பற்றும் வரவும்

26 மே 2007
ஆசிரியர்: 

 

விடமாட்டேன் என்று மழை வானத்தைப் பிய்த்துக்கொட்டிக் கொண்டிருந்தது. இந்த மழை தண்ணி ஒன்றும் எனக்குப் பெரிதல்ல.

அது என் மேலாகவே கொட்டித் தீர்த்தாலும் எனக்கொன்றும் சுணைக்காது. அப்படியொரு பழக்கம். வெளி நாட்டு வாழ்வில் கடும் மழையெனில் குடையைக் கண்ட இடத்தில் வாங்குவது. வந்த மழை நின்று கொண்டால் போனவிடத்திலே குடையை மறதியாக விட்டு வருவது. நனைந்தால் தலையை துடைப்பது கூட இல்லை.

மழை, பனி, வெயில்.. யாரதைப் பார்த்தார்கள்.. அந்த இயற்கையோடு ஒத்து வாழ்ந்து பழகிப்போச்சு. தூறல் பிடித்தா தும்மல், தொப்பமாய் நனைந்தால் சளி இதுவெல்லாம்.. இந்த செல்லமெல்லாமே நாட்டில்தான். வெயிலுக்கொரு வெளி நாட்டுக் குடை, மழைக்கொரு நம்நாட்டுக்குடை. கையோடு குடையெடுத்துப் போவது துவாய் கொண்டு துடைப்பது. மரநிழலில் ஒதுங்குவது
அதை நாட்டோட விட்டாச்சு. வெளி நாட்டிலே இயற்கையோடு ஒன்றிப் போய்விட்டோம்.

அது வன்னிமாவட்டத்தின் வட்டக்கச்சிப் பிரதேசம். வளங்கொழிக்கும் நிலமது. மண்ணை நம்பி, பழமரங்களை நம்பி, தென்னங் குரும்பையை நம்பி, கால் நடைகளை நம்பி வாழ்பவர்களும்.. தாய்த்தேச விடியலுக்காக விதையானவர்களும்.. விடியலை நோக்கி விழித்திருப்பவர்களும்.. கலை, கல்விக்காரியங்களில் கண்ணும் கருத்துமாயிருப்பவர்களும் இங்கே, இங்கே தான் வாழ்கின்றார்கள்.

இன்னுமாய் மழை பெய்து கொண்டிருந்தது. மறந்து போயிருந்த இஷ்ட தெய்வங்களையெல்லாம் நினைந்து வேண்டிக்கொள்ள வைத்துக் கொண்டிருந்தது இந்த மழை. காகம் இருக்க பழம் விழுந்தது போல மழை குறையவே, "இப்ப இறங்கலாம் தானே" பயத்தோடு தான் சொன்னேன். அங்க வந்திருந்த அயலட்டம் இருந்ததால் கூச்சம். அவர்கள் என்னைப் பார்க்கவும் இங்கு வந்திருந்தார்கள்.

"தூறல் பட்டால் காய்ச்சல் வரும்" கத்தி சொன்னது காதை வதைத்தது. "வெளி நாட்டுக்காரருக்கு காய்ச்சல் வாராது, வந்தாலும் சுலைமான், அப்பலோ, நவலோக இருக்கிறது. இங்க மழை தண்ணி பாராம அலைஞ்சு போட்டு அதுக்கு அள்ளிக் கொடுத்து விட்டுப் போவினம். அதுதானே நடக்குது."
"தென்னங் குரும்பையை நம்பி சீவியம் பண்ணும் நாங்க சுக நலத்தைப் பார்க்கத்தானே வேணும். அது வெளி நாட்டுப்பணம்" என்றது இன்னுமொரு குரல். கேட்கவே பயமாயிருந்தது. ஆனாலும் அதில் பாசமுமிருந்தது. வேகம் வேகமாக மாறி மாறி கதைத்து முடித்திருந்தார்கள் அயலட்டம்.

உங்க நாங்க மழையை, பனியை, வெயிலை நமக்குச் சாதமாக்கி அதற்கு மேலாக அத்துமீறி வந்து விட்டால் பத்து யூரோ மூன்று மாதத்துள். இழுபடுமா என்று கணக்குப் பார்த்து போகும், சிற்சில நேரங்களை இங்கு பறைய முடியுமா என்ன? அப்படி அதைச் சொன்னாலும் அட இந்த வாழ்க்கையா வாழுகிறீங்க என்று திரும்ப கதை வரும். மௌனித்த மனதோடு பொறுத்ததோடு பொறுத்தேன். மனதுக்குள் போட்ட திட்டம் இந்த மழையால் தடைப்படுமா.. இதுதான் எனக்குள் இப்போ..

மேலும் கொஞ்சம், கொஞ்சமாக மழை நின்று போனது. மறுபடியும் வரலாம். போகிற வழியில் வந்தால் வரட்டும். இப்ப மழை நின்றதைச் சாக்காக வைத்து முதல் வெளிய இறங்க வேணும். மோட்டார் சைக்கிள கீழே இறக்கியதும் அதைவிட வேகமாகவே நான் இறங்கினேன் . இறங்கி அதே கெதியில் பின் புறம் ஏறியமர்ந்தேன். பற்றைகள், படு புதர்கள், பழக்கமற்ற காடுகள் முல்லை, மருதமாக பழக்கமாயிருந்தது ஓருவாரமாகவே. என்னை ஏற்றிக்கொண்டு இளஞ் சிரிப்போடு ஆதவன் ஆயத்தமான வேளை அங்கே இன்னொரு பெண்ணின் குரல்.

"இஞ்ச அயலட்டம் கதைக்கும், பகுடி பண்ணுவினம்.. இந்த உடுப்பெல்லாம் இங்க போடுதில்லை. காற்சட்டைக் கழற்றி விட்டு, சேலையைக் கட்டலாமே. நேற்று இப்படி காற்சட்டை, கண்ணாடி, தொப்பியோட போன போது வேலிக்கு பின்னால நின்று பார்த்து விட்டு, இங்க வந்து கேட்டினம் 'கண்காணிப்புக் குழுவிலிருந்து ஒரு பொம்பிள வந்து உங்க வீட்டில நிற்கிறாவாக்கும்' எண்டு கேட்டினம்." எனக்கு வெட்கமாய் போய்விட்டது.

'இதற்கேன் நீங்க வெட்கப்படுகிறீங்க.. அது பெரும் பெருமையாச்சே இதில என்ன கிடக்கு வெட்கப்பட..?' ஆதவனே இதைச் சொன்னதும் நானும் உசாராகினேன். "எனக்கு உங்கட பிரதேசத்தை சுற்றிப் பார்க்க வசதியாகயிருக்கு. உங்களுக்கு ஏதும் இடைஞ்சலாக இருக்கா" என்ற போது, அவர்கள் அதற்கு மேலாக தங்கட நாளைய திவச அலுவல்களோடு ஒன்றிவிட்டார்கள்.

மனத்துள் மகிழ்ச்சியோடு, மழை வருமா என்று வானத்தைப் பார்த்தேன்.
எல்லாவற்றிலுமிருந்து அப்போதைக்கு விடுவிக்க.. ஆதவன் ஊன்றி மிதியை உதைத்து பிரயாணத்தை ஆரம்பித்தார்.

அதுவரை வெட்கப்பட்டு ஒழிந்திருந்த அயலட்ட சின்னதுகள் அழகாய்ச் சிரித்துபடி கைகளை அசைத்து வழியனுப்பின. அதே ஊரின் சந்தியை அண்மித்த போது தேசத்தின் குரலாக பாடல்கள் ஒலித்தபடி, கொடிகள் காற்றில் அசைந்தாடியபடி வருக வருகவென எமை வரவேற்ற காட்சி இலக்கியத்தில் உயர்வு நவிற்சி அணியை ஞாகப்படுத்திக் கொண்டிருந்தன.

அவசியமாக ஜேர்மனிக்கு தெலைபேசி எடுக்க வேண்டும். இடையில் விட்டு வந்த பெண்ணின் குரல் ஏ.பி.சி வானெலி நிகழ்வினது ஒளவைத் தொடரை பற்றிப் பேசவேண்டும். தனியார் தொலைபேசி நிலையத்துள் போனதும் எல்லா நாட்டு நேரங்களும் ஆழகாக வரிசைப் படுத்தியிருந்த பாங்கு மிகவும் கவர்ந்தது. அதை முடித்துக் கொண்டு வெளி வந்ததும் வெளியே பாதையோர வளவில் பழைமைத் தோற்றத்தில் ஓர் குடில். இந்தக் குடில் வேயப்பட்ட வடிவு மிக அற்புதமாக இருந்தது. பய பக்தியுடன் பாதணிகளைக் கழற்றி வைத்து விட்டு இந்த வீரர் தமிழ்க்குடிலுக்குள் நுழைந்தேன்.

"வாங்க! வாங்க!" குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி ஏதோ ஒன்றைத் தேடிய தேடல் விழிகள். அந்த பிரதேசத்திற்குரிய பொறுப்பான கம்பீரமான பெண் வேளம் தேற்றம். அந்தக் களையான, எழுச்சியான பெண்ணின் வீரக்காதல் மேல் காதல் பிறந்தது. இந்த மருளும் விழிகள் ஏதோ என்னைப்பெருமைப் படுத்தின .அதே விழிகள் எங்கே ஒருகணம் நெய்தல் கொண்டகாட்சி எனக்குள் மீண்டெழுந்தன. இங்கே வந்த நினைப்பு. இதுதான். 'எங்கே. எங்கே ஒரு கணம்.. விழிகளைத் திறவுங்கள்..' என்ற வரிகளை ஞாபகப்படுத்தின. 'வாசலில் காற்றென வீசுங்கள், வாய்திறந்தோர் வார்த்தை பேசுங்கள்..' இருதயத்தை இறுக்கிப் பிழிந்தன. இவர்கள் தான் தேடும் இலட்சியப் பெண்ணோ?

குடிலுக்குள் உட்புறமாக பொருத்தப்பட்டிருந்த மண்ணுக்காக, மண் விடியலக்காக வீழ்ந்த வித்துக்கள் விளைந்திருந்தனர் புகைப்படங்களாக. அதைப் பார்த்தபடியே நின்ற என்னை, "என்ன குடிக்கிறீங்க?" "நன்றி. நான் தேத்தண்ணி குடிப்பதில்லை" என்றதுமே நெக்டோ ஒன்றைத் திறந்தபடி நேசித்து நின்ற அந்தப் பெண் போராளியைப் பரவசமாகவே பார்த்தேன்.

அவளோடு பேசப்பேச பெருமை சுரந்தது. விட்டுப் போக மனமற்றிருந்தேன். ஆதவன் நேரத்தை நினைவாக்கவே எழுந்தேன் .தியாக திலீபனின் 'ஈகத்தின் இமயம்' என்ற நூலினை அன்பளிப்பாக தந்து, பிறகும் சந்திப்போம் என்றபடி என் பேச்சுக்கு முற்று வைக்காது வழியனுப்பிய நினைப்போடு தொடர்ந்தேன்.

மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்தது. வாய்க்கால் வழியாக மடைதிறந்து ஓடும் மழையழகை இரசித்தும், கடிந்தும் கொண்டேன்.

மன்னிக்க முடியாத காலநிலை. மழைக்கோட் வானத்தை எங்கள் மேல் விழாது ஓரளவு தடை போட்டது . "ஏன் இந்த ரோட்டெல்லாம் இப்படியிருக்கு? ஏன் திருத்தாம பல இடங்கள் இன்னும் அப்படியே கிடக்கு.." சினந்த என்னை இடைமறித்த ஆதவன் "இப்படியே கிடந்த படியால்தான் இந்தியன் ஆமி உள்ள ஊடுருவ முடியாமற் போச்சு அல்லது வட்டக்கச்சிலயும் சில இடம் அழிந்திருக்கும். என்ர வீட்டு வளவில் பின்னுக்குள்ள இரண்டு மாலும் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த இரண்டு குடும்பங்கள் இருந்தவை. ஒரு வேளை இங்க இருந்த, நாங்க அங்க இடம் மாறியிருந்தால் யாழ்ப்பாணத்தார் ஒரிடமும் தன்னும் தந்திருக்காயினம் என்று வன்னி மக்கள் சாடையாச் சொல்லுவினம்." சில உண்மைகளைக் கஸ்டமென்றாலும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். காலப்போக்கில் இதுக்கெல்லாம் ஒரு மாற்றம் வரும் இல்லையா என்ற கருத்தோடு மக்கள் காத்திருக்கினம்.

மழை இறுக்கிப் பெய்தது. வழியில் பெரிதான பாம்பு துண்டம், துண்டமாக செத்துக் கிடந்தும் பயம் காட்டியது. என் பயத்தைக் கண்ட ஆதவன் அது தண்ணிப் பாம்பு இது ஒன்றும் செய்யாது வாய்க்கால் மழைக்கு அடிபட்டு வந்திருக்கும் வாகங்களில் நெரியுண்டு போச்சு.என்னுள் சிரிப்பு வந்தது. என்ர சின்ன வயதில் றப்பர் பாம்பை வைத்துக் கொண்டு பயங்காட்டும் ஆதவன் செத்த பாம்பு என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் மழைக்கு தப்பி ஒதுங்கி நிற்பம் என்றால் குறைந்த வசதியாக்கூட ஒரு கட்டிடம் அங்கு தென்படுவதாகவில்லை. வெள்ளத்தில் எமது வாகனம் தாழ்ந்தும் மிதந்தும் ஓடிக்கொண்டிருந்தது. பள்ளத்திலும் வெள்ளத்திலும் இங்கு அனைத்து வாகனமும் கச்சிதமாக ஓடி முடித்துவிடும். அந்தக் கொடுப்பனவு அங்குதானுண்டு.

சீ என்ன மழையிது.. விதைப்புக்காலம் விதைநெல்லை அள்ளிக் கொண்டு போகப்போகிறது. பாவம் கமக்காரர், அந்த ஆதங்கம் ஆதவன் மனத்தைக் குழப்பி வார்த்தைகளாக வந்து கொண்டிருந்தது. அதைவிட என்திட்டம் இந்த மழையால் குழம்பி விடுமோ?

அச்சம் அதைவிட மேலோங்கி நின்றது. மண்ணுக்குள் பாறிய வேர்களுடன் பென்னம் பெரிய ஆலமரம் பாதையோரம் நிற்பது பளிச்செனப்பட்டது. "மழை குறையட்டும் இதுக்குக் கீழ் நிற்பம்" என்று மோட்டார் சைக்கிளை நிற்பாட்டிய போது ஆறுதலாக இருந்தது. ஆதவனோட யாரும் போறதில்லையாம். சரியான வேகம். இருபது நிமிடம் ஆயிற்று. கால் வலிக்க தொடங்க "இங்க பக்கத்தில ஒரு சின்னக் கடையிருக்க வேணும். அதுக்குள் கொஞ்சம் ஆறலாம் போவம்.." என்றபடி கடை நோக்கி திரும்பினோம்.

இதுதான் திருவையாற்றுச் சந்தி. இந்த வழியால வந்த போற வாகனங்கள் இதில கொஞ்சம் நிற்கும் என்றதும் கடைப்பக்கம் பார்த்தேன். ஏற்கனவே மழைக்கு ஒதுங்கியிருந்தார்கள். முன் தாழ்வாரம் ஆறேழு பேருக்கு குடையாக நின்றது. ஓலையால் வேயப்பட்ட மெலிந்த கடையது. ஒரு மேசை அதன் மேல் கலர் கலராகச் சோடா, வாழைக்குலையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. இனிப்புப் போத்தல். இரண்டு றஸ்க் போத்தல்கள், ஒரு தண்ணீர்ப் பானை. அதைக் கிள்ளிக் குடிக்கவொரு பேணி, பீடி பற்ற வைக்க தீப்பெட்டி, இவற்றோடு நன்குழைத்த சாயம் போன பற்று வரவுக்கொப்பியொன்று. இவைதான் அந்தக்கடையின் சொத்துடைமைகள். துருவிப் பார்த்தாலும் இம்மட்டும்தான்.

அவற்றுக்கு உரிமையாளன் மேலும் மெலிவதுதற்கொரு இடமற்ற தோற்றம். முன்னே போடப்பட்ட அந்ந வாங்கிலில் உட்கார்ந்திருந்த சிலர் என்னைக் கண்டதும் எழுந்து இடம் தர முந்தினர். அந்த இடங்களை வாங்கிக் கொள்ளாது நன்றி சொல்லிவிட்டு நின்று கொண்டேன். என்னை மிக உன்னிப்பாக பார்த்த ஒருவர் 'வெளியிலிருந்து வந்திருக்கிறீங்க போல' என்றதுமே ஆதவன், 'நான் உள்ளுர்தான் என்றதுமே', 'உங்களை அறிஞ்சவங்க தானே கிளிநொச்சி மாட்டு வண்டிப் போட்டிக்குப் பரிசு கொடுத்த ஆதவன்தானே'. ஆதவன் அகமும், நல்லா முகமும் மலர 'நினைப்பு வைத்திருக்கிறீங்க..' 'அதை மறக்கேலுமா தம்பி. நானும் இங்கிருந்து அதை தொலைக்காட்சியில் பார்த்ததை நினைவுபடுத்திக் கொண்டேன்.' கடையிலே என் கண் மேய்ந்தது. இந்த இடத்தில் இப்படியொரு கடை தாகம் தீர்க்க தண்ணீர்ப்பானை, தங்கள் பீடி, சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி சின்னப் பிள்ளைகளோட வந்தால் இனிப்பு வாங்க இனிப்புப் போத்தல் மனிதருக்கு அவ்வப்போது எது அவசியமோ அவை அடங்கிய கடையது.

தேசமெல்லாம் தேடித் திரட்டிய செல்வத்தில் கட்டிய வீடுகள், அதற்கு மேலாக வரவுகள், வாய்ப்புகள் அத்தனையும் இந்த மழை நேரம் வந்து நின்று காப்பாத்தப் போவதில்லை. வீதியோரம் இந்த அவசிய கடைதான் இப்போது இல்லை எப்போதும் காப்பரணாக நின்றது. இதை யாரிங்கு உணரப் போகினம் இதுவும் ஒரு சுமை தாங்கிதான். எனக்குள் இருந்த நெகிழ்வினைப் பார்வையில் உணர்ந்த ஆதவன் 'ஈன ஈரக்கம் சுரக்கிறது போல இது தான் உனக்குளிருக்கும் பலம், பலவீனம்.. உன்னில் எனக்குப் பிடித்ததுதும் அதுதான்' என்றான் மெதுவாக.. அங்கு நின்ற இத்தனை நேரத்துள்ளாகவும் ஒரு வியாபாரமும் நடக்கவுமில்லை . ஐரோப்பிய அவுட்டோபானில் (வாகன வீதியில்) இருக்கும் கடைகளில் வியாபார செந்தளிப்பு என்னுள் வந்து, வந்து போனது. எப்பவுமே இந்தக் கடை நிழலாக, குடையாகத்தானிருக்குமோ? மேசையில் கிடந்த தீப்பெட்டியின் தீக்குச்சிகள் குறைந்த கொண்டே போனது. தம்மோட எடுத்து வந்திருந்த சிகரெட், பீடியை புகைத்துக் கொண்டிருந்தாகள். ஆதவன் எதையோ கூர்ந்து கவனித்துவிட்டு 'பற்று வரவுக் கொப்பி ஒன்றும் கிடக்குப் போக்குவரத்துப் போகும் போது இடைவழியிலும் கடன் எடுக்கினமோ?'

திரும்பி வரும் போது தருவினம். வாடிக்கையாளர்களை நோகப் பண்ணாது மௌனமாக ஒமோம் தம்பி தன் தலையசைப்பினால் உணரத்தினார் அந்த முதலாளி. எங்களுக்குள் இதுவும் ஆச்சரியமாகவே இருந்தது. கடன் என்பது மனித இனத்தின் அடிப்படைத் தேவையா? மற்றவர்களினது உழைப்பினை வாங்கி பற்றுவரவில் பதிவில் போடுவதுதான் மனுக்குலத்தர்மமோ? உலக நாடுகளிலிருந்து ஊர்க்கடைவரை இது இருப்பது அது வட்டியோடு இது அதில்லா முதல்.

நான் கூட இந்தக்கடையில் ஒன்றுமே வாங்கவில்லை. எனக்குப் பொருத்தமாக ஏதுமேயில்லையிங்கு. மழைக்குத்தான் ஒதுங்கின கடன். அந்த வகையில் கடன் பட முடிந்தது. அத்தனை நேரத்துள்ளும் ஒரு வியாபாரமும் கடையில் நடக்கவுமில்லை. அவர்கள் பெரும் கொள்வனவுக்காக கிளிநொச்சி போகிறார்கள். இளைப்பாற மட்டும் இந்தக்கடை. அதைவிடப் பாவம் பற்று வரவுக்கொப்பி. ஏழ்மையின் உழைப்பு எதிலுமே பற்றற்ற உருவம். எடுப்பார் கைப்பிள்ளை போல வாங்குகள்.. ம்.. பாவம்.

மழை நிற்கிறது .மள மளவென்று மகிழ்ச்சியோடு இரைச்சலோடு வாகனங்கள் கிளம்புகின்றன.
நாங்கள் புறப்பட. அடுத்த முறை வரும் போது இதைப்பார்க்க வேண்டும் எனக்குள் எண்ணம். நன்றி என்றதுமே அபூர்வமாக சிரித்தபடி பார்க்கிறார் அந்த முதலாளி. வீதியெல்லாம் சிட்டுகளாக சீருடையணிந்த அந்தப் பெண்கள் தம் வாகனங்களில் பறந்து கொண்டிருந்தனர். மழையைக் கிழித்தபடி எதையோ பிடிக்கப்போவதாக அவர்கள் அசுரமிருந்தது. இவர்கள் மண்ணைப் பிடிப்பார்கள். ஒவ்வொரு அசைவும் எனக்கு அங்கீகாரம் கொடுத்துபடி இருந்தது. கிளிநொச்சி மாநகரம் வந்துவிட்டது.

நமது இலக்கும் வந்துவிட்டது. வாசலில் தமிழீழத் தேசியக்கொடி.. வரவேற்பு முன்றலில் பாதுகாப்பு பலமோடு இரு பெண்கள். ஆம் வரவேற்க காத்திருப்பது போல, நேற்றைய பொழுதின் பரிச்சயத்தால் நிமிர்ந்து நடக்கிறேன். நிலவைப்பிடித்து கைக்குள் அடக்கும் ஒரு வீரம் விளைகிறது. அந்த வாசலை நெருங்க. உள்ளிருந்து தமிழீழ மகளீர் அரசியல் பொறுப்பாளர் வெளியே வந்து கரங்ளை நீட்டுகிறார். கையைப் பற்றி பய பக்தியோடு நடக்கிறேன்.
வீரத்தின் செறிவு
வில் போன்ற புருவம்
எளிதானதொரு இளஞ் சிரிப்பு
தமிழ் மானத்தின் காப்பு
மங்கையரின் விழிப்பு
மனங்கொண்ட மதிநுட்பம்
எம் தேசத்தின் பாகம்
தேசத்தின் கம்பீரம்
திரண்டு வந்தெதிரே
கரம் பற்றி படியேற்றி
கவிக்கொரு காரியம் பேசிட
காரியாலம் அழைத்த பொழுது
மாரியில் மழையில் கோடைவசந்தம்
கொந்தழிக்க தமிழினித்தது
தாகம் தீர்க்க வொரு தாமரை
நேற்றைய பொழுது தேனீர் வேண்டாமென்ற
சொற் பதம் மறவா கோப்பியாய் குளிர் போக்க
கொண்ட வந்தாள் இந்த மற மகள் !

வருடக் கணக்காக என் வாஞ்சை அறிந்தாலும், அறிந்திருந்தாலும் மறந்து விடும் உறவுகள் மத்தியில் சதாரண விடயத்தை மிக ஞாபகமாக வைத்து, 'கோப்பிதானே' என்றழைத்த தாமரை. போர்ப்பறை ஞாபங்கங்ளை ஒரு பொழுதிலே புணர்த்தி நின்றாள். மிக ஈரமாக, வாசமாக உணர்த்தியது. மறு புறம் உறவுகளாகவே.

'சாவினைத் தோள் மீது தாங்கிய காவிய சந்தன மேனிகளே' சற்று அதே பாடல் எனக்குள் எழுந்து தணிந்தது. அருமையான கோப்பி இரசித்த உருசித்து வெயில் பக்கமாக, ஈர உடையை உலர்த்த யன்னலோரம் பார்த்து உட்கார்ந்து கொண்டோம்.

'மழையும், சேறும், சகதியும் சேலைத்தலைப்பை சேர்த்து நனைக்க. தமிழ் கலாசாரத்தை அதன் மூலமாகத்தான் காட்டலாம் என்றதான போலித்தனத்தைப் புறந்தள்ளி தமிழ் பற்றும் தாகமும் நாம் அணிந்துகொள்ளும் உடையில் இல்லை. அது உணர்வோடு கூடிய ஜதார்த்தம் என்பதை உங்கள் பாங்கு என்னை மிக மிகக் கவர்ந்துள்ளது' என்று இதை அவர்கள் வாய்விட்டுச் சொன்னபோது என்னை மகிழ்ச்சிப்படுத்தின. "நேற்றுப் பார்த்போது இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் இன்று இதைச் சொன்னேன்" எங்களைப் பார்த்து சொன்னபோது ஆதவனும் எனக்குள்ளுமாய் அசைவு வெளிப்பட்டது.

'இந்த உடுப்போடு வெளிக்கிட்டா உங்க வெட்கம்' பெண்கள் பேசிக்கொண்டது எங்கோ ஓடி ஒளிந்தது.

நான் நினைத்து வந்த காரியம் அசர வேகமாக அரங்கேறிக்கொண்டிருந்தது. எல்லா ஊடகங்களும் அதை உள்வாங்கி ஆயத்தமானது. என் படைப்பிலக்கியம் அரங்கேறும் ஆர்வத்தோடு அன்றைய வேலையை முடித்துக்கொண்டு. நாளை சந்திப்பிற்காக மீண்டும் சந்திப்போம் என்ற அன்பான வழியனுப்பலோடு, அவர்களிடமிருந்த ஆதவனோடு பறந்து கொண்டிருந்தேன். எந்த வேகத்தில் வந்து இறங்கினோமோ தெரியவில்லை, ஆதவன் வீட்டின் பரந்த மாமரத்தின் கீழ் இறங்கி அமர்ந்து கொண்டேன். ஆதவனின் மகள் 'அப்பா தன்ர தங்கச்சிக்கு மட்டும் சரியான செல்லம் கொடுக்கிறார் எங்களுக்கு.." முடிக்க முன் அவளைக் காணவில்லை.

நான் மறு நாள் திட்டத்தை போட்டுக் கொண்டிருந்தேன்.

நிலத்தின் நிஜத்தோடு கவிதாஞானவாரிதி -கோசல்யா சொர்ணலிங்கம் -
(2006ஆடி-ஆவணி பூவரசு 16 வது ஆண்டு நிறைவின் 100 இதழை அலங்கரித்த நிலக் கதை.)
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree