முள்

18 செப்டம்பர் 2004
ஆசிரியர்: 

 

ண்ணாடி முன்நின்று, முன்னும் பின்னும் தன் அழகைப் பார்த்து இரசித்த சாராவைப் பார்த்தபோது எனக்குக் குபீரெனச் சிரிப்பு வந்தது. ஆனால் சிரித்துவிடக் கூடாதென்பதில் அவதானம் செலுத்தியபடி மகள் சாரதாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'தான் அழகாகவும் அம்சமாகவும் இருக்கிறாளா' என்ற ஆதங்கம் அவளை ஆட்டிப்படைத்திருக்க வேண்டும். அதனால்தான் அடிக்கடி கண்ணாடி முன் நின்றுகொண்டிருக்கிறாள் என்று கணக்குப்போட்டேன்.

'இவளின் வயதில் நான் எப்படி...'

அதை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வரும். மகள் சாராவைப்போல கண்ணாடி முன் நின்றதில்லை. வீட்டிலிருந்த ஒரேயொரு கண்ணாடியும் தலைவாசலில் மான் கொம்புக்கிடையில் ஆளுயர அளவுக்கு உயர்த்திக் கொழுவிவைக்கப்பட்டிருந்தது. எப்படித்தான் எட்டியெட்டிப் பார்த்தாலும் என்னைக் காட்ட மறுத்த கண்ணாடியை நானும் கணக்கெடுத்ததில்லை. அப்பப்போ அம்மா தலையிழுத்துக் கட்டிவிடுவார். சிலவேளை பெரியண்ணாவும் இழுத்துக் கட்டுவார். இரட்டைக் குடும்பிபோட்டு நான் குதித்துக் குதித்து ஓடுவதைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் இரட்டைக் கொம்பன் யானையென்று சின்னண்ணா சிரிப்பான். பவுடர் போடுவதுகூட எனக்குச் சரியான விருப்பம். அம்மா, தம்பிக்கு போடும் பவுடர் டப்பியை மெல்லத் திறந்து அந்த மெத்தென்ற பஞ்சுப் பொட்டலத்தால் நல்லாய்ப்போட்டு அப்பிக்கொள்வது ஆனந்தமாயிருக்கும். அழகாக இருக்கிறேன் என்ற களிப்பில் அத்தனை பேருக்கும் முன்னேபோய் நிற்பேன். அங்கேயும் சின்னண்ணா நின்றால் போதும். ''இண்டைக்கு எங்கடை கறுத்தக் கோழி நல்லாய்ச் சாம்பல் குளிச்சிருக்கம்மா" என்று சிரிக்காமல் சொல்லுவான். இப்படித்தான் நான் வளர்ந்தேன். இதைவிட இன்னொன்றும் சொல்லவேண்டும். வயது ஒன்றிரண்டாக ஏற ஏற, என் கைகள் கால்கள்மட்டுமல்ல, முன்னும் பின்னுமான அங்க அடையாளங்களும் செழித்து வளர்ந்ததை நான் பார்க்கும்முன்னே பக்கத்து வீட்டுப் பத்மா மாமி பார்த்திருக்கவேண்டும். உடனேயே ஓடிவந்து, ''என்னக்கா... பூரணி சட்டையில்லாம களிசாணோடை நிண்டு குளிக்கிறாள். நீங்கள் பாக்கிறேல்லையே" என்று பொரிந்த பிறகுதான் அம்மா வந்து என் காதைத் திருகி, ''ஏனடி இப்பிடி நிண்டு குளிக்கிறாய்... உனக்கு வெக்கமில்லையே?" என்றார்.

எனக்கு அம்மா சொன்னது எதுவும் ஏறவில்லை. ஆனால் காதுமட்டும் சரியாக வலித்தது. அப்படியொரு முறுக்கைத்தான் அம்மா தந்திருந்தார். அதன்பிறகு நான் சட்டைபோட்டுக் குளிக்கத் தொடங்கினேன். அதுவும் போதாதென வேலிக்கு மறைப்பு, கிணற்றுக்கு மறைப்பு எனப் பலத்த பாதுகாப்புப்போட்டார்கள். இவையெல்லாம் நடந்தேறிய பின் எனக்குள் ஒரு 'இது' வளர்ந்தது. யாரைப் பார்த்தாலும் வெக்கம்... என்னை யாராவது பார்க்கிறார்களா என்ற தேடல் எல்லாம் எனக்குள் ஆரம்பமானது. கண்ணாடி தேடினேன். சாராவைப்போல் என்னை நானே இரசிக்கத் தொடங்கினேன். ஆனால் எனக்கும் இவளுக்குமிடையில்.... அது ஒரு பெரிய இடைவெளி. எனக்கு பதினாறு வயதாயிருந்தது. ஆனால் இவளுக்கு எட்டுக்கூட நிறையவில்லை.

என்னைப்போல அசடாக என் மகளில்லை. அவள் இந்த எட்டு வயதிலேயே தான் எப்படி இருக்கிறேன் என்பதை அடிக்கடி பார்த்துக்கொள்கிறாள். ஆனால் நான்..? வெள்ளி நரை இழையோடத் தொடங்கிவிட்ட வயதிலும் வாழ்வின் இரகசியம் புரியாமல், வாழும் வகை தெரியாமல் முழிக்கிறேன். இப்படி ஏன் இருக்கிறேன்... இதுதான் வாழ்க்கையோ என்ற ஏக்கமும் எட்டிப் பார்க்க எத்தனையோ தடவை பதில் தேடிவிட்டேன். முடிவு இன்னும் இறந்தகாலத்தில்தான் என் தேடல் நிற்கிறது.

எனது கிராமத்தின் அந்த அழகான சின்ன வீட்டில் அப்பா, அம்மா, அண்ணாமார், தங்கை, தம்பியென ஒரு ஆனந்த உலகில் என் சாராக் குஞ்சைப்போல் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தேன். அந்த உல்லாச வாழ்க்கையில் என் ஆட்டத்தைப் பார்த்து அத்தனை பேரும் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் இன்று என்னைச் சூழ்ந்திருக்கும் அத்தனைபேரும் என்னை ஆட்டிவைத்து மகிழ்கிறார்கள்.

சாணத்தால் மெழுகிய எங்கள் வீட்டுத் தரையில் பாய்விரித்து, மண்ணெண்ணெய் விளக்கின் மங்கிய ஒளியில் அண்ணாவோடிருந்து படித்த இனிய நாட்கள் மறக்க முடியாதவை. அண்ணா சொல்வார், ''தங்கச்சி, நீ சரியான கெட்டிக்காரி. குமாரன் சரியான மக்கு. வாய்ப்பாடு தெரிஞ்சால்தான் கணக்கு பிழைக்காமல் செய்யலாம்".

இதைக்கேட்டு உள்ளம் துள்ள சின்னண்ணாவைப் பார்ப்பேன். அவன் என்னை முறைப்பான். இப்போது வாழ்க்கையின் கணக்குகளை முடிக்க எந்த வாய்ப்பாடும் புரியாமல் உலகத்தைப் பார்த்து நானும் முறைக்கிறேன்.

நான் படிப்பில் சரியான சுட்டி. படிப்படியாய் ஏறி க.பொ.த. உயர்தரத்தில் நின்றபோது முன்னும் பின்னும் பலர் வந்தனர். அவர்களில் மோகனைப் பார்த்துச் சற்றுக் குழம்பிப் போனேன். அவன் நெருக்கமாய் வந்து நின்றபோது நெஞ்சு படபடத்ததுதான். ஆனால் கதை தொடர்ந்தபோது நான் சற்று இறங்கிப்போய்விட்டேன். மோகனின் கண்களில் தெரிந்த கனிவு என் மனதை அலைக்கழித்தது. அவனின் காந்த சக்திகொண்ட அந்தக் கனிவுக் கண்களை சந்திக்கும் துணிவு இல்லாமல் நிலம் நோக்க, அவனோ அதைச் சாதகமாக்கி, ''பூரணி, வீண் பேச்சுப் பேசி எங்கடை பொன்னான நேரத்தை ஏன் வீணடிக்க வேணும்" என்று சொன்னபோதே மெத்தென்ற தென்றல் என்னைத் தழுவியதுபோல் உடல் கிளுகிளுத்தது. இருந்தாலும் இனம்புரியாத வலியுணர்வும் இடையிடை ஏற்பட்டதுதான்.

''என் மனம் ஏன்தான் உன்னிடம் மயங்கிக்கொண்டதோ?" என மோகன் கேட்டபோது வந்த கோபம்கூட மின்னலாக மறைந்துபோன மாயம் புரியாமல் மனம் தவித்தது.

எங்களது சிறுசிறு சந்திப்பு நொடிகள், பெரும் தீயாகப் பரவி என் அம்மாவைத் தொட்டபோதே அவர் துடித்துப்போனார். கண்டிக்கத் தெரியாத அம்மா கண்கலங்க, ''பிள்ளை, கரும்பு கட்டோடை இருந்தால் எறும்பு தானாய் வரும். படிச்ச பிள்ளையான உனக்கு நான் என்ன சொல்ல..." என்று சொன்னபோது அம்மாவின் கண்கள் உடைப்பெடுத்து பாய்ந்தது. அதைக் கண்டு நானும் ஆடிப்போய்விட்டேன்.

அவமானமும், துக்கமும் வாயை அடைக்க பேச்சு வராமல்... பேச முடியாமல் திணறினேன். மனம் அலறித் துடித்தது. அம்மாவின் வார்த்தையில் கரைந்துபோய் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து கண்ணீர்த்துளிகள் கன்னத்தில் விழுந்ததைப் பார்த்த அம்மா, ''ஒரு காலத்திலை நாங்களும் வசதியாக வாழுவமெண்டு நினைச்சன். ஆனால் நீ இப்பிடி பணக்காரத் திமிர் பிடிச்சவையின்ரை வலையிலை விழுவாயெண்டு நினைக்கேல்லை" என்று குமுறியபோது அவமானத்தால் என் உடல் குறுகிப்போனது. என்னைப்பற்றிய துயரத்தால் கண்ணீர் விட்டழுது சிவந்திருந்த அம்மாவின் கண்கள் என்னை என்னவோ செய்தது.

நெஞ்சைக் கவ்விய துயரத்தை விழுங்கிக்கொண்டு, கண் இமைகளைச் சுட்ட கண்ணீரைச் சமாளித்துக்கொண்டு அம்மாவைத் தேற்றினேன்.

 


''அம்மா, பணம் வேறை... பாசம் வேறை... நான் உங்களுக்கு ஒண்டுமட்டும் சொல்லுறன். எங்கடை இந்தச் சின்ன வீட்டில் இருக்கிற இனிமை, சந்தோசம்தான் எனக்கு பெரிசு. இதெல்லாத்தையும் மறந்திட்டு ஒருநாளும் ஓடிப்போகமாட்டன்."

 

இப்படி நான் சொன்னதும் அம்மாவின் கண்ணீரைத் துடைத்தாற்போல் ஆறுதல்பட்டார்.

எனக்கோ உடல் முழுக்க அனலாக எரிந்தது. மனம் முழுவதும் என் வீட்டுப் பாசமலர்களின் முகங்கள்... அம்மாவின் பக்கத்திலிருந்து ஆயிரம் கதைகள் பேசிச் சிரிப்பது... சின்னண்ணாவோடு தினமும் சண்டைபோடுவது... தம்பி தங்கையோடு கொஞ்சி மகிழ்வது. எல்லாவற்றிலும் மேலாக அதட்டியே பேசி அறியாத அப்பாவின் அரவணைப்பு... இவர்களின் மொத்த உருவமாய் அன்பைக்கொட்டும் அண்ணாவின் பாசம்... இந்தக் கூட்டு வாழ்க்கையின் குதூகலம், அன்பான உறவுகளின் நெருக்கம் உலகில் வேறெங்குதான் கிடைக்கும் என்ற தவிப்பினிடையேயும் மோகனின் நினைப்பும் மனதை அழுத்தியது.

என் புத்தி தடுமாறித் தவித்தது. மோகனின் அன்பையும் அளவுகடந்த காதலையும் மறக்கமுடியாமல் மனம் ஏங்க கடைசிச் சந்திப்புக்காகக் காத்திருந்தேன். 'மோகன்... மோகன்' என மனம் அடித்துக்கொண்டிருக்க, மோகன் வந்து சேர்ந்தான்.

அடக்கி வைத்திருந்த அத்தனை துயரங்களையும் அவன் தலையில் இறக்கியபோது, ''என்ன பொய் சொல்றியா... இல்லை நிஜமா?" என்றான் திகைப்போடு.

பதில் கூறமுடியாமல் மௌனமாய் நான் அழ, அவன் தானும் அழுது, ''பூரணி, அழாதையும்... எங்கடை காதல் சாகாது. நீளும்... உங்கடை அம்மா நினைக்கிறதும் நியாயம்தான். ஆனால் நாங்கள் காதலிக்கிறது தப்பும் இல்லை. வாழ்ந்து காட்டுவம் எண்ட நம்பிக்கை எனக்கிருக்கு. என் காதல் ரோஜா வாடிப்போகாது" என்று என் கைபிடித்து சத்தியம் செய்ததோடு, எங்கள் காதல் வாழ்வின் கடைசிச் சந்திப்பு முடிந்தது.

காதலை வாழவைக்க வேண்டுமென்ற வெறியோடு கடல்தாண்டி வானத்தில் பறக்கமுயன்றான் மோகன். வெற்றியும் பெற்றான். நானோ அவன் வார்த்தைகளின் துடிப்பில் வாழ்ந்துகொண்டிருந்தேன். ஆண்டுகள் சில அகன்றது. அன்று மோகனிடமிருந்து வந்த கடிதத்தோடு சேர்ந்து ஜேர்மனிய அரசிடம் என்னை மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டிய பத்திரங்களும் வந்தது. நானும் வானத்தில் பறக்கத் துடித்தேன். அப்பா, அம்மா, அண்ணா என அனைவரையும் ஆரத்தழுவி, அதுவரையில் காதலனாகக் கண்ட என் கணவரைத் தேடிப் பறந்துவந்தேன்.

எங்கள் காதல் அந்நிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதே தவிர, அவரது வீட்டுக்காரரால் அவமதிக்கப்பட்டது. இவையெல்லாம் வந்து சேர்ந்ததால் இயல்பாய் வரவேண்டிய சந்தோசம் எனக்குள் இல்லாமல் போனது. தூரத்தே போன என் குடிசை வாழ்வின் சுகம் சுட்டுப்பொசுக்கியது. கணவன் என்ற உறவுமுறையொன்று அட்டையைப்போல் என்னோடு ஒட்டியிருந்ததில் என் உயிர் மெதுவாக உறிஞ்சிக் குடிக்கப்பட்டது. என் வாழ்வில் தொலைத்தது... தொலைந்துபோனது எல்லாவற்றிற்கும் ஈடாய் இன்று மிஞ்சியிருப்பது என் றோஜா மலர்கள் சாராவும் சமரனும்தான். என் அன்பு மலர்கள் மலர்ந்து மணம்பரப்பி அகிலத்தை அன்பால் வெல்லவேண்டுமென்ற ஆசையொன்றே என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

இரத்தமும் சதையும் மட்டுமல்ல, என் உணர்வுகளும் மெதுமெதுவாகச் சாகவேண்டும் என்பதற்கான வலி, கடிதங்கள் என்ற பெயரோடு கணவன் வீட்டிலிருந்து கரிசனையோடு வந்துகொண்டிருந்தது. பார்க்கும் ஒவ்வொரு தடவையும் என் நெஞ்சு ஆத்திரத்தால் குமுறும். ஆனால் முகத்தில் கொப்பளித்துவிடாமலிருக்கப் பிரயத்தனப்படுவதை என்னவரும் பார்ப்பார். பார்த்தும் பார்க்காதவர்போல நடப்பார். இதுதான் காதலா என என் மனம் கேட்கும். அமைதியிழந்து அழுவேன்.

அழுகின்ற ஒவ்வொரு பொழுதும் அம்மாவின் முகம் அப்படியே ஓடிவரும். தாங்க முடியாத தவிப்பையும் மீறி அம்மா சொன்ன அந்த வார்த்தையின் வலி எட்டிப் பார்க்கும். ''நீங்களும் வசதியாயிருப்பியளெண்டு நினைச்சா" இப்படித்தான் சொன்னார். இது வெறும் நினைவுமட்டும்தான். நிஜம் இங்கு வேறு.

கணவரும் நானும் கால்கடுக்க ஓடுகிறோம். காதல் வாழவேண்டும் என்பதற்காக அவர் வாழ்கிறார். காதல் சாகக் கூடாது என்பதற்காக நான் செத்துக்கொண்டிருக்கிறேன். உழைப்பதை உறிஞ்ச என் கணவர் வீட்டார் ஒருபோதும் தயங்கியதில்லை.

உழைக்கிறோம். கொடுக்கிறோம். உறவுகளை இங்கு எடுக்கிறோம். அப்படி வந்து சேர்ந்தவர்களில் உதயாவும் ஒருத்தி. உல்லாசமாக உட்காரவைத்துப் பார்த்ததோடு ஊரே மெச்சும்படி கல்யாணமும் செய்துவைத்தோம். கடைசியாய் கண்டதும் கேட்டதும்... இதுதான்.

''இல்லாத இடத்திலையிருந்து வந்ததாலை எங்கடை அண்ணி எல்லாத்தையும் சமாளிச்சுப்போடுறா... பசியும் பட்டினியும் பட்டவைக்குத்தானே தெரியும்... பார்த்தே அறியாத எனக்கு அவவைப்போல் சாப்பிட நேரமில்லாமல் ஓடேலாது. அண்ணியைப்போல உந்தக் கிழிசல் வேலைகளைச் செய்ய எங்களாலை ஏலாது... எங்களுக்கேத்த இடத்திலை கழுத்தை நீட்டினால் எப்பவும் கௌரவம் இருக்கும்..."

உதயா கொட்டிய வார்த்தைகளெல்லாம் தேள்கொட்டியதுபோல கடுகடுத்தது. என் றோஜாக்களின் சிரிப்பில் எல்லாக் கடுப்பும் தூசியாய் தெரிய நடந்துகொண்டபோது, உதயா பொறுமையிழந்து என் மலர்களைக் கிள்ளி மகிழ்ந்தாள். என் இதயம் வலித்தது. அவள் கையை ஒடிக்கத் துடித்தேன். துடிப்புமட்டுந்தான். துளியளவும் செயலில் காட்டமுடியாமல் தூண்போட்டார் என் கணவர்.

''உதயா என்ன அன்பிலைதானே அதட்டுறாள்... அதை ஏனப்பா பெரிசாய் எடுக்கிறீர்" என்று சொன்னதைக் கேட்டபோது என் உள்ளம் காதலைக் காறி உமிழ்ந்தது.

தவ்வல் பொடியனான கோபியை 'நீ' என்று சொன்னதற்காக கொதித்துப்போய், ''அண்ணி, பிள்ளையை நீயெண்டு சொன்னால் நாளைக்கு அதுவும் உங்களை நீ எண்டு கூப்பிடுவான்" என்று மிரட்டினாள். அவளது மிரட்டலைவிட அண்ணரின் சிரிப்பு என்னைக் கொன்றது. ஆனால் இன்று என் றோஜா மலர்கள் ஒடிக்கப்படுவதுகூட அன்பான அதட்டலென்று அடக்கமாயிருந்தது ஆத்திரத்தை அளவுமீறிப் போகவைத்தது.

திருந்தாத இவர் இனிமேல் திருந்துவது அருமை என்பது தெளிவாகத் தெரிந்ததும், நானாக விழித்துக்கொண்டேன். எதற்கும் அளவு இருக்கவேண்டும் என்பதில் உறுதி எடுத்துக்கொண்டு அவர் முன்சென்று நியாயம் கேட்டேன்.

''இவ்வளவு காலமும் நான் கவலையை வென்று வாழமுடிந்ததற்குக் காரணம் என் காதல் றோஜாக்கள் மொட்டிலே கருகக்கூடாதென்ற ஆசைதான். ஆனால் நீங்கள் காதலைத் தொலைத்துவிட்டுத் திரிகிறீர்கள். வாழ்க்கையில் நாங்கள் காதலித்தால்மட்டும் போதாது. மனைவியை என்றும் காதலிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நான் காதல் வாழும் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து கண்டது, காதலை மதிக்க மறுக்கும் நாய்களையும், ஆயிரமாய் அள்ளி வீசி நாய்களை மதிக்கும் மனிதர்களையும்தான். பணம்மட்டும் பகட்டான வாழ்வைத் தந்துவிடாது. என் பிள்ளை றோஜாக்கள் வேதனையைச் சுமக்கக் கூடாது. வலிகளைத் தாங்காது இதழ் ஒடிந்து போகாமலிருக்க நான் முள்ளாயிருப்பேன். இனி எந்த உறவும் றோஜாவைக் கிள்ளவிடாமலிருக்கக் காக்கும் முள்ளாய் காவலிருப்பேன்."

நான் பேசிக்கொண்டேனே தவிர சிலந்தி வலையைப் பின்னிய சிலந்தியே அதில் விழுந்துவிட்டதுபோலத் தன் தலையைத் தாழப்போட்டபடி இருந்தவரைப் பார்த்தபோது சிரிப்பும் வந்தது: அழுகையும் வந்தது.

ஆண் ஆணாக மாறாதவரை அவர்கள் தலைநிமிர்ந்து நிற்பது முடியாது என்பதை உணர்ந்ததும் என் நெஞ்சில் முள்ளாய் வலித்தது.

(பிரசுரம்: கலையோசை, ஜேர்மனி)

We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree