நிழல் தேடும் பறவை

28 செப்டம்பர் 2004
ஆசிரியர்: 

 

டற்கரையில் இயற்கை அழகுதன்னைத் தன்னை மறந்து இரசித்துக் கொண்டிருந்த மைதிலி, பழைய ஞாபகங்கள் திடீரென மனதில் தோன்ற, கடந்த கால நிகழ்வுகளை இரைமீட்கத் தொடங்கினாள்.

பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டு பட்டாம்பூச்சியாய்ப் பறந்து திரிந்த காலம். மைதிலியும் ராகவனும் ஒரே பிரிவில்தான் பயின்றுகொண்டிருந்தார்கள். விரிவுரை தவிர்ந்த ஏனைய நேரங்களில் நூலகத்துக்குச் சென்று பாடங்கள் சம்பந்தமாக இருவரும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்வதும் உண்டு. இவ்வாறு பழகிவரும் காலங்களில்தான் இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது.

''மைதிலி, உண்மையிலேயே நீர் மிகவும் அழகாக இருக்கின்றீர். உம்மிடம் எல்லாத் திறமைகளும் இருக்கின்றது. நான் உன்மீது காதல்கொள்ள அன்புடன்கூடிய இந்த அம்சங்களும் ஒரு காரணந்தான்" என்றபோது...

''நீங்கள் என்ன அழகில் குறைந்தவரா? சிவந்த நிறமும், சுருண்ட கேசமும், நேர்கொண்ட பார்வையும், அஞ்சாத நெஞ்சமும்தான் என்னை உங்கள் விழியம்பில் விழவைத்துவிட்டதே! தாமரையைச் சுமந்துநிற்கும்போது தடாகம் அழகுபெறுகின்றது. பயிர்களைச் சுமந்துநிற்கும்போது நிலம் அழகுபெறுகின்றது. ஒரு ஆணோ, பெண்ணோ காதல் வலையில் வீழ்ந்துவிட்டால் காதலன் காதலி அழகும் பெரிதாகத்தான் தெரியும்" என்று கூறிவிட்டுப் புன்முறுவல் பூத்தாள் மைதிலி.

இந்தக் காதலர்கள் பலவிதமான கனவுகளுடன் ஆலயங்கள், பூங்காக்கள் என்று தங்கள் சந்திப்பைப் பலப்படுத்திக்கொண்டனர்.

ஒருநாள் இருவரும் சுவாரசியமாக உரையாடிக்கொண்டிருந்தபோது ராகவன் தன் குடும்பத்தைப்பற்றியும், தனது அழகிய கிராமத்தைப்பற்றியும் மைதிலிக்கு எடுத்துக் கூறலானான்.

''வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய கிளிநொச்சியில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்துக்கொண்டிருக்கிறன். அப்பா அம்மாவுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை... உம்மைமாதிரி..."

''எங்கட கிராமத்தின் இயற்கை அழகுதன்னைப் பார்த்துக்கொண்டிருந்தாலே ஒரு சுகம்தான் மைதிலி. வயலோரத் தென்றல் தழுவும்போது ஏற்படும் சுகமிருக்கின்றதே! அப்பப்பா... அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அனுபவித்துத்தான் பார்க்கவேண்டும்."

''மைதிலி, நீர் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தனீர். உம்முடைய அப்பா ஒரு அரச அதிகாரியும்கூட. நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தனான். நாங்கள் இருவரும் சேருவதை வசதி, அந்தஸ்துப் படைத்த உம்முடைய அப்பா விரும்புவாரா?" என்று கேட்டதும்...

''அப்பா அம்மாவைச் சம்மதிக்க வைக்கிறது என்னுடைய பொறுப்பு ராகவன். எனது விருப்பத்திற்கு அவர்கள் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள். நீங்கள் ஏன் இதைப்பற்றி யோசிக்கிறீங்கள்?" என்றாள் மைதிலி.

''பெற்றோருக்குப் பிடிக்கவில்லையென்றால் விலகிப்போகிறவர்களையும் பார்த்திருக்கிறன்" என்று கூறி நகைத்தான் ராகவன்.

தம்மைவிட இந்த உலகத்தில் வேறு காதலர்கள் இல்லையென்ற நினைப்பில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தவேளையில், இவர்களின் காதல் விடயம் மைதிலியின் அப்பாவிற்குத் தெரிந்துவிட்டது. அப்பா கோபம்கொண்டார்.

''மைதிலி, உன்னை ஒரேயொரு பிள்ளையென்று செல்லமாய்... துயரமென்பது என்னவென்று தெரியாமல் வளர்த்துப்போட்டன். எல்லாம் நான்விட்ட பிழை. சுதந்திரமாய் வளரட்டுமென்று நினைச்சன். இப்ப அதற்குரிய தண்டனையை அனுபவிக்கிறன். இப்படி நீ செய்வாயென்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. மைதிலி, நேரத்திற்கு வீட்டுக்கு வந்திடவேணும். ஒருத்தருடனும் நின்று கதைக்கக்கூடாது. எங்காவது கண்டனென்றால்... நான் உன்னுடைய அப்பா. மறந்திடாதை..." என்று சத்தம்போட்டவிட்டு, அன்றிலிருந்து மைதிலியைக் கண்காணிக்கத் தொடங்கினார்.

மைதிலி ராகவனை நினைத்து மெழுகுவர்த்தியாய் உருகினாள். 'இனிச் சந்திக்க முடியுமோ?' என்ற ஏக்கம் மைதிலியை வாட்டியது. மைதிலி விழிநீரால் குளிப்பதைப் பார்த்த தாயுள்ளம் தவித்தது.

''மைதிலி, நீ அழாதை குஞ்சு. நீ அழுதால் என்னால் தாங்கமுடியாது. இத்தனை காலமும் கண்கலங்காமல் சந்தோசமாக வாழ்ந்த நீ இன்று காதல் என்னும் வலைக்குள் வீழ்ந்துவிட்டதால் கலங்குகின்றாய். இப்படி அழுதுகொண்டிருந்தால் என்ன செய்யிறது... எழும்பு மைதிலி எழும்பு... எழும்பி முகத்தைக் கழுவிப்போட்டுச் சாப்பிட வா. உனக்குப் பிடிச்ச சாப்பாடுதான் செய்துவைச்சிருக்கிறன்..." என்று அம்மா கூறியவுடன்...

''எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் விரும்பிய சாப்பாடு செய்துதாற நீங்கள் நான் விரும்பிய விரும்பிய வாழ்க்கையையும் அமைத்துத் தரலாந்தானே... எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது ராகவனுடன்தான். இல்லாவிட்டால் என்னை உயிரோடு பார்க்கமுடியாது. இது என்னுடைய உறுதியான முடிவென்று அப்பாவிடம் சொல்லுங்கோ. இந்த முடிவிலிருந்து நான் ஒருபோதும் மாறமாட்டன்" என்று ஆணித்தரமாகக் கூறினாள் மைதிலி.

மகள் உண்ணாமல் உறங்காமல் அழுது அடம்பிடித்துக் கொண்டிருப்பதை அப்பாவிடம் அம்மா கூறியதும் அப்பா கோபம்கொண்டார்.

''நான் ஒரு டாக்ரரையோ, எஞ்சினியரையோதான் மைதிலிக்குத் திருமணம் செய்துவைக்க வேணுமென்று விரும்பினன். மைதிலி எல்லாவற்றையும் வீணாக்கிவிட்டாள். நான் கீறின கோட்டை தாண்டமாட்டாளென்று நினைத்தேன். எல்லாம் வீணாகிவிட்டது. பெற்றோரின் விருப்பப்படி நடக்காத பிள்ளைகள் இருந்தென்ன, விட்டென்ன? இந்திரா, நீ மகளை வளர்த்த லட்சணம் இதுதானே?" என்று சத்தம்போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

மைதிலியைக் காணாது ராகவன் துடித்தேபோய்விட்டான். மைதிலியை நினைத்து துவண்டிருக்கும்போதெல்லாம் பிரிவின் வேதனையைக் கவியாக்கி மனதிற்கு ஆறுதல் தேடுவதுண்டு.

மான் விழி உன்னைக் கண்டு
என் விழி நிலைகுலைந்து
கண்மணி உனக்காக
கவி பல புனைகின்றேன்
கன்னி உன் கனிசொல் கேட்க - என்
துன்பமெல்லாம் பனியாய்க் கரைந்ததம்மா!
அன்பே நீயென் இதயத்தில் மலர்ந்திட்ட
நாள்முதல் பிரிந்தே நானும் வாழ்ந்ததில்லை
இன்று உன்னைக் காணாததால் தவிக்கின்றேன் தனிமையில்...

எப்படியாவது மைதிலியைச் சந்தித்து ஒரு வார்த்தையாவது பேசிவிட வேணுமெண்ற அவா மனதினுள். 'என்ன செய்வது' என்று சிந்தித்துக்கொண்டான்.

'என் அகப்பூங்காவில் சிறைப்பிடித்து தூக்கத்தைக் கலைத்தவளே! ஒருதரம் பேசமாட்டாயா? இதயத்தைப் பரிமாறிக் கொண்டதால் எனக்குள்ளே உன்னைத் தேடுகின்றேன். மைதிலி, என் வேதனை உனக்குப் புரியவில்லையா?'

ராகவன் தன்னை நினைத்துக் கவலையில் உருகிவிடுவானெனக் கவலையுற்ற மைதிலி அப்பாவின் கட்டளையை மீறமுடியாமல் வேதனையுற்றாள்.

மைதிலியின் அப்பா விஸ்வநாதன் சிலமாதங்களாகக் குழப்பமுடன் காணப்பட்டார். மைதிலியுடன் தான் கதைக்காமல் இருப்பதை நினைத்து தனக்குள்ளேயே அழுதுகொண்டார். ஒருநாளைக்கு எத்தனை தடவை அப்பா, அப்பாவென்று அழைத்துச் சிரித்துப் பேசி மகிழ்வாள். தற்போது எத்தனை மாதங்களாகக் கதைக்காமல் பிடிவாதமாக இருக்கின்றாள் என்று நன்கு சிந்தித்து, ஒரு முடிவுக்கு வந்தவராய் மனைவி இந்திராவை அழைத்து....

 

''இந்திரா, நாங்கள் பெண்பிள்ளையைப் பெற்றவர்கள். நாங்கள்தான் ராகவனின் பெற்றோரோடு உடன்பட்டுப் போகவேணும். மைதிலியும் எத்தனை மாதங்களாக என்னோடு கதையாமல் பிடிவாதமாக இருக்கின்றாள். இரண்டுபேரையும் சேர்த்துவைக்கலாமென்று நினைக்கின்றேன். மைதிலி ஒரு பிள்ளைதானே. ராகவனின் பெற்றோரிடம் கதைத்து முடிவெடுத்த பின்பு இருவரையும் சேர்த்து வைப்பமென்று யோசிக்கின்றேன். இந்திரா, நீர் என்ன நினைக்கின்றீர்?" என்று கேட்டதும் இந்திரா திகைத்துவிட்டாள்.

 


''உண்மையாகவா சொல்லுகிறீர்கள்? என்னால் நம்பமுடியாமல் இருக்கின்றதே! உங்களைமாதிரியே உங்களுடைய மகளும் பிடிவாதமாய் இருக்கின்றாள். நான் இரண்டுபேருக்கும் இடையில் நின்று திண்டாடிக்கொண்டு இருக்கும்போது நீங்கள் சொல்லுறது தேனாய் இனிக்குதப்பா! காதலுக்குச் சம்மதம் தராவிட்டால் மனநிலை எப்படி இருக்குமென்று தெரியாதா? நீங்களும் ஒருகாலத்தில் காதலுக்காகப் போராடி ஜெயித்துத்தானே என்னை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டீர்கள். இன்று உங்களுடைய மகள் வெற்றி பெறவேண்டுமென்று காதலுக்காகப் போராடுகின்றாள்..." என்று மனைவி கூறியவுடன் விஸ்வநாதன் சிரித்தவாறே மனைவியை ஓரக்கண்ணால் நோக்கினார்.

ஆவணி மாத நல்லூர் உற்சவம் விமரிசையாக நடந்துகொண்டிருந்த காலம். ஆலயத்தால் வரும்போது விஸ்வநாதன் தனது நண்பர் ஒருவரை ராகவனின் வீட்டிற்குச் சென்று ராகவனை அழைத்துவரும்படி கூறிவிட்டு வந்தார்.

மனைவியை அழைத்து, ''இந்திரா, ராகவனை எங்கட வீட்டிற்கு வரச்சொல்லியிருக்கிறன், ராமன் சீதையின் திருமண விடயத்தைப்பற்றிக் கதைப்பதற்கு" எனக் கூறிச் சிரித்தார்.

''உண்மையாகவா? எங்கட வீட்டிற்கா? நம்பமுடியவில்லையே..." என்று கணவரிடம் கேட்டு திரும்பியவள், ராகவனை அழைத்துக்கொண்டு விஸ்வநாதனின் நண்பர் வருவதைப் பார்த்தது, ''இஞ்சேருங்கோ... ராகவனும் உங்களுடைய நண்பரும் வருகினம்" என்றதும், விஸ்வநாதன் உசாரானார்.

''வாங்கோ. இந்திரா, குடிப்பதற்கு ஏதாவது கொண்டு வா..."

''இப்பதான் தேத்தண்ணி குடிச்சிட்டு வந்தனாங்கள். நீங்கள் நேரடியாக விடயத்திற்கு வாங்கோ" என்றார் விஸ்வநாதனின் நண்பர்.

''தம்பி ராகவன், நான்தான் மைதிலியின் அப்பா. என்னைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீரென்று தெரியும். மைதிலியும் நீங்களும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் நேசிக்கிறீர்களென அறிந்து வெஞ்சினம் கொண்ட நான் பின்பு யோசித்த உங்கள் இருவரையும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைப்பதாய் முடிவுக்கு வந்திருக்கின்றேன்" என்று கூறியதைக் கேட்டதும், 'என்னவோ, ஏதோ' எனத் திகிலுடன் வந்த ராகவன் 'மைதிலி' எனத் தன்னையறியாமல் கூறிவிட்டான்.

அழுதழுது கண்ணீரே வற்றி ராகவனைப்பற்றியே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த மைதிலி, ராகவனின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு 'ஹோலி'ற்குள் ஓடி வந்தாள். ராகவனும் தந்தையும் உரையாடிக் கொண்டிருப்பதை அவதானித்தவளுக்கு, அவளை அறியாமல் மனதில் பதட்டம் குடிகொண்டது. ஒன்றுமே பேசாமல் கதவில் சாய்ந்தவண்ணம் நின்றவளை தகப்பனின் குரல் திரும்பிப் பார்க்க வைத்தது.

''மைதிலி, ராகவனின் பெற்றோருடன் சேந்து கதைத்து முடிவெடுத்து உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாமென்று யோசித்திருக்கிறன். அழுது அடம்பிடித்துக் கொண்டிருக்காமல் சந்தோசமாயிரு. இப்ப கொஞ்சநாளாய் சுப்ரபாதமும் சஷ்டி கவசமும் ஒலித்த வீட்டில் அழுகையும் சண்டையுமாய் இருக்குது. ஆலயமாய் இருந்த வீடு வனமாயிட்டுது. இனி இந்த வீட்டில் சிரிப்பொலிதான் கேட்கவேணும்" என்று மகளை அணைத்தவண்ணம் கூறினார்.

ஆவணித் திங்கள் ஒளி கொடுக்க
மங்கையரெல்லாம் பா இசைக்க
இங்கு வந்ததே இருமனம் இணைந்தநாள்!

இரு வீட்டாரின் சம்மதத்துடன் ராகவன் மைதிலி திருமணம் இனிதே நடந்தேறியது.

காதலித்தவரையே திருமணம் செய்யும் அதிஸ்டம் மைதிலிக்குக் கிடைக்கும்போது சந்தோசத்திற்கு அளவேயில்லை. அதுவும் பெற்றோரின் வாழ்த்துக்களுடன் காதல் நிறைவேறினால் சொல்லவும் வேண்டுமா?

'நான் செய்த புண்ணியமோ - கண்ணா
உன்னைக் காதல் கொண்டேன்
நான் கொண்ட காதல் இன்று
நல்ல முடிவைத் தந்ததினால்
மனமது மகிழ்ச்சியில் நனைகிறதே!" என்று பரவசம்கொண்டாள்.

மகளின் விருப்பப்படி வாழ்க்கை அமைத்துக் கொடுத்தாலும் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடரப் போகின்றாள் என்ற ஐயம் விஸ்வநாதனுக்கு இருக்கத்தான் செய்தது.

மைதிலி ராகவன் இல்லத்திற்குச் செல்ல ஆயத்தமானபோது, ''ராகவன், நான் விரும்பியதை அடைந்ததில் உவகையுற்றாலும் அப்பா அம்மாவை விட்டுச் செல்வதை நினைக்க கவலையாகத்தான் இருக்கிறது" என்றவளை,
''உனக்குமட்டுமா? மைதிலி, மணமக்களாகின்ற எல்லாப் பெண்களிற்கும் திருமண பந்தத்தில் மகிழ்ச்சி இருந்தாலும் சிறிய சோகமொன்று மனதை உறுத்திக்கொண்டுதான் இருக்கும். அது தவிர்க்க முடியாதது" என்று கூறிச் சிரித்தான் ராகவன்.

விஸ்வநாதனும் இந்திராவும் மைதிலியைக் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். ஒருகாலத்தில் இவர்களும் இதே கவலையை அனுபவித்து வந்தவர்கள்தானே... மைதிலியும் பிரிய மனமின்றி விடைபெற்றாள்.

மகிழ்ச்சியும் கலகலப்புமாக மைதிலி ராகவனின் வாழ்க்கைப் பயணம் இனிதே தொடர்ந்துகொண்டிருந்தது.

மைதிலியின் பெற்றோர் அடிக்கடி மைதிலியை வந்து பார்த்துச் செல்வார்கள். தன் மகள் தான் விரும்பியேற்ற வாழ்வை சந்தோசமாக அனுபவிக்கிறாள் என்று எண்ணி மகிழ்வார்கள்.

மைதிலி விரும்பிய வாழ்வை ஏற்காமல் வேறு யாரையாவது மணம்முடித்து வைத்திருந்தால், மகளின் வாழ்க்கை வேறு திசைக்கு மாறியிருக்குமோ என்றும் எண்ணுவதுண்டு.

ஒருநாள் மாலை மங்கியநிலவில் மைதிலியும் ராகவனும் ஒன்றாக இருந்து உரையாடி மகிழ்ந்து கொண்டிருந்தவேளை திடீரென எங்கிருந்தோ ஏவப்பட்ட 'செல்' ஒன்று அவர்கள் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் வீழ்ந்து வெடித்தது.

''மைதிலி, செல் விழுந்திட்டுது" என்று கத்திய ராகவன் குருதியில் குளித்துக் கிடப்பதைக் கண்ட மைதிலி, ''ராகவன்.." என்று பதறி மயக்கமடைந்துவிட்டாள். சிறிதுநேர இடைவெளிக்குப் பின் மயக்கம் தெளிந்து பார்த்தவள் ராகவனை அல்ல: ராகவனின் உடலைச் சுற்றி உறவினர்கள் கதறியவண்ணம் இருந்தனர்.

'ராகவன், இந்த செல் என்மீது விழுந்திருக்கக்கூடாதா? நானும் உங்கள் அருகில்தானே இருந்தேன். என்னைவிட்டுச் செல்ல உங்களிற்கு எப்படி மனசு வந்தது? உங்களுடனேயே வாழவேண்டுமென்று எத்தனை கஸ்ரப்பட்டு உங்களை அடைந்தேன். இன்று என்னை தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்களே! இனிமேல் நீங்களின்றி நான் என்ன செய்வேன்? சந்தித்த நாள் முதல் சிந்தையைப் பறிகொடுத்து சொந்தம் நீங்கள்தானென்று நினைத்து வாழ்ந்தேனே. இன்று தனியே நின்று செய்வதறியாது துடிக்கின்றேனே... நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியுமா, ராகவன்?' என்று நினைத்துக் கதறினாள்.

அவள் சோகநிலையை அறிந்தோ என்னவோ, கார்முகில் படை திரண்டு மெல்ல மெல்ல வானம் விம்முவது கண்டு, தானும் விம்மலுடன் மடைதிரண்ட வெள்ளம்போல் வந்த அழுகையை அடக்கிக்கொண்டு ராகவனுடன் வாழ்ந்த இனிய நினைவுகளை மனதில் பாரமாகச் சுமந்துகொண்டு வீடுநோக்கி வந்த மைதிலியின் சோகம் பெற்றோரையும் வாட்டியது.

''மைதிலி, கவலைப்படாமல் இங்கு வா குஞ்சு. இப்படியே கண்ணீருடன் இருந்தால் என்ன செய்யிறது... ஏதோ நடந்தது நடந்திட்டுது. நீங்கள் இருவரும் சந்தோசமாய் வாழ்ந்ததைப் பார்க்க கடவுளுக்குப் பிடிக்கவில்லைப் போலிருக்கிறது. ராகவனின் நினைவிலிருந்து மீளமுடியாதுதான். நீ விரும்பியேற்ற வாழ்வை நாங்களும் சம்மதிச்சு நிறைவேற்றி வைத்தோம். இப்படி நடக்குமென்று யாருக்குத் தெரியும்? உனக்குமட்டுமல்ல மைதிலி, எங்களுக்கும் இது ஆறாத சோகம்தான். நீ அழுதுகொண்டிருக்கின்ற ஒவ்வொரு விநாடியும் எங்களது இதயமும் வெடித்துச் சிதறுகின்றது..."

''இப்படிச் சோகமாயிருக்காமல் மனதில் ஒரு தென்பை ஏற்படுத்தி புதியதொரு மனநிலையை உருவாக்க முற்படு மைதிலி. அப்படியென்றால்தான் நீயும் புதியதொரு மைதிலியாய் வாழமுடியும். கண்ணை இமை காப்பதுபோல் காப்பாற்றி வளர்த்த எங்களால் உனது வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுக்க முடியவில்லையே!" என்று கண்ணீர் மல்க அவளது கேசத்தை வருடியவாறு பெற்றோர் ஆறுதல் கூறியதைக்கேட்டு, மைதிலி தனக்குள் சிந்திக்கலானாள்.
'
'அப்பா அம்மாவின் விருப்பப்படி எனது காதல் திருமணமாய் நிறைவேறியதால் வாழ்க்கையை இழந்து வரும்போது அவர்களின் ஆறுதல் என் மனதிற்கு ஒத்தடம் கொடுப்பதாய் இருக்கின்றது. சிலவேளை அம்மா அப்பாவின் விருப்பமின்றி எனது எண்ணப்படி ராகவனை மணம்புரிந்திருந்தால், நான் இப்படி அம்மா அப்பாவிடம் வந்திருக்க முடியுமா? அல்லது அவர்கள் என்னை ஏற்றிருப்பார்களா? உன் விருப்பப்படி நடந்ததால்தான் இப்படியாகிவிட்டதென்று என்மேல் கோபித்திருப்பார்களே! பெற்றோரின் விருப்பப்படி எனது வாழ்க்கை அமைந்ததால் இன்று அவர்கள் எனக்கு ஆறுதலாக உள்ளார்கள். பெற்றோர் எப்போதும் எமது நன்மைக்காகத்தான் பாடுபடுவார்கள். சிலசமயங்களில் எமது அவசரபுத்தி அவர்களை மீறச்செய்தும்விடுகின்றது. ஆனால் இன்று எனது வாழ்க்கை அனுபவம் எல்லாவற்றையும் உணரவைத்துவிட்டது" என்று எண்ணிக்கொண்டு பெற்றோரை இறுக அணைத்துக்கொண்டாள் மைதிலி.

(பிரசுரம்: கலையோசை, ஜேர்மனி)

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree