தங்கப் பதக்கம்

10 அக்டோபர் 2007
ஆசிரியர்: 

 

"வணக்கம் முதலாளி, தயவுசெய்து இந்தப் பதக்கம் எவ்வளவு பெறுமதி எண்டு பார்த்துச் சொல்ல முடியுமோ?"

"ஓ அதுக்கென்ன... பார்த்துச் சொல்லலாமே. என்ன பளபளெண்டு புதுப் பதக்கமாக இருக்குது?"

"புதுப் பதக்கம் தான். ராத்திரித் தான் கிடைச்சது."

"சாமத்தியச் சடங்குக்கு அல்லது கல்யாண வீட்டுக்கு யாராவது பிரசன்ட்டாகத் தந்தினமோ...? என்ன சிரிக்கிறியள்?"

"சாமத்தியச் சடங்குக்கில்ல, சாமர்த்தியமான ஒரு எழுத்தாளனுக்கு பரிசாகக் கிடைச்சது."

"யாரந்த எமுத்தாளர் நீங்க தானா?"

"நானில்லாமல்...? வேறு எழுத்தாளனாய் இருந்தால் தனக்குப் பரிசாகக் கிடைத்த இந்த தங்கப் பதக்கத்தை, வேலை வட்டி இல்லாமல் வெல்பெயார் எடுத்துக் கொண்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிற இந்தப் பராரியை நம்பி, அதுவும் இந்த கனடாநாட்டில யாராவது என்னிடம் தந்திருப்பானா?"

"சரியாச் சொன்னீங்க, நீங்க எழுத்தாளரல்லவா. இந்த நாட்டில மற்றவையிளிட்ட இருந்து எப்படி பணத்தைச் சுரண்டலாமென்று பாப்பினமே தவிர கஸ்டப்பட்டு நொந்து போய் இருக்கிறவனுக்கு ஒரு ஐஞ்சு டொலர் கொடுப்பமே என்று ஒருதரும் யோசிக்காயினம். ஊரில எண்டால் இனசனங்களிட்டயாவது கடனைக் கிடனைக் கேக்கலாம். இஞ்ச வந்த பின்னர் எங்கட பாரம்பரியம் கலாச்சாரம் எல்லாமே மாறிப் போச்சுது பாரும். நாம கெட்டு நொந்து போய் விட்டால் இனசனங்கள்கூட ஒதுக்கி வைச்சுப் போடுங்கள். உங்களைப் போல எழுத்தாளர்கள் தான் இந்தக் குறைபாடுகளை சுட்டிக் காட்டி கதைகளை எழுதி எங்கட சனங்களைத் திருத்த வேணும்."

"எங்கட சனங்களை திருத்திறதெண்டால் அது நாய் வாலை நிமிர்த்திற கதை தான் முதலாளி. தன்னை விடப் புத்திசாலி வேறெவனும் இல்லை என்ற தலைக்கனம் கொண்டது எங்கட தமிழினம். அதால தானே ஒற்றுமையின்றி பிரிவினை வாதத்தைப் பேணி இண்டைக்கும் தமக்கென ஒரு நாடில்லாமல் தரணி எங்கும் அகதிகளாய் அலைஞ்சு திரிஞ்சு தங்களது கலாச்சாரம் பாரம்பரியங்களை மாத்திரமல்ல தமிழனென்ற தங்களது அடையாளத்தையே இழந்து வருகுதுகள்."

"அதெண்டால் உண்மைதான். இண்டைக்கு எங்கட வயது வந்த பொடியங்களிட நடை உடை பாவனைகளைப் பார்த்தால் அவை தமிழர் தானா என்ற அடையாளமே தெரியாமல் இருக்குது. யாரோ கறுவல்களோ அல்லது கயானா, றிணிடாட் காரங்களோ எண்டு தான் எண்ணத்தோணுது. 'ஹே மாண் வட்ஸ் அப்' எண்டு அவையட பேச்சுவார்த்தையளும் எல்லோ மாறிப் போச்சுது. கணேசலிங்கம் என்ற அழகான தமிழ்ப் பெயரை 'கனெக்ஸ்' என்றும், சண்முகம் என்ற பெயரை 'சண்' என்றும் ஆங்கில மயமாக்கிக் கொண்டு அது தான் 'சோட் அன்ட் ஸ்வீற்' என்று சொல் லித் திரியுதுகள்."

"நான் மற்ற எழுத்தாளர்களைப்போல வெறும் கற்பனைக் கதைகளையோ, காதல் கதைகளையோ எழுதிறதில்ல முதலாளி. அப்படியான கதைகளை இந்திய சஞ்சிகைகளுக்கு எழுதியிருந்தால் ஒருவேளை இண்டைக்கு நான் ஒரு புகழ்பெற்ற நல்ல வருமானமுள்ள ஒரு எழுத்தாளனாக இருந்திருக்கலாம். ஆனால் பணத்துக்காக என்ர கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாமல் இருக்குது. ஊரில இருக்கேக்க வீரகேசரி பேப்பருக்கு கதை எழுதினால் இருபது ரூபாவுக்கு ஒருசெக் அனுப்புவினம். இப்ப இஞ்ச கனடாவிலுள்ள பேப்பர்களுக்கு கதை எழுதினால் ஒரு டொலர் கூடத் தரமாட்டினம். எல்லாமே ஓசிப் பேப்பர்கள்தானே. ஆனால் எழுதாமல் இருக்கவும் முடியுதில்லை. மனதைத் தொடும் ஏதாவது சம்பவங்களையோ, சுத்துமாத்துக்களையோ காணும்போது அவற்றைக் கண்டித்து எழுத வேணுமெண்டு மனம் தூண்டும். அதனால் பணத்துக்காக இல்லாது என்னுடைய ஆத்ம திருப்திக்காக தொடர்ந்து எழுதி வருகிறேன்."

"ஓசிப் பேப்பர்களாக இருந்தாலும் உங்களைப் போன்ற படைப்பாளிகளைத் தூண்டும் வகையில் ஒரு பத்து டொலர்களாவது தந்துதவலாம்தானே. ஏனென்றால் எழுத்துக் கலை என்பது ஒரு புனிதமான தனித்துவமான கலை. அது எல்லோருக்கும் கைவராது. கடவுளால கொடுக்கப்படுகின்ற ஒருகொடை. அதனால எழுத்துவன்மை உள்ளவர்களை நாம் நிச்சயமாக சன்மானம் கொடுத்து ஆதரிக்க வேணும். நானெல்லாம் என்னுடைய கடை விளம்பரத்தை முழுப்பக்க விளம்பரமாகப் பிரசுரிக்க வாராவாரம் நூறு டொலர் கொடுத்து வருகிறேன். விளம்பரம் போடாமலே எனக்கு நல்ல விஸ்னஸ் நடக்கும். இருந்தாலும் தமிழ்ப் பத்திரிகைக்கு ஆதரவளிக்க வேணும் என்ற நோக்கத்துடன் தான் விளம்பரம் கொடுத்து வருகிறேன். அதிலே ஒரு பத்து டொலர்களை அவர்கள் படைப்பாளிகளுக்குக் கொடுக்கலாம் தானே. கலைஞர்களை வாழும் போதே கௌரவிக்காமல் அவர்கள் இறந்து போன பின்னர் விழாவெடுக்கிறது, சிலை வைக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காது பாரும். அது அர்த்தமே இல்லாத செயல்."

"உங்களைப் போன்ற ஒருசில நல்ல இதயம் படைத்த முதலாளிமார் இருக்கிறதால தான் பத்திரிகைகள் வெளிவருகின்றன. அத்தகைய ஆதரவு இல்லாவிட்டால் பத்திரிகைக்காரர்கள் கதை, கட்டுரைப் போட்டிகளைக் கூட நடத்த முடியாது. இந்த தங்கப் பதக்கத்தினையும் ஒரு முத லாளிதான் அன்பளிப்புச் செய்திருந்தார். வறுமை என்னோடு கூடப் பிறந்ததினால் சிறு பராயத்திலிருந்து இன்றுவரை எனக்கு வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருந்து வருகுது முதலாளி. பாரதியாரைப் போல வறுமையோடு போராடி வந்த பழக்க தோஷத்தினாலோ என்னவோ 'பாரதி' என்ற புனைபெயரில் தான் நான் எழுதி வருகிறேன். பாரதியின் கொள்கைகளான மூட நம்பிக்கைகள், சமுதாயச் சீர்திருத்தம் ஆகியவற்றினை மையமாகக் கொண்டவை தான் எனது படைப்புக்களும்."

"அடடே பாரதி என்ற புனை பெயரில எழுதிறது நீங்கதானா? நம்பவே முடியவில்லை எனக்கு ஆச்சரியமாக இருக்குது. உங்கட கதைகளை வாசித்து நான் பெருமைப்பட்டுள்ளேன். கையைக் கொடுங்கோ இண்டைக்கு உங்களை நேரில சந்திச்சதையிட்டு நான் சந்தோஷப்படுகிறேன். மனிதனை மனிதன் ஏமாத்திப் பிழைக்கிற இன்றைய காலகட்டத்தில எதையெதைப் பற்றியெல்லாம் எழுத்தாளர்கள் எழுத வேணுமென்று நான் நினைச்சேனோ அதுகளைப் பற்றியே நீங்கள் எழுதிவருவதினால உங்கட கதைகளை நான் விரும்பிப் படிப்பேன்."

"எனது கதைகளை விரும்பிப் படிக்கும் தரமான வாசகர் மாத்திரமல்ல ஊக்குவிப்பாளருமான உங்களைச் சந்தித்ததில் எனக்கும் தான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பின்னர் உறைப்பான இறைச்சிக் கறியோடு வயிறு நிறையச் சாப்பிட்டது போல இருக்குது. அப்பிடி நான் சாப்பிட்டே கனகாலம்."

"பாரதியும் அப்படித்தானே பட்டினியால் வாடிப் பாடிய உணர்ச்சிப் பாடல்கள்தானே சாகா வரம் பெற்று இன்றும் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்துக் கொண்டிருக்குது."

"புலம் பெயர்ந்த நாடுகளில் எங்கட கலாச்சாரம், பண்பாடு, மதம் ஆகியவற்றைப் பேணி வளர்க்க வேணும் என்ற கொள்கை உடையவன் நான். ஆனால் இவற்றை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு பிறரை ஏமாத்தி வயிறுவளர்க்க என்னால முடியாது முதலாளி. அப்படி வயிறு வளர்ப்பவர்களைக் கண்டாலே எனக்கு வயிறெல்லாம் பத்தி எரியும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண் என்று சொல்லி வைத்துள்ளனர் எமது மூதறிஞர்கள். பட்டினியால் வாடும் ஒரு பிச்சைக்காரனுக்கு ஒருவேளை உணவு கொடுத்து அவனது அடி வயிற்றிலிருந்து புத்துயிர் பெற்றுக் கிளம்பும் ஜீவார்த்தமான சிரிப்பை பார்க்க விரும்பாத எங்கட சனங்கள், எதுவித உணர்வுமே அற்ற ஜடமான சிலைகளுக்கு நூறு, ஆயிரம் டொலர் செலவழித்து அபிஷேகமும், ஆராதனைகளும் செய்யுதுகள். அப்படி இருந்தும் அந்தச் சிலைகள் ஒருபோதும் வாய்திறந்து சிரிப்பதில்லை. ஆனால் அவர்களது பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் சுரண்டல்காரர்களே அவர்களைப் பார்த்து முட்டாள் சனங்களெனக் கூறிச் சிரித்துக் கொள்கிறார்கள்."

"அது தானே இந்த நாட்டில பிறரைச் சுரண்டி வாழ்வோர் தான் வசதியாக வாழ்கிறார்கள் என்று நான் முதலே உங்களுக்குச் சொன்னேனே. கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு உழைப்பால் வரும் ஊதியம் போதுமானதாக இல்லை. அதனால் அவர்களது வாழ்க்கையே போராட்டமாகப் போய்விடுகிறது. ஆனால் அம்பாளின் திருவருட்கடாட்சத்தினால் உனது கஷ்டமெல்லாம் தீர்ந்து போகுமெனக் கூறுவோரது பேச்சை நம்பி மந்திரத்தால மாங்காய் பறிக்க எண்ணி கையிலுள்ள அற்ப பணத்தையும் பறி கொடுத்து விட்டு பட்டினியால் வாடுகினம்."

"நாம் நாம் முற்பிறப்பில் செய்த கர்ம வினைகளுக்கான தண்டனைகளை அனுபவித்து முடிப்பதற்காகவே மீண்டும் பிறவி எடுத்துள்ளோம். அது தான் எமது தலை விதி. அதை நாம் அனுபவித்தே தீரவேண்டும். ஆலயங்களில் அபிஷேகமும் திருவிழாக்களும் செய்வதன் மூலம் நமது தலைவிதியை மாற்றிவிட முடியாது. ஆனால் தான தர்மங்களைச் செய்வதன் மூலம் அடுத்த பிறப்பில் நாம் அதன் பலாபலன்களை அனுபவிக்க முடியும் என்ற கருத்தினை வலியுறுத்தி நான் பல சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். ஆனால் எவராவது அதனைப் படித்ததாகவோ அல்லது அக்கருத்தினை ஏற்றுக் கொண்டதாகவோ தெரியவில்லை. அதனால் சமயவழிபாட்டினை வியாபாரமாக்கி கொள்ளை லாபம் அடிக்கும் ஆசாடபூதிகளின் ஆனந்தத் தாண்டவம் தொடர்ந்து கொண்டே இருக்குது முதலாளி."

"அது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. என்னைக் கூட எத்தனை பேர் முதலாளி நீங்கள் ஒரு திருவிழா எடுத்துச் செய்யுங்கோ உங்களுக்கு மாத்திரமல்ல உங்கட சந்ததி முழுவதுக்குமே அந்தப் புண்ணியும் தொடரும் என்று கேட்டுப் பார்த்தினம். ஆலயத் திருப்பணிக்கு நிதியுதவி செய்யுங்கோ என்று கேட்டு எத்தனையோ பேர் என்ர கடைக்கு வந்து கேட்டுப் பார்த்தினம். அடுத்தவனுக்கு அநியாயம் செய்யாமல், அடுத்தவனைச் சுரண்டி வாழாமல் இயன்றளவு தான தர்மத்தை செய்து வாழ்வது தான் எனது வழிபாடு. அதால கிடைக்கிற புண்ணியம் என்ர சந்ததிக்கே போதும். இஞ்ச ஏற்கனவே இருக்கிற கோயில்கள் போதும் இனியும் விஸ்னஸ-க்காக கோயில்கள் கட்ட வேண்டிய அவசியமே இல்லை என்று உள்ளதை உள்ளபடி சொல்லித் திருப்பி அனுப்பிப் போடுவன். அதால நானெரு நாஸ்த்திகன் என்று சொல்லித் திரியினமாம்."

"அப்படித் தான் என்னையும் சில ஆசாடபூதிகள் சொன்னதாகக் கேள்விப்பட்டேன் முதலாளி. கடவுளே இல்லை என்று சொல்லுபவன் தான் நாஸ்த்திகன். ஆனால் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுரண்டல்களை சுட்டிக்காட்டிய ஈ.வே.ரா.பெரியார், அறிஞர் அண்ணா எல்லோரும் நாஸ்த்திகர்களா? சரி என்னைப் போன்று ஒரே கொள்கையுடைய உங்களோடு நீண்ட நேரம் கதைச்சது எனக்குச் சந்தோஷமாக இருக்குது முதலாளி. நேரமாச்சுது நான் போக வேணும் உங்களுக்கும் வேற கஷ்டமர் வந்திட்டினம். அந்தப் பதக்கம் எவ்வளவு பெறுமென்று பார்த்துச் சொல்லுங்கோ."

"ஓமோம் இது வந்து நூற்றி ஐம்பது டொலர் பெறும்."

"அப்போ இதை எடுத்துக் கொண்டு நூற்றி ஐம்பது டொலர் தருவியளே முதலாளி."

"என்ன பதக்கத்தை விக்கப் போறியளே?"

"ஓம் முதலாளி."

"என்ன பாருங்கோ சிறுகதைப் போட்டியில் உங்கட கதைக்கு பரிசாகக் கிடைச்ச தங்கப் பதக்கத்தை பெரும் பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்து வைக்காமல் விக்கப் போகிறீங்களா?"

"நீங்க சொல்லிறதைக் கேக்க எனக்குச் சிரிப்புத் தான் வருகுது முதலாளி. நான் சிறுகதைப் போட்டிக்கு கதை எழுதினதே கொஞ்சக் காசாவது கிடைக்குமென்ற எண்ணத்திலதான். இண்டைக்கு இந்த தங்கப் பதக்கத்தை விற்றால்தான் என்னுடைய வயிறும் என்னை நம்பியுள்ள மூன்று சீவன்களுடைய வயிறும் குளிரும்."

"உள்ளதை உள்ளபடி சொல்லிற உங்கட கதையைக் கேட்க எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது பாரதி. நான் சொல்லிறதைக் கேளும். ஞாபகார்த்த சின்னமான இதை விக்காமல் கொண்டு போய் ஒரு பெட்டிக்குள் போட்டு பாதுகாப்பாக வைச்சிருங்கோ."

"ஓருவனுடைய கஷ்ட துன்பத்தை உணர வேண்டுமானால் அவனுடைய நிலையில இருந்து அனுபவித்துப் பார்க்கும் போதுதான் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் முதலாளி. இந்தப் பதக்கத்தை ஒரு காட்சிப் பொருளாக பெட்டியில பூட்டி வைச்சுப் பார்க்க வேணுமென்றோ அல்லது கழுத்துச் சங்கிலி ஒன்றை வாங்கி அதில் தொங்கவிட்டு அழகு பார்க்க வேணுமென்றோ எனக்கு ஆசைகள் எதுவுமே இல்லை. என்னை நம்பியுள்ள ஜீவன்கள் வயிற்றுக் கொதிப்பை தாங்க முடியாமல் எரிமலையாய் விடுகின்ற கொதிக்கும் கொட்டாவியை அடக்கி விடவேண்டும் என்பது தான் இப்போது எனக்குள்ள ஒரேயொரு ஆசை. ஜனரஞ்சக வாசகரான உங்களுக்கு ஓமென்று ஒரு பொய்யைச் சொல்லிப் போட்டு வேறொரு நகைக் கடையில இதைக் கொண்டு போய் விற்றுப்போட்டு சமையல் சாமான்களை வாங்கிக் கொண்டுபோக எனக்கு மனமில்லை முதலாளி. இதை வாங்குவதற்கு உங்களது மனம் சங்கடப்பட்டால் தயவு செய்து திருப்பித் தாருங்கள் வேறு யாரிடமாவது விற்றுவிடலாம்."

(தனது கலங்கிய கண்களைக் கசக்கியவாறு) "ஒன்று செய்வோம் பாரதி. இப்போது உமக்குப் பணம்தானே அவசியம். இதோ உமது தங்கப்பதக்கத்தை நீரே வைத்துக் கொள்ளும். உமது அவசரத் தேவைக்கு நான் நூற்றி ஐம்பது டொலர் தருகிறேன் பிரச்சினை இல்லை சரி தானே?"

"வாழை மரத்தில் மாட்டிக் கொண்ட மரக்கொத்தி மாதிரி காலையில் உங்களிடம் வந்து வகையாக மாட்டிக் கொண்டேன் முதலாளி. உங்களது பெருந்தன்மைக்கு மிக்க நன்றி. எனக்கு அத்தியாவசியமாகப் பணம் தேவைப்படுவது உண்மை. அதுக்காக உங்களிடமிருந்து அன்பளிப்பாகப் பணத்தை வாங்க என்மனம் கூசுது முதலாளி."

"சரி அன்பளிப்பாக வாங்க வேண்டாம் கடனாக வாங்கிக் கொண்டுபோம். பின்னர் வசதியிருந்தால் திருப்பித்தாரும். ஆனால் திருப்பித் தரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை."

"அதிலும் ஒரு திருத்தம் முதலாளி, கடனாக வேண்டாம் அடைவாகத் தாருங்கள். பதக்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். வசதி வந்தால்... நான் திரும்பி வந்து மீட்டுக் கொள்கிறேன்."

"தன்மானமும், தளராத கொள்கையும் கொண்ட எழுத்தாளரான உங்களை பலவந்தப்படுத்த நான் விரும்பவில்லை. இதோ பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது கஷ்டத்தைக் கேட்டதும் எனது மனம் கஷ்டப்படுகிறது. இனிமேல் நீங்கள் கஷ்டப்படக் கூடாது அத்துடன் எழுதுவதையும் நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து எழுதுங்கள் பாரதி. உங்களுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்ற கவலையையும் விட்டு விடுங்கள். எனது கடையில் உங்களுக்காக ஒரு பதவி என்றென்றும் காலியாகவே இருக்கும்."

(யாவும் கற்பனை)
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree