தமிழ் கூறும் நல் உலகம்

09 ஜூன் 2009
ஆசிரியர்: 

   

கொழும்பிலுள்ள அந்த மகளிர் கல்லூரிக்கு முன்னால் நின்று கொணடு நேரத்தை அடிக்கடி சரி பார்த்துக் கொண்டான் வருணன். அருகில் உலாவும் ராணுவத்தினரின் கண்களை அவன் தவிர்க்க முனைந்தான். நீண்ட நேரமாகவே அவன் அங்கு நிற்பதை அவர்களும் கல்லூரிக்கு வரும் பலரும் ஒரு மாதிரியாகவே பார்த்தனர். யாருக்கோ அல்லது எதுக்கோ வலை வீசியபடியே பெண்கள் கல்லூரிக்கு முன்பாகத் தவமிருக்கிறான் என்று தான் அவர்கள் நினைத்திருக்கக் கூடும். வாசல் கதவை காரணமின்றி இறுகச் சாத்திக் கொண்டான் காவலாளி.

பதினைந்த வருடங்களுக்குப் பின்பான அவனது கொழும்பு அநுபவம் அது. காரணம் புரியாத அச்சம் அவன் மனதிலே வந்து குந்தி இருந்து கொண்டது. சரியாக காலை பத்துமணி என்பதை கடிகாரம் சொல்லியது. நேரம் சரியென நினைத்ததும் வாசல் காவலனை நோக்கி நடந்தான். அவனாக எதுவும் பேச முன்னரே 'மொக்கத்த …? ஓ இன்னா வேணும்?' என்று காவலாளி கேட்டான். எந்தக் கனிவுமில்லாத ஒரு கேள்வியாகவே அது இருந்தது. அவன் கேட்ட கேள்வியும் பார்வையும் ஒருவித அதிர்ச்சியையே தந்தது. வருணன் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. தமிழ்ப் பள்ளியின் வரவேற்பே தமிழில் இல்லை என்றது மனது. சிங்களம் தெரியாத வருணன் தமிழைக் காவலாளியிடமிருந்து காப்பதற்காக ஆங்கிலத்திலேயே பேசினான்.

“பத்துமணிக்கு அதிபர் சந்திக்கச்சொன்னவர்.” என்றான்.

“புள்ளை எதையும் சேறாக்க முடியாது……!” என்றான் காவலாளி. புதிதாக எந்தப் பிள்ளையையும் சேர்க்க முடியாது என்பதையே அவன் சேறாக்கி தெளிக்கிறான் என்பதை வருணன் புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் எடுத்தது.

“அதிபரை சந்திச்சும் வேலை இல்லை” என்றான் அவன.

அதிபர் திருத்திக் கொடுத்தோ என்னவோ அதை மட்டும் சரியாகவே சொன்னான். காவலாளி தந்த அந்த அதிர்ச்சி வைத்தியம் பத்துப் பதினைந்து பேதி மாத்திரைகளை ஒன்றாக விழுங்கியது போல இருந்தது அவனுக்கு. தன்னை ஒருகணம் ஆசுவாசப்படுத்தியவன்,
“நேர கதைச்சு நிலைமையை விளங்கப் படுத்திப் பார்கிறது நல்லது தானே…?'' தமிழிலேயே வருணன் சொன்னான். அவனை ஒருதரம் முறைத்துவிட்டு விண்ணப்பப் பத்திரம் ஒன்றை நீட்டினான் காவலாளி. வாழ்கை வரலாறுகளை அடிமுதல் நுனிவரை ஒட்டுமொத்தமாக கேட்டது அப்படிவம். பல கேள்விகள் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே என்று அடிகுறிப்பு ஒன்று கூறியது. யாருக்கான பாதுகாப்புக்கு என்ற விபரம் எதுவும் அதில் இருக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்ற வருணனின் நினைப்பை கவலாளிக்கு வந்த உள்ளக தொலைபேசி  தடுத்தது. தொ(ல்)லை பேசியை பேசிய பிறகு ஒருவாறு அவனை உள்ளே செல்ல அனுமதித்தான் கவலாளி. அதிபரின் அறைக்குள் நுழைந்தபோது
‘‘மன்னிக்கோணும் அதிபர் முக்கியமான கூட்டத்தில் இருக்கிறார்.’’
சுழல் கதிரையை சுழற்றியபடி அதிபரின் பெண் உதவியாளர் தகவல் தந்தார்.

“மகளுக்கு பள்ளிக்கூடத்திலை ஒரு இடம் கேட்டிருந்தனான்’’ வார்த்தைகளை ஒவ்வொன்றாக கழற்றி வைத்தான். தலைக்கு மேலாக சுழன்று கொண்டிருந்த விசிறியைப் போலவே அவனது நெஞ்சமும் வேகமாக அடித்துக் கொன்டது. என்ன பதில் வரப்போகின்றது என்று உன்னிப்பாக உதவியாளரின் வாயைப் பார்த்தான்.

“இதுக்கு முதல் எந்தப் பள்ளிக்கூடத்தில படிச்சவ உங்கட மகள்?”

எதையாவது கேட்டுத் தொலைக்க வேண்டுமே என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி தான் அது என்பதை அவனால் புரிய முடிந்தது. அதற்கான காரணத்தை அவன்  ஏற்கனவே அதிபருக்கு சொல்லிவிட்டான்.

“ஒரு சில காரணங்களுக்காக யேர்மனியிலை இருந்து திரும்பி வந்திருக்கிறம். எங்கடை பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்கிறத்துக்கு இந்த மகளிர் பள்ளிக்கூடம் ஒரு சிறந்த இடமா இருக்கும் என்று தான் நான் நினைக்கிறன்.”

பதிலுக்கு எதையோ சொல்ல எத்தனிக்கும் போது அவளின் கைத்தொலைபேசி சிணுங்கியது. கத்தும் அவனை விட சிணுங்கும் கைத்தொலைபேசிக்கு அதிக கவனம் செலுத்திய உதவியாளர் கைப்பேசியை காதிலே பொருத்தியபடி யாருடனோ சிரித்துச் சிரித்து பேசிக்கொன்டாள். தன் சிரித்த முக்தை அவன் பார்ப்பதை விரும்பாமலோ அல்லது இரகசியம் காக்கும் காரணமாகவோ பக்கத்து அறையைத் திறந்து உள்ளே நுழைந்து கதவை தாளிட்டுக் கொண்டாள். கட்டுக்களை அறுத்துக் கொண்ட பழைய நினைவுகள் யேர்மனிக்கு ஓடியது.

அவனது மகள் வான்மதியின் சான்றிதழ்களை எடுத்து வரவேண்டியும் வகுப்பாசிரியரான திருமதி வலன்ரீனாவுக்கு விடை சொல்வதற்காகவும றோசன் பிளர்ச் பாடசாலைக்கு இறுதியாக ஒரு நாள் அவன்  போயிருந்தான்.

அவர்களின் வருகையினை முற்கூட்டியே அறியத் தந்ததினால் பள்ளிக்கூட அதிபர் டிக்மானையும் வலன்ரீனாவைவுயும் இலகுவாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களுக்குள் அங்கே நிலவிய மௌனத்திரையை வலன்ரீனாவே உடைத்தார்.

“குறை நினைக்கக் கூடாது வருணன். விடுமுறைக்குக் கூட இலங்கைக்குப் போகக் கூடாது எண்டு தானே யேர்மன் அரசாங்கம் சொல்லுது. ஏனென்டா அது ஒரு பயங்கரமான நாடு. ஆனா நீங்கள் செய்யிறது ஏன் எண்டு தான் எனக்கு விளங்கேல்லை….  கொஞ்சம் கூடப் பயம் இல்லையா..?”

கண்ணாடியை தலைக்கு மேலே உயர்த்திவிட்டு வருணனின் கண்களை அவள் நேராக ஊடறுத்தாள்.

“உண்மை தான் திருமதி வலன்ரீனா… ஆனாலும் ஒரு சில தனிப்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களுக்காவும் கூடவே வான்மதியின் தாத்தா பாட்டி எல்லாரும் அதே யுத்த பூமியிலை இருக்கிறதாலையும் மிக முக்கியமா எங்கட பண்பாடு பழக்க வழக்கங்களை எல்லாம் என்ர பிள்ளையளுக்கு ஊட்ட வேண்டி இருக்கிறதாலையும்தான் நான் இலங்கைக்கு போறன்.”

“எது எப்பிடியோ ஒரு கெட்டிக்காரப் பிள்ளையை இழக்கிறதிலை எங்களுக்கு கவலை” என்றபடி அவர் முடிக்கவும், அதுவரை அமைதியாக இருந்து கேட்டுக்கொண்டிருந்த அதிபர் டிக்மான் “எப்பவும் இந்தப் பள்ளிக்கூடத்திலை வானதி வந்து படிக்கிறத்துக்கு நாங்கள் ஆர்வமா இருக்கிறம்."

உணர்ச்சிவசப்பட்டவராக இருந்த டிக்மானின் கண்கள் நீரை உதிர்த்தன. அவர்கள் இருவரும் வான்மதியை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தபடி வழி அனுப்பி வைத்தனர். பாடசாலைக் கல்வி என்பது அங்கே வேறுவிதமானது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நட்புக்கலந்த உறவிருக்கும். ஆதலால் தான் மாணவர்களின் உளத்தை ஆராய்ந்து தங்களின் கட்டுப்பாட்டிலே வைத்திருக்கிறார்கள். குரு சீடன் எனும் நிலை மாறி நண்பர்கள் என்ற வட்டம் அங்கே கட்டப்படுகிறது.

கதவு திறக்கும் ஓசை கேட்டது. சிரித்த மிச்சம் முகத்தில் இருக்க உள்ளே நுழைந்தார் கொழும்பு மகளிர் கல்லூரின் உதவியாளர். “வருணன் உங்கட தமிழ்ப் பற்றையும் பண்பாட்டிலை நீங்கள் கொண்டிருக்கிற ஆர்வத்தையும் நான் பாராட்டிறன். ஆனால் பள்ளிக்கூடத்திலை தான் இட நெருக்கடி.”

இடம் கிடையாது என்பதற்கான பீடிகைதான் அதுவென்று வருணனுக்கு விளங்கியது. ஏதோ கூட்டத்தில் கலந்து கொள்வதாக சொல்லப்பட்ட அதிபரை ஏனோ இன்னும்  காணவேயில்லை.

“ஒரு விசயம் அம்மணி வெளியூரில இல்லாத படிப்போ இல்லாட்டி கொழும்பிலை இருக்கிற சர்வதேசப் பாடசாலைகளிலை இடம் எடுக்க முடியேல்லை என்டோ நான் இங்கை வரேல்லை.”
வார்த்தைகளைக கொஞ்சம் கடுமையாக்கினான் வருணன்.

“எதுக்கும் உங்கட தொலைபேசி இலக்கத்தை தாங்கோ இடம் கிடைச்சா தகவல் தாறம்" என்றார் உதவியாளர். சரி இப்ப நீங்கள் போறது நல்லது என்பது போன்றிருந்தது அந்த சமாளிப்புக் கேள்வி.

“அது மட்டும் பிள்ளை பள்ளிக் கூடம் போகாமல் வீட்டிலையோ குந்தி இருக்கிறது” என்று கேட்டவன் இனியும் இங்கிருப்பதில் பயனில்லை என்பதனால் நன்றி கூறி வெளியேறினான். இவனுக்காகவே காத்திருந்தவன் போல வாயில் காவலன் இவன் காதருகினில் வந்து குசுகுசுத்தான்.

“இரண்டு இலட்சம் தாங்க….. நாளைக்கே இடம் என்றான்.”

நல்ல காவலாளி நல்ல நிர்வாகம் பாவம் சனம் என்றது மனம். பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க நினைத்த பண்பாடுகளில் ஒன்றை கொழும்பின் மகளிர் பாடசாலை ஒன்று அவனுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டது எனும் நினைப்போடு வெள்ளவத்தை தெருவிலே வாகன நெரிசலுக்குள் மகளோடு கரைந்து போனான் வருணன். போர் மட்டுமா எம்மை அழிக்கிறது?!
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree