ஆடைகள் வாங்குவதற்காக..!

05 அக்டோபர் 2004
ஆசிரியர்: 

 

ற்றுத் தள்ளிப் படுத்தான் அவன். பக்கத்தில் படுத்திருந்த அவள்மீது பார்வையைப் படரவிட்டான். சிறிது முன்னால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்துமுடிந்த - சதைத்தேவைப் பூர்த்தி அவள் முகத்தில் வியர்வை முத்துக்களைப் பரப்பியிருந்தது. வழக்கம்போலவே இழை பிரிந்த மயிர்க் கொத்தொன்று அவள் நெற்றியில் சுருண்டிருந்தது. வார்த்தைகளுள் அகப்படாத ஒரு வசீகரம் அவளது முகத்தில் எப்போதும் காணப்படுகிறது என்ற தனது கருத்தை இப்போதும் அவன் ஊர்ஜிதம் செய்துகொண்டான். இந்த வசீகரம்தான் தன்னை அவளிடம் இழுத்து வருகிறது என்ற நண்பர்களின் கூற்று உண்மைதானோ எனப் பேதலித்துக் கொண்ட மனதைச் சமாதானப்படுத்தவாவது இன்று தனது கேள்விகளை இவளிடம் இறக்கி வைத்துவிடுவதென முடிவு கட்டினான். இப்படி எத்தனை தரம் முடிவு செய்திருக்கிறேன் என நினைத்துக் கொண்டபோது சிரிப்பு வந்தது.

"சரிதான், சிரிக்கவும் முகட்டை வெறிக்கவும் தொடங்கியாச்சா?" என்ற அவளது கேள்விக்கு ஏதும் பதிலளிக்காமல் சிகரட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.

நுரையீரல்களுக்குள் நிரம்பிய புகையின் சுவையை கண்களை மூடி இரசித்தவன், அந்தச் சுகானுபவத்தை இழக்க விரும்பாமல் மெதுவாக அதை வெளியேற்றினான். அவனையும் அவனது இந்த மோனத் தவத்தையும் பார்த்து திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவள் சிரித்துக் கொண்டபோது, அவன் கண்களைத் திறந்தான். கலைந்திருந்த அவள் ஆடையையும் முக வசீகரத்தையும் மீறி அவளது சிரிப்பு அவனைத் தாக்கவே கண்களை இடுக்கி, "ஏன் சிரிக்கிறாய்?" எனக் கேட்டுான்.

"இன்னும் கூடுதலாக உங்களை முகட்டை வெறிக்கச் செய்யலாமா என யோசிக்கிறேன்" என்றபடி அவள் ஆடைகளைச் சரிசெய்து கொண்டாள்.

"எப்படி? எப்படி?" என்ற அவனது கேள்வியில் இவள் ஏதோ புதிதாகச் சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

'இவளைப்பற்றிய எனது எதிர்பார்ப்புகள் என்றும் பொய்யாவதில்லை' என அவன் நினைத்துக் கொண்டபோது அவள் சொன்னாள்.

"இதோ இப்போது கண்களை மூடி ஏதோ மகத்தான தியானமாக இந்த சிகரட்டை ரசித்தீர்களே, இந்தச் சுகமும் சற்றுமுன் நீங்கள் என்னால் பெற்ற சுகமும்... இவைகள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?"

கேட்டுக்கொண்டே அவள் எழுந்து வெளியே போனாள்.

அவனால் அவளது கேள்வியின் தோரணையை ஜீரணிக்க முடியவில்லை. இவள் எப்போதுமே இப்படித்தான். நேராகவும் முகத்திலடித்தாற்போலவும் ஏதாவது சொல்லிவிடுவாள். அந்தப் பிரச்சினையிலேயே ஆழ்ந்து அதையே பேசி அவளது வாதங்களைக் கேட்டுக்கொண்டு போக வேண்டியதுதான். அவனது கேள்விகளைக் கேட்கவே நேரம் கிடைப்பதில்லை. இன்றும் அப்படி ஆகிவிடக் கூடாது என்பதில் அவன் தீர்மானமாக இருந்ததால், அவளுக்குப் பதிலையும் அடுத்த தனது கேள்வியையும் அவன் தனக்குள் ஆயத்தப்படுத்திக் கொண்டான்.

"முகடு என்ன சொல்லுகிறது?" எனக் கேட்டுக் கொண்டு அறைக்குள் வந்தவள் கட்டிலில் கால்களை மடக்கிக் கொண்டு, அவளையே நேராகப் பார்த்துக் கொண்டிருந்த அவனைக் கண்டதும் விழிகள் வியப்பால் விரிய, "ம்.. ம்.." என்று முணகினாள்.

இவன் இன்று வழமைபோல் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதால், எப்படி இது சாத்தியமாயிற்று என்ற கேள்வியோடு கட்டிலுக்கு எதிரே கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தவள், 'சொல்லுங்கள்' என்பதுபோல் அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

"இவ்வளவு நாளாக என்னை நீ புரிந்துகொண்டது இப்படித்தானா? இவற்றை விடவும் எனது உலகம் பரந்தது. இன்னும் எத்தனையோ சிந்தனைகளில், லயிப்புக்களில் என் வித்தியாசமான கருத்துக்களில் நான் திளைத்திருக்கிறேன். சொல்லப் போனால் அவைதான் என் உலகம். அதுதான் என் வாழ்க்கை. அந்த இறுக்கத்திற்கு நான் தேடும் ஓய்வு... நோ, ரிலாக்ஸ்தான் நீ."

சற்று மூச்சுவாங்கி சிகரட்டை ஒரு இழுப்பு இழுத்தவன் தொடர்ந்தான்.

"இவ்வளவும் சொல்லுகின்ற நீ உன்னைப் பொறுத்தவரை எப்படியிருக்கிறாய்?"

"கசங்கிய உன் படுக்கை விரிப்பை அடுத்தவனுக்காக சரிசெய்து ஒழுங்காக்கும் இந்த வேலை உனக்குப் போரடிக்கவில்லையா?"

"என்றாவது இது வேண்டாம், ஒழுங்காக வாழுவோமென நீ சிந்தித்ததுண்டுா?"

"இந்த வாழ்க்கையை விட்டுவிட உன்னால் முடியுமா?"

அவள் மெதுவாகத் தலையைக் குலுக்கிக் கொண்டாள். அவள் நினைத்த புதியமாற்றம் இவனில் இன்னும் இல்லை. ஆனால் எல்லோரும் சொல்லுகின்ற ஒன்றை இன்றுதான் இவன் சொல்லியிருக்கிறான். அவனைப் பொறுத்தவரை இன்று வழமையில்லைத்தான். அவளுக்கோ இது கேட்டுக் கேட்டு புளித்துப் போன ஒன்று. இருந்தாலும், சொல்பவன் இவனாகையால் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். அதுவும் இவனுக்குப் புரிகிறமாதிரி. எல்லோருக்கும் சொல்வதுபோல், 'நான் இந்தத் தொழிலை விட்டுவிடுகிறேன். நீ என்னை ஏற்றுக் கொள்வாயா?" என்று கேட்டால், வீம்புக்காவது தன்னைப்பற்றிய ஒரு இமேஜ்க்காவது இவன் ஒத்துக்கொள்ளக் கூடும். இவனுடைய வட்டத்தில் என்னைப் போன்ற ஒருத்தியை மணமுடிப்பது உலக மகா புரட்சியாகக் கருதப்படக் கூடும். ஆனால் அதனோடு எல்லாம் முடிந்து விடுகிறது என இவன் நினைத்துவிடக் கூடாது. தனது இலட்சியக் கற்பனைகளில் இருந்து இவன் யதார்த்தத்துக்கு வரவேண்டும்.

ஒரு நீண்ட விவாதத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொண்டவளாக அவள் மெதுவான குரலில் ஆரம்பித்தாள்.

"நீங்கள் ஜெயகாந்தன் எழுதிய 'இலக்கியம் மீறிய கவிதை' வாசித்திருக்கிறீர்களா?"

கேள்வியோடு நிறுத்தி அவனைப் பார்த்தவள், அவன் வாசிக்கவில்லை எனத் தெரிந்து கொண்டு தொடர்ந்தாள்.

"அதில் ஓரிடத்தில் அவர் சொல்லுகிறார், அவளது தலையில் உள்ள மல்லிகை கசங்காவிட்டால் அன்று முழுவதும் பட்டினி என்று. அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு? நீங்கள் சொன்னீர்களே இந்தப் படுக்கை விரிப்பை- ஒருவனுக்காவது தட்டிப் போடாவிட்டால் நான் என் வயிற்றைக் காயப்போட வேண்டியதுதான். இந்தத் தொழிலை நான் விட்டுவிட முடியாதிருப்பதும், இந்தத் தொழிலுக்கு நான் வந்ததும் ஒரே காரணத்துக்காகத்தான். வாழுவதற்கு. இதற்கு நான் வெட்கப்பட்டதே இல்லை. ஏனென்றால் இதற்கு வெட்கப்பட வேண்டியது இந்தச் சமூகம். அதுவே வெட்கப்படாமல் என்னிடம் வருகிறது என்கிறபோதுதான் மாற வேண்டியவள் நானல்ல, இந்தச் சமூக அமைப்புத்தான் என்பது எனக்குத் தெரிகிறது. அதை ஏற்படுத்தாமல் நீங்கள் சொன்னபடி ஒழுங்காக வாழுவோம் என்று நான் முடிவு கட்டிய பிறகு என்ன புதிதாகச் செய்யப் போகிறேன்?"

சிகரட்டை வாயில் இருந்து எடுத்தபடியே அவன் பேசினான்.

"நீளமாகத்தான் பேசுகிறாய். இந்தப் பேச்சினால் உன்னை நியாயப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறாய். இந்தச் சமூகத்தின்மீது பழியைப் போடுவதைவிட ஏன் நீ திருந்தக் கூடாது? திருந்திவிட்ட உன்னைப் போன்றவர்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எத்தனையோ பேருக்கு இருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா?"

மேற்கொண்டும் அவனைப் பேசவிடாது, 'போதும் நிறுத்துங்கள்' என்பதுபோல் அவள் கைகாட்டினாள்.

"திருந்தி விடுவது, திருந்தி வாழுவது என்று நீங்கள் சொல்லுவது என்ன? ஒவ்வொருவனுக்கும் படுக்கை விரிப்பை தட்டிப் போடாமல், ஒருவனுக்கு மட்டும் தட்டிப் போட்டுக்கொண்டு இவனோடு மட்டும்தான் நான் விபச்சாரம்... ஓ ஸோரி, அதற்குப் பெயர் என்ன?... சரி... படுத்து எழும்புகிறேன் என்று சமூகத்துக்கு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு அதற்குச் சாட்சியாக குழந்தைகளைச் சுமந்து ஒரு விசுவாசமிக்க வேலைக்காரியாக நான் இருக்க வேண்டும். ஸோ... திரும்பவும் ஒரு அடிமையாக... அங்கீகரிக்கப்பட்ட அடிமையாக. சொல்லுங்கள், இந்தச் சமூகத்தில் அடிமையாக இருப்பதற்குக்கூட ஒரு அங்கீகாரம் தேவையா?"

கோபத்தோடு முகம் சிவந்து ஒரு விரலை நீட்டிக் காட்டியபடி எழுந்து நிற்கின்ற அவளை அவன் நிமிர்ந்து பார்த்தான்.

"நீயேன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறாய் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு நல்ல மனைவியாக வாழுவதை இப்படிக் கொச்சைப்படுத்துவது கொஞ்சம்கூடச் சரியில்லை. இத்தனைக்கும் பிறகு உன்னை ஒருவன் ஏற்றுக் கொள்வதே பெரிய விசயம். அதற்குப் பிறகு நீ இவை எல்லாம் மாற்றமில்லை என்று சொல்கிறாயென்றால்..."

நிறுத்தியவன் சற்றுத் தயங்கிக் கேட்டான்.

"இந்த வாழழ்க்கையை அந்தளவு நீ ரசிக்கிறாய் என நான் கருதிக் கொள்ளலாமா?"

அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

"இப்போது நீங்கள் சொல்லுகிறீர்களே இதுதான் கொச்சைத்தனம். நான் சொன்ன உண்மைகளை ஏற்றுக் கொள்ள முடியாத உங்கள் ஈகோவின் கொச்சைத்தனம். நல்ல மனைவி என்பதற்கு இந்தச் சமூகத்தின் வரைவிலக்கணம் என்ன? உங்களுடைய மனைவி ஒரு நல்ல மனைவிதானே?"

அவனுடைய நெற்றிச் சுருக்கத்தையும் முக மாற்றத்தையும் அவதானித்தவள் தொடர்ந்தாள்.

"மன்னியுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. இப்போது அவள் நிலை என்ன? நீங்கள் அவளை எப்படி வைத்திருக்கிறீர்கள்?"

கோபத்தோடு அவன் குறுக்கிட்டான்.

"அவளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் வைத்திருக்கிறேன். சொல்லப்போனால் நான் உன்னிடம் வருவதுகூடத் தெரியும். அப்படி ஒரு 'அண்டர்ஸ்டாண்டிங்' உள்ளவள் அவள்."

"சரி. ஆனால் இதை 'அண்டர்ஸ்டாண்டிங்' என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்? உங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அவளுக்குக் கொடுத்திருக்கிறீர்களா? நோ... குறுக்கிடாதீர்கள். அவள எதுவும் பேசாதிருக்கிறாள் என்பதாலேயே இதை ஏற்றுக்கொள்ளுகின்றாள் என்று அர்த்தமில்லை. நீங்கள் திரும்பிப் போகும்போது உங்களுக்குச் சமைத்து வைத்து அவள் காத்துக் கொண்டிருப்பாள். நாளையும் நாளை மறுநாளும் இப்படியே தொடர்ந்து. உங்கள் ரிலாக்ஸ் சரி. ஆனால் அவளுக்கு? அவள் உணர்வுகளுக்கு என்ன மதிப்பு? என்றைக்கேனும் இப்படி உங்கள் மனைவி பேசினால் அதற்குப் பிறகும் அவளை நல்ல மனைவி என்று சொல்ல நீங்கள் தயாரா?"

அவன் குழம்பிப் போனான்.

'இன்றைக்கு இவள் சொல்லுபவைகள் எவ்வளவு சரியாக இருக்கின்றன. இப்படி ஒருநாளும் எனது மனைவி பேசவில்லை என்பது உண்மைதான். அப்படியானால் இவள் சொல்வதுபோல் அதனால்தான் அவளை நான் ஏற்றுக் கொள்ளுகிறேனா?'

தனது மனைவியை மனக்கண் முன் கொண்டு வந்து இவளைப்போல் எதிர்நிறுத்திக் கற்பனைசெய்து பார்த்து அந்த உண்மையின் வேகம் தாங்காமல் அவன் தலையை உலுக்கிக் கொண்டான்.

அவனது சிந்தனையையும் அதன் போக்கையும் புரிந்து கொண்டவள்போல் அவள் சற்றுப் புன்னகைத்தாள்.

"இப்போது நீங்கள் நினைக்கிறீர்களே, இதுதான் உண்மை. என்னைப்போல் ஒருத்திக்கு வாழ்வு கொடுப்பதற்கு முதல் உங்கள் மனைவிக்கு வாழ்வு கொடுத்திருக்கிறீர்களா எனச் சிந்தியுங்கள். அந்த ஒன்றையாவது முதலில் புரிந்து கொள்ளுங்கள்."

அவனால் இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தாலும் ஏதோ ஒன்று புதிதாக தன்னுள் விளைந்திருப்பதுபோல் தெரிந்தது. இன்றைக்கு இது போதும், இப்போதே வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டவனாக அவன் எழுந்தான்.

"இருங்கள் இதோ வந்துவிட்டேன்" என்று அவள் வெளியே போய் ஒரு புத்தகத்துடன் திரும்பி வந்தாள்.

தனக்கு முன் அவள் பிரித்துக் காட்டிய வரிகளை அவன் வாசித்தான்.

"நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கின்றோம், ஆடைகள் வாங்குவதற்காக."

நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

"கேட்டீர்களே இந்த வாழ்க்கையை ரசிக்கிறேனா என்று. இதுதான். இது ரசிப்பு இல்லை. யதார்த்தம். ஆனால் இந்த வாழ்க்கையை நீங்கள் சொல்வதுபோல் யாரோ ஒருவன் ஏற்றுக் கொள்வதால் முடிந்துவிடப் போவதில்லை. என்னைப் போன்ற எல்லோருக்கும் ஆடைகள் மட்டுமல்ல, அமைப்பிலும் மாற்றம் வேண்டும். அதுணரைக்கும் நான்... இல்லை நாங்கள் இதைச் சொல்லிக் கொண்டுதான் இருப்போம்."

அவள் சொல்லி முடித்துவிட்டு கட்டிலில் அமர, அவன் குனிந்து தனது செருப்பைத் தேடி அணிந்துகொண்டான்.

(கலையோசை, ஜேர்மனி)

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree