அர்த்தத்தோடே எதிர்த்தாதான் அறிவு வளரும்!

26 ஜூன் 2008
ஆசிரியர்: 

   

நானு இசுக்கூலில படிக்கச்சே ஒரு வாட்டி விவாத மேடையோ என்னமோன்னு ஒன்னு வச்சாங்க. மது வெலக்கு வேணுமா மது வேணுமான்னு தலைப்பு குடுத்தாங்க. எட்டுப்பேரு கலந்துக்கணும்னு விதி வச்சாங்க.

மதுவெலக்கு வேணுங்கிற பக்கத்துலதான் எல்லாப் பசங்களும் ஒட்டிக்கப் பாத்தானுங்க.

எங்க மாஸ்டர் படா ஆளு.

மது வேணுங்கிற பக்கத்துக்கு யார் யாரு இருக்காங்கண்ணு பாத்தாரு. ஒருத்தனுமே இருக்கல்ல.

ஒடனே கண்ண மூடிக்கிட்டு மூஞ்சிலே குத்தறாப்பலே “டேய் நீ வா! டேய் நீ வா!” அப்படீன்னு நாலுபேரை வெளியே எடுத்தாரு. அதுக்குள்ள நானும் அம்புட்டுக்கிட்டேன்.

பொறிக் கூண்டுக்குள்ளே சிக்கியிருக்கிற எலியை சுத்திச் சுத்தி பூனை நடந்து நடந்து புடிக்க ட்ரை பண்ணிட்டிருந்தா உள்ளேருக்கும் எலிக்கு எப்புடியிருக்கும்? அந்த டயத்திலே அப்புடித்தான் இருந்திச்சுது எனக்கு.

நான் மதுவை பூண்டோடே ஒழிக்கணும்கிற கொள்கைக்காரன் அந்த நேரம். அதுக்குங் காரணமிருக்கு.

என் அப்பாரு இருக்காரே! அவரு ஒரு பெருங்குடிமவனாக்கும். சாயங்காலம் வேலை முடிஞ்சி வீட்டுக்குள்ள நொழையும்போதே டைனமைட்டிலே திரி எரியிறதை பாத்தமாதிரி எனக்கு நெஞ்சு படபடக்கும். அஞ்சாறு நிமிசத்திலே வூடே அதிரும்.

அலுமினிய பாத்திரங்க பறந்து பறந்து..

அம்மா “குய்யோ மொறையோ”ன்னு கூப்பாடு போடுவாக! அப்பாரு “ஆய்வூய்”னு கத்துவாரு. பொறவு அவரு அடங்கிப் போனாலும் அம்மா வுட மாட்டா!

“பெரிய எம்சியார்னு நெனைப்பு. சொத்தி சந்திரபாபுவாட்டம் வத்தல் ஒடம்ப வச்சுக்கிட்டு போடற போட்டைப்பாரு. வெக்கக்கேடு!” அப்படீன்னு கத்துவாக.

அப்பா எம்சீயார் ரசிகர்னுதான் அப்புடி அம்மா சுட்டிக்காட்டுவாக.

அம்புடுதான்!

முழு ஊடுமே உருண்டு பொரளும். நாங்கள்ளாம் எடையிலே நுழைஞ்சு “அய்யோ அம்மா அய்யோ அப்பா”ன்னு கத்தி சமாதானம் பேச்சுவார்த்தைக்குக் கெஞ்சிக் கெஞ்சி வழி தேடுவோம்.

அப்பாவோடே குடிகாரக் கட்டை சோர்ந்து சாயிற வரைக்கும் ஒரு நைட் ஷோ படம் பாத்தமாதிரி பக்கத்து வூடுகளுக்கு இருக்கும்.

இதுக்கெல்லாம் அப்பாரு ஊத்திக்கிற சாராயம்தானே காரணம்; அது ஏன்னு ஒருநா ராத்திரி அப்பா தூங்கினாப்பறம் போத்தலிலே மிஞ்சியிருந்த கொஞ்சத்தை லபக்குன்னு குடிச்சுப்புட்டேன். சும்மா டெஸ்ட் பண்ணத்தான்.

அப்பாடியோவ்! கொடலுகிடலெல்லாம் பத்தி எரிஞ்சமாதிரி இருந்துது. அதுமட்டுமா? நாத்தமா நாத்தம! நாக்கையே புடுங்கிக்கிட்டு சாவலாம்போல இருந்திச்சுது எனக்கு.

இந்த நாத்த சனியனை குடிக்க அப்பாருக்கு அப்புடி என்ன ஆசை? அப்படீன்ன கேள்விக்கு பதிலே கெடைக்கல்ல.

அப்பாகிட்டயே கேட்டுப்பாத்தா?

எலும்பு மிஞ்சாது. அதனால அந்த ஆராச்சி மொயற்சியை அதோட கை உட்டுட்டேன்.

இசுக்கூலிலே “மதுங்கிறது சிறுமூளைய தாக்குறதாலதான் தடுமாத்தம் ஏப்படுது” அப்படீன்னாரு மாஸ்டர். நான் அத மறுத்தேன்.

“சார்! எங்கப்பாருக்கு மூளையே கெடையாதே! பெறகு சிறுசு பெறுசுன்னு எப்படி இருக்கமுடியும்?”னேன். அவரு சிரிச்சாரு.

“ஒன் கவல புரியுதுடா அப்பாசாமி” அப்படீன்னாரு.

அவருக்கு என்வூட்டு சங்கதி நல்லா தெரியுமில்லே.. அதனாலதான் அப்புடி சொன்னாரு.

இப்ப விவாத மேடைக்கு வருவோம்.

மது விலக்கு வேணுங்கிற பசங்கள்ளாம் துள்ளிக் குதிச்சிக்கிட்டிருக்க, நாங்க சோர்ந்து போயிருந்தோம். அப்பத்தான் எங்க வாத்தியாரு எங்க கிட்ட வந்து கண்ணைத் தொறந்தாரு.

“டேய் பசங்களா! எல்லாரோடேயும் பத்தோடே பதினொண்ணா ஓடறதிலே அர்த்தமுமில்ல. பிரயோசனமுமில்ல. தனித்துவமா துணிவோடே நின்னு காட்டணும் அப்பதாண்டா ஒங்களுக்கு மதிப்பும் புகழும் வெத்தியும் சரியாவும் உண்மையாவும் கெடைக்கும்” அப்புடீன்னாரு.

எனக்குக் கண் தொறந்திடுச்சி. அவனுக எல்லாரும் சொல்லிட்டிருக்கிற பழைய கதைங்களை மட்டுந்தான் சொல்லுவானுக. நாம சரியா ரோசிச்சி புது ஐடியாவோடே பேசினாத்தான் நமக்குத் தெறம இருக்குன்னு புரிய வைக்கலாம் அப்புடீன்னு ரோசிச்சேன்.

ஆமா! மது வேணும்னா அப்பாருக்கு சாதகமாப் பேசிட்டேன்னு அம்மா ஒதைக்க வந்தா? பதட்டந்தான். இருந்தாலும் சரியா யோசிச்சு முடிவெடுப்போம்னு நினச்சுக்கிட்டேன்.

என் அப்பாரு போல குடிச்சிட்டு கும்மாளம் போடாத வேறு எதுக்காவது இந்த மது உதவி செய்யுதான்னு ஆராச்சி பண்ண முடிவெடுத்தேன்.

ஆபரேசனுக்கு முன் கொடுக்கும் மயக்க மருந்தும் ஒருவித மதுதான். போதைப் பொருட்கள் பலதும் மருந்துக்காகவும் பாவிக்கப்படுது இப்புடிப் பல உண்மைங்க கெடைச்சுது.

அது மட்டுமா? கிறிஸ்தவ தேவாலயங்களிலே பூசை பண்றப்போ சாமியார் குடிக்கிறாரே அந்த வைனும் மதுதானே! அப்படீன்னா ஒரு விதத்திலே மது அங்கே அத்தியாவசியமாகிட்டுதே!

இப்படியெல்லாம் ரோசிச்சு ரோசிச்சு பாயிண்ட் எடுத்து வச்சுக்கிட்டு விவாதத்திலே விளாசு விளாசுன்னு விளாசிப்புட்டேன்.

நம்புறீங்களோ இல்லியோ விவாதத்திலே நாங்கதான் ஜெயிச்சோம். நடுவர் சொன்னாரு. “நஞ்சைக்கூட மருந்தாக்கும் கலை உண்டு. மதுவைக்கூட அளவறிந்து அறிவுடனே அருந்தினால் தீமையில்லை”ன்னாரு.

ஒரே பலத்த அப்ளாசு.

என் மாஸ்டர் வந்தாரு.

“அடே படுவா! நீ சின்னப் பயதானேன்னு நெனச்சேன். வெளுத்துக்கட்டிட்டியே! பலே!”ன்னாரு.

நான் சொன்னேன்.

“சார் நீங்க சொன்ன புத்திமதிய நான் சரியா ரோசிச்சுப் பாத்தேன். அதனாலேதான் இப்புடியெல்லாம் என்னாலே ரோசிச்சுப்பாக்க முடிஞ்சுது. சும்மாவா சொன்னாங்க சுடர்விளக்காயினும் தூண்டுகோல் தேவைன்னு. நீங்க வழிகாட்டினீங்க நான் நடந்து பாத்தேன். அம்புடுதான்” அப்படீன்னேன்.

“தம்பி அப்பாசாமி! இன்னிக்கி ஒன் அப்பாரு வரும்போது நான் ஒன் வூட்டிலே இருப்பேன். சாராயம் குடிக்கவும் தெரியணும்டா பாவி. ஒன் புள்ளகிட்ட படி அப்புடீன்னு சொல்லப்போறேன்” அப்புடீன்னாரு.

இன்னிக்கும் கூட பசுமையா நெனவுலே இருக்கிற அந்த அனுபவத்தாலே நான் படிச்ச பாடம் எதுன்னு இந்த கட்டுரைக்குத் தலைப்புக் கொடுத்திருக்கேன். பாத்துக்குங்க!

வெறும் விதண்டா வாதம் செய்றவங்களுக்கும் புதுசா விவாதங்களிலே ஈடுபட இருக்கிறவங்களுக்கும் இது உதவுமா? அப்படித்தான் நான் நெனக்கிறேன். நீங்க?

அடுத்தவாட்டி நான் சொல்லப்போற தலைப்பு என்ன தெரியுமா?

நீ முன்னால போ நான் பின்னால வர்றேன்.

ஏன் எதுக்கன்னு கேட்காதீங்க படிச்சுப்பாருங்க.

குறிப்பு: இத மொத வாட்டி போட்ட „பூவரசு“ பத்திரிக்கைக்கு நன்றிங்க. அதிலேதான் மொதமொதல்ல எழுதி எழுத்து வட்டத்துக்குள்ளாற நொழைஞ்சேன். செர்மனியிலே இருக்கிறதாலே செர்மனிலயும் சொல்லிக்கிறேன். ஃபீலன் டங்க்.

அடுத்த வாட்டி சந்திக்கிற வரைக்கும் அன்பொடே வெடை பெத்துக்கிறது,

ஒங்க,
அப்பாசாமி.
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree