போதி மரம்..

31 அக்டோபர் 2008
ஆசிரியர்: 

   

தி காலைப் பொழுதின் அமைதியைத் துயில் எழுப்பியது அருகில் உள்ள வீடொன்றில் இருந்து வந்த சுப்ரபாதம். காற்றிலே மிதந்த சுப்பரபாதத்துள்ளே கலந்து கரைந்தது அடுத்த தெருவில் உள்ள பெளத்த பன்சலையின் பிரித் மந்திரம்.

பூ மரங்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான் ஆதி என்கிற ஆதித்யன். அவனது குட்டி மகன் வருணனுக்கு பூக்கள் மீது அளவில்லா விருப்பம். குளித்துவிட்டு தலை துவட்டாத குண்டு மல்லிப்பூக்களை பறித்தெடுத்து ஒரு தட்டிலே வைத்துக் கொண்டான்.

தனது குழந்தைக்காக  மரங்களின் குழந்தைகளை சேகரித்துவிட்டு சட்டையை மாட்டிக் கொண்டான். அப்படியே கடைத் தெருவுக்குச் சென்றவன், அன்றைய தினசரிப் பத்திரிகை ஒன்றினை வாங்கிக் கொண்டு வந்து சாய்வு நாற்காலியிலே உட்கார்ந்தான். எறிகணை வீழ்ந்து வெடித்ததால் தனது கால்களில் ஒன்றை இழந்திருந்த ஆதிக்கு நாற்காலியிலே உட்காருவதுதான் வசதியாக இருந்தது.

தினசரிப் பத்திரிகையிலே வருகின்ற செய்திகள் முழுவதையும் சுடச்சுடப் படித்து முடித்துவிடுவதென்பது சிறுவயதில் இருந்தே ஆதிக்கிருக்கும் பழக்கமாகும். இன்றும் அப்படித்தான் தினசரிப் பத்திரிகையினைப் புரட்டியவனின் கண்களிலே பட்ட செய்தி அவனை அதிர்சிக்குள்ளாக்கியது.

இப்பொழுதெல்லாம் செய்தித் தாள்களினைப் புரட்டினால் கைகள் தான் படபடக்கும்.

ஆனால் இந்தச் செய்தியானது அவனுக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல கூடவே ஆபத்தையும் தரப்போகின்ற ஒரு விடயமாகவே மனதுக்குப்பட்டது. அங்கிருந்து எழுந்து அவசர அவசரமாக அறைக்குள்ளே சென்று கோடரியைத் தேடினான். எங்கெல்லாம் தேடியும் கூட அது கிடைக்கவில்லை.

“அவசரத்துக்கெண்டு தேடினா ஆகாயமும் காணக் கிடையாது எண்டது சரியாத்தன் இருக்கு”.

தன்னையும் தான் தேடித்திருந்த கோடரியினையும் திட்டிக் கொண்டான். கட்டிலுக்குக் கீழே இருந்த கோடரியை ஒருவாறு கண்டுபிடித்து கையிலே எடுத்து கூர் பார்த்தான். உடனடியாகவே வீட்டு வாசலுக்கு விரைந்தவன் ஆசை ஆசையாக வளர்த்து வந்த அரச மரத்தை பார்த்து பெருமூச்சொன்றை வெளியேற்றினான் சுற்றும் முற்றும் பார்த்தபடி விழிகளைச் சுழலவிட்டான். யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டவன் பட படவென்று அந்த அரச மரத்தை வெட்டத் தொடங்கினான். மரத்தின் மேலே கூடு கட்டியிருந்த கிளி ஒன்று அந்த மரத்தினைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. தனது இருப்பிடம் பறிக்கப் பட்டதனால் அவனை அது கட்டாயம் சபித்திருக்கும்.
அந்த நேரம் பார்த்து வீட்டு வாசலிலே யாரோ நிற்பது போல இருக்கவே வெளியே எட்டிப் பார்த்தான். ஆதியின் பால்ய காலத்து சினேகிதன் கரன் உள்ளே வந்தான்.

“டேய் என்னடா மச்சான்.. ஏன் இந்த மரத்தை வெட்டுறா.?” குழப்பத்தோடு ஆதியைப்ப பார்த்தான் கரன்.

“இடஞ்சலா இருக்கடா அது தான் வெட்டுறன்.” மூச்சு வாங்கியபடி ஒற்றைக்காலோடு நின்று கொண்டு மரத்தை வெட்டும் ஆதியைப் பார்க்கப் பரிதாபமாகவே இருந்தது.

“மரங்களை நேசிக்கும் நீயா...? இந்த அரச மரமென்ன சாதாரண மரமா.. யப்பானிலை இருந்து கொண்டு வந்த வெள்ளரசு மரத்தையெல்லேடா பைத்தியக்காரத்தனமா வெட்டுறா” கோபித்துக் கொண்டான் கரன்.

“அது தான்.. அது தான் மச்சான் இதை வெட்டக் காரணம். நேற்றுத் திருகோணமலையிலை ஒரு அரச மரத்தாலைதானே பள்ளிக்கூடம் போற ஐந்து தமிழ்ப் பெடியள் செத்துப் போட்டாங்கள். ஒரு இனமுரண்பாடு வாறதுக்கு இந்த மரம் காரணமாகக் கூடாதடா.''

“ஆதெப்பிடி” ஒன்றும் விளங்காதவனாக கரன் கேட்டான்.

“இப்ப மரம் இருக்கும்.. பிறகு அதுக்குக் கீழை போதிமரத்தவனின் சிலை வரும். அப்புறம் கடவுளின் பேராலை மனிதக் கொலைகள்... வேண்டாமெடா.. வேண்டாம்..”. கூறிமுடிக்கும் போது மரமும் முற்றாகத் தறிக்கப் பட்டிருந்தது.

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree