தேவகண்ணி

06 டிசம்பர் 2008
ஆசிரியர்: 

   

நம்ப முடியாத உண்மைக்கதை
கேட்டு   எழுதியவர்:-அங்கயற்பிரியன்


னமோ ஒரு இருப்பிலில்லாது ஊரிலிருந்தே கதைத்துப் பேசிச் சிரித்த எனது நீண்ட காலத் தோழியான  கயற்செல்வியின்  வீட்டையே  சுற்றிச்சுற்றி வந்தது. கயற்செல்வி தனது  கணவர் பிள்ளைகள் மூன்றுடனும் ஜேர்மனிக்கு வந்து கிட்டத்தட்ட இருபத்தைந்து  வருடங்களாகிவிட்டன. கயற்செல்வி  சுடுதண்ணிப் போத்தலில் இஞ்சி இடிச்சுப் போட்டுத்தந்த கோப்பியை வார்த்துக் குடிக்கத் தொடங்கினேன்.

கோப்பியின்  ருசியும்,  அதன்  வாசனையும் மனதிற்கு இதமாக இருந்தது. எனது தோழியுடன் அடிக்கடி தொலைபேசியில்  மட்டுமே கதைத்துக் கொண்டிருந்த எனக்கு அவளைப் பார்த்து ஊரில்  அவளுடன் கதைத்துச் சிரித்த நாட்களை நினைத்துப்  பகிர்ந்து  கொள்ள வேண்டும்  என்ற ஆவலில் மூன்று நாட்கள் விடுமுறையில்  அவள் வீட்டுக்குப் போயிருந்தேன். முதலில் எனது  கணவர் பிள்ளைகளுடன் குடும்பமாக கயற்செல்வியின் வீட்டுக்குப் போவதாகவிருந்தோம். கணவருக்கு வேலைத்தலத்தில் விடுமுறை கொடுக்க மறுத்துவிட்டார்கள். பிள்ளைகளும் பரீட்சைக்குப் படிக்க வேண்டும் வர நேரமில்லையென்று சொல்லிவிட்டார்கள். இப்பொழுது தனியாகப் போட்டு வா இன்னொரு சந்தர்ப்பத்தில் எல்லாரும் சேரந்து  போவம் என்று கணவர் சொல்ல, நான் தனியாக தோழியின்  வீட்டுக்கு புறப்பட்டுச்  சென்றுவிட்டேன்.

கிட்டத்தட்ட மாலை நாலரை மணிக்கு தோழி வாழும் நகரத்தை புகையிரதம் சென்றடைய, அங்கே எனக்காகக் காத்திருந்த என் தோழியும் அவள் கணவரும் வரவேற்று தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். தோழியின் வீட்டில்  கழித்த நாட்களின் ஒவ்வொரு விநாடிப்பொழுதும் பசுமரத்தாணிபோல் என்  மனதில்  பதிந்துவிட்டன. காற்றைப்போல் என்னுள் பரவி நின்றன.


நினைவுகள் பின்னோக்கி  நகர்ந்தன. புகையிரதம் ஏதோ ஒரு புகையிரத நிலையத்தில் நின்றது. அது எந்தப் புகையிரத நிலையம் என்று  அறிந்து கொள்ள  வேண்டும் என்ற ஆவல்  எனக்கு ஏற்படவில்லை. என் மனதிற்குள் தோழியின் வீட்டு நிலவரம் அலை அலையாய் வந்து  கொண்டிருந்தது.


தோழியின் வீட்டில்  அவளது  மூன்றாவது பிள்ளையான நிவேதா வணக்கம் சொல்லி வரவேற்றாள். சிறிது நேரம் எங்களுடன் கதைத்ததன் பின்பு அவள் படிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு தனது அறைக்குள்  சென்றுவிட்டாள். மூத்த மகன்  திருமணம் செய்து கொண்டு பிராங்பேர்ட்டில் வேலை செய்வதாகவும் இரண்டாவது  மகன்  வேலை விடயமாக சீனாவுக்குப் போயிருப்பதாகவும் தோழி சொன்னாள்.

கூடத்தில் நானும் தோழியின் கணவரான பரணிதாசனும்  கதைத்துக் கொண்டிருந்தோம். பிராயாணம் பற்றிக் கேட்டார். எனது  கணவரை பற்றிக் கேட்டார். ஊரிலிருந்தபோது நாங்கள் இரு குடும்பமும் படம் பார்க்கப் போனதை ஞாபகப்படுத்தினார். எங்கள் பிள்ளைகளின் படிப்பைப் பற்றிக் கேட்டார். ஜேர்மன் அரசியல், உலக  அரசியல், எமது  நாட்டரசியல் என்று பல திக்குகளிலும் அவர்  பேச்சிருந்தது. அப்பொழுது கோப்பிக் கையுடன் வந்த  கயற்செல்வி,

"ஈசு இந்தா கோப்பியைக் குடி நான் தோசை சுடப் போறன். இரண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருங்கோ„ என்று சொல்லியபடியே சமையலறைக்குள்ளிருந்து இரண்டு கோப்பி கோப்பைகளுடன் வந்த கயற்செல்வி ,ஒன்றை  எனக்கும், மற்றதை தனது கணவருக்கும் கொடுத்தாள். ஈஸ்வரவல்லி என்ற எனது பெயரைச் சுருக்கி எப்பொழுதும் ஈசு என்றே என் தோழி கூப்பிடுவாள்.
------------------------

முட்டைத் தோசை, நல்லெண்ணைத் தோசை, சாதாரண  தோசை  உருளைக்கிழங்குப்  பிரட்டல், சம்பல், சாம்பார் எனச் சாப்பாட்டு மேசையில் கொண்டு வந்து வைத்தாள் என் தோழி. போதாக்  குறைக்கு கடலை வடையும் சுட்டிருந்தாள். நான் பிரமித்துப் போனேன். “என்ன கயல் இதெல்லாம் ஏன் நிறையச் செய்தனி“ என்று நான் கேட்க,- „எத்தனையோ வருசத்துக்குப் பிறகு சந்திக்கிறம் நீ பேசாமல்  இரு“ என்ற அவள், மகள் இருந்த அறைப்பக்கம் திரும்பி, “பிள்ளை சாப்பிட வாறியா„ என்றாள். விதம்விதமான தோசைகளையும், உருளைக்கிழங்குப் பிரட்டல், சம்பல், சாம்பாரைப் பார்த்தவுடன் எனக்குப் பசிக்கத் தொடங்கிவிட்டது.

theevakanni 3நான், தோழி கயல், தோழியின் கணவர் பரணிதாசன், மகள் நிவேதா ஒன்றாக உட்கார்ந்து, வெள்ளித்தட்டில் அவரவர்க்குத்  தேவையான தோசையை எடுத்துப் போட்டுச் சாப்பிடத் தொடங்கினோம். தோழியின் கணவர்  தோசையின் நடுவே கொஞ்ச உருளைக் கிழங்குப் பிரட்டல் கறியைப் போட்டு, அதற்கு மேல் சம்பலைத் தூவி  பின் தோசையைச் சுருட்டி, சிறுசிறு  துண்டுகளாகப் பிய்த்தெடுத்து சாம்பாரில் தோய்த்தெடுத்துச் சாப்பிட்ட விதம் மிகவும் அழகாயிருந்தது. அவருடைய நடை, உடை பாவனை எல்லாமே வித்தியாசமாயும் மற்றவர்களால்  விரும்பப்படக்கூடிய விதமாயும் இருந்தன.  நிவேதா தான் படிக்கும் துறைபற்றி விளக்கமாகச் சொன்னாள். சாப்பிட்டு முடிந்ததும் நிவேதா தனது அறைக்குப் போய்விட்டாள். நாங்கள் மூவரும் சாப்பிட்டு முடித்ததும் சோபாவில் வந்து உட்கார்ந்து கொண்டோம். ஏற்கனவே ஊற்றி வைத்த ஏலக்காய், இஞ்சி போட்ட கோப்பியை இரசித்து குடித்தபடி மூவரும் கதைத்துக் கொண்டிருந்தோம்.


நானும் கயலும் பாடசாலை நாட்களில் பங்குபற்றிய கூடைப்பந்தாட்டப் போட்டிகள் பற்றியும், பாடசாலை நாட்கள் பற்றியும் வினோத உடைப் போட்டியில் கயல் தொடர்ந்தும் ஐந்து வருடங்களாக முதலாம் இடத்தையே வென்றதைப்  பற்றியும் நினைவுக்கு கொண்டு வந்து மகிழ்ந்தோம். குடும்பம், சினிமா, உணவு  முறை, இலக்கியம், ஜேர்மனியில் தமிழ்ப் பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் பெற்றோரின் கவனமின்மை போன்றவை எமது பேச்சில் வந்து போயின. தோழியின் கணவர் ஒவ்வொரு விடயத்திலும் யதார்த்தமாகவும் எவ்வித பூசிமெழுகல் இல்லாமலும், நாக்கில் பொய் இல்லாமலும் விளக்கமாகப்  பேசினார். அவருடைய நேர்மை அவர்  மீது எனக்கு பெரும் மதிப்பை  ஏற்படுத்தியது.

பேச்சின் நடுவே தோழியின் கணவர் „பெற்றோருக்கு ஏழு வருடங்களக்குப் பிறகு பிறக்கும்  பிள்ளை ஒன்று தனது முற்பிறப்பை அறியக்கூடிய ஞானத்தைப் பெற்றிருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா“ என்று திடீரெனக் கேட்டார். “நானும் இதனை கேள்விப்பட்டிருக்கின்றேன். இது உண்மைதான்“ என்றேன். அவர் அப்படிக்  கேட்டதற்கான காரணத்தை பின்னர் அவர் மூலமே அறிந்து கொண்டேன். அவர் அதிகாலை நாலு மணிக்கு வேலைக்கு போவதற்கு நித்திரையை விட்டெழ வேண்டும் என்பதால், “போய்ப் படுங்கோ நாலு மணிக்கு எழும்ப வேண்டும்“ என்று மனைவி சொல்ல, “பரவாயில்லை“ என்று கொஞ்ச நேரம் இருந்தவரை நித்திரை கண்களைச் சுழற்றவே பரணிதாசன் படுக்கப் போய்விட்டார்.

கணவர் போனதும் கூடத்துக் கதவைச் சாத்திய கயல் “ஈசு உன்னை ஒன்று கேட்பன் பொய் சொல்லாமல் உண்மை சொல்ல  வேண்டும்“ என்றாள்.

நான் வியப்புடன் என்ன என்பதுபோல் பார்த்தேன். “முந்தின பிறப்பில் ஒரு பெண் புருசனுடன் கோபித்துக் கொண்டு நெருப்பு மூட்டி தற்கொலை போது “அடுத்த பிறப்பில் என்னை அழகில்லை என்று சொன்ன இதே உடலோடு பிறந்து என்னை அழகி என்று உங்கள் வாயால் சொல்ல வைத்து. என்னைப் பார்த்து நாளிலும் பொழுதிலும் துடிக்க வைத்து உங்களுடனேயே இறப்பேன் என்று சபதம் செய்தால் அது நடக்குமா“ என்றாள்.

நான் வியப்புடனும், அதிர்ச்சியுடனும் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாள் என்று எண்ணிக் கொண்டே “கற்புள்ள பெண் சபதமிட்டு இறந்தால் அவள் மீண்டும் பிறப்பாள்“ என்றேன்.

கயல் கதையைச் சொல்லத் தொடங்கினாள். “என்ரை புருசனுக்கும், எங்கடை நகரத்திலை இருக்கிற தேவகண்ணி  என்ற பெண்ணுக்கும் முற்பிறப்புத் தொடர்பு இருப்பதாகவும். இந்த உண்மையை 2002ஆம் ஆண்டு நோர்வேயிலிருந்து வந்த தங்கை அவற்றை தனக்குச் சொன்னதாக ஒரு நாள் தொலைபேசியில் பிராங்பேர்ட்டில் இருக்கும் என்ரை தங்கச்சிக்குத் தொலைபேசியில் சொன்னார். இவர் தொலைபேசியில் சொல்லும்போது பிள்ளையும், இரண்டாவது மகனும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவர், என்ரை ஆன்ஸ்பேர்க்கிலையிருக்கிற இன்னொரு தங்கச்சிக்கும் சொல்லியிருக்கின்றார். முதலில் எனக்கு அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது. ஆனால் அவர் சொன்னதை நம்புகிறேன். தேவகண்ணியும் இவரும் காதலர்களாகவோ கணவன் மனைவியாகவோ முற்பிறப்பில இருந்திருக்கிறார்கள் என்பதை முழுமையாக நம்புகிறேன்“ என்றாள்.

"கயல்  நீ நம்புவதை அந்தப் பெண்ணுக்கு தெரியப்படுத்தியிருக்கியா“  என்றேன்.
"இல்லை“  என்றாள் அவள்.

"பிள்ளைகள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையா“ என்றேன்.
"இல்லை“ என்றாள் அவள்.

“பிறகு என்ன நடந்தது“ என்று கேட்டேன்.
“என்ரை மனுசன் எப்பொழுதும் எழுந்தமானத்துக்கு கதைப்பவர் அல்ல. ஒரு விடயத்தைப்  பற்றி நீண்ட கால அவதானம் இவரிடம் இருக்கும். ஒரு பெண்ணைப் பற்றியோ, ஒரு ஆணைப் பற்றியோ தனது கருத்தைச் சொன்னால்; நூறு வீதம் உண்மையாகவே இருக்கும். என்னைப் போல் யாரையும் அவசரப்பட்டு நல்லவர் என்று சொல்ல மாட்டார். எதையும் உடனடியாக நம்பமாட்டார்.

அப்படிப்பட்டவர் துணிவோடு இதைச் சொன்னதும் நானும் யோசிக்கத் தொடங்கினேன். இவ்வளவு வெளிப்படையாக சொன்னதனால் இது உண்மைதானா என்பதை அறிய வேண்டும் என்று முடிவெடுத்து அம்மன் கோவிலுக்குப் போய்,அங்கு, இந்தியாவிலிருந்து வந்த ஜோசியரிடம் போனோம். அவர் உட்காரச் சொல்லி, இவரின் கையைக் காட்டச் சொன்னார். .இவர் மறுத்து இவவுக்குப் பாருங்கோ என்றார் .பல விடயங்களைச் சொன்னார். பிள்ளைகள் பற்றிய விபரங்களைச் சொன்னார். எல்லாம் உண்மையாகவே இருந்தது. ஒவ்வொரு முறையும் சோகியை உருட்டிப் போட்டுச் சொன்னார்.

இறுதியில் “அம்மா உங்க கணவருக்கு இரண்டு தாரம், ஆனால் உங்க கணவர் உங்ககூடத்தான் இருப்பார். உங்களைவிட்டுப் போகமாட்டார். அவருடைய  இரண்டாவது தாரம் உங்க பார்வையிலேயே இருக்கிறார். அவளையும் தன் மனதில் வைத்திருக்கிறார். உங்க கணவருடைய மனம் தூய்மையானது” என்றார். இவரைத் திரும்பிப் பார்த்தேன். சலனமற்று இருந்தார். என்ரை மனுசன் சொன்னது போல் எங்கள் நகரத்திலிருக்கும் தேவகண்ணிதான், முற்பிறப்பில் இவருக்காக வாழ்ந்து மறுபிறப்பெடுத்து இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பவள் என்பதை முழுமையாக நம்பினேன். ஆனால் நான் நம்பியதை என்ரை மனுசனுக்கு காட்டிக் கொள்ளவில்லை.”

கயலின் கணவர் நீர்கொழும்பு அம்மன் கோயிலில் சந்தித்த சித்தர் முற்பிறப்புப் பற்றி சொன்னதிலிருந்து இன்றுவரை தனது கணவருக்கும் தேவகண்ணிக்கும் உள்ள விடயங்கள் அத்தனையையும் சொல்லி முடித்தாள். நான் வியப்புடன் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதிகாலை மூன்று மணியாகிவிட்டது. அவளிடம் கேட்டேன் ”தேவகண்ணி எப்படிப்பட்டவா” என்று. ”அருமையான பிள்ளை, உத்தமி, ராங்கிக்காரி. ஒரு  ஆம்பிளையும் வாலாட்ட முடியாது அவளிடம்” என்றாள் கயல். ”உன்ரை மனுசன் எப்படிப்பட்டவர்” என்று கேட்டேன். அவர் உயர்வான குணம் கொண்டவர் ஒரு உதாரணம் சொல்கிறேன். கல்யாணம் செய்து இத்தனை வருடங்களாகிவிட்டன, அங்கேயும் சரி இங்கேயும் சரி என்ரை உடுப்புக்களை நான் தோய்த்ததே கிடையாது. எல்லாவற்றையும் அவரே தோய்ப்பார், வீட்டு வேலைகளில் எனக்கு உதவி செய்வார். கல்யாணம் செய்து இத்தனை வருசமாச்சு அவரைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தன்னைப் புரிந்து கொண்டவர்கள் நான்கு பேர் என்று அடிக்கடி சொல்வார். அந்த நான்கு பேர் அக்கா, தங்கச்சி, மருமகள,;  இன்னும் ஒரு ஆள் என்பார். ஒரு ஆள் என்று தேவகண்ணியைத்தான் அவர் சொல்கிறார் என்று தெரிந்தாலும் நான் அதைக் காட்டிக் கொள்வதில்லை. பிள்ளைகளுக்கு சொல்வார், அம்மாதான் இந்த வீட்டிலை செல்லம். என்னைப்பற்றி அக்கறைப்பட வேண்டாம். அம்மாவின் மனம் நோகாமல் நடவுங்கோ என்பார்.”

கயல் சொல்லி முடித்ததும் நான் ”தேவகண்ணியும் உத்தமி என்கிறாய், உன்ரை மனுசனும் கண்ணியமானவர் என்கிறாய். பிறகேன் பயப்படுகிறாய்” என்று கேட்டன்.

அதற்கு அவள் ”பயமொன்றுமில்லை…..” என்று இழுத்தாள்.

“அதுசரி தேவகண்ணியும் உன்ரை மனுசனும் பழகும் விதம் எப்படி“ என்று கேட்டேன்.

“தேவகண்ணி இவருடன் கனிவாகவே பழகுவாள். இவரை மம்ஸ் என்றுதான் அழைப்பாள். ஏதோ போகிற போக்கில் அழைப்பதாக அந்தக்குரல் இருக்காது. தேவகண்ணியின் அடிமனதிலிருந்து வருவதாகவேயிருக்கும். முற்பிறப்பில் இருவரும் பிராமண குலத்தில் பிறந்தவர்களாம், பிராமண சமூகத்தில் அக்காளின் மகளை கல்யாணம் செய்யும் வழமையும் உண்டு. தேவகண்ணி இவரின் அக்காளின் மகளாகவிருந்திருக்கிறாள். தன் மாமனையே கல்யாணம் செய்யவதாகவிருந்து ஏமாற்றப்பட்டவளாதலால். அப்பாழுது இவரை அழைத்ததைத்தான் இப்பொழுது மம்ஸ் என்றழைப்பதாககக் கருதுகிறேன். இவரைப்பற்றி தேவகண்ணியிடம் யாராவது குறைவாகக் கதைத்தால் கோபப்படுவாள். ஒருமுறை என்னிடம்கூட ”என்ரை மம்ஸைப் பற்றி யாருமே குறைவாகக் கதைக்கக்கூடாது. அவர் என்னுடைய மம்ஸ”; என்று. நான்கூட சிலவேளைகளில் தேவகண்ணிக்கு இவர்மீது ஏன் இவ்வளவு அக்கறை“ என்று நினைத்ததுண்டு.

கயல் விபரமாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். எனக்கு தேவகண்ணியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. கயலுக்கிருக்கும் மனநிலையில் தேவகண்ணியின் வீட்டுக்கு என்னை அழைத்துப் போகும்படி கேட்க முடியாதென்பதால் பேசாமலிருந்துவிட்டேன். ஆனால் தேவகண்ணியைச் சந்திக்க வேண்டும்  என்ற ஆர்வம் குறையவில்லை. நித்திரை இமைகளை அழுத்தவே நித்திரை கொள்ளச் சென்றுவிட்டேன்.

அடுத்தநாள் நேரம் தாழ்த்தியே நித்திரையை விட்டெழுந்தேன். முதல்நாள் நித்திரை கொள்ளப் போன  நேரம். அதிகாலை நான்கு. ஆறுதலாய் எழும்பு என்று கயலும் சொல்லியிருந்தாள். நான் காலை எட்டு மணிக்கே முழித்துவிட்டாலும். படுக்கையை விட்டெழும்பாமல் தேவகண்ணியை எப்படிச் சந்திக்கலாம் என்று எண்ணியபடி படுத்திருந்தேன். காலைச் சாப்பாடு மத்தியானச் சாப்பாடு என்று எல்லாம் முடிந்துவிட்டது. நாளும் மாலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுமார் மூன்றரை மணியிருக்கும் வீட்டு மணி அடிக்கவே கயல் கதவைத் திறந்தாள். நான் கூடத்துச் சோபாவிலேயே உட்கார்ந்திருந்தேன். கயல் கூடத்துக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர,பின்னால் ஒரு பெண் வந்து கொண்டுடிருந்தாள். கயல் கண்களால் சமிக்ஞை செய்ய,நான் புரிந்து கொண்டேன் தேவகண்ணி இவள்தான் என்று.

தேவகண்ணி ”வணக்கம் கனகாலத்துப் பிறகு சினேகிதியைச் சந்திக்க வந்திருக்கிறியள் போலவிருக்குது” என்றாள். நாhன் “ஓம்” என்று சொல்லித் தலையாட்டினே;. இதற்கிடையில் கயல் ”நீங்கள் இரண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருங்கோ நான் தேவிக்கு தேநீர் போட்டுக்கொண்டு வாறன்” என்று எழுந்தாள். ”செல்வி அக்கா நீங்கள் இருங்கள் நான் போய்ப் போட்டுக்கொண்டு வாறன்” என்று சொல்லியபடியே தேவி சமையலறையை நோக்கிப் போனாள் தேவி. ”தேவி சுடுதண்ணி கேத்தலுக்கிளை இருக்குது” என்று கயல். எனக்கு ஏற்கனவே கயல் தேநீர் போட்டுத் தந்திருந்தாள். குடித்து முடித்த கோப்பையை வைப்பதற்காக சமையலறைக்குள் போனேன். அங்கே தேநீரைப் போட்டு வைத்துவிட்டு ஒரு சிறிய பிளாஸ்ரிக் வாளியிலிருந்து பகோடவை எடுத்து ஒரு கோப்பைக்குள் போட்டுக் கொண்டிருந்தாள்.

“உங்கடை வீடு மாதிரி எடுக்கிறியள்” என்று தேவகண்ணியைப் பார்த்துக் கேட்க ”வீடு மாதிரியல்ல இது என்ரை  வீடுதான். இங்கே எந்தெந்தப் பொருள் எங்கே  இருக்கிறது என்று எனக்கும் தெரியும். இந்த வீட்டிலை இருக்கிற பொருள்கள் எங்கடை வீட்டிலையும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்“ என்றாள்.” இந்த  வீட்டிலை இருக்கிற எல்லாப் பொருட்களிலும் உரிமை கொண்டாடுற மாதிரி இங்கை இருக்கிற ஆட்களிலையும் உரிமை கொண்டாடுவீர்கள் என்று நினைக்கிறன்” என்று நான் கேட்க, தேவகண்ணி “அப்படித்தான்” என்றாள்.

நான் தேவகண்ணியின் மனநிலையை அறிவதிலேயே குறியாக இருந்தேன். ”இந்த வீட்டிலை இருக்கிறவையளிலை யாரிலை உங்களுக்கு அக்கறையும் அன்பும் உண்டென்று ” கேட்க. மெதுவாக, மெல்லிய குரலில் ”மம்ஸிலை, அவரிலை  அக்கறைக்கும் அன்புக்கும் மேலாக…….” என்று சொல்ல வந்ததை சொல்லி முடிக்காமலேயே நிறுத்தினாள்.

கயல் சமையலறைக்குள் வருவதும் போவதுமாக இருந்தாள். நாங்கள் கதைத்துக் கொண்டிருப்பது அவள் காதில் விழுந்தாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவே இல்லை. சிறிது நேரம் இருந்த தேவகண்ணி என்னிடமும்,கயலிடமும் விடைபெற்றுச் சென்றுவிட்டாள். நான் தேவகண்ணியுடன் கதைத்த விடயங்களை கயலிடம் சொல்லவில்லை. சொல்லத் தேவையில்லை என்று நினைத்து பேசாமலிருந்துவிட்டேன்.

அடுத்தாள், காலை, பத்து அல்லது பத்தரை மணிக்கு கடைத் தொகுதி ஒன்றுக்குப் போவதாக இருந்தேன். கயலையும் வருமாறு கேட்டேன். தான் சமைக்க வேண்டும் என்று சொன்ன அவள் விடுமுறையில் நின்ற தனது கணவனை அழைத்துக் கொண்டு போகுமாறு சொன்னாள்.

பத்தரை மணிக்கு நானும் பரணிதாசனும் கடைத் தொகுதிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டோம். காரிலேயே போயிருந்தோம். காரினுள் இன்றைய புதிய திரைப்படப் பாடலைப் போட்டார். ”எனக்குச் சோகமான பாட்டுக்கள் பிடிக்காது. பாட்டுக்கள் படுத்திருக்கிறவனை துள்ளியெழ வைக்க வேண்டும். வேகமாக ஓடுகிறவனை சோரவடைய வைத்து படுக்க வைக்கக் கூடாது” என்றார். ”வித்தியாசமான மனிதர் என்று மனதில் நினைத்துக் கொண்டேன.

ஓவ்வொரு கடைகடையாக பார்த்துக் கொண்டு வந்தோம். சில கடைகளில் எனக்குத் தேவையான உடுப்பக்களையும் பொருட்களையும் வாங்கிக் கொண்டேன். தேவகண்ணிக்கும் கயலின் கணவருக்குமிடையிலுள்ள முற்பிறப்புத் தொடர்புபற்றி முழு விபரத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அவரிடமே கேட்டால் அவர் ஏதாவது நினைப்பாரா?  சொல்லுவாரா?  சொல்லமாட்டாரா என் மனம்  குழம்ப கேட்பதற்கான சூழ்நிலை ஏற்படுமா என்று நினைக்கையில், கயலின் கணவரே “கோப்பி குடிப்போமா” என்று கேட்க நான் “ஓம்” என்று தலையாட்ட நாங்களிருவரும் கோப்பிக் கடையொன்றுக்குள் நுழைந்தோம்.

“நான் இந்தக் கடைத் தொகுதிக்குத் தனியாக வந்தாலும் சரி கயலோடு வந்தாலும் சரி இந்தக் கடையிலைதான் கோப்பி குடிக்கிறனாங்கள். யன்னலோரமாய் உட்கார்ந்து வெளியே பார்த்து இரசித்தபடியே கோப்பி குடிப்பதில் ஒரு மகிழ்ச்சியிருக்கும்“ என்று சொல்லியபடியே அந்தக் கோப்பிக் கடையின் யன்னலோர இருக்கையை நோக்கிப் போன கயலின் கணவர் ”இங்கே உட்காருவோம்” என்று சொல்லியபடியே கதிரையில் உட்கார்ந்தார். நான் அவருக்கு எதிரே இருந்த கதிரையில் உட்கார்நதேன.;

theevakanni 2உட்கார்ந்ததுவிட்டு பின் எழுந்து சென்று இரண்டு கோப்பியும், இரண்டு கேக் துண்டுகளையும் தட்டில் வாங்கி வைத்துக் கொண்டு வந்து மேசையில் வைத்தார். இன்னும் சில மணித்தியாலங்களின் நான் எனது நகரத்துக்குப் புறப்பட வேணும். அதற்கிடையில் எனக்குக் கிடைத்த இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தேவகண்ணிக்கும் இவருக்குமிடையில் உள்ள முற்பிறப்புப் பற்றி கேட்டுவிட வேண்டும் என்று மனம் விரைந்தது.

“உங்களிடம் ஒரு விசயம் கேட்கப் போறேன்” என்று மெல்லப் பேச்சை ஆரம்பித்தேன். தொண்டை கரகரத்தது. நெஞ்சு படபடவென இடித்தது. பரணிதாசன்  என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ என்ற பயத்துடன்  கேள்வியைக் கேட்டுவிட்டு அமைதியாகவிருந்தேன். சில விநாடிகள் அமைதியாகவிருந்த அவர் வாய்விட்டுச் சிரித்தார். சிரிப்பினூடே  “சரி கேளுங்கள்” என்றார்.

குரலைச் சரி செய்வதற்காக ஒரு மிடறு கோப்பியைக் குடித்தேன்.

“உங்களுக்கும் தேவகண்ணிக்குமிடையில் முற்பிறப்பிலேயே தொடர்பிருந்ததாம், கயல் சொன்னாள், அதை எப்படி நீங்கள் அறிந்தனீங்கள்” என்றேன் நான்.

“உண்மைதான், இந்த  உண்மையை அறிய ஒரிரு நாட்கள் எடுக்கவில்லை நாலைந்து வருடங்கள் சென்றன. அதற்கும் மேலாக பல வருடங்களாக தேவகண்ணிக்கும் எனக்குமிடையிலிருந்த முற்பிறப்பு சம்பந்தமான  ஏதோவொரு உணர்தல் இருந்து வந்தது. உதாரணமாக பெரும்பாலும் மலைமுகடுகளை முகில்களின் புகைமூட்டம் மறைத்திருக்கும். மலை முகடுகள் எங்கள் பார்வைக்கு தெரிந்தும் தெரியாமலுமிருக்கும். ஆனால் மலைமுகடு இல்லையென்றே ஆகிவிடாது.


அதுபோலத்தான் சில உண்மைகளும் நினைவுகளும் ஆள்மனதில் பதிந்திருக்கும். சந்தர்ப்பம் வரும் போதும் அதற்கான காலத்தால் தூண்டப்படும் போதும் அவை வெளிவருகின்றன. என்னுடைய விடயமும் அப்படித்தான். 2002 ஆம் ஆண்டில் என்னுடைய தங்கை அதாவது எனது பெரியம்மாவின் மகள் நோர்வேயிலிருந்து யேர்மனியில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தபோது ஒரு நாள் தேவகண்ணி எங்கள் வீPட்டுக்கு வந்திருந்தாள். தேவகண்ணி சமையலறையின் கதவு நிலையைப் பிடித்தபடி நின்றாள். கயல் சமையலறைக்குள் நின்றாள்.
தங்கையும் நானும் சமையலறைக்கு வெளியே நின்றோம். அப்பொழுது தேவகண்ணி சொன்னாள் “உங்களுக்கு தங்கச்சியும் வந்திட்டா சொந்தங்கள் ஒன்றாகிவிட்டியள், நான் பிறத்தியாள்தானே“ என்றாள். நான் உடனே ”ஏன் அப்படிச் சொல்லுறியள் இந்த வீட்டில் கயலுக்கு எவ்வளவு உரிமையிருக்கோ அவ்வளவு உரிமை உங்களுக்கும் இருக்குது” என்றேன். கயலின் முகமும் தங்கையின் மாறியதைக் கவனித்தேன். தேவகண்ணி அன்றைக்கு றோஸ் கலர் கம்பளிச் சட்டை போட்டிருந்தாள். சிறிது நேரத்துக்குப் பின் தேவகண்ணி புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.

பரணிதாசன் கேக்கைச் சாப்பிட்டு பின் கோப்பியைக் குடித்ததன்  பின்பு தொடர்ந்தார். நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். “அடுத்த நாள் கயலுடன் தங்கை தேவகண்ணியின் வீட்டுக்குப் போனாள். போய் வந்ததன் பின்பு நேற்று வந்த அந்த பொம்பிளையின்ரை பேர் என்ன என்று தங்கை  கேட்டாள். நான் ”தேவகண்ணி” என்றேன். தங்கை எதுவுமே சொல்லவில்லை. அடுத்த நாள்  கயல் கடைக்குப் போய்விட்டாள். நானும் தங்கையும் வீட்டிலிருந்தோம். தங்கை
என்னிடம் ”சின்னண்ணை தேவகண்ணி என்ற பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா” என்றாள். ஞாபகமில்லை என்று முற்று முழுதாக மறுக்க முடிலவில்லை. எனென்றால் அந்தப் பெயரை பல  வருடங்களுக்கு முன்பு கேட்டிருக்க வேண்டும் என்று ஆழ்மனம் சொல்லியது.

என் தங்கை பல  வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 1966  ஆண்டு நான் அறிந்து கொண்ட ஒரு விடயத்தைச் சொல்லத் தொடங்கினாள். ஆழ் மனதின் ஆழத்தின் இருப்பில் இருந்த நினைவுகள் மெல்ல மெல்லத் தெரிய வந்தது.

அப்பொழுது நான் நீர்கொழும்பிலுள்ள பெரியம்மா வீட்டில் இருந்தேன். எனக்குத் தெரிந்த எனது  ஊரைச் சேர்ந்த ஒருவர் நீர்கொழும்பில் மருந்துக்கடை வைத்திருந்தார். பொழுது போவதற்காக அந்தக் கடைக்குப் போய்வருவது வழக்கம். அந்தக்காலம் நான் இளந்தாரியாக இருந்த காலம். படிக்கிற காலத்தில் சிறுவனாக இருந்தபோது கடவுள் நம்பிக்கையுள்ளவனாக இருந்தேன். அம்மாவுடன் சேர்ந்து கந்தசஷ்டி விரதத்தை ஐந்து வருசங்களாக பிடிச்சிருக்கிறேன். எனது இளந்தாரிப் பருவத்தில் பொதுவுடைமைக் கொள்கையைக் கடைப்பிடித்தவர்களின் பழக்கம் ஏற்பட்டது. எனது தாய்மாமன், எனது அண்ணன் ஆகியோர் தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆர்வலர்களாக இருந்தார்கள். எனக்கும் அதில் ஈர்ப்பு ஏற்படவே கடவுள் இல்லை கடவுள் எங்கே இருக்கிறார் காட்டுங்கள் பார்ப்போம் என்ற கேள்விகளைக் கேட்டுத் திரிந்தவேளை அது. அந்தக் காலத்திலேதான் ஒருநாள் மருந்துக்கடைக்குப் போய்விட்டு பஸ் தரிப்பு நிலையத்தை நோக்கி போகும் வழியில் இருந்த அம்மன் கோயிலுக்குள் போனேன். எப்படிப் போனேன், ஏன் போனேன் என்பதை இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாகவே இருக்கின்றது.


கோயிலுக்குள் போன நான் ஆதிமூலத்தில் இருந்த அம்மன் விக்கிரத்தை வணங்கிய பின் உண்டியல் மேல் இருந்த விபூதியைப் பூசி சந்தனத்தை போட்டுக் கொண்டு; கோயிலைவிட்டு புறப்பட அடியெடுத்து வைத்தேன்.

அப்பொழுது “நில்” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு தூணோடு தனது முதுகை நேராக வைத்து சப்பாணி கட்டியவாறு தாடி வளர்த்த சித்தர் ஒருவர் சிறு துண்டை மட்டும் இடுப்பில் கட்டியவாறு உட்கார்ந்திருந்தார். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டை வைத்திருந்தார். கண்கள் இரண்டையும்  மூடியவாறு உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்த நான் அவர் என்னைக் கூப்பிட்டிருக்கமாட்டார் என்று நினைத்தக் கொண்டு கோயிலைவிட்டு புறப்படுவதற்காக அவரைப் பார்த்துக் கொண்டே மீண்டும் அடியெடுத்து வைத்தேன்.

“பாவி மகனே உன்னைத்தான் கூப்பிடுகிறேன் நில், இங்கே வா” என்று நான் நின்ற திக்கை நோக்கி கையை நீட்டிக் கூப்பிட்டார் அந்தச் சித்தர். ஏதோ ஒரு உணர்வு அவரை நோக்கி என்னை  இழுத்துச் சென்றது. அவரருகில் சென்ற என்னை கண்களை மூடியவாறே இருந்த அவர் உட்காருமாறு கையால் சைகை காட்டினார். நான் உட்கார்ந்தவுடன் குங்குமத்தை எடுத்து என் நெற்றியில் பூசினார். அப்பொழுதும் கண்கள் இரண்டையும் மூடியவாறே இருந்தார்.

“நீ யாரென்று உனக்குத் தெரியுமா” என்று கேட்க. நான் “தெரியும்” என்று சொல்லி என் பெயரைச் சொன்னேன். மெலிதாகச் சிரித்த அவர் ”இப்பிறவியில் உன்னைப்பற்றிக் கேட்கவில்லை. இப்பிறவியில் உன் தாய் மடிப்பிச்சை எடுத்து உன் உயிரைக் காப்பாற்றிய உன்னை யாரென்று கேட்கவில்லை. முற்பிறப்பில் நீ எப்படியிருந்தாய் என்று உனக்குத் தெரியுமா என்று கேட்க ”தெரியாது” என்று சொன்னேன். நான் அப்படிச் சொன்னவுடன் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தார். .கண்கள் இரண்டிலும் கோபம் இருந்ததா சாந்தம் இருந்ததா என்பதை என்னால் கண்டு கொள்ள முடியவில்லை. கண்களை மூடிக் கொண்ட அவர் ”நீ முற்பிறப்பில் உன்னை நம்பியிருந்தவளை ஏமாற்றி அவளை வயிற்றில் கருவோடு அக்கினியில் எரிந்து சாகச் செய்தவன்.
அந்த உத்தமிதான் உன்னை பிறப்பெடுக்க வைத்தவள். நீ முற்பிறப்பில் பிராமண குலத்தைச் சேர்ந்தவன். உன் அக்காளின் மகள் உன்னில் உயிரையே வைத்திருந்தாள். சிறு உருவமாக இருந்த அவளை கலியாணம் செய்வேன் என்று சொல்லி அவளை உனதாக்கினாய்.....

ஆனால் கலி உன்னைப் பிடிக்க மல்லிகை நிற மைத்துனி ஒருவளை கலியாணம் செய்ய எண்ணியதை அறிந்தவுடன் உன் அக்காளின் மகள் உன்னிடம் வந்து என்னைக் கைவிட வேண்டாம் என்று அழுது கெஞ்சினாள். ஆனால் நீ வேதங்களைப் படித்து முடித்த ஆணவக்காரனாய் “மூஞ்சூறு மாதிரி இருக்கும் உன்னை நான்  கட்டுவேன் என்று எண்ணாதே நீ சொல்லியிருக்கிறாய். கற்புக்கரசியான அவள் உனக்கு முன்னாலேயே விறகுகளைப் போட்டு நெருப்பு மூட்டி அந்த நெருப்புக்குள் குதித்து தன்னை எரித்து எரியும் நெருப்போடு ஆவேசமாக உன்னிடம் வந்து உன் கால்கள் இரண்டையும் கட்டிப் பிடித்தவாறே “என்னை மூஞ்சூறு என்று சொன்னீர்களே, நான் மீண்டும் இதே உருவத்திலேதான் பிறப்பேன். உங்களையும் மீண்டும் பிறக்க வைப்பேன். அடுத்த பிறப்பில் என்னை அறிவீர்கள். என்னை அழகி என்று பலரும் அறியும் வண்ணம் உங்களைச் சொல்ல வைப்பேன்.


அடுத்த பிறப்பில் வாழ்நாள் முழுவதும் என்னையே நினைக்க வைப்பேன். எனக்காக கும்பிட வைப்பேன்.  அடுத்த பிறப்பில் உங்களுக்கு வெள்ளை நிறப் பெண் மனைவியாக வரவே மாட்டாள்.உங்கள் முகத்தை மட்டுமே பார்த்து உங்களுக்காக வாழ்ந்த என் உயிரின் மீது சத்தியம் என்று சொல்லி உன் கால்களைப் பிடித்தவாறே உயிரைவிட்டாள்.

நீ இந்தப் பூவுலகில் எங்கிருந்தாலும் உன்னைத் தேடி வருவாள். உன் தாய்ப்பாசந்தான் உன்னை உயிரோடு வைத்திருக்குது. உனது தாய்க்கு ஏழு வருடத்துக்குப் பின் பிறந்தவன் நீ. அவள் தேவாம்சம் பொருந்தியவள். தேவகண்ணி அவள். நான் சொல்வது பொய் என்று நினைக்கிறாய். கடவுளே இல்லையென்று சொல்லிக் கொண்டு ஆணவக்காரனாய் திரியும் இந்த வயதில் உன்னால் அவளைக் கண்டு கொள்ள முடியாது. உனக்கு ஐம்பது வயதாகும்போது அவளை அறிவாய். நீயும் குடும்பமாய் வாழ்வாய். அவளும் குடும்பமாக வாழ்வாள். அவளை யாரென்று அறிந்தவுடன் போன பிறப்பில் அவளுக்குச் செய்த துரோகத்துக்காக துடியாய்த் துடிப்பாய். அவளுக்காக மனம் வருந்தி கோயில் குளம் என்று திரிவாய். ஊழ்வினை உன்னை விடாது. எழுந்து போ” என்று சொல்லிச் சித்தர் முடித்தார்.

கோயிலைவிட்டு வெளியே வந்த நான் பஸ் தரிப்பு நிலையத்தை நோக்கி மன சஞ்சலத்துடன் போய்க் கொண்டிருந்தேன். சித்தர் சொன்னது பொய்யாயிருக்குமோ, புழுகாயிருக்குமோ என்று என் மனம் எண்ணினாலும் அது உண்மைதான் என்ற எண்ணம் வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. எதையும் அலட்சியப்படுத்தும் இளந்தாரி வயது அது.

பெரியம்மா வீட்டுக்குப் போன நான் அம்மன் கோயிலிருந்த சித்தர் என் முற்பிறப்புப்பற்றிச் சொன்னதைப் பெரியம்மாவிடம் கூறினேன். தங்கையும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். முன் விறாந்தையிலிருந்த பெரியப்பாவும் நான் பெரியம்மாவுக்குக் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தார். எனது பெரியப்பா சாதகம் கை ரேகை நன்றாகப் பார்ப்பார். ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கூறிவிடுபவர். ஆனால் அவர் ஜோசியத்தை தொழிலாகக் கொண்டவர் அல்ல.

நான் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த பெரியப்பா என்னை அழைத்து சித்தர் சொன்னதை விபரமாகக் கூறுமாறு சொன்னார். நான் ஒன்றும் விடாமல் நடந்ததைக் கூறினேன். பெரியப்பா சில விநாடிகள் மௌனமாக இருந்தார். பின்னர் ஒரு பெருமூச்சை விட்டபடி ”சித்தர்மார் சும்மா சொல்லமாட்டார்கள், எல்லாருக்கும் சொல்லவும் மாட்டார்கள். உனக்கு நல்லதுக்குத்தான் சொல்லியிருக்கிறார் எதற்கும் முனீஸ்வரன் கோயிலுக்குப் போய் பூக்கட்டி வைச்சு எடுத்துப் பார் கடவுளின் சித்தம் எதுவாக இருக்கும் என்று தெரிய வரும் என்றார்.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமையானதால் முனீஸ்வரன் கோயிலுக்கு நானும் தங்கையுமாகப் போனோம். சித்தர் சொன்னது பொய்யாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும்,உண்மையாகவே இருந்திடுமோ என்ற பயம் இன்னொரு புறமுமாக முனீஸ்வரன் கோயிலக்குள் போனேன்.
கோயிலுக்குள் நின்ற குருக்களிடம் தங்கை “பூக்கட்டி வைச்சு நினைச்ச காரியம் பார்க்க வேண்டும் ஐயா”  என்றாள். பூசை முடிந்த பின் பார்க்கலாம் என்று குருக்கள் சொன்னார். பூசையைத் தரிசித்துவிட்டு கோயிலின் உள் வீதியைச் சுற்றி வந்தோம். அப்பொழுது தங்கை சொன்னாள் ”வெள்ளைப் ப+வும் சிவப்புப் பூவும் வெற்றிலையிலை கட்டி வைச்சிருப்பினம். சித்தர் சொன்னது உண்மை என்பதற்கு ஒரு நிறத்தையும், பொய் என்பதற்கு இன்னொரு நிறத்தையும் மனதில் நினைத்துக் கொண்டு ஒரு பூச்சரையை மட்டும் எடுங்கோ” என்றாள்.

கொடிக்கம்பத்திற்கு முன்னே குருக்கள் தட்டத்தில் இரண்டு ப+ச்சரைகளுடன் நின்று கொண்டிருந்தார். எங்களிருவருக்கும் நெற்றியில் விபூதியைப் பூசிய பின், ”ஈஸ்வரனை நல்லாய் தியானிச்சு விரும்பியதை நினைச்சுக் கொண்டு ஒரு பூச்சரையை குருக்கள் எடுக்கச் சொன்னார்”.

சித்தர் சொன்னது உண்மை என்றால் வெள்ளைப் பூவும், பொய் என்றால் சிவப்புப் பூவும் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஒரு பூச்சரையை எடுத்தேன். எடுத்ததைப் பிரித்துப் பார்க்கும்படி குருக்கள் சொன்னார்.

நெஞ்சிடியோடு பயத்துடன் நான் எடுத்த பூச்சரையை பிரித்தேன். அதற்குள் வெள்ளைப் பூ இருந்தது. சித்தர் சொன்னது உண்மைதான் என்பதற்கு சாட்சியாக, கடவுளின் சித்தமாக அந்த வெள்ளைப்பூவைப் பார்த்தவுடன். பயத்தில் முகமெல்லாம் வியர்வை பரவத் தொடங்கியது.. சித்தர் சொன்னது உண்மை என்பதற்கு வெள்ளைப் பூவையே நினைத்துக் கொள்வேன் என்று வீதியைச் சுற்றி வரும்போது தங்கையிடம் கூறியிருந்தேன்.

எனது முகம் மாறி வியர்த்ததை தங்கையும், குருக்களும் கவனித்துவிட்டார்கள். தங்கையின் முகமும் கவலையுடன் மாறியது. எங்களிருவரினதும் முகங்கள் மாறியதைக் கவனித்த குருக்கள் ”ஏதாவது பிரச்சனையா, எனக்குச் சொல்ல விரும்பினால் சொல்லலாம், தீர்வுக்கு வழி இருந்தால் சொல்லுவேன்” என்றார். நானும் தங்கையும் சொல்வதற்குத் தயங்கினோம்.

எங்கள் நிலைமையை அறிந்த குருக்கள் எங்கள் இருவரையும் ஓரமாக அழைத்துச் சென்றார். நான் மனக் குழப்பத்துடன் இருந்தபடியால் நான் பேசாமலே இருந்தேன். என் தங்கைதான் நீர்கொழும்பில், நான் அம்மன் கோயிலில் சந்தித்த சித்தர் என் முற்பிறப்புப் பற்றிச் சொன்ன விடயங்களை விபரமாகச் சொன்னாள். குருக்கள் சில விநாடிகள் மௌனமாக என்னையே உற்றுப் பார்த்தார். பிறகு எனது இரு உள்ளங் கைகளையும் காட்டச் சொன்னார். புhர்த்தவுடன் அவர் முகம் மாறியது. சித்தர் முற்பிறப்புப் பற்றிச் சொன்னது சரிதான் என்றார்.

“ஐயா இதற்குப் பரிகாரமே இல்லையா” என்றாள் தங்கை. ”பரிகாரம் எதுவுமே இல்லை. ஏனென்றால் சித்தர் சொன்னதை வைத்துப் பார்த்தால் ஒரு கற்புக்கரசியின் சாபம் பொல்லாதது. இவருக்காக வாழ்ந்த அந்தப் பெண் ஏமாற்றப்பட்டிருப்பதால் மீண்டும் பிறந்து நிச்சயமாக இவரைச் சந்திப்பாள், எதற்கும் வீட்டுக்கு வாருங்கோ சோகி போட்டுப் பார்ப்பம்” என்று குருக்கள் சொன்னார்.
ஏற்கனவே மனக்குழப்பத்தில் நம்பியும் நம்பபாமலும் இருந்த நான் சோகி போட்டுப் பார்ப்பதை விரும்பவில்லை. ”வேண்டாம் தங்கச்சி போவம் வீட்டை“ என்றேன்.

“பேசாமலிருங்கோ குருக்கள் சொல்வதைக் கேட்டுப் பார்ப்பம்“ என்றாள் தங்கை.
நானும் தங்கையும் குருக்களுடன் அவர் வீட்டுக்குப் போனோம். குருக்களின் மனைவி எங்களை வரவேற்றார். ஏற்கனவே எனது தங்கைக்கு குருக்கள் குடும்பத்தைப் பற்றித் தெரியுமாதலால், அக்கா குடும்பம் பெரியம்மா குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். நாங்கள் வந்ததன் நோக்கத்தை அவர் கணவரின் குறிப்பால் உணர்ந்து கொண்டதால் எங்கள் இருவரின் பாதங்களையும் கழுவச் சென்னார். நாங்கள் வீட்டின் பின்புறத்துக்குப் போய் பாதங்களை கழுவிவிட்டு உள்ளே வர எங்கள் இருவரையும் சாமியறைக்குள் போகச் சொன்னார்.

உள்ளே குருக்கள் உட்கார்ந்திருந்தார். எங்களிருவரையும் அவர் முன்னாலிருந்த சிறிய பாயொன்றில் உட்காரச் சொன்னார். உட்காரந்தவுடன் எங்களிருவரின் நெற்றியிலும் விபூதியைப் பூசி அதற்கு மேல் குங்குமத்தைப் பூசிவிட்டார். அவர் பக்கத்தில் பல ஏட்டுச் சுவடிகள் இருந்தன. சோகிகளை கைகளில் எடுத்துப் பொத்திப் பிடித்தபடி நடுநெற்றிக்கு கொண்டு வந்த அவர் கண்களை மூடியபடி தியானித்தார். கண்களைத் திறந்த அவர் தனது கைகளில் இருந்த சோகிகளை எனது வலது உள்ளங் கையில் வைத்து போடும்படி சொன்னார், நான் அவர் சொன்னவாறே செய்தேன். சோகிகள் அங்கும் இங்குமாய் விழுந்து சிதறின. என்னிதயம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. தேவையில்லாத வேலையை என் தங்கை செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.

கவிழ்ந்தும், நிமிர்ந்தும் அங்குமிங்குமாய் கிடந்த சோகிகளை உற்று நோக்கிய குருக்களின் நெற்றி சுருங்கியது. மீண்டும் சோகிகளை ஒன்றாகச் சேர்த்தெடுத்து கைகளில் தந்து போடுமாறு சொன்னார். நானும் குருக்கள் சொன்னவாறே போட்டேன். இப்படியாய் ஒவ்வொரு முறையும் சோகிகளைப் போடப் போட குருக்கள் அவற்றைக் குறித்துக் கொண்டார்.

குருக்கள் தனக்கருகிலிருந்த ஏட்டுச் சுவடிகளில் ஒன்றை எடுத்து என்னிடம் தந்து அதில் ஒரு ஏட்டை எடுக்கச் சொன்னார். கைக்ககப்பட்டதை எடுத்துக் கொடுத்தேன். அப்பொழுதும் என் மனம் இவையெல்லாம் பொய்யென்று நினைக்க, நீண்ட பெருமூச்சொன்றை குருக்கள் விட்டுக்கொண்டே என்னைப் பரிதாபமாகப் பார்த்துச் சிரித்த அவர், ”முற்பிறப்பிலிருந்த ஆணவம் இப்பிறப்பிலும் தொடருகிறது. இங்கிருந்து கொண்டு இவையெல்லாம் பொய்யென்று நினைக்கிறாய்“ என்று சொன்ன அவர் பேசத் தொடங்கினார்.

“சித்தர் சொன்னது எல்லாமே உண்மைதான். இந்தக் காலத்தில் இந்த நாகரீக உலகில்,கூட முற்பிறப்பில் செய்த பாவங்களின் பலனை இப்பிறப்பில் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். முற்பிறப்பில் இவர் பிராமண குலத்தில் பிறந்தவர். கற்க வேண்டிய வேதங்களை கற்று முடித்து ஆணவக்காரணாய் இருந்தவர். பிராமண குல வழக்கப்படி இவரின் அக்காள் மகளில் இவர் ஈடுபாடு காட்டி வந்தார். அவளும் இவரை உயிராக நினைத்தாள். ஆனால் இவர் அவள் அழகில்லை குட்டையானவள் என்ற காரணத்தைக் காட்டி அவளை வெறுக்கத் தொடங்கினார். அவளிடமிருந்து விலகிக் கொள்ளத் தொடங்கினார். இதற்கிடையில் அவளிடம் தனது ஆசையைத் தீர்த்துக் கொண்டார். வெள்ளைவெளேரென்ற இவரது உறவுக்காரப் பெண்ணொருவரைத் திருமணம் செய்யத் தீர்மானித்தார். இதனை அறிந்த இவரது அக்கா மகள் அதிர்ச்சியும் கவலையுமடைந்து இவரிடம் வந்து தன்னை ஏமாற்ற வேண்டாம் எனக் கெஞ்சினாள். ஆனால் இவரோ மூஞ்சூறு மாதிரியிருக்கும் உன்னைப் போய் யாராவது கலியாணம் செய்ய முடியுமா என்று சொல்லிவிட்டார்.”

“ஆனால் இவர், இவரென்று நான் சொல்வது இவரது முற்பிறப்பைப் பற்றித்தான். இறுதியில் அந்தப் பெண் மிகவும் ஆக்கிரோசத்துடன். இவர் முன்னிலையில் முற்றத்தில் தீ மூட்டி அந்த தீக்குள் குதித்தாள். தேல்கள் கருகிய போதும் அவள் கோபம் தீரவில்லை. எரிந்த உடம்புடன் இவர் கால்கள் இரண்டையும் பிடித்தபடி நான் மீண்டும் பிறப்பேன். நான் உங்களுக்காகவே வாழ்ந்தது உண்மையானால் நீங்களும் அடுத்த பிறப்பெடுப்பீர்கள். அந்தப் பிறப்பில் என்னைச் சந்திப்ப்Pர்கள். அடுத்த பிறப்பில் என்னை நினைத்து நினைதது ஏங்குவீர்கள்.” என்று இவரின் கால்களைப் பிடித்தபடி இறந்துவிட்டாள்” என்று குருக்கள் சொல்ல,தங்கை “அண்ணையை எத்தனை வயதில் அவள் சந்திப்பாள்” என்றாள்.

”இவருக்கு ஐம்பது வயதிற்கு மேல். இவர் திருமணம் மனைவி பிள்ளைகளுடன் இருக்கும்போது இவர் அவளைச் சந்திப்பார். அவளும்  திருமணம் செய்து கணவன் பிள்ளைகளுடன் இருக்கும்போதுதான் அவளும் இவளைச் சந்திப்பாள். ஆனால் இவரிடம் ஒரு விதமான அவளையறியாத அக்கறை ஈடுபாடு எல்லாம் காட்டுவாள். ஆனால் இவர் தனது முற்பிறப்பில் தனக்காக வாழ்ந்தவள் என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ந்து கண்டுபிடிப்பார்”.

“எப்படி” - தங்கை.

“இவரின் மனைவி இவர்கள் இரண்டு பேரையும் பார்த்து போன பிறப்பில் நீங்கள் இரண்டு பேரும் புருசன் பெண்சாதியாய் இருந்தனிங்கள் போல இருக்கு என்று பல சந்தர்ப்பங்களில் சொல்வாள். அது சாதரண வார்த்தையல்ல விதியின் வார்த்தை. இவரின் மனைவி இப்படிச் சொன்னதும் ,இவர் தன்னிலையை உணரத் தொடங்குவார்” என்று குருக்கள் சொன்னார்.

என் தங்கையோ இது உண்மையோ பொய்யோ என்பதை அறிவதில் ஆர்வமாக இருந்தாள். ”ஐயா முற்பிறப்பில் அண்ணைக்காக வாழ்ந்தவள் இந்தப்பிறப்பில் என்ன பெயரில் இருப்பாள், அதை அறிய முடியுமா“ எனக் கேட்டாள்.

மீண்டும்  கைகளில் சோகிகளைத் தந்து போடச் சொன்னார், போட்டேன். அங்குமிங்குமாக விழுந்த சோகிகளை கூர்ந்து பார்த்த அவர், பக்கத்திலிருந்த இன்னொரு ஏட்டுக்கட்டை எடுத்துப் பார்த்து ஏதோ குறித்தார். நானும் தங்கையும் ஆவலுடன் என்ன சொல்லப் போகிறார் எனப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒரு தாளில் எழுதிய பெயரைக் காண்பித்தார். அதில் தேவகண்ணி என்ற பெயர் இருந்தது. சில நிமிடங்களில் நானும் தங்கையும் குருக்களின் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டோம்.

குருக்களின் வீட்டைவிட்டு புறப்பட்டு தெருவில் நடக்கும் போதும் இதை நம்பவில்லை. ஆனால் தங்கை நம்பினாள். போகும்போது தேவகண்ணியின் பெயரைச் சொல்லித் திட்டிக் கொண்டே வந்தேன்.

இது உண்மையாயிருக்குமா என நான் அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். காலப்போக்கில் என்னிடமிருந்து முற்பிறப்பு பற்றிய நினைவுகள் மறையத் தொடங்கிவிட்டன. ஆறு மாதங்கள் நீர்கொழும்பிலிருந்துவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன். எப்போதாவது ஒரு நாள் தேவகண்ணி என்ற பெயர் என் மனதிற்குள்ளிருந்து வெளிவரும். பின்னர் போய்விடும்.

பரணிதாசன் சொல்லிக் கொண்டிருந்தார். நான் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன். இடைமறித்துக் கேட்டேன், உங்களுக்கு முற்பிறப்பில் ஒரு பெண்ணுடன் தொடர்பிருந்ததை உணரக்கூடியதாக இருந்ததா” என்று கேட்டேன்.

நோர்வேயில் வைத்து என் தங்கை எங்கள் வீட்டில் சந்தித்த தேவகண்ணிதான் ஈஸ்வரன் கோயில் குருக்கள்  சொன்ன தேவகண்ணி. குடும்பத்தில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் அவளிடம் உரிமை காட்டாதீர்கள்” என்று சொன்னதன் பின்பு நான் ஒவ்வொன்றாக உணரத் தொடங்கினேன்.

“தேவகண்ணிதான் முற்பிறப்பில் உங்களுக்காக எப்படிக் கண்டு பிடித்தீரகள்” என்று நான் கேட்டேன். ”தேவகண்ணியின் வீட்டில் வைத்து, எனக்கும் தேவகண்ணிக்குமிடையில் பல சந்தர்ப்பங்களில் வாக்குவாதம் ஏற்படும். அப்பொழுதெல்லாம்  என் மனைவி சொல்வாள் “நீங்கள் இரண்டு பேரும் போன பிறப்பில் புருசன் பெண்சாதியாய் இருந்தனிங்கள் போல” என்று. ”ஈஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னது உண்மை என்று நம்பினேன். அது மட்டுமல்லாமல் தேவகண்ணி என்னுடன் பல சந்தர்ப்பங்களில் பேசியது எனது சிந்தனையைத் தூண்டியது. ”ஒரு நாள் தேநீர்டி தந்தபோது சுடுது என்று சொன்னேன். அதற்கு அவள் “நெருப்பில் எரிவதைவிட இது சுடாது என்று சொன்னாள். ஒரு நாள் உங்களைப்பற்றியும் தெரியும். உங்கள் முற்பிறப்பைப்பற்றியும் தெரியும் என்றாள். இப்படிப் பல சம்பவங்கள். தேவகண்ணி நல்லாய் இருக்க வேண்டும் என்பதற்காக அம்மன் கோயிலில் பிரதிஸ்டை செய்திருக்கிறேன். போன பிறப்பில் அவள் எனக்காக வாழ்ந்தவள் என்பதை முழுமையாக நம்புகிறேன். தேவகண்ணிக்கும் இப்பொழுது அது தெரியும். அவளுக்காக ஒவ்வொரு நாளும் நான் தியானம் செய்கிறேன்.”

கண்கள் கலங்க பரணிதாசன் சொல்லி முடித்து அமைதியானார். எனக்கு வியப்பாக இருந்தது ஐரோப்பிய சூழல் ஒன்றில் முற்பிறப்புபற்றிய உண்மையை அறிந்து கொண்டது. நானும் நம்புகிறேன் தேவகண்ணிதான் பரணிதாசனின் முற்பிறப்பு மனைவி என்று. புகையிரதம் எனது நகர புகையிரத நிலையத்திற்குப் போய்ச் சேர்ந்தது கூடத் தெரியவில்லை. நம்ப முடியாத உண்மை ஒன்றை நம்பினேன்.
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree