நீ முன்னால போ, நான் பின்னால வர்றேன்!

15 ஜூலை 2008
ஆசிரியர்: 

   

ய்யாமாருங்களே! அம்மாமாருங்களே!

வணக்கம். வணக்கம்.

ஏதோ எலக்சனுக்கு நிக்கிற அரசியல்வாதியாட்டம் ஒண்ணுக்கு ரெண்டு வணக்கம் போடறானேன்னு யோசிக்காதீங்க. உண்மையாத்தான், அன்போடதான் வணக்கம்கிறேன்.

மொதல் வாட்டி எழுதச்சிலே கைநடுங்கிச்சி. மூளை இருக்கா இல்லியான்னு சந்தேகமே வந்திடுச்சி. இப்ப பரவாயில்ல. ஏதோ கொஞ்சம் இருக்கிறதா நம்பிக்கை வந்திடுச்சி. ஏன்னா பூவரசு சஞ்சிகை ஆசிரியர் சாரு ஏத்துக்கிட்டாரே! அதனாலதான். இதுகூட அவரோடே பத்திரிக்கையிலே வந்த கட்டுரைதான்னு நன்றியோடே மொதல்ல சொல்லிக்கிறேன்.

எம் பாட்டி அடிக்கடி சொல்லுவாக:
“ஏலே! ஏண்டா ஒங் கண்ணு பூனக்கண்ணாட்டம் சதா அங்கேயிங்கேன்னு சொழலுது. இது நல்லதுக்கில்ல. திருட்டுமுழி, திருட்டுமுழி“ அப்புடீம்பாக.

ஏன் பாட்டி அப்பிடி சொல்றாகன்னு ரோசிச்சி ரோசிச்சுப் பாத்தாலும் புரியல அப்ப.

ஆனா....
ஒரு நா ஒரு கடைக்குள்ள அம்மாகூட போயிருந்தப்ப, எவனோ எதையோ திருடிப்புட்டான்னு கத்திக்கிட்டிருந்தாங்க. திடீர்னு ஒருத்தன் என்னக் காட்டி அவனைக் கேட்டா சொல்லுவான்னு சொல்லிப்புட்டான்.

எனக்கு „டபீர் டபீர் டபீர்“னு நெஞ்சு அடிச்சுக்கிட்டுது. “அம்மா, அம்மா“ ன்னு அலறிப்புட்டேன். பெத்த மனசு பித்தில்லே..?

அம்மா துடிதுடிச்சுப் போயிட்டாக!

அதுக்குள்ளாற ஒருத்தன் வந்தான்.
„ஏம்மா ஒம்புள்ள இந்த மாதிரி சட்டிக்குள்ள தலையைவுட்டு மீன களவெடுத்த பூனையாட்டம் முழிக்கிறான்? அந்தக் கள்ளப்பயலுக்கும் இவனுக்கும்..?“ அப்புடீன்னான்.

பாஞ்சாளே அம்மா ஒரு பாச்சல்! மனோரமா தோத்தாக போங்க.

„என்னய்யா நீ மனுசனா, மாடா? எம் பரம்பரைக்கே இல்லாத பழக்கத்த எம்புள்ளமேலே சாட்டுற நீயும் ஒன் குடும்பமும் வேணும்னா அப்படியிருக்கலாம்யா! இன்னொரு வாட்டி ஏதாச்சும் சொன்னே, அப்புறம் நாக்கிருக்காது.ஆமா. சாக்கிரதை!“

அப்புடீன்னு கண்ணகியாட்டம் கத்திப்புட்டாக. வந்தவன் நழுவிட்டான்.

எனக்கு பாட்டி ஞாவகத்துக்கு வந்தாக. அம்மா சொன்னாக: „அப்பாசாமி! நீ அப்பிடியிப்பிடி பாக்காம நெலத்தமட்டும் பாத்துக்கிட்டு இர்றா.. ஒன் அப்பாருக்குக்கூட இல்லாத இந்த முண்டக்கண்ணு ஒனக்கு எப்புடித்தான் வந்துதோ!„

சத்தியமா அன்னிக்கு மட்டும் நானு தனியா இருந்திருந்தா கண்டிப்பா என்னப்புடிச்சே போட்டிருப்பாங்கன்னுதான் நெனக்கிறேன்.

அன்னயிலேருந்து சதா கண்ணாடி முன்னுக்கு நின்னு, கண்ண அட்ஜஸ்ட் பண்ணிப் பண்ணி ஒருமாதிரியா நார்மல் பார்வைக்காரனபோல பாக்கப் பழகிக்கிட்டேன். இருந்தாலும் இருந்தொரு சமயம் பெரச்சினதான்.

நானு அப்பா, அம்மாகூட எங்கேயாவது போனேன்னா ஒரே மாதிரியாத்தான் அப்பா நடந்துக்குவாரு. அம்மாவ சொல்லுவாரு: „நீ முன்னால போ. நான் பின்னாலே வர்றேன்“ அப்படீம்பாரு.

அம்மாவும் ஒண்ணுமே சொல்றதில்ல.அப்புடியே நடந்துக்குவா. அதப் பாக்கப் பாக்க... „இது பெரிய ஆணாதிக்கம்டா! அநியாயம்டா! உடக்கூடாதுடா!“

இப்படியெல்லாம் என் மனசாட்சி சொல்லி என்னக் கொதியோ கொதின்னு கொதிக்க வச்சுடும்.

அதே சமயத்துல, தந்தைசொல்மிக்க மந்திரமில்லைன்னு என் தாத்தா சொல்லிக் குடுத்த பழமொழி நெனவுக்கு வரும்.

அப்பா மந்தரவாதியாட்டம் மனக்கண்ணுக்கு முன்னாடி வந்து குதிப்பாரு. நான் அடங்கிக்குவேன்.

இருந்தாலும் ஒருநா அம்மா வாயக் கௌறிப்பாத்தேன். “ஏம்மா! என்னைக்கும் ஒண்ணாவே போறீங்கல்ல. ஊட்டுலெ ஒங்களுக்குள்ளே சண்டைன்னு ஒலகத்துக்குக் காட்டவா?” அப்புடீன்னேன்.

படிதாண்டா பத்தினிதான் அம்மா ஆனா அப்பாவப்பத்தி ஏதாவது சொன்னா கடலையே தாண்டியாவது தாக்குவான்னு அன்னிக்குத்தான் புரிஞ்சிது.

டங்கு டங்குண்ணு என்தலையிலே குட்டோ குட்டுன்னு குட்டிப்புட்டா.
குட்டா அது! சுத்தியல் அடி. “யம்மாடியோவ்!”

குறுகட் வெட்டியிருந்த என் தலையெல்லாம் சின்னச்சின்ன மலைக்குன்றாட்டம் வீங்கிப்போச்சி. நான் கத்தினத அவ கண்டுக்கவே இல்லே.அவ புருசன ஏசிப்புட்டேனாம். அந்தக் கோவம்.

அஞ்சி நிமிசங் கழிச்சி சொன்னா: “அடே அப்பாசாமி, ஒன் அப்பாரு எதுக்கு என்ன முன்னே போவச்சொல்லிப் பின்னாடி வர்றார்னா, அது என்ட பாதுகாப்புக்காகவாக்கும். தெரிஞ்சிக்க.”

எனக்கு அப்பத்தான் அறிவுக்கண் தொறந்திச்சி. அட, நம்மப்பா எவ்வளவு ஒசத்தியான மனுசருன்னு. நான் பொறக்க முந்தியே எவனோ சுட்டுப்போட்டானாமே அந்த மகாத்மா காந்தி மாதிரி நினச்சிக்கிட்டேன்.

காந்தி ஆருன்னு மட்டும் வௌரம் கேட்டுடாதீங்க. நம்ம அரசியல்வாதிங்களப் போலத்தான் நம்ம பொதறிவும்.

ஆமா அப்போ அம்மாவுக்குப் பாதுகாப்புக் கொடுக்குறதுக்குத்தான் அப்பா அப்புடிச் சொன்னாரு. ஆனா இப்பல்லாம் புதுசுபுதுசா வெளிநாடுகள்ளே சங்கம் தொவக்குறாங்களே அவங்கள்ள செலபேரும் அப்புடியே சொல்றாங்களே அது ஏனுன்னு யோசிச்சேன். மொதலல்ல புரியவேயில்ல. பொறவு நானும் ஒண்ணுலெ ஒட்டிக்கிட்டு அவதானிச்சேன்.

இங்கே வெளிநாட்டில ஒண்ண கவனிச்சிருக்கீங்களா? விசயமிருக்கோ இல்லியோ பேரிருக்கோ இல்லியோ கொள்கையிருக்கோ இல்லியோ ஆறு ஏழு பேர் சேந்துக்கிட்டு தேடிப்பொறுக்கி, ஒரு பென்னாம்பெரிய சங்கப்பேரா நீட்டி வச்சி ஒரு சங்கம்னு ஆரம்பிப்பாங்க.

பொறவு தலைவர், செயலாளர், பொருளாளர் அன்னா பின்னான்னு அறுபது பதவிகள உண்டாக்கிக்கிட்டு, ஒவ்வொருத்தனா நாமகரணம் சூட்டிக்கிட்டு, ஓரு லெட்டர்பேட் அடிச்சுக்கிடுவாங்க. போதும். அத்தன அங்கத்தவரும் அந்த லெட்டர் பேப்பர்லேயே இருந்துக்குவாங்கன்னா பாத்துக்குங்க.

எவன் செத்தாலும் அறிக்கை விடறது. எங்கேயோ கொலைன்னா அனுதாபம் வுடறது ஏதாவது ஒரு பெரிய இயக்கத்திலேருக்கிற யாரையாவது சந்திச்சி அலோ எப்படி? நாங்கதான் இந்தப் பென்னாம்பெரிய சங்கத்தின் பென்னாம் பெரிசுகள்ங்கிறது. அவர் அப்புடியாம்பாரு. அடுத்தவாரம் ஓரு பத்திரிகையிலே எங்க சங்கம் இன்னாரோடே இன்ன நாளிலே பேச்சுவார்த்தை நடத்திச்சின்னு அறிக்கை உடறது. மத்தாளுங்க பாக்கமாட்டாங்கன்னும் தெரியும். பாத்தாலும் அத கவனத்துக்கு எடுத்துக்க மாட்டாங்கன்னும் தெரியும்.

இந்தக் கும்பலுக்குள்ளே மேலே இருக்கிறவன கீழே இருக்கிறவனுக்கு நல்லாவே தெரியும். ஓரே குட்ட மட்டைங்கதானே! இருந்தாலும் ஏறினாப்புறமா காலை இழுத்துவிட்டு தான் ஏறிக்கணும்கிற கொள்கைவெறியாலே தலைவரை முன்னாலே போ நான் பின்னாலே வர்றேன்னு அனுப்பிக்கிட்டே அவன வச்சி அறியவேண்டியதெல்லாம் அறிஞ்சிக்கிட்டு, நேரம் பாத்து காரியம் சாதிச்சுக்கிறாங்க. பாதுகாப்புக்காக என் அப்பாரு சொன்ன மாதிரியே காலவாறவும் சொல்றானே! தமிழன் அறிவை என்னாங்கிறது?

ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மந்திரியும் தளபதியும் இருந்தாங்களாம். தளபதிக்கு ராசாவ கொன்னுட்டுப் பதவியப் புடிச்சுக்கணும்னு நம்ம பழைய தமிழ்ப்பட கதைகள்ல வர்றதுபோலவே ஆசையாம். அவன்ட திட்டம் மந்திரிக்குப் புரிஞ்சாலும் எப்புடி நிரூபிக்கிறதுன்னு தெரியாமே யோசிச்க்கிட்டே இருந்தாராம். ஓ
ஒரு நா அரச தோட்டத்திலே மந்திரியும் தளபதியும் சும்மா நடந்துக்கிட்டே பேசிக்கிட்டாங்களாம். திடீர்னு மந்திரிக்கு ஒரு யோசனை வந்துச்சாம்.

தளபதிய பாத்து, “நீ முன்னால போ நான் பின்னால வர்றேன்”னானாம் மந்திரி.

தளபதிக்கு புரியல ஏன்னு. அதனாலே அவன் மந்திரிகிட்ட “ஏன் அப்படீ?”ன்னு கேட்டானாம். அதுக்கு மந்திரி சொன்னானாம்.

“நான் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயிருந்தாலும் நீதான் நாட்டின் பாதுகாப்புக்கே தளபதி. அதனால நீதான் ஒசத்தி. அதனால நான் ஒனக்குப் பின்னாடி வர்றதுதான் நியாயம்” அப்படீன்னானாம்.

தளபதிக்கு ஒரே பெருமை.அதுக்குப் பொறவு எங்க போனாலும் எங்க நின்னாலும் மந்திரி அவன் பின்னாடியே போய்க்கிட்டிருந்தானாம். ராசா அதக் கவனிச்சிட்டு மந்திரிய கூப்பிட்டு என்ன வெசயம்னு வௌரம் கேட்டானாம்

“கொஞ்சநாள் பொறுங்க ராசா பொறவு சொல்றேன்” னானாம் மந்திரி. ராசா சிரிச்சிக்கிட்டாராம். ஓரு நா ராசா தனியா இருக்கேக்க, தளபதி அவரைக் குத்திக் கொல்ல திட்டம் போட்டிருக்கான்.

அது மந்திரிக்குத் தெரிஞ்சிட்டுது. அவனுக்குத் தெரியாமலே பின்தொடர்ந்து போனானாம். ஒரு கட்டத்திலே ராசாமேல அவன் பாயப் போவ, நம்ம மந்திரி பின்னாலேருந்து கைய மடக்கி ராசாவக் காப்பாத்தினானாம். பொறவு சொன்னானாம்.”நீ முன்னால பேர் நான் பின்னால வர்றேன்னேனே! எதுக்குன்னு இப்பவாவது புரிஞ்சுதா?” ன்னு  கேட்டானாம்.

ஒரு நல்ல காரியத்துக்காக எப்புடி ஒருவன் அறிவா நடந்துக்கிறான்னு பாத்தீங்களா? அதே சமயம் அதே மாதிரி விசயத்த பாவிச்சு மத்தவங்கள விழுத்துற கூட்டத்தையும் அவதானிச்சுக்குங்க. இதுக்கெல்லாம் மேல எங்கப்பாரு மாதிரி நல்ல மனுசங்களையும் கவனிச்சுக்குங்க.

ஒண்ண மறந்துட்டேனே! எம்ப்பா மாதிரியே பொண்டாட்டிங்கள முன்னே போகச் சொல்லிப்புட்டு, பின்னாடி போறவங்க எல்லாருமே பொறுப்போடே போறதில்ல. ஏதோ அவங்க பொஞ்சாதிங்க அடிமக போலவும் அவங்கதான் ராசாபோலவும் நெனச்சிக்கிறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.

இதல்லாம் குடும்பங்கள்ளே மட்டுமில்ல, நாடுகள்ளேயும் அரசுகள்ளேயும் நடக்கிற விசயந்தாங்க. ஆனா நாம இதையே சரியா பின்பத்துறதுன்னா என்ன செய்யணுந் தெரியுமா?

நமக்கு முன்னாடி நல்லவங்கட சிந்தனைகளும் படிச்சவங்கட புத்திமதிங்களும் அனுபவங்களும் அடிக்கடி ஞாபகம் வரும்படியா ரோசிச்சுக்கிட்டே வந்தோம்னா “நல்ல பழக்கமே! நீ முன்ளால போ நான் பின்னால வர்றேன். நல்ல சிந்தனையே! நீ முன்னல போ நான் பின்னால வர்றேன். நல்ல புத்திமதியே! நீ முன்னால போ நான்  பின்னால வர்றேன். இப்புடியே யோசனையோடே எதுக்கும் நல்லத முன்வச்சி நடந்து கொள்ளணும்னு புரியும்.

ஏன்னா நமக்குப் பொறவு இன்னொரு சந்ததி வர இருக்குது. அதுவும் நீ எனக்கு முன்னாலே போ நான் ஒனக்குப் பின்னாலே வர்றேன்னு நம்ம நம்பிச் சொல்லணும். அப்புடிச் சொல்ல நாம வைக்கணும்.

எங்க நாம இருந்தாலும் எப்புடி நாம இருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்க வேணும்னு நம்மப்பத்தி மத்தவங்க நெனக்கிற மாதிரி முன்மாதிரிகையா இருந்துக்கணும். அந்தத் தனித்துவத்தத் தொலச்சோமோ சரித்திரத்திலேயே இல்லாமே அம்போன்னு போயிடுவோம்.

ஒரேயொரு வரியிலே சொன்னா ஆயிரம் கண்ணாடித் துண்டுக ஒரு சின்ன வைரத்துண்டுட பெறுமதிக்கு முன்னாடி நிக்க முடியுமா? முடியாதில்லியா!

பத்து பித்தளை நகை இருக்கலாம் ஆனா ஒரு தங்க நகைக்கு ஈடாகுமா? ஆகாது. இல்லியா?

அதுபோலத்தான் சரியான தகுதிக்கு முன்னால வறுமையும் வசதியின்மையும் பொருட்டாயிருக்க முடியாது. இல்லீங்களா!

ஆயிரம் கெட்டவங்களுக்கு மத்தியிலே நீங்க நல்லவங்கன்னா நீங்கதான் ஒசத்தி. புரிஞ்சுதா?

இருக்காதா பின்னே!

நீங்கள்ளாம் நல்ல மக்களா ஒயர்ந்த சிந்தனைகளோடே முன்னலே போங்க நான் பின்னாலேயே வர்றேன்.

ஏன்னா…

நன்மைங்கிறது தனிமையாயிருந்துக்கிட்டிருக்கு. அது தவிர்க்கப்படணும்.

ஓங்க,
அப்பாசாமி.
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree