொடுப்பதில்லை.

அன்று டோட்முண்டில் பிறந்தநாள் விழா ஒன்றுக்குப் போய்வந்தார்கள். வீடு திரும்பும்போது அவள் உற்சாகமாக இருந்தாள். வந்த கையோடு உடைமாற்றிவிட்டு அவன் அருகில் உட்கார்ந்துகொண்டாள்.

''இண்டைக்கு நல்ல சாப்பாடு என்ன?" என்று அவனைக் கேட்டாள்.

''நல்ல சாப்பாடா? இறைச்சிக் குழம்பிற்கு உப்புக் காணாது. சம்பல் கொஞ்சம் பரவாயில்லை. அதனைத்தான் நான் விரும்பிச் சாப்பிட்டேன்" என்று மாதவன் பதில் தந்தான்.

''உனக்கும் நல்ல பொழுதுபோக்கு. உனது பள்ளித்தோழி கல்பனாவைச் சந்தித்து நீ சந்தோசமாக இருந்தது எனக்கும்கூட மகிழ்ச்சிதான்" என்று மாதவன் தொடர்ந்தான்.

''நீங்கள் கல்பனாவைக் கவனித்தீர்களா? வரவர நல்ல அழகாக வருகின்றாள். இப்ப நல்ல நிறம். அந்த நிறத்திற்கு அவள் உடுத்திருந்த சாறியும் அந்த அட்டியலும் எடுப்பாக இருந்தன. எனக்கு நல்லாப் பிடிச்சுது. நீங்களும் பார்த்தீங்கள்தானே?"

''என்னத்தை?"

''அவள் உடுத்திருந்த சாறியையும் அட்டியலையும்..."

''நான் பார்க்கேல்லை" என மாதவன் பதிலளித்தபோது, அவன் வேண்டுமென்று சொல்கிறானென மதி நினைத்துக்கொண்டாள்.

''அரைமணித்தியாலத்துக்குமேல் அவளுக்குப் பக்கத்தில் இருந்தனீங்கள். பார்க்காமலா இருந்தனீங்கள்? உதுகள்மட்டும் உங்கள் கண்களுக்குத் தெரியாது. கள்ளன்... இத்தனைநாள் வாழ்ந்த எனக்குத் தெரியாதா உங்களைப்பற்றி?"

''சத்தியமாக நான் பார்க்கேல்லை."

அவனுக்கு ஒருபக்கம் சிரிப்பாகவும் இருந்தது.

''மதி, இப்ப என்னை என்ன செய்யச் சொல்றாய்? பெண்களைப் பார்த்து அவர்களுடன் பேசினாலும் மூஞ்சையை நீட்டுவாய். பேசாமல்விட்டாலும் வேண்டுமென்று பொய் சொல்வதாகச் சொல்கிறாய். என்ர காலமடி. நீ நம்பினால் நம்பு. எனக்குத் தேவையில்லாத விசயத்தில நான் தலையிடுவதில்லை."

அவள் கல்பனாவைப் பார்த்தபோது அதேபோல் தனக்கும் வாங்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டாள். அவனும் அவற்றைக் கவனித்திருப்பான் என்றே நம்பினாள். ஏமாற்றம் அவளால் தாங்க முடியாததொன்று. முகத்தில் சின்னதாக வாட்டம். அவனுக்குப் பக்கத்தில் இருந்தபோது, இருந்த மலர்ச்சியும் உற்சாகமும் இப்போது இருக்கவில்லை. அவளைச் சீண்டிவிட அவன் நினைத்தான்.

''உனக்கு இப்ப அந்த நகைமீதும் சாறிமீதும் ஆசை வந்திற்றுது. இதுதான் பெரியாரே...!"

''பெரியார் பெரியார் பெரியார்... இல்லாட்டி இப்ப கல்யாணி. பெரியார் பெண்ணாகப் பிறந்திருந்தால்... அதுவும் அகதியாய் ஐரோப்பிய நாட்டிற்கு வந்திருந்தால் கை கழுத்து காதென்று வாங்கி அடுக்கியிருப்பார். கொஞ்சநாளா அந்த மொறிசியஸ்க்காரி. அவளுக்கும் விசர்."

மதிக்கு எது பிடிக்கவில்லையோ, வாயில் வந்ததெல்லாம் சொல்லுவாள். இதைத்தான் அவளிடம் இருந்து அவன் எதிர்பார்த்தான். இன்று தந்தை பெரியாருக்கும் பேச்சுத்தான். பாவம் கல்யாணி. பெண்களின் அறியாமையை அகற்றி அவர்களின் விடிவுக்கு வழிசமைக்க வேண்டுமென்று உன்னதமாகச் சிந்திப்பவள். அவளுக்கும் 'விசர்' என்று மதி கூறியதைக்கேட்டு 'கல கல'வென்று சிரித்தான்.

''என்ன சிரிப்பு?"

அவளுக்கு ஏறிக்கொண்டு வந்தது. அழுதுவிடுவாள்போல் முகம் சிவந்து கண்கள் கலங்கியிருந்தன. 'எதையாவது வாசிக்கிறது. அதை என்னிடந்தான் காட்டிறது.' அவள் வாயில் வந்ததெல்லாம் முணுமுணுத்தாள். அவளை அணைத்து, ''ஏன் இப்ப ரென்சனாகிறாய்? ஒரு அட்டியல் வாங்கவேணும். அவ்வளவுதானே?" என்றான்.

''நான் இப்ப வாங்கித் தரும்படி கேட்டனானே? அவளுக்கு அழகாக இருந்ததென்றுதானே சொன்னனான். எங்கே இவள் வாங்கித்தரச் சொல்லிப்போடுவாளோ என்று நினைத்து பார்க்கவில்லை என்றிட்டியள். பொய். பொய். எனக்குத் தெரியாதே உங்களைப்பற்றி?"

அவன் அவளை அன்போடு அணைத்தான்.

''போதும் விடுங்கோ."

கையை விலக்கி விர்ரென்று எழுந்தாள்.

''நான் படுக்கப்போறன். நித்திரை வருகுது."

''அடி இரடி. கொஞ்சநேரம் கதைப்பம்."

அவளது கைகளைப்பற்றி இழுத்து பக்கத்தில் இருத்தினான்.

''பொன்னகை என்னடி பொன்னகை? என்ர குஞ்சுவின் புன்னகைக்கு ஈடாகுமா? நாளைக்கு லீவு போட்டாவது இரண்டுபேரும் கடைக்குப் போவம். எனக்குத் தெரியாட்டி என்ன? உனக்குத் தெரியுந்தானே? காட்டு. வாங்கித் தாறன்."

அவளை மெதுவாக அணைத்தான்.

''சரி போதும் விடுங்கள். எல்லாம் நடிப்பு."

அவள் செல்லமாகச் சிணுங்கினாள். அந்த அழகை அவன் விரும்பி இரசிப்பான். கைகளினால் கலைந்த கூந்தலைக் கோதிவிட்டான்.

''கதையன் மதி!"

''ஆரும் வருவாளுகள். கூட்டிவைச்சு விடியவிடியக் கதையுங்கோ."

அவள் கொஞ்சமாகச் சீறினாள்.

''உன்னைவிட எனக்கு யாரும் பெரிசில்லைத் தெரியுமோ? அடி அசடு, என்னைப்பற்றி இன்னும் உனக்குப் புரியவில்லை."

அவள் சொன்னாள்.

''எனக்கு எல்லாம் தெரியும். ஒன்று கேட்கிறன், சொல்லுறியளே? பெண் விடுதலைக்காக நிறையவே எழுதுறியள். நல்லது. நானும் பாராட்டுகிறேன். கணவன்மாரை மனைவிமார்... ஏன்? விடுங்கோ. உங்களை நான் 'வாங்கோ, இருங்கோ' என்று மரியாதையாகக் கூப்பிடுகிறேன். ஆனால் நீங்கள் 'நீ, வா, இரு, போ' என்று ஒற்றைப் பாசையில் அழைக்கின்றீர்கள். ஏன்? நான் உங்களைவிட இளையவள் என்பதாலா? இல்லை உங்களைவிட எளியவள் என்பதாலா?"

அவள் கேட்டுவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் அதிர்ச்சியில் கொஞ்சநேரம் எதுவுமே பேசவில்லை.

'என்னுடைய மதியா இப்படி ஒரு கேள்வி கேட்டாள்?'

அவள் தனக்காகமட்டும் இதைக் கேட்கவில்லை என்பதைமட்டும் அவள் தெரிந்துகொண்டாள்.

(பிரசுரம்: கலையோசை)

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree