நான் மேடம் அல்ல ஓமா

17 டிசம்பர் 2004
ஆசிரியர்: 

 

த்தியானத்தைத் தாண்டிப் பொழுது ஓடிக்கொண்டிருந்தது.  வெய்யில் நமது தாயகத்தை நினைவுபடுத்தியபடி நன்றாக   எரித்தபடி இருந்தது

"அப்பா வீட்டுக்குள் இருக்கவே முடியாமலிருக்குது. சற்று காற்று வாங்குவதற்குக் கொஞ்சம் வெளியிலே போவோமா அப்பா?"

எனது மகள் என்னை அழைத்தாள்.

"இந்த கொளுத்துற வெயிலுக்குள்ளயா? வேண்டாம்மா சாயங்காலமா கொஞ்சம் வெயில் சாய்ஞ்சதுக்குப் பிறகு போவோம்"

"சரியப்பா" என்றவள் எனது அறையை விட்டு அகன்றதும், „"அப்பாடா!" என்று நான் எனது சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டேன்.

வெய்யில் அகோரம் வீட்டிற்குள்ளும் அடிப்பதைப்போல இருந்தது. களைப்புடன் சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன்.

இலேசாகத் தென்றல் சற்றுக் குளிருடன் கலந்து என் தூக்கத்தைக் கலைக்கவும் எனது மகள் அறைக்குள் நுழையவும் சரியாயிருந்தது.

"அப்பா மணி மூன்று. திரும்பவும் சாக்குப்போக்கு சொல்லாமல் உடனே புறப்படுங்க வெளியே போவோம். வெக்கையைத் தாங்க முடியாமலிருக்கு."

எங்கே நான் இம்முறையும் ஏதாவது  கூறித் தட்டிக் கழித்து விடப் பார்ப்பேன் என்று நினைத்தாளோ என்னவோ ஒருவித கண்டிப்புடனேயே அவள் பேசினாள்.

குடும்பங்களில் பிள்ளைகள் பிறக்கும் வரைக்கும்தான் பெரியவர்களின் அதிகாரமெல்லாம்.  வளர வளர பிள்ளைகள்தானே அதிகாரிகள்! அனுபவித்தால் மட்டுமே உணர்ந்து இரசிக்கக் கூடியதும் பெற்றோருக்கு மட்டுமே  உரியதுமான அடிக்கடி நிகழும் ஓர் அருமையான அனுபவம் இது.

தலையை  ஆட்டிவிட்டு  மறுபேச்சு எதுவும் கூறாமல்   மனைவியையும் அழைத்துக் கொண்டு, மகளுக்காக இருவருமாக சேர்ந்து காற்று வாங்கப் புறப்பட்டோம். வழிநெடுகிலும் அவள் ஒருமுறையாவது  எங்களை பேச விடவே இல்லை . தொண தொணவென்று ஏதேதோ சங்கிலித் தொடர்போலப்  பேசிக் கொண்டே வந்தாள்

கேள்வி மேல் கேள்விகள். பதில் சொல்லிச் சொல்லி வாய் வலிக்கத் தொடங்கிவிட்டது. வெகுதூரம் நடந்துவிட்டதனால் ஒரே அலுப்பாக வேறு இருந்தது.

என்ன பிள்ளை இவள்! கொஞ்சம் கூட வாய்க்கு ஓய்வு கொடுக்காமல் பேசிக்கொண்டே வருகிறாளே!   

என் மனைவியைத் திரும்பிப் பார்த்தேன் அவள் பொறுமையாக மகள் கேட்பதற்கெல்லாம் தலையை ஆட்டி நிதானமாக பதில் கொடுத்தபடி நடந்து கொண்டிருந்தாள். எந்த விதமான சலனத்தையும்  வெறுப்பையும் அவள் முகத்திலே நான் காணவேயில்லை.

எனக்கு இந்த அளவு பொறுமை  எப்போதுமே வராது. நான் அவர்களுடன் எதுவும் பேசாமல் மௌனமாக  நடந்தபடி இருந்தேன்.  எங்களுக்கு மிக அருகிலே ஓரு வயது முதிர்ந்த  அம்மையார்   போய்க் கொண்டிருந்தார். நாங்களும் அவருக்கு வழிவிட்டபடி எங்களுடைய பாதையில் நடந்துபடி இருந்தோம்

நாங்கள் போன நடைபாதையிலே சன நடமாட்டம் அதிகமாக இருக்கவில்லை. சனிக்கிழமையாதலால் மதியம் கடந்ததும் கடைகளை மூடிவிட்டிருந்தார்கள். அங்காங்கே சில தெருக்கடைகளில் மட்டும் ஐஸ் கிறீம் குளிர் பானங்கள் சிகரெட் என்று சில சில்லறை வியாபாரிகளும் நடமாடிக் கொண்டிருந்த சில பொதுமக்களும்தான்.

அங்கே ஓரிடத்தில் தெருக் குப்பைகளைச் சேகரிப்பதற்கான குப்பைத் தொட்டிகளை வைத்திருந்தார்கள்.

பொதுமக்கள் குப்பைகளை வீதியில் கண்டபடி வீசி நகரை அசுத்தப்படுத்தி விடாதபடிக்கு அவை வைக்கப்பட்டிருந்தன.

உணவுப் பொருளுக்கு ஒன்று, பொதுவான குப்பைகளுக்கு ஒன்று, கடதாசிக்கு ஒன்று, போத்தல்களுக்கும் வண்ணங்களுக்கு எற்ப வெள்ளைக்கு பச்சைக்கு பிறவுணுக்கு என்று மூன்று.. இப்படியாகப் பலவாகப் பிரித்து அமைத்து இருந்தார்கள்.

குப்பைத் தொட்டிகளையும் கூட ஒருவித கலையழகுடன் வண்ண வண்ணத் தொட்டிகளாக அழகான வேலியமைத்து நிறுத்தியிருந்தார்கள்.

பார்க்கவே அவை அழகாக இருந்தன.

குப்பைத் தொட்டியின் அழகை நான் இரசித்தவாறு கடந்து கொண்டிருக்கையில் திடீரென ஓர் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது.

எங்கள் முன்னால் போய்க்கொண்டிருந்த அந்த வயோதிப மாது பாதையின் இருபுறமும் அவதானித்துவிட்டு ஒரு குப்பைத்தொட்டியை நெருங்கினார்.

மூடியினைத் திறந்து உள்ளேயிருந்து எதையோ சடக் என எடுத்துவிட்டு அந்த இடத்திலேயே நின்றபடி மடமடவென சாப்பிட ஆரம்பித்தார். 

எனது இதயத்துக்குள் எதுவோ ஆழமாக ஊடுறுவி என்னை ஒருகணம் நிலைகுலையச் செய்துவிட்டது. மின் அதிர்ச்சியை விடவும் அதன் வலியை விடவும் கடுமையான வருத்தத்தைத் தந்தது அந்த உணர்வு.

நான் என்னை  சுதாகரித்துக் கொள்ள அதிகநேரம் எனக்கு தேவைப்பட்டது. அந்தக் காட்சி அப்படி எனது மனதை உலுக்கி அதிர வைத்துவிட்டது. நடக்கவே முடியாமல் போவது போன்ற ஒருவித தடுமாற்றம் என்னில் ஏற்படுவதை உணர்ந்தேன். என்னால் நம்பவேமுடியவில்லை. நான் காண்பது கனவோ?

எனது மகள் அந்த வயதான தாயை நோக்கி ஓடுவது தெரிந்தது. கண் இமைப்பதற்குள் அவள் அந்த மாதிடம் இருந்த அவர் குப்பை தொட்டிக்குள்ளிருந்து எடுத்த பொட்டலத்தைப் பறித்து மீண்டும் குப்பைத் தொட்டிக்குள் எறிந்து விட்டாள்.

ஏனோ அந்த பெண்மணி கோபப்படுவது தெரிந்தது. மடமடவென்று என் மகள் அவளுடன் பேசியபடி எங்களினருகில் அவரை அழைத்து வந்தாள்.

"அப்பா இவங்களுக்கு பசியாயிருந்ததாம். இன்னைக்கு காலையிலேயிருந்து ஒண்ணுமே சாப்பிடலையாம். காசே இல்லாமல் யாரிடமும் கேட்கவும் தெரியாமல்தான்..."

'அட தெய்வமே! இத்தனை பெரிய பணக்கார ஐரோப்பாவில் இப்படியும் ஒரு நிலைமையா? அதுவும் அந்த ஐரோப்பிய மனிதர்களுக்கு!'

என்னால் நம்ப முடியவில்லை என்பதை விட அந்தச் செய்தியைத் தாங்க முடியவில்லை என்பதே சரி.

அந்த முதிய தாயை அருகிலிருந்த தெருவோரங்களில் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆசனத்துக்கு நான் அழைத்துச் சென்றோம். அவர் அமர்ந்ததும் எனது மனைவியைத் திரும்பிப் பார்த்தேன்.

விட்டில் பூச்சிகளைப் போல அவளும் மகளும் வேகமாக தூரத்திலிருந்த ஒரு கடையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வரும் வரையில் நான் அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

அவருடைய ஆடைகளிலிருந்து அவர் ஒரு நல்ல குடும்பப் பெண்மணி என்பது தெளிவாகத் தெரிந்தது. அவரது கதையில் ஐரோப்பாவின் இன்றைய கலாச்சார மாற்றத்தையே என்னால் உணர முடிந்தது.

கதை இதுதான்: அவர், தமது கணவரை இழந்துவிட்ட ஒரு விதவை. பிள்ளைகள் வளர்ந்த பின் படிப்படியாகத் தாயைக் கவனிப்பதை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். தனது பென்ஷன் பணத்தை மட்டுமே அவர் நம்பி வாழ்ந்து கொண்டிருந்தார். அன்றைய தினத்துக்கு முந்திய தினம் மாலை அவரது வங்கி அட்டையைத் தொலைவிட்டாராதலால் பணமெடுக்க வழியில்லை. திங்களன்றுதான் வங்கிக்குப் போய் ஆவன செய்ய வேண்டும்.

அதுவரை சனியும் ஞாயிறும் என்று இருநாட்கள் உணவுக்கு வழியே இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது. வீட்டு குளிர்ப் பெட்டியிலும் ஒன்றுமில்லை. காலையிலே இருந்து அவர் உணவுக்காகத் தட்டுத் தடுமாறிக் கொண்டு அலைந்திருக்கின்றார். கைநீட்டி உதவி கேட்க கூச்சமாயிருந்திருக்கின்றது. கடைசியில் அதுதான்...

எனக்குக் கண் கலங்கிக் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது.

அதற்குள் எனது மனைவியும் மகளும் வந்து விட்டார்கள்.

மகளின் கையில் ஒரு பெரிய உணவுப் பொட்டலமும் மனைவியின் கையில் ஒரு கொக்கா கோலா போத்தலும்.

"அமைதியாக வெட்கப்படாமல் சந்தோஷமாகச் சாப்பிடுங்கள்." எனது மகள் ஜெர்மன் மொழியில் சொல்லியவாறே பொட்டலத்தை நீட்டினாள்.

அந்த அன்னை மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கி உண்ணும் போது அவரின் கண்களிலிருந்த வழிந்த கண்ணீரில் என்னென்ன உணர்வுகளெல்லாமோ அலைமோதுவது தெரிந்தது.

மகள் அவரது தோளில் கைவைத்து ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். உணவருந்திய பிறகு அந்த அன்னை தனது கைப்பையைத் திறந்து ஒரு அட்டையை எடுத்தார். அது அவரது அறிமுக அட்டை. அவரது பெயரும் முகவரியும் கொண்ட „'விசிட்டிங் கார்ட்'.

தரமான குடும்பப் பின்னணியை உடைய ஒரு நல்ல குடும்பத்துப் பெண்மணி. „"திங்கட்கிழமை மாலை எனது வீட்டுக்கு காப்பிக்கு வருகிறீர்களா? உங்களையும் உங்களுடைய நல்ல மனங்களையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது."

ஒரு சின்ன உதவிக்கு எவ்வளவு பெரிய இதயம் நிறைந்த சான்றிதழ்!

நான் சிரித்தேன்.

" நாங்கள் ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. எங்களுக்கும் தாய் தந்தையில்லை. அவர்களுக்குச் செய்வதை உங்களுக்குச் செய்வதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்."

மகள் குறுக்கிட்டாள். "அதுசரி மேடம். இப்போது மதிய உணவுதானே சாப்பிட்டு இருக்கின்றீர்கள்? இரவு உணவு நாளை முழு நாளைக்கும் உணவு இதற்கெல்லாம் என்ன செய்யப் போகிறீர்கள்?"

அமைதி மட்டுமே பதிலாய் வந்தது. நாங்கள் மூவரும் நமது தமிழிலே கலந்துரையாட அந்த பெண்மணி கல்லாய்ச் சமைந்திருந்தார்.

ஒரேயொரு துருக்கியர் கடைதான் மாலை ஆறு மணிவரைக்கும் அந்தப் பக்கத்தில் திறந்திருக்கும் என்று தெரியும். ஆகவே மூவரும் அவரையும் அழைத்துக் கொண்டு அந்தக் கடைக்குள் நுழைந்தோம்.

அத்தியாவசியமான பொருட்களை வாங்கிக் கொண்டோம். அத்துடன் அவரையும் எங்களின் காரிலேயே அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டிற்குச் சென்றோம். நம்பவே முடியவில்லை. சராசரி நடுத்தர ஜெர்மன் குடும்பத்தின் அத்தனை வசதிகளுடனும் வாழ்கின்ற ஒரு நல்ல குடும்பப் பெண் அவர் என்று தெரிந்தது.

உடனடியாகவே வாங்கி வந்தவற்றிலிருந்து காப்பிப் பொட்டலத்தை எடுத்தவர் காப்பி தயாரித்துத் தந்தார். மீண்டும் வர அவர் அழைப்பு விடுத்தபோது ஒரு வாரம் கழித்து வருவதாகக் கூறிவிட்டு எங்களின் தொலைபேசி விபரத்தையும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டோம்.

"போய் வருகிறோம் மேடம்" என்று மகள் விடைபெற்றபோது அந்த அன்னை தளதளத்த குரலில் கூறினார்.

"நான் மேடம் அல்ல. உனது ஓமா (பாட்டி). எனது சொந்தக் குழந்தைகளின் பிள்ளைகளே என்னைப் பார்க்க வராத எனது கவலையை இன்றைக்கு நீதான் மறக்க வைத்தாய். இனி நான் உனக்கு ஓமாதான். மறந்துவிடாதே!"

"சரி ஓமா!" என்று சொல்லிய எனது மகளின் கன்னங்களில் இரு சின்னஞ்சிறு ஊற்றுக்கள்.

கடல் கடந்து வந்து தனிமையில் வாடும் உள்ளங்களைப் போல தத்தமது நாடுகளிலும் தத்தளிக்கின்ற மக்கள் இருக்கின்ற உண்மை மனதை மிகவுமே இளக வைத்தது.

இன்றும் மாதம் ஒரு தடவையாவது „'ஓமா' தொலைபேசி எடுக்காமல் விடுவதுமில்லை. 'ஓமா' விட்டாலும் என் மகள் விடுவதாகவுமில்லை.

(கதைகளெல்லாம் கற்பனையாகத்தானிருக்கவேண்டும் என்று

- நன்றி: பூவரசு (ஜேர்மனி)

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree