வாசல்தோறும்

23 பிப்ரவரி 2008
ஆசிரியர்: 

 

வானத்தில் முகில் கூட்டங்கள் நிற்பதும் நடப்பதுமாக எதையோ தேடி ஒடியபடி... என் நினைவுகளும் அதுபோல்தான். என் கையைவிட்டு மட்டும் தொலைந்துபோன அற்புதமான அந்த நினைவுகள் என்னுள் எப்போதும் படர்ந்தபடி. அம்மா அடிக்கடி கூறுவா உன்னால ஒருவேலையும் முழுசா செய்ய முடியாது. எந்த வேலையை தொட்டாலும் அரைகுறைதான். அதை படிக்கவேணும் இதை படிக்கவேணுமென்டு எல்லாத்தையும் தொட்டு பார்த்ததோட சரி. நேற்று இந்த ஒன்று கூடலுக்கு போய்வந்ததிலிருந்து என் எண்ணங்களும் அங்கேயும் இங்கேயும் தொட்டுக்கொண்டே இருக்கின்றன.

அங்கு செல்லும்பொழுது சாதாரணமாகத்தான் சென்றேன். ஆனால் அது இவ்வளவு இனிமையான சந்திப்பாக இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. முதலில் அங்கு வந்திருந்த அத்தனை முகங்களும் அன்னியமாய் விலகி நின்றன. பின்பு ஒவ்வொருவராய் அறிமுகம் ஆனபின் 'ஓ அதேசிரிப்பு, அதே கண்கள் ஆனால் உடலால்மட்டும் எல்லோரும் மாறியிருந்தனர். ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கும்பொழுது என்னுள் ஒவ்வொரு கதை எழுந்து கொண்டே இருந்தது. அன்று குழந்தையாய், பருவமடைந்த பெண்ணாய் எவ்வளவு இனிமையான நாட்கள். எத்தனை வருடங்கள் கடந்தாலும் என் மனதைவிட்டு அகலாத அந்தப் பகுதியை என் நினைவுகள் திரும்ப திரும்ப தொட்டுக்கொண்டே இருக்கும். அந்த இனியகாலத்தில் இல்லை என்ற வார்த்தையை நான் கேட்டதே இல்லை. இதனால் என் நட்புகள் என்னை ஏதோ ஒரு வழியில் பழிவாங்கிக்கொண்டே இருப்பார்கள். மழைக்காலங்களில் கான்கான்வைத்து தைச்ச ஓகன்ரி சட்டையை நனைப்பதற்கென்றே மாமரத்தின்கீழ் நிற்கவைத்து அதை ஆட்டி விடுவதும், பின் அதேமரம் எங்கள் வீடாய், இரயில் வண்டியாய், எல்லாமாய் மாறி சமயத்தில் எங்கள் பாவைப்பிள்ளைகளோடு அதன் கீழ்படுத்து நித்திரை கொள்வதும்... அப்போதெல்லாம் பலகைக்கட்டைதான் எங்கள் பிள்ளைகள். அதை குளிக்கவார்ப்பதும், பவுடர் பூசுவதும் கூட்டான் சோறுசமைத்து சாப்பிடுவதும்... ஆனால் ரஞ்சன் ராஜன் ரவி இவர்கள் இந்த விளையாட்டுக்கு மட்டும் எங்களோட சேரவே மாட்டார்கள். கோவில் வைத்திருப்பார்கள், குரும்பை எடுத்து தேர்கட்டி இழுப்பார்கள். பின் நாங்கள் சமைத்த கூட்டான்சோறை சாப்பிடமட்டும் வருவார்கள். ஆண் என்ற அகம்பாவம் அப்போதே அவர்களிடம் ஊறியிருந்தது. ஆனால் இப்போ அதே ரஞ்சன், ராஜன், ரவி தங்கள் பிள்ளைகளுக்கு பால்கொடுப்பதும், நப்கின்மாற்றி விடுவதும் உருவத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் மாறியதுபோல் ஒருதோற்றம். எது மாற்றியிருக்கும் காலமா? இல்லை புலம்பெயர்வாழ்க்கையா, எதுமாற்றியிருக்கும்?

புலம் பெயர் வாழ்வு அவர்களை மட்டுமல்ல என்னையும். இல்லாவிட்டால் கனடாவில் ஓன்று விட்ட அண்ணா உயிரற்று உடல் மட்டும். அதையும் இல்லாமல் அழிக்கும் நேரத்திற்காக காத்து கிடக்கும்பொழுது குழைத்து வைத்த டோனட்ஸ் மா வீணாகிப்போய் விடுமென்று சுட்டுக்கொண்டு இருப்பேனா? என் மகன் என்னைக் கேட்ட கேள்வி டோனட்ஸை எண்ணை சுடுவதைவிட மோசமாக என்னை சுட்டுக்கொண்டே இருந்தது. நான் எப்படி இதை மறந்தேன்? இருபது வருட வாழ்க்கையில் எல்லாவற்றையும் மறந்து போனேனா? அல்லது உறவுகளை தொலைத்த இந்த புலம்பெயர் அவலவாழ்வு எல்லாவற்றையும் மறக்கடித்துவிட்டனவா? எது எதுவென என் மனம் பதிலை தேடியலைந்தது. நானே இப்படி மாறினால் இங்கு வளர்ந்து வரும் அடுத்த சமுதாயம்? கேள்விக்குறி விழிகளின் முன் வளைந்து நின்றது.

எல்லோருடைய குழந்தைகளையும் பார்க்கும்பொழுது சிறுபிராயத்தில் என்னுடன் கைகோர்த்து நின்ற என் நட்புகள் மறுபடியும் சிறுகுழந்தைகளாகியதுபோல் எனக்குள் ஓர் பிரமை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. வாழ்க்கையில் எத்தனையோ விடயங்களை மறக்க முடியாததுபோல் இந்த ஒன்று கூடலையும் என்மனம் பதிவு செய்துவைத்தது. அனைவரும் பிரியும் பொழுது அத்தனை விழிகளிலும் ஏக்கங்கள். இனி அவரவர்கள் தங்கள் தேடலில் மூழ்கி நிஜத்தை மறந்து தம்மை இயந்திரமாக்கி. மறுபடியும் எப்போது என்ற கேள்விக்கு விடையை தேடியபடி அந்த காலத்திற்காக இனி உயிரை கையில்பிடித்தபடி வாழவேண்டும்.

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமென்றால் முதலில் அதன்காலச்சாரத்தை அழியென்று சிங்கள அரசாங்கத்திற்கு யார் சொல்லிக்கொடுத்திருப்பார்கள்? கூட்டுக்குடும்பமாக உறவுகளோடு வாழ்ந்த அந்த இனிமையான வாழ்க்கையை... கூட்டமாக இரையுண்டு மகிழும்பொழுது கல்லெறிந்து காக்கைகளை கலைத்தால் அவை திக்கு திக்காக திசைமாறி பறந்த மாதிரி நாங்களும்... புவியியல் ஆசிரியர் உலகவரைபடத்திலுள்ள நாடுகளை சுட்டிக்காட்டுமாறு கூறினால் விழிபிதுங்கி நின்ற காலம்மாறி. இன்று டென்மார்க்கும், பிரித்தானியாவும், நோர்வேயும், கனடாவும் ஏதோ சொந்த ஊர்போல் ஆகிவிட்டது. யாழ்ப்பாணத்திலிருக்கும் பொழுது பெரியக்கா கொழும்பில, பெரியண்ணா பொகவந்தலவில, சின்னக்கா மானிப்பாயில என்ற காலம் தொலைந்து அவர்களெல்லாம் இன்று உலக வரைபடத்திலுள்ள அத்தனை இடங்களிலும். நம்மக்கள் உலகத்தை உள்ளங்கைக்குள் வைத்து மூடிவிட்டார்கள்.

ஆனால் பிரிவு அதன் வலி அத்தனை உள்ளங்களிலும் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டது என்பதை எல்லோரின் முகங்களும் கட்டியம் கூறிக்கொண்டிருந்தது. வாழ்க்கையில் பிரிவது இணைவது இயற்கை. ஆனால் நாங்கள் பிரிவுக்கிடையில் அல்லவா வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கின்றோம். இதனால் அன்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதுபோல் எனக்குள் ஓர் உணர்வு உணர்த்தியபடியே இருக்கின்றது. என் குழந்தைகளுக்கு என் தாயை தந்தையை புகைப்படத்தின் மூலம்தான் அறிமுகப்படுத்தினேன். இன்று அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்க்கு நாங்களும் அந்த புகைப்படங்களும்தானே அத்தாட்சியாக இருக்கின்றது. இதே நிலை நீடித்தால் நாளை என் சகோதரிகளின் குழந்தைகளும் என் குழந்தைகளும் எப்படி வாழப்போகின்றார்கள்? அந்த இருண்ட எதிர்காலம் என்னை இப்பொழுதே அச்சுறுத்துகிறது. விடுமுறையில் ஊருக்கு சென்று திரும்பிய என்தோழி கூறியது என்னை நெருடியபடி இருந்தது. எங்கு சென்றாலும் பலநாட்டு மொழியின் உரையாடல்கள் காற்றில் கரைந்தபடி இருந்ததாம். பைபிளில் கூறியதுபோல் இறைவனை அடைய கட்டிய கோபுரம் மொழிகள் மாறியதால் இடையறுந்து போனதுபோல எங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் மொரீசியஸ்சில் வாழும் தமிழர்கள்போல் அவர்களின் பெயர்களிலாவது தமிழ் இன்னும் வாழுகின்றது. ஆனால் எம் குழந்தைகளின் பெயர்களும் அல்லவா மாறிவருகின்றன.

உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு நகர்ந்து இங்கு வந்தபின் தனிமையில்வாடி உறவுகளுக்காக ஏங்கி அறிமுகம் அற்றவர்களை உறவாக, நட்பாக கற்பனை புனைந்து. பின் அந்த கற்பனை உறவு ஒருநல்ல நாளில் தன் பொய்முகத்தை களைய அதை ஜீரனிக்க முடியாமல் புலத்தில் தொலைத்துவிட்டு வந்த அந்த இனிய நட்புகளை எண்ணி எத்தனை நாட்களாக இதயம் ஏங்கித்தவித்தது. ஆதங்க முனிவர் தண்ணீரைத்தேடி பாலைவனத்தில் அலைந்ததுபோல் நானும் இங்கு உண்மை நட்பை தேடி அலைந்தபொழுது வீடுகளின் மறைவான இடங்களில் பலவிதமான பொய்முகமூடிகள் ஆணிஅடித்து தொங்கவிடப்பட்டிருப்பதைத்தான் கண்டுபிடித்தேன். தேவைப்படும் முகங்களை அவ்வப்போது எடுத்து அணிந்து கொள்வார்கள் என்பதையும் பின்புதானே அறிந்துகொண்டேன். இப்போ அவை என்னையும் அணிந்துகொள் அணிந்துகொள் என அடிக்கடி வற்புறுத்துகின்றன. எனக்கு பயமாக இருக்கிறது நானும்....

இப்போதெல்லாம் எந்த மனிதரை பார்த்தாலும் இது இவரின் உண்மை முகமா அல்லது பொய் முகமா என்று சிந்திப்பதே வேலையாகிபோய்விட்டது. இதனால் அவர்கள் பேசுவதை கிரகிக்க முடியாமல் எத்தனை நாள் அவஸ்தைபட்டுள்ளேன் என்பது எனக்கு மட்டுமே வெளிச்சம். மனிதர்கள் மட்டுமா இப்படி? இல்லை இல்லை எல்லா உயிரினங்களும் அப்படித்தான் என்பதற்காகத்தான் நரியும் வடையும், முயலும் சிங்கமும் என்று கதைகளை வடித்துவைத்திருப்பார்களோ? இந்த மனிதர்கள் ஏன் இப்படி மாறினார்கள்?

எந்த உயிரினங்களும் தன் இனத்தை அழிப்பதே இல்லை. ஆனால் மனிதன் மட்டும் ஏன் தன்னையொத்த இனத்தை அழிப்பதே கர்மமாக எண்ணி காலத்தை கழிக்கின்றான்? பத்திரிகையிலும் வானொலிகளிலும் எப்போதும் கொலை, கொள்ளை, பாலியல்வல்லுறவு. வாழ்க்கை எங்கும் பயங்கரமாக காட்சி அளிக்கின்றது. மனிதமனங்கள் மரணித்துவிட்டன. பாடசாலைக்கு போன பிள்ளைகள் தாமதமா வீடுவந்தால் ஒரே பதற்றமாக இருக்கின்றது. நாட்சி அடித்திருப்பானோ? என்ன நடந்திருக்கும் என்ற தேவையற்ற கற்பனையில் மூழ்கி நான் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கின்றேன். முன்பு முற்றவெளிக்கு போன மாடுகள் காணாமல் போனால் முனியப்பருக்கு நேர்த்திவைக்கும் அம்மா கடிதத்தில் எழுதியிருந்தா மாடுகள் காணாமல்போன காலம் மாறி இப்போ மனிதர்கள் காணாமல் போகிறார்கள். எந்த கடவுளுக்கு நேர்த்திவைக்கலாம் என்று சிந்தித்தே காலம் கரைகின்றதாம். மனிதர் மட்டும் இல்லையம்மா மனிதமும் தொலைந்துபோகின்றது என பதில் எழுதவேண்டும் என்று நினைத்ததோடு சரி.

ஓன்று கூடலில் நான் அடிக்கடி கதைத்தது என் அம்மாவைபற்றித்தான். என் நட்புகளுக்கு புரியும் என்னை என் அம்மா எப்படியெல்லாம் செல்லம் தந்துவளர்த்தா, அதேபோல் பிறந்தநாளை தவிர மற்றைய நாட்களெல்லாம் எப்படி அடித்தா. பலகைக்கட்டையை பறித்துவிட்டு நல்லூரில் பாவைப்பிள்ளை வாங்கி தந்ததையும் ஆனால் நான் மறுபடியும் பலகைக்கட்டையை இடுப்பில் தூக்கி திரிந்ததையும் இதைப்பற்றி விமர்சித்து சிரித்து சிரித்ததனால் கண்ணீர் வழிந்ததும்... வெளிப்பார்வைக்கு எல்லோரும் வசதியாகவும் மகிழ்வாகவும் இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் மனஆழத்தில் எத்தனையோ வடுக்கள். எல்லோரிலிருந்தும் சற்றுவிலகி அவர்களின் பேச்சை உற்றுநோக்கிய எனக்கு சிரிப்புதான் பிறந்தது. வெளியில் பிரச்சனை முடியவேண்டும் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என அளந்து கொண்டு இருப்பவர்கள். உள்ளுர நல்ல விசா இல்லையே என பயந்தபடி பிரஜா உரிமை பெற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதும் அவர்களும் இரட்சிக்கவந்த இயேசுபிரான்போல் தங்களை உருவகபப்டுத்திக்கொள்வதும் எனக்கு சிறுவயது நிகழ்வைத்தான் நினைவுபடுத்தியது. எங்கள் வீட்டுக்கு மா இடிக்கவரும் இலட்சுமியும் ஆவடையம்மாவும் இப்படித்தான் அன்று அழுதார்கள். பிராஜா உரிமை மறுக்கப்பட்டு நாடு திரும்பும் நாள் நெருங்க நெருங்க அவர்களின் கண்களிலிருந்து கண்ணீரும் பெருகிக்கொண்டே இருந்தது. ஆனால் எனக்குத்தான் எல்லாம் புரியாத புதிராகவே இருந்தது. தங்கட சொந்த நாட்டுக்கு போறதுக்கு இவை ஏன் அழுகினம்?

அங்க போனால் நடிகைகளை நேரில பார்க்கலாம், புதிசா வாற படங்களை உடன பார்க்கலாம், கண்ணாடிக்காப்பு, மாலையெல்லாம் மலிவாக வாங்கலாம். பிறகு ஏன் அழுகினம்? இவையள் எப்பவும் இப்படித்தான். கச்சைதீவுக்கு போறதுக்கு அம்மாட்டை காசுவாங்கி அதில பார்சோப், தேங்காய் எண்ணை எல்லாம் வாங்கிக்கொண்டு போவினம். பிறகு அங்கிருந்து தாழம்புசேலை, சின்னாளம்பட்டுசேலை என்று பண்டமாற்று செய்து அதை அம்மாவுக்கு விற்பதும்... அப்பவும் அழுவார்கள். இப்ப ஏன் அழுகிறீங்கள்? சகோதரங்களை சொந்தங்களை அடுத்த வருஷமும் சந்திக்கலாம்தானே என அம்மா ஆறதல் கூறுவதும்...

அவர்கள் ஏன் அழுதார்கள்? என்ற கேள்விக்கான விடைஎன் கையில் கிடைப்பதற்கு எத்தனை காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. எமது நாட்டுக்கு செல்லமுடியாத நிலையில் கொழும்பிலிருக்கும் அக்காவை இந்தியாவுக்கு அழைத்து செரெட்டோனிலும், எம். ஜி. எம்மிலும் தங்கி குழந்தைகளுக்கு உறவுகளை அறிமுகப்படுத்தி பிரியும்பொழுது அழுத அழுகை. ரவி கூறினார் சரி சரி இப்ப ஏன் அழுகிறீங்கள்? அடுத்த வருஷமும் சந்திக்கலாம்தானே.... அரசன் அன்று கொல்வான் தெய்வம்?

அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது சிங்கள அரசாங்கமாக இருந்தாலும் நாங்களும்தானே மௌனம் சாதித்தோம். இன்று எமக்கென்று வரும்பொழுதுமட்டும் வெள்ளையன் எமக்காக பேசமாட்டானா என்ற எதிர்பர்ப்பு எங்களுக்குள் எழுகின்றது. அவர்களின் உணர்வுகள் அன்று புரியாமல் கள்ளத்தோணி என கூறியதும்... இலட்சுமியின் மகள் பாப்பா கண்ணாடிக்காப்பு தரவில்லை என்ற கோபத்தில் வடக்கத்தையம்மா வாலம்மா வாலை பிடித்துக்கொண்டு ஓடம்மா எனப் பாடியதற்காக அம்மாவிடம் அடிவாங்கியதும....

சீ இப்போ நினைத்தாலும் வேதனையாக இருக்கின்றது. வெள்ளைக்காரர் எங்களை கறுப்பர், அகதிகள் என ஏசும்பொழுது மனம் எப்படி வலிக்கிறது? இப்படித்தானே அன்று அவர்களுக்கும் வலித்திருக்கும்?

சின்னவயதில படித்த கதையில் அந்த மந்திரவாதியின் உயிர் ஒரு மரப்பொந்தில் இருக்கிறது என்றமாதிரி என்னுடைய உயிர் என்னுடைய வீடு, அந்த முற்றம், அம்மாவின் சாய்மனைகதிரை அவைகளில்தான். வெட்ட வெட்ட முளைக்கும் ராவணனின் தலையைப்போல எனக்குள்ளும் பழைய நினவுகளும் புதிய நிகழ்வுகளும் முளைத்துக்கொண்டே இருக்கின்றது. யாழ்போய்வந்த அண்ணா கூறினார் வீட்டுக்குபோகவேணும் என்று ஆசைப்படுகிறாய் அங்க அம்மாவின் நினைவா என்ன இருக்கிது? அந்த சாய்மனைகதிரையையும் முகமறியா மனிதர்களையும் தவிர. அண்ணாவின் அறியாமை எனக்கு எரிச்சலைத்தான் தந்தது. அதுவெறும் சீமெந்தும் மணலும் குழைத்து சக்கரைபோட்டு கட்டிய கட்டிடமாகத்தான் அண்ணாவுக்கு தெரிகிறது. ஆனால் எனக்கு அதன் ஒவ்வொரு சதுர அடியிலும் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் என்தாயும் தந்தையும் அல்லவா வாழ்வதாய் தெரிகிறார்கள். என் உடல்மட்டும்தான் இங்கு வாழ்கிறது. உள்ளம்....?

ஆனால் ரவியும் பிள்ளைகளும் இது தங்கள் நாடு என்று எண்ணத் தொடங்கிவிட்டார்கள். அன்று ஒரு மதியம் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய என் மகன்...

அம்மா ஏன் அம்மா எனக்கு உங்கட நாட்டைப்பற்றி பிழையா சொல்லித் தந்தனீங்கள்?

என்ன பிழையா சொன்னனான்?

அது உங்கட நாடு என்று சொன்னது பிழை. நீங்கள்தான் இந்தியாவில இருந்து வந்தனீங்களாம். எங்கட ரீச்சர் இன்றைக்கு சரித்திர பாடத்தில படிப்பிச்சவ!

புரியாத மொழிக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் மூழ்கும் என் குழந்தைகளை நான் காப்பாற்ற வேண்டும். இப்படித்தான் அந்த சிங்கக்கொடியும் நமோ நமோ தாயே என்ற தேசியகீதமும் என்னையும் மூழ்கடித்திருந்தது. பாடசாலையில் அதை பாடும்பொழுது பக்தி சிரத்தையோடு கண்மூடி நம....
என்று ஒரேயடியாக இழுப்பதும் பின்பு சினிமா தியேட்டரில் கறுப்பு வெள்ளை நிறத்தில் சிங்கக்கொடி பறக்க அண்ணாவின் மடியிலிருந்து குதித்து எழுந்து நின்றதும். நமது என்று நம்பி நாம் வாழ்ந்தபொழுது இல்லை என்பதை எத்தனை வழிகளில் குத்திக்காட்டினார்கள். குத்திய இடங்களில் ஏற்பட்ட எரிவு இன்னும் ஆறாமல் எரிந்து கொண்டுதானே இருக்கின்றது. நமது முன்னோர்களின் ஆணிவேர் ஆழமாக பதிந்த எம்நாடே எமது இல்லையென்று அவர்கள் கூறும்பொழுது. அடைக்கலம் தந்த இந்த நாட்டை தமது நாடு என எண்ணும் எம் குழந்தைகளின் முகங்களின் முன்னே இவர்களின் விரல்கள் நாளை நீளலாம் நீளும். அப்போது எமது சிறார்களின் நிலை. எம்மைப்போல் எல்லாவற்றாலும் உடைந்து போகப்போகிறார்கள். இதிலிருந்து இவர்களை நாங்கள் எப்படி காப்பாற்ற போகிறோம்?

வெயில் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டது. இந்த மூன்றுமாதமும் ஆராவாரித்துக்கொண்டிருந்த மனிதர்களும் மரங்களும் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கி விட்டார்கள். எனது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் நீண்ட கம்பிகளில் பறவைகள் தங்கள் இனங்களுடன் ஒன்று கூடி பேச ஆரம்பித்துவிட்டன. நான் சமையலையும் விட்டுவிட்டு யன்னலால் அவைகளை பார்த்தபடியே இருந்தேன். ஓ எத்தனை பறவைகள் இவைகள் என்ன பேசுவினம்?
எந்த நாட்டுக்கு போகலாம் என்றா? ம் உங்களுக்கென்ன குளிர்காலம் ஆரம்பித்தவுடன் பறந்து போய்விடுவீர்கள. ஆனால் நான் இந்த குளிரில் உறைந்து பனியினில் நனைந்து....

மறுபடியும் பேசுகின்றன. அப்படி என்னதான் கதைக்கின்றீர்கள்? கேட்கவேண்டும்போல் இருந்தது. அதோ முக்கோணவடிவில் பறக்க ஆரம்பித்துவிட்டன. முன்னால் பறக்கும் பறவைதான் வழிகாட்டி காற்றின் தாக்கத்தையும் தாங்க வேண்டும. முதல் பறக்கும் பறவையின் சிறகு கீழ்நோக்கி அடிக்கும்பொழுது ஏற்படும் காற்றின் உதவியால் மற்றய பறவைகளின் சிறகுகள் மேலோக்கி எழுகின்றனவாம். முதல் செல்லும் பறவை களைத்தால் அடுத்தவர் இப்படியே ஒற்றுமையாக... ஒற்றுமை ஏதோ மனதை நெருடியது. என்னை மறந்து போய்வாருங்கள் நான் இருந்தால் அடுத்த வருடம் சந்திப்போம் என பிரியாவிடை கொடுத்துவிட்டு திரும்பிய என் விழிகளில் ஒரு பறவைமட்டும் தனியாக அவைகள் போவதை ஏக்கத்துடன் பார்த்தபடி... ஏன் ஏன் நீ போகவில்லை? பற பறந்து போ போ என என் மனம் அலறியது.
ஆனால் அது மறுநாளும் அதற்கடுத்து வந்த நாட்களிலும் அவைகள் எல்லோரும் பிரிந்த அந்த நேரத்தில் அதே இடத்தில் வந்தமர்ந்து ஏதோ சோகமாக கத்தியபடி... இப்படித்தான் இப்படித்தான் அன்று எமது பெற்றோரும் நாளை நாங்களும்.....
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree